arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 2

அத்தியாயம் 2

visibility 879
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

மருத்துவமனை போர்களமாக காட்சியளித்தது. நிர்வாகக் கட்டிடத்தின் தரைத் தளத்திலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி விரையும் அந்த குறுகிய பாதையிலேயே, காதைப் பிளக்கும் ஆம்புலன்ஸ் சைரன்களின் ஒலி நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது. அடுத்தடுத்து நான்கு ஆம்புலன்ஸ்கள் அவசரப் பிரிவின் முன்புறப் போர்ட்டிகோவில் ‘கிரீச்’ என்ற பெருத்த சத்தத்துடன் சக்கரங்கள் தேய வந்து நின்றன.

ஆம்புலன்ஸின் கதவுகள் படாரெனத் திறக்கப்பட, விபத்தினால் அடிபட்டவர்களை அவசரமாக ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே கொண்டு சென்றனர்.

அனைவரின் முகத்திலும் பதட்டம். அடிபட்டவர்கள் வலியில் கத்த, அவர்களது உறவினர்கள் கதற என்று அந்த இடத்தை பதட்டம் பற்றிக் கொண்டது.

ஜீவா தன் கோட்டின் கைமடிப்புகளை மடக்கிவிட்டபடியே மின்னல் வேகத்தில் முன்னே பாய்ந்தான். அவனது குரல் அவசரப் பிரிவு முழுமைக்கும் கம்பீரமாக எதிரொலித்தது.

“ட்ரையாஜ் (Triage) ஸ்டார்ட் பண்ணுங்க! ரெட், எல்லோ, கிரீன் கேட்டகிரி உடனே பிரியுங்க! நர்ஸ், பிளட் பேங்க்ல இருந்து ஓ-நெகட்டிவ் பத்து யூனிட் உடனே ட்ராமா பேக்குக்கு வரணும்! டாக்டர் அருண், ஃபர்ஸ்ட் பே பேக் பேஷன்ட்டோட ஏர்வே (Airway) செக் பண்ணுங்க! விஷ்வா, செஸ்ட் ட்ராமா கேசஸை நீ பாரு!”

ஜீவாவின் கட்டளைகள் ஒவ்வொன்றும் ஓர் ராணுவத் தளபதியின் துல்லியத்தோடு பிறக்க, அடுத்த நொடி அந்த இடத்தை சுறுசுறுப்பு பற்றிக் கொண்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு உதவியாளர்கள் என ஒவ்வொருவரும் அங்கே நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் சுழன்றடித்தனர்.

அங்கே நின்றிருந்த மதுவுக்கும் ப்ரவாவுக்கும் ஒரு வினாடி திகைப்பு ஏற்பட்டது இயல்புதான். மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்றிருந்தாலும், ஒரே நேரத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட பலத்த காயமடைந்த நோயாளிகள் இறக்கப்படும் அந்த மாபெரும் விபத்துக் களத்தின் உக்கிரம் எந்தவொரு புதிய இளம் மருத்துவரையும் ஒரு கணம் அதிர வைக்கும். அந்த நிலை இருவரது மனதையும் உலுக்கின.

ஆனால், அடுத்த கணமே ப்ரவலிகாவின் முகத்திலிருந்த தயக்கம் மறைந்து, அவளது கண்கள் தீவிரமான கூர்மையைப் பெற்றன. பயமோ, பதட்டமோ அவளது நிதானத்தைச் சற்றும் அசைக்க முடியவில்லை. தான் அணிந்திருந்த ஸ்டெதாஸ்கோப்பைச் சரிசெய்து, கையுறைகளை அணிந்துகொண்டு, தனக்கு முன்னால் ஸ்டிரெச்சரில் இறக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை நோக்கி ஓடினாள்.

அந்தப் பெண்ணின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. வலது கால் மூட்டுக்குக் கீழே எலும்பு முறிந்து சதையைக் கிழித்துக்கொண்டு வெளியே நின்றிருந்தது.

“மது! இவங்களுக்கு பிபி ரொம்ப லோவா இருக்கு, பல்ஸ் 130! ஹைப்போவோலெமிக் ஷாக் (Hypovolemic Shock)! உடனடியா ரெண்டு வைட்-போர் ஐவி லைன் (Wide-bore IV line – 16 Gauge) போடு! நார்மல் சலைன் ஃபாஸ்ட் ட்ரிப் ஏத்து!”

ப்ரவாவின் குரல் எந்தத் தடுமாற்றமும் இன்றி மிக அழுத்தமாக வெளிவந்தது.

“ஆன் இட் ப்ரவி!” மதுவும் தன் மருட்சியை உதறிவிட்டு, உடனடியாக மருந்துப் பெட்டியோடு பாய்ந்து சென்று நரம்பைத் துழாவி ஊசியைச் செலுத்தினாள்.

ப்ரவா ஒரு நொடியும் தாமதிக்காமல் ஸ்டெரைல் காஸ் (Sterile Gauze) துணிகளை எடுத்து அந்தப் பெண்ணின் தலையில் ரத்தம் கொட்டிய காயத்தின் மீது வைத்து அழுத்திக் கட்டினாள். “சி-ஸ்பைன் காலர் (C-spine collar) போடுங்க சிஸ்டர்! கழுத்துல இன்சுரி இருக்க வாய்ப்பிருக்கு. பிளட் சாம்பிள் உடனே கிராஸ் மேட்ச்சிங்குக்கு அனுப்புங்க…” என்று அங்கிருந்த செவிலியருக்கு உத்தரவிட்டபடி, உடைந்த காலுக்கு ஸ்பிளின்ட் (Splint) வைத்து அசையாமல் நிலைப்படுத்தினாள். அவளது கைகள் காட்டிய வேகமும், முடிவெடுத்தலின் நேர்த்தியும் அனுபவம் வாய்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவருக்கு சற்றும் குறையாமல் இருந்தது.

அதே நேரத்தில், அவசரப் பிரிவின் மத்திய பகுதியில் ஜீவாவின் கைகள் மனித உயிர்களை மீட்கும் மாபெரும் வேள்வியில் இறங்கியிருந்தன.

பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி நெஞ்சுப் பகுதி நசுங்கி வந்திருந்த ஒரு முதியவருக்கு மூச்சு முற்றிலும் நின்றிருந்தது. அவரது வாய் வழியே ரத்தம் நுரைத்துத் தள்ளியது.

“டென்ஷன் நியூமோதோராக்ஸ் (Tension Pneumothorax)! ட்ரக்கியா இடது பக்கம் தள்ளியிருக்கு! இம்மீடியட் நீடில் டிகம்ப்ரஷன் (Needle decompression) பண்ணனும்! டாக்டர் தினேஷ், 14 கேஜ் நீடில் எடுங்க!” என்று கத்திய ஜீவா, அடுத்த நொடியே அந்த முதியவரின் வலது பக்க மார்புக் கூட்டின் இரண்டாவது விலா எலும்பு இடைவெளியில் (2nd Intercostal space) மிக லாவகமாக ஊசியைச் செலுத்தினான்.

‘புஸ்’ என்ற சத்தத்துடன் அடைபட்டிருந்த காற்று வெளியேற, அந்த முதியவரின் மார்பு லேசாக ஏறி இறங்கியது.

“செஸ்ட் டியூப் போடுங்க, குயிக்! ஐசிடி பேக் கனெக்ட் பண்ணுங்க!” என்று நர்ஸிடம் உத்தரவிட்ட ஜீவா, சற்றும் இடைவெளி தராமல் லாரிங்கோஸ்கோப்பை எடுத்து அவரது தொண்டைக்குள் செலுத்தி, மிகத் துல்லியமாக எண்டோட்ரக்கியல் டியூப்பை (Endotracheal tube) நுரையீரலுக்குள் இறக்கி ஆம்பு பேக் மூலம் செயற்கை சுவாசத்தை மீட்டெடுத்தான். அவனது நெற்றியில் வழிந்த வியர்வை அவனது கண்களை மறைத்தபோதும், அவனது கைகளின் நடுக்கமில்லாத உறுதி அங்கே ஒரு உயிரை மரணத்தின் வாயிலிலிருந்து சட்டெனப் பிடித்து இழுத்து நிறுத்தியது.

ஜீவாவின் அந்த அசாத்திய வேகத்தையும், ஒரு வினாடியும் பதறாத நிதானத்தையும் தூரத்திலிருந்து கவனித்த மதுவின் கண்கள் வியப்பில் விரிந்தன.

“ப்ரவா… செமல்ல! புக்ல படிக்கிறப்போ இந்த ப்ரோசீஜர் எல்லாம் எவ்வளவு கஷ்டம்னு நினைச்சோம். அதை வெறும் ரெண்டு நிமிஷத்துல முடிச்சுட்டாரு மனுஷன்…” என்று மது ஆச்சரியத்துடன் முணுமுணுத்தாள்.

மறுபுறம், விஷ்வா, அவன் பங்குக்கு போராடிக் கொண்டிருந்தான்.

கடுமையாக மார்பு அடிபட்டு வந்திருந்த மற்றொரு வாலிபனுக்கு இதயம் தாறுமாறாகத் துடித்து, மானிட்டரில் ரத்த அழுத்தம் 60/40 என பாதாளத்திற்கு இறங்கிக் கொண்டிருந்தது.

“கார்டியாக் டேம்பனேட் (Cardiac Tamponade)! இதயத்தைச் சுத்தி ரத்தம் தேங்கி ஹார்ட் பம்ப் பண்ண முடியாம லாக் ஆகுது! உடனடியா எக்கோ மெஷின் இங்க கொண்டு வாங்க!” விஷ்வாவின் குரல் இடியென முழங்கியது.

போர்ட்டபிள் எக்கோவை நோயாளியின் நெஞ்சில் வைத்த விஷ்வா, திரையில் தெரிந்த பெரிகார்டியல் திரவத்தைக் கண்ட அடுத்த கணமே தன் நீண்ட விரல்களால் சப்-சிபாய்டு (Subxiphoid) பகுதியில் ஒரு நீண்ட ஊசியை இதய உறையை நோக்கி இறக்கினான். சிரிஞ்ச்சின் பிஸ்டனை பின்னோக்கி இழுக்க, அடர் சிவப்பு நிறத்தில் ரத்தம் உள்ளே பாய்ந்து வந்தது (Emergency Pericardiocentesis).

சுமார் நூறு மில்லி ரத்தம் வெளியேறியதும், மானிட்டரில் இறங்கிக் கொண்டிருந்த அந்த வாலிபனின் இதயத் துடிப்பு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி, ரத்த அழுத்தம் 100/70 என உயர்ந்தது.

அங்கிருந்த அத்தனை இளநிலை மருத்துவர்களுக்கும் விஷ்வாவின் அந்த மின்னல் வேகச் செயல்பாட்டை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவனது முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. இறுக்கமான அமைதியோடு, மிகக் கொடூரமான அவசர நிலையையும் பதட்டமே இல்லாமல் அவன் கையாண்ட விதம் ப்ரவாவுக்கு பிரமிப்பை உண்டாக்கியது. பெருமிதமாக இருந்தது.

விஷ்வாவின் அந்த மின்னல் வேகச் செயல்பாடு இதயத் துடிப்பை மீட்டெடுத்து நிலைநிறுத்திய அதே நொடியில், அவசர சிகிச்சைப் பிரிவின் அடுத்த முனையில் மற்றொரு அபாய எச்சரிக்கை ஒலி எழுந்தது.

“ஜீவா சார்… இந்த பேஷன்ட்டோட வயிறு பயங்கரமா விரிவடையுது! பிபி சுத்தமா கிடைக்கல… பல்ஸ் ரேட் தொட்டுப் பார்க்கவே முடியல!”

மூத்த செவிலியர் சுமதி பதட்டத்துடன் குரல் கொடுக்க, ஜீவா ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கே பாய்ந்து வந்தான்.

அடிபட்டு வந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பேருந்து ஓட்டுநரின் முகம் சாம்பல் நிறத்தில் வெளிறிப் போயிருந்தது. அவரது அடிவயிற்றுப் பகுதி ஒரு பலூனைப் போல உப்பி, தொட்டுப் பார்த்த மாத்திரத்திலேயே கல்லைப் போல இறுகியிருந்தது.

“அப்டாமினல் கம்பார்ட்மென்ட் சின்ட்ரோம் (Abdominal Compartment Syndrome)! அடிவயித்துல மேசிவ் இன்டர்னல் பிளீடிங்! கல்லீரல் இல்லன்னா மண்ணீரல் கிழிஞ்சிருக்கும்!”

ஜீவாவின் கைகள் துரிதமாக அந்த நபரின் மேல் வயிற்றை அழுத்திப் பரிசோதித்தன. அவனது முகம் ஒரு தீவிரமான சர்ஜனின் கூர்மையைப் பெற்றது.

“அருண், போர்ட்டபிள் அல்ட்ராசவுண்ட் எடுங்க… பாஸ்ட் (FAST – Focused Assessment with Sonography for Trauma) ஸ்கேன் உடனே பண்ணனும்!”

ஜீவா தன் கையில் ப்ரோபை (Probe) வாங்கி, அவரது விலா எலும்புக்குக் கீழே வைத்துத் திரையைப் பார்த்தான். அங்கே மண்ணீரலைச் சுற்றிலும், சிறுநீரகப் படுக்கையிலும் கரிய நிறத்தில் பெருமளவு ரத்தம் தேங்கிக் கிடப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஸ்ப்ளீனிக் ரப்சர் (Splenic Rupture)! கிரேடு ஃபைவ் டேரிங்! உள்ளே ரத்தம் நிற்காம ஊறிட்டே இருக்கு… இவரை சிடி ஸ்கேனுக்குக் கூட அனுப்ப முடியாது. போற வழியிலேயே கார்டியாக் அரெஸ்ட் ஆயிடும்! இப்போவே ஆப்பரேஷன் தியேட்டருக்கு ஷிப்ட் பண்ணி எமர்ஜென்சி லேப்ராடமி (Emergency Laparotomy) பண்ணியாகணும்!”

ஜீவாவின் குரலில் எந்த நடுக்கமுமில்லை; ஆனால் அந்த முடிவில் ஒரு விநாடியைத் தவறவிட்டாலும் உயிர் பறிபோய்விடும் என்ற தீவிரப் பொறுப்புணர்வு இருந்தது.

“சிஸ்டர், பிளட் பேங்க்ல இருந்து உடனடியா நாலு யூனிட் பிளட்டும், நாலு யூனிட் எஃப்.எஃப்.பியும் (FFP – Fresh Frozen Plasma) மேஜர் ஓடி-க்கு வரணும்! ரத்த அழுத்தத்தை ஏத்த நார்-அட்ரினலின் (Noradrenaline) இன்ஃப்யூஷன் ஸ்டார்ட் பண்ணுங்க! அனஸ்தீசியா டீமுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க… ரஷ் டு ஓடி!”

ஜீவாவின் கட்டளைகள் பறக்க, ஸ்டிரெச்சர் சக்கரங்கள் தரையில் உரசிப் பறந்தன. ஒரு கையால் அந்த நோயாளியின் நெஞ்சில் அழுத்தத்தைக் கவனித்தபடியே, மறு கையால் ஆம்பு பேக்கை இயக்கியவாறு ஜீவா அவசர அறுவைசிகிச்சை அரங்கை நோக்கி ஸ்டிரெச்சரோடு ஓடினான்.

அவனது வெள்ளை கோட்டில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் படிந்திருந்தன; நெற்றியில் வழியும் வியர்வையைக் கூடத் துடைக்கத் தோன்றாமல், ஒரு நொடி கூட விரயமாகிவிடக் கூடாது என்ற வெறியோடு அந்த உயிரைக் காக்கப் போராடும் அவனது அர்ப்பணிப்பைக் கண்டு ப்ரவாவின் கண்கள் அகல விரிந்தன.

எமர்ஜென்சி வார்டில் நின்றிருந்த ஒவ்வொரு செவிலியரும் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர். தங்களின் களைப்பையோ, கைகளில் வழியும் ரத்தத்தையோ பொருட்படுத்தாமல், ஐவி பாட்டில்களை மாற்றுவதும், துணிகளை வைத்து ரத்தக் கசிவுகளை அடைப்பதுமாக ஒரு படையே அங்கே இயங்கிக் கொண்டிருந்தது.

சுமார் இரண்டு மணி நேரக் கடும் போராட்டத்திற்குப் பிறகு, வந்த பதினைந்து பேரில் பதினான்கு பேரின் நிலையும் ஓரளவுக்கு நிலைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் அறுவைசிகிச்சை அரங்குகளுக்கும் மாற்றப்பட்டனர்.

ஆனால்… விதியின் குரூரம் அங்கே ஒரு மூலையில் தன் கோரக் கரங்களை நீட்டியிருந்தது.

பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து வந்திருந்த இருபத்தியிரண்டு வயது இளைஞன் ஒருவன், பலத்த தலைக்காயத்தோடு (Severe Traumatic Brain Injury) கடைசி ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டிருந்தான். அவனது காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தமும் மூளைத் திரவமும் வழிந்து கொண்டிருந்தன.

ப்ரவா அவனருகே ஓடினாள்.

அவனது கண் இமைகளைத் திறந்து டார்ச் அடித்துப் பார்த்தாள். அவளது விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. இரண்டு கண்களின் கருவிழிகளும் விரிந்து, வெளிச்சத்திற்கு எந்தவித அசைவையும் காட்டாமல் உறைந்து போயிருந்தன.

“ஜீவா…!” ப்ரவா குரல் கொடுத்தாள்.

ஜீவா உடனடியாக அங்கே விரைந்து வந்தான். அவனது ஸ்டெதாஸ்கோப்பை வைத்துப் பரிசோதித்தான். இளைஞனின் கால்களை, கைகளைத் தொட்டுப் பார்த்தான். எதற்கும் எந்த அனிச்சைச் செயலும் இல்லை. வலிக்குக் கூட அந்த உடல் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

“ஜிசிஎஸ் (Glasgow Coma Scale) மூணுதான் இருக்கு ப்ரவா…” ஜீவாவின் குரல் மிக மென்மையாக, அதே சமயம் ஓர் உறுதியான முடிவோடு ஒலித்தது.

“இல்ல… இன்னும் ட்ரை பண்ணலாம் ஜீவா. மேனிடால் (Mannitol) ஏத்தலாம்… ஹைப்பர்டானிக் சலைன் கொடுக்கலாம்… ஐசியூல வச்சு வென்டிலேட்டர் சப்போர்ட்ல…” ப்ரவாவின் குரலில் தவிப்புப் பெருக்கெடுத்தது.

அவள் அவசரமாக அந்த இளைஞனின் மார்பில் கைகளை வைத்து சிபிஆர் (CPR) கொடுக்க முற்பட, ஜீவா தன் கையை நீட்டி அவளது கைகளை அழுந்தப் பற்றித் தடுத்தான்.

“ப்ரவா… ஸ்டாப் இட்.”

“ப்ளீஸ் ஜீவா… ரொம்ப சின்னப் பையன்… இன்னும் கொஞ்சம் நேரம் சிபிஆர் பண்ணினா…” ப்ரவாவின் கண்கள் கலங்கின.

“ப்ரவா, நான் சொல்றதைக் கேளுங்க… மேசிவ் பேஸ் ஆஃப் ஸ்கல் ஃப்ராக்சர் (Base of skull fracture) வித் பிரைன் ஸ்டெம் ஹெமரேஜ். பியூப்பிள்ஸ் பிக்ஸட் அண்ட் டைலேட்டடா இருக்கு; எந்த பிரைன் ஸ்டெம் ரெஃப்ளக்ஸும் இல்லை. ஜிசிஎஸ் ஸ்கோர் வெறும் மூணுதான். கிளினிக்கலா பிரைன் டெத்துக்கான (Brain Death) எல்லா அறிகுறிகளும் இருக்கு. ஆனா, நாம எமர்ஜென்சில நின்னுகிட்டு உடனே எந்த முடிவையும் சொல்ல முடியாது…”

ஜீவாவின் குரலில் எதார்த்தத்தின் கசப்பு அப்பியிருந்தது.

அவன் ப்ரவாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துத் தொடர்ந்தான்.

“இப்போதைக்கு மெக்கானிக்கல் வென்டிலேட்டர் சப்போர்ட்டோட இவரை உடனடியா நியூரோ ஐசியூவுக்கு ஷிப்ட் பண்ணுங்க. டியூட்டி நியூரோ சர்ஜனையும் நியூராலஜிஸ்ட்டையும் உடனே பார்க்கச் சொல்லுங்க. அதிகாரப்பூர்வ போர்டு வந்து அப்னியா டெஸ்ட் (Apnea Test) எடுத்து, ஆறு மணி நேர இடைவெளியில அடுத்தடுத்து ரெண்டு முறை ப்ரோட்டோகால் படி செக் பண்ணாத்தான் சட்டபூர்வமா எதுவா இருந்தாலும் உறுதி செய்ய முடியும். ஆனா ஒரு டாக்டரா உங்களுக்கே தெரியும் ப்ரவா… இவரோட நிலைமை எந்த அளவுக்கு கிரிட்டிக்கலா இருக்குன்னு…”

அந்த வார்த்தைகள் ப்ரவாவின் இதயத்தில் ஓர் இடியாக இறங்கின.

மருத்துவக் கல்லூரியில் புத்தகங்களில் ‘பிரைன் டெத்’ பற்றி எத்தனையோ முறை படித்திருக்கிறாள். ஆனால், தன் கண் முன்னே, எவ்வளவோ முயன்றும் தங்களுக்குத் துளியும் பிடி கொடுக்காமல் காலனின் கைகளுக்குள் நழுவிப் போனதை அவளது இளம் பெண் உள்ளத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அவளது கைகள் தானாகத் தளர்ந்தன. நெற்றி வியர்வையில் நனைய, அந்த இளைஞனின் உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தபடி சிலையென நின்றாள். அவளது பெரிய விழிகளிலிருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழியத் தொடங்கியது. மருத்துவத்தின் அத்தனை நவீனக் கருவிகளும், இத்தனை மருத்துவர்களின் திறமைகளும் ஒரு வினாடியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டதே என்ற இயலாமை அவளைச் சுக்குநூறாக உடைத்துப் போட்டது.

சுற்றிலும் இருந்த பரபரப்பு அடங்கி, அந்த அவசரப் பிரிவின் மூலையில் ஒரு கனத்த நிசப்தம் சூழ்ந்தது.

ஜீவா அவளது நிலையை முழுமையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். முதல் நாளில், ஒரு இளம் மருத்துவர் இத்தகைய மரணத்தின் கோரத்தை நேரடியாக எதிர்கொள்ளும்போது உடையும் அந்த மனநிலையை அவன் அறியாதவன் அல்ல.

ஜீவா தன் கையுறைகளைக் கழற்றிவிட்டு, மெல்ல அவள் அருகே வந்தான்.

“ப்ரவா…”

அவள் பேசாமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணீர்த் துளிகள் அவளது ஏப்ரானில் விழுந்து கரைந்தன.

ஜீவா சற்றும் யோசிக்காமல், அவளது நடுக்கமுற்ற இரு கைகளையும் தன் வலது கைகளுக்குள் ஆதுரமாகப் பொதிந்து கொண்டான்.

அவனது வெதுவெதுப்பான, வலிமையான கைகள் அவளது சில்லிட்ட விரல்களைத் தீண்டிய அந்த நொடியில்… ப்ரவலிகாவின் உடலெங்கும் ஓர் இனம் புரியாத மின்சாரம் பாய்ந்தது!

அவளது இதயம் தடதடவெனத் துடித்தது. கண்ணீரின் ஊடே அவள் நிமிர்ந்து ஜீவாவின் கண்களைப் பார்த்தாள்.

அந்தக் கண்களில் கண்டிப்பில்லை. மாறாக, அளவற்ற ஒரு புரிதலும் சிநேகமும் நிறைந்திருந்தன.

“இங்க பாருங்க ப்ரவா…” ஜீவா அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, மிக அமைதியான குரலில் பேசத் தொடங்கினான்.

“மருத்துவம்ங்கிறது உயிர்களைக் காப்பாத்துறதுக்கான போராட்டம் தானே தவிர, நாம கடவுள் கிடையாது. சில நேரங்கள்ல நாம நம்மோட நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்தாலும், இயற்கையோட முடிவை நம்மால மாத்த முடியாது. ஒரு டாக்டரா நாம மரணத்தை ஒவ்வொரு நாளும் கடந்துதான் போகணும். அந்த மரணங்கள் முன்னாடி நாம உடைஞ்சு நின்னுட்டோம்னா, அடுத்த வார்டுல நம்ம உதவிக்காகக் காத்துக்கிட்டு இருக்கிற இன்னும் பத்து உயிர்களை நம்மால காப்பாத்த முடியாது…”

ப்ரவா மௌனமாக அவனது சொற்களை உள்வாங்கினாள். அவளது உதடுகள் லேசாக அதிர்ந்தன.

“ஆனா…” ஜீவாவின் உதட்டோரம் ஒரு மெல்லிய, அழகான புன்னகை விரிந்தது. அவன் அவளது கைகளை லேசாக அழுத்தினான்.

“இன்னைக்கு இந்த வார்டுக்குள்ள நீங்க செயல்பட்ட விதம் நிஜமாவே அற்புதம் ப்ரவா! அந்தப் பொண்ணோட காம்பவுண்ட் ஃப்ராக்சரை நீங்க ஹேண்டில் பண்ணின வேகம், பிளட் லாஸைத் தடுத்த விதம்… எல்லாமே எக்ஸலன்ட்! ஒரு ஜூனியர் டாக்டர்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கிறதை விடவும் ரொம்ப பெர்ஃபெக்ட்டா பண்ணினீங்க. ஐ அம் ரியலி இம்ப்ரெஸ்ட்…”

ஜீவாவின் அந்தப் பாராட்டும், அவனது கை விரல்களின் இதமான அணைப்பும் ப்ரவாவின் மனதில் இருந்த பாரத்தை நொடியில் கரைத்துவிட்டன. அழுகையின் சுவடு மறைந்து, அவளது கன்னங்களில் மெல்லிய செம்மை படர்ந்தது.

அவள் மெல்லத் தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு, “தேங்க்யூ… ஜீவா…” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

அப்போது அங்கே வந்த விஷ்வா, தன் ஸ்டெதாஸ்கோப்பைத் தோளில் போட்டபடி இருவரையும் ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். அவனது முகத்தில் எப்போதும் போல எந்தவித உணர்ச்சியும் இல்லை.

“ஜீவா… தியேட்டர் த்ரீல லேப்ராடமி (Laparotomy) ரெடி. சீனியர் சர்ஜன் உனக்காக வெயிட் பண்றாரு. அப்புறம்… இந்த ரெண்டு ஜூனியர்ஸையும் கார்டியாலஜி ஐசியூக்கு வரச் சொல்லு. போஸ்ட்-ஆப் பேஷன்ட்ஸ் வைட்டல்ஸ் மானிட்டர் பண்ணனும்…” என்று மிகக் கறாராகக் கூறிவிட்டு, விஷ்வா தன் நீண்ட காலடிகளோடு அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்ற திசையையே பார்த்த ஜீவா, தன் தலையை லேசாக அசைத்துச் சிரித்துக்கொண்டான்.

“ஓகே டாக்டர்ஸ்… எமர்ஜென்சியோட முதல் ரவுண்ட் முடிஞ்சது. நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியாகுங்க. விஷ்வாகிட்ட வேலை பார்க்கிறது ஈஸி இல்ல… ஆல் தி பெஸ்ட்!” என்று கண்களைச் சிமிட்டிவிட்டு ஜீவாவும் அறுவைசிகிச்சை அரங்கை நோக்கி விரைந்தான்.

மது ப்ரவாவின் அருகில் வந்து நின்று, அவளது தோளைத் தட்டினாள்.

“ஹலோ மேடம்… கீழ இறங்கீட்டீங்களா? இல்லைன்னா இன்னும் மிதந்துட்டு தான் இருக்கீங்களா?” என்று மது குறும்பாகக் காதருகில் கிசுகிசுக்க,

ப்ரவா தன் தோழியை முறைத்தாலும், அவளது இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது. தான் எடுத்து வைத்த காலடி தவறில்லை. எப்படியும் முடித்துவிடலாம் என்ற உறுதி அவளுக்குள்!

“ஓடீரு…” புன்னகைத்தபடியே நகர,

“என்சாய் செல்லகுட்டி…” கண்ணடித்தாள் மது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 3

ஜமீன் ஊத்துக்குளிவானம் கறுத்திருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களைத் தொட்டுத் தடவி வந்த கருமேகங்கள், ஆனைமலைக் காடுகளின் மீது சற்றே தங்கி இளைப்பாறிவிட்டு, பொள்ளாச்சியின் தென்னந்தோப்புகளின் மீது சட்டென்று இறங்கித் தன் பாரத்தை இறக்கி வைக்கத் தொடங்கின.மெல்லிய சாரலாக ஆரம்பித்த மழை,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 6

  1. Vinna Vinna பத்தி 84 “என்சாய் செல்லகுட்டி…” கண்ணடித்தாள் மது!Vinna Vinna

    மிராக்கல் டாக்டர் துருக்கி டிராமா பார்ப்பது போல கதை செம இருக்கி சிஸ்.. புரியாத மருத்தவ பாஷைகள்..எந்த பக்கமும் திரும்ப விடாமல் கதை நகரும் வித அருமை ஆனா ஹீரோ விஷ்வா வ ஜீவா வ??

  2. Vinna Vinna பத்தி 84 “என்சாய் செல்லகுட்டி…” கண்ணடித்தாள் மது!Vinna Vinna

    மிராக்கல் துருக்கி டிராமா பாராப்பது போல் விறுவிறுப்பாக கதை நகரும் அருமை கட்டையா தூக்காதீங்க ரெண்டு வேற கதை களம் 🥰💫புரியாத மருத்துவ பாஷை, எந்த பக்கமும் திரும்ப விடாத கதை இன்ட்ரஸ்டிங்கா போகுது... ஆனா ஹீரோ ஜீவா வ இல்ல விஷ்வா?...

  3. amuthu gowri பத்தி 18 “செஸ்ட் டியூப் போடுங்க, குயிக்! ஐசிடி பேக் கனெக்ட் பண்ணுங்க!” என்று நர்ஸிடம் உத்amuthu gowri

    கண் முன்னே பார்த்தது போன்று காட்சிகள் இருக்கின்றன, அருமையான காட்சிப்படுத்தல்

  4. amuthu gowri பத்தி 70 “மருத்துவம்ங்கிறது உயிர்களைக் காப்பாத்துறதுக்கான போராட்டம் தானே தவிர, நாம கடவுள்amuthu gowri

    👍🏻👍🏻

  5. amuthu gowri பத்தி 70 “மருத்துவம்ங்கிறது உயிர்களைக் காப்பாத்துறதுக்கான போராட்டம் தானே தவிர, நாம கடவுள்amuthu gowri

    👍🏻👍🏻

  6. amuthu gowri பத்தி 70 “மருத்துவம்ங்கிறது உயிர்களைக் காப்பாத்துறதுக்கான போராட்டம் தானே தவிர, நாம கடவுள்amuthu gowri

    மறுக்க முடியாத உண்மை

உங்கள் கருத்தைப் பகிருங்கள்