54
“தேங்க்ஸ் மதுரா!… ரொம்ப தேங்க்ஸ்மா. நீ சுட்டிக் காட்டும் வரை, எங்களுக்குப் புரியவேயில்லை.
நானும் அவரும் ஓடி, ஓடிச் சம்பாதிப்பது ஜான்சிக்காகத் தான். தினமும் எங்கள் இருவரின் தொழிலில், இது போன்ற வக்கிரங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!
ஆனால், நீ சொல்லும் வரை, அது எங்களுக்கேக் கூட நடக்கலாம் என்பது தோன்றாமல் போய் விட்டது. பிரச்சனை என்று வருபவர்களுக்காகத் தினமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால், எங்கள் வீட்டைக் கவனிக்க தவறி விட்டோம்.
தேங்க்ஸ்மா… இனி மதியம் அத்தை தூங்கும் போது, எல்லாம் நான் ஜான்சியோடு இருக்க போகிறேன்.
இன்னும் பத்து கூடுதல் டாக்டர்ஸ் என் பொறுப்பை ஏற்க வேண்டுமானாலும், நியமித்து விடப் போகிறேன். ஹாஸ்பிடல் முழுக்க cctv கேமரா பொறுத்த ஏற்பாடு செய்யப் போகிறோம்.
ஜான்சிக்காக என்று இல்லை. இங்கு எங்கள் ஹாஸ்பிடலை நம்பி வரும் அனைவருக்காகவும்.
நோயாளிகளிடம் எப்படி நடக்க வேண்டும் என்று, மன அழுத்தம் குறையவும், இங்கு வேலை பார்க்கும் அனைவர்க்கும் ஸ்பெஷல் வகுப்பு எடுக்கப் போகிறோம்.
விசிட்டிங் ஹௌர்ஸ்ல செக்யூரிட்டி இன்னும் tight செய்யப் போகிறோம். தேங்க்ஸ் மதுரா.” என்றாள் மிருதுளா.
“என்ன அண்ணி இது!.. இது எல்லாம் மேட்டரே இல்லை!.. ஏதோ தோணினது சொன்னேன். நீங்கக் கொண்டு வந்து இருப்பது எல்லாமே, மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள்.” என்றாள் மதுரா .
“மதுரா!… தப்பா நினைச்சுக்காதே, அண்ணா ரொம்பவே நல்லவங்க. சத்தியமா, ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடும் கெட்டவங்க கிடையாது.
உன்னை ரொம்பவே விரும்பறாங்க. உனக்காகத் தன் உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்க மாட்டாங்க.
இன்னைக்கு அவங்க நடந்து கொண்டதை மட்டும் வைத்து அவங்களை தப்பா நினைக்காதே!
நான் ஒரு பெண். ஒரு பெண் குழந்தையின் அம்மா. இன்னொரு பெண்ணின் வாழ்வில் விளையாடமாட்டேன்.
நீ அண்ணாவை வெறுத்து ஒதுக்கணும் என்று தான், அவங்க இப்படி எல்லாம் செய்துட்டாங்க.
அவங்க மேல சாப்ட் கார்னெர் வந்து, அவங்களுக்காக உன் வாழ்வை நீ இழந்து விடக் கூடாது என்று தான்… இப்படி எல்லாம்….” என்ற மிருதுளாவை தடை செய்தது மதுராவின் புன்முறுவல்.
“தெரியும்…” என்றவள் ஏதோ சொல்வதற்குள், முன் பக்கக் கார் கதவைத் திறந்து கொண்டு, டிரைவர் சீட்டில் விஜய்யும், அவன் அருகே ஆல்வினும் அமர்ந்து விட, மதுரா அமைதியாகி விட்டாள்.
மிருதுளாவிடம் வெறும் தலை அசைப்புடன் அவள் விடை பெற, கார் கிளம்பியது.
“சிஸ்டர்!… ரொம்ப தேங்க்ஸ். நீங்கச் சொல்லும் வரை, நாங்க செய்த…” என்ற ஆல்வினை தடுத்த மதுரா,
“அண்ணா!… ப்ளீஸ்!… இப்போ தான் மிருதுளா அண்ணி எல்லாம் சொன்னாங்க.
யார் வீட்டு குழந்தையாக இருந்தாலும், இதை நான் சொல்லி இருப்பேன் தான்.
இது ஒவ்வொருவரின் கடமை. நமக்கு என்ன வந்தது என்று எதிலுமே தலையிடாமல் இருந்தால், இன்று ஒரு வீட்டில் பிடித்த தீ, நாளை நம்ம வீட்டிலும் பரவலாம். அப்போது நமக்கென்று யாருமே வரமாட்டாங்க.
நான் என் கடமையைத் தான் செய்தேன்!…
உங்க நன்றியை எதிர்பார்த்து இல்லை… தவிர சிஸ்டர் என்று வாய் நிறைய அழைச்சிட்டு, உங்க சகோதரிக்கு இப்படி தான், நன்றி சொல்வீர்களா அண்ணா?” என்று மேலும், ஏதோ சொல்ல முயன்றவளை, தடை செய்தது அவளின் மொபைல் அழைப்பு.
மதுரா, மொபைல் எடுப்பதற்குள் அழைப்பு நின்று விட, டிஸ்பிலே பார்த்தவள் அதில் தன் அன்னையிடமிருந்து, 40க்கும் மேற்பட்ட அழைப்புகள் இருப்பதை பார்த்து நெற்றிச் சுருங்கினாள்.
மதுரா அழைப்பதற்குள், பவானியே மீண்டும் அழைக்க, அழைப்பை ஏற்றவள்,
“என்ன பவி டார்லிங்!… என் கூடப் பேசாமல் இருக்க முடியலையா என்ன!… இத்தனைத் தடவை, கால் போட்டு இருக்கே!… என்ன மேட்டர்?” என்றாள்.
“அடிங்க!… நீ தான் என்னைப் பெத்து வளர்த்தவ, மாதிரிப் பேர் சொல்லிக் கூப்பிடறே!…. போனை எடுக்காம, என்னடீ அப்படி வெட்டி முறிச்சுட்டு இருந்தே!..” என்றார் பவானி.
“ஒகே!… ஒகே!… மலை ஏறாதே!.. சைலண்ட் மோடில் இருந்துச்சு. போனும் ஹாண்ட்பாகில் வைத்து இருந்தேன். வேலை செய்யும் போது, நீ ஏன்மா கால் செய்யரே?” என்றாள் மதுரா.
‘மதுரா செல்லம்!… நீ பார்த்த வேலை மட்டும், பவானி மேடத்திற்கு தெரிஞ்சது… தோளை உரிச்சு உப்புக்கண்டம் தாண்டீ!’ என்று மனசாட்சி சம்மன் இல்லாமல், ஆஜர் ஆக, அதன் தலையில் ஒரு தட்டுத் தட்டி விட, அது, மதுராவிடம் டூ விட்டு உள்ளே சென்று விட்டது.
“இல்லை மதுரா… அவசரம் கண்ணா. அதான் வேலை நேரத்தில் அழைக்க வேண்டியதாய் போச்சு. உன்னைப் பார்க்கணும் என்று, ‘உத்தம் சிங்க்’ என்பவர் ரொம்ப நேரமா இங்கே காத்துட்டு இருக்கார்.
அவர், ‘ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தைச் சேர்ந்த, இளவரசர் சூர்ய பிரதாப் ரத்தன் சிங் பி.ஏ’ வாம். அதான்.
அந்த ஆளைப் பார்த்தாலே, மாமிச மலை போல இருக்கார். உன்னைத் தேடி வந்து இருக்கார். உன் பெரியப்பா கூட அவனைப் பார்த்துட்டு டென்ஷன் ஆகிட்டு இருக்கார்.
கார்த்திக் சுத்த மோசம். கைக்கால் நடுங்கி போய் நிற்கிறான். பயமா இருக்குடீ. சீக்கிரம் வா.” என்றார் பவானி.
“உத்தம் சிங்!… எனக்கு அப்படி யாரையும் தெரியாதே அம்மா!…
ஜெய்ப்பூர் இளவரசரா!..
என்னமா, இந்தக் கார்த்திக் ஏதாவது ஏப்ரல் பூல் செய்யறானா?… நீயும் அதற்குக் கூட்டா?” என்றாள் மதுரா, குழம்பிப் போனவளாய்.
‘இருக்கும் குழப்பம் போதாது என்று இது யாருடா அரச குடும்பத்து புது என்ட்ரி?…’ என்று குழம்பிப் போனாள் மதுரா.
இவள் போனில் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்த விஜய், ‘உத்தம், ஜெய்ப்பூர் இளவரசன்’ என்பதை கேட்டதும் அதிர்ந்து விட, அவன் கால்கள் தானாக பிரேக்கை அழுத்த, கார் குலுங்களோடு நின்றது.
மதுரா போனில் பேசிக் கொண்டே இருக்க, ஆல்வினும், விஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .
“லூசாடீ நீ!… இதில் எல்லாமா விளையாடுவாங்க!… சீக்கிரம் வா. என்ன ஏதுன்னு விசாரித்து அனுப்பு.” என்றார் பவானி.
“இதோ வந்துட்டே இருக்கோம் அம்மா. பத்து நிமிசத்தில் வந்துடுவோம். உட்கார வை.” என்றவள், ‘யார் இவர்கள்?’ என்று குழம்பி கொண்டு இருக்க, ஆல்வின், இரு முறை அழைத்தும், மதுரா பதில் சொல்லவில்லை.
மூன்றாவது முறை ஆல்வின் வெகு சத்தமாக அழைத்த பின்னே, தன் எண்ணத்திலிருந்து வெளி வந்தவள், “என்ன அண்ணா?” என்றாள்.
“யாருமா போனில்!… என்னவோ, ‘ஜெய்ப்பூர் இளவரசன்’ என்று எல்லாம் காதில் விழுந்தது?” என்றான்.
“வீட்டுக்கு யாரோ, ‘உத்தம் சிங்’ என்பவர் வந்து இருக்காராம். அவரைப் பார்த்துப் பெரியப்பா, கார்த்திக் எல்லாம் பேஜார் ஆகிட்டு இருக்காங்களாம். அவர், ‘ஏதோ ஜெய்ப்பூர் இளவரசரின் பி.ஏ’வாம்.
என்னைப் பார்க்க, ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காராம். அதான் என் அம்மா, போன் செய்து சீக்கிரம் வரச் சொல்ராங்க.
‘யார் இவங்கன்னு’ யோசிச்சுட்டு இருக்கேன்.
தமிழ் நாட்டில், ‘ஜெய்ப்பூர் இளவரசர்’ என்றால், ரிசார்ட்டில் இறந்து போன பெண்ணின் கணவர் தானே அண்ணா!…
நான் இவரின் பி.ஏ.. இதைத் தவிர மற்ற யாருடனும், எனக்குக் காண்டாக்ட் இருந்தது இல்லையே!
அவங்க எதற்கு, என்னைத் தேடி வந்து இருக்காங்க என்று புரியலை. ஒருவேளை கார்த்திக் விளையாடிட்டு இருக்கானா!…
இல்ல அந்த சோனா பிசாசு, யாரையாவது மீண்டும் களம் இறக்கி இருக்கா!… ஒன்றும் புரியலையே!… ” என்றாள் மதுரா.
ஆல்வினும், விஜய்யும் பார்வை பரிமாறிக் கொள்ள, அதை மதுரா கவனிக்கத் தவறினாள்.
விஜய்யின் முகம், கற்பாறையாக மாறி விட, கைகள் ஸ்டேரிங்கை பிடித்த பிடியில் நரம்புகள் புடைத்தன.
அதே சமயம், மதுரா தங்கி இருக்கும் வீட்டின் முன்புறம் நின்று, உத்தம், சூர்யாவுடன், போனில் பேசிக் கொண்டு இருந்தான்.
“என்ன உத்தம்!… போய் இவ்வளவு நேரம் ஆகுது.” என்றான் சூர்யா.
அதாவது, ‘மதுராவிடம் பேசி விட்டாயா, மதுராவின் ரியாக்ஷன் என்ன,’ என்ற மறைமுக கேள்வி.
“பாஸ்!… மேடம் இங்கு இல்லை. அவங்க வருவதற்காகத் தான் வெயிட் செய்துட்டு இருக்கேன். விஜய் சார் பிளான் பிளாப். கார்த்திக், சேது சார் மகள் பூரணியை விரும்பறார்.
மதுரா மேடம் தான், திருமண ஏற்பாடுகள் செய்து இருகாங்க. விஜய் லவ் மேட்டர், மேடம் தெரிஞ்சுக்கிட்டாங்க போல இருக்கு. ‘விஜய் சாரை காரில் வைத்துப் பூட்டி இருக்காங்க’ என்று ஆட்கள் சொல்ராங்க.
இப்போக் கூட, விஜய் சார் கூடத் தான் எங்கேயோ போய் இருக்காங்க. நம்ம ஆட்கள் பின் தொடர்ந்து போனாங்க. ட்ராபிக்கில் மிஸ் செய்துட்டாங்க.” என்று உத்தம் முடிப்பதற்குள், எதிர் முனையிலிருந்து, கர்ஜனையாக வெளி வந்தது சூர்யாவின் குரல்.
“FIRE THEM ALL…” என்று.
“ஆல்ரெடி செஞ்சுட்டேன் பாஸ். பவானி மேடம், இப்போத் தான் போன் செய்தாங்க. வந்துட்டே இருப்பதாகச் சொன்னாங்க. வந்துட்டாங்க பாஸ்.” என்ற உத்தம் அழைப்பைத் துண்டித்தான்.
உத்தம் மொபைலை அணைத்து வைக்கவும், கார் வேகமாக வந்து நிற்கவும், சரியாக இருந்தது.
விஜய்யின் மனநிலையை அவன் கார் ஓட்டி வந்த விதத்திலேயே புரிந்து கொண்ட உத்தம், மனதிற்குள் சிரித்து கொண்டான்.
கார் நின்றவுடன், முதலில் மதுரா இறங்க, பின்னால் ஆல்வினும், விஜய்யும் இறங்கி அரண் போலே நின்றனர்.
உத்தமை பார்த்து, நெற்றிச் சுருக்கி யோசித்த, மதுரா கண்களைச் சில கணம் மூடி நின்றாள்.
அவனை அடையாளம் கண்டு கொண்டு, “தன்வீர் பையா!(அண்ணா)” என்று ஓடிச் சென்று, உத்தம் கைகளைப் பிடித்துக் கொண்டு குதித்தே விட்டாள்.
ஆல்வினும், விஜய்யும் அதிர்ந்து நின்றனர் .
“பையா(அண்ணா)!… எப்படி இருக்கீங்க?. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிட்டிங்க.” என்று ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பித்து விட, ஹிந்தி தெரிந்ததால் விஜய்க்கும், ஆல்வினுக்கும் அவர்களின் உரையாடலைக் கவனிக்க முடிந்தது .
“மெரி பெஹென்!(என் சகோதரி ) உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன்!” என்றான் உத்தம் தமிழில்.
“வாரே வா அண்ணா… நல்ல தமிழ் கத்துட்டு இருக்கீங்க!… என்ன மேட்டர்?” என்றாள் மதுரா.
“பாஸ், ஆர்டர் சிஸ்டர்.” என்றான் உத்தம் ரகசியச் சிரிப்புடன்.
“ஐயோ!… நான் ஒரு லூசு. பாருங்க, உங்களை வெளியவே நிற்க வைத்துப் பேசிட்டு இருக்கேன். அம்மா, உங்களை மீட் செய்யணும் என்று ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க.
எங்கே, நீங்கத் தான் ஆள் அட்ரஸ் இல்லாம அப்பீட் ஆகிட்டீங்களே! வாங்க வாங்க.
அம்மா!… அம்மா!… யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க.” என்று புள்ளி மானாக, உள்ளே குதித்து ஓடினாள் மதுரா.
புன்முறுவலுடன் உள்ளே போவதற்குள், வெளிப்புறம் திரும்பி, அங்கே எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க நின்றிருந்த விஜய்யையும், ஆல்வினையும், தன் கண்ணைச் சிமிட்டி, ராயல் சலூட் ஒன்று வைத்து, அவர்களை மேலும் கடுப்பேற்றி விட்டு, மதுரா பின் உள்ளே நுழைந்தான்.
ஹாலில் இருந்த மற்றவர்கள், மதுராவின் இந்தச் சந்தோசத்திற்கானக் காரணத்தினை அறியாமல் திகைத்தனர்.
தாயின் கையைப் பிடித்துக் கொண்ட மதுரா, “அம்மா!… இவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம். ரொம்ப நாளா, இவரைத் தான் மீட் செய்யணும் என்று சொல்லிட்டே இருந்தீங்க!… யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.” என்றாள் மதுரா.
மகளின் உற்சாகம், சுற்றி இருந்தவர்களின் திணறல் எல்லாவற்றையும் கண்ட பவானி, ‘என்ன சொல்வது’ என்று புரியாமல் குழம்பி நின்றார் .
“தெரியலை மதுரா… சார் யார்?” என்றார் பவானி .
“அம்மா!… உன் பிஸிபேளாபாத், உருளை கிழங்குப் பிரை, காலிபிளார் 65 தீவிர ரசிகர்மா அண்ணா… என்னம்மா!… தன்வீர் அண்ணாமா.” என்றாள் மதுரா .
பவானிக்கு நினைவு வந்து விட, “தன்வீர்!… சொல்லக் கூடாதப்பா! நான் யாரோ, என்னவோன்னு இருந்துட்டேன். எப்படி இருக்கே!…” என்றார் பவானி.
“நல்லா இருக்கேன் மாஜி… நீங்கோ எப்படி இருக்கீங்கோ?” என்றான் உத்தம்.
“கடவுள் புண்ணியத்தில் ஒரு குறையும் இல்லை. ஆமாம், ‘ஊர் விட்டுப் போவதாக இருந்தால்’ சொல்லிட்டு போக மாட்டிங்களாபா!… இவளைப் பத்தி தான் தெரியும்ல… சொல்லாம போயிட்டிங்க!…
‘உங்களைக் காணோம்ன்னு… கண்டுபிடித்துக் கொடுக்கும் படி போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கப் போறேன்னு’ ஒரே ரகளை.
வளர்ந்தப் பிள்ளைகளை, ‘யார் கடத்தப் போறாங்கன்னு’ சொன்னாக் கூடக் கேக்கலை.
உங்களை ரொம்பவே மிஸ் செய்துட்டா… சாப்பிடும் போதெல்லாம், ‘இது அண்ணாக்கு பிடிக்கும்… அது பிடிக்கும்…’ என்று சொல்லாமல் சாப்பிட்டதே இல்லை.” என்றார் பவானி, ஆற்றாமை உடன் .
“சாரி மாஜி!… அவசர வேலை வந்துடுச்சு. கிளம்பிப் போக வேண்டியதா போச்சு. யார் கிட்டேயும் சொல்லிக்க முடியலை. சாரி பெஹன். ரொம்ப சாரி… அப்போ இருந்த நிலையில், எதைப் பற்றியும் யோசிக்கக் கூட முடியலை.” என்றான் உத்தம்.
தவமாய் தவமிருப்போம்…





