68
இந்த ரைட்/raid பற்றிய விஷயங்களைச் செய்தியில், பார்த்துக் கொண்டு இருந்த கஜேந்திரன், தன் கையில் இருந்த பீர் பாட்டில்லை தூக்கி விசிறி அடித்தார்.
கோபத்தில் கண்கள் சிவக்க, ஏதோ ஒரு நம்பரை அழைத்தார்.
எதிர் முனை எடுக்கப்பட்டதும், “எப்படி இது நடந்தது!… ஒரு தகவலும் வரவில்லை. உங்களுக்கு எல்லாம், மாச மாசம் எதற்கு, லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கிறேன்?
தவிர கேட்கும் எல்லாவற்றையும், பெண்கள் உட்பட அனுப்பி வைத்துக் கொண்டு தானே இருக்கிறேன்!…. பின் என்ன?” என்று உறுமினார்.
“எங்களுக்குத் தெரியாது சார். இது நேரிடையாக முதலமைச்சர், மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஈடுபட்டு உள்ளனர்.
உங்களுக்கே தெரியும் முதலமைச்சர் ரொம்ப ஸ்ட்ராயிட் பார்வேர்ட் பெண்மணி. கை வெகுசுத்தம்.
அவங்க கூட இருக்கும் ஐந்து பேர் மட்டுமே, நமக்காக வேலை செய்பவர்கள். அவங்களை கூடக் கண்காணிக்க ஆரம்பித்து விட்டாங்க.
இந்த மத்திய, மாநில அரசாங்கம், எல்லாருடைய வருமானமும், வரியும், ஒவ்வொருப் பணபரிமாற்றமும் கண்காணிக்கிறது.
காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குச் செல்ல வேண்டிய கணக்கில் வராத பணம், ஹவாலா, parallel economy என்ற நிழல் உலகப் பணப்பரிவர்த்தனை எல்லாம் நின்று போய் இருக்கிறது.
நாம நடத்தி வந்த, ‘போலித் தொண்டு நிறுவனம், அதற்கு வந்த அந்நிய நாட்டு பணம், போலி மத்திய உணவுக் கணக்கு, போலி scholarship என்று எல்லாவற்றையும் நோண்ட ஆரம்பித்து விட்டனர்.
பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லை. நடிகர்கள் முதல் வரி ஏய்ப்பு செய்யும் எல்லோருக்கும் தான்.
சார், பிடிபட்ட ஆட்கள், ‘ஸ்பெஷல் நீதிபதி’ முன் ஆஜர்படுத்தி, மூன்றே மணி நேரத்தில் விசாரித்து முடித்து உள்ளனர்.
தவிர சப் இன்ஸ்பெக்ட்டர் சுட்டு விட்டு, பத்து பேர் தப்பி விட்டதாக வேறு சொல்றாங்க.” என்றது எதிர்முனை பதட்டத்துடன்.
“சார்!… நம்ம ஆட்கள் யாரும் இதைச் செய்யலை. செத்து போன போலீஸ் அதிகாரிங்கக் கூட, எல்லோரும் நம்ம ஆட்கள் தான். அவர்களைச் சுட்டு விட்டுத் தப்பிவிட்டதாக, ஜோடனை செய்து, ‘ஷூட் அட் சைட்’ ஆர்டர் வாங்கி இருகாங்க.
கணக்குப் பண்ணி எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டாங்க சார். கடைசி வரை, ‘தப்பித்து விட்டனர்’ என்று தான் ரெகார்ட் இருக்கும்.
உங்க பெயர் மட்டும் தான், இந்த ரைடில் வெளியே வரவில்லை. இது எல்லாவற்றிலும் நீங்களும் இருக்கிறீங்க.
என் கை மீறிப் போய் விட்டது சார். என்னால் இனி எதுவும் செய்ய முடியாது. எதற்கும், நீங்க வெளிநாட்டிற்கு சென்று விடுவது நல்லது.” என்றது எதிர்முனை.
கோபத்தில் இருந்தவர், இப்பொழுது திணற ஆரம்பித்தார். தலையைப் பிய்த்துக் கொள்ளாதக் குறை.
திடீர் என்று எல்லா அரசாங்க அதிகாரிகளும், மனசாட்சிக்கு பயந்து, வாங்கும் சம்பளத்திற்கு மேலாக, உழைக்க ஆரம்பித்து விட்டால், இவரைப் போன்றவர்களின் கதி என்ன ஆவது?
மக்களிடையே, ‘தவறு செய்வது அரசியவாதிகள்’ மட்டுமே, என்ற பிம்பம் இருக்கும் வரை தான், இவரைப் போன்றவர்களின், நிழல் உலக அரசாங்கம் நடக்கும்.
சட்டம் இயற்றுவதே அரசு அதிகாரிகள் தான் என்பதும், அப்படி இயற்றப்படும் சட்டம் ஜெயிப்பதும், சாமானிய மக்களுக்கு நல்லது ஏற்படுத்துவதும், இல்லை ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்புவதும் அரசாங்க அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே முடியும்.
அதற்குக் கை எழுத்து போடுவது மட்டுமே, அரசியல்வாதிகள் என்றும், பல அரசியல்வாதிகளை பின் இருந்து ஆட்டுவிப்பது அரசாங்க அதிகாரிகள் என்பதும் மறைக்கப்பட்ட உண்மை என்பதே நிதர்சனம் .
விஜய் இவர் மீது சந்தேகப்பட்டது உண்மை என்று நிரூபணமாகி இருந்தது.
ஆனால், அவனே, இந்த அளவு இவர் செயல்பட்டு இருப்பார் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டான்.
ஏதோ பணக்காரர்களின் பினாமி, ரிசார்ட்களில் பெண்களைப் பயன் படுத்துகிறார், அதை வைத்துப் பெரிய புள்ளிகளைப் பயமுறுத்துகிறார் என்று மட்டுமே அவன் நினைத்தது.
ஆனால், இவரோ பெண்கள், குழந்தைகளைக் கடத்துவது, தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம் சப்ளை செய்வது, பெண்களை, குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்று சட்டத்திற்கு புறம்பான எல்லாவற்றிலும் நுழைந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.
‘அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை’ கஜேந்திரனுக்கு. யோசித்து, யோசித்து தலையைப் பிடித்து, அவர் அமர்ந்து இருந்த சமயம் அவருக்கு மொபைல் அழைப்பு வந்தது .
“எப்படி நடந்தது இது!… ஒட்டுமொத்தமாக, ஒரே நாளில் எல்லாவற்றையும் எப்படி பிடித்தார்கள்?…
நம்ம காசு கொடுத்தது எல்லாம் வீணா?” என்று எதிர் முனையிலிருந்து கத்தினான் சுமன்.
“யாருக்கு தெரியும்? எவன் பின்னால் இருந்து இதை எல்லாம் செய்ய வைக்கிறான் என்று தெரியவில்லை. அவன் மட்டும் என் கையில் கிடைத்தான்….” என்றார் கஜேந்திரன்.
“எனக்குத் தெரியும். நிச்சயம், இது சூர்யப் பிரதாப் தான். நேத்து சோனாவை, போதை மருந்து வழக்கில், உள்ளே தள்ளினான். இன்று இது.” என்றான் சுமன்.
வேலை செய்தது என்னவோ விஜய். ஆனால், சூர்யாத் தான் இவற்றை எல்லாம் செய்வதாக, அவர்கள் உறுதியே செய்து கொண்டனர் .
“அவனா!.. அவன் எமகாதகன் ஆச்சே!. எல்லாம் உன்னால் தான். நான் உன்னை அவன் தங்கச்சியைக் கடத்தி, திருமணம் செய்யச் சொன்னேன்.
நீ அவளுக்குப் பதில், அவன் மனைவியைத் தவறாகக் கடத்தியது தான் கடத்தினாய்… விட்டுத் தொலைக்க வேண்டியது தானே!
உன் கிட்டே போய், இந்த வேலையைக் கொடுத்த, என் புத்தியை தான் செருப்பால் அடிச்சிக்கனும். அதான் கடத்தறப் பெண்கள் எல்லாரையும் முதலில், உன் கிட்டேத் தானே வராங்க.
பிறகு ஏன், அவன் பொண்டாட்டி மேல் கை வைச்சே!… சந்தேகம் வந்ததிற்கே, இதுவரை வெளியே தெரியாம, நாலு பேரைப் போட்டுத் தள்ளி இருக்கான்.
அவன் மனைவி சாவுக்குக் காரணம், நாம தான் என்று தெரிந்து செய்யறானா, தெரியாமல் செய்யறானா என்றே புரியலையே!
அங்கு அங்கே பணம், வஸ்துக்கள் பிளாக் ஆகி நிற்குது .80% பொருட்களைப் பிடிச்சுட்டாங்க. அதுல டெலிவரி செய்ய வேண்டியத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் வேற இருக்கு.
கொஞ்ச நாளுக்கு எதுவும் வேண்டாம். மீதம் உள்ள ஆட்களைப் பதுங்கிக்க சொல்லு. கொஞ்சம் மாசம் போகட்டும்.” என்றார் கஜேந்திரன்.
“இவனுங்களுக்கு எல்லாம் பயப்பட சொல்றியா!…. பார்த்துடலாம்.” என்றான் சுமன் .
“லூசு மாதிரி பேசாதே!… பணத்தை வாங்கிட்டு, காவல்துறையில் நம்ம பக்கம் இருந்த ஐந்து பேரை, அவங்க டிபார்ட்மென்ட்டே போட்டுத் தள்ளி இருக்கு.
இப்போ மாட்டினோம், ஒட்டுமொத்தக் காவல்துறை நமக்கு எதிராகத் திரும்பிடும்.
நாம செய்யறது எல்லாம், என்ன சமூக சேவையா!.
ஆட்கடத்தல், போதை மருந்து, துப்பாக்கி, வெடிகுண்டு விற்பனை, பாலியல் தொழில், பிளாக்மெயில், ஹவாலா என்று லிஸ்ட் போயிட்டே இருக்கு.
லாஸ் தான். உயிரோடு இருந்தால் தான், மீண்டும் தொடங்க முடியும். இப்போ, எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் நிறுத்தி வை.
வெளிநாட்டு ஆட்களுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும். அவங்களின் பணம், பொருள் திரும்பத் தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய். இல்லைன்னா உயிரோடு விடமாட்டானுங்க. சொல்வதைச் செய். புரிந்ததா?” என்றார் கஜேந்திரன்.
எதையும் பேசாமல் சுமன் அழைப்பைத் துண்டித்து விட, கஜேந்திரனுக்கு தலை மீண்டும் வலித்தது.
சுமன், ‘ஏடாகூடமாக, ஏதாவது செய்து வைப்பான்’ என்று உணர்ந்தே இருந்தார். ஆனால், அவனைத் தடுக்க என்றுமே அவரால் முடிந்தது இல்லை.
“சூர்யா!… என் மேலயா கை வைக்கிறாய்!. விடமாட்டேன். உன்னை மீண்டும் கதற வைக்கிறேன். இந்த முறை, நீ மீளவேக் கூடாது. தூக்கறேன். மதுராவை உன் கண் முன்னரே தூக்கறேன்.
மதுரா ஒருமுறை தப்பிச்சுட்டே!
இந்த முறை உன்னை, என்னிடமிருந்து எவன் காப்பாற்றுவான் என்று பார்க்கிறேன். நீ எனக்குத் தான்.” என்று உரக்கவே கத்தினான் சுமன் போதை மருந்தின் தாக்கத்துடன்.
அன்றைய நாள், சிலர் வாழ்வில் விடியலையும், சிலருக்கு பழி வாங்கும் வெறியினையும், சிலருக்கு எதிர்காலக் கவலையையும் கொடுத்து விட்டுச் சென்றது.
மறுநாள், சில புதிய உறவுகள் ஏற்படவும், சிலருக்கு மனவேதனையையும், சிலருக்கு ஞானோதயம் பிறக்கவும், ஆவண செய்யப் புலர்ந்த பொழுது, நன்றாக ஆரம்பமானது .
காலை மணி எட்டுக்குள், உத்தமை ஒரு வழிச் செய்து இருந்தான் சூர்யா.
சினிமாவில் காட்டுவது போல், மொத்த உடைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்து, உத்தமை நடுவராக நியமித்து, அவனைத் திணற வைத்ததில் ஆரம்பித்தது அவர்கள் காலை .
மதுராவோ ஆழந்த உறக்கத்தில் இருந்தாள்.
விடியற்காலை நான்கு மணிவரை, அவளுக்கு உறக்கம் வரவில்லை. சில பல மாதங்களாக அவள் சரியாக உறங்கியது இல்லை.
நேற்று இன்னும் மோசம்.
எதை எதையோ யோசித்து மனதை, குழப்பிக் கொண்டு இருந்தவள், உறங்கவே நான்கு மணி ஆனது.
அவளின் காலை வேளை, விஜய்யின் மொபைல் அழைப்புடன் ஆரம்பமானது.
ஹோட்டல் அறையில், ‘வாழ்க்கையை வென்று விட்ட’ களிப்புடன், இந்த ஆனந்தத்தில், ‘மனைவியை தான் இழந்து’ கொண்டு இருக்கிறோம், என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டு இருந்த சங்கரனின் காலை, பலவித அதிர்ச்சிகளை கொடுக்க இனிதாக ஆரம்பமானது .
பவானியோ, மகளின் எதிர்காலத்தை நினைத்துப் பயந்தவாறு உறங்காமல் தவித்து, மகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு, ‘யாரிடம் விடை இருக்கிறது’ என்று புரியாமல், தன் முயற்சியால், ‘பலர் வாழ்வுத் தடம் மாறப் போகிறது, பலரின் மன வேதனைக்குத் தான் காரணமாகப் போகிறோம்’ என்பதை அறியாத அவரின் காலைப் பெருமூச்சோடு, வேதனையோடு, குழப்பத்தோடு ஆரம்பமானது .
இவர்கள் ஒருவர் வாழ்வில் மற்றொருவர், ஏற்படுத்தப் போகும் பாதிப்பினைப் பற்றி அறிந்த விதியும், இவர்களின் போக்கினை நினைத்துச் சிரித்து கொண்டு இருந்தது .
சூர்யா, மதுராவை சந்திக்க, துடித்துக் கொண்டு இருந்ததில், அவனுக்கு உறக்கமே வரவில்லை.
காதல், அவனைப் பாடாய் படுத்திக் கொண்டு இருந்தது .
‘பூவுக்கு எல்லாம் சிறகுமுளைத்தது
எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் ஆனது
எந்தன் வானத்தில்!…’ என்று பாடாதக் குறை.
உத்தம், விழி பிதுங்கி நின்றான்.
காதலிப்பவர்களோடு இருப்பவர்களுக்கு, இந்த அவஸ்தை புரியும்.
மதுராவை தன் இல்லத்திலேயே சந்திக்கத் தான் விரும்பினான் என்றாலும், ‘மதுரா எப்படி ரியாக்ட்’ ஆவாள் என்று கணிக்க முடியாததால், அலுவலகத்தைத் தேர்ந்து எடுத்தான்.
பத்து மணிக்கு அலுவலகத்திற்கு வரப் போகிறவளுக்காக, எட்டு மணியிலிருந்து தொடங்கியது அவன் தவம்.
ஆயிரம் தடவை மணி பார்த்தாலும், அது அதன் போக்கில் தான் நகரும் என்பதை, ‘அந்தக் காதல் கிறுக்கனுக்கு’ யார் சொல்வது!.
உத்தம் மாட்டித் தவிப்பது போதாதா?
உறங்கிக் கொண்டு இருந்த மதுராவை எழுப்பியது அவளின் மொபைல் அழைப்பு .
பல அழைப்புகளுக்குப் பிறகே, தன் கனவுலகத்தை விட்டு வெளி வந்தவள், அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள்.
அவளின் கனவு அப்படிபட்டது.
விஜய் ஒரு பக்கம், முகம் தெரியாத் சூர்யா ஒரு பக்கம், கையில் தாலியோடு அவளை விரட்டிக் கொண்டு இருந்தனர்.
‘உசைன் போல்ட் ரேஞ்சுக்கு’ இவள் ஓடினாலும், இருவரும் இவளை விடுவதாக இல்லை.
நடுவே சோனா வேறு வந்து, ‘கழுத்தில் கை வைத்துக் கோடு போல் சைகைக்’ காட்டி, ‘நீ காலி’ என்றாள்.
இன்னொரு பக்கம், ‘முகம் தெரியாத மாப்பிளை ஒருவனோடு’ நின்றார் பவானி.
சங்கரன், ‘சோனா அழைத்து வந்த ஒருவனோடு’ நின்றார்.
இப்படி ஆளுக்கு ஒருத்தர் கையில் தாலியோடு துரத்திக் கொண்டு இருந்ததில், ‘பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்குக்’ கனவில் ஓடிக் கொண்டிருந்தாள்.
இந்த ஓட்டம், நிஜத்தில் நடந்திருந்தால், நிச்சயம் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு, ‘தங்கப் பதக்கமே’ கிடைத்திருக்கும் மதுரா ஓடிய ஓட்டத்திற்கு.
ஆபத்பாந்தவனாக, அவளின் கனவினை நிறுத்தியது, அந்த மொபைல் அழைப்பு.
“ஹலோ!…” என்றாள் உறக்கம் கலையாமல், கனவின் பாதிப்பு நீங்காதவளாக.
எதிர் முனையிலிருந்து, சிறிது நேரம் எந்தச் சப்தமும் வரவேயில்லை.
இவளும், ‘காலர் ஐடி’ பார்க்காமலே அழைப்பை ஏற்று இருந்தாள்.
“ஹலோ யாருங்க!… தூங்கிட்டு இருந்தவளை கால் செய்து எழுப்பிட்டு, பேசாம என்னப்பா செய்யறீங்க!… பேசுங்கப்பா… இல்லைனா, ஆளை விடுங்க. நான் மீண்டும் தூங்கப் போறேன்.” என்றாள் மதுரா.
“உடம்பு சரி இல்லையா என்ன?” என்றது எதிர்முனை பதட்டத்துடன்.
குரல் யார் என்று புரிந்து விட, அவளையும் அறியாமல், அவள் வாய், “விஜய்!…” என்றது.
“ம்ம்ம்ம்!…. விஜய் தான் பேசறேன். உடம்பு சரி இல்லையா என்ன?” என்றான் அவன் பதட்டம் தணியாமல் .
“நல்லா தான் இருக்கேன்!…” என்றாள் மதுரா, ஒன்றும் விளங்காமல்.
“இல்லை… எப்பவுமே மார்னிங் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டியே! இந்நேரம் ஏதாவது exercise, யோகான்னு செய்துட்டு இருப்பே!
மணி எட்டாகியும், இன்னும் தூக்கக் கலக்கத்துடன் பேசுறே!… அதான் உடம்புக்கு, ஏதாவது முடியலையா?…. மிருதுளாவை அழைச்சுட்டு வரவா?” என்றான் ..
‘ஆமா, ‘நான் எப்போ எழுந்துப்பேன்’ என்பது முதற்கொண்டு எல்லாம் தெரியும். ஆனால், கேட்டா, ‘லூசு மாதிரிப்’ பதில் சொல்லு.
மாத்தி, மாத்தி ஒருத்தியை இப்படி, ‘டார்ச்சர் செய்தா’ வேறு என்ன தான் நடக்கும்?’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“நைட் தூக்கம் வரலை. பென்டிரைவ்வில் பாட்டுக் கேட்டுட்டு, படம் பார்த்துட்டு இருந்தேன்…” என்றவள், மனதிற்குள், ‘பின்னே அத்தனைப் பாட்டுப் பாடி, ஓவியம் வரைந்து வைத்தா, அதைக் கேட்டு முடிப்பதற்குள் பொழுதே விடிஞ்சி போச்சு.
தூங்க விடாம செய்துட்டு, ‘ஏன் தூங்கறே என்று கேள்விக் கேக்கறான்’ பாரு மாங்கா…’ என்று விஜய்க்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
“ஏன் இப்படி இரவில் கண் விழித்து அப்படி உடம்பைக் கெடுத்துக்கறே!… மிருதுளா வேற, ‘நீ சரியாய் தூங்குவதே இல்லை. அதனால் தான் ஸ்ட்ரெஸ், அது இதுன்னு’ சொல்றா…
எட்டு மணி நேரம் தூங்கணும் என்று கூடவாத் தெரியாது!… சின்னப் பிள்ளைபோல், பாட்டுக் கேட்டேன், படம் பார்த்தேன்னு… உடம்பை கெடுத்துக்காதே மது… திரும்பவம் மயங்கப் போறே!… உடல் நலதோடு விளையாடாதே!…” என்றான் விஜய், குரலில் தவிப்புடன்.
“மாம்ஸ்!… வராதத் தூக்கத்தை, ‘நான் வெத்திலைப் பாக்கு’ வைத்துக் கூட அழைச்சிடேன்… நைட் வராம, இப்போ தான் வந்துச்சு. வாட் டு டூ பாஸ்!… இப்போத் தான், தூங்க ஆரம்பித்தேன். என்ன விஷயம் விஜய்?” என்றாள் மதுரா .
என்னவென்று சொல்வான்!
அவனுக்கே, ‘அவன் என்ன நினைக்கிறான், எதை எதிர்பார்க்கிறான்’ என்று புரியவில்லையே!
தன்னிடம் உள்ள பொம்மையை, ‘யாராவது பறித்துக் கொள்ள போகிறார்கள்’ என்று தவித்துக் கொண்டு இருக்கும் ஒரு குழந்தையின் மனநிலையில் தான், இரவு முழுவதும் தவித்துக் கொண்டு இருந்தான் .
“சொல்லுங்க விஜய். என்ன விஷயம்!… தூக்கம் வருது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க போறேன். சொல்ல வந்ததை சொல்லுங்க.” என்றாள் மதுரா வந்த கொட்டாவியை அடக்கியபடி .
“அது…. நீ…. இன்னைக்கு சூர்யாவைப் பார்க்கப் போறியா! …..சூர்யாவைப் பார்த்தே, ஆகணுமா என்ன?” என்றான் விஜய்.
அதைக் கேட்ட மதுராவின், புருவங்கள் உச்சிமேட்டை வியப்பில் தொட்டன.
அவன் வார்த்தைகளில், ‘போய் விடக் கூடாது’ என்ற தவிப்பும், ‘போகவே கூடாது’ என்ற மறைமுகக் கட்டளையையும் இருப்பதை, விஜய் உணர்ந்தானோ இல்லையோ, மதுராவிற்கு அது நன்கு விளங்கியது .
“ஆமா மாம்ஸ். போய்த் தானே ஆகணும். நாலு கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றாலும், ஒரே நாளில் சோனாவோடு என்னுடைய பிரச்னையை முடித்து இருக்காரே!.
அதற்கு நன்றியாவது சொல்லணும் இல்லையா?
தவிர அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் வேற கையில் கொடுத்து இருக்கார். ‘ courtesy’ என்ற ஒன்று இருக்கே!…” என்றாள் மதுரா.
“நீ நன்றி சொல்லவில்லை என்றால், ‘அவன் உயிர் வாழமாட்டானா’ என்ன?… இல்லை, ‘உன் நன்றி இல்லை என்றால், அடுத்த வேலை சாப்பாடு’ அவனுக்கு இறங்காதா?” என்றான் விஜய் கடுப்புடன்.
“இங்க பாருங்க விஜய். நீங்க டென்ஷன் ஆக, இதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை!. அவர் அதை எதிர்பார்க்கிறாரோ, இல்லையோ, நன்றி சொல்லும் கடமை எனக்கு இருக்கு.” என்றாள் மதுரா.
“அவராம் அவர்….. சரியான குட்டிச் சுவர்… அதில் போய் மோதிக்கோ!… அந்த அவர் தான், ‘சோனா மாதிரி’ உன் டாட்டிக்கு கேரட் காட்டி, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், இங்கேயே இருக்கும் படி செய்த அவர்.
சோனா செய்ததற்கும், இவன் செய்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது!
அவள் அக்ரீமெண்ட் காட்டினாள் என்றால், இவன் வேலை வாங்கிக் கொடுத்து இருக்கான்.” என்றான் கத்தினான் விஜய்.
விஜய் மொபைலில் கத்திய கத்தில், மதுராவின் காது, ‘கொய்ங்’ என்ற சவுண்ட் வர, மொபைலை காதை விட்டுத் தூரத் தள்ளிப் பிடித்தாள்.
‘நேரா இருந்தா அடிச்சிடுவானோ!… அனல் செமையா இருக்கே!… தூங்கிட்டு இருக்கிறவளை எழுப்பி, இப்படிக் காய்ச்சி எடுக்கிறானே!…’ என்று புலம்பினாள் மதுரா மனதிற்குள்.
அவன் பொறுமை எல்லை கடந்து கொண்டு இருந்தது.
“அதைப் பற்றிக் கேட்கவும் தான் போகிறேன் விஜய்.” என்றாள் மதுரா மெதுவாக.
“அதைத் தெரிந்து கொண்டு, என்ன செய்வதாக உத்தேசம்?”
“லுக் விஜய்!… அவர், ‘யார், என்ன’ என்று எதுவும் தெரியாது. தெரியாத எனக்கு, இப்படி ரிஸ்க் எடுத்து வேலை செய்யணும் என்று அவருக்கு அவசியமே இல்லை.
அப்படி இருந்தும், செய்து இருக்கார் உங்களைப் போலவே!
உங்களுக்கும், எனக்கும் கூடத் தான், எந்த உறவும் இல்லை. நீதி, நேர்மை, நியாயம்…. இதற்காக, நீங்க எனக்கு உதவுவது போலவே அவரும் உதவுகிறார்.
வாய் கிழிய, ‘நான் ஆயிரம்’ பேசலாம். ஆனால், சோனா, சுமன், சொர்ணா, கஜா இவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் அளவு நான் பெரிய ஆள் கிடையாது.
என் மானத்தை, காக்க யார் முன் வந்தாலும், ‘நன்றிச் சொல்லி அவர்கள் செய்யும் உதவியினை’ ஏற்று கொள்ளும் ஒரு நிலையில் தான் சுமனும், சோனாவும் என்னை நிறுத்தி உள்ளனர்.
இதுவரை நீங்கச் செய்த உதவிகள் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால், இனியும் வெளியே தெரியாமல் செய்ய முடியாது. அப்படி தெரிய வந்தால், அவர்கள் இருவரும் சேர்ந்து, ‘என் மானத்தை வெளியுலகில் நாசப் படுத்தாமல்’ விடமாட்டார்கள். இவர் உதவுகிறேன் என்று வருகிறார்.” என்றாள் மதுரா.
“அப்போ, ‘என் உதவி தேவை இல்லை’ என்கிறாய் அப்படி தானே!
புதுசாய் ஒருவன் வந்தவுடன், பழையதைத் தூக்கி அடித்து விடலாம். அப்படித் தானே மதுரா!…” என்றான் விஜய் நக்கலாக .
“லூசு மாதிரி உளறாதே விஜய்!…. நீ உதவிச் செய்வதாக வந்தால், ‘சோனா அதற்கு வேறு அர்த்தம்’ கற்பித்து விடுவாள். உதவியின் வர்ணமே மாறி விடும்.
உனக்கு, நிறையத் தளைகள் இருக்கு விஜய். அதை மீற உன்னால் முடியாது. சூர்யாவிற்கு நன்றி சொல்வதால், உன்னை நான் தூக்கி எறிவதாக அர்த்தம் இல்லை.
நீ பேசுவது டபுள் அர்த்தம் கொடுக்கிறது. வேண்டாம்… வார்த்தைகளை விடாதே!… பிறகு கஷ்டம்.
நான், என் பெற்றோர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவள். உங்களுக்கும், எனக்கும், எந்த உறவும் இல்லாத போது, ‘இது மாதிரி பேசுவது அபத்தம்.’ வார்த்தை தடிக்கிறது.
நீங்கக் கோபத்தில் இருக்கீங்க. ‘என்ன பேசுகிறோம்’ என்று கூடப் புரியாமல் பேசறீங்க. அமைதியா இருந்து யோசியுங்க. இப்போ வைக்கிறேன்.” என்றவள் அவன் அழைப்பைத் துண்டித்து விட்டுத், தன் தூக்கத்திற்கான ஆயுட்காலம் கொஞ்சம் என்று புலம்பியவாறு காலைக் கடன்களை முடித்து, சூர்யாவை சந்திக்க ரெடி ஆகி வெளியே வந்தாள்.
யார் இந்தச் சூர்யா?
ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்தவனுக்கும், மதுராவிற்கும் என்ன சம்பந்தம்?
பவானி, மகளின் சுயம்வரத்தில் களம் இரக்க போகும் இன்னொருவன் யார்?
மதுராவின் மாலை எந்தக் கழுத்தில் விழும்?
விஜய்க்கும், மதுராவிற்கும் இருப்பது வெறும் காதல் மட்டும் தானா?
இல்லை அதையும் தாண்டி பலர் அறியாத ரகசியம் ஒன்று இருக்கிறதா?
விடை தெரியா பல புதிர்கள், கேள்விகள் அணிவகுத்து நின்றன…
இவற்றுக்குப் பதில் என்ன?
விடையைத் தனக்குள் வைத்துக் கொண்டு, ‘காலம் பார்வையாளராக’ நடப்பதை, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
தவம் தொடரும்…





