arrow_back
என் வீட்டு தோட்டத்தில் அத்தியாயம் 1

அத்தியாயம் 1

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

வேலுண்டு! வினையில்லை! கந்தா போற்றி!

1

முருகன் என்றால் அழகன் என்று

தமிழ் மொழி கூறும்!

அழகன் எந்தன் குமரன் என்று

மனமொழி கூறும்!

அமர்க்களமாக ஆடிமாதம் பிறந்துவிட்டது. எங்கும் ஆத்தா அதிர்வு (vibe) தான். ஆடி பிறந்தாலே அழைத்துக் கொண்டு வரும் என்பது உலக வழக்கு. ஆடிப் பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவசை என ஆடி மாதத்தைத் அடிபிடித்து வரும் அடுத்தடுத்த மாதங்களிலும் வரிசைகட்டி வரும் பண்டிகை நாட்கள் என ஆடி பிறந்தாலே இடைவிடாத கொண்டாட்ட வைபோகம்தான் எனினும் தலை ஆடி என புதுமணத்தம்பதிகளின் கடுப்பை ஏகபோகமாக சம்பாதிக்கும் மாதமும் ஆடி மாதமே.

ஆடிப்பட்டம் தேடி விதை, ஆடிக் காத்துக்கு அம்மியே பறக்கும், ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் மேலும் ஆடிச் செவ்வாய் தேடிக் குளி… அப்படினா மத்த செவ்வாயெல்லாம் குளிக்கத் தேவையில்லையான்னு குதர்க்கமா கேட்கக் கூடாது. பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு நம்ம ஆண்டவரே சொல்லியிருக்காரு. ஆனா… ஆராயணும்ங்க. பழமொழிங்கறது பழைய மொழி இல்ல. பழுத்த அனுபவ மொழி. என்ன ஒன்னு… காரியத்த செய்யச் சொன்னவங்க சரியான காரணத்தைச் சொல்லிட்டுப் போகல. காரணமில்லாத காரியமேது. எங்க விட்டேன்… ங்கா… இப்படி ஆடி மாத சிறப்பைக் கொண்டாட எத்தனையோ சொலவடைகள். சூரியன் மறையும் திசை உத்தரயாணத்திலிருந்து தட்சணாயனத்திற்கு மாறுவதும் ஆடி மாதமே. இந்தக் காலம் தேவர்களின் உறக்க காலமாக புராணங்களில் கூறப்படுகிறது. ஆடி மாதம் திருமணங்கள் நடைபெறுவது இல்லை எனினும் ஆடிப்பெருக்கென்று தாலி பெருக்கிப் போடுவது நமது பாரம்பரியம். குலதெய்வ வழிபாடு முதல் முன்னோர் வழிபாடு வரை இந்த ஆடிமாதத்தில்தான்.

பக்கத்து கோவிலில் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்

LR ஈஸ்வரி தொடங்கி மணிகண்டன், மாணிக்க விநாயகம், சீர்காழி கோவிந்தராஜன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் மகதி என வரிசைகட்டிய ஆங்காரமான அம்மன் பாடல்களுக்கு சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு இப்பொழுதுதான் முருகன் பாடல்களுக்கு மாறியது. கோவில் என்றால் பெரிய கோவிலெல்லாம்‌ இல்லை. சிவப்புச் சேலை சுற்றப்பட்ட பெரிய வேப்பமரம். அவவ்ளவே. பின்னாளில் பெரிய கோவிலாக பரிணாமம் பெற சாத்தியக் கூறுகள் அதிகம்.

ஆடி மாதம் பிறந்தும் வெயிலின் உக்கிரம் குறையாத சென்னையில் அந்த இடம் மட்டும் பசுமை கொஞ்சியது. தெளிப்பான் மூலம் (mist spray) குறுஞ்செடிகளுக்கு தெளிக்கப்பட்ட நீர் காற்றுவாக்கில் முகத்தை சில்லிட்டது. காற்றில் ஈர வாசம்.

குறிஞ்சி க்ரீன்ஸ் நர்சரி. உள்ளங்கையளவு கற்றாழையில் இருந்து, மல்லி, முல்லை, ஜாதி, ரோஜா முதலிய நாட்டுரக மலர் செடிகள், பெயர் தெரியாத க்ரோட்டன்கள், ஆளுயரமே வளர்ந்தாலும் கனி கொடுக்கும் மா, கொய்யா, எலுமிச்சை போன்ற கூடிய விரைவில் பலன் கொடுக்கும் ஒட்டு வகை மரக்கன்றுகள், வாஸ்த்து ஸ்பெஷல் மூங்கில், மணிப்ளான்ட் என இன்டோர், அவுட்டோர் வகை செடிகள் என உள்நாட்டு வெளிநாட்டு ரகங்கள், நீர்த்தாவரங்களான தாமரை, அல்லி பாரம்பரியமான நாட்டு காய்கறி மற்றும் கீரை விதைகள், அதற்கேற்ற இயற்கை உரம், மண்புழு உரம், செம்மண், தேங்காய் நார் ப்ளாக், ப்ளாஸ்டிக் பைகள், சிமென்ட் பூந்தொட்டிகள் என ஒரு வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான அத்தனையும் அங்கு விற்பனைக்கு.

செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளது செவியைத் தீண்டி, மனதை உருக்கிய தேனில் ஊறவைத்த தீங்குரலில் இந்த வரிகளைக் கேட்டவள் முகம் தன்னால் மலர்ந்து விகசித்தது. அழகன் எந்தன் குமரன் என்றதும் தன்‌ மகனையே அந்த அழகனாக வரித்துப் பார்த்தாளாக்கும். முகம் கனிந்து இதழ் விரிந்தது. அது பிள்ளையைப் பெற்ற எல்லாருக்கும் இருப்பதுதானே. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே. அததுக்கு அதது பிள்ளை ஒசத்திதானே. இதில் என்ன சிறப்பு என்று கேட்டால் இவள் மகன் சிறப்பு தான்‌. சற்று நேரம் அசந்து இருந்துவிட முடியாது‌. கண் முன் இல்லை என்றால் என்ன நேரம் என்ன செய்து வைப்பானோ என பெற்றவளைப் பதட்டத்திலேயே வைத்திருப்பவன்.

ஒரு இடத்தில் நில்லாமல் காற்றைக் குடித்தவன் போல துறுதுறுவென ஓடுபவனை, ஒரே இடத்தில் பிடித்து வைக்க முடியவில்லை.

தினமும் எழுந்ததிலிருந்து படுக்கும் வரை எதையாவது உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு. வீட்டில் இருக்கும் பாதி பொருட்கள் கண், காது, மூக்கு என அங்கபங்கப்படுத்தப் பட்டவைகளே.

பத்து வயதுதான் ஆகிறது. அதற்குள் ஸ்விம்மிங், கராத்தே, சிலம்பாட்டம், மியூசிக் க்ளாஸ் அதிலும் ட்ரம்ஸ்தான் வேண்டும் அப்பொழுது தான் அடி வெளுக்க முடியும் என அடம் பிடித்தவனை என்னவென்று சொல்வது. எதையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் எல்லாமும் அரைகுறை. எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் எதையும் பள்ளியில் விட்டு வைக்கவில்லை. வகுப்பிற்கு சென்ற இரண்டு மூன்று மாதங்களுக்கெல்லாம் அந்த வகுப்பு போரடித்துவிடும். அடுத்த வகுப்பிற்கு அவனே பெயர் கொடுத்து வந்து நிற்பான். பள்ளியிலேயே அனைத்து சிறப்பு வகுப்புகளும் இருக்க சேர்வதும், விலகுவதும் அவனிஷ்ட்டமே.

“என்னடா கராத்தே அவ்ளோதானா?” என்றால்,

“சிம்பிள் மா…” கையையும், காலையும் காற்றில் பறக்கவிட்டு காண்பிப்பான். அதில் சாப்பாட்டு மேஜையில் இருந்த இரண்டு பீங்கான் தட்டுக்களும், கோப்பைகளும் காவு கொடுத்ததுதான் மிச்சம்.

அடுத்து சிலம்பம் வகுப்பு என்னாயிற்று என்று விசாரிக்கவே இல்லையே. கேட்கப்போக, அவன் கம்பெடுத்து சுழற்றிக் காண்பிக்க யார் கண், மூக்கையாவது பதம் பார்த்துவிட்டால் என்னாவது‌. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம். ஒன்றை கற்று முடிப்பதற்குள் அதில் ஆர்வம் குறைந்ததும் அடுத்தது போக வேண்டும்.

“ஏம்மா… உம்புள்ள ஒரு பொண்டாட்டியோட நிறுத்துவானா? இல்ல அதுலயும் அடுத்து அடுத்துன்னு தேடுவானா?” பூங்காவனம் கூட சிரித்தபடியே கேட்டு வைத்தார்.

விளக்கு தேய்த்து வந்து பூதம் போல ஒரு நிமிடம் சும்மா இருந்தாலும் தலை வெடித்துவிடும் அவனுக்கு. அவன் செய்து வைக்கும் வேலைகளில் இவளுக்குதான் இதயமே வெடித்துவிடும்.

இந்த தலைமுறை பிள்ளைகளுக்கே உரிய ஹைபர் ஆக்டிவேட் சைல்ட். திருதிரு துறுதுறு ரகம். படிப்பில் படுசுட்டி. எதையும் சட்டென உள்வாங்கிக் கொள்வான்.

அதிகாலையிலேயே அவளது உதிரத்தை கொதிநிலைக்கு உயர்த்தி வைத்தான் அவளது உதிரத்தில் உதித்த உத்தம புத்திரன். அதாங்க ரெத்தக்கொதிப்பு.

இன்று ஞாயிறு‌ என்பதால் சற்று சாவகாசமாக எழலாம் என்றால் மகன் விட்டால்தானே? மணி ஆறு அடிக்கும் முன்பே எழுந்துவிட்டான். அவன் அடுப்படியில் உருட்டும் சப்தம் கேட்டே, அடித்துப் பிடித்து எழுந்து வந்தாள். பின்னே அம்மாவுக்கு உதவி செய்கிறேன் பேர்வழியென எதையாவது செய்து வைக்கப்போக இவளுக்குதான் ரெட்டிப்பு வேலை. நினைத்தது போலவே எழுந்து வந்து பார்க்கையில் ஸ்டவ் டீ குளித்திருந்தது. பொங்கி வழிந்த டீத்தூள் தீயில் கருகிய வாசம். ஸ்டவ் பர்னர் துளைகளை பாதி அடைத்திருந்தது. பார்த்தவுடன் சுர்ரென உச்சந்தலைக்கு கோபம் ஏறியது. இவளின் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவன், சட்டென வாய்விட்டு சிரித்தான். அவள் வந்து நின்ற கோலம் அப்படி. இரவு உடையில் தலைவிரி கோலம். அவன் சிரிக்க காரணம் அவளது சுருள் முடி. உங்க வீட்டு சுருள் எங்க வீட்டு சுருள் இல்லை. எவ்வளவு நீளம் வளர்த்தாலும் எல்லைக்குள் நிற்கும் காவல் தெய்வம் போல பாதி முதுகைத் தாண்டாது. நிமிர்த்திப் பிடித்த மாப் (mop) போல வந்து நின்றவளைப் பார்த்துதான் அப்படிச் சிரித்தான்.

சிரிப்போடு, “குட்மார்னிங் மா!” காலை வணக்கமும். அவளுக்கு அதெல்லாம் கவனத்தில் இல்லை. பொங்கி வழிந்து கரியேறியிருந்த பால் பாத்திரமும், மூச்சடைத்து தவித்த பர்னரும் தான் கவனத்தை ஈர்த்தது.

‘டேய்… சன்டே அதுவுமா ஏன்டா?” என்று தான் உள்மனம் அங்கலாய்த்தது‌.

“நான் கேட்டேனாடா… உங்கிட்ட டீ கேட்டேனாடா?” பல்லைக் கடித்து கேட்க,

“நீங்க கேக்கல… மாமா கேட்டாங்களே!”

“நீ ஒரு ஆளுன்னு உங்கிட்ட டீ கேட்டானா? எங்கடா அவன்?”

“மாமா டீ குடிச்சுட்டு ஜாகிங் போய்ட்டாங்க! லேஸ்ஸி மம்மி. ஸ்லாத் கூட உங்களவிட சுறுசுறுப்பா இருக்கும். ப்ரஷ் பண்ணிட்டு வாங்க!” டீ குடிக்க மகன் கட்டளையிட,

“இவனோட” அலுத்துக் கொண்டாலும் தனயன் சொல் தட்டாத தாயாக சிரமேற்கொண்டு, பல்துலக்க செல்ல,

டீயை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றிவிட்டு, மீதியை ஃப்ளாஸ்க்கில் ஊற்றி மூடிவைத்தான். சிந்தி சிதறித்தான். பின்னே அடுப்பு மேடைக்கும் சாங்கியத்திற்கு கொஞ்சம் தாரைவார்க்க வேண்டாமா?

அவளும் பல்துலக்கி, முகம் கழுவி, முடியைச் சுருட்டி ரப்பர் பேன்டில் முடிந்தளவிற்கு அடக்கிவிட்டு டவலால் முகத்தை துடைத்தபடி வந்தாலும் அடங்காத முடிகள் நெற்றியிலும் கன்னத்தோரமும் சுருளாகத் தொங்கியது.

பெண்களில் சாரசரிக்கும் சற்று மிஞ்சிய உயரம். காய்ச்சும் போது சற்று பதம் தப்பி பழுப்பேறிய பசு நெய்யின் நிறம். அதில் தனித்துவமானதொரு மினுமினுப்பு. சற்றே ஏறு நெற்றி என்றாலும் அதுவும் தனி அழகு கொடுத்தது அவளது நீள்வட்ட முகத்திற்கு. அடர்ந்த புருவத்தின் கீழ் ஆளை விழுங்கும் அகன்ற விழிகள். கூர்நாசியில் இடபுறம் சிறு வளையம். இரண்டாம் பருவமான முப்பதின் தொடக்கத்தில் கனிந்த இளமை.

துண்டை தோளில் போட்டவாறே சோஃபாவில் அமற, மகனும் டீ கப்பை நீட்டினான்.

வாங்கி ஒரு வாய் பருகியவுடன், “டீ‌ எப்படி மா?”

“நிறம், திடம், சுவை‌ பக்காவா இருக்குடா! உங்க மாமன் ட்ரெய்னிங் சூப்பர்!” பாரட்டு உடன்பிறப்பிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

காலையில் எழுந்து காஃபி, டீ போடுவதில் ஆரம்பித்து தோசை சுடுவது, மேகி கிண்டிக் கொள்வது, குக்கரில் சாதம் வைத்துக் கொள்வது போன்ற அவனாலான சின்னச் சின்ன வேலைகளை மாமனோடு‌ சேர்ந்து கற்றுக் கொண்டான்.

இரவு நடுச்சாமம் வரை லேப்டாபில் எதையாவது மாமனோடு சேர்ந்து பார்த்துவிட்டு மிட்நைட் க்ரேவிங் என எதையாவது கிண்டி தின்று வைத்திருப்பார்கள் இருவரும். காலையில் எழுந்து வந்து பார்த்தால் முட்டை ஓடு, நூடுல்ஸ் பாக்கெட்டுகள் என அடுப்படி பல்லிளிக்கும்.

“லேடிஸ்ஸ நம்பினா இனி வேலைக்காகாதுடா மாப்ளே. அதெல்லாம் போன தலைமுறையோட போச்சு. சின்னச்சின்னதா நாமலே சமையல் கத்துக்கோனும்டா” கிண்டலோடு சமைக்க கற்றுக் கொடுத்து தானும் கற்றான் அபிலாஷ். அது அவ்வப்பொழுது அம்மாவுக்கு உதவவும் செய்யும். உபத்திரமாகவும் அமையும். என்ன ஒன்று அதன் பிறகு அடுப்படி தான் கந்தரகோலமாகிவிடும். மாமன் என்றால் அக்கா வாய்க்குப் பயந்தே துடைத்து சுத்தம் செய்து விடுவான். இவன் சிறுவன்தானே?

டீ குடித்து முடித்ததும் இரவு உடையிலிருந்து சுடிதாருக்கு மாற்றிக் கொண்டு மெயின் ரோட்டில் இருக்கும் நர்சரிக்கு அம்மாவும் மகனும் கிளம்பிவிட்டனர். இவர்கள் குடியிருப்பது வளசரவாக்கம் பகுதியில் இரண்டு படுக்கையறை வசதி கொண்ட அபார்ட்மெண்ட்.

நர்சரி சுற்றிலும் கம்பிவேலி போட்டு, பச்சை நிறத்தாலான வலை நிழலுக்காகக் கட்டப்பட்டிருந்தது.

கேட் பூட்டியிருந்தது. கேட்டைத் தட்டிக் கொண்டே குரல் கொடுத்தாள். ஐம்பதுகளில் இருந்த கண்ணையன் வந்து கேட்டைத் திறந்து விட்டார். அவர் பெருபாம்பான்மையான நாட்களில் இரவு இங்கேயே தங்கிக் கொள்பவர். அவரும் அப்பொழுதுதான் எழுந்திருப்பார் போல. கேட்டைத் திறந்துவிட்டு முகம் கழுவச் சென்றார்.

நான்றாக வானம் வெளுத்துவிட்டது. காலை வெயில் சுள்ளென உரைத்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தவள் தண்ணீர் மோட்டாரை இயக்கிவிட்டு வந்தாள். ஒவ்வொரு செடியாக பார்வையிட்டாள். முன்தினம் மொட்டாக இருந்த சில ரோஜாக்கள் மலர்ந்து, பார்த்தவள் முகத்தையும் அனிச்சையாய் மலரச்செய்தது. பதியம் போட்டு வைத்த மல்லிச்செடிகள் சில துளிர் விட்டிருந்தன.

ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போலவே சந்தோஷித்தது மனம். ஒரு செடியிலிந்து வெட்டுப்பட்டு வேறொரு இடத்தில் பதியம் போட்டு, வேர்ப்பிடிக்கும் வரை வெட்டுப்பட்ட கிளையில் உயிரைப் பிடித்து வைத்திருந்து மீண்டும் உயிர் துளிர்ப்பது என்பது அத்தனை சாதாரணமா என்ன? பெண்களுக்கும் இது பொருந்தும். நாற்றாங்கால் ஒன்று. வேர்ப்பிடித்து ஊன்றி நிற்கும் நிலம் வேறொன்று. வெட்டி, பதியம் போட்டு, நீர் விட்டு, எரு போட்டு அது வேர்ப்பிடித்து துளிர்க்கும் வரை காத்திருந்து முதல் துளிர்ப்பை பார்ப்பது, ஒரு தாயின் வயிற்றில் கரு உருவாவதைப் போல. எத்தனை சந்தோஷம். வயலில் நாற்றாங்காலில் நாற்றுவிட்டு பச்சை நிறத்தில் ஊசிகளை ஊன்றி வைத்ததுபோல் வயல் முழுதும் நெல் முளைப்பதைப் பார்த்து பூரித்தவளுக்கு இங்கு தொட்டிச் செடிகளை பார்த்து பூரிக்கும் நிலமை.

ஆயாசமாக மூச்சுவிட்டவளைத்தான் அவளையும் மீறி கோவிலில் ஒலித்த பாடல் வரிகள் ஈர்த்தது.

அழகனா என் மகன். சரியான அழுக்கன் என்று எண்ணி முடிக்கவில்லை.

“அம்மா” ஜங்கென குதிக்காத குறையாக அவள் முன் வந்து நின்றவனைப் பார்த்து அன்றைக்கே இரண்டாம் முறையாக இரத்தம் கொதிநிலை கண்டது. இப்பொழுது தானே வண்டிவிட்டு இறங்கி இருவரும் உள்ளே வந்தனர். அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது. அதற்குள் இந்தக் கோலம்.

“சக்தீஈஈஈ” உச்சஸ்துதியில் பல்லைக் கடித்து கத்தினாள் அபிராமி.

சேற்றுக் குளியலாடி வந்தவன்‌போல் உடை, மேனியெங்கும் ஒரே செம்மண் பூச்சு.

அவளது கோபம் கண்டவன், “கரை நல்லது மம்மி!” தோளை குலுக்கி எளிதாகச் சொல்ல,

“அடிங்க… கரை நல்லதுன்னு சொல்றவன வந்து உன் ட்ரெஸ்ஸ துவைக்க சொன்னா தெரியும்டா! விளம்பரத்துல ஆயிரம் சொல்லுவான். தொவைக்கறவளுக்குதானே தெரியும்‌!” என்றவள் குரலில் கோபத்தின் டெசிபல் எகிற, இவன் ஆக்கி வைக்கும் கரைகளெல்லாம் எத்தனை பாக்கெட் சர்ஃப் போட்டாலும் போகாது. மெஷின் சலவைக்கு என்னை யாரும் அசைக்க முடியாது என அடமாக நிற்கும். கையில் தான் துவைக்க வேண்டும்.

“சக்தீ… என்னடாயிது?” அழாத குறையாக அவள் கேட்டதும், அவள் பார்வை சென்ற திக்கில் அவனும் பார்த்தான்.

‘டேய்… ஒரு லோட் ‌செம்மண் என்ன விலை தெரியுமா?’ என உள் மனம் அரற்றியது. எங்க ஊர்ல சும்மா கெடக்குற மண்ணுடா. இங்க ஆயிரக்கணக்குல போட்டு வாங்கறேன். அழாத குறையாக அலுத்துக் கொள்ள,

“ஈஸி மா. உங்களுக்கு ஹெல்ப் தான் பண்றேன். பாட் (pot) எல்லாம் ஃபில் பண்ணிட்டேன. நீங்க ப்ளான்ட் ஊனிவச்சா போதும்!” என்பவனை அதட்ட எப்படி மனசு வரும்.

சிலர் ஆர்டர் கேக்கும் பொழுது தொட்டியோடு கேட்பார்கள். அவர்களுக்கு இங்கேயே தொட்டியில் செடிகளை வேர் சேதமாகாமல் நட்டு அனுப்புவது வழக்கம்.

சைக்கிள் சப்தம் கேட்டுத் திரும்ப, “என்னக்கா… ஆரம்பிச்சுட்டானா?” கேட்டபடி சைக்கிளை ஸ்டான்ட் போட்டுவிட்டு வந்தாள் அனுப்ரியா

“ஆமா அனு… இந்த ரெண்டு நாளே இவன வச்சு சமாளிக்க முடியல‌. ஏன்டா வீக்கென்ட் வருதுன்னு இருக்கு!” சலித்துக் கொண்டாள்.

“அப்போ டீச்சர்ஸ் நிலமைய நெனச்சுப் பாருங்க!”

“அதுவும் சரித்தான்! பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்னா பிள்ளைக தானே பயப்படுவாங்க. நம்மலப்பத்தி என்ன கம்ப்ளைன்ட் வருமோன்னு. ஆனா, நான்தான் ஒவ்வொரு தடவையும் பயந்து பயந்து இவன் டீச்சர்ஸ மீட் பண்றேன். என்ன சொல்லுவாங்களோன்னு! நாங்கூட ஸ்கூல் போகும் போது இப்படி என் டீச்சர்ஸப் பாத்து பயந்ததில்லை.” பிள்ளையைப் பற்றி உயர்வு நவிச்சி செய்கிறாளா, வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாளா எனப் பிரித்தரிய முடியா பாவம் அவளது முகத்தில்.

குறும்புக் கண்ணன் என்று கொஞ்சவும் முடியாது. சேட்டைக்காரன் என அதட்டவும் முடியாது. ஆனால் எல்லை மீறும் நாட்களில் அடி வெளுத்துவிடுவாள். தயவுதாட்சண்யம் பார்க்க மாட்டாள்.

“உங்கள 24×7பதட்டத்துலயே வச்சிருக்கான் உங்க மகன். குழந்தையில எப்படிக்கா வச்சு சமாளிச்சீங்க. இப்பவே மின்னல் முறளி மாதிரி சரட்… சரட்டுனு ஒரு எடத்துல நிக்க மாட்டேங்கிறான். குழந்தையில இன்னும் கஷ்ட்டமே! அவனோட அப்பா மாதிரியோ? ஏன்னா உங்களத்தான் தினமும் பாக்குறேனே! ஒரு செடிய கொத்தி பதியம் போடணும்னாக்கூட தரைக்கி வலிக்குமோன்னு தடவித்தடவி பண்ற ஆளாச்சே?”

என்று கேட்க, சட்டென முகம் வதங்கியது. மகனைப் பற்றி பேசும் பொழுது அதிகாலைச் சூரியகாந்தியாய் மலர்ந்த வதனம் அப்பாவைப் பற்றி கேட்டதும் மாலை நேரத்து சூரியகாந்தியாய் தொங்கிப் போயிற்று. மீண்டும் அசைபோட விரும்பாத நாட்கள் அவை. வேண்டாம் என முடித்துக் கொண்டாலும் மூளை அடுக்குகளில் படிந்துபோன நினைவுகளை முற்றிலுமாக அழிக்க முடியாமல் இப்பெழுதும் மனமெங்கும் நொந்த உணர்வு. அவளது முகமாற்றத்தை உணர்ந்தவள்,

“ஏங்க்கா… ஒரு மாதிரி ஆகிட்டீங்க? சாரிக்கா…” அனு வருத்தத்தை தெரிவித்தாள்.

அவளைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை தெரியாது தான். ஆனால் மேலோட்டமாகத் தெரியுமே. தனியாக மகனை வளர்க்கும் சிங்கிள் மதர். தெரிந்தும் தான் கேட்டது தவறென உணர்ந்தவள் வருத்தத்தோடு மன்னிப்பும் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அனு!” சமாளித்தவள்,

“என்ன அனு… அம்மன் அவதாரம் எடுத்தாச்சா?” பேச்சை மாற்றினாள்.

“எடுத்தாச்சு… எடுத்தாச்சு…” சலித்தவளும் வாய்விட்டு சிரித்தாள்.

அனுப்ரியாவின் அம்மா பூங்காவனத்திற்கு ஆடி பிறந்தாலே அம்மன் அவதாரம்தான். இனி ஆடிமாதம் முழுவதும் சிவப்பு மஞ்சள் கலந்த சேலை தான். முகம் முழுக்க மஞ்சள் பூசி நெற்றி நடுவில் பெரிய சைசில் வட்ட குங்குமப் பொட்டும், கை நிறைய சிவப்பு பச்சை கலந்த கண்ணாடி வளையலும் என தீவிர பக்தையாக வலம் வருவார். சற்று பெருத்த சரீரம் வேறு. சாரீரமும் அப்படித்தான்.

இவள் மகனோடு சென்னை வந்த காலத்தில் யார் துணையும் இல்லாமல் தவித்தவளுக்கு அப்போது எல்லாமுமாக இருந்தது அனுப்ரியா குடும்பம் தான். இவளிடம் வேலைக்கு தான் என்றாலும் நீ கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை பாக்குறேன் என்று நில்லாமல் எந்த உதவி என்றாலும் உடனுக்குடன் ஓடி வருவார் பூங்காவனம். அப்பொழுது தம்பி அபிலாஷ் கூட உடனில்லை. சென்னையில் தான் படித்துக் கொண்டிருந்தான். போய்வர சிரமம் என விடுதியில் தங்கிப் படித்தான். வார இறுதியில் மட்டுமே வருவான்.

“வாக்கா பாத்துக்கலாம்!” என்று சொன்ன தம்பியுடையானை நம்பி என்ன தைரியத்தில் வந்தாள் என அவளுக்கே தெரியாது. குருட்டு தைரியம் என்பதை விட, பெரியவங்க பேச்சை மதிக்காம போறயில்ல. எப்படி வாழறேன்னு நாங்களும் பாக்குறோம் என்றவர்கள் முன் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வீம்பு.

இவளுக்கு ஒத்தாசையாக இருந்தது இவள் வாடகைக்கு இருந்த வீட்டிற்கு முறைவாசல் செய்ய வரும் பூங்காவனமே. இதோ ஆயிற்று. ஐந்து வருடங்களைக் கடந்து யார் தயவுமின்றி சொந்தக் காலில் நிற்கிறாள். தம்பி படிப்பு முடித்ததும் சிறிதுநாள்‌ வேலைக்குப் போய்விட்டு அவனும்‌ தனியாக‌ கிளினிக் ஆரம்பித்திருக்கிறான்.

அபிலாஷ் படித்தது கால்நடை மருத்துவம். வளசரவாக்கத்திலேயே பெட்ஸ் கிளினிக் வைத்திருக்கிறான்.

மண்ணைக் கொத்திவிட, வரும் செடிகளை இறக்கி வைக்க, ஆர்டர் வரும் செடிகளை பார்சல் பண்ணி அனுப்ப என எல்லா கை வேலைக்கும் கண்ணையன் தான்.

இவர்களுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் அனுப்ரியா. கல்லூரி இறுதி வருடம். இரண்டாமவள் அனுபமா. பள்ளி இறுதி வருடம். விடுமுறை நாட்களில் இங்குதான் அவளுக்கு பொழுது கழியும். ஆன் லைன் ஆர்டர் பார்ப்பது, புதிதாத வந்திருக்கும் செடிகளை ஆன்லைனில் பதிவேற்றுவது இவளது வேலை.

“உங்களுக்குதான் அவங்களப்பத்தி தெரியுமேக்கா. ஆடி பொறந்தாச்சு. இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவில்.”

“இன்னைக்கே கூழு ஊத்தணும்னு சொன்னாங்க!”

“ஆமாக்கா… முதல் ஞாயிறாச்சே. அடுத்தடுத்து எனக்கும் தங்கச்சிக்கும் டேட் பிரச்சினை இருக்குறதால முதல் வாரமே ஊத்திரலாம்னு சொன்னாங்க. எனக்கும் அப்பாடான்னு ஒரு வேலை முடியும். துணியெல்லாம் துவச்சுப் போட்டுட்டு வீட்டை சுத்தம் பண்ணி கொடுத்துட்டு வர்றேன். நம்ம கடமை முடிஞ்சது!”

வீட்டிற்கு மூத்தபிள்ளை என்றால் அதுவும் பெண் பிள்ளையாகப் பிறந்துவிட்டால் தானாகவே பொறுப்புகள் தலைக்கு ஏறிவிடுகின்றன. பெரியவ நீதான். உனக்கு அடுத்து தங்கச்சி, தம்பி இருக்காங்க. அவங்களையும் கரைசேர்க்க வேண்டாமா என்று பேசிப்பேசியே மண்டையைக்கழுவி பதினேழு கூட பூர்த்தியாகாத வயதில் பள்ளித் தேர்வு முடிவு கூட வராத நிலையில், திருமணம் செய்து வைத்ததை இப்பொழுது நினைத்தாலும் மனமெங்கும் கசப்பு வியாபிக்கும். என்னவோ நாற்றாங்கால் விட்டு பிடிங்கி நடப்பட்ட இடத்தில் இவளால் வேரூன்றவே முடியவில்லை. வேர் சாகும் முன் பிடிங்கிக் கொண்டு வந்துவிட்டாள்.

பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் பூங்காவனம் என்றுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம். பெரிய வருமானம் என்று எதுவும் இல்லை. காலையில் கீரை விற்பார். சில வீடுகளுக்கு முறைவாசல் செய்வார். இப்பொழுதுதான் மெயின்டெனன்ஸ் என இவர்கள் கம்யூனிட்டி வீடுகளுக்கு மொத்தமாக இவளே பேசி விட்டிருக்கிறாள். அதில் கொஞ்சம் நிரந்தர வருமானம் வருகிறது. கண்ணையன் கூலிக்குப் போனாலும் கைக்கு வரும் கூலியில் வீட்டுக்கு பாதி, நாட்டுக்குப் பாதி என பங்கு பிரிக்கும் பொறுப்பான குடிமகன். நாட்டின் பொருளாதாரமே கண்ணையன் மாதிரி குடிமகன்களை நம்பித்தானே இருக்கிறது. ஆனால் சலம்பலில்லாத குடிமகன். சலம்பினால் பூங்காவனம் புயல்வனமாகி விடுவாரே. அந்த பயம் இருக்கும் கண்ணையனுக்கு. இப்படிப்பட்ட கணவனை வைத்துக் கொண்டும்தான் பிள்ளைகளுக்கு படிப்புதான் முக்கியமென கடனை உடனை வாங்கி படிக்க வைக்கிறார்.

“சொந்தத்துல கேக்குறாங்கம்மா. நம்ம எல்லாம் கல்யாணம் பண்ணி என்னத்த சாதிச்சுட்டோம். ரெண்டு புள்ளையப் பெத்ததுதான் மிச்சம். எம்புள்ளைக நல்லா படிக்கணும். சொந்தக்கால்ல நிக்கணும். அப்பறம்தான் கல்யாணப்பேச்சுன்னு கறாராச் சொல்லிட்டேன்.” டிபிகல் ட்ரெண்டிங் மதர் பூங்காவனம்‌.

இந்த துணிச்சல் ஏன் தன் அம்மாவிற்கு வரவில்லை என பலமுறை யோசித்திருக்கிறாள். அவரால் மட்டும் என்ன செய்ய முடிந்தது. ஆண் துணையில்லாத வீட்டில் ஆளாளுக்கு நாட்டாமைதான். இவர்கள் எதிர்காலம் சார்ந்த முடிவை எடுத்தது எல்லாமே அப்பாவோடு பிறந்த சித்தப்பாக்களும் அம்மாவோடு பிறந்த தாய்மாமாக்களும் தான். ஏதோ பெரிய சுமையை அவர்கள் தலையில் இவர்கள் அப்பா ஏற்றி வைத்து சென்றதைப் போல் நடந்து கொள்வார்கள். உனக்கடுத்து தங்கச்சி இருக்கா. தம்பி இருக்கான். அவளையும் கரையேத்தணும். பொம்பள என்ன செய்வேன். அவங்க தயவு நமக்கு வேணும். பகைச்சுக்க முடியாது என்று பேசிப்பேசியே எல்லாம் நடந்தேறியது. அவசர அவசரமாக கடமையை முடித்தனர். அவ்வளவே.

“நாங்க என்ன எங்க அண்ணன் பிள்ளைகள கெணத்துலயா தள்ளிருவோம். அதுக எங்களுக்கும் பிள்ளைகதான்.” தேனொழுகப் பேசுற பேச்சுல வயித்துல இருக்குற பிள்ளைகூட நழுவி விழுந்துவிடும். அப்படியொரு பேச்சு.

பூங்காவனத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இப்படியொரு அம்மா தனக்கு வாய்க்கவில்லையே என மனம் ஏங்கும். இல்லாத அப்பாவிற்கும் சேர்த்துதான். அவர் இருந்தவரை அவர் வைத்ததுதான் அவர்கள் குடும்பத்தில். அவர் மறைவிற்குப் பிறகு எல்லாமே தலைகீழ். பத்து வயதில் அப்பாவின் திடீர் மரணம். உடன் பிறப்புகள் தயவில் அம்மா. சொத்து இருக்கிறதுதான். இருந்து என்ன பண்ண. ஒட்டு மொத்தமாக பொது பண்ணையம்தான்.

தம்பி தலையெடுத்து பிறகுதானே அவளுக்கே ஒரு விமோசனம் கிடைத்தது. இல்லை என்றால் குடும்ப மானம், மரியாதை, ஊருக்குள்ள அசிங்கம் என இன்னும் அந்த நரகத்திலேயே தான் உழன்று கொண்டிருக்க வேண்டும்.

“அக்கா… லிஸ்ட் எடுத்து வச்சுட்டீங்களா?” பழைய நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருந்தவளை அனுப்பிரியாவின் கேள்வி கலைத்தது.

“இன்னைக்கி அனுப்ப வேண்டிய லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன் பாரு. அதைப் பாத்து டெலிவரி அனுப்பணும்!” வந்தவளுக்கு செய்ய வேண்டிய வேலையைச் சொல்ல,

“சரிக்கா… அப்பா எங்கக்கா?” வந்தவள் அப்பாவைத் தேட, நாற்றாங்கால் பக்கம் போனாரு. ஃப்ளாஸ்க்குல டீ இருக்கு. முதல்ல டீ குடிச்சுட்டு வேலையப் பாரு! அவருக்கும் எடுத்துட்டு போ!”

“பின்ன… முதல்ல வயித்துக்கு. அப்பறம் தான் வேலையெல்லாம். அப்பா இன்னுமா குடிக்கல?”

“செகன்ட் ரவுன்ட்!” என்றாள். வந்தவுடன் டீ ஊற்றி கொடுத்துவிட்டாள்.

“அதானே பாத்தேன். மனுஷன் டீயிலதான் உயிரே வாழ்றாரு!”

போன வருஷம் மஞ்சள் காமாலை வந்து மரணபயத்தை காட்டிச் சென்றதில் மனுஷன் கொஞ்சம் அடங்கியிருக்கிறார்.

அனு, “அப்பறம், இன்னைக்கி என்னக்கா சன்டே ஸ்பெஷல்?” எனக் கேட்க,

“நீந்துறது!” என்றாள்.

“ம்மா… எனக்கு சிக்கன் ஃப்ரைதான் வேணும்!” “அப்போ பறக்குறதுமா?” டீயை டம்ப்ளரில் ஊற்றிக் கொண்டே அனு கிண்டல் செய்ய,

“இல்ல… ஏதாவது ஒன்னுதான்! அதுவும் மீன் குழம்புதான். நோ ஃப்ரை. நோ ஆய்லி ஃபுட்! மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல மீனோட வருவான்.”

“க்கா… பாவம்க்கா… இப்ப சாப்பிடாம எப்போ சாப்பிடுவான்? அதுக்கு ஈக்வலாத்தான் ஆட்டம் போடுறானே. நீங்க வேணும்னா உங்க சுருட்டை முடியில ஒன்னு கொடுத்து ஸ்ட்ரெய்ட் ஆக்கிட்டு வாடான்னு ஒரு எடத்துல உக்கார வைங்களேன். அப்பவாவது ஒரு எடத்துல அடங்குறானா பாக்கலாம்?” கவிழ்த்துப் போட்டிருக்கும் சிமென்ட் பூ தொட்டி மீது அமர்ந்து டீயைக் குடித்துக் கொண்டே சொல்ல,

“அனுக்கா… அது ரொம்ப ஈஸி. கர்லி ஹேர (curly hair) அயர்ன் பண்ணா ஸ்ட்ரெய்ட ஆகப்போகுது. சிம்பிள்!” தோள் குலுக்கி சொல்லியவன் பதிலில் இவள்தான் வாயடைத்துப் போனாள்.

“ஜான்சே இல்லக்கா! எவ்ளோ சிம்பிளா சொல்யூஷன் சொல்றான்.” பேசிக் கொண்டிருக்க அடுத்த நொடி ஆளைக் காணோம்.

பெயர் சக்திபாலன். சக்தியின் பாலன். சக்திக்கு மட்டுமே பாலன். அப்போ சிவம்?????

*****

டீசர்…

 

குரு… இன்னும் எவ்வளவு நேரமாகும். ஹாஸ்பிடல் போகணும்னு தெரியுமா தெரியாதா? உங்க அப்பா வேற வெளியே போயிருக்காரு. நான் மட்டும் தான் இருக்கேன்.

அவனுக்கு அம்மாவின் பயம் புரிந்தது.

 

வந்துட்டேன் மா. ட்ராஃபிக். நீங்க அவன் கிட்டக் கொடுங்க. பதட்டமில்லாமல் பதில் சொன்னவனுக்குத் தெரியும் தன்னுடைய தைரியம் தான் தன் மகனுக்கு ஊக்க மருந்து என.

 

பிரணவ்… என்ன பண்ணனும்னு‌ தெரியும்ல.

 

ஐ க்னோ டாட். நானம்மா தான் பயப்படுறாங்க.

 

அவங்களுக்கு வயசாகிடுச்சுல்ல. நீதான் தைரியம் சொல்லணும்.

 

ஓகே டாட். வில் மேனேஜ். என்றவன் கைபேசியை அணைத்துவிட்டு மூச்சுவிட சிரமப்பட்டவாறே,

வொரி பண்ணிக்காதீங்க நானம்மா… அப்பா இப்ப வந்துருவாங்க. மூச்சிறைத்தவாறே தைரியம் சொன்ன பேரனைப் பார்த்த பைரவிக்கு அடிவயிறு பிசைந்தது. நேற்று பேரனை வெளியே அழைத்துச் சென்ற மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டார். இத்தனைக்கும் அத்தனை பாதுகாப்பு கவசங்களோடுதான் அழைத்துச் சென்றார்.

கண்கள் கலங்க பத்து வயது பேரனின் சுருண்ட தலைமூடியை ஆதரவாகக் கோதிக் கொடுத்தவர் கண்கள் வேதனை சுமந்திருந்தது. நித்ய கண்டம் பூரண ஆயுசு என வாழும் பேரனின் நிலமையை நினைத்து.

‘பாவி மகளுக்கு இப்படிப்பட்ட பிள்ளைய விட்டுப் போக எப்படித்தான் மனசு வந்துச்சோ’ மனம் வேதனையில் குமைந்தது.

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 2

 “அடப்பாவிங்களா… நானும் ஒரு தாய் பெத்த பிள்ளைதானே… உங்க கோபத்தை சாப்பாட்டுலயா காட்டுவீங்க?” ஆத்திரமாகக் கேட்டவன்,“அக்கா…” என்று அதிர, “என்னடா வச்சிருக்க அக்காவுக்கு?” தலைமுடியைச் சுருட்டி கிளிப்பில் அடக்கியவாறே படுக்கை அறையிலிருந்து வெளியே வர,“தம்பிக்கு நீ மிச்சம் வச்சதைவிட நிறைய வச்சிருக்கேன்?” என்று‌…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 8 கருத்துகள் உள்ளன

    1. Meenduம் சந்நித்ததில் மிக்க மகிழ்ச்சி மா 🥰

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  1. வாழ்த்துக்கள்ஜி❤️
    அப்போ இரட்டை குழந்தைகளா…
    அம்மா அப்பாவுடன் ஒருதர் இருக்காங்க,

    1. நன்றி மா 🥰
      இருக்கலாம் மா 🤷🏻‍♀️🤷🏻‍♀️

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்