என் வீட்டு தோட்டத்தில் 2
“அடப்பாவிங்களா… நானும் ஒரு தாய் பெத்த பிள்ளைதானே… உங்க கோபத்தை சாப்பாட்டுலயா காட்டுவீங்க?” ஆத்திரமாகக் கேட்டவன்,
“அக்கா…” என்று அதிர,
“என்னடா வச்சிருக்க அக்காவுக்கு?” தலைமுடியைச் சுருட்டி கிளிப்பில் அடக்கியவாறே படுக்கை அறையிலிருந்து வெளியே வர,
“தம்பிக்கு நீ மிச்சம் வச்சதைவிட நிறைய வச்சிருக்கேன்?” என்று மேஜை மீது சுட்டிக் காட்டினான் அரவிந்த். சாப்பாட்டு மேஜையில் சாங்கியத்திற்கு கூட மிச்சம் வைக்காமல் கழுவி வைத்தது போல் பாத்திரங்கள் இருக்க, குளித்து பசியோடு வந்தவனுக்கு பசியிலும், கோபத்திலும் கண்ணைக் கட்டியது.
“அதுவா… கோபத்துல காலி பண்ணிட்டோம். பிள்ளைய வேற கண்டமேனிக்கு அடிச்சுட்டேனா. கோபத்துல சாப்பிட்டு தூங்கிட்டான்!” என்றாள் மேம்போக்காக சற்றே அசடு வழிய.
“எல்லாரும் கோவத்துல சாப்பிடாம படுப்பாங்கனுதான் கேள்விப் பட்டிருக்கேன். அம்மாவும், மகனும் தான் விசித்திர ஜந்துக்களாச்சே. கோவத்துல மிச்சம் வைக்காம சாப்பிட்டிருக்கீங்க?”
“உன் பிள்ளை என்னடான்னா மீன் வேண்டாம் வேண்டாம்னுட்டு முள்ளைக்கூட விட்டு வைக்கல. இந்த எலும்ப தெரு நாய் மோந்துகூட பாக்காது. அப்படி சுத்தமா திண்ணு வச்சிருக்கீங்க. அதுவும் ஒரு ஜீவன் தானே? அதுக்கும் கொஞ்சம் விட்டு வச்சுருக்கலாம்!” கை கழுவும் இடத்தில் வேஸ்ட் பாக்சில் போட்டு வைத்திருந்த மிச்ச மீதிகளைப் பார்த்து கேட்க,
“டேய்… நீ நாய் டாக்டரா இருக்கலாம். அதுக்காக எங்களை எலும்பு கடிக்க வேண்டாம்னு சொல்லுவியா? அப்படி அக்கறை இருக்கவன் துண்டா கறி வாங்கிப் போடு! பிள்ளை சாப்பிடறத கண்ணு வைக்காதே!”
“நானும் எங்கம்மாவுக்கு பிள்ளைதான்! பசிக்குது!” பாவமாக முகத்தை வைத்து சொல்ல,
“எல்லாம் உங்க அம்மாவாலதான்டா. அவங்க மேல உள்ள கோபத்துலதான் என் பிள்ளைய வேற போட்டு அடி அடின்னு அடிச்சுட்டேன்.” பரிதாபமாக கூற,
“இல்லைனா மட்டும். வாரத்துக்கு ரெண்டு ஜன்னலை உடைக்கச் சொல்லு. அசோஷியேஷன்ல கொஞ்சுவாங்க!”
“ஜன்னலை உடச்சிருக்கக் கூடாதுடா. அந்தம்மா மண்டைய உடச்சுருக்கணும்!”
“நெக்ஸ்ட் வீக் டார்கெட்டா இதையே உம்பிள்ளைகிட்ட சொல்லு. பக்காவா ப்ளான் பண்ணிருவான். அவனை கொம்பு சீவிவிடறதே நீதான்க்கா. அப்பறமாப் போட்டு வெளுக்க வேண்டியது!” என்று அக்காவைத்தான் கடிந்தான் அரவிந்த்.
ஞாயிறு மட்டும் காலையில் எழுந்ததும் நர்சரிக்கு செல்பவர்கள்… அங்கு செடிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்துதான் குளித்து மற்ற வேலைகளைச் செய்வது வழக்கம். காலை சாப்பாடு உள்பட. ஞாயிறு மதியம் வரை நர்சரியை அனுப்ரியா பார்த்துக் கொள்வாள். மதியத்திற்கு மேல் அன்று மட்டும் விடுமுறை. அது சும்மா பெயருக்குதான். கண்ணையன் இருந்தால் திறந்து வைத்திருப்பார். பள்ளி நாட்களில் மகனை அனுப்பி விட்டு ஒரேடியாக நர்சரிக்கு வந்து விடுவாள். பிறகு மாலை மகனை பள்ளியிலிருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வந்துவிடுவாள்.
ஞாயிறு வழமைக்கு நர்சரி வந்தவர்கள், ஆர்டர் லிஸ்ட்டை அனுப்ரியாவிடம் கொடுத்து விட்டு, என்னென்ன செடிகள் வரவழைக்க வேண்டும் என லிஸ்ட் எடுக்க ஆரம்பிக்க, கண்ணையன் நான்கு சக்கர தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வந்தார்.
கருப்புகலர் ப்ளாஸ்டிக் கவரில் பதியம் போட்டிருந்த சிறிய செடிகள் முதல் பெரிய மரக்கன்றுகள் வரை எடுத்து வைத்தார். மண்புழு உர பாக்கெட்டுகள், பூச்சி மருந்து, மருந்தடிக்கும் சிறிய ஸ்பிரே பாட்டில்கள் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை வண்டிக்கு அடியில் அடுக்கினார்.
நடமாடும் நர்சரி. வீடுகளுக்கு செடிகளை விற்பது, செடிகளை நட்டுக் கொடுப்பது, பூச்சி மருந்தடிப்பது, களை வெட்டிவிடுவது போன்ற தோட்ட வேலைகளும் செய்து கொடுப்பார். மாடித் தோட்டம் அமைப்பதென்றால் அபிராமியே நேரில் சென்று அமைத்துக் கொடுப்பாள். அவர் விற்பனைக்கு ஆயத்தமாக, சக்தியும் அவருக்கு உதவியாக செடிகளை தள்ளுவண்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். செடிக்கான விலை போக மீதியை அவரே வைத்துக் கொள்ளச் சொல்லிவிடுவாள். அது அவருக்கும் ஒரு வருமானம் போல.
ஜாகிங் முடித்து வந்த அரவிந்தன் கையில் பெரிய கருப்பு கவரோடு வந்தான். ஜாகிங் போனதில் வியர்த்து வழிய வந்தவனை, “மாமா.. மீனா… சிக்கன் இல்லையா?” கேட்டுக் கொண்டே அருகே வர,
“டேய்… ரெண்டும் தான்டா. உனக்கு சிக்கன். உங்கம்மாவுக்கு மீன். ஒரே வியர்வை. தள்ளிப்போ!” என,
“க்க்கும், இப்ப இவன் மட்டுமென்ன சந்தனத்துலயா குளிச்சிருக்கான்.” செம்மண் அப்பிய மகனைக்காட்டி அபிராமி தம்பியிடம் கேட்க, சக்தியின் கோலம் பார்த்துதானே, அரவிந்த் அப்படிச் சொல்லியது. சேற்றை அப்பிக்கொண்டு கிட்டே வராதே என்றால் வீம்பிற்கே வந்து மாமனைக் கட்டிப் பிடிப்பான். அதனால் தான் தன் மேல் வியர்வை என்று தள்ளி நிறுத்தினான்.
“இந்தாக்கா…” பெரிய கவரை அவள் கையில் கொடுத்தான்.
அதில் மீன் கழிவு இருந்தது. மீன் அமிலம் தயாரிக்க. இங்கிருக்கும் செடிகளுக்கும், விற்பனைக்கும் சேர்த்தே அவளே தயார் செய்வது.
இன்னொரு கவரில் சமைக்க மீனும், சிக்கனும் வாங்கி வந்திருந்தான்.
“போலாமாக்கா? கசகசங்குது!” அக்காவிடம் சொல்ல,
“இருடா… இந்த லிஸ்ட் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு வர்றேன். பிரியா ஆர்டர் போட்டுறுவா!” என்றவள் லிஸ்ட் எடுக்க சென்றாள்.
அவள் சென்றதும், “அனுப்பிரியா?” என,
அனுவாகப்பட்டவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. கருமமே கண்ணாக லேப்டாப்பில் வந்த ஆர்டர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆர்டர்ஸ் அனுப்பிறியான்னு கேட்டேன்” என்றவுடன் புரியாமல் புருவம் சுழித்தாள். மறுகணம் சிலேடையாக்கும் என இதழ் கேலியாத நெளிந்தாலும் தலை மட்டும் நிமிரவில்லை. லேப்டாப்பிலே புதைத்துக் கொள்பவள் போல் இன்னும் குனிந்து கொண்டாள்.
அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் அப்படியொரு சிரிப்பு. வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இவன் வந்தால் அப்படி ஒருத்தன் அங்கிருப்பது போலவே இவளும் கண்டு கொள்ள மாட்டாள். இல்லையெனில் ஏதாவது காரணம் சொல்லி வேகமாக வீட்டிற்கு கிளம்பி விடுவாள். அவனும் பெரிதாகக் எடுத்தக் கொள்ளமாட்டான். ஆனால், அவளைப் பார்த்தால் அவனையுமறியாமல் இளஞ்சிரிப்பு அரும்பும்.
பள்ளி செல்லும் காலத்திலிருந்து அவளைப் பார்க்கிறான். தவறாக எதுவும் இல்லை. அண்ணா… அண்ணா என அக்கா, தங்கை இருவரும் நன்றாகத்தான் பேசுவார்கள். திடீரென ஒருநாள் வந்து உங்களை லவ் பண்றேன் என்றாள். அப்பொழுது தான் இவன் கல்லூரி படித்துக் கொண்டிருந்தான். இவள் பத்தாவதோ பதினொன்றோ. சரியாக நினைவில்லை. இரட்டை சடை போட்டு பள்ளி சீருடையில் இருந்தாள்.
அவள் சொன்னதும் பக்கென சிரித்து விட்டான். அவள் சொன்ன விதம் அப்படி.
“உங்களைப் பிடிச்சிருக்கு. லவ் பண்ணலாம்னு இருக்கேன்” மிட்டாய் வேணும். வாங்கித் தர்றீங்களா என்று சிறுபிள்ளை தோரணையில் அவள் சொன்ன விதத்தில் கண்ணில் நீர்வர சிரித்தான். அவன் அப்படி சிரித்ததும் இவள் முகம் உம்மென ஆக, அச்சோவென ஆனது உள்ளுக்குள்.
வயதுக்கோளாறோ பருவக் கோளாறோ ஏதோ ஒன்று. இவனைப் பிடித்திருக்கிறது போல. அந்த வயதில் வாட்டசாட்டமாக, அகன்ற தோளோடு, உயரமாக, அலையடிக்கும் தலைகொள்ளா முடியோடு கல்லூரி படிக்கும் மாணவனைப் பார்த்தால் மனம் அலைபாயத்தானே செய்யும்.
“சரி… படிச்சு முடி. ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடிச்சபின்னாடி அப்பவும் என்னைப் பிடிச்சிருந்தா இதைப் பத்தி பேசலாம். ஆனா, அதுவரை யார்கிட்டயும் இதைப் பத்தி பேசக்கூடாது. உன் தங்கச்சிகிட்டக் கூட இதைப்பத்தி மூச்சே விடக்கூடாது. சரியா.” என்று பொறுமையாக ஆனால், சற்று அழுத்தம் கொடுத்து பெரிய விளக்கமோ லெக்சரோ அடிக்காமல் சிறுபிள்ளைக்கு சொல்வது போல் எளிதாக சொல்லி அனுப்பினான். அப்பொழுதெல்லாம் வாரக்கடைசி மட்டும் தான் அக்காவைப் பார்க்க இங்கு வந்து செல்வான். அடிக்கடி பார்க்க முடியாது. சிறுபிள்ளை மறந்துவிடுவாள் என நினைத்து கூறினான்.
படிப்பை முடித்து அவனும் தனியாக பெட்ஸ் கிளினிக் வைத்த பிறகு அக்காவுடனே நிரந்தரமாக வந்த பிறகு அவனை ஏறெடுத்துக் கூடப் பார்ப்பதில்லை. பக்குவம் வந்துவிட்டது போல என்று நினைத்து சிரித்துக் கொள்வான்.
ஆனால், அழளைப் பார்த்தால் இவனுக்குதான் வம்பிழுக்கத் தோன்றும். அதுவும் இவனைப்பார்த்தால் பார்க்காதது போல் தலையை கவிழ்த்துக் கொள்ளும் பொழுதுதான். மற்றபடி கண்டுகொள்ளமாட்டான். அதுவும் சமீபகாலமாகத்தான்.
அதற்கு அவளிடம் எதிர்வினை எதுவும் இருக்காது. “எல்லாம் என்னாலதான். அறிவு கெட்ட முண்டம்… முண்டம்…” தனக்குத்தானே மானசீகமாக தலையில் கொட்டிக் கொள்வாள். அவனை ஏறிட்டுப் பார்க்க அத்தனை சங்கோஜம்.
அவன் வந்தாலே இவளுக்கு உள்ளுக்குள் உதரல் எடுத்துவிடும். எதற்கென்றே தெரியாது. படிப்பு முடித்து மருத்துவன் எனும் அடைமொழியோடு இன்னும் தேஜஸ் கூடி ஒரு தோரணையில் இருப்பவனைப் பார்க்கையில் காரணமே இல்லாமல் மனது வெறுமையாகும். இப்பொழுதும் அன்று சிறுபிள்ளை போல் தான் பேசியதை நினைத்தால் அய்யோவென உள் மனம் அலறும். எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போலிருக்கும். அதற்காகவே அவனை நேருக்கு நேர் பார்பப்தை தவிர்ப்பாள்.
லிஸ்ட் எடுத்து வந்தவள் அனுப்ரியாவிடம் கொடுத்து ஆர்டர் போடச் சொல்லிவிட்டு, வீட்டிற்கு மூவரும் கிளம்ப, கண்ணையனும் வண்டியைத் தள்ளிக் கொண்டு விற்பனைக்கு கிளம்பினார்.
வீட்டிற்கு வந்தவுடன் அரவிந்த் அவன் அறைக்குச் செல்ல, அம்மாவை முந்திக் கொண்டு சக்தி வேகமாக இவர்கள் அறைக்குள் புகுந்து கொண்டான். இனி இவன் வெளியே வர அரைமணி நேரமாவது ஆகும். அப்படியிருந்தும் பாதி அழுக்கோடுதான் வெளியே வருவான். உள்ளே என்னதான் செய்வானோ?
அலுத்தபடி, மீனை கழுவி வைத்துவிட்டு குளித்துக் கொள்ளலாம் என மீனை உப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தி குழம்பிற்கும், வறுவலுக்கும் தனியாகப் பிரித்து வைத்து, வறுவலுக்கான துண்டங்களில் மசாலாவைத் தடவி வைத்தாள். சிக்கனையும் அதே போல் மசாலாவில் ஊறவைக்க, அரவிந்த் கைபேசி அழைத்தது.
யார் எனப் பார்த்தாள். அம்மா காலிங் என காட்ட இவள் எடுக்கவில்லை. குளித்து வந்தவன் கைபேசி எடுக்க தவறிய அழைப்பில் அம்மாவின் அழைப்பு இருக்க,
“எடுக்க வேண்டியதுதானேக்கா” என்று சொல்லிக் கொண்டே அம்மாவிற்கு அழைத்தான். அவர் எதற்கு அழைத்திருப்பார் எனத் தெரிந்ததால் தானே இவள் எடுக்கவில்லை.
எடுத்தவுடனே, “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” எதிர்முனையில் கோபமாகக் கேட்க,
“என்னம்மா” என்றான் இவனும்.
“வக்கீல் நோட்டீஸ் விட்டுருக்காடா. இங்க ஆளாளுக்கு என்னை கரிச்சுக் கொட்டுறாங்க! நான் எங்கடா போவேன்?” சொல்லும் பொழுதே அழுகை வந்தது அன்னபாக்கியத்திற்கு.
“ஏம்மா, பெத்த பிள்ளைக நாங்க இல்லையா? ஏம்மா யாருமே இல்லாத மாதிரி பேசுறீங்க?”
“இதையே தான்டா இவங்களும் சொல்றாங்க. பிள்ளைக வளந்துட்டாங்க. இனி நாம எதுக்குன்னு கேக்குறாங்க. இத்தனை நாளா வச்சுப் பாத்தவங்கள விட்டுட்டு, இன்னைக்கி பிள்ளைக தலையெடுத்ததும் போய்ட்டான்னு பேச மாட்டாங்களா? என்ன ஆனாலும் என் கடைசி காலம் என் புருஷன் வீட்லதான்!”
“என்னம்மா வச்சுப் பாத்தோம் பாத்தோம்கறாங்க. அதுக்குன்னு சொத்து இல்லைன்னு சொல்வாங்களா?” என்று கேட்க எதிர்முனையில் பதில் இல்லை.
இவர்கள் அப்பா இறந்ததில் இருந்து பிள்ளைகளை வளர்த்தது, படிக்க வைத்தது, இரண்டு பெண்களை நகை போட்டு, செலவு செய்து கட்டிக் கொடுத்தது என எல்லாவற்றையும் கணக்குப் போட்டு, இவர்கள் சொத்தில் பங்கில்லை என இரண்டு சித்தப்பாக்களும் சொல்லிவிட, அதைத் தொட்டு சிறுசிறு சண்டை, மனஸ்தாபங்கள் இவர்களுக்கும் சித்தப்பா வீட்டினருக்கும். அரவிந்த் ஸ்பீக்கரில் போட்டுதான் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் இருந்த அபிராமிக்கும் எல்லாமே கேட்டது.
அடுப்பில் கொதிக்கும் மீன் குழம்பிற்கு இணையாகக் கொதித்தது அவளது மனம், அடுத்து அவள் அம்மா சொல்லியதைக் கேட்டு.
“யார் யார் பிள்ளைக்கோ சொத்துக் கொடுக்கவா கட்டிக் காப்பாத்தி வச்சிருக்கோம்னு கேக்குறாங்கடா? கேஸ் வாபஸ் வாங்கச் சொல்றாங்க. நேர்ல வாங்கடா பேசித் தீத்துக்கலாம்.” வம்பு வழக்கு வேண்டாம் என்பது போல இருந்தது பாக்கியத்தின் பேச்சு.
எல்லாம் உடன் பிறப்புகள் பார்த்துக் கொள்ளும் என அம்மா நம்பி இருந்ததற்கு ஒட்டு மொத்தமாத சித்தப்பாக்களும், மாமன்களும் சேர்ந்து இவர்களுக்கு பட்டை நாமம் சார்த்த திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிந்தது.
என் அண்ணன், தம்பி இருக்கிறார்கள் எனக்கு என அன்னபாக்கியம் நம்பியிருந்தார். ஆனால் அவர்களும் இவர்களுக்கு நடப்பது பக்கா மோசடி எனத் தெரிந்தும் யாரும் தட்டிக் கேட்கவில்லை.
அவர்கள் எப்படி கேட்பார்கள். அண்ணன், தம்பி இருவரும் இவர்கள் சித்தப்பா மகன்களுக்குதான் பெண்களைக் கொடுத்து சம்பந்தம் வைத்திருக்கிறார்கள். அரவிந்த் மூன்றாவது பிள்ளை என்பதால் இவர்கள் சித்தப்பா மகன்கள் எல்லாம் இவனுக்கு மூத்தவர்கள். அபிராமிக்குத்தான் இளையவர்கள். அதனால் அவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. இவர்களது தாய்மாமன்கள் பெண்களைத்தான் அவர்களுக்கு எடுத்துள்ளனர். சொத்து மூன்றாகப் பிரியாமல் இரண்டாகப் பிரிந்தால் நாளைக்கு நம்ம பிள்ளைகளுக்கு தானே என அவர்களும் கண்டு கொள்ளவில்லை.
எத்தனையோ முறை இவர்களோடு வழக்காடி பார்த்துவிட்டுதான் சட்டப்படி போக முடிவு செய்தாள் அபிராமி. இதில் இவள் தங்கை அபிநயா தலையிடவில்லை. அவளுக்கு வாய்த்த இல்லற வாழ்க்கை எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சிறப்பாக செல்கிறது. அதனால் அவளுக்கு இந்த சொத்து பெரிதாகத் தெரியவில்லை என்பதைவிட, அக்காவும் தம்பியும் எப்படியும் வாங்கி விடுவார்கள். தனக்கும் வரும் என்ற நம்பிக்கை. அதனால் அவள் இரண்டு பக்கமும் நல்ல பிள்ளை.
“அம்மா… இது ஒன்னும் அவங்க சுய சம்பாத்தியம் கிடையாது. பூர்வீக சொத்து. பேரன் பேத்திகளுக்கு இல்லைனு சொல்ல முடியாதும்மா.” சட்டென இடை வெட்டிப் பேசினாள் அபிராமி.
“அதெல்லாம் சரிதான் அபி. ஆனா… உன் பிள்ளைக்கி கொடுக்க முடியாதாம்டீ. பெத்தவன்கிட்டத்தானே சொத்து கேக்க…” என்று முடிக்கவில்லை.
“அம்மாஆஆஆ…” என ஓங்கி அரற்றி இருந்தாள். அரவிந்தே ஒரு கணம் மிரண்டு விட்டான் அக்காவின் சத்தத்தில். அங்கு அம்மாவும் மிரண்டிருப்பார்.
அவனுக்குத் தெரியும். சக்தியைப் பற்றியோ அவனது அப்பா பற்றியோ பேச்சு வந்தால் அவளால் அவளையே அடக்க முடியாது என. யார் எவரெனப் பார்க்காமல் ஆடித் தீர்த்துவிடுவாள். தயவுதாட்சண்யம் வைத்துப் பார்க்கமாட்டாள். ஏனென்றால் அவள் அவ்வளவு பார்த்துவிட்டாள்.
“என் பிள்ளைக்கி யார் சொத்தும் தேவையில்லை. எம்பிள்ளைக்கி யார் கேட்டா. எங்க தாத்தன் சொத்தைத்தான் நாங்க கேக்குறோம்மா. இன்னொரு தடவை என் பையனோட அப்பா பத்தி யாரும் பேசக்கூடாது. அவனுக்கும் விபரம் தெரிய ஆரம்பிச்சுருச்சு. அவனுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே!” என்று கோபமாகவே அம்மாவிடம் பேச,
“அவங்க சொல்றதும் சரிதானே… டாக்டருக்குப் படிக்க வைக்கிறதெல்லாம் சும்மாவா?” சக்தியை விடுத்து பழையபடி பேச்சு சொத்துப் பிரச்சினைக்கு மாற,
“அம்மாஆஆ… ஏம்மா இப்படி ஏமாளியா இருக்கீங்க. அப்பா போனதிலருந்து அந்த வீட்டுக்கு நீங்க வேலைக்காரியா ஒழச்சது போதாதா? அவங்க பேச்சைக் கேட்டு என் வாழ்க்கையை நாசம் பண்ணது பத்தாதா? அரவிந்த் மெரிட்ல சீட் வாங்கி கவர்மென்ட் காலேஜ்ல படிச்சான்மா. பொது செலவுல அவங்க பிள்ளைகளுக்கு மட்டும் லட்சலட்சமா கட்டி காலேஜ் சீட் வாங்கினாங்க. இதெல்லாம் உங்களுக்கு எப்போதான் புரியுமோ. அப்பா இல்லைன்னு யானைக்கு அல்வா வாங்கினேன். குதிரைக்கு கொள்ளு வாங்கினேன்னு கணக்கு காமிச்சு மொத்த சொத்தையும் அமுக்கப் பாக்குறாங்க. ஏன் இது உங்களுக்குப் புரியல. மாமாக்களும் இதுக்கு உடந்தைம்மா. அவங்க பொண்ணுகளுக்கு தானேன்னு.”
கோபத்தின் உச்சியில் இருந்தவள் சகட்டு மேனிக்கு அம்மாவைப் போட்டுவாங்க, அரவிந்த் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எந்தளவிற்கு அம்மாவின் உழைப்பை சுரண்டியிருக்கிறார்கள் என விபரம் புரிந்த பிறகுதான் இவர்களுக்கு புரியவே ஆரம்பித்தது. சம்பளமில்லாத வேலைக்காரி போலத்தான் வைத்திருந்தனர். இரண்டு பெண் பிள்ளைகள். ஓர் ஆண் குழந்தை. அவனும் கடைசி. இவர்களை வைத்துக் கொண்டு எங்கே போகமுடியும். பிறந்த வீட்டிற்கு போனாலும் அங்கும் இதே நிலமைதான. நாத்தனார்களிடம் பிடுங்கு படுவதற்கு புருஷன் வீட்டிலே இருந்து கொண்டால் பிறந்த வீட்டில் மரியாதையாவது மிஞ்சும் என இங்கேயே இருந்துவிட்டார்.
அதற்கு தான் எல்லாம் கணக்குப் போட்டு உங்க பங்கு சொத்திற்கும் உங்களுக்கு செய்ததற்கும் சரியாப்போச்சு என சரிக்கட்டப் பார்க்கிறார்கள். கடைசி காலம் வரை அம்மா அவர்கள் பொறுப்பாம். இவர்களிடம் விடமாட்டார்களாம். இனி அபிராமியும் அவள் மகனும் எங்க பொறுப்பு தானே என இரண்டாவது அன்னபாக்கியமாக இவளையும் உருவாக்க நினைத்தனர். எத்தனை வஞ்சகம். இவர்களுக்கு சொத்து கொடுக்க அத்தனை வலிக்கிறது. அதற்கு சாக்கு என் பிள்ளையா என உள்ளம் கொதித்தது. ஏன் என் பிள்ளை எனக்கு வாரிசுதானே. என் சொத்து அவனுக்குதானே.
இவள் அம்மாவிடம் கத்திவிட்டு அதே கோபத்தில் அடுப்படி வேலையைப் பார்க்க,
“அபி… உன் மகன் வேலையைப் பாரு. எத்தனை தடவை சொல்றது. அபார்ட்மெண்ட்குள்ள கிரிக்கெட் விளையாடாதீங்கன்னு. இன்னைக்கும் சன்னல உடச்சுட்டான். பொம்பளை வளர்ப்புங்கறது சரியாத்தான் இருக்கு. அப்பா இருந்து வளத்திருந்தா ஒரு பயம் இருக்கும்” என்று அசோஷியேஷன் செக்ரட்டரி வெளியே இருந்து கத்த, இவன் எப்பொழுது குளித்து வெளியே போனான் என்றுதான் நினைத்தாள்.
அம்மாவின் ஏமாளித்தனம், என் பிள்ளைக்கு சொத்தில்லைனு சொல்ல இவங்க யார் என சித்தப்பாக்கள் மீதிருந்து கோபம், அம்மாவின் நம்பிக்கையை உடைத்த மாமன்கள் மீதிருந்த கோபம், செகரட்டரி வந்து வாசலில் நின்று பொம்பளை வளர்ப்பு என்றது எல்லாம் ஒன்று சேர்ந்து மகன் மீது இறங்கியது.
அரவிந்திற்கு அடுத்து ஒரு அழைப்பு வர, உள்ளே சென்று உடைமாற்றி வருவதற்குள் பயந்து பயந்து உள்ளே வந்தவனை தோசைக் கரண்டியால் அடி வெளுத்துவிட்டால்.
“மாமா… மாமா!” என்றுதான் கத்தினான். சட்டை பட்டன்களை மாட்டியும் மாட்டாமலும் அரையும் குறையுமாக வெளியே ஓடி வந்தவன், சிறுவனை இழுத்துக் கொள்ள, அரவிந்துக்கும் இரண்டு அடி தோசைக்கரண்டியால் விழுந்தது.
“அக்காஆஆஆ… பைத்தியமா உனக்கு” அதட்டியவாறே கரண்டியைப் பிடித்து வீச, மழையில் நனைந்த கொழிக்குஞ்சாய் மாமனின் கைகளுக்குள் வெடவெடத்த மகனைப் பார்த்தவள் அப்படியே மடிந்து அமர்ந்து ஆற்றாமையில் வெடித்து அழுதாள்.
அரவிந்திற்கும் மனம் வலித்தது. அவனுக்கும் புரிந்தது. இது யார் மீதும் உள்ள கோபம் இல்லை. தான் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த இயலாமை அழுகையாக வெளிவந்திருக்கிறது என்று. அம்மாவிடம் பேசியதில் பழையன கிளறப்பட்டிருக்கும். புதைத்ததை தோண்டினால் நாற்றம்தானே அடிக்கும். என்னதான் வெளிப்பார்வைக்கு தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் உடைந்தது உடைந்தது தானே. சக்தியிடம் கண் காண்பித்தான்.
தயங்கித் தயங்கி அம்மா அருகே சென்றவன், “சாரிம்மா… இனிமே உள்ளே கிரக்கெட் விளையாட மாட்டோம்மா. ப்ராமிஸ்.” தனது தலையிலேயே கை வைக்கப் போனவனை பதறித் தடுத்தாள். எங்கேயாவது காயம் பட்டிருக்கிறதா என கலங்கிய கண்களோடு ஆராய, அவன்தான் ஜில்லா கேடியாச்சே. மாமா… மாமா… என்றுதான் ஊரைக் கூட்டினானே ஒழிய ஒரு அடி மேலே படவில்லையே. அந்தளவிற்கு நேக்காக அடிவிழாமல் தப்பித்திருந்தான். எமகாதகப்பய… பின்னே எத்தனை தடவை எமனுக்கு குட்பை சொல்லியிருக்கிறான். காப்பாற்ற ஓடி வந்த மாமானுக்குதான் இரண்டு அடி.
“சாரிம்மா!” மீண்டும் கண்ணீரைத் துடைத்துவிட்டான். மகன் சமாதானப்படுத்த,
“நானும் இனிமே உன்னை அடிக்கல… எந்திரி… சிக்கன் ஃப்ரை பண்ணித்தாறேன்!” என்று எழுந்து கொள்ள,
“அடிவாங்கியது நானு. சிக்கன் ஃப்ரை உன் மகனுக்கா. அன்னபாக்கியம் மகன்னாலே இளிச்சவாயன் தான் போல.” என்று தன்னால் புலம்ப, அபிராமி எழுந்து அடுப்படி சென்றாள்.
“டேய்… உண்மையச் சொல்லு. வேணும்னே தானே சன்னல் கண்ணாடி உடச்சீங்க?”
“ஆமா மாமா! எப்பப்பாரு ஏதாவதொன்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது. அசோசியேஷன் செக்கரட்டரின்னா என்ன பெரிய கொம்பா. அதான் இன்னைக்கி கார்க் பால்ல (cork ball) ஆடினோம். இனி ஏதாவது சொன்னா அடுத்து அந்தம்மா மண்டைதான்” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்ட,
“நம்பர் ஒன் கேடிடா!” அதற்குள் மீண்டும் அழைப்பு வர கிளினிக்கிற்கு கிளம்பினான். ஞாயிற்றுக்கிழமை மதியம் வரைதான் கிளினிக். ஏதாவது அவசரமென்றால் மட்டும் போவது. இன்றும் ஏதோ எமர்ஜென்சி என்றுதான் போனான்.
அவன் சென்றுதான் கிளினிக் திறந்தான். இன்று அட்டென்டர்க்கு விடுப்பு. ஒரு நாயை சாப்பிடவில்லை என அழைத்து வந்திருந்தனர். சோர்ந்திருந்தது. வயிறு சற்று வீக்கம் கண்டிருக்க, அதன் காம்புகளை சோதித்துப் பார்த்தவன் கர்ப்பம் என்று சொல்ல உரிமையாளரோ வாய்ப்பே இல்லை என்றார். நான் தான் வெளியே அழைத்துச் சொல்கிறேன். வீட்டிற்குள்ளேதான் இருக்கும். இணை சேர்க்கவில்லை. அதனால் வாய்ப்பே இல்லை என்றார்.
“இருக்கோ இல்லையோ? ஆனா… பால் வருது. உண்மை தெரியாமல் மருத்துவம் பார்க்க முடியாது. ஸ்கேன் எடுத்தால் தான் தெரியும்” என்றுவிட்டான்.
நாய்களுக்கு இது சாதாரணம் தான். அது இணை சேரும் காலத்தில் சேராவிட்டாலும் அதற்கு மசக்கைக்கான அத்தனை அறிகுறிகளும் தெரியும். அதற்கு ஃபால்ஸ் ப்ரெக்னென்சி (பொய் கர்ப்பம்) என்று பெயர். மண்ணை குழி பறித்து படுத்துக் கொள்வது, பொம்மைகளை எடுத்து வைத்துக் கொள்வது, சாப்பாட்டை ஒதுக்குவது மற்றும் வாந்தி எடுப்பது என அத்தனை அறிகுறிகளையும் காட்டும். அம்மாவாக மனதளவில் தயாராகிவிடும்.
கற்பனையில் இருக்கும், ஜனிக்காத, பிறக்க முடியாத கற்பனைக் குழந்தைக்கே மடி சுரந்து, அதுவும் ஐந்தறிவு ஜீவனுக்குள்ளே இந்தளவு தாய்மை என்றால் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை மீது எந்தளவிற்கு பாசம் இருக்கும். அந்த குழந்தைக்கு ஒன்று என்றால் பெற்ற மனம் எப்படித் துடிக்கும். தன் அக்காவும் எந்தளவிற்கு துடித்திருப்பாள் என்று நினைத்துப் பார்த்தவனுக்கு நெஞ்சைப் பிழிந்தது.
“என்னப்பா நாய்க்கெல்லாம் ஸ்கேனா… இங்க மனுஷனுக்கே வழியக்காணோம்” என்றுபுலம்ப,
“இந்த மாதிரி நடக்குறது சாதாரணம். ஃபால்ஸ் பிரக்னென்சியா இருந்தாலும் உண்மை தெரியாம ட்ரீட்மெண்ட் கொடுத்தா பிரச்சினை ஆயிறும்” என்று அவருக்கு மேலும் புரியும்படி விளக்கங்கள் சொல்லி ஸ்கேனிற்கு எழுதிக் கொடுத்தான். அவரும் புலம்பிக் கொண்டே போனார்.
அடுத்தடுத்து வந்து கேஸ்களைப் பார்த்து வீடுவர, அதற்குள் அம்மாவும், மகனும் சாப்பிட்டு ஒரு தூக்கமே தூங்கி எழுந்துவிட்டனர்.
பசியோடு வந்தவன் கிளினிக் சென்றுவந்ததால் மீண்டும் குளித்து உடைமாற்றி வந்தவன், சாப்பாட்டு மேஜையில் பார்க்க எல்லாம் காலியாகியிருந்தது. பிள்ளையை அடித்துவிட்டோமே என மகன் போதும் போதும் எனுமளவிற்கு கவனித்து, அவளுக்கிருந்த கோபத்தில் அவளும் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்திருந்தாள்.
“அக்கா!” வெளியிலிருந்து அனுபமாவின் குரல்.
“உப்புமாவா?”
“அண்ணா… அனுபமா!” என்று சிறுபிள்ளை சிணுங்கினாள். அவளை எப்பொழுதும் உப்புமா என்றே கேலி செய்வான்.
“எனக்கு நீ உப்புமாதான்! என்னதிது?”
“அம்மா கூழு கொடுத்துவிட்டாங்க!” என்றுசொல்லி முடிக்கும் முன்,
“அம்மா… தாயே… நீ நல்லா இருப்ப. என் வயித்துல கூழு வார்க்க வந்த உப்புமா நீ!” வேகமாக அவளிடமிருந்த கட்டைப் பையை பிடுங்காத குறையாக வாங்கியவன், மேஜைமீது வைத்து ஒவ்வொரு பாத்திரமாக வெளியே எடுத்து வைத்தான்.
கூழு, மொச்சை, தண்டங்கீரை, கத்திரிக்காய் போட்டுவைத்த கருவாட்டுக் குழம்பு, முருங்கை கீரை பொறியல், பிடி மாவு என அத்தனையும் பார்த்தவனுக்கு பசி இன்னும் அதிகமாக, அப்படியே கூழ் குண்டாவை திறந்து வைத்து அமர்ந்துவிட்டான்.
அவன் அமர்ந்ததும் வறுத்த சிக்கனும், மீனும் இருந்த டப்பாவை தம்பி முன் வைத்தாள்.
“எடுத்து வச்சிருந்தியாக்கா?” நிமிர்ந்து பார்த்தவன் அசடு வழியக் கேட்க,
“எம்பிள்ளைய மட்டுமில்ல… அன்னபாக்கியம் புள்ளையையும் கவனிக்கத் தெரியும்” என்று எங்கோ பார்த்தபடி நொடிப்பாகச் சொல்ல,
“எதுவா இருந்தாலும் சாப்பிட்டு பேசுறேன்” காரியத்தில் கண்ணானான். புன்னகை முகமாக தம்பியைப் பார்த்திருந்தாள்.
கோபத்தில் அளவு தெரியாமல் சாப்பிட்டு விடுவோம் என முன்பே தம்பிக்கு எடுத்து வைத்துவிட்டாள். மனம் வெறுமையாகும் பொழுது வயிற்றை நிரப்பத்தான் தோணும். அப்படி ஸ்ட்ரெஸ் ஈட்டிங் என சாப்பிட்டு சாப்பிட்டு அவள் உடல் எடை சதமடித்தது ஒரு காலம்.





Last episode leye nenaichen anupriya than iva thambiku jodiya nu….Last episode singers names la chinnamani,veeramaniya vitutinga.. interesting episode..edho perusa flashback iruku..verti nary dr kuda athupidi pola..
இன்னும் என்னவெல்லாம் guess பண்ணீங்கன்னு சொன்னீங்கனா அப்படியே கதைக்கு யூஸ் பண்ணிப்பேன் மா. விடுபட்ட பெயரல்லாம் நீங்களே நிரப்பிட்டீங்களே…. வீரமணி ஐயப்பன் பாடல்களுக்கு தானே ஃபேமஸ். ஆடி மாதம் ஆத்தா மாதம்😁😁
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Very nice
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Hai 🤩🤩
Hi ma ❣️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
குட்டிபையன கேடி பையன் தான்,நிஐமா அறுந்த வாலு தான்😀
🤣🤣🤣🤣🤣 வீட்டுக்கு ஒன்னு இப்படியிருக்கும்.
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫