என் வீட்டு தோட்டத்தில் 13
13
“ம்மா…இன்னைக்கும் பிராக்டீஸ் எதுவும் இல்ல. அதான் கை சரியாறவரைக்கும் எந்த பிரிக்டீஸும் வேண்டாம்னு சொன்னிங்கல்ல?”
“தெரியும் வாடா?” என்றபடி மகனுக்கு முன் செல்ல,
“இன்னைக்குமா… நான் வரல!” அவள் எங்கு அழைத்துச் செல்கிறாள் எனத் தெரிந்தே வர மறுத்தான்.
“இப்ப பேசாம வரப்போறியா இல்லையா?”
“பசிக்குது… வீட்டுக்கு போலாம்!” என்றவன் குரல் வால்யூம் குறைந்து உள்வாங்கியது.
“ஸ்நாக்ஸ் எடுத்து வந்திருக்கேன்டா! சாப்பிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்!”
“எனக்கு வீட்டுக்குதான் பேகணும். அங்க போயி சாப்பிட்டுக்கலாம். வெய்ட்டிங் ஹாலுக்கு வரல!” அவள் பின் செல்லாமல் அடமாய் நின்று கொண்டான் சக்தி. இரண்டெட்டு முன் சென்றவள், திரும்பி வந்தாள்.
உர்ரென்று நிற்பவன் தாவாய் பிடித்து, “ஏன் சக்தி?” என்றாள் தழைந்த குரலில். அவளுக்கும் தெரிகிறது. தெரிந்தும் அவளால் தான் தவிர்க்க முடியவில்லை.
“நீங்க எதுக்கு அங்க போறீங்கணு தெரியும். நான் வரல!”
முகத்தை மூன்று முழத்திற்கு தூக்கி நின்றவனைப் பார்க்க ஒரு பக்கம் தவிப்பாக இருந்தது. அதே சமயம் சிரிப்பும் வந்தது அபிராமிக்கு.
பள்ளிவிட்டு கிட்டத்தட்ட வளாகமே வெறிச்சோடி விட்டது. எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டிஸ் இருக்கும் மாணவர்கள் மட்டுமே அததற்குரிய பயிற்சியாளர்களோடு இருந்தனர். சக்தி கைக்கு இன்னும் சிறிது நாட்கள் ஓய்வு கொடுக்கவேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தலின்படி சிலம்பம் போன்ற மேற்படி வகுப்புகள் அவனுக்கு இல்லை.
அதனால் வீட்டுக்குப் போகலாம் என அடமாக நின்றான்.
அபிராமி, அவனை அழைத்துச் செல்வது பிரணவைப் பார்க்க. கடந்த ஒரு வாரமாக இதுதான் நடக்கிறது. முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டவன் இப்பொழுது பிரணவோடு அபிராமி நெருங்கிப் பழகுவது பிடிக்கவில்லை. பத்து வயதில் சவலைத்தனம் காட்டியது பிள்ளை.
தினமும் பிரணவுக்கென சூடாக ஏதாவது செய்து எடுத்து வருகிறாள். எப்படியும் பள்ளிவிட்டு அந்த அரவம் ஓய்ந்த பிறகுதான் குரு, பிள்ளையை அழைக்க வருவான் எனத் தெரியும். இவளே இரண்டு மூன்று முறை அதை கவனித்திருக்கிறாளே.
குரு, இவர்களை நர்சரியில் சந்தித்துப் பேசி வந்த அன்று மாலை சக்தியை அழைக்க அரவிந்தன் தான் பள்ளி வந்தான். அன்று அவளது கவனம் எதிலும் இல்லை என்பது தம்பிக்கு புரிந்தது. அப்பொழுதே நர்சரியை மூடிவிட்டு, கண்ணையனுக்கும் அழைத்து சொல்லிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். மதியத்திற்கு மேல் ஆயிற்று. உணவு நேரமும் கடந்து விட்டது.
அவளுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன் சக்தியைப் பற்றி அவள் தெரிந்து கொண்ட உண்மைதான் பேரதிர்ச்சி. அதிலிருந்து வெளிவரக்கூட அவளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை என்பதைவிட, அவள் அதை உணரவிடாமல் செய்தது இரண்டு வயதுக் குழந்தையின் நிலமை. சக்திக்கு மீண்டும் கண் பார்வை வருமா எனத் தவித்திருந்த காலகட்டம். இரு கோட்டுத் தத்துவம் போல் அவளுக்கு நேர்ந்ததை அவள் யோசிக்கக்கூட சிந்தனையில்லாமல் குழந்தையின் பிரச்சினை முன்னுக்கு வர, தனக்கு நடந்த ஏமாற்றமா, பிள்ளையா எனும் பொழுது பிள்ளை தான் கண்முன் வந்தான்.
பத்து வருடங்கழித்து பிரணவ், அதனுடைய நீட்சி. தெளிய சற்று நேரம் எடுக்கும். ஆனால், சீக்கிரம் தெளிந்து விடுவாள் எனத் தெரியும். இங்கும் இருகோட்டுத் தத்துவம் வேலை செய்யும். ஏனெனில் இங்கும் ஒரு பிள்ளையின் உயிர். அவளை எல்லாவற்றையும் மறக்க வைக்கும்.
வீட்டிற்கு வந்ததும் பசியில்லை, தலைவலி என சாப்பிடாமல் படுக்கச் சென்றவளை, வம்படியாக சாப்பிட வைத்தான். காலையிலேயே சமைத்து வைத்தது இருந்தது. சூடு மட்டும் செய்து கொடுத்து அவனும் சாப்பிட்டான். தலைவலிக்கு என தூக்க மாத்திரையைக் கொடுத்து தூங்க வைத்தான். அவன் கொடுக்கும் போதே தெரிந்தது. அது தூக்க மாத்திரை தான் என்பது. வித்யாசம் தெரியாதா என்ன? எல்லாவற்றையும் மறந்து, அசந்து தூங்கினால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கும் தோன்றவே மறுக்கவில்லை. போட்டுக் கொண்டாள். நன்கு தூங்கி எழுந்தால் தான் அடுத்து அவளால் சிந்திக்கவே முடியும்.
பள்ளியிலிருந்து வந்தவன், என்றுமில்லாமல் இன்று அபிராமி படுத்திருக்க, தலையை தொட்டுப் பார்த்தான் சக்தி. இருந்தும் அம்மாவை தொல்லை பண்ணவில்லை. கைகால், முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டான். அந்த அரவத்திலேயே லேசாக முழிப்பு தட்டிற்று. மகன் வந்துவிட்டான், பசியோடு வந்திருப்பான் என்பதை அரைத்தூக்கத்தில் தாய்மை உணர்ந்தது. இருந்தும் தூக்க கலக்கம் இமைகளை பசை போட்டு ஒட்டியது போல் பிரிக்க முடியவில்லை. அரைகுறை தூக்கத்தில் கண் விழிப்பது மீண்டும் தலைவலியில் கொண்டு விடும் எனத்தெரிய, மீண்டும் அசந்துவிட்டாள். அவனுக்குத் தேவையானதை அரவிந்தன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.
இரவு சமையலை முடித்து விட்டே அக்காவை எழுப்பினான். நேரம் பார்த்தவள், “நைட்டு எப்படிடா தூங்கறது?” என்று அலுத்துக் கொண்டே தான் எழுந்து வந்தாள்.
அடுப்படியைப் பார்த்தவள் இருவரையும் முறைத்தாள். சக்தி கமுக்கமாகச் சிரிக்க, அரவிந்தனுக்கோ அசட்டு சிரிப்பு. தோசை கல்லில் ஊற்றினானா, ஸ்டவ் மேடையில் ஊற்றினானா என சந்தேகம்.
“அதான் தூக்கம் வராதுல. கிளீன் பண்ணிட்டு தூங்கு!” என்றான்.
“இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்துருக்கலாம்டா. தூங்கி எழுந்ததுக்கு பனிஷ்மென்ட்டா?” என்றாள் அலுத்தபடி.
சாப்பிட்டு, சற்று நேரம் மகனோடு நேரம் செலவிட்டு அவனை தூங்க வைத்து வந்து பார்க்க அடுக்களை சுத்தமாக இருந்தது. இவள் தூங்க நேரமெடுக்கும் என இவளுக்கும் பால் சூடு பண்ணி ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்தான்.
“இன்னைக்கி மட்டும் தான். டெய்லி எதிர் பாக்கக் கூடாது!” என்ற தம்பியை,
“தம்பிடா” என்றபடி மெச்சுதலாகப் பார்த்தாள்.
“உனக்கு வர்றவ கொடுத்து வச்சவன்னு நீ இங்க டயலாக் பேசணும்க்கா!” காலரைத் தூக்கிவிட்டு கித்தாய்ப்பாக சொன்னவனிடம்,
“ஏன்டா, இதையே தான் நாங்க காலம் காலமா பண்றோம். நீங்க ஒரு நாள் செஞ்சா மட்டும் நாங்க கொடுத்து வச்சவங்களா?” என்று கேட்க,
ஆளைவிடு என்பது போல் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு படுக்கச் சென்றவனை சிரிப்போடு பார்த்தாள்.
“இருந்தாலும் பிரியா கொடுத்து வச்சவ தான்!” என்றாள் அவன் காதில் விழும்படி. சட்டென நின்றவன் அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்க்க,
“அப்போ நான் நெனச்சது சரிதானா?” என்றாள் நம்பாத பாவணையில்.
வேகமாக அவளிடம் திரும்பி வந்தவன், “அப்போ சும்மா தான் கேட்டியா?”
“ம்ம்ம்” என்றாள் தோள்களைக் குலுக்கி.
“நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனா?”
“எக்சாட்லி… சக்தி பெர்த் டே அன்னைக்கி லைட்டா ஒரு டவுட் வந்துச்சு. இப்போ கன்ஃபார்ம் ஆயிருச்சு!” என்றவள் முகம் மலர,
“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. இது ஒன் சைட் தான்!”
“யாருக்கு?”
“முதல்ல அவளுக்கு… இப்போ எனக்கு!”
“ஒன்னும் புரியல!”
“எனக்கும் தான் ஒன்னும் புரியல…. சொல்லத் தெரியலைன்னு பாட்டு ஓடுது. அவளுக்கு இப்போ நான் டாக்டர்னு ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கும் போலக்கா?”
“காம்ப்ளக்சோ, அபார்ட்மென்டோ ஏதோ ஒன்னு சீக்கிரம் கட்டி முடிங்க. நம்ம வீட்லயும் விசேஷம் நடந்து ரொம்ப வருஷமாகுது!”
“பார்றா… எங்க அக்காவுக்கு கூட காமெடி எல்லாம் வருது!” என்று அவனும் சிரிக்க,
“அதென்னடா… அக்காவுக்கும் கூட?” என்றவள் முகமும் தெளிச்சலாக இருப்பதை கவனித்தான். தூங்கி எழுந்ததாலோ என்னவோ இறுக்கம் தளர்ந்து இலகுவாகப் பேசினாள்.
அரவிந்தனுக்கும் அக்காவுக்கு உண்மை தெரிந்ததில் சந்தோஷமே. பிரியாவின் விலகலுக்கான் காரணம் அந்தஸ்த்து பேதம் தான் என்பது புரிந்தது. இவனுக்கு அது பிரச்சினை இல்லை. என்ன… சித்தப்பாக்கள்தான் கொஞ்சம் குடும்பம், கௌரவம் என தையத்தக்க என குதிக்கக் கூடும். சித்திகளும் அதுக்கு ஜதி கூட்டக்கூடும். எங்க பேச்சை கேட்காத உனக்கு சொத்து இல்லை என்று சொல்ல மேலும் ஒரு காரணம் கிடைக்கும். பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கிறது.
அதற்கு முன் பிரியாவின் சம்மதம் வேண்டும். பள்ளி படிக்கும் போதே தைரியமாக காதலைச் சொன்னவள்… ‘மன்னிக்கவும் மை லார்ட்.. அது காதல் இல்லை, கிரஷ் அதாவது பதின் பருவ ஈர்ப்பு என்று மனசாட்சியார் இடித்துரைக்க, ’ஏதோ ஒன்னு? ஆனால் இப்போது இவன் முகம் பார்த்து பேசக் கூட கூலி கேட்பவளை என்ன செய்வது? பாத்துக்கலாம்… பாத்துக்கலாம்… தனக்குதானே தோள்தட்டி மானசீகமாக சொல்லிக் கொண்டான்.
அந்த வயதில் வரும் வெறும் ஈர்ப்பு என்றதும் திடீரென ஞாபகம் வந்தவனாக, “அக்கா… பிரணவ் அப்பாவுக்கு நம்ம நம்பர், அட்ரஸ் கொடுத்தது யாரு தெரியுமா?”
“ம்ம்ம்… சுகுமாரன் தானே?”
“உனக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சர்யப்பட்டவன், “உனக்கு கால் பண்ணானா?” என்றான்.
“நீ திட்டினதும் எனக்கு ஃபோன் பண்ணினான். அபி… யோசிக்காம கொடுத்துட்டேன். அரவிந்தன் திட்டுனப்பறம் தான் உங்ககிட்ட கேட்டுட்டு நம்பர் கொடுத்துருக்கணும்னு தோணுச்சுனு ஒரே அழுகாச்சி ஃபீலிங்கு.”
“வயசுதான் ஆச்சே ஒழிய இன்னும் பக்குவம் வரல. மாமாவாப் போயிட்டாரு. அதுக்கு மேல பேசமுடியல. அவங்களாலதான் உனக்கு படிப்பும் போச்சு! வாழ்க்கையும் போச்சு!” என்றான் இப்பொழுதும் கோபமாக.
“டேய்… சித்தப்பாக்களுக்கு அது ஒரு காரணம் அவ்வளவுதான். அப்படி யோசிக்கிறவங்க அப்பறம் ஏன் அவன் குடும்பத்துலயே என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்தாங்கலாம். அவன் லெட்டர் கொடுத்ததெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அவங்களுக்கு. விடுடா.. பழசைப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்றது? போய் தூங்கு. இன்னைக்கி எனக்கு சிவராத்திரி தான். ஆனா பாறேன்! எனக்கு கொடுத்த லெட்டரையே இன்னொரு பிரின்ட் போட்டு ஆனந்திக்கு கொடுத்து கரெக்ட் பண்ணிட்டான். கேட்டதுக்கு அகர வரிசையில அடுத்து அவபேர் தானாம். சரியான கிறுக்கன்” என்று சொல்லி சிரிக்க அந்தச் சிரிப்பு அரவிந்தனையும் தொற்றிக் கொண்டது. காலம் கடந்துவிட்டதாலோ என்னவோ நடந்தவைகள் எல்லாம் இப்பொழுது நீர்த்துப் போயிற்று. நடந்து முடிந்ததை நினைத்து நடப்பில் சிரிக்க மட்டுமே முடிந்தது.
இதே மனநிலையில் இருவரும் படுக்கைக்குச் சென்றனர்.
மகனை அணைத்துக் கொண்டு வெறுமனே கண் மூடிப் படுக்க, மீண்டும் குரு வந்து சென்றதே பூதாகரமாக அவள் கண் முன் எழுந்து நின்றது.
என்னதான் முயன்றும் தூக்கம் வராமல் சண்டித்தனம் செய்தது. ஆயிரத்திலிருந்து தலைகீழாகக் கூட எண்ணிப் பார்த்துவிட்டாள். வேலைக்காகவில்லை. கைபேசி எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். தம்பி ஃப்ளாஸ்க்கில் எடுத்து வைத்த பாலை டம்ப்ளரில் ஊற்றிக் கொண்டாள். அதில் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்துக் கொண்டவள் சோஃபாவில் வந்து கால் மடக்கி அமர்ந்தாள். கைபேசியில் ஜெமினியாரிடம் CGD (Chronic Granulomatous Disease) என டைப் செய்தாள். கடகடவென விபரங்களை தரவிறக்கம் செய்து கொடுத்தது. விரிவாகப் படிக்க படிக்க மனம் கனத்தது. அடுத்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Stem Cell Transplant) எனப் பார்க்க வந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் கண்ணுக்கு எட்டாமல் தூரம் போனது.
மறுநாள் மாலை பள்ளிக்கு மகனை அழைக்க வந்தாள். கை சரியாகும் வரை சக்திக்கு எந்த பயிற்சியும் வேண்டாம் என்றிருக்க, இவளுக்கும் காத்திருக்கு வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும் அவளது கால்கள் வெய்ட்டிங் ஹால் நோக்கிச் சென்றது. வழக்கம் போல் பிரணவ் அங்கு தனித்திருந்தான். மனம் அவனிடம் போகச் சொல்லி பரபரக்க, குருவுக்கு ஆனதுதான் உனக்கும் என மனசாட்சி எடுத்துரைக்க கட்டுக்குள் வந்தாள்.
இவனைப் பார்த்ததும், “சக்தி எப்படியிருக்க… டெய்லி டாட் கிட்ட உன்ன விசாரிச்சேன் தெரியுமா?” ஆர்வமாக அவனே பேச்சைத் தொடங்க இவளுக்கும் அது இலகுவாயிற்று.
விபத்து நடந்த அன்று அவனும் தானே மறுத்துவமனை வரை வந்திருந்தான். அதனால் தினமும் குருவிடம் விசாரிப்பான். சக்தி, கையில் ஆர்ம் ஸ்லிங்கோடு பள்ளி வந்ததையும் பார்த்துவிட்டு அப்பாவிடமும் விசாரித்தான்.
“பிரச்சினை இல்ல சின்னா… ஊரிக்கே… வேஸ்த்துன்னாரு. ஒன் வீக்லோ தீஸ்த்தார்லே” (சும்மா போட்டிருக்காங்க. ஒரு வாரத்துல எடுத்துறுவாங்க) என்றிருந்தான். இவனும் தானே மருத்துவரிடம் விசாரித்திருந்தான்.
குருவை விட திருவாளர் திருவேங்கடமும், திருமதி ஜமுனாவும் தான் இவனைப் பற்றி அதிகம் குருவிடம் விசாரித்தது. திருவேங்கடம் தான் சக்தியைப் பார்த்திருக்கிறாரே.
அதுவுமில்லாமல் உண்மை நிலவரமும் இருவருக்கும் தெரியும். ஜமுனாவால் அவரது ஆவலை அடக்க முடியவில்லை. ஒரு தடவை மருத்துவமனை அழைத்துப் போகச் சொல்லி குருவிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டார். பிடிவாதமாக மறுத்துவிட்டான். அதற்கும் வழக்கம்போல் விஷாலியிடம் ஒரு மூச்சு ஃபோனில் புலம்பித் தீர்த்தார்.
இவனைப் பார்த்தே அபிராமி மிரண்டது தான் அவனுக்குத் தெரியுமே. அதனால் தான் சக்தியின் சோதனை முடிவுகள் வரும்வரை எந்த முன்னெடுப்பும் எடுக்கும் யோசனையில் குரு இல்லை. பிரணவ், சக்திக்கான சோதனை முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எண்ணமே அவனுக்கு இல்லையே.
எந்த சூழ்நிலையில், எப்படி இது நடந்திருக்கும் என்று தெரியாத பொழுது, மகனோடு தனித்திருக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் கல்லெறிந்து குழப்ப அலைகளை உருவாக்க விரும்பவில்லை.
அவன் எதிர் பார்த்தது போல் தான் அன்று அவன் கொடுத்த டி.என்.ஏ ரிப்போர்ட்டைப் பார்த்தவள் முகம் அதீத அதிர்ச்சியைக் காட்டியது. தனக்கு மாதிரி தான் இவளுக்கும் உண்மை தெரியாது என்பதை புரிந்து கொண்டான். அதனால் தான் அந்த சூழ்நிலையை கிரகிக்க அவளுக்கு அவசாகசம் கொடுத்து சீக்கிரம் கிளம்பிவிட்டான்.
ஆனால், இவளுக்கு தான் அன்று பக்கத்திலேயே அமர்ந்திருந்தும் பிரணவைப் பார்க்காமல் போய்விட்டோமே என்று மனம் அடித்துக் கொண்டது. இதோ மறுநாளே தேடி வந்துவிட்டாள்.
பிரணவ் சக்தியை விசாரிக்க, இவளது கண்கள் அவனையேதான் பார்த்திருந்தது.
காலையில் போட்டுவந்த சட்டை மடிப்பு கூட கசங்காமல் அமர்ந்திருந்தான். சக்தியோ, டக் இன் செய்திருந்த சட்டை ஒரு புறம் வெளிவந்திருக்க, தலை கலைந்து, வியர்வை வடிந்து நின்றான். கை பத்திரம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டது காற்றோடு போயிருக்கும் போல என்று நினைத்துக் கொண்டாள்.
பிரணவை அப்படிப் பார்க்க சமத்துப் பிள்ளையென அவளால் சந்தோஷப்பட முடியவில்லை. எப்பொழுதும் சேட்டை செய்து திட்டு வாங்கும் சக்தி கூட, மருத்துவமனையில் இருந்த போது அமைதியாக ஓரிடத்தில் இருக்கிறானே என சந்தோஷப்பட முடியவில்லை தானே. ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்த மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசவாசப் படுத்திக் கொண்டாள்.
“அம்மா… பசிக்குது!” சக்தியின் குரல் அவளது சிந்தனை ஓட்டத்திற்கு அணைகட்ட அவனிடம் தான் எடுத்து வந்த பேக்கைக் கொடுத்தாள். அதில் அவனுக்கான ஜுஸும், தாளித்த சுண்டலும்.
“அதுல என்னம்மா?” என்றான் இன்னொரு பையை பார்த்து. கேட்டுக் கொண்டே எடுக்கவும் கை நீட்டினான்.
“இது உனக்கில்லடா!” என்றவள் அதை கையில் எடுத்துக் கொண்டே,
“பிரணவுக்கு!” என்று சொல்ல,
“அவனுக்கு எதுக்கு நீங்க கொண்டு வரணும்?” அடுத்த கேள்வி அவனிடம்.
இதற்கு என்ன சொல்வது. அதுவும் பிராக்டீஸ் இல்லாத நேரத்தில், இவனுக்கு எடுத்து வந்ததோடில்லாமல், அவனுக்கும் என்றால். என்ன சொல்வதென்று முழித்துக் கொண்டிருந்தாள்.
“அது, உன்னோட ஃப்ரென்ட்ஸ் யாராவது இருப்பாங்க. ஷேர் பண்ணிக்குவேன்னு தான்” என்றாள் சமாளிப்பாக.
“ஆனா… பிரணவுக்குன்னு சொன்னீங்க?” மடக்கி கேள்வி கேட்க, குழப்ப நிலையில் உளறி வைத்திருப்பது தெரிய, இனி இவனிடம் யோசித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“உனக்கு தெரிஞ்சவன்னா இங்க அவன் தானடா இருக்கான்” என்றாள் சற்றே குரலை உயர்த்தி. அது கொஞ்சம் வேலை செய்தது. விபத்தால் வந்த பழக்கம் போல் உருவகப்படுத்தினாள்.
“ஆனா, அவன் என் ஃப்ரென்ட் இல்லையே. அதுவுமில்லாம அவன் நான் கொடுத்தா வாங்க மாட்டான்!” அன்றொரு நாள் மறுத்ததை வைத்து இவன் பேச, இதுக்கே இத்தனை கேள்வி கேட்கிறானே. இவனை எப்படி சமாளிக்க என்று திருதிருத்தாள். என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசனை ஓடியது. இருவருக்கும் ஒரு நட்பினை உருவாக்கும் எண்ணத்தில் தான் வந்தாள். சக்தியோ கேள்வி மேல் கேள்வி கேட்டான். சாதாரணமாக ஃப்ரென்ட், ஷேர் பண்ணிக்கோ என்றிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பானோ என்னவோ? இவள் தான் ஆர்வக் கோளாறில் சுற்றி வளைத்துவிட்டாள். அவனுக்கும் தனியாக செய்து எடுத்துவர, இவனுக்குள் பொறாமை தலைதூக்கியது.
“இப்ப நீ கொடுத்தா வாங்கிப்பான் சக்தி!” பின்னால் குருவின் குரல்.
வேகமாக திரும்பிப் பார்த்தாள். பிரணவுக்கு எடுத்து வந்திருப்பது தெரிந்தால் இவன் வேறு என்ன சொல்வானோ என்ற தயக்கமும் அவளை ஆட்கொண்டது.
“ஹாய்… அங்கிள்!” என்றான் சக்தி. அவனுக்குதான் குருவை நன்றாகத் தெரியுமே.
“இப்ப கை பரவாயில்லையா சக்தி?” விசாரிப்பது போல் பேச்சு கொடுத்தான்.
“ஓகே அங்கிள். ஆனா, அம்மாதான் எக்ஸ்ட்ரா கோச்சிங் எதுவும் வேண்டாம்னுட்டாங்க!”
“கை சரியானதும் பிராக்டீஸ் பண்ணலாம்.”
“ஓகே அங்கிள். நோ ப்ராப்ளம்!” இது அவனுடைய ஆஸ்த்தான டயலாக் போல என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.
இவர்கள் இருவரும் சகஜமாகப் பேச, பிரணவும், அபிராமியும் வாய் பார்த்தனர்.
குரு வந்ததும் பிரணவ் எழுந்து கொண்டான் வீட்டிற்கு கிளம்ப. இவள் ஏதோ பிரணவுக்கு எடுத்து வந்திருப்பதும், இவன் வரவும் தயங்குவதும் புரிந்தது. மறுப்பு சொல்லவும் மனம் வரவில்லை. அவனுமே இவர்களுக்குள் ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்க எண்ணினான்.
இவன் வந்ததும் அவள் கொடுக்கத் தயங்க, “ஏன் சக்தி… உன் கிளாஸ் மேட்டா இருந்தாதான் ஷேர் பண்ணிப்பியா?” என்று கேட்க,
“நோ அங்கிள். அன்னைக்கி ஜுஸ் கொடுத்ததுக்கு இவன் வாங்கல!” புகார் படித்தான்.
“அவனுக்கு கூலிங் செட்டாகாது. அதுவுமில்லாம உனக்கு யாராவது ஏதாவது கொடுத்தா, உங்க அம்மா சொல்லாம வாங்குவியா?”
“ஃப்ரென்ட்ஸ் கொடுத்தா வாங்குவேனே” என்றான் தெளிவாக.
“ஆனா… பிரணவ் ஃப்ரென்ட்ஸ் கொடுத்தாக் கூட வாங்க மாட்டான். இப்ப நான் சொல்றேன்! நீ கொடு! அவன் வாங்கிப்பான்” என்றான்.
சக்தி, அபிராமியைப் பார்க்க, இவள் குருவைப் பார்த்தாள்.
“அதுல சூடா வெஜிடபுள் சூப் தான் இருக்கு. அரவிந்த் கிட்ட கேட்டுதான் எடுத்துட்டு வந்தேன். கொடுக்கலாம்னுதான் சொன்னான்” என்றவள் குரலில் அத்தனை தயக்கம்.
“கொடுங்க… நோ ப்ராப்ளம்” என்றவன்,
“தீஸ்கோ சின்னா” என்று சொல்ல, முதன் முதலாக அப்பாவை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“நீங்களே கொடுங்க!” என்று பேக்கை அவனிடம் நீட்ட,
“பரவாலேதுலே… நீங்களே கொடுங்க” என்றவனை கண்களில் நன்றியோடு பார்த்தாள். பையிலிருந்த ஹாட் பாக்சிலிருந்து சூப்பை திறந்து கொடுத்தாள். அதற்கு முன்பே கைவசம் கொண்டு வந்திருந்த ஹேன்ட் சானிடைஸ் தடவிக் கொண்டாள். எல்லா ஏற்பாட்டோடும் வந்திருப்பது தெரிந்தது.
“ம்மா…எனக்கு எங்க சூப்” என்றவன் குரலில் அப்பொழுதே சிறு பொறாமை தலை தூக்கியது.
“உனக்கு ஜில்லுனு ஜூஸ்தானடா புடிக்கும். சூடா சூப் பிடிக்காதே? எத்தனை தடவை செஞ்சு கொடுத்து வேஸ்ட் பண்ணிருக்க?” என்று சற்று அதட்டுவது போல் கேட்க,
“சிக்கன் சூப் பிடிக்கும் தானே?” பாவம் போல் கேட்டதும் சிரித்துவிட்டாள்.
“நாளைக்கி ரெண்டு பேருக்கும் ஆட்டுக்கால் சூப். ஓகேவா!” என்று கேட்க சக்தியின் முகமே ஓகே இல்லை என்றது இருவருக்கும் என்றதில்.
அடுத்தடுத்த நாட்களில் இருவருக்குமே ஏதாவது செய்து எடுத்து வர, குருவும் நேரம் தாழ்த்தியே வந்து மகனை அழைத்துச் சென்றான்.
பிரணவோடு இவள் இழைவது சக்திக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போனது.
அபிராமி பிள்ளையார் தான் பிடிக்க நினைத்தாள். ஆனால்…
*****
“என்னாச்சுக்கா?”
உள்ளே வந்ததும் ஸ்கூல் பேக்கை சோஃபாவில் எரிந்து விட்டு கோபமாக சென்று பாத்ரூம் கதவடைத்தவனைப் பார்த்து அரவிந்தன் கேட்க,
“வழக்கம்போல தான்டா. நான் பிரணவ் கூடப் பேசறது பிடிக்கல… ஓவரா பொசசிவ் ஆகுறான்!” சிரித்தபடியே தான் கூறினாள். சிறுபிள்ளை கோபம் அவளுக்கு விளையாட்டாய் தான் தெரிந்தது. தானும் அவன் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் வீம்பு காட்டுவான் என்ற எண்ணத்தில்.
அக்காவை ஒரு கணம் ஊன்றி கவனித்தான். “சக்தி பொசசிவ் ஆகுறது இருக்கட்டும். நீ பிரணவ் கிட்ட டிஸ்டன்ஸ் மெய்ன்டெய்ன் பண்றது தான் அவனுக்கு நல்லது!” அடிக்கோடிட்டு அழுத்திச் சொன்ன தம்பியை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
“ஏன்டா… அவனோட அம்மாக்கு நான் பழகுறது பொசசிவ் ஆகும்கறியா?”
லன்ச் பேக்கிலிருந்த டிஃபன் பாக்ஸ்களை எடுத்து, திறந்து சிங்கில் போட்டபடியே கேட்டவள், தன் கேள்விக்கு தம்பியிடம் பதில் இல்லாமல் போக திரும்பிப் பார்த்தாள்.
“என்ன அரவிந்த் பதிலே காணோம்? பிரணவ்கிட்ட எனக்கும் எந்த உரிமையுமில்லைனு தெளிவாத் தெரியும்” என்ற அக்காவை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தான்.
“பொசசிவாக அதுக்கு அவனோட அம்மா இருக்கணுமே?”
அரவிந்த் சொன்ன பதில் அவளுக்குப் புரியவே சில கணங்கள் பிடித்தது.
“அவனுக்கு அறிமுகமில்லாத தாய்ப்பாசத்தை அவனுக்கு அறிமுகப்படுத்திறாதே. அவனுக்குதான் அது கஷ்ட்டம். எமோஷனல் அட்டாச்மென்ட் உனக்கும் வேண்டாம்க்கா!” சொல்லிவிட்டு நிற்காமல் சக்தியை சமாதானப் படுத்த சென்ற தம்பியை இமைக்காமல் பார்த்திருந்தாள். இதயம் தாறுமாறாகத் துடித்தது.
குரு, அபிராமியைத் தேடிச் சென்றான் என்று தெரிந்தவுடனே, அரவிந்தனும் குருவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
வேறு யாரையும் அணுகவில்லை. நேரடியாத வேங்கடம் வணிக வளாகம் சென்றவன் திருவேங்கடத்தையே சந்தித்து குரு மற்றும் பிரணவ் பற்றிய விபரங்களை கேட்டறிந்து கொண்டான்.
*****
“பாவா!”
“…”
“பாவா… மன பிட்டக்கி நா லாகா அம்மா லேகுண்டா போயினா… நா நானா லாகா வாடினி ஒண்டரிகா வடிலேஸ்தாவா?” (நம்ம பிள்ளைக்கு என்னைப் போல அம்மா இல்லாமப் போயிட்டா… என் அப்பா மாதிரி அவனைத் தனியா விட்டுடுவியா?”)
“நின்னு சம்பேஸ்த்தானே… பிச்சி பிச்சிகா மாட்லாடொக்கே.” (கொன்றுவேன் உன்னை. பைத்தியம் மாதிரி பேசாதே) என்றவன் குரல் உடைந்து கண்கள் குளம் கட்டியது. அடுத்து வார்த்தை வரவில்லை.
எட்டுமாத வயிற்றோடு படுக்கையில் சோர்ந்து படுத்திருப்பவளை பார்க்க பார்க்க மனம் இற்றுப் போயிற்று. எத்தனை உயிர் வேதனை. பிள்ளை வேண்டும் என்று இவளிடம் கேட்டேனா? அவளிருக்கும் நிலையில் தன் ஆற்றாமையை கோபமாகக் கூட வெளிப்படுத்த முடியாத இயலாமை. உவர் நீர் மட்டுமே அவன் உணர்வுகளுக்கு வடிகாலாக.
“நாக்கு பிச்சிலே… நீ பிச்சி… மன பிட்ட பிச்சி!” என்றவள் முகத்தில் வரண்ட சிரிப்பு மட்டுமே. (எனக்கு பைத்தியம் தான். உம்மேல. நம்ம பிள்ளை மேல)
“நன்னு பிச்சிவாடுனி சேசி வெள்ளிப்போயாவே! இரோஜு சின்னா கண்லோ எந்த ஆசை தெளுசா… சக்தி அம்மாவைனி ஜுஸி. வாடி தக்கற எக்குவுகா கலவொத்தனி சக்தி அம்மாதக்கற செப்பலேக்க போத்துன்னானே. அந்தா நுவ்வு சேசி வெள்ளிபோயாவு… இப்புடு நேனு, சின்னா அனுபவிஸ்துன்னாம்… நா ஆச பிச்சிதானா…” (என்னை பைத்தியக்காரனாக்கிட்டுப் போய்ட்டியேடீ. இன்னைக்கி சின்னா கண்ல சக்தியோட அம்மாவைப் பாத்து எவ்ளோ ஆசை தெரியுமா? அவன்கிட்ட நெருங்கிப் பழகாதீங்கனும் என்னால சொல்லவும் முடியல. எல்லாம் நீ பண்ணிட்டு போயிட்ட. இப்ப நானும் சின்னாவும் அனுபவிக்கிறோம். என் ஆசை கிருக்கச்சி!)
தனது சிலக்க நினைவில், அவளது நிழல் படத்தோடு போதையில் பிதற்றியவன் கண்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
சிலக்க – (கிளி)
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
என்ன…. நாளே முடிஞ்சு போச்சு இப்ப வாழ்த்தான்னு கேக்குறீங்களா? தமிழ் பஞ்சாங்கப்படி, காலை ஆறு மணிக்கு தான் அடுத்த நாள் தொடங்குது. அதனால நம்ம தொந்தி கணபதிக்கு இன்னும் பிறந்தநாள் முடியல… எப்பூடீ… நம்ம சாமர்த்தியம்… 🫣😉





நிஐமா குழப்பமா இருக்கு ஜீ 🙏
நம்மள மண்டை பிச்சுக்க வைக்குறீங்க🙏
சூப்பர்❤️
நீங்க சொல்றதப் பாத்தா எனக்கே கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கு 🤣🤣
லாஜிக் மிஸ்டேக் இருந்தா சொல்லுங்கம்மா..
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Ungalukum valththukkal ma
எங்களுக்கு இன்னைக்கு தான் வினாயகர் சதுர்த்தி
Love from canada
I like aravind character
வாவ்… 🤩🤩🤩
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nice
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
சில்க் காவின் கண்கள்கள் தான் சக்தி க்கு பொறுத்தப்பட்டுள்ளதா.
அச்சோ…
எந்த இடத்துல உங்களுக்கு அப்படி தோணுதும்மா…
சக்தி, குருவோட சாயல். அவன் கண்ணு மாதிரியே சக்தியோட கண்ணு. பிரியா கூட குருவப் பாத்ததும் சக்தி மாதிரின்னு அபிகிட்ட சொல்லுவா.
பிரணவ் அபிராமி சாயல்.
கூடிய சீக்கிரம் குழப்பத்த சரிபண்றேன்…
Thank you ma 🥰🍫
இல்லம்மா சக்திக்கு கண் பார்வை என வருகிறது அதனால் இப்படி இருக்குமோ என சந்தேகம்.
அது ஃப்ளாஷ் பேக்ல குழந்தைக்கு நடந்த ஒரு சம்பவம்.
கதையோட்டத்துல அநத் சீன் வரும். பின்னால வரும் மா…
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
அருமை👌
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Hii ☺️
Hi ma ❣️