என் வீட்டு தோட்டத்தில் 12
12
“சித்தி… அவன் லெட்டர் குடுத்ததுக்கு நான் என்ன சித்தி பண்ணுவேன்?”
“கண்டவன்கிட்டயும் சிரிச்சு சிரிச்சுப் பேசினா லெட்டர் கொடுக்கத்தான் செய்வான். ஆம்பள மாதிரி வண்டிய எடுத்திட்டு ஊர் சுத்த வேண்டியது. வீட்ல அடங்கி ஒடுங்கி இருந்தாத் தானே?”
“அப்ப நீங்களும் கடைக்குப் போற வேலைன்னா என்கிட்ட சொல்லாம உங்க ஆம்பளப் பிள்ளைக கிட்டயே சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?”
“நீதானே வண்டி ஓட்டுற. அவனுக சின்னப்பையலுக!”
“அப்ப ஊர் சுத்தறேன்னு சொல்லாதீங்க. அதை வாங்கிட்டு வா. இதை வாங்கிட்டு வான்னு ஒரு நாளைக்கி ஓராயிரம் தடவை வெளியே அனுப்ப வேண்டியது. கேட்டா நான் ஊர் சுத்தறேனாம்?”
“அதுக்குன்னு கண்டவன்கிட்டயும் நின்னு பேசிட்டா வரச்சொல்லுச்சு?”
“சித்தி, நானொன்னும் வலியப் போயி அவன்கிட்ட பேசினதேயில்ல. அதுவுமில்லாம என் கூட படிக்கிற பையன். ஏதாவது டவுட்டுனா கேப்பான். அவ்வளவுதான். அதை யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லிருக்காங்க!”
“அவன் உன்கிட்ட டவுட்டு கேட்டானாக்கும். வெளங்கின மாதிரித்தான்” என்று சின்ன சித்தி வினோதினி கேலியாக நொடிக்க,
பெரிய சித்தி மாலதியோ, “அதெல்லாம் தெரியாது. நாளைக்கு உங்க சித்தப்பாக்களுக்கு தான் ஒரு பேச்சு வரும். தகப்பனில்லாத பிள்ளைகள கண்டிச்சு வளக்க வேண்டாமான்னு” என்று கேட்க,
அபிராமி, “அப்படி கண்டிச்சு வளக்குற அளவுக்கு பெருசா என்ன நான் பண்ணிட்டேன்?” நிமிர்வாகவே தான் கேட்டாள்.
அதற்கு, “உங்க சித்தப்பா ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க. ஏற்கனவே ஸ்கூல் முடிச்சதும் உனக்கு பாக்கணும்னு தான் பேசிக்கிட்டாங்க. இப்ப தானா அமையுது. வலிய வரும்போது தட்டிக் கழிக்க கூடாது.” என்றார் மாலதி.
“எது சித்தி தானா அமையுது? நான் காலேஜ் போகணும். மேல படிக்கணும். வேலைக்கு போகணும்! சம்பாதிக்கணும்!” இத்தனை உம் போட்டு அவள் தீவிரமாக மூச்சு வாங்கப் பேச,
“இது தான் அபி உங்கிட்ட புடிச்சதே. இந்த நேரத்துலயும் காமெடி பண்ற பாத்தியா?” என்று அசட்டையாக முடித்தார் வினோதினி.
மாலதி, “ப்ளஸ் டூ பாஸ் பண்ணுவியான்னே தெரியல. இதுல காலேஜ் படிக்கப் போறீயா?” என்றவரை முறைத்துப் பார்த்தாள் அபிராமி.
‘பெரியவங்கனு மரியாதை இருக்கா பாரு. என்னமா முறைக்கிறா?’ உள்ளுக்குள்தான் கருவினார் வினோதினி.
அவர்களுக்கு மூத்தார் மனைவி இந்துமதி மாதிரியே அவரது பிள்ளைகளும் வாயில்லாப் பூச்சியாக இருந்துவிட வேண்டும் என்பது பேரவா. ஏனெனில் இறந்து போன மூத்த அண்ணனின் குடும்பப் பொறுப்பை தங்களது தலையாய கடமையாக அல்லவா தலையில் சுமக்கிறார்கள். அதனால் இவர்கள் சொல்படி தான் கேட்டாக வேண்டும். சின்னவள் இப்பொழுது தான் பத்தாவது. எதுவும் கண்டு கொள்ள மாட்டாள். அரவிந்தனுக்கு இன்னும் விபரம் பத்தாது.
“ஏன் சித்தி… காலேஜ் போய் படிச்சாத்தானா? எத்தனையோ டிப்ளமோ கோர்ஸ் இருக்கு. டெய்லரிங், ஃபேஷன் டிசைனிங், கார்டனிங், பியூட்டிஷியன் இப்படி எத்தனையோ இருக்கு. ஏதாவதொன்னு படிச்சுட்டுப் போறேன்!” என்று சித்திக்கு பதில் கொடுத்தாள். பனிரெண்டாவது பரீட்சையே இந்த வருடம் தான் எழுதியிருக்கிறாள். இன்னும் பரீட்சை முடிவு கூட வெளியாகவில்லை. வைகாசியில் திருமணம் என வீட்டில் பேச்சு அடிபடுகிறது.
அபிராமியின் சித்தி அப்படி பேசினார் என்றால் அதற்கு முக்கிய காரணம் நம்ம அபிராமியார்க்கு சரஸ்வதி கடாட்சம் சற்றே குறைவு. பத்தாவது தாண்டுவாளா என பத்தாவது தேர்வு முடிவு வெளிவரும் அன்று இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் போல சீட்டின் நுனியில் அமர்ந்து தேர்வு முடிவுகளைப் பார்க்க வைத்தவள். பாஸ் எனத் தெரிவதற்குள் விரலில் பாதி நகம் காலி. தம்கட்டி மூச்சுப் பிடித்து பார்டர் மார்க்கில் பத்தாவதைத் தாண்டிவிட்டாள்.
அடுத்து பனிரெண்டாவது பாஸ் பண்ணுவது சந்தேகமே. நம்ம அம்மணிக்கும் படிப்புக்கும் ஏழு, எட்டு, ஒன்பது என பல பொருத்தம். எப்படியும் பாஸாகி விடுவாள். அதில் சந்தேகமில்லை. இல்லையென்றால் வீட்டோடு உட்கார வைத்து விடுவார்களே. அதற்காக வேணும் பார்டரிலாவது மார்க் வாங்கி விடுவாள்.
ஒன்று பெண்கள் படிக்க வேண்டும். அப்படியில்லையா வயதுக்கு வந்ததும் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். இந்த இரண்டு சாய்ஸ் தான் நம் நாட்டில். இதற்குப் பயந்தே தான் இப்போதெல்லாம் பெண் பிள்ளைகள் முட்டி மோதிப் படிப்பதே. ஆனா பாருங்க நம்ம அபிராமிக்கு படிப்பும் சதி செய்தது. படிப்போடு கூட்டு சேர்ந்து உடன் படிக்கும் சக மாணவனும்.
பனிரெண்டாவது படிக்கும் கண்ணுக்கு அழகான, அம்சமான, சர்வ லட்சணமும் பொருந்திய, எல்லாரிடமும் கலகலவென பழகும் பதின்பருவ பருவச்சிட்டுக்கு காதல் விண்ணப்பம் வராமலிருந்தால் தான் ஆச்சர்யம்.
இவளுக்கும் வந்துவிட்டதே. உடன் படிப்பவன் இதுதான் பள்ளியின் இறுதி ஆண்டு. இனி இவளைப் பார்க்க முடியுமோ முடியாதோ என்ற பதட்டத்தில் காதல் விண்ணப்பம் போட்டுவிட்டான்.
பள்ளி இறுதி நாள். எல்லோரும் சக தோழமைகளின் ஆட்டோகிராஃப் நோட்டில் பிரியாவிடையோடு ஃபோன் நம்பர், விலாசம் எல்லாம் எழுதிக் கொடுத்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் எழுதிக் கொடுக்க எல்லாருடைய நோட்டும் எல்லார் கைகளிலும் சுற்றி வந்தது. இவளது நோட்டும் சக மாணவ மாணவியர் கைக்கு எல்லாம் சென்றுவிட்டு இறுதியாக இவளிடம் வந்தது. ஒருவன் மட்டும் அதில் அவள் மீதான தன் விருப்பத்தை எழுதிக் கொடுத்தான்.
அபிராமிக்கு அது தெரியாது. இவள் வீட்டிற்கு வந்ததும் அதை மறந்தே விட்டாள். அடுத்து விடுமுறை நாட்கள். நோட்புக் டேபிளில் தான் கேட்பாரற்றுக் கிடந்தது. மாலதி தான் அந்த நோட்டை எடுத்து படித்துப் பார்த்தது. ஒவ்வொரு பக்கமாக திருப்பி வர, இடையில் காதல் விண்ணப்பம். இவளை அழைத்து கேட்க தெரியாது என்றுவிட்டாள். தெரிந்தால் தானே சொல்வதற்கு. ஆனால் சித்திகள் நம்ப வேண்டுமே.
“அதெப்படி உனக்குத் தெரியாம இருக்கும்?” என்று கேட்க,
“எனக்குத் தெரிஞ்சிருந்தா அந்த நோட்டை ஒழிச்சு தானே வச்சுருப்பேன்? இப்படி உங்க கண்ல படற மாதிரியா போட்டிருப்பேன்” என்று எதிர் கேள்வி கேட்க, சித்தப்பாக்களும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தத்தம் மனைவிமார் வாய்களை அடக்கிவிட்டனர். அது நம்ம வீட்டுப் பிள்ளையை நாமே நம்பவில்லை என்றால் எப்படி என்ற தோற்றத்தைக் கொடுத்தது.
அந்த மாணவனை இவளது சித்தப்பாக்கள் இருவரும் வெளியே தெரியாமல் அடித்து, துவைத்து, பிழிந்து, காயப்போட்டனர் என்பது வேறு சங்கதி. அவன் பெயர் சுகுமாரன். இவர்களை கலந்து கொள்ளாமலே வேறொரு முடிவு எடுத்தனர். சீக்கிரம் இவளுக்கு திருமணம் செய்வதென்று.
வீட்டில் வயதுக்கு வந்த பெண்கள் தலைச்சுமை. தங்கள் சுமையை தலை மாற்றிவிட்டால் அடுத்து கட்டினவன் பாடு. இப்படித்தான் நினைத்தனர் அபிராமி சித்தப்பா, சித்திகளும். அதற்கு அந்த காதல் விண்ணப்பம் ஒரு சாக்கு.
இந்துமதியிடம் கூட எதுவும் கலந்து கொள்ளவில்லை. திருமண ஏற்பாட்டை முன்னெடுத்தனர்.
விஷயம் தெரிந்து, “தம்பி அவ சின்னப்பிள்ள. இன்னும் படிக்கணும்கறா!” இந்துமதி மகளின் விருப்பத்தை முன் வைக்க,
“சின்ன புள்ளையா? இப்பவே என் தோளுக்கு மேல இருக்கா அண்ணி. ரெண்டு வருஷம் போனா பிள்ள முத்திப்போகும். ஆம்பள மாதிரி தான் போறதும். வர்றதும். எங்க வண்டியத்தான் ஓட்டறது!” சிரித்துக் கொண்டே விளையாட்டு போல் பேசினார் பெரிய சித்தப்பா பரந்தாமன். பேருதான் பரந்தாமனே ஒழிய, பரந்த மனசு கிடையாது.
‘நானென்ன கத்திரிக்காயா, வெண்டைக்காயா முத்திப் போக?’ உள்ளுக்குள் கொந்தளித்தாள்.
சித்தப்பாக்கள் வண்டியைத்தான் அபிராமி ஓட்டுவாள். வீட்டில் இருந்தது அவர்களது வண்டிதான். அதில் தானே ஓட்டிப் பழகமுடியும். பெண்கள் ஓட்டும் வண்டி வாங்கிக் கொடுத்தால் அவள் எதற்கு இவர்கள் வண்டியை எடுக்கப் போகிறாள். கேட்டால் பெண் பிள்ளை, வண்டி ஓட்டி கீழே மேலே விழுந்து வைத்து ஒச்சமானால் யார் பொறுப்பு என்று வியாக்யானம் வேறு. இந்துமதிக்கும் அவர்கள் சொல்வது சரியெனப் பட்டது.
ஆனால் அபிராமி அப்படி இல்லை. “நீங்க வண்டி வாங்கிக் கொடுக்கலைனா என்ன, வீட்ல பைக்கா இல்ல” என்று சித்தப்பாக்கள் வண்டியிலேயே ஓட்டிப் பழகினாள். பொம்பளப்பிள்ள விழுந்து வைத்தால் என்னாவது என்று கவலைப்பட்ட சித்திகள் தான் அடுத்து வெளி வேலை எதொன்றுக்கும் இவளையே அனுப்பி வைத்தனர்.
“அதென்னமோங்க… அவளுக்கு ஆம்பள வண்டிதான் ஓட்ட வருது!” என்று சொல்லி வாய்விட்டு சிரித்தார் மாலதி. அந்தச் சிரிப்பிற்கான காரணம் புரிந்த அபிராமிக்கோ கோபம் சுறுசுறுவென உச்சிக்கு ஏறியது.
அவர் நக்கலாகச் சிரிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அபிராமிக்கு பூனைமுடி கை, காலெல்லாம் பொன்னிறத்தில் மின்னும். கன்னத்தோரமும் சிறு சுழியோடு சுருட்டி தனி கவர்ச்சி தரும் அவள் முகத்திற்கு. உதட்டின் மேலும் பார்வைக்கு லேசாகத் தெரியும். அதனாலேயே அவளை அடிக்கடி ஆம்பள மாதிரி என கேலி பேசுவது. மஞ்சள் தேச்சு குளி என ஆலோசனை சொல்வது.
வினோதினி, “நல்ல வேளைக்கா… வயசுக்கு வந்துட்டா. எனக்கென்னமோ சந்தேகமாவே இருந்துச்சு. ஆளுதான் ஒடிசலா இருக்காளே ஒழிய இப்பவே என் சைஸ் ப்ரா போடுறா!” ஒரு நாள் மாலதியிடம் சொல்லி சிரித்ததை கேட்டு உடம்பு கூசிப்போனாள் சிறுபெண். ச்சே… இப்படியும் பேசுவார்களா என்றிருந்தது. அன்றிலிருந்து வீம்புக்கெனவே அவர்கள் முன் ஆம்பளை மாதிரி தான் நெஞ்சை நிமிர்த்தி நடந்து கொள்வது.
“அது என்ன சித்தி ஆம்பள வண்டி. பொம்பள வண்டி. அதென்ன பொம்பளைக ஓட்டுற வண்டினாக் கூட கர்பப்பை மாதிரி சீட்டுக்கு அடியில ஸ்டோரேஜ் பாக்ஸ் வச்சு தயாரிக்கறது. ஏன் ஆம்பளைங்க எல்லாம் வீட்டு சாமான் வாங்க மாட்டாங்களா? அவங்க வண்டி மாடல் எதுலயாவது ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளாற இருக்கா?” என்று பதிலுக்கு கேட்க,
“இப்படியே வியாக்யானம் பேசிட்டு திரி. ஆம்பள பண்றதெல்லாம் நாம பண்ண முடியுமா?” என்றார் எகத்தாளமாக.
“இப்ப என்ன சித்தி? ஏன் பண்ண முடியாதான்னு நான் எதுத்து கேள்வி கேக்கணும். அவன் அவுத்துப் போட்டு போவான். நீ போவியான்னு என்னைத் திருப்பி நீங்க கேக்கணும். நான் பேன்ட் சட்டை போட்டுட்டு வெளியே போவேன். அவன் சேலை கட்டிட்டு வேளியே போவானான்னு நான் பதிலுக்கு கேக்கணும். அதுதானே சித்தி?”
“ஆம்பளைங்க இருக்காங்கனு பேசுறாளா பாருங்க? உங்க முன்னாடியே எப்படி வாய் நீளுது?” என்று வினோதினி எடுத்துக் கொடுக்க,
பரந்தாமனோ நேரிடையாக இந்துமதியிடம், “அண்ணி… பேசி முடிச்சாச்சு. அடுத்த வாரம் நல்லநாள் பாத்துட்டு வர்றாங்க. நம்ம பிள்ளைகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. அடுத்தும் எங்களுக்கு கடமை இருக்கு அண்ணி” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விட்டனர்.
இன்னும் ஒரு பெண் இருக்கிறாள், எல்லாம் நாங்கள் தான் எடுத்து செய்ய வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்களாம். எது எப்படியோ இவர்கள் விஷயத்தில் மட்டும் சித்தப்பா சித்திகள் நால்வரும் ஒன்று கூடி விடுவர்.
இதற்கு மேல் இந்துமதியும் என்ன செய்ய முடியும். மாப்பிள்ளை பார்ப்பதோ, விசாரிப்பதோ, காரியத்தை முன் நின்று நடத்துவதோ அவர்கள் தான். பிறந்து வீட்டு உறவென்பது நல்லது கெட்டது எனில் வாசல் மிதிக்கும் அளவுதான் இருக்கிறது. எதுனாலும் இவர்கள் சொல்படிதான் கேட்டாக வேண்டும்.
இரண்டு நாள் கழித்து, “தம்பி, மாப்ள யாருன்னு கூட சொல்லலியே?” இதையாவது கேட்போமே என வாய் திறந்தார் இந்துமதி. அபிராமி இல்லாத போதுதான்.
அவள்தான் வயல் பக்கம் சென்று விட்டாளே. பள்ளியில்லாத நாட்களில் அவளுக்கு முக்கால்வாசி பொழுதும் வயலில் தான் கழியும். பெரும்பாலும் கரும்பு விவசாயமே. நேரடியாக ஆலைகள் மொத்தக் கொள்முதல் செய்து கொள்ளும். முன் பணமாகவே கனிசமான தொகை தேறும்.
“எல்லாம் நமக்குத் தெரிஞ்சவங்கதான் அண்ணி. பக்கத்துல அன்னியூர்தான். கேள்விப்பட்டிருப்பீங்களே தயாளன் குடும்பம்னு.” என்று பெருமையாகச் சொன்னார்.
இந்துமதியும் அந்த குடும்பத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். அவரது கணவர் இருந்தபோதே கொடுக்கல் வாங்கல் இருந்தது. அவர் போன பிறகு பரிச்சயமில்லை. நல்ல வசதி. அவர்களும் அண்ணன் தம்பி என மூன்று பேர். அண்ணன் தயாளன் தான் அங்கும் எல்லாமே. தயாளன் குடும்பம் என்று தான் ஊருக்குள் பேர். அவரது ஒரே மகனுக்கு தான் அபிராமியை பேசி இருக்கின்றனர். பெரிய குடும்பத்துப் பையனைத்தான் மகளுக்கு பேசியிருப்பதாக பூரித்துப் போனார்.
எப்படியும் அபிராமிக்கு படிப்பு தகிடுதத்தம் தான். டெய்லரிங்கோ டிப்ளமோ கோர்சோ ஏதோ ஒன்று, அதை கலியாணம் முடித்து கூட கற்றுக் கொள்ளலாம். இவர்களே முனைப்பாக பொறுப்பை கையில் எடுக்கும் பொழுதே கடமையை முடிக்க எண்ணினார் இந்துமதியும்.
மகள் சொன்ன தொழில் சார்ந்த படிப்பெல்லாம் ஆறுமாதம் முதல் ரெண்டு வருஷம் வரை கூட படிக்க வேண்டும் என்பதெல்லாம் புரியவில்லை இந்துமதிக்கு. திருமணம் முடித்து வைத்தாலே பெண் பிள்ளை கடமையை முடித்ததாகத்தானே அர்த்தம்.
“வயித்துல நெருப்பக் கட்டிட்டிருக்க மாதிரி இருக்குடி. அப்பா இல்லாத பிள்ளைகள வச்சுட்டு நான் படுற பாடு எனக்குதான் தெரியும். இது கிராமம். ஊருதுனா பறக்குதுன்னு பேசுற ஊரு. நாளைக்கு ஒரு சொல்லு வர்றதுக்குள்ள உனக்கு கல்யாணத்தை முடிக்கணும்!” தனிமையில் மகளிடம் தன்மையாக இந்துமதி முடிவாய் சொல்ல, இவளுக்கு நன்றாகப் புரிந்தது இது சித்தப்பாக்கள் எடுத்த முடிவு என்பது.
இவள் எடுக்கும் மதிப்பெண்ணிற்கு எப்படியும் மெரிட்டில் காலேஜ் சீட் கிடைக்கப் போவதில்லை. கல்லூரியில் சேர்க்க பணம் கட்டித்தான் ஆக வேண்டும். செலவுக்குப் பயந்து வீட்டில் வைத்திருக்கவும் முடியாது. ஊருக்குள் ஏன் படிக்க வைக்கவில்லை என்ற கேள்வி வரும்.
அதற்கு திருமணத்தை முடித்துவிட்டால் அதே செலவில் திருமணம் முடித்த மாதிரியும் ஆச்சு. கடமை முடிந்த மாதிரியும் ஆச்சு. நகை தாராளமாக போட்டுவிடலாம். ஊருக்குள்ளும் அண்ணன் பிள்ளைகளை தம்பிகள் பொறுப்பாக கல்யாணம் முடித்து வைத்தார்கள் என்ற பேரும் கிடைக்கும். படிக்க வைப்பதைவிட திருமணம் முடித்து வைப்பது தானே இங்கு பெரிதாக பேசப்படும். இந்தக் காலத்தில் யார் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று பெருமை பேசும். ஊர் வாய்க்கு பெரிய பூட்டாக போட்டுவிடலாம்.
இத்தனைக்கும் ஒன்றுமில்லாத குடும்பமெல்லாம் இல்லை. அந்த ஊரில் பல ஏக்கர் கணக்கில் பொன் விளையும் பூமி கொண்ட பாரம்பர்ய குடும்பம்தான். அண்ணன் தம்பி மூன்று பேர் பங்கு. இன்னும் பாகம் பிரிக்கவில்லை. அண்ணன் பிள்ளைகளுக்கு செய்ய மட்டும் முன் கை வரை தான் நீளும். முழங்கை வரை எட்டி நீளாது. அதுவே அவர்கள் பிள்ளைகளுக்கு செய்வதென்றால் முழுக்கையும் நீளும். கேட்டால் நாங்க பாடுபடுறோம் என்ற பேச்சு.
மொத்த குடும்பத்திற்கும் ஒற்றை ஆளாக அடுப்படியில் இந்துமதி வெந்து தணிவது யார் கண்ணுக்கும் தெரியாது. “அக்கா, உங்கள மாதிரி கரிக்குழம்பு வைக்க முடியாது. அக்கா, உங்கள மாதிரி மீன் குழம்பு வைக்க முடியாது. நீங்க வச்சாத்தான் உங்க மச்சினங்களும், புள்ளைகளும் ரெண்டு வாய் சேத்து சாப்பிடுறாங்க.” ஓர்ப்படியாள்கள் இனிக்க இனிக்கப் பேசினால் இந்துமதி பாகாய் உருகி விடுவார்.
இந்துமதிக்கும் புரியாமலில்லை. கணவர் இறக்கும் பொழுது அபிராமிக்கு பத்து வயது. அடுத்துடுத்து இரண்டு வருட இடைவெளியில் சின்னவளும், அரவிந்தனும். அண்ட சராசரமும் அடுப்படியே என வாழ்ந்தவர். வெளி உலகம் தெரியாது. பிள்ளைகளோடு பிறந்து வீடு சென்றாலும் அங்கும் இதே நிலமை தான். எண்ணெய் சட்டிக்குப் பயந்து அடுப்பில் விழுவானேன். ஆதரவும், பாதுகாப்பும் வேண்டி புருஷன் வாழ்ந்த வீடென இங்கேயே அடைக்கலமாகிவிட்டார்.
அண்ணி என்ற சொல்லுக்கு மறு சொல் இருக்காது மச்சினன்களிடம். மரியாதை எல்லாம் தாராளமாக கிடைக்கும். எந்த விசேஷம் என்றாலும் இந்துமதியைத்தான் வீட்டுக்கு மூத்தவர் என முன்னிறுத்துவர். எங்க அண்ணனுக்கடுத்து அண்ணி தான் எல்லாமே என கூஜா, செம்பு, டம்ப்ளர் எல்லாம் கைவசம் ஏராளம். அதுக்கென்ன காசா பணமா? அப்பொழுதுதானே இந்துமதி, இவர்கள் பேச்சுக்கு ஆமாம் சாமி போடுவார்.
ஒரு நாள், வீட்டு மேல் வேலைக்கு ஆள் வராமல் போக, “அக்கா, நம்ம பிள்ளைக எல்லாம் புழங்குற பாத்ரூம். இப்படியிருந்தா நல்லாவா இருக்கும். கொஞ்சம் கழுவி விட்டுறுங்க” என்றார் மாலதி. எப்பொழுதும் மறைமுகமாக வேலை வாங்குவார்கள் தான். அம்மாவை நேரிடையாக, அதுவும் பாத்ரூம் கழுவச் சொன்ன அன்றுதான் அபிராமி வாய் திறந்தாள். அப்பொழுது பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். இளம் கன்றின் பயமறியாப் பேச்சாக துடுக்காக பேசுவாள்.
“சித்தி… நாங்க பெரிய பிள்ளைக. எப்படி நீட்டா வச்சுக்கணும்னு தெரியும். தம்பிகதான் சின்னப் பசங்க. நீங்களே கழுவிவிட்டு அவங்களுக்கும் சொல்லிக் கொடுங்க! நீங்க கழுவினாலும் பாத்ரூம் சுத்தமாகும்.” என்றாள் பட்டென.
அதற்கடுத்து இவள் இருந்தால் இந்துமதியை வேலை சொல்வதில்லை. அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன? எப்படி செக்கில் மாட்டைக் கட்டியதும் சுத்தி வருமோ அதே போல் எழுந்ததில் இருந்து படுக்கும் வரை அத்தனை வேலைகளும் பார்த்துவிடுவார்.
அபிராமியும் எத்தனையோ முறை அம்மாவை அதட்டிப் பார்த்துவிட்டாள். நம்ம குடும்பம் தானே அபி. சும்மா இருந்தா கண்டதையும் மனசு யோசிக்கும். சும்மா இருந்தா உடம்பும் மனசும் இத்துப் போகும். வேலைதான் எனக்கிருக்குற ஒரே ஆறுதல் என்று சொல்ல அவளும் எப்படியோ போங்க என்று விட்டுவிட்டாள். முப்பதுகளில் கணவனை இழந்த பெண்ணின் மனநிலை.
ஆனால் அபிராமி வீட்டில் கேள்வி கேட்கத் தொடங்கினாள். இவளது வாய்த்துடுக்குத் தனத்தாலே சீக்கிரம் திருமணம் முடித்து அனுப்ப வேண்டும் என முடிவுகட்டினர். நல்ல வசதியான குடும்பமாக பார்த்து, தாராளமாக சீர் செய்து கட்டிக் கொடுத்து விட்டால் இந்த சொத்து அவளுக்கு பெருசாகத் தெரியாது என்பது அவர்கள் எண்ணம்.
“ம்மா… அவங்க முடிவுக்கு ஏற்பாடு பண்ணினாங்க, நான் என் முடிவுக்கு எங்கேயாவது ஓடிப்போவேன். இப்பவே சொல்லிட்டேன்!” அவள் பேசிய விதம் கட்டாயம் செய்வேன் என்றது.
அப்படி செய்திருக்கலாமே என பின்னாளில் பலமுறை அவள் யோசித்ததுண்டு. ஆனால் என்ன செய்வது வெறும் வாய் துடுக்காக மட்டுமே போய்விட்டது சிறு பிள்ளை வீராப்பு.
“அபி… உனக்குப் பின்னாடி தங்கச்சி தம்பியெல்லாம் இருக்காங்க. அவங்கள நெனச்சு பாரு. உங்க இஷ்டத்துக்கு பண்றதா இருந்தா, வீட்டை விட்டு வெளியேறிக்கோங்கனு சொன்னா என்ன பண்ண முடியும் சொல்லு?”
“அம்மா…ம்மா… ம்மா… ஏம்மா இப்படி முட்டாளா இருக்கீங்க? என்னமோ அவங்க நம்மல புண்ணியத்துக்கு வச்சுப் பாக்குற மாதிரி நீங்களே பேசுறீங்க. இது பூர்வீக வீடும்மா. நமக்கும் பங்கு இருக்கும்மா. அப்படியெல்லாம் வெளியே போகச் சொல்ல முடியாது. வருஷத்துக்கு எத்தனை லோடு கரும்பு போகுது தெரியுமா? எவ்வளவு வருமானம் தெரியுமா? அட்வான்ஸாவே சுகர் ஃபேக்டரில எத்தனை லட்சம் வாங்குறாங்க தெரியுமா?” படபடவென பொறிந்தாள்.
“பங்கு இருந்தா மட்டும் போதுமா. பாடுபட வேண்டாமா?” என்று கேட்பவரை என்ன செய்தால் தகும் என கொலைவெறியோடு பார்த்தாள். என்னவோ சித்தப்பாக்களே வயலில் இறங்கி பாடுபடுவது போல. அம்மா பேசியதைக் கேட்க கேட்க இன்னும் எத்தனை நாட்களுக்கு அவரும் முட்டாளாகி நம்மையும் முட்டாளாக்குவார் என்ற ஆத்திரம் தலைக்கேறியது அபிராமிக்கு. படிப்பு தான் அவளுக்கு முன்னபின்ன ஆட்டம் காட்டியதே ஒழிய வீட்டு நிலவரம், தோட்ட நிலவரம் எல்லாம் அவளுக்கு அத்துப்படி. எவ்வளவு வரவு, செலவு என்று நன்றாகவே தெரியும்.
அம்மா கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய தங்கச் செயின் மட்டும் தான். அதுவே சித்திகள் கழுத்தில் ஒரு பிடி இருக்கும். அம்மாவிடம் கேட்டால் நான் எங்க போறேன். அதுவுமில்லாம கட்டுக் கழுத்திக்கு எதுக்கு நகை அலங்காரம் என்பார்.
சரி, அவருக்குதான் எடுக்க வேண்டாம். வயதுக்கு வந்த பெண்கள் இருவர் இருக்கிறோமே. எங்களுக்காவது எடுத்துப் போடலாம்ல என்று கேட்டால், எல்லாம் கல்யாணத்துக்கு செய்வாங்க என்று விடுவார்.
சித்தப்பாக்கள் இருவருக்குமே தலா இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே. மூத்தவருக்குதான் இரண்டு பெண், ஒரு ஆண்.
மூன்றாவது அரவிந்தன் பிறக்காமலிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பது அவர்களது பலநாள் யோசனை. அண்ணனும் உயிரோடில்லாமல் போக, வளத்தோம், படிக்க வச்சோம், திருமணம் செய்து கொடுத்தோம் என பெண் பிள்ளைகளுக்கு சொத்து இல்லை என்று சொல்லிவிடலாமே. அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவனுக்கும் பங்கு கொடுத்தே ஆகவேண்டும்.
அக்கா, அண்ணி என்று கொழுந்தன்களும் கொழுந்தன் மனைவிகளும் குழைந்துவிட்டால் போதும் இந்துமதியை சரிக்கட்டிவிடலாம்.
“அண்ணி… நாளைக்கி மாப்பிள்ளை வீட்டாளுங்க வராங்க. இப்போ ஜவுளிக் கடையில இருக்காங்க. எவ்வளவுக்கு பட்டு எடுக்கணு கேக்குறாங்க!” பெரிய சித்தப்பா பரந்தாமன் வந்து கேட்க, இவள் தான் விக்கித்துப் போனாள்.
மாப்பிள்ளை யார் என்று சொல்லவில்லை. எந்த ஊர், என்ன பேர் எதுவும் தெரியாது. ஃபோட்டோ கூட காட்டவில்லை. சும்மா பெண் பார்க்க வருவது என்றால் கூட, பட்டு எதுக்கு எடுக்க வேண்டும்.
அபிராமி மனதிற்குள் நினைத்ததை இந்துமதி வாய்விட்டு, “பட்டு எதுக்கு தம்பி?” என்று கேட்க,
“என்ன அண்ணி இப்படி கேக்குறீங்க? நிச்சயப் பட்டு எடுக்க வேண்டாமா? மாலதி உங்ககிட்ட சொல்லலையா?” என்றவர் உடனே, “மாலதி…” என்றார் அறைக்குள் பார்த்து.
அவரும் வெளியே வர, “அண்ணிகிட்ட நீ வெவரத்தை சொல்லலியா?”
“நீங்க சொல்லியிருப்பீங்கனு நெனச்சேங்க! உங்க அண்ணிகிட்ட சொல்லிட்டு தானே எதுனாலும் எங்களுக்கே அண்ணனும் தம்பியும் சொல்லுவீங்க?” என்றார் மேம்போக்காக.
“என்ன பொம்பள நீ? இப்ப பாரு அண்ணிக்கு விஷயமே தெரியல” என்று அதட்டுவது போல் அதட்டினார்.
“இப்ப என்ன? நானும் புருஷோத்தமனும் மாப்பிள்ளையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டோம். ஒரு பிரச்சினையும் இல்ல.”
“தம்பி மாப்பிள்ளை ஃபோட்டோ கூட காட்ட வேண்டாமா அவகிட்ட!”
“அதெல்லாம் நாளைக்கி நேர்லயே பாத்துக்கட்டும். நாங்க மாப்பிள்ளையப் பாத்துட்டோம். அவங்கள விசாரிக்க விடக்கூடாதுன்னு தான் உடனே நிச்சயம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம். அவங்க விசாரிச்சா நம்ம பிள்ளைக்கு இன்னொருத்தன் லெட்டர் கொடுத்ததெல்லாம் வெளில வரும்!” என்றுவிட்டு அகன்றுவிட்டார்.
‘அடப்பாவிகளா! என்னமோ நான் காதலிச்ச மாதிரியும், ஊரவிட்டு ஓட பிளான் போட்ட மாதிரியும், அதை மறச்சு வெளியே தெரியாம கல்யாணம் பண்ற மாதிரியுமில்ல இருக்கு.’ உள்ளுக்குள் ஆத்திரத்தில் குமைந்து போனாள் அபிராமி. எதுவும் பேச முடியவில்லை. இதுவரை அவர்கள் எடுக்கும் முடிவுக்கே தலையாட்டி பழகிவிட்டனர்.
*****
“அக்கா!” என்று அழைக்க, தம்பியை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது கையில் குருபிரசாத் விட்டுச் சென்ற ஃபைல்.
கண்ணையன் சாப்பிட்டு வரவும் குரு எழுந்து கொண்டான்.
இவர்கள் மூவரையும் பார்த்த கண்ணையனுக்கு ஏதோ நிலமை சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. இவள் முகம் வேறு சரியில்லை. அரவிந்தன் கையில் ஏதோ ஃபைல். ஆஸ்பத்திரி பெயர் போட்டு இருக்க, ஒரு வேளை சக்திக்குதான் விபத்தால் ஏதும் பெரிய பிரச்சினையோ என்ற சந்தேகம் கண்ணையனுக்குள்.
“என்னம்மா… நம்ம புள்ளைக்கு எதுவும் பிரச்சினையா?” பதட்டமாகவே கேட்டார். எப்பொழுதும் இவள் மீதும் சக்தி மீதும் அக்கறை எடுத்துக் கொள்வார் தான். அந்த உரிமையில் கேட்க, ‘பிள்ளைக்கு பிரச்சினைதான். ஆனால் சக்திக்கு இல்லை’ என உள்மனம் சொல்லியது.
“இல்லண்ணா… இது வேற விஷயம். நீங்க இன்னைக்கி சேல்ஸ்க்கு கிளம்புங்க” என்று சொல்ல தன்னை கிளம்பச் சொல்வது கண்ணையனுக்குப் புரிந்தது. அரவிந்த் உடன் இருப்பதால் இவரும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
தள்ளு வண்டியில் செடிகளை எடுத்துக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிவிட்டார்.
இன்றைக்கு நர்சரியை திறந்து வைக்கும் மனநிலையில் இவளும் இல்லை. சற்று முன் தெரிந்து கொண்ட உண்மையின் அதிர்ச்சி மனதை அழுத்த தலை பாராங்கல்லாய் கனத்தது.
“மேம்… பெர்த் டே ஃபங்ஷனுக்கு ரிட்டன் கிஃப்ட் கொடுக்க மொத்தமா ஐநூறு பூச்செடி வேணும். அப்படியே சீட் பால்ஸும் (seed balls) பாக்கெட்ல பேபி நேம் போட்டு வேணும். எப்ப நர்சரிக்கு வரலாம்” எனக்கேட்டு வந்த கைபேசி அழைப்பைக் கூட மறுநாள் வரச்சொல்லி தவிர்த்தாள்.
சீட் பால்ஸ் என்பது மண், இயற்கை உரம், விதைகள் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாகச் செய்து காயவைத்து, பிறகு நிலத்தில் போடுவது. அந்தக் காலத்துல நல்ல வீரியமான காய்கறி, பழ விதைகள சாம்பல்ல புரட்டி, பூச்சி அரிக்காம எடுத்து பாதுகாத்து வைப்பாங்க. இந்த முறை தான் இப்பொழுது குழந்தை உற்பத்திக்கும் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்கள் பயன் படுத்துகின்றன.
தன்னால் அவளது வியாபரம் கெடுவதும் குருப்பிரசாத்திற்கு தெரிந்தது. கண்ணையன் கிளம்ப குருவும் கிளம்பினான்.
“சீக்கிரம் முடிவு சொல்லுங்க. ரொம்ப டைம் இல்ல” என்று சொல்லிச் சென்றவன் குரலில் மட்டுமல்ல கண்களிலும் ஜீவனில்லை. ஏனோ அந்த கண்களை அவளுக்கு அப்படிப் பார்க்கவும் மனசுக்கு ஒப்பவில்லை.
அரவிந்தன், ஃப்ளாஸ்க்கில் மீதி இருந்த டீயை ஊற்றி இவளிடம் நீட்டினான். மறுக்கத் தோன்றவில்லை. அவளுக்கும் அப்போதைக்குத் தேவையாயிருந்தது. வாங்கிக் கொண்டாள்.
“நான் மூத்தவனா பிறந்திருக்கலாம் க்கா” என்றவனைப் பார்த்தவள் இதழ்களில் வெற்றுச் சிரிப்பு.
“பிறந்தா மட்டும்?” என்றாள் டீயை பருகியபடி.
“நான் அவங்கள எதுத்து கேள்வி கேட்டுருப்பேன்லக்கா?”
“இப்ப மட்டும் கேட்காமயா இருக்க? சொத்து தருவாங்கனு நினைக்கிற?”
“ப்ச்ச்… சொத்து இங்க பிரச்சினை இல்லைக்கா.”
“ஆனா, எல்லாருக்கும் சொத்து தானடா பிரச்சினையா இருந்தது. சக்தியோட பிறப்பு உட்பட சொத்துக்காகத்தானே? எல்லாரும் சுயநலமா இருக்கும் போது நம்ம உரிமையை மட்டும் எதுக்கு விட்டுக் கொடுக்கணும்.”
“உங்க வாழ்க்கைல முக்கியமான கல்யாண முடிவை அவங்க எடுக்கறப்ப எனக்கு விபரம் தெரியலை.”
“அட போடா!” என சலித்துக் கொண்டவள்,
“நடக்கணும்னு விதி இருந்திருக்கு. நடந்திருச்சு. அந்த வயசுல எனக்கும் அவ்வளவுதான் தைரியம். சும்மா வாய் பேச முடிஞ்சதே ஒழிய காரியம் சாதிக்க முடியல. தெரியலையும் கூட. அப்பாவ அப்பதான் ரொம்ப மிஸ் பண்ணினேன். அவங்க நினச்சதத் தானே நடத்துனாங்க!”
“அந்த வயசுல உன்னால மட்டும் என்னக்கா பண்ணிருக்க முடியும்?”
“அதை விடுடா… போனதைப் பத்தி பேசி பிரயோஜனமில்லை” என்றவள் மடியில் கிடந்த ஃபைல் பாராங்கல்லாய் கனத்தது.
குரு பேசியதை வைத்து ஒரு விஷயம் மட்டும் இவளுக்குத் தெளிவானது. இவள் பயந்தது போல் பிள்ளையைக் கேட்டு அவன் வரவில்லை என்பது. அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஆசுவாசம் கொடுத்தது. அவன் இவளைத் தேடி ஊர் வரை போயிருக்கிறான் என்றதும் அவளது முதல் பயமே பிள்ளையைத் தன்னைவிட்டு பிரித்து விடுவானோ என்பதுதான்.
ஆனால். ஜெனடிக் ஃபாதரால் லீகல் ஃபாதராக முடியாது என்பது புத்திக்கு தெரிகிறது. (Genetic father ≠ Legal father.) பெற்ற மனம் ஏற்க மறுக்கிறது. உயிரணுவோ, கருமுட்டையோ தானம் கொடுக்கும் பொழுதே அந்த குழந்தை மீதான அத்தனை உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்பதுதான் சட்டம்.
“அக்கா… உனக்கு அந்தப் பையனைப் பாக்கணும்னு தோணுதா?” என்ற தம்பியை கேள்வியாகப் பார்த்தாள்.
சற்று நேரம் அமைதி அவளிடம். “தெரியலடா… ஆனா உண்மை தெரிஞ்ச பின்னால, சக்திக்கு ஆக்சிடன்ட் ஆன அன்னைக்கி ஹாஸ்பிடல்ல என் பக்கத்துல தானே உக்காந்திருந்தான். சரியா பாக்கலையேன்னு மனசு ஒரு மாதிரி இருக்கு. அப்பக்கூட மாஸ்க் போட்டிருந்தான். இவர் வந்தவுடனே வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாரு.”
“சக்திக்கு ஆக்சிடன்ட்னு பதட்டமா வந்ததால நானும் சரியா கவனிக்கலக்கா. எனக்கும் பாக்கணும் போல இருக்கு!”
“அவருக்கு என்னவோ அதுதானடா எனக்கும். எந்த உரிமையும் இல்லைல?” தம்பிக்கு பதில் சொன்னாலும் மனதில் பாரம் ஏறத்தான் செய்தது.
‘சுமந்து பெற்றால் தான் பாசம் வருமா என்ன? அப்படிப் பார்த்தால் அப்பாக்களுக்கெல்லாம் பிள்ளைகள் மீது எப்படி பாசம் வருகிறது. பெண்களாவது பத்து மாதம் ஊனோடு உயிராக சுமந்து வலியெடுத்து பெத்து எடுக்க என் பிள்ளை என்ற பாசம் தன்னால் வந்துவிடுகிறது. ஆனால், ஆண்களுக்கு படுக்கை சம்பந்தம் தவிர பிள்ளைகளோடு பிசிக்கல் அட்டாச் மென்ட் என்று எதுவும் கிடையாது. என் பிள்ளை என்கிற எமோஷனல் அட்டாச்மென்ட் மட்டும் தானே. அப்படித்தானே இப்பொழுது எனக்கும். எமோஷனல் அட்டாச் மென்ட். அப்படியானால் அதே எமோஷனல் அட்டாச்மென்ட் அவனுக்கும் சக்தி மீது இருக்கும் தானே என்றவுடன், அன்று இரவு சக்தியை மூன்று முறை வந்து பார்த்து சென்றான் என்று செவிலி கூறியது நினைவிற்கு வந்தது. “அந்த அங்கிள் தான் பாத்ரூம் போக ஹெல்ப் பண்ணாங்கம்மா!” சக்தியின் குரல் இப்பவும் காதோரம் ஒலிக்க, சிந்தனைக்குள் சிறு அதிர்வு.
“என்னக்கா முடிவு பண்ணிருக்க?” அரவிந்தன் குரல் அவளை கலைக்க, கண்களில் கலக்கத்தோடு பார்த்தாள்.
“தெரியலடா?” குழப்பத்தில் இருந்தவள் பதிலாகத் தெரிய,
“ரொம்ப டைம் இல்லக்கா. அந்தப் பையனோட கண்டிஷன் அப்படி. எத்தனை நாளைக்கி மருந்து மாத்திரையிலேயே தாக்குப் பிடிப்பான்” என்றவனை வேதனையோடு ஏறிட்டுப் பார்த்தவள்,
“சக்தி தாங்குவானாடா?” என்றவள் வார்த்தை பிசிறு தட்டியது. இவள் கேட்டதிலேயே இவளுக்கு சம்மதம் எனப் புரிந்தது.
“அந்தப் பையன ஸ்கூல்ல ரெண்டு தடவை மாஸ்க்கோட பாத்திருக்கேன். ஒரு தடவை சக்தி அவனுக்கு ஜுஸ் கொடுத்ததுக்கு கூட குடிக்க மாட்டேனுட்டான். ஆக்சிடன்ட் ஆன அன்னைக்கி ஃபோன் கூட ஸ்பீக்கர்ல போடச் சொல்லி தான் பேசினான். வாய்கிட்ட வச்சு பேசல. பத்து வயசுடா. ஓடி ஆடி விளையாடற வயசு. எதொன்னையும் பாத்துப் பாத்து பண்ணனும்ல. சக்தி, மூனு நாள் படுக்கையில இருந்ததுக்கே நம்மால தாங்க முடியல. அவருக்கு எப்படி இருக்கும். நம்ம சக்தியப் பாரு. சாப்பிடைல கை கழுவக்கூட சொன்னாதான் செய்வான். ஆனா அந்தப் பையன் எதை தொட்டாலும் உடனே கை கழுவணும்ல. மத்தவங்க கிட்ட நெருங்கி உட்காரவோ பேசவோ முடியாதுல்ல. எப்படிடா நம்ம குடும்பத்துல யாருக்கும் அப்படி இல்லையே” அவள் பேசப் போச தொண்டை அடைத்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
“அக்கா, சில வியாதிக்கெல்லாம் காரணமே கிடையாது. இது ஜெனடிக் இல்ல. நீ தேவையில்லாம மனசப் போட்டு குழப்பிக்காதே. நம்ம சக்தி இல்ல. எவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்கான்!”
“டேய்… அவரைப் பாத்தயில்ல. அப்படியிருந்துமா இப்படி கேக்குற?” என்றதில் அரவிந்தனுக்கும் புரிந்தது. சக்தி, குருப்ரசாத்தின் மறு உருவம் என்பது.
அரவிந்தன், “அக்கா… உனக்குப் பிரணவ பாக்கணும்னு தோணுதா?” என்று மீண்டும் கேட்க,
“எனக்கு அந்த உரிமை இருக்காடா? நான் பயந்ததே எங்கே என் பிள்ளை எனக்கு வேணும்னு சக்தியக் கேட்டுருவங்களோனு தான்!”
“அக்கா… தேவையில்லாத பயம். அப்படியெல்லாம் கேட்க முடியாது. டோனருக்கு யாருக்கு கொடுத்தோம்னு கூடத் தெரியாது. சட்டத்துல பிள்ளையக் கேட்கவோ, உரிமை கொண்டாவோ இடமில்லை. பயப்படாதே.”
“அவருதான் டோனர் இல்லைனு சொன்னாரே? அவர் சம்மதமில்லாம நடந்திருக்குன்னு சொன்னார்ல.”
“நீ மட்டும் என்ன டோனரா. உன் சம்மதத்தோடையா இது நடந்திருக்கு. இந்த நிமிஷம் வரைக்கும் இந்த விஷயம் உனக்கும் தெரியாதுல்ல. அவருக்கானது தான் உனக்கும். அவருக்கு உரிமை இருக்குனா உனக்கும் இருக்கு. அவருக்கு இல்லைனா உனக்கும் இல்லை.”
குரு கொடுத்த இன்னொரு ஃபைலில் இருந்தது அபிராமி, பிரணவுக்கான டிஎன்ஏ ரிப்போர்ட். அத்தோடு குருவுக்கும், சக்திக்குமானதும் சேர்த்து.
“அரவிந்தா… ஒரு தடவை அந்தப்பையனை” என சொல்ல வந்தவள், சட்டென நிறுத்தி… “பிரணவ பாத்துட்டு வரலாமா?” என்றவளுக்குள் ஏதோவொரு இனம்புரியா தவிப்பு.
காரைச் செலுத்தியபடியே, “சக்திபாலன்” என மெலிதாக சொல்லிப் பார்த்த குருப்பிரசாத்தின் இதழ்களில் வரண்ட புன்னகை. கண்களில் ஈரப்பசை.





Nice
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Evalo kanamana padhivu…abi ku teenage le nadakarthu ellame practical…en than po ungaluku mattum oru satamo,theriyala…very interesting
பெண்களேட திறமையை அவங்களுக்கே தெரிய விடாம பண்றதுதான் ஆண்களோட திறமையே…
அதுல பெண்களும் உடந்தை …
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Epdy ma ipdy eluthuringa?engalala entha kelviyum keka mudiyathapadi bathilum story line laye kudukurinkalae?apdiye kelvi keka thoninalum suspence nu soliringa
Wonderful writing skill
❤️❤️❤️❤️❤️ me happy ma 🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Good
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Hi 😊😊😊
Hi ma ❣️
அபி குடுமபம் அவள் அம்மாவை அடிமையா வைத்து இருப்பதை போல அவளையும் வைக்க பாக்குறாங்க,என்ன உறவுகளோ ,எல்லாம் பணத்துகாக தானே.
பணம் தான் இங்கு எல்லாமே…
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
SEMMA SUPER ,ELLA UD UM 2 DAYS LA READ PANNUNEN ,
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫