arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 14

என் வீட்டு தோட்டத்தில் 14

visibility 16
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

14

 

“ச்சிலக்க!”

 

“…”

 

“ச்சிலக்க!”

 

“…”

 

“ஷைலு!”

 

“…”

 

“ஷைலஜா! உசே… மிஸ்டர்ஸ் ஷைலஜா குருப்ரசாத்காரு!”

 

விதவிதமாய் அழைத்துப் பார்த்தும், அவனது ஆசைக்கிளி அவனுக்கு முகம் காட்டாமல் முதுகு காட்டிப் படுத்திருந்த விதமே சொல்லியது… இந்த மாதமும் அவளது எதிர் பார்ப்பு பொய்த்துப் போனதென்று.

 

கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்தான். இனி இவள் தெளிந்து எழ ஒரு வாரமாவது ஆகும். முன்பெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் தெளிந்து விடுவாள். 

 

ஒவ்வொரு மாதமும் இது நடப்பதுதான். இவன் தான் எப்படி இவளை மீட்டெடுப்பதென ஒவ்வொரு முறையும் அல்லாடிப் போவான். 

 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல்தான் முதல் குழந்தை இளம் தம்பதிகளான குருப்பிரசாத் மற்றும் ஷைலஜாவுக்கு நிலைக்காமல் போனது. அதுவும் பெண் குழந்தை. 

 

“மா இன்ட்டி மகாலட்சுமிரா” (நம்ம வீட்டு மகாலட்சுமிடா) என ஆறடி‌ ஆஜானுபாகுவான திருவவேங்கடம் கூட ட்ரேயில் கிடத்தப்பட்டிருந்த ஜீவனிழந்த கையடக்க சிசுவைப் பார்த்து இடிந்து போய் உட்கார்ந்தவர் தான். யாரிடமும் பேசவில்லை. ஜமுனாவை கேட்கவே வேண்டாம். அதைப் பார்த்ததும் படபடப்பில் கண்களை இருட்டிக் கொண்டுவர மயங்கியவர் தான். அவரும்‌ அதே மருத்துவமனையில் ஒரு படுக்கையில் இடம் பிடித்தார். 

 

இவனுக்கோ குழந்தையின் இழப்பு ஒரு புறம் என்றால் இதிலிருந்து அவனது சிலகனி எப்படி மீட்டெடுப்பது என்பதே பெரும் போராட்டமாகப் போயிற்று.

 

முழுதாக பத்து மாதமாகட்டும் பாவா. பிறந்த பிறகு நமக்கு இல்லையென்று போனால் கூட பரவாயில்லை. இப்படி வம்படியாக நாமே அதை அழித்தது போல் வேண்டாமே என எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள்.

 

உண்மை நிலவரம் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. மூளை வளர்ச்சி இல்லை, பிறந்தாலும் பிழைப்பது அரிது என உண்மை தெரிந்த பிறகு வயிற்றில் சுமக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் வேதனை. அது கர்ப்பத்தை சுமக்கும் அவளுக்கும் நல்லதல்ல என்றே இந்த முடிவுக்கு வந்தனர். அப்படியே அது பிறந்து சில நாட்களே உயிரோடிருந்தாலும் எப்பொழுது நம்மை விட்டுப் போகுமோவென கண் முன் வைத்துக் கொண்டே அது இன்னும் நரகவேதனை‌. அவளது உடல்நிலை, மனநிலை இரண்டையும் யோசித்துதான், மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தது.

 

விஷாலிதான் அனைவரையும் ஒரு வழியாகத் தேற்றிக் கொண்டு வந்தாள். 

 

“குழிப்பிள்ளை கூடிய சீக்கிரம் கையிலன்னு சொல்லுவாங்க. அடுத்து உடனே குழந்தை பிறக்கும்டா!” எல்லாம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்தபிறகு, மகனுக்கு ஆறுதல் சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டார் ஜமுனா. 

 

ஆனால் அடுத்துடுத்து அவர்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு மாதமும் பொய்த்துதான் போனது.‌

 

குழந்தையை எடுத்த பிறகு உடம்பு தேறட்டும் என ஆறு மாதம் தான் சும்மா இருந்தாள். அடுத்து ஒவ்வொரு மாதமும் எதிர்பார்க்கத் துவங்கினாள்‌. 

 

முதல் முறை கருவுற்றது திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில். எதிர்பார்க்கவே இல்லை. தேடாமல் கிட்டிய செல்வம் போல் அத்தனை சந்தோஷம் அவளுக்கு. 

 

ஆனால், இப்பொழுது ஒவ்வொரு மாதமும் குடும்பமே எதிர்பார்ப்பது போல் ஒரு மாயை. உருவாகாமலே இருந்திருந்தால் கூட சின்ன வயசுதானே, பொறுமையாக பெற்றுக் கொள்ளட்டும், இப்பொழுது என்ன அவசரமென யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. 

 

ஆனால் கருவாகி, உருவாகி இதோ இன்னும் மூன்று மாதத்தில் நம் வீட்டில் மழலைச் சத்தம் என ஆவலாக எதிர்பார்த்திருந்த தருணத்தில், இருந்ததும் இல்லையென்று போனதால் அந்த ஏமாற்றத்தை இட்டு நிரப்ப ஆவலாக அடுத்ததை விரைவில் எதிர்பார்த்தனர்.  

 

வெற்றியோ, சந்தோஷமோ அது நீண்ட நாள் நினைவில் நிற்பதில்லை. ஆனால் ஒரு துக்கமோ, தோல்வியோ நடந்துவிட்டால் அதை ஈடுகட்ட மீண்டும் ஒரு‌ வெற்றியையோ, சந்தோஷத்தையோ மனிதமனம் உடனே எதிர்பார்ப்பது இயல்பு தானே. 

 

“ரெண்டு பேரும் ப்ளட் ரிலேஷனா? இல்ல உங்க பேரன்ட்ஸ் அவங்களுக்குள்ள ரெத்த சொந்தமா?” மகப்பேறு மருத்துவரின் கேள்விக்கு, 

 

குரு, “ஷைலஜா, என் அத்தை பொண்ணு டாக்டர். அப்பாவோட தங்கச்சி பொண்ணு!” என்றான்.

 

“அதனால கூட சக்ஸஸ் ஆகுறது தள்ளிப்போலாம்” என்றார் மகப்பேறு மருத்துவர். 

 

ஷைலஜா, திருவேங்கடத்தின் தங்கை காஞ்சனாவின் மகள். இவள் பிறந்த சிறிது நாட்களுக்கெல்லாம் உடல் நலக் குறைவால் அவளது அம்மா இறந்துவிட, ஷைலஜாவின் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஷைலஜாவை அவளது அம்மா வழி பாட்டி, அதாவது திருவேங்கடத்தின் தாயார், மருமகனிடம் பேத்தியைக் கொடுக்க மறுத்துவிட்டார். அந்தக்காலத்திலேயே இன்ஜினியர் படித்தவர் ஷைலஜாவின் தந்தை. வெளி நாட்டு வாய்ப்பு வந்தது. இரண்டாது மனைவி, பிள்ளைகளோடு வெளிநாட்டில் அமோகமாக செட்டிலாகி விட்டார். இங்கிருந்த நிலபுலன்களை மகளுக்கே கொடுத்துவிட்டார். அதில் பாதி காஞ்சனாவின் பிறந்த வீட்டு சீராக வந்ததே. அதனால் அது மகளுக்கே என விட்டுவிட்டார். 

 

எப்போதாவது தாய் நாடு வந்தால் தந்தை கடமைக்காக விருந்தாளி போல் சித்தூர் வந்து மகளை பார்த்து செல்வார். தாய்ப்பாசம் மட்டுமல்ல அவளுக்கு தந்தைப் பாசமும் என்னவென்று தெரியாது. அவளும் அதை கண்டு கொள்ளவில்லை. பெற்றவர்கள் பாசம் அறிமுகமில்லாததால் அதன் இழப்பும் பெரிதாகத் தெரியவில்லை. ஒரு வேளை அம்மம்மா வீட்டில் கஷ்ட்டத்தை அனுபவித்திருந்தால் கூட பெற்றவர்கள் மீது ஏக்கம் பிறந்திருக்குமோ என்னவோ. மா இன்டி சிறு மல்லிச்செட்டு (எங்க வீட்டு மல்லிச்செடி) என அவளை மணக்க மணக்க உள்ளங்கையில் வைத்து தாங்கினர் அம்மம்மாவும், தாத்தாவும். 

 

போதாக்குறைக்கு சென்னையிலிருந்து விடுமுறைக்குச் செல்லும் பொழுதெல்லாம் மாமா, அத்தை மற்றும் மாமா பெற்ற ரத்தினங்களான விஷாலியும், குருப்பிரசாத்தும் சேர்ந்து அவளைச் சீராட்டினர்.   

 

இவளது திருமணத்திற்கு கூட ஷைலஜா அப்பா வரவில்லை. செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று மட்டும் ஃபோனில் கேட்டார். யாருக்கு வேணும்‌ உன் காசு என திருவேங்கடம் மறுத்துவிட்டார். அவர் நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் வீண் ஆராய்ச்சி. நாற்பதுகளின் பெற்றோரால் அறுபதுகளில் வளர்க்கப்பெற்ற சராசரி ஆண் மகன் ஷைலஜாவின் தந்தை. 

 

தங்கை இறந்த பொழுதே மகனுக்கு தான் ஷைலஜா என திருவேங்கடம் முடிவு செய்துவிட்டார். அதனால் தான் குருவுக்கு சீக்கிரம் திருமணம் ‌முடிக்க வேண்டும் என சாதகத்தில் இருப்பதாகக் கூற, வயதைப் பற்றியோ, படிப்பைப் பற்றியோ யோசிக்கவே இல்லை.

 

கிட்டத்தட்ட ஷைலஜாவுக்கு அவனைவிட ஒரு வயதுதான் குறைவு. குருவுக்கு இருபத்தியிரண்டின் இறுதி. அவளுக்கு இருபத்தியொன்றின் தொடக்கம். அவளுக்கு. உள்ளங்கையில் வெண்ணெய் இருக்க, உடனே மாங்கல்யம் தந்துநானே தான்.  

 

இது வாலிப வயது என்பது போல் காதலும், காமமும் சரிவிகிதத்தில் இளமையின்‌ உச்சத்தில் கொலுவீற்றிருக்கும் வயது இருவருக்கும்.‌ பகலிரவு வேறுபாடின்றி திகட்டத் திகட்ட தித்தித்தது இனிய இல்லறம். 

 

உடனே குழந்தையும் உருவாக, இவனுக்குதான் வெட்கமாய்ப்போயிற்று. இன்னும் மீசை கூட முழுதாக முளைக்கவில்லை. 

 

“உசே… ஏன்டே. நாக்கு சிக்கேஸ்த்துந்தே!” (அடியேய்… என்னடியிது… எனக்கு வெக்கமாயிருக்கே) அவளுக்குப் பதில் இவன் தான் முகத்தை அவள் தோளில் புதைத்து வெட்கப்பட்டான். 

 

“அச்சோ… நா… பங்காரு பாவா” என நெட்டி முறித்தாள். வழக்கமாக ஆண்களைவிட பெண்கள் சீக்கிரம் மனமுதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆண்களைவிட பெண்களின் மனப்பக்குவம் முன்னோக்கிச் செல்கிறது. 

 

காலம் இனிமையாய்க் கரைந்தோட, யார் கண் பட்டதோ… யாரோ என்ன விதிதான்! ஏழாம் மாதத்தில் வளர்ச்சியில்லை என குழந்தையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். 

 

ஒருவழியாக அதிலிருந்து மீண்டு அனைவரும் வழமைக்குத் திரும்ப ஷைலஜா மட்டும் அதிலிருந்து மீண்டெழ நாள் எடுத்தது. தனக்கு பிள்ளைப் பாசமும் பொய்த்துவிடுமோ என்ற பயம். 

 

இதோ மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இதற்கிடையில் நாள்கணக்கில், மாதக்கணக்கில் இவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்தது நான்கு. சிறு வயதுதான் என்றாலும் ஒரு பிரசவம், நான்கு கருச்சிதைவு என உடல் உழன்று எடை கூடிப்போயிற்று. ஏற்கனவே அவள் கொழுக் மொழுக் பங்கனப்பள்ளி தான். கருமுட்டை வளர்ச்சிக்கென ஹார்மோன் மாத்திரைகள் அடிக்கடி‌ மருத்துவமனை வாசம் என அவள் உடலும், மனமும் வெகுவாக உழன்டுபோயிற்று. 

 

அவளுக்கு மாதாந்திரம் நினைவிருக்கிறதோ இல்லையோ இவனுக்கு நினைவிருக்கும். தேதியை எதிர்பார்த்து இவள் என்ன ஆவாளோ என இவன் தான் தன்னை முதலில் மனதளவில் தயார் படுத்திக் கொள்வான். 

 

இந்த மாதமும் அதே வழமை. தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, “உசே… ச்சிலக!” தோள் தொட்டு உலுக்கினான்.

 

திரும்பியவள் கண்கள் சிவந்திருந்தது. பக்கத்தில் அமர்ந்து தலை கோதியவன் மடி‌மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டு, இடுப்பை கட்டிக் கொண்டாள்.

 

“செப்பு பாவா!” என்றாள் பொய்யாய் சிரித்து. அதுவும் அவள் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்து இவன் முறைத்துப் பார்த்ததனால்.

 

“கிளம்பு… வெல்லி முகூர்த்தம் பெட்டேசி ஒஸ்த்தோம்!” (முகூர்த்தம் குறிச்சிட்டு வரலாம்) என்றவனை‌ அன்னார்ந்து பார்த்தாள். அவன் புருவம் தூக்கி கண்சிமிட்டி சரசம் கொஞ்ச, இப்பொழுது இவள் முறைத்துப் பார்த்தாள். 

 

“பாவா நின்னு…” (பாவா உன்னை) என்று தோளில்‌ அடித்தவளை, அணைத்து கட்டிக் கொண்டான். 

 

ஒவ்வொரு மாதமும் இவளை சோதித்து, மருத்துவர் குறித்துக் கொடுக்கும் ஓவுலேஷன் பீரியட் (ovulation period – கருத்தரிக்கும் நாட்கள்) தான் இவனுக்கு முகூர்த்த நாட்கள். இவள் மனநிலையை மாற்றவே இவன் இப்படி கிண்டல் செய்கிறான் என்பது நன்றாகத் தெரியும். 

 

இருந்தும், “எலா பாவா இலா நவ்வுத்துன்னாவு?” (எப்படி பாவா, இப்படி சிரிக்கிற) என்றவள் குரலில் வருத்தம் ஏகாதிபத்தியம் செய்தது. 

 

“உசே… அந்தரிக்கு பெல்லி ரோஜு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு மாத்திரமே ஒக்க முகூர்த்தமே பெட்டேஸ்த்தார்லே. மனக்கி எவ்ரி மன்த் முகூர்த்தாலே. ரெடி ஆவு. வெல்லொஸ்த்தாம்!” (எல்லாருக்கும் கல்யாணத்தப்ப முதல் ராத்திரிக்கு மட்டும் தான் முகூர்த்தம் குறிப்பாங்க. நமக்கு ஒவ்வொரு மாசமும் டாக்டர் முகூர்த்தம் குறிச்சு கொடுக்குறாங்க. சீக்கிரம் கிளம்பு. போய்ட்டு வரலாம்) என்றவனை இதழ்கள் புன்னகைக்க, கண்கள் பொங்க பார்த்தாள். இவனது இந்த மனப்போக்குதான் ஒவ்வொரு முறையும் அவளை தொய்ந்துவிடாமல் தூக்கிப் பிடிக்கிறது. 

 

அவனையே பார்க்க, ஆதரவாக அணைத்தவன், “லவ் யூ ச்சிலக்க” என்றான். 

 

“குருகாரு!” என்றாள் தொண்டையடைக்க. 

 

“செப்பின மாட்டனே திரிகி செப்படமே… அதே காதா சிலுக்க பனி! மரி இப்புடு நுவ்வேம் செப்பாலி? நேனு செப்பின மாட்லனே… நா முன்னே திரிகி செப்பு சூட்டாம்!” (சொல்றதை திருப்பி சொல்றதுதானு கிளியோட வேலை. இப்ப நீ என்ன சொல்லணும். எங்கே நான் சொன்னத திருப்பி சொல்லு பாக்கலாம்.)

 

“லவ் யூ பாவா!” என்றவள் இதழ்கள் தன்னால் விரிந்தது அவனுக்காக. 

 

ஏதோ சற்று மனநிலை மாற தயக்கமாக, “பாவா!” என்றாள். 

 

“செப்பு…‌ஏன்ட்டி பாவக்கி?” 

 

“செப்தா… கோவப்படொக்கே!” (சொல்றே…‌ கோவப்படக்கூடாது) மடியில் தலை வைத்திருந்தவள் எழுந்து அவனை விட்டு சற்றே தள்ளி அமர்ந்து கொண்டாள். ஆரம்பிக்கும் முன்னரே வாய்தா வாங்கியவளை,

 

“முந்து செப்பு… சூஸ்த்தாம்!” (மொத சொல்லு… பாக்கலாம்) என்றான்‌ இவனும் பிடிகொடுக்காமல்.

 

கண்டிப்பாக இவனுக்குப் பிடிக்காத ஒன்றைத் தான் சொல்லப் போகிறாள். அது அவனறிந்ததும் கூட‌. கடந்த சில மாதங்களாக சாடை மாடையாக, நேரிடையாக, ஜமுனா மற்றும் விஷாலி மூலமாகக் கூட சொல்லிப் பார்த்துவிட்டாள். இவன் தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி அசைந்து கொடுக்க மறுக்கிறான். 

 

அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே தயங்கிய குரலில், “இல்ல… அந்த டாக்டர் சொன்னாங்கல்ல. மூனு வருஷமாச்சு. வேற மெத்தட்…” என்றவளை புருவம் சுருக்கி அவன் உருத்துப் பார்த்த பார்வையே கப்பென வாயடைக்க வைத்தது. அவள் ஆரம்பிக்கும் போதே இவனுக்கு விருப்பம் இல்லை என்பதை பார்வையாலே உணர்த்தினால் அதற்கு மேல் இவள் எப்படி பேசுவது. முகம் சுண்டிப் போயிற்று. 

 

“ஏற்கனவே இதப் பத்தி பேசாதேன்னு சொல்லிருக்கேனா?” என்றவனுக்கு உச்சபட்ச கோபம்.

 

“சூடு… கோவப்படொக்கு செப்பேனா? (பாரு… கோவப்படாதேன்னு சொன்னேனா) அந்த டாக்டர் என்ன சொன்னாங்க. இனி ஐ.யு.வி இல்லைனா ஐ.வி.எஃப் தான் நெக்ஸ்ட் ஸ்டெப்னு சொன்னாங்களா இல்லையா?” என்றாள் படபடவென. 

 

இந்தப் பேச்சை வளர்க்க விரும்பாதவன் போல, விருட்டென எழுந்து வெளியேறிவிட இனி அவனை‌ மலையிறக்க இவள் படும்பாடு பெரும்பாடு. சாமானியமாக தரையிறங்க மாட்டானே? 

 

ஏற்கனவே குழந்தைக்கான சிகிச்சை, அவர்கள் குறித்து கொடுக்கும் தேதிகளில் உறவு என தாம்பத்தியம் இயல்பான, இருவருக்குமான காதல் உணர்வுகளின் சங்கமம் என்பதை எல்லாம் கடந்து இப்பொழுதெல்லாம் குழந்தைக்காக என இயந்திரகதியாகிவிட்டது. இதில் குழந்தையையும் ஆராய்ச்சிக் கூடத்தில் ‌உருவாக்குவதென்றால் இவனுக்கு அதில் துளியும் உடன்பாடு இல்லை. 

 

“பாவா… செப்பேது வினு பாவா!” (சொல்றதக் கேளு பாவா) கோபமாகச் சென்றவன் பின்னாலே ஓடினாள். இவள் இறங்கி வரும் வேகம் பார்த்து ஜமுனாவே, “என்னடா‌?” என இவனைத்தான் கேள்வி கேட்டார். 

 

“எல்லாரும் அவளுக்கு இடம் கொடுத்து வச்சுருக்கீங்க. ஓவர் செல்லமாகிப் போச்சு!” அவளிடம் காட்டமாட்டாத கோபத்தை ஜமுனாவிடம் காட்டினான். 

 

ஜமுனா என்ன என்பது போல் புருவம் சுருக்கி சாடையில் அவளிடமே கேட்க, இவளும் கண்களை மூடித் திறந்து ஒன்றுமில்லை என கண் ஜாடையிலேயே தலை அசைத்தாள். 

 

“சம்பேஸ்த்தா… இத்தர்னி! (கொன்றுவேன்… ரெண்டு பேரையும்) அதென்ன லவ்வர்ஸ் மாதிரி உங்களுக்குள்ள கண் ஜாடை?” 

 

“உனக்கு பொறாமைடா… மாமியா மருமக அன்னியோன்யம் பாத்து.”

 

“ஆமா… உங்க அன்னியோன்யம் எதுலன்னு எனக்குத் தெரியாது. இவ எது சொன்னாலும் நீங்க தலையாட்டுங்க. என்னை தலையாட்ட வைக்கணும்னு மட்டும் எதிர்பாக்காதீங்க!” கோபமாகவே சொல்ல, ஜமுனாவும் மருமகளை இந்த முறை தீவிரமாகப் பார்க்க, 

 

“அதில்லத்தை… டாக்டர் சொன்னதை செப்பேனு. அவ்வளவுதான்!” என்றாள். அது தான் மகனுக்குப் பிடிக்காது என்று தெரியுமே. இருந்தாலும் மேலும் மேலும் கல் வீசிப் பார்ப்பது ஒன்றும் தப்பில்லையே. அசந்து மறந்து சம்மதித்து விட மாட்டானா என்ற நப்பாசை தான் இருவருக்கும். 

 

இவளது உடல் நிலையும் பார்க்க வேண்டும். எத்தனை இழப்புகளை உடலும் மனமும் தாங்கும். இதோ என சந்தோஷப்படக் கூட முடியாது. கனவு போல் கரைந்துவிடும். அடுத்து மருத்துவமனை, சிகிச்சை, மருந்து, ஓய்வு. மூன்று வருடங்களில் இதே வாடிக்கையாகி விட்டது. 

 

இதை காரணம் காட்டியே குருவிற்கு கல்லூரி வளாக நேர்காணலில் வந்த வேலையைக் கூட விடச் சொல்லிவிட்டார் திருவேங்கடம். சம்பாதிக்கறது எதுக்கு. சந்ததிகளுக்காகத்தானே. அது ஏற்கனவே போதும்கறளவுக்கு இருக்கு. முதலில் சந்ததி வரட்டும். அப்பறம் சம்பாத்தியத்தை பார் என மகனிடம் முடிவாகச் சொல்லிவிட்டார். எந்த டென்ஷனுமில்லாமல் மனம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக. 

 

இவள் உடல்நிலையை கருத்தில் கொண்டாவது மருத்துவர் சொல்லும் அடுத்த வழியை தேர்ந்தெடுத்தால் தான் என்ன என்பதே ஜமுனாவின் கேள்வியும் கூட. 

 

“இப்போ என்னடா. உங்க பிள்ளையத்தானே பெத்துக்க போறீங்க. அவதானே பெத்துக்க போறா? அவளுக்கும் உடம்பு உழன்டு போச்சுடா!” மகனிடம் பொறுமையாகக் கூற,

 

“ம்மா… பிள்ளைய ஆர்டர் கொடுத்து செஞ்சு வாங்குற மாதிரி வாங்கறது எனக்குப் பிடிக்கலம்மா. அது சொன்னா உங்களுக்கு புரியாது” என்றவனுக்கு எப்படி இவர்களுக்கு விளக்குவது என்று புரியவில்லை. உயிரும், உணர்வும் கலந்து இரத்தமும் சதையுமாக உருவாக வேண்டிய குழந்தை, எங்கோ ஆய்வுக் கூடத்தில் உருவாவது அவனுக்கு விருப்பமில்லை. 

 

ஆனால், விதி! என்ன செய்வது. அதுதான் நடக்க வேண்டும் என்றிருந்தால் அதை மாற்ற யாரால் முடியும். 

 

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என விதி இருப்பவர்களுக்கு கூட, விதியை மாற்றி எழுதும்‌ விஞ்ஞானம் வளர்ந்த பிறகு அது வரம் தானே? விதியை வெல்லும் மதியை ஏற்றுக்கொள்வது தானே புத்திசாலித்தனம். 

 

அடுத்தடுத்து வந்த மாதங்களும் ஏமாற்றத்தைத் தர, ஷைலஜாவின் பிடிவாதத்தின் முன் இவனது வீம்பு தளறத்தான் செய்தது. இறுதியில் இவன்‌ தான் இறங்கிவர வேண்டியிருந்தது. 

 

நல்ல கைராசி மருத்துவமனை என வம்சம் ஃபெர்டிலிட்டி‌ சென்டர் பரிந்துறைக்கப்பட்டது. திருமணமாகி பிள்ளைப்பேறின்றி கால் நூற்றாண்டைக் கடந்தவர்களுக்கு கூட அங்கு சென்ற சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது என புகழப்பட, இங்கு மருத்துவத்தை விட, மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் கை ராசிதானே பேசப்படும்‌. அதன்படி கைராசி பார்த்து வம்சம் ஃபெர்டிலிட்டி சென்டரில் விஜயலட்சுமி மகப்பேறு மருத்துவரை அணுகினர். 

 

மருத்துவத்தைப் பொறுத்தவரை நமக்கு ஒன்னு செட்டாகலைனா, செட்டானவங்க சொல்ற இடத்தை தான் அடுத்து நாம தேடிப் போவோம்‌. நான் அங்க பாத்தேன் சரியாச்சு, இங்க பாத்தேன் சரியாச்சு, அந்த கோவில் போங்க, அந்த பரிகாரம் பண்ணுங்க என யார் எங்கு போகச் சொன்னாலும் போவோம். எதை செய்யச் சொன்னாலும் செய்வோம். எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று. 

 

IUI முறை‌ (வீரியமிக்க உயிரணுக்களை ஆய்வகத்தில் சுத்திகரித்து, நேரடியாக பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவது) இவர்களுக்கு ஒத்து வராது என பார்த்தவுடனே சொல்லிவிட்டார். அது ஆணின் உயிரணுக்களில் வீரியம் குறைபாடு உள்ளவர்களுக்கு சாத்தியமாவது. 

 

இங்கு பிரச்சினை கருமுட்டை வளர்ச்சியடைவதில் தான். முழுதாக முதிராத கருமுட்டை தான் இங்கு பிரச்சினையே. அதனால் தான் கருத்தறித்தாலும் முழுமையாக கருப்பையில் பதிந்து வளற‌ முடியவில்லை. 

 

இவர்களுக்கு IVF முறையே பரிந்துறைக்கப்பட்டது. 

 

அதன்படி கருமுட்டை முழு வளர்ச்சியடைவற்கான ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டன. அவர்கள் எதிர்பார்த்த வெற்றி அதிலும் கிட்டவில்லை. ஸ்கேன் செய்து பார்த்ததில் சில மாதங்கள் தொடர் தோல்வியே. 

 

அவளைப் பொறுத்தவரை கர்பப்பை குழந்தையை தாங்கி வளர்க்கும் அளவிற்கு வலுவானதே. ஆனால் கரு முட்டை வலுவற்றது. 

 

அடுத்து அவர்களுக்கு கருமுட்டை தானம்தான் ஒரே வழி என பரிந்துரைக்கப்பட, அதற்கு ஷைலஜாவும் சம்மதிக்க வெகுண்டு விட்டான் குருப்பிரசாத். 

 

அவளுக்கு தன் உடல்நிலை நன்கு புரிகிறது. தன்னால் ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடியாது. ஆனால் சுமந்து பெற்றுக் கொள்ள முடியும். இத்தனை வருட சிகிச்சை தோல்வியில் இது கூடப் புரியாதா என்ன? கூகுள் ஆண்டவர் எதுக்கு இருக்கிறார். இது போன்ற சந்தேகங்களை தீர்த்து வைக்கத்தானே. (கதை நடக்கும் காலகட்டத்தில் நம்ம ஜெமினி, சேட்டு எல்லாம் இல்லை. அதாவது கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு)

 

“இப்புடு ஏன்ட்டி பாவா… மீ பிட்டனே‌ கன்னபோதுன்னானு. எந்துக்கு இந்தா கோபம்?” (இப்ப என்ன பாவா? உங்க பிள்ளையத்தானே பெத்துக்கப் போறேன்? எதுக்கு இவ்வளவு கோபம்) இது தான் அடுத்த வழி எனத் தெரிந்து பிறகு மீண்டும் இவள் முதலிருந்து துவங்க, 

 

“உசே… மாட்லாடக்கே… வெளியே போ ப்ளீஸ்! கண்ணு முன்னாடி இருந்தா சம்பேஸ்த்தா” (பேசாதடீ… தயவுசெய்து வெளியே போயிறு. கண்ணு முன்னாடி இருந்த கொன்றுவே) என்று கோபமாக கையில் இருந்த ஃபோனை சுவற்றில் விசிறியடித்தான். 

 

அவளோ பிள்ளைக்காக என எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தாள். மொத்தத்தில் அவன் பிள்ளையை அவள் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவில் மட்டும் தீவிரமாக இருந்தாள். 

 

*****

 

“என்னம்மா வேணும்?”

 

“ஏன் இட்லி, தோசை ஏதும் இங்க விக்கிறீங்களா?” 

 

“என்னம்மா… சும்மா வந்ததுலருந்து பாத்துட்டே இருக்கீங்க. என்ன செடி வேணும்னு கேட்டா நக்கல் பண்றீங்க?” கண்ணையன் பேச்சிலும் சிறு கோபம். 

 

“நீ தானே ஒரு தடவை வீட்டுப் பக்கம் வந்து கார்ட் கொடுத்த?” என்ற ஜமுனாவிடம், 

 

“வாராவாரம் சேல்ஸ்க்கு போறப்ப எல்லார் வீட்டு கேட்லயும் கார்ட் வைக்கத்தான் செய்வேன். நீங்க எந்த ஏரியாம்மா?”

 

“சாலி கிராமம் ப்பா. வீட்டு முன்ன பெரிய நாட்டு பாதாம் மரம் குடை மாதிரி இருக்குமே?”

 

“திருப்பதியில போய் மொட்டையடிச்சவனத் தேடுங்கற மாதிரி இருக்குமா நீங்க சொல்றது. எத்தனை வீட்டு முன்னாடி பாதம் மரம் இருக்கு! அதுல எந்த வீடு?” என்று கேட்க விஷாலி சிரித்துவிட்டாள். கண்ணையன் செய்த கிண்டலில் ஜமுனாவுக்கு கோபம் வந்தது. 

 

செடி வாங்க வந்தால் தானே செடியைப் பார்ப்பார்கள். ஜமுனாவும் குருவிடம் எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும் சகதியைப் பார்க்க அழைத்தும் போகவில்லை. இவராகப் போகிறேன் என்றாலும் அனுமதிக்கவும் இல்லை. 

 

விஷாலி சென்னை வந்திருக்க மகளைத் தாக்காட்டி, குறிஞ்சி க்ரீன்ஸ் அழைத்து வந்துவிட்டார். 

 

கண்ணையன்‌ மட்டுமே அங்கு இருந்தார். 

 

இன்று ஞாயிற்றுக்கிழமை. மகனோடு அபிராமி இங்குதான் இருப்பாள் என்று தெரிந்து தான் அம்மாவும் மகளும் மீன் மார்க்கெட் போவதாக சொல்லிவிட்டு காலையிலேயே இங்கு வந்தனர். 

 

ஃபோன் பண்ணி விசாரித்து விட்டுதான் வந்தனர். 

 

வண்டிச் சத்தம் கேட்டுத் திரும்ப, அபிராமிதான் மகனோடு பைக்கில் வந்து இறங்கினாள். 

 

ஜமுனா பார்வை சக்தி மீதிருக்க, விஷாலி பார்வையோ அபிராமி மீதுதான். 

 

“அப்படியே மூக்கும் முழியும் நம்ம குருதான் விஷா” என்று ஆச்சர்யமாக மகளிடம் கிசுகிசுக்க, 

 

ஜமுனா, “ஏன்… அவளப் பாக்கலயா… அப்படியே நம்ம பிரணவ் நூடுல்ஸ் மண்டையன் தான்!” என்ற பிறகுதான் அவளையும் பார்த்தார் ஜமுனா. 

 

“என்னண்ணா… இன்னும் பிரியா வரலையா?” என்று‌ கேட்டுக் கொண்டேதான் இறங்கினாள். அதற்குள் பின்னாலே சைக்கிள் பெல் சப்தம் கேட்டது. 

 

சக்தி இறங்கி வந்ததும் தேடிப் போனது அவனது பூனையைத்தான். இவனைப் பார்த்ததும் காலைச் சுற்றி சுற்றி வந்து மென்மையாக குரலெழுப்பி தன் சந்தோஷத்தை காட்டியது. கையோடு கொண்டு வந்த கேட் ஃபுட் பாக்கெட்டை பிரித்து அதன் கிண்ணத்தில் கொட்டினான். 

 

அவனையே இருவரும் பார்த்திருக்க, பிரியா, “என்ன செடி‌ மேடம் வேணும்?” என்றாள்.  

 

விஷாலி, “வீட்ல மாடித் தோட்டம் போடணும். அதான் விசாரிச்சுட்டு போலாம்னு வந்தோம்!” பொய்யாய்‌ காரணம் கூறினாள். 

 

“அக்கா… நீங்களே பேசுங்க. நான் ஆர்டர்ஸ் பாக்குறேன்” என பிரியா, மடிக் கணினியோடு அமர்ந்துவிட்டாள். 

 

அபிராமி இவர்களை திரும்பிப் பார்க்க, ஜமுனாவின் கண்கள் வாஞ்சையாக பூனையோடு விளையாடும்‌ சக்தியையே பார்த்திருந்தது‌. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

forum 5 கருத்துகள் உள்ளன

  1. Thank you ma. எனக்காக திரும்ப போட்டதற்கு. மிகவும் அருமையாக இருக்கு.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்