arrow_back
கனியாத்ரேயம் கனி 16
கனியாத்ரேயம் chevron_right பகுதி 16 / 21

கனி 16

visibility 9
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 16 

 

விடிந்த காலைப் பொழுதில், வீட்டில் இருந்த நால்வரும் தங்களது பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அமிர்தவள்ளியின் வீட்டில் இருந்த அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பைகளில் எடுத்து வைத்திருந்தனர்.

 

பத்து மணி அளவில் யோகநாதனும் மலர்விழியும் தங்களது வீட்டிலிருந்து தயாராகி வந்திருந்தனர்.

 

வெற்றிக்கு மட்டும் மனதிற்குள் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. இப்போதாவது அவர்கள் தங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கி, குடும்பப் பொறுப்புகளை மறந்து வெளியே சென்று வரட்டும். அவர்களும் தங்களுக்காகச் சிறிது நேரம் செலவிட்டு, மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்தான்.

 

மதிய நேரம் சரியாக வந்ததும், அவர்கள் பயணிக்க வேண்டிய வாகனமும் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அனைவரும் தங்களுடைய பைகளை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறினார்கள்.

 

வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அவர்களை அன்புடன் வழியனுப்பி வைத்தனர். ஆறு பேரும் கோயில் பயணத்திற்காக மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

 

அவர்கள் கிளம்பிச் சென்றதும், கனி வெற்றியிடம் வந்து,

 

“அத்தான், நாமளும் அவங்க கூடப் போயிட்டு வந்திருக்கலாம்ல!” என்றாள்.

 

“இல்ல கனி, நாம இன்னொரு வாட்டி போய்க்கலாம்”

 

“எப்ப பார்த்தாலும் இதேதான் சொல்றீங்க. அன்னைக்கு மித்ரன் அண்ணாவையும் கிருத்திகா அக்காவையும் அனுப்பி வச்சீங்க. இன்னைக்கு இவங்க எல்லாரையும் அனுப்பி வச்சிருக்கீங்க.

 

நாம எப்பதான் போறது? நாம இப்படியே வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானா?” என்று அவனிடம் கேட்க, அவளது முகத்தில் இருந்த ஏமாற்றத்தைப் பார்த்தான் வெற்றி.

 

“நம்ம ஹனிமூனுக்குப் போகணும், பொண்டாட்டி! உன்னோட அடுத்த லீவுக்கு நாம போவோம். இப்போ போய்த்தான் ஆகணுமா? சொல்லு, நான் இப்பவே ஏற்பாடு பண்றேன்” என்று வெற்றி அவளைச் சமாதானப்படுத்தினான்.

 

“நான் எங்கேயும் வரல. வீட்டிலேயே இருக்கேன்!” என்று சொல்லிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து சமையலறைக்குச் சென்றாள் கனி.

 

வெற்றி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவளுடைய கோபம் எவ்வளவு நேரம் நீடிக்கப் போகிறது என்று அவனுக்குத் தெரியும்.

 

இன்று கலைவாணி வீட்டில் இல்லாததால், சமையல் பொறுப்பைக் கனியும் கௌரியும் கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால், சமைப்பதற்காக வெங்காயத்தை உரித்துக்கொண்டிருந்தாள் கனி.

 

அப்போது மெதுவாகச் சமையலறைக்குள் வந்த வெற்றி, அவளுக்குப் பின்னால் சென்று நின்று, அவளை அணைத்துக்கொண்டான்.

 

“பொண்டாட்டி…” என்று மெதுவாக அழைத்தான்.

 

அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல், வெங்காயத்தை உரிப்பதிலேயே கவனம் செலுத்தினாள்.

 

“என்னடீ, இன்னும் கோபம் குறையலையா?”

 

“உங்ககிட்ட நான் எதுவும் பேச விரும்பல” என்றாள் கனி.

 

“ஏய் பொண்டாட்டி! நீ, நான் அமெரிக்காவுல ஆறு மாசம் இருந்தப்போ, என்னைய எவ்வளவு மிஸ் பண்ண? அப்புறம் எப்படி நம்ம மாமா அத்தை எல்லாம் யோசிக்காம இருக்க முடியும்?”

 

அவன் சொன்னதைக் கேட்ட கனி, கையில் இருந்த வெங்காயத்தை அப்படியே வைத்துவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள்.

 

“உண்மைதான் அத்தான், அவங்க ரெண்டு பேரும் இத்தனை வருஷமா பிரிஞ்சுதானே இருக்காங்க. அப்பா ஆறு மாசத்துக்கு ஒரு முறை வருவாங்க, ஒரு மூனு வாரம் இருப்பாங்க, அப்பறம் கிளம்பிருவாங்க. அம்மா நிறைய அழுதிருக்காங்க”

 

வெற்றியின் வார்த்தைகளை உணர்ந்த கனியின் முகத்தில் இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

 

அவன் சொல்வதும் உண்மைதான் என்பதை அவளால் மறுக்க முடியவில்லை. இத்தனை வருடங்களாகப் பிரிந்திருக்கும் அவர்களுக்கு, இந்த மூன்று நாட்களாவது ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கிக் கொள்ளட்டும் என்று அவளும் நினைத்துப் பார்த்தாள்.

 

அவளுடைய மனம் மாறியதை உணர்ந்த வெற்றி, அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

 

அவன் அணைப்பின் இறுக்கத்தை உணர்ந்த கனி, “பார்த்து அத்தான், என்னோட எலும்பெல்லாம் நொறுக்கிடாதீங்க!” என்றாள்.

 

உடனே வெற்றி தனது கைகளைத் தளர்த்தினான். கனி மீண்டும் சமையல் வேலைகளைத் தொடர்ந்தாள்.

 

கௌரியும் சரணும் வீட்டின் மண்டபத்தில் இருந்த சோஃபாவில் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்திருந்தனர்.

 

கௌரி, சரண் ஏதாவது பேசுவான் என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவனோ பேச்சை ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவ்வப்போது அவளைக் கண்ணால் ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

 

அவனுடைய பார்வையை உணர்ந்த கௌரி, “என்ன சரண், நேத்து நிச்சயதார்த்தத்துல என் கையில மோதிரம் போடும்போது உங்க கை ரொம்ப நடுங்கிச்சே, ஏன்?” என்று கேட்டாள்.

 

அவள் கேட்டதும் சரண் லேசாகச் சிரித்தான்.

 

“ஆமா கௌரி. நான் இதுவரைக்கும் எந்தப் பொண்ணோட கையையும் பிடிச்சதில்லை. அதுவும் இவ்வளவு கூட்டத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணோட கையைப் பிடிச்சு மோதிரம் போடணும்னு நினைச்சப்போ, கொஞ்சம் பதற்றமாயிடுச்சு.

 

நான் அனாதை இல்லத்துல வளர்ந்தவன் இல்லையா, கௌரி? இதெல்லாம் எனக்குப் புதுசு. இவ்வளவு சொந்தங்கள் முன்னாடி நின்னு, ஒரு பொண்ணுக்குக் கணவனா என் வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுன்னு நினைக்கும்போது, என்ன பண்றதுன்னே தெரியல. அதனாலதான் நேத்து என் கை தானா நடுங்கிச்சு”

 

அவன் அதைச் சொன்ன விதத்தில் இருந்த வருத்தத்தை உணர்ந்த கௌரியின் மனம் வேதனையடைந்தது.

 

தனக்குப் பின்னால் இத்தனை சொந்தங்களும் உறவுகளும் இருக்கும்போது, சரணுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

 

அவளுடைய முகம் வாடியதைக் கவனித்த சரண், அவளைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசினான்.

 

“கௌரி, இதுக்காக நீங்க கவலைப்படாதீங்க. நேத்து எனக்கு நிறைய சொந்தங்கள் கிடைச்சிருக்காங்கன்னு நான் நம்புறேன். மாறன் அப்பாவும் கலை அம்மாவும் என்னை அவங்க பிள்ளையா ஏத்துக்கிட்டாங்க. அண்ணாவும் கனியும் இருக்காங்க. இப்போ நீங்களும் எனக்குக் கிடைச்சிருக்கீங்க. இனிமேல் நான் தனி ஆள் கிடையாது, கௌரி!”

 

அவன் சொன்னதைக் கேட்ட கௌரியின் மனதில் இருந்த கவலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

 

அவள் சரணைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையைக் கண்ட சரணின் முகமும் மலர்ந்தது.

 

சரண் இவ்வளவு பேசி கௌரி இன்றுதான் கேட்கிறாள்.

 

கிருத்திகாவிற்கு மருத்துவர் ஸ்கேன் எழுதிக் கொடுத்திருந்ததால், மித்ரன் அவளை அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.

 

 

—

 

மதிய நேரத்தில் பயணத்தைத் தொடங்கிய ஆறு பேரும், மாலை நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சென்றடைந்தனர். வெற்றி ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதிக்குச் சென்றனர்.

 

மூன்று தம்பதியினருக்கும் தனித்தனியாக அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தங்களுடைய அறைகளுக்குச் சென்றவர்கள், பயணக் களைப்பில் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இரவு உணவை முடித்துக்கொண்டு, மறுநாள் காலையில் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் விரைவாக உறங்கச் சென்றனர்.

 

மறுநாள் காலைப் பொழுது அழகாக விடிந்தது.

 

அனைவரும் கோயிலுக்குச் செல்வதற்காகத் தயாரானார்கள். அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன்பு கார் வந்து நிற்க, அனைவரும் தங்களுடைய அறைகளிலிருந்து வெளியே வந்தனர்.

 

“எல்லாரும் வந்தாச்சா? கிளம்பலாமா?” என்று யோகநாதன் கேட்க, மற்றவர்கள் ஆமென்று தலையசைத்தனர்.

 

அனைவரும் காரில் ஏறிக்கொள்ள, வாகனம் கோயிலை நோக்கிப் புறப்பட்டது.

 

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலைச் சென்றடைந்தனர்.

 

காரிலிருந்து இறங்கிய அமிர்தவள்ளி, கம்பீரமாக வானுயர்ந்து நின்ற ராஜகோபுரத்தைப் பார்த்ததும், தன்னையறியாமல் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிக் கும்பிட்டார்.

 

அவருடைய மனதில் ஒரே ஒரு வேண்டுதல்தான் இருந்தது.

 

‘ஆண்டாள் அம்மா! என் வெற்றிக்குப் பார்வை கிடைக்க வேண்டும். அவன் இந்த உலகத்தை மீண்டும் தன்னுடைய கண்களால் பார்க்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் இனிமேலாவது எந்தக் குறையும் இல்லாமல் இருக்க வேண்டும். கிருத்திகாவுக்கு நல்லபடியாகப் பிரசவம் முடிந்து, தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் எல்லாரும் சந்தோஷமாக வாழ வேண்டும். என் வேண்டுதலை நீ நிறைவேற்றம்மா!’ என்று மனதிற்குள் உருகி வேண்டிக்கொண்டார்.

 

அவருடைய முகத்தில் பக்தியும் தாய்மையும் கலந்திருந்தன.

 

அதே நேரத்தில், அருகில் நின்ற திருச்செல்வமும் கோபுரத்தைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். மற்றவர்களும் அந்தப் பிரம்மாண்டமான கோபுரத்தைக் கண்டு வியந்தபடி கோயிலுக்குள் நுழைந்தனர்.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் புனிதத் தலமாகும். ஆண்டாள் அவதரித்த தலமாகவும், பெரியாழ்வாருடன் தொடர்புடைய புண்ணிய பூமியாகவும் இது விளங்குகிறது. வானுயர்ந்து நிற்கும் இதன் ராஜகோபுரம், தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 

கோயிலுக்குள் நுழைந்த ஆறு பேரும் முதலில் ஆண்டாளைத் தரிசிக்கச் சென்றனர்.

 

கருவறையில் அருள்பாலித்த ஆண்டாளைக் கண்டதும், மலர்விழியின் கண்கள் பக்தியில் பனித்தன. தன்னுடைய குடும்பம் எப்போதும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

 

அவருக்கு அருகில் நின்ற யோகநாதனும் மனமுருகி வேண்டினார்.

 

அதேபோல், அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் தங்களுடைய பிள்ளைகளின் நலனுக்காகவும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.

 

அதன்பிறகு அனைவரும் பெருமாளைத் தரிசித்து, அர்ச்சனை செய்வதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டனர்.

 

அர்ச்சகர் அவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து, ஒவ்வொருவரின் பெயரிலும் அர்ச்சனை செய்தார். அர்ச்சனை முடிந்ததும், இறைவனின் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு ஆறு பேரும் பக்தியுடன் வணங்கினர்.

 

பிரசாதத்தில் இருந்த குங்குமத்தை மாறன் எடுத்துத் தன் மனைவி கலைவாணியின் நெற்றியில் வைத்துவிட, அது அவளுக்குச் சற்று வியப்பாகவே இருந்தது.

 

கலைவாணி, ‘ஆண்டாள் அருள் பாலித்துவிட்டாரோ!’ என்று மனதிற்குள் நினைத்தார்.

 

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மலர்விழியும் அமிர்தவள்ளியும் தங்களுடைய கணவர்களை ஏக்கத்துடன் பார்க்க, யோகநாதன் உடனே மலர்விழியின் நெற்றியில் குங்குமம் வைத்தார். திருச்செல்வமும் அமிர்தவள்ளியின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.

 

கணவன் கையால் குங்குமம் பெற்றது அந்த மூன்று பெண்களுக்குமே ஆத்ம திருப்தியை அளித்தது.

 

கோயிலின் அமைதியும், இறைவனின் சந்நிதியில் நிலவிய பக்தி நிறைந்த சூழலும் அவர்களுடைய மனதிற்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தன.

 

குடும்பப் பொறுப்புகள், அன்றாட வேலைகள் என்று ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில், இப்படி எந்த அவசரமும் இல்லாமல் இறைவனைத் தரிசித்து, ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொண்டு நடப்பது அவர்களுக்கு ஓர் இனிய அனுபவமாக இருந்தது.

 

 

—

 

வெற்றி கனியை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூற, அவன் சொன்னதும் மறுவார்த்தை பேசாமல் ஆசையாக உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள் கனி.

 

சரணும் கௌரியும் தயாராக இருந்தனர். நால்வரும் ஒன்றாகக் கிளம்பினர். காரின் முன்பக்க இருக்கையில் சரணும் கௌரியும் அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் வெற்றியும் கனியும் அமர்ந்து பயணித்தனர்.

 

வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் திருநெல்வேலியிலிருந்த அந்த இடத்தை வந்தடைந்தனர்.

 

கார் நின்றதும் கனி வெளியே இறங்கினாள். அவளுடைய பார்வை எதிரே இருந்த கட்டடத்தின் மீது பதிந்தது.

 

அது புதிதாகச் சீரமைக்கப்பட்டிருந்த கட்டடம். அலுவலகம் நடத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

 

அந்த இடத்தைப் பார்த்த கனி, வெற்றியின் அருகில் வந்தாள்.

 

““அத்தான், இங்கேதான் உங்களோட கன்ஸ்ட்ரக்ஷன் பிஸினஸ் ஆரம்பிக்கப் போறீங்களா?”

 

“ஆமாம், கனி. இங்கதான் நம்ம கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் ஆரம்பிக்கப்போறோம். இன்னும் சில வேலைகள் மட்டும் முடிக்க வேண்டியிருக்கு”

 

அவன் கூறியதைக் கேட்ட கனி மகிழ்ச்சியுடன் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

 

சரணும் கௌரியும் வெளியே இருந்த இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்க, வெற்றியும் கனியும் அலுவலகத்தின் உள்ளே சென்றனர்.

 

உள்ளே நுழைந்ததும் அறை முழுவதும் இருட்டாக இருந்தது.

 

அப்போது வெற்றி, “கனி, கொஞ்சம் இருட்டா இருக்கு. நான் லைட்டைப் போடுறேன்” என்றபடி சுவரில் இருந்த மின்விளக்கின் சுவிட்ச்சை அழுத்தினான்.

 

அடுத்த நொடி அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.

 

அந்தக் காட்சியைக் கண்ட கனி அப்படியே நின்றுவிட்டாள்.

 

அவளுடைய பார்வை வெற்றியின் மீது பதிந்தது.

 

‘அத்தான்… அவரேதான் லைட்டைப் போட்டாரா?’

 

அவளுடைய மனதில் கேள்விகள் எழுந்தன. அவள் தன் பார்வையைச் சுவரிலிருந்த சுவிட்ச்சின் மீது செலுத்தினாள். பிறகு வெற்றியின் முகத்தைப் பார்த்தாள்.

 

அவன் எதுவும் நடக்காததுபோல் நின்றுகொண்டிருந்தான்.

 

கனி மெதுவாக அவனுக்கு அருகில் சென்றாள்.

 

“அத்தான்…”

 

“என்ன, பொண்டாட்டி?”

 

“நீங்கதானே இப்போ லைட்டைப் போட்டீங்க?”

 

“ஆமாம். ஏன்?”

 

அவனுடைய பதிலைக் கேட்ட கனி அவனை உற்றுப் பார்த்தாள்.

 

“அப்போ உங்களுக்கு நிச்சயமா கண் பார்வை தெரியுது!”

 

வெற்றி ஒரு கணம் அமைதியானான்.

 

“அத்தான், இப்போ நீங்க அழகா, தேடாம சுவிட்சைப் போட்டதை என் கண்ணால பார்த்தேனே! உங்களுக்குப் பார்வை தெரியாம எப்படி அதைச் செய்ய முடியும்?”

 

“கனி, சுவிட்ச் எங்க இருக்கும்னு எனக்குத் தெரியும். அதனாலதான் போட்டேன்”

 

“சரி, அப்படியே இருக்கட்டும். ஆனா, உங்களுக்கு எந்த இடத்துல என்ன இருக்குன்னு எப்படித் தெரியுது? எங்க நிக்கிறீங்க, எதைத் தொடுறீங்கன்னு எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி நடந்துக்கிறீங்க. இதெல்லாம் வெறும் யூகம்னு சொல்லி என்னை இனிமேலும் ஏமாத்த முடியாது, அத்தான்!”

 

அவளுடைய குரலில் கோபம் கலந்திருந்தது.

 

வெற்றி அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்.

 

அவனைப் பார்த்த கனி, கண்களில் கண்ணீர் திரளக் கேட்டாள்.

 

“ஏன், அத்தான்? ஏன் இன்னும் எங்கிட்ட மறைச்சுக்கிட்டு இருக்கீங்க? ஏன் இப்படிப் பார்வை தெரியாத மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கீங்க?”

 

வெற்றி எதுவும் பேசவில்லை.

 

“உங்களுக்கு உண்மையிலேயே கண் பார்வை திரும்பி வந்துடுச்சுன்னு எனக்குத் தெரிஞ்சா நான் சந்தோஷப்படுவேன்னு பயப்படுறீங்களா? உங்க பார்வை திரும்பி வரணும்னு எவ்வளவு நாள் வேண்டிக்கிட்டு இருக்கேன்னு தெரியுமா? நான் மட்டுமா, வீட்டில எல்லாரும்தான் உங்களுக்காக வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியிருக்க, அந்தச் சந்தோஷத்தை எங்ககிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன?”

 

அவளுடைய குரல் உடைந்தது.

 

வெற்றி அவளையே பார்த்தபடி அமைதியாக நின்றான்.

 

“இனிமேல் உங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டேன், அத்தான். எதையும் நான் கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை”

 

அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனைத் தாண்டிச் சென்றாள்.

 

“பொண்டாட்டி…”

 

அவனுடைய அழைப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாதவள் வெளியேறினாள்.

 

வெற்றி அவளைப் பின்தொடர்ந்து செல்ல நினைத்தாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் சில நொடிகள் அங்கேயே நின்றான். அவளைச் சமாதானப்படுத்துவதற்கான வார்த்தைகள் அப்போது அவனிடம் இல்லை.

 

சிறிது நேரத்தில் கார் அருகே வந்த கனி, பின்பக்கக் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்துகொண்டாள்.

 

அலுவலகம் உள்ளே சரணும் கௌரியும் நுழைந்தனர். வெற்றி தனியாக இருப்பதைப் பார்த்த கௌரி, “அண்ணா, கனி எங்கே?” என்று கேட்டாள்.

 

“தலை வலிக்குதுன்னு கார்ல உட்கார்ந்திருக்கா, கௌரி” என்றான் வெற்றி.

 

“சரிண்ணா” என்ற கௌரி, காருக்குள் இருந்த கனியைப் பார்க்கச் சென்றாள்.

 

வெற்றி நெற்றியைத் தன் கைகளால் தேய்த்தவாறு நாற்காலியில் அமர்ந்தான். அதைக் கண்ட சரண், “அண்ணா, உங்களுக்கும் தலை வலிக்குதா?” என்று கேட்டான்.

 

“இல்ல, எனக்குப் பார்வை தெரியுதுன்னு கனி கண்டுபிடிச்சுட்டா, சரண்” என்று இறுகிய முகத்துடன் கூறினான் வெற்றி.

 

“அண்ணா, நான் உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொன்னேன். இதெல்லாம் வேணாம்னு. நீங்கதான் அடம்பிடிச்சீங்க” என்றான் சரண்.

 

அதற்கு வெற்றி எந்தப் பதிலும் கூறவில்லை.

 

“இங்கிருந்து என்ன பண்றது? வீட்டுக்குப் போகலாம், அண்ணா” என்றான் சரண்.

 

வெற்றி எதுவும் பேசாமல் எழுந்து நடந்தான்.

 

 

*******

கதையின் ஓட்டம் உங்களுக்கு பிடித்து இருக்கிறதா? 

உங்களுடைய கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். 

நன்றி தோழமைகளே 🙏❤️

 

அடுத்த அத்தியாயம்

கனி 17

கனி 17  வீட்டிற்கு வந்ததும் கனி விறுவிறுவென மேலே சென்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்ற வெற்றி, மாடி அறைக்குள் நுழைய முயன்றபோது, அவள் கதவைப் படாரெனச் சாத்திவிட்டாள். கனியின் இந்தச் செயல் அவனுக்குள் ஒருவிதப் பயத்தை ஏற்படுத்தியது. அவள் இதுவரை இப்படி நடந்துகொண்டதில்லை என்பதால்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்