அத்தியாயம் 1
ஒரு அந்திப் பொழுதில் படிக்கட்டில்
எனக்கு மேல் அமர்ந்தபடி
உனது தாடையினை என் தோளில் வைத்து
நீ கட்டிய மாங்கல்ய இலை பிடித்து
உன் விரல்களால்
விளையாடிக் கொண்டிருந்தாய்.
தலை நிமிர்த்தி
இமைகள் உயர்த்தி
என்னவென நான் கேட்க
அன்றைய சினுங்கல்களையும்
விழிகள் செய்த ஜாலங்களையும்
மெல்ல மெல்ல என் காது மடலில்
விருந்து வைத்தாய்.
போதுமென வாய் மூட- என்
விரல் நகங்கள்
ஒவ்வொன்றாய் கடித்தபடி- என்
உச்சி முகர்ந்தாய்.
இன்றோ தலை சாய்க்க கைப்பிடி சுவரும்
முதுகு சாய்த்த தடமும் மீதமிருக்க
உன் வருகை நோக்கி
வெட்டப் படாத
விரல் நகங்களோடு நான்!
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞான முதல்வனே
சிடி ப்ளேயரில் சீர்காழி கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்து இருந்தார்… ஜெயந்தி எழுந்து விட்டதன் அடையாளமாக சாம்பிராணியின் மனத்தோடு பில்ட்டரில் முதல் டிக்காக்ஷனை இறக்கும் வாசனை மூடியிருந்த கதவையும் தாண்டி நாசியை துளைத்தது.
ஜன்னல் வழியாக உடலை தீண்டிய அதிகாலை குளிர்காற்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு இன்னும் கொஞ்சம் உறங்கேன் என்று கூற… வலுகட்டாயமாக கண்களை பிரித்தாள் ஸ்ரீநிதி.
இரவு வெகு நேரம் உறங்காததின் அடையாளம் அவளது விழிகளில்… சிவந்து திகுதிகுவென எரிந்தது… உடலில் ஒவ்வொரு செல்லும் ஓய்வை கேட்க, இயந்திரத்தை போல அதை உதறி தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பான ஸ்ரீநிதியாக இருந்திருந்தால் இழுத்து போர்த்தி கொண்டு மார்கழி குளிரை அனுபவித்து கொண்டு படுத்து உறங்குவாள்.
காலை குளிரோடு சேர்ந்த அந்த பில்டர் காபியின் வாசத்திற்கு அடிமை அவள்! அதென்னவோ எப்போதுமே தாயின் பில்டர் காபி இல்லாவிட்டால் விடிந்ததே இல்லை அவளுக்கு! உலகமே அந்த காலை காபியில் தான் துவங்குவதாக கூட எண்ணியிருக்கிறாள்… அதிலும் மழை நாட்களில் காபியை கையில் வைத்து கொண்டு முற்றத்தில் தொங்கும் அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு மெலிதாக தன் மேல் தெறிக்கும் அந்த சாரலில் சொர்கமே இருப்பதாக தோன்றும் அவளுக்கு!
இதமாக கிளம்பும் அந்த மண் வாசம் அவளது நாசியை தாக்க, கையில் இருக்கும் அந்த காபியின் மணமும் சேர்ந்து கொண்டு அவளது நாட்களை வண்ணமயமாக்கி இருந்தன.
ஆனால் அவையெல்லாம் கடந்து விட்ட காலங்கள்!
நிதானமாக எழுந்து அன்னையின் தோளோடு தொங்கி கொண்டு ஜெயந்தியின் காபியை சண்டையிட்டு வாங்கி பருகியபடி சமையலறை மேடை மேல் அமர்ந்தபடி வம்பளக்கும் ஸ்ரீநிதி தொலைந்து போய் வருடம் ஐந்தாகி விட்டதே!
இவள் அவளின் மறுபிறவி!
உணர்வுகள் மரித்து… மரத்து… மறந்து… உயிரை மட்டும் சுமந்து கொண்டு திரியும் பிறவி!
ஜெயந்தியிடம் செல்லம் கொஞ்சி கெஞ்சி… தந்தையிடம் பயந்து ஒண்டி… தம்பி தங்கையிடம் வம்பளத்து கல்லூரி சென்று பட்டாம்பூச்சியாக திரிந்த அந்த ஸ்ரீநிதியின் மறுபிறவி!
யாரிடமும் பேசுவதற்கும் யோசித்து… வார்த்தைகளை அளந்து… பெரும்பாலும் மௌனத்தை மொழியாக்கி கொண்டவளை பார்க்கும் போதெல்லாம் ஜெயந்தியின் மனம் ஊமையாய் வெதும்பும்.
ஆனாலும் பேச முயன்றதும் இல்லை… முடிந்ததும் இல்லை!
ஐந்து வருடத்திற்கு முன்னதான ஸ்ரீநிதியை திரும்ப காண மனம் ஏங்கும்… அதே ஏக்கத்தோடு அவளை அணுகும்போதெல்லாம் உணர்வுகளை துடைத்த முகத்தோடு கடந்து செல்பவளை பார்க்க பார்க்க அவரது பெற்ற மனம் துடித்தது!
அதனை ஸ்ரீநிதி அறிந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை… தாயின் ஏக்கமும் புரியாமலில்லை! தந்தை அவ்வப்போது ஜாதகத்தை எடுத்து கொண்டு எதிர்பார்ப்போடு அவளது முகத்தை பார்க்கும் போதெல்லாம் மௌனத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்தாள்.
பெண் பார்க்க வருபவர்களை வேண்டாமென்று என்றுமே கூறியதில்லை… ஆனால் வருபவர்கள் யாருமே சம்மதம் கூறும் அளவும் வைத்ததில்லை.
அவளுக்கான நியாயங்களும் தர்மங்களும் வேறு தான்!
காதில் விழுந்த கோவில் மணியின் ஓசை, மணி நான்கரை என்று அறிவிக்க… நினைவுகளை மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு எழுந்து எப்போதும் போல உள்ளங்கைகளை பார்த்தாள்… சிறுவயது முதலான பழக்கம்… நடுவில் அவளை விட்டு செல்லாதவற்றுள் இதுவும் ஒன்று!
“கலையாத கல்வியும் குறையாத வயதும்…” உதடுகள் அதன் போக்கில் அபிராமி அந்தாதியை முனுமுனுக்க… காலை நேரத்து கடமைகளை இயந்திரத்தின் போக்கில் செய்து முடித்து விட்டு மொட்டை மாடியை நோக்கி சென்றாள்.
காலையில் அந்த பகுதியிலிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் யோகா வகுப்பு வகுப்பெடுப்பது அவளது வேலைகளில் ஒன்று… ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்,சம்பளத்திற்கு சம்பளம் என்று யாராவது நினைத்தால் அது தவறு.
அவளை பொறுத்தவரை வேறு எதை பற்றிய நினைவும் இல்லாமல் அந்த நாள் கடந்தாக வேண்டும்… அதை விடுத்து எதையாவது சிந்திக்க நேரும் நேரமெல்லாம் இறந்து பிழைக்கும் சந்தர்ப்பங்கள்!
ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தனர்.
சில்லென்ற குளிர் காற்று முகத்தை தாக்க… சிலிர்த்த மனதை அடக்கியபடி,
“டேக் பொசிஷன்…” என்றபடி,
ஒவ்வொரு ஆசனத்திற்கும் கட்டளைகளை பிறப்பிக்க ஆரம்பித்தாள்… சிறு வயது முதலே கற்று கொண்டது… இன்று துயரத்தை மறக்க உதவியாக இருக்கிறது.
“அப் ஆர்ச் பேக்… பென்ட் பார்வர்ட்…” இயந்திர கதியில் கூறிக்கொண்டிருந்தவள் தன்னையும் அறியாமல் கழுத்தை தடவினாள்.
மெலிதாக கழுத்தில் இருந்த அந்த செயின் அவளை வெகுவாக உறுத்தியது… ஏமாற்றத்தில் மனம் வலித்தது… எப்போதும் போல கண்ணில் நீர் சூழ பார்க்க… முயன்று அடக்கினாள்!
எப்போதிருந்து இப்படியானேன்? வாழ்கையை பாசிட்டிவாக பார் என்று அனைவருக்கும் உபதேசம் செய்த தானா இப்படி முணுக் கென்றவுடன் கண்ணில் நீர் வைத்து கொள்வது?
மூச்சை இழுத்து வெளியே விட்டவளை உள்ளுக்குள் வரை சென்று தாக்கியது குளிர்! எதையோ நினைத்து ஊர் சுற்ற போன மனதை இழுத்து அடக்கியவள், மீண்டும் நடப்புக்கு இழுத்து வந்தாள்.
இயந்திர கதியில் வகுப்பை முடித்து விட்டு அறைக்கு திரும்பியவள் அன்றைய தேதியை பார்த்தாள்.
அந்த தேதியை தவிர வேறு ஒன்றுமே கண்ணில் படவில்லை… அது கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி தன்னை சுற்றி இருந்த உலகத்தையே விழுங்கியது!
டிசம்பர் பதினைந்து!
மறக்க முடியுமா?
மறக்க கூடிய தேதியா அது?
வாழ்கையில் அனுபவித்து வாழ்ந்த இந்த டிசம்பர் மாதம் மறக்க முடியாமல் போனது இந்த டிசம்பர் பதினைந்தாம் தேதியால் தானே!
ஊனாகி உயிராகி உணர்வாகி தன்னுள்ளே கரைந்து விட்டவனை காலத்தின் சதியில் விட்டு கொடுக்க முடியாமல் திணறியது மனது.
ஆனால் மறந்தாக வேண்டுமே!
வேறு வழியில்லை… ஒவ்வொன்றையும் மறந்தே ஆக வேண்டும்.
கண்கள் கலங்கும் போல தோன்றியது… இறுக்கி பிடித்தாள்!
மனம் மீண்டும் இறுகி விட… அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினாள்… மனதின் தவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு!
******
“ம்மா… என் ப்ரொஜெக்ட் பைல் எங்கே?” காலை நேர பரபரப்பில் விவேக் பறக்க… ஜெயந்தி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார்.
“டேய் இன்னொரு தடவை அதை காணோம் இதை காணோம்ன்னு என்னை ஏலம் போட்ட வந்து நடு மண்டையில நச்சுன்னு ஒரு போடு போட்டுடுவேன்… கொஞ்சமாவது நிம்மதியா என்னை வேலை பார்க்க விடறியா?”
கையில் கரண்டியோடு அவன் முன் வந்து மிரட்டிவிட்டு சென்றவரை பார்த்தவனுக்கு சிரிப்பு மலர்ந்தது… ஆனாலும் ஜெயந்தியை வம்பிழுக்கவில்லையென்றால் அவன் விவேக் இல்லையே.
“உனக்கு உன் பொண்ணுங்கன்னா தான் பிடிக்கும்… நான் என்ன கேட்டாலும் இப்படி தான் செய்வே…” அக்காக்களை சந்தடி சாக்கில் இழுத்து வைத்து பேச… சட்னியை தாளித்து கொட்டி கொண்டிருந்த ஜெயந்திக்கு மனதில் சுருக்கென்றது.
இது எப்போதும் போல விவேக் பேசும் வார்த்தைதான்… ஆனால் ஐந்து வருடத்திற்கு முந்தைய ஸ்ரீநிதி இதற்கு எவ்வாறெல்லாம் சிலிர்த்து கொண்டு பதில் கொடுப்பாள் என்பதை நினைத்து பார்த்தவருக்கு பெருமூச்சு கிளம்பியது… ஆனால் மகனை அந்த வார்த்தையோடு விட்டுவிடுவதா என்று நினைக்கும் போதே புன்னகை மலர்ந்தது.
அதே கரண்டியோடு வந்தவர்.
“அடேய்… இது உனக்கே நல்லா இருக்கா? காலைல இருந்து இதுவரைக்கும் என்னை பதினாறு தடவை இதை காணோம் அதை காணோம்ன்னு அலைய வெச்சுட்ட… நானும் ஒவ்வொன்னா தேடி எடுத்து தந்துட்டேன்… எல்லா வேலையும் வாங்கிட்டு இந்த லொள்ளு பேசறியா?” கோபமாக கேட்க வந்து பாவமாக முடித்து வைத்தவரை நக்கலாக பார்த்தவன்.
“பெற்ற பிள்ளைக்கு செய்யற வேலைய எல்லாம் ஒவ்வொன்னா எண்ணிட்டு இருக்கியே… நீயெல்லாம் ஒரு நல்ல தாயா?” நீட்டி முழக்கி சினிமா வசனத்தை போல பேசி வைத்தவனுக்கு அழகு காட்டிய ஜெயந்தி.
“நீயெல்லாம் பிள்ளையே இல்ல… தொல்லை…” என்று கழுத்தை ஒடித்து கொண்டு போனவரை பார்த்து இல்லாத கோபத்தை வரவழைத்து கொண்டவன்.
“என்ன… தொல்லையா? இதுக்கே நான் வெளிநடப்பு செய்யணும்…” வார்த்தைகளில் இருந்த கள்ளத்தனத்தை புரிந்து கொண்ட ஜெயந்தி.
“அதை பண்ணு முதல்ல… நிம்மதியா இருப்பேன்… எப்படா போற?” கிண்டலாக கேட்டு வைக்க.
“விட்டா என்னை நீயே துரத்தி விட்டுடுவ போல இருக்கேம்மா…” நெஞ்சை பிடித்து கொண்டு பரிதாபமாக கூறுவதை போல நடித்தவனின் குறும்பை ரசித்து பார்த்த அவனது தாயின் புன்னகை ஸ்ரீநிதி வரும் சப்தத்தை கேட்டவுடன் துணி கொண்டு துடைத்தது போலானது.
வந்தவள்… எதுவும் பேசாமல் எப்போதும் போல பூஜையறைக்குள் நுழைந்தாள்.
கண்களை இறுக்கமாக மூடி வைத்ததிருந்தவளின் விழிகள் நீரில் மிதந்ததை ஜெயந்தியால் உணரமுடிந்தது… அவருமே அந்த தேதியை பார்த்தவுடன் மனம் இறுகினார்… பழைய சம்பவங்களின் தாக்கங்களினால் கைகள் அவரையும் அறியாமல் நடுங்கின.
“தெய்வமே… இந்த பொண்ணு மாறவே மாறாதா?…” அவசரமாக கடவுளுக்கு அப்ளிகேஷன் போட்டு கொண்டிருந்தவரை பார்க்கையில் விவேக்குக்கு பாவமாக இருந்தது… அந்த அப்ளிகேஷனை ஒன்றுமில்லாமல் செய்து விடுவாளே அவனுடைய தமக்கை!
மௌனமாகவே டைனிங் டேபிளில் ஸ்ரீநிதி வந்தமர… அவசரமாக ஜெயந்தி தட்டில் இட்லியை வைத்து அவளை நோக்கி விரைந்து வந்தார்… ஒரு நிமிடம் தாமதமானாலும் காலை உணவை உண்ணாமல் கிளம்பி விடுவாளே என்ற அவசரம் அந்த நடையில் தெரிய… அதை பார்த்து கொண்டிருந்த விவேக்கிற்கு சற்று எரிச்சலாக கூட இருந்தது.
ஆனால் அடுத்த நிமிடமே… உணர்வுகளை தொலைத்து நிற்கும் தமக்கை அவனது பாசத்தை தட்டி எழுப்பினாள்!
ஆனால் ஸ்ரீநிதி ஏன் இவ்வாறு மூடுமந்திரமாகவே இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை… ஜெயந்தி அவனுக்கு புரியவைக்கவில்லை! அவனும் எத்தனையோ முறை தாயை கேட்ட போதெல்லாம் மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்து கொண்டிருந்தவரை சமயத்தில் எரிச்சலில் திட்டி விடுவதும் கூட உண்டு.
அவள் தான் இப்படி இருக்கிறாள் என்றால் பெரியவர்கள் அதை மாற்ற முயல கூடாதா என்ற கோபம்… தன்னுடைய உடன்பிறப்பை பழைய பொலிவோடு காண வேண்டி ஏக்கம்!
“அக்கா… என்னோட ப்ரொஜக்ட் ப்ரோபோசல் அப்ரூவ் ஆகிடுச்சுக்கா…” மகிழ்ச்சியாக அவன் கூற… உணவை அளந்து கொண்டிருந்த கைகள் சட்டென நின்றது… நிமிர்ந்து பார்த்தவளது முகத்தில் மென்மையான புன்னகை கீற்று!
“அதிலும் எனக்கு மட்டும் தான் அப்ரூவ் ஆகிருக்கு…” என்று சந்தோஷ மிகுதியை அவளிடம் பகிர்ந்து கொள்ள.
“ஆல் தி பெஸ்ட்…” மெல்லிய புன்னகையுடன் கூறிவிட்டு வேறென்ன என்பது போல பார்த்தாள்.
“ப்ரொஜக்ட் பெஸ்ட்டா வந்தா அங்கேயே பிளேஸ்ஸாக நிறைய ஸ்கோப் இருக்குக்கா… சப்போஸ் அப்படி ஆச்சுன்னா அது என் லக் தான்… என்னுடைய ட்ரீம்லேண்ட்க்கா அது!” முகம் முழுக்க புன்னகையை பூசிக்கொண்டு தன்னிடம் கூறிக்கொண்டிருந்த சகோதரனுக்கு தான் பதில் எதுவும் கூறவில்லை என்றாலும் அவனுக்கு அவள் கேட்டு கொண்டிருப்பதே போதுமானதாக இருந்தது.
“பிகாஸ்…” என்று கூறி இடைவெளி விட்டவன்… பூரித்த முகத்தோடு.
“நான் ப்ரொஜக்ட் செய்ய போறது மேக்சிமஸ்ல… அவங்க தான் சப்ளை செய்ன்ல இப்போ பெரிய ப்ளேயர்ஸ் க்கா… அதிலும் அந்த எம்டி தான் என்னோட ஐகான்… ட்ரீம் ஹீரோ… அவர் மாதிரியே அச்சீவ் பண்ணனும்… அதுதான் என்னுடைய ஆம்பிஷனே! “
விவேக் சந்தோஷமாக கூறிக்கொண்டே போக… நிதியின் கண்கள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த… அதை உள்வாங்கி கொண்டான் விவேக்.
“அவர் எங்க காலேஜ் பங்க்ஷன்ல ஸ்பீச் கொடுத்தார் பாரு… அப்படி ஒரு இன்ஸ்பைரிங் ஸ்பீச்… ஐ ஆம் ஜஸ்ட் மெஸ்மரைஸ்ட்…”
சிலாகித்து கூறி கொண்டிருந்தவனை ஆதூரமாக பார்த்தாள்… அவனையாவது வாழ்க்கை வஞ்சிக்காதிருக்கட்டும் என்று நினைத்து கொண்டாள்!
அவளது சகோதரன் எப்போதும் வாஞ்சையாக இருப்பவன்… படித்து முடிக்கும் வரை ஹாஸ்டலே வாசம் என்று இருந்து விட்டு இப்போதுதான் வீட்டிலிருப்பவன்… அவன் வீட்டு நிலவரங்களை பெரும்பாலும் அறிந்ததில்லை.
அதனாலேயே கல்லை போல நடமாடி கொண்டிருக்கும் அன்பு தமக்கையை அவனால் இப்படி பார்க்க முடியவில்லை… ஏதாவது கோபம் என்றால் ஒரு நாள் இரண்டு நாள் என்றால் சரி… ஐந்து வருடங்களாக ஒன்றை போலவே இவள் இருப்பது ஏன் என்று கேட்டு கொண்டே இருந்தான்… ஜெயந்தியும் தட்டி கழித்து கொண்டே இருந்தார்!
இருவரையும் பார்த்து கொண்டிருந்த ஜெயந்தி… சந்தோஷமாக.
“ஸ்ரீகுட்டி… இன்னைக்கு மதி வர்றாம்மா…” தன்னுடைய இரண்டாவது பெண் கணவனோடு தாய் வீடு வருகிறாள் என்பதை மூத்த பெண்ணிடம் சந்தோஷமாக கூறியவர் அவளிடம் அதற்குண்டான பிரதிபலிப்பை முகத்தில் தேடினார்… அது எப்போதோ கல் போல மாறிவிட்டிருந்தது.
அதிலும் மிகவும் கசப்பாக மாறிவிட்டிருந்தது!
“சந்தோஷம்…” என்று கூறியவள் வேறேதும் பேசாமல் மெளனமாக வெளியேறினாள்… அதை பார்த்து கொண்டிருந்த ஜெயந்தியின் கண்களில் வெறுமை!.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!