arrow_back
கலாப காதலா அத்தியாயம் 2
கலாப காதலா chevron_right பகுதி 2 / 24

அத்தியாயம் 2

visibility 635
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

2

நீண்டதொரு நடைபயணத்தில்

என் விரல்கள் கோர்த்தபடி நடப்பதில்

அப்படியொரு பிரியம் உனக்கு

எனக்கும் தான்!

கதைகளும் கனவுகளும் நிகழ்வுகளும் பேசி

நீளும் மாலை வேளையில்

ஒரு தேனிர் கடையில்விழிகள் பருக பருக

காதல் குடித்து விட்டு

வீடு அழைத்து வருவாய்.

உன் மடியில் என் கால்கள் நீட்டி

ஒத்தடம் என்று சொல்லி

விரல்களினால்

வித்தைகள் பல செய்வாய்.

என்னை உணவருந்தும்மேசையில் அமர்த்தி

குழந்தையெனஊட்டிவிடுவாய்.

நான் உன் விரல்கள்கடிக்க வேண்டுமென்றும்

பிரியப்படுவாய்.

நடு நடுவேநீயும் ஒருவாய்

சாப்பிட்டுக் கொள்வாய்.

நீல நிற விளக்கொளியில்

நான் தூங்குவது அறிந்தும்

காதோர முடிகள் கோதியும்

புருவங்கள் வருடியும்

என் தூக்கம் ரசித்ததை

அதிகாலை தலையணை சண்டையில்

சொல்லி ரசிப்பாய்.

இன்றோ உன் பசியறிந்து உணவருந்தும்

மேசையில் காத்திருக்கிறேன்

நான்!

பரபரப்பாக இயங்க ஆரம்பித்து இருந்தது அந்த மென் பொருள் நிறுவனம்.

தனது ஆக்டிவாவை நிறுத்திவிட்டு அணிந்திருந்த குளிர்கண்ணாடியை கழற்றி ஹன்ட்பேகில் வைத்து விட்டு,தலையில் வெயில் தாக்காமல் இருக்க வேண்டி போட்டிருந்த அந்த பலக்லேவாவை கழற்றி வண்டி ஸ்டோரேஜில் வைத்து விட்டு நிமிர்ந்தாள்.

முதுகை துளைத்தது பார்வை.

சட்டென்று திரும்பி சுற்றிலும் பார்த்தாள்.

அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு நடந்து போய்கொண்டிருன்தனர்.

ஆனால் உள்ளுணர்வு உணர்ந்தது!

கண்டிப்பாக.

தனது ஆத்மா இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும்! எப்போதாவது இது போல நடக்கும் தான்… யாரோ தீவிரமாக பார்த்து கொண்டிருப்பாதாக தோன்றும் போது மனதில் எழும் நப்பாசை தான்… ஆனால் அவள் எதிர்பார்ப்பு என்றுமே நினைவேற போவதில்லையே!

ஸ்ரீநிதியின் கண்கள் அலைபாய்ந்தது.

காலையில் இருந்தே கனத்து போயிருந்த நெஞ்சம் மேலும் கனக்க ஆரம்பித்தது… மனம் ஒரு நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது… அது தளைகளை உடைக்க பார்க்கவே அவசரமாக உள்ளுணர்வின் வேண்டுதல்களை நிராகரித்தபடி அலுவலகத்தினுள் சென்றாள்.

இதமான குளிரில் கண்ணாடி தடுப்புக்கிடையே இருந்த தன்னிருக்கையை வேலை நேரத்துக்கு முன்பே சரணடைந்தவளுக்கு முன்னெப்போதும் இல்லாத வெறுமை!

கடந்து போன காலங்கள் விரக்தியை விதைத்து விட்டு செல்ல… இனி என்ன இருக்கிறது என்று மனம் கேள்வி எழுப்பியது!

அவ்வப்போது கழுத்தை தடவி விட்டு கொண்டாள்.

இழப்பு பேரிழப்பாக தோன்றியது.

காதில் அவனின் கிசுகிசுப்பு எப்போதும் போல!

“டெடி… எனக்கு முதல்ல பொண்ணு தான் வேணும்…” அன்றொரு நாள் அவளது வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டியவன் காதருகில் வெப்ப மூச்சோடு கூற.

“ம்ம்ம்… நோ..நோ… பையன் தான் என் சாய்ஸ்…”

வெட்க சிரிப்போடு அவளும் கிசுகிசுப்பாக கூற.

“கிடையாது… பொண்ணுதான்…”

“ம்ஹூம்… முடியாது… பையன் தான்…”

ஒரு கட்டத்தில் அவன் ஒன்றும் அறியாதவனை போல முகத்தை வைத்து கொண்டு,

“சரிப்பா… உனக்கும் எனக்கும் எதற்கு சண்டை? ரெண்டுமே இருக்கட்டுமே… டபுள் டமாக்கா…” என்று சிரிக்க… ஸ்ரீநிதி அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்.

“டேய் படுபாவி… நான் தாங்க மாட்டேன்…”

“நீ தாங்காம வேற யார் தாங்குவா? இது எதையும் தாங்கும்…” என்று ஆரம்பித்து அவளை எப்போதும் போல கலாய்க்க… வெட்கத்தில் சிவந்த முகத்தை காட்டாமல்.

“ச்சீ போடா…” என்று அடித்து விட்டு எழ பார்க்க… அவளது கையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டு கொண்டவன்.

“பேச்சு மட்டும் ஒன்னரை மைல் நீளத்துக்கு வருது ரசகுல்லா… ஆனா செயல்ல ஒன்னையும் காணோமே…” சிரித்து கொண்டே அவளது காதில் கிசுகிசுக்க… சட்டென்று அவனிடமிருந்து தன்னை பிரித்து எடுத்து கொண்டு.

“இங்க பார் பேச்சு பேச்சா தான் இருக்கணும்… இந்த கோட்டை தாண்டி நீயும் வர கூடாது… நானும் வர மாட்டேன்…” வடிவேலுவின் பாணியில் அவள் கூற.

“ஏன் நான் வந்தா என்ன செய்வே?” ஒரு மார்கமாக பார்த்து அவளை நோக்கி வர… அந்த ஆளரவமற்ற இடத்தில் தங்களது காரை தவிர வேறு ஒன்றும் இல்லாததிலும் அவனது பார்வை சொன்ன செய்தியிலும் ஸ்ரீநிதிக்கு உடல் நடுங்கியது.

“வேண்டாம்… பப்ளிக் பிளேஸ்…” என்று பின்னடைய.

“சரி வா… ப்ரைவேட் ப்ளேசுக்கு போய்டலாம்…” என்று கண்ணடித்தவனை.

“ச்சே..உன்னை போய் நல்லவன்னு நம்பி…” என்று இழுத்தவளை.

“ஹேய்… என்ன இப்படியெல்லாம் பேட் வோர்ட்ஸ் பேசற… நான் எப்ப டி என்னை நான் நல்லவன்னு சொல்லிகிட்டேன்? அதுவும் உன் விஷயத்துல நான் கெட்டவன்… ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…”

தன்னோடு இழுத்து கொண்டு காதில் கிசுகிசுத்தது இன்றும் அவளது காதில் ஒலித்தது.

நினைக்க நினைக்க மனதில் வலி!

கண்களில் கண்ணீர் வெள்ளம்!

எப்படி இருந்தாலும் இனி அந்த நாட்கள் கிட்டுமா?

இழந்து விட்ட அந்த வாழ்க்கை மனதை பிசைய… அவனை மறக்க முடியாமலும் நினைவோடு ஓட்ட முடியாமலும் தவித்தாள்.

கதறி அழ வேண்டும் போல தோன்றியது!

“ஹய்யோ கடவுளே… என்னை ஏதாவது செய்து என்னோட நினைவை எல்லாம் அழித்து விடேன்…” சப்தமில்லாமல் முகத்தை மூடி கொண்டு அமர்ந்தவளுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

முகத்தை யாரிடமும் காட்ட விருப்பமில்லை என்பது போல இறுக்கமாக முகத்தை மூடிக்கொண்டாள்!

யாரும் வருவதற்கு முன்பே எப்போதும் ஸ்ரீநிதி அலுவலகத்துக்கு வந்துவிடுவதால் அப்போது யாரும் இல்லாதது அவளுக்கு ஏனோ ஆறுதலாக இருந்தது… வெடித்து அழ வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனிமையை நாடி செல்வது அவளது வழக்கம்.

அவனது நினைவு அவளை அரிக்கும் போதெல்லாம் கண்ணீர் மட்டுமே துணை அவளுக்கு… வேறு ஒன்றையும் அவளால் செய்ய முடிந்ததில்லை… வீட்டில் நிம்மதியாக அழ முடியாது… உடனே ஜெயந்தி பார்க்கும் பார்வையை அவளுக்கு பார்க்க பிடிக்காது.

தன் உயிரை எடுத்து கொண்டு வெறும் கூட்டை விட்டு விட்டு சென்றவனின் பின்னே செல்ல துடிக்கும் நினைவுகளை கடிவாளமிட்டு கட்டி வைக்க முயன்றாள் ஸ்ரீநிதி.

யாரும் பார்ப்பதற்கு முன் கண்களை துடைத்து கொண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தாலும் மென்று விழுங்கினாள்… அவசரமாக ரெஸ்ட்ரூம் சென்றவள் முகத்திற்கு நீரை வாரி இறைத்து கழுவினாள்.

சற்று தெளிவானது போல தோன்றியது.

தலையில் ஏற்பட்ட நமநமப்பு தலைவலியாக மாறியது… அவ்வப்போது வருவதுதான்… இது போல அழுது தீர்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அழையா விருந்தாளியாக வந்து விடுவதுதான்.

காபி குடித்தால் நன்றாயிருக்கும் போல தோன்ற… புட் கோர்ட் சென்றாள்… இரவு பணியை முடித்து விட்டு செல்பவர்களில் சிலர் மட்டும் இருக்க… மெளனமாக காபியை குடித்து விட்டு தன்னிருக்கைக்கு திரும்பி மாத்திரை ஒன்றை போட்டு விட்டு அமர்ந்து சற்று கண்களை மூடி கொண்டாள்.

மனம் அமைதியடைவது போல தோன்றியது.

அந்த தேதி மட்டுமல்ல தங்கை வருகிறாள் என்ற தகவலும் அவளது மனதை கீறியது.

நினைக்கும் போதே தோன்றும் வெறுப்பு!

தங்கை நல்லவள் தான்… ஆனால் அவளது கணவன்?

மனைவியின் தமக்கை என்றும் பாராமல் அவள் மேல் கேவலமான பார்வையை பதிப்பவன்… அவன் முன் செல்ல கூட அவளுக்கு கூசும்… கண்களால் துகிலெறிவதில் மன்னன்.

கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்… இவனை போன்றவர்களை எல்லாம் தூக்கில் தான் போட வேண்டும் என்பது போல மனதுக்குள் கோபம் கொழுந்து விட்டெரிந்தது!

“ச்சே… வெட்கம் கெட்ட ஜென்மங்கள்…” அவளையும் அறியாமல் அவனை திட்டிக்கொண்டாள்.

இந்த முறை எத்தனை நாட்கள் வாசமோ? கண்டிப்பாக அவன் கண் முன் நடமாட முடியாது… நண்பர்கள் வீட்டில் ஏதாவது தங்கி கொள்ளலாமா? என்று யோசிக்கும் போதே… மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த போகிறாயா? என்று புத்தி அவளை பார்த்து கேள்வி கேட்டது.

அந்த அருணை பார்க்கும் போதே அவளுக்கு குமட்டி கொண்டு வந்தது… என்ன பிறவிகள் இவர்கள் என்ற எரிச்சலில் எத்தனையோ முறை முகம் திருப்பியும் சென்று இருக்கிறாள்… ஆனால் அதையும் மீறி அவளிடம் வந்து வழியும் அவனை என்ன தான் செய்வது?

அதிலும் ஸ்ரீமதி இல்லாத நேரங்களில் அவனது அட்டகாசம் அதிமாகவே இருக்கும்… வேண்டுமென்றே பேச்சு கொடுக்க முயல்வதும்… திடீரென்று அவள் முன் வந்து பயமுறுத்துவதும் இல்லாமல் சென்ற முறை தண்ணீரை வாங்கும் சாக்கில் கைகளை தடவுவதும், யாரும் பார்க்காத நேரத்தில் வெறிப்பதுமாக அவளை எரிச்சலில் ஆழ்த்தி இருந்தான்.

“நீ ஏன் தனியாவே இருக்கனும்ன்னு நினைக்கற ஸ்ரீநிதி? அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து பாடல்களை ஹெட்போனில் கேட்டு கொண்டிருந்தவளிடம் பரிதாபமாக கேட்டவனின் தொனி அன்று மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படுகிறதாம்… இவனுக்கு தன்னை பற்றிய கவலை எதற்கு என்று தீவிரமாக யோசித்து கொண்டே அவனை பார்க்க… அந்த கண்களில் தென்பட்ட வேட்டை நாயின் தீவிரம் உள்ளுக்குள் கிலியை பரவ செய்தது.

வெளிப்படையாக கொலை கொள்ளை என்று செய்பவர்கள் கூட இவனுக்கு முன்னே ஆபத்தில்லாதவர்களாகத்தான் தோன்றினார்கள்… இவன் அவர்களை காட்டிலும் மிகவும் மோசமானவன்… மனைவியின் தமக்கை அண்ணியால்லவா… அண்ணி என்பவள் பாதி அன்னைக்கு சமமல்லவா… அவளிடம் இந்த பார்வை பார்ப்பவன் எப்படிபட்டவனாக இருக்க முடியும்?

பதில் பேசாமல் இருந்தவளை மேலும் நெருங்கி வந்து.

“நீ எவ்வளவு அழகு தெரியுமா? உன்னோட வால்யு உனக்கு தெரியல… இப்படியே தனியா எவ்வளவு நாள் இருப்ப? ரொம்ப கஷ்டம் ஸ்ரீநிதி… நான் இருக்கேன்… எல்லாத்துக்குமா நான் இருக்கேன்…” கண்களில் போதையோடு அவளது கைகளை பற்ற வந்தவனை தீப்பார்வை பார்த்தாள்.

“வெளிய போடான்னு சொல்றதுக்குள்ள இடத்தை காலி பண்ணிடு…” குரலை சிறிதும் உயர்த்தாமல் பற்களை கடித்து கொண்டு கூறியவளை பார்த்தபோது அந்த அருண் சற்று உறைந்து தான் போனான்… அந்த அவதாரம் அன்று அவனுக்கு புதியது!

என்ன கூறினாலும் மெளனமாக இருக்கிறாள் என்ற தைரியத்தில் அவளது கைகளை பற்ற வந்தவனை பார்க்கையில் மனம் கொதித்தது.

உரிமையானவன் அருகில் இருந்தால் இப்படிப்பட்ட ஓநாய்கள் தன்னிடம் வாலாட்டுமா?

தங்கையின் கணவனாக போய்விட்டானே… ஆனாலும் அந்த ஓநாய் இன்னமும் திருந்தியபாடில்லை.

மண், பெண், பொன் மோகமென்பது அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதில்லை… அதை பற்றியவர்களும் அது பற்றியவர்களும் மண்ணோடு மண்ணாக போகும் வரை விடாது!

அதிலும் பெண்ணாசை பேரழிவை தரும்… பத்து நாடுகளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு, அந்த பத்து நாடுகளின் முடியையும் தன் சிரசில் சூடியதால் பத்து தலை ராவணேஸ்வரன் என்றழைக்கப்பட்ட ராவணனே சீதையின் மேல் வைத்த ஆசையால் அவனது சாம்ராஜ்யமே அழிந்தது.

இவனுமே மண்ணோடு மண்ணாக வேண்டியவனே என்று மனதில் நினைக்கும் போதே தங்கையின் முகம் வந்து கெஞ்சியது.

“அக்கா… வேணா… ப்ளீஸ்…”

கண்களில் நீரோடு அவள் கெஞ்சுவது போன்ற கற்பனை காட்சியிலேயே மனம் பதறியது ஸ்ரீநிதிக்கு!

இந்த தொல்லை எத்தனை நாளுக்கோ என்று பெருமூச்சு விட்ட சமயத்தில் டெஸ்க்போன் சிணுங்கியது!.

அவளது மேனேஜர் தான் அழைத்திருந்தார்.

“ஸ்ரீநிதி… கொஞ்சம் உள்ள வாங்க…” பிரசாத் அழைக்க… நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிளம்பினாள்!

பிரசாத்… அவளது மேலதிகாரி!

திறமைகளை எங்கிருந்தாலும் ஊக்குவிப்பவர்!வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடமாகியிருந்த நிலையில் பல்வேறு நிலைகளில் அவளை வேலைக்கு பழக்கி இருந்தார்… இவரை போன்றவர்கள் இந்த துறையில் மிகவும் குறைவு.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயநலம்… தங்கள் காரியத்திற்காக காலை பிடிப்பவர்கள் காரியம் ஆனபின் கழுத்தை கூட பிடிக்குமளவு சுயநலம்… இங்கு எதுவுமே வெளிப்படையில்லை… தகுதி உள்ளவன் பிழைத்து கொள்ளலாம்.

தகுதி என்பது திறமையில் அடிப்படையில் அல்ல என்பதே வருத்தமான ஒன்று!

இப்படிப்பட்ட இடங்களில் பிரசாத் மாதிரியான ஆட்கள் மிகவும் குறைவு… அவரது எண்ணம் எல்லாம் அனைவரும் அனைவிதமான வேலையும் கற்று கொள்ள வேண்டும் என்பது மட்டுமே! அதனை உணர்ந்த அவளும் அவர் கொடுக்கும் வேலை அனைத்தையும் முடித்து நல்ல பெயரையும் வாங்கி விடுவாள்.

ஆனாலும் அவள் அலுவலகத்தில் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசியதும் இல்லை… சிரித்ததும் இல்லை.

“ஹாய் பிரசாத்…” வலுகட்டாயமாக ஓட்டிவைக்கப்பட்ட சிறு புன்னகையோடு அவர் முன்பு நின்றாள்… கார்பரேட் கலாசாரம்… எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் பெயர் கூறி மட்டுமே அழைக்க வேண்டும் என்று கல்லூரி முதலே பழக்கபடுத்த பட்ட எட்டிக்யூட்!

“ஹாய் ஸ்ரீ… ஹவ் இஸ் கோயிங்?”பைலை பார்த்து கொண்டே அவர் கேட்க.

“யாஹ் பைன்…” பெரும்பாலும் எங்கும் எந்த பார்மாலிட்டியும் பார்ப்பதில்லை அவள்!… அது பாசிடிவாக இருந்தாலும் நெகடிவாக இருந்தாலும் அவளது தொனி ஒன்று மட்டுமே!

“ம்ம்ம்… வாட் இஸ் யுவர் ஒப்பினியன் ஆன் மேக்சிமஸ்?” நேரடியாக அவளிடம் கருத்து கேட்ட மேனேஜரை யோசனையாக பார்த்தவள் சற்று யோசித்து.

“அவங்க சப்ளை செயின் மேனேஜ்மென்ட்ல நல்லா பண்ணிட்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன் பிரசாத்… நல்ல கம்பெனி…” கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் என்பது அவளது கோட்பாடு என்பதை புரிந்த பிரசாத்துக்கு புன்னகை மலர்ந்தது.

இவள் என்றுமே மாற கூடியவள் அல்ல.

நான்கு வருடங்களுக்கு முன் கேம்பஸ் தேர்வில் தேர்வான மிகத்திறமையான பெண் என்பது தான் அவர் அறிந்தது.!… ஒரு வார்த்தைக்கு மேல் அதிகமாக அவளிடம் பேச முயன்றாலும் சிறு பிரதிபலிப்பும் கிடைக்காது என்பதை முழுவதுமாக உணர்ந்தவர்.

அவளிடம் வழியும் ஆண்களை எல்லாம் போகிற போக்கில் கண்டுகொள்ளாமல் போவதை எண்ணி பல சமயங்களில் வியந்து இருக்கிறார்… கெட்டு போவதற்கு நிறைய வழிகளை கொண்டது இந்த கார்பரேட் கலாச்சாரம்.. இதில் ஒரு பெண் இந்த அளவுக்கு கட்டுபாடாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அவளுக்கு எவ்வளவு மன திடம் தேவை என்று வியந்தார்!

அவளது திறமை அறிவு அடக்கம் என்று அனைத்திலும் கவரப்பட்டவர்… தன்னுடைய தம்பிக்கு அவளை பெண் கேட்கலாம் என்று நினைத்து அவளிடம் கேட்டும் வைக்க… அதற்கு அவளது பதில் அவரை அதிர வைத்தது.

“சாரி பிரசாத்… ஐ ஆம் மேரீட்…”

திருமணமானவளா ஸ்ரீநிதி?

அன்றைய தினம் அவருக்குமே அது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி… ஆனால் எதிலுமே அவளது கணவன் பற்றிய செய்தி இல்லையே!

“ஆனா உங்க ஹஸ்பன்ட் பற்றி எங்கயுமே நீங்க மென்ஷன் செய்யலையே ஸ்ரீநிதி?” அதே அதிர்வோடு கேட்டவரை எந்தவித உணர்வும் இல்லாமல் பார்த்துவிட்டு.

“சாரி… அது என்னோட பெர்சனல்…”

மிக நேரடியான அவளது பதிலை கேட்டவர் அத்தோடு அந்த ஆசையையே விட்டுவிட்டார்… இப்போதும் அதை போன்றே நேரடியான சுருக்கமான பதில்கள்.

பேச்சுதான் குறைவே தவிர வேலையில் அதி புத்திசாலி… மற்றவர்கள் முடிக்க திணறும் வேலைகளை மிகவும் சாமர்த்தியமாக முடித்து கொடுப்பதில் கில்லாடி… அதனாலேயே அவரது குட் புக்கில் முதல் நிலையில் இருப்பவள்.

“மேக்சிமஸ் இப்போ ஆன்லைன் ரீடெயில்ல இறங்க போறாங்க போல இருக்கு ஸ்ரீநிதி… அதோட சாப்ட்வேர் டெவெலப்மென்ட் நம்ம கிட்ட வந்திருக்கு…” என்று கூறி அவளது முகத்தை பார்க்க… அவர் கூறுவதை உன்னிப்பாக கேட்கும் பாவனை மட்டுமே அவளது முகத்தில்!

“அதோட ப்ரீ டெவெலப்மென்ட் வேலையெல்லாம் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரும் போல இருக்கும்மா… அதுக்கு உன்னை தான் ரெக்கமன்ட் செய்து இருக்காங்க ஹையர் அபிசியல்ஸ்…” மிகவும் சுருக்கமாக கூறிவிட்டு அவளது முகத்தை பார்க்க… சிறு குழப்பம் தெரிந்தது அவளது முகத்தில்!

“இதில் எதாவது டவுட் இருக்கா ஸ்ரீநிதி?” அவராகவே கேட்டாலும் சற்று தயங்கியவள்.

“ப்ரீ டெவெலப்மென்ட் எங்க பிரசாத்? அவங்க ஆபீஸ் போகனுமா?”

“ஆமா ஸ்ரீ… அவங்க ஹெட் ஆபீஸ் தான் போகணும்…”

“ஆனா இது வரைக்கும் அந்த மாதிரி நான் போனதில்லையே… இதில் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க ஹேன்ஸ் யாரையாச்சும் போடலாமே…” என்று தயங்கியவளை கூர்ந்து பார்த்த பிரசாத்.

“ஸ்ரீ… வாட் இஸ் திஸ்… உங்க திறமையை காட்ட ஒரு சந்தர்ப்பம்… நல்ல வாய்ப்பு… அதை விட ஹையர் அபிசியல் சொன்னா அதை கேட்கனும்…” சற்று காட்டமாக ஆரம்பித்த பிரசாத்தின் குரலில் தலையை உலுக்கி கொண்ட ஸ்ரீநிதி.

“ஓகே… ஓகே… டீட்டைல்ஸ் எங்க வாங்கிக்கறது… எப்போ அங்க போகணும்?” அவசரமாக அவள் கேட்ட விதத்தில் அவர் சிரிக்க… ஸ்ரீநிதிக்கும் மெல்லிய புன்னகை படர்ந்தது!

“ம்ம்ம் குட்… டீட்டைல்ஸ் மது கிட்ட இருக்கு… ப்ளீஸ் அவளை காண்டாக்ட் செய்ங்க…” என்று முடித்து விட… அறையை விட்டு வெளியே வந்தவள் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டாள்.

மனதில் தவிப்பிருந்தாலும் இந்த புதிய அசைன்மென்ட் மூலம் வீட்டில் இருக்க வேண்டிய நேரம் குறையக்கூடும்… அது தனக்கு சற்று நிம்மதியை தரக்கூடும் என்று எண்ணிக்கொண்டாள்.

ஆனால் அங்கு போவதே தன்னை நிம்மதியிழக்க செய்யும் என்று தெரிந்திருந்தால் அந்த வேலையே வேண்டாமென்று மறுத்திருப்பாளோ?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 3

3ஒரு மழை நாளில் சன்னலில் வழியும்மழை நீர் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தாய்.நான் கூறும் வேண்டாம் என்பதன்பொருள் அறிந்தவனாய்மீண்டும் மீண்டும் என் ஆடை நனைத்தாய்.என் ஈரம் உலர்த்த உன் தேகம் அணைத்துமுதுகில் கன்னம் பதிக்க என் தேகம் நனைத்தாய்.உன் மார்பில் தூங்கி மடியினில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்