arrow_back
கலாப காதலா அத்தியாயம் 24
கலாப காதலா chevron_right பகுதி 24 / 24

அத்தியாயம் 24

visibility 593
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

பெரிதாய் ஒன்றுமில்லை

ஈரகூந்தலை – உன்

விரலால் சிக்கெடுத்து விடு

நான் நனைய நனைய!

“அர்ஜுன்… என்ன செய்யற?” கலவரமாக ஒலித்ததோ அவளது குரல்!

“ம்ம்ம்… சொல்லனுமா? உனக்கே தெரியாதா?” அழுத்தமான குரலில் கூற… மின்சாரம் தாக்கியது போல உணர்ந்து நிமிர்ந்தாள் ஸ்ரீநிதி.

“வேணாம் அர்ஜுன்… இது சரியில்லை…” எச்சரிக்கையான மனோபாவத்தில் பின்னால் நகர… அவளை இடித்து கொண்டு நெருக்கமாக கொண்டு வந்தான் அவன்.

“எது சரியில்லை… நீ செய்தது தான் சரியில்லை… உன் அம்மா தாலியை கழட்டி வீசுனாங்கன்னா அப்படியே அவங்க கூடவே போயிடுவியா? எனக்கு மனசு இல்லை? என்னை ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு உனக்கு தோன்றாதா? ஒரே வார்த்தைல முடிச்சுட்ட… பிரிஞ்சுடலாம்ன்னு… என்னை பற்றி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா நீ?” என்று அவளை நெருங்கி அணைத்தான் வன்மையாக!

“அர்ஜுன்… ப்ளீஸ்… சொன்னா கேளு… அன்னைக்கு எனக்கு மெச்சுரிட்டி இல்லை… பயந்துட்டேன்… ஆனா அதுக்காக இப்படி நீ செய்ய கூடாது…”அவளை அவன் இறுக்கி பிடித்ததில் தோள்கள் இரண்டும் கழண்டு விடுவது போல வலிக்க… தப்பும் மார்க்கம் அறியாமல் தவித்தாள்.

“ஏன் என்னை விட்டுட்டு போனடி? உன்னை நான் எவ்வளவு லவ் பண்ணினேன்னு தெரியுமா உனக்கு? பைத்தியம் மாதிரி அலைஞ்சேன்… வெறி பிடிச்ச மாதிரி இருந்துது… ஒரு வேளை மனுஷதன்மையே இல்லாம அன்னைக்கு நைட்டே…” என்று தாமதித்தவன்.

“முடிச்சு இருந்தா போயிருக்க மாட்டியோ?” என்று இரக்கமில்லாமல் கேட்க… அவனது அந்த முகம் அவளுக்கு பயத்தை கொடுத்தன.

“அர்ஜுன்…” அவனது வார்த்தைகளில் பயந்தவள்.

“ப்ளீஸ் அர்ஜுன்… உன் மேல பைத்தியமா இருக்கேன்… நான் உன் மேல வெச்ச லவ் உண்மைடா… ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… உனக்கு இப்ப ஒய்ப் இருக்காங்க… அவங்களுக்கு துரோகம் செய்யாதே… தயவு செய்து உன்னோட கோபத்தை குறை…” கண்களில் நீரோடு அவனை கெஞ்சியவளை தள்ளி நின்று பார்த்தான்.

“உன்னை அழ வைக்கணும்ன்னு நினைக்கல… ஆனா மனசுல இருக்க கோபம் வெளிய வந்துடுச்சு…” சமாதானமாக கூறியவன்… அவளை எழுப்பி.

“உனக்கு என் ஒய்பை பார்க்கணும் இல்லையா…” என்று கேட்க… கண்களை துடைத்து கொண்டு குழப்பமாக பார்த்தாள்.

வீட்டில் மனைவியை வைத்து கொண்டா… இப்படி நடந்து கொண்டான்?

அவளை இழுத்து கொண்டு அந்த படுக்கையறைக்குள் நுழைந்து லைட்டை போட… அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

இருவரும் சேர்ந்து திருமண கோலத்தில் இருந்த படம் பெரிதாக லைவ் சைஸில் பிரேம் செய்யப்பட்டு பதிக்க பட்டிருந்தது.

அங்கிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவளை இழுத்து கொண்டு போனவன்… அவளது பிம்பத்தை காட்டி.

“இவள் தான் எனது ஒய்ப் டெடி… கல்யாணம் கட்டி அஞ்சு வருஷமாச்சு… ஆனா இன்னும் நான் பேச்சிலராக தான் இருக்கேன்… இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்பது என்று அவளிடம் கேட்டு சொல்…” என்று பின்னாலிருந்து மென்மையாக அணைத்து கொள்ள.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனாள் ஸ்ரீநிதி.

ஆக… அர்ஜுன் தன்னுடையவன்!

தனக்கு மட்டுமே உரியவன்.

கொந்தளித்து கொண்டிருந்த மனம் சட்டென அமைதியடைய… வாய் விட்டு சிரித்தாள்… கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது!

மனம் விட்டு அவள் சிரித்த சிரிப்பு அது! வெகு வருடங்களுக்கு பிறகு மனதில் நிம்மதி சூழ சிரித்த சிரிப்பு அது… அது தந்த ஆனந்த அதிர்ச்சி தாள முடியாமல் கேவினாள்!

“ஹே ரசகுல்லா…” என்று அவளை அணைத்து கொள்ள வந்தவனை தள்ளி விட்டாள்.

“போடா பிராடு…” புன்னகையோடு சந்தோஷ கண்ணீரும் கண்களிலிருந்து வழிய ஸ்ரீநிதி அவனை பார்த்த பார்வையில் கரை காணவே முடியாத காதல்!… அவனுக்கும் அப்படியே.

கைகளை விரித்து வைத்து கொண்டு புன்னகையோடு அவளை அழைக்க… விருப்பமாக அவனுக்குள் தன்னை புதைத்து கொண்டாள்.

ஓடி களைத்து பின் தன் இணையை சேர்ந்த நிம்மதி இருவருக்கும்.

இனி ஒரு நொடியும் பிரியவே கூடாது என்பதை போல எண்ணி கொண்டு இறுக்கி அணைத்து கொண்டான் அவன்… தன்னுடைய மனைவியை!

“கோபாலகிருஷ்ணன் சர் அப்புறம் ராமநாதன் சர் எல்லாருமே உன் ஒய்பை பற்றி பேசினார்களே…” நிமிர்ந்து அவனை பார்த்து குழப்பமாக கேட்க.

“ஆமாம்… கம்பெனி லாபத்தில் பாதியை உன் பெயரில் டெபாசிட் செய்திருந்தேன்… எப்போதும் என் ஒய்ப் அப்படி இப்படி என்று பெருமை பேசி கொண்டே இருந்தேன்… அதனால அப்படி நினைச்சு இருப்பாங்க… அதிலும் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி இங்க வர்றதுனால வெளிய ஷோகேஸ்ல இருக்க நம்ம கல்யாண போட்டோவை வேற பார்த்து இருப்பார்…” என்று சொல்லி சிரிக்க.

“நான் பார்க்கவே இல்லையே…” குழந்தையாக அவள் கேட்க..

“நீ முதலில் சுற்றுபுறத்தை பார்த்தால் தானே ரசகுல்லா… மாமாவையே சைட் அடித்து கொண்டிருந்தால் இப்படி தான்…” பழைய குறும்பு அவனிடம் மீண்டிருக்க… அவனை செல்லமாக முறைத்தாள்.

“போடா பிராடு… போர்டுவன்டி… சரியான டூமாங்கோலிடா நீ…” அவனை திட்டுவதாக பெயர் செய்தாலும் அதில் கொட்டி கிடந்த சந்தோஷத்தை அவன் பார்வையால் அள்ளி பருகினான்.

அவனை பெரும் கோபத்தோடு முறைக்க முயன்றாலும் அவளால் முடியவில்லை… பார்வையில் டன் கணக்காய் பெருமிதம்!.

“அப்போ இத்தனை நாள் என்னை ஏமாற்றினாய் என்று சொல்லு…” முகத்தை வேண்டுமென்றே கடுப்பாக வைத்து கொண்டு அவள் கேட்க.

“ஏன் நீ என்ன செய்தாயம்? உன்னுடைய குட்டு நடுவிலே உடைந்து விட்டது… என்னுடையது உடையவில்லை… அவ்வளவுதான்…” என்று சிரித்து கொண்டே அவளது இடையை வளைத்திருக்க.

“எப்பவுமே இப்படி நடித்தே என்னை ஏமாற்றுகிறாய் அர்ஜுன்… கொஞ்ச நேரத்திற்கு முன் எப்படி பயந்துட்டேன் தெரியுமா?” அவனது அணைப்பை ரசித்தபடியே அவள் சிணுங்க.

“அது ஒன்றும் நடிப்பில்லை டெடி… நிஜமாகவே இந்த ஐந்து வருடத்தில் எவ்வளவு கொடுமையை அனுபவித்து இருக்கேன் தெரியுமா? பேத்தியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தாத்தா அந்த ஆசை நிறைவேறாமலேயே இறந்துட்டார்… ரொம்பவுமே நொந்து போயிருந்தேன்… அதை நீ கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டாமா? அதுக்கு தான் அந்த டெமோ…” என்று வலியோடு கூற… நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தவளுக்கு பெரும் பாரமாக இருந்தது.

“டெமோ…” கசப்பாக கூறியவள்… மனதை திறந்து கூற துவங்கினாள்!

“சாரி அர்ஜுன்… நானும் ஒன்றும் சந்தோஷமா இல்லை… ஆனால் என்ன கனவிலேயே உன்னோட குடும்பம் நடத்துவேன்… பேசிக்குவேன்… எல்லாம் கனவிலே தான்… தூக்கம் கலைந்து எழும் போது தான் உண்மை ஓங்கி உறைக்கும்… ஏங்கி போயிருந்தேன் அர்ஜுன்…” என்றவள் உடைந்து அழுது விட… அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்.

“இனிமேல் அழ கூடாதுடா… எல்லாம் எனக்கும் தெரியும்… எனக்கு வேற என்ன வேலை என்று நினைக்கிறாய்..? உன்னை கண்காணிப்பதை தவிர… அதனால் தான் உன் தம்பியை எனக்கு தெரிந்தது… அதோடு உன்னுடைய கம்பெனிக்கு அந்த ப்ராஜக்ட்டை கொடுத்ததே உன்னை என்னிடம் வரவைக்கத்தான்…” என்று கண்ணை சிமிட்ட… அவள் வாயை கைகளால் மூடி கொண்டாள்.

“அடப்பாவி… சரியான வில்லன்டா நீ…” கண்களை விரித்து கூற… அந்த கண்களை மென்மையாக முத்தமிட்டான்.

“உனக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியும்… ஆனா முதல் நாளே மிசஸ் ஸ்ரீநிதி என்று கூறவும் எனக்கு நிஜமாவே ஷாக்காக இருந்து… ஆனா உன்னுடைய தாலியை காணவில்லை என்றதும் நீ மிசஸ் அர்ஜுன் என்று புரிந்து கொண்டேன்…” அவளது மூக்கோடு உரசிக்கொண்டு அவன் கூற… அவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன!

“அத்தனையும் தெரிந்து கொண்டு… திருடா…” மீசையை இழுக்க.

“சரி நீயும் நடிக்கிறாய்… நானும் நடிக்கலாம் என்று தான் நானும் நடிக்கவே ஆரம்பித்தேன்..சுவாரசியமாகவே இருந்தது ரசகுல்லா…” அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு கூற.

“அதுக்கப்புறம் என் மச்சானை கரெக்ட் செய்து… அப்புறம் சகலையை கரெக்ட் செய்து… அப்புறம் மாமியார் மாமனாரை கரெக்ட் செய்து…” என்று சிரிக்க..

“அவனை நீ கரெக்ட் எல்லாம் பண்ணவே தேவையில்லை..உனக்கு ஏற்கனவே பூ போட்டு பூஜை செய்து கொண்டிருக்கிறான்…” கேலியாக அவள் கூறிவிட்டு.

“அருணை என்ன செய்தாய்?” என்று புன்னகையோடு அவள் கேட்க.

“அடி பிச்சுட்டேன்… எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை நினைத்து இருப்பான்… எனக்கு வந்த கோபத்துக்கு…” என்று பெரும் வெப்பத்தோடு கூறியவன்.

“உன் தங்கைக்காக விட்டு வைத்தேன்…” என்று முடிக்க… அவளது முகத்தில் பெருமிதம்!

இவன் என்னவன்!

“ஆக மொத்தம் என்னை தவிர எல்லாருக்குமே தெரிந்து இருக்கிறது…”

மனத்தாங்கலுடன் அவள் கூற… அர்ஜுன் வாய் விட்டு சிரித்தான்.

“இப்போது அவன் போய் உன்னுடைய பெற்றோரிடம் கூறியிருப்பான்… நானும் இன்பார்ம் செய்து விட்டேன்… என் ஒய்ப்பை நான் அழைச்சுட்டு போறேன்னு… நாளைக்கு காலையில் அவங்களை பார்க்கலாம்… ஓகே வா…” என்று கூறியவன் அவளை தாபமாக பார்க்க… அவளுக்கு இன்னமும் ஏனோ ஒரு இடைவெளி இருப்பது போல தோன்றியது… அவனை நெருங்க விடாமல் செய்தது அந்த இடைவெளி!

அவளது முகம் யோசனையாக சுருங்குவதை பார்த்தவனுக்குள்ளும் அதே சிந்தனை!

இருவரையும் தள்ளி நிறுத்துவது எது என்பதும் அவனுக்கு புரிந்து தானிருந்தது!

அவளது கையை பற்றி அழைத்து கொண்டு போனவன்… பூஜையறையில் தனியாக பெரிதாக மாட்டபட்டிருந்த பெரியவர் ஈஸ்வரனின் படத்தின் முன்பாக நின்றான்.

“தாத்தா… பார்த்துக்கங்க… உங்க பேத்திய கூட்டிட்டு வந்துட்டேன்… நீங்க தானே சொல்லிட்டே இருந்தீங்க… கூட்டிட்டு வாடான்னு… இப்ப இவ இங்க வந்துட்டா தாத்தா… பார்க்க நீங்க தான் இல்லை…” என்றவனுக்கு கண்களிலில் கண்ணீர்.

அவனை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்ட ஸ்ரீநிதிக்கும் கண்கள் கலங்கியது.

பார்க்காமலேயே தன் மேல் அன்பு வைத்த ஆன்மா எங்கிருந்தாலும் தங்களை வாழ்த்தும் என்று எண்ணி கொண்டாள்… தன்னை பற்றி முழுவதுமாக அறியாமலே பேரனின் வார்த்தைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு தன் மேல் பாசம் வைத்த அந்த ஜீவனின் ஆசிகள் கண்டிப்பாக தனக்கு கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவள் அந்த படத்தின் முன் இருந்த பொருளை பார்த்து அதிர்ந்தாள்.

அது அவன் கட்டி ஸ்ரீநிதியின் தாய் ஜெயந்தி கழட்டி வீசிய தாலி!

கண்களில் நீர் நிறைந்தது.

தான் தேடி களைத்தது இப்போது தான் கிடைத்தது போல… தன்னுடைய தேடல் இதுதானே… தான் இழந்த மதிப்பு கூற முடியாத பொருளும் அதுதானே!

எடுத்து மார்போடு அணைத்து கொண்டவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

“இதை தான் தொலைச்சுட்டேன் அர்ஜுன்… இத்தனை நாளா இதை தான் தேடிகிட்டே இருந்தேன்…” அழுது கொண்டே அவள் கூற.

தாலியை அவளது கழுத்தில் மீண்டும் அணிவித்து விட்டு அவளை தன் மார்போடு அணைத்து கொண்டான்… இறுக்கமாக!

அழுது முடித்து கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தவள்… அவனை ஆழ்ந்து பார்த்து.

“ஆனா ஒரு மஞ்சள் கயிறு நம்ம உறவை நிர்ணயிக்க முடியுமா அர்ஜுன்… இது ஜென்ம ஜென்மமா தொடர்ந்துட்டு வர்ற பந்தமில்லையா? நம்ம இரண்டு பேருக்குமான தொடர்பு இதனால் தான் நிர்ணயிக்க படுதா?” என்று கேட்க… அர்ஜுனின் முகம் புன்னகையில் விரிந்தது.

தன்னுடைய அதே வார்த்தைகள்!

இவள் தன்னுடையவள்!

தனக்கே உரியவள்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும்… தடைகள் வந்தாலும் தனக்காக மட்டுமே காத்திருப்பவள்… அது எத்தனை பிறவிகளே ஆயினும் என்று நினைத்து கொண்டான்.

மனமெங்கும் சொல்ல முடியாத பரவசம்!

“இந்த தாலி வெறும் அடையாளம் தான் ஸ்ரீ… இந்த சமூகத்துக்கு! அது இல்லைன்னா கூட நாம மனசால பிரியவே இல்ல… இன்னும் எவ்வளவு வருஷம் போயிருந்தாலும் நீயும் சரி நானும் சரி இப்படியே தான் இருந்திருப்போம்… ஆனால் இந்த தாலி உனக்கான மரியாதையை இந்த சமூகத்தில் கொடுக்கிறது… என்னுடைய மனைவியா என்னுடைய குழந்தைகளுக்கு தாயா வாழ இது ஒரு அங்கீகாரத்தை தருது… இது தேவை இல்லைன்னு நினைக்கறவங்க ஒன்று அதீத காதலால சொல்லணும்… இல்லைன்னா சமூகத்தோட செட்அப்பை மாற்ற விரும்பினவர்களா இருக்கணும்… ஆனா இந்த நேரத்தில் இந்த டிஸ்கஷன் தேவையா?” வெகு தீவிரமாக கூறி கொண்டிருந்தவன் குறும்பாக முடிக்க… அவளது முகத்தில் வெட்க சிதறல்கள்!

“அர்ஜுன்…” அவனது மார்பின் மீது சாய்ந்து கொண்டு அவள் அழைக்க.

“ம்ம்ம்… சொல்லு ரசகுல்லா…”

“லவ் இஸ் அ காம்படீஷன் பிட்வீன் டெஸ்டோஸ்டிரோன் அண்ட் ஈஸ்ட்ரோஜென்… அட்ரனலினோட மேஜிக்… அசிடைல்கொலினோட சித்து விளையாட்டுன்னு ஒரு நாள் சொன்னாயே… இத்தனை வருஷத்துல அந்த ஹார்மோன்ஸ் வேற யாரையும் தேட சொல்லலையா? வாட் அபௌட் யுவர் ஹார்மோனல் கம்ப்பாடப்ளிட்டி?” தீவிரமான குரலில் ஆரம்பித்து குறும்பாக அவள் கேட்க… அவன் வாய் விட்டு சிரித்தான்.

“என்னோட ஹார்மோன் கம்பாட்டப்ளிட்டி மட்டுமில்ல பிசிக்கல், எமோஷனல், சோசியல், இன்டலக்சுவல் கம்பாட்டப்ளிட்டின்னு அத்தனையும் உன்னோட மட்டும் தான்… அதுக்கு காரணம் என்னன்னு நீ நினைக்கற ரசகுல்லா?”

முகம் நிறைந்த சிரிப்போடு கூறியவன் கள்ளத்தனமாக கேள்வி கேட்க… என்னவென்று அவனை புரியாத பார்வை பார்த்தாள்.

“என்ன? நீயே சொல்லு…”

“அதுக்கு பேர் தான் விதி… நான் எப்படியாவது தப்பிச்சே ஆகணும்ன்னு நினைச்சா கூட ஆப்புல தேடி போய் உட்கார்ந்துக்கறேன் பார்த்தியா?” அலட்டி கொள்ளாத குரலில் கூறி விட்டு தப்பித்து ஓடியவனை பார்த்து கொலைவெறியாக முறைத்தாள்.

“நீ திருந்தவே மாட்டடா… உன்னையெல்லாம்…” அவனை துரத்தி பிடித்து அவனது முடியை பிடித்து உலுக்க… அர்ஜுனோ சிரித்து கொண்டே அவளது இடையை வளைத்து கொண்டான்.

ஸ்ரீநிதியும் வெட்கத்தோடு அர்ஜுனிடம் சரண் புகுந்தாள்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல கோடி நூறாண்டு மகிழ்ச்சியாக வாழ இருவரையும் வாழ்த்தி விடைபெறுவோமா!

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 5

  1. sudharபொதுக் கருத்துsudhar

    கதை நன்றாக இருந்தது .
    இரு மனங்களின் புரிந்துணர்வு தான் காதல் என்று கதை படிக்க சுவாரசியமாக இருந்தது .

உங்கள் கருத்தைப் பகிருங்கள்