அத்தியாயம் மூன்று
“என்ன…”
வியந்து போய் அர்ஜுனை பார்த்து கொண்டே கௌதம் கேட்டான்! அதையும் அவள் சொல்லிவிட்டு பெருமையாக பார்த்ததை இருவரும் பார்த்தவர்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு சிரிப்பைஅடக்க முடியாமல் அடக்கினார்கள்! அவள் வர போவது தனது கம்பெனி என்றவுடன் அர்ஜுனுக்கு வியப்பு தாளவில்லை!
“அடப்பாவி கடைசில என் கிட்ட தான் வர போறியா… வாம்மா வா… உன் வால்தனத்த முழுசா கட் பண்ணி விடறேன்” என்று நினைத்து கொண்டான்… ஒன்றும் பேசாமல் சிரித்து கொண்டு அவளை பார்த்தான்!
இப்போது ட்ரைனிங் வர போகிறவர்களில் தான் இவளும் ஒன்று போல! பரவால்லையே… இந்த மாதிரி ஒரு ஆள் இருந்தால் போதும் பொழுதெல்லாம் சிரித்து கொண்டே இருக்கலாம்!
“ஏன் இப்படி ரெண்டு பேரும் சிரிக்கறீங்க? அது என்ன அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனியா?”
அர்ஜுனுக்கு இதை கேட்டவுடன் சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது!
“டுபாக்கூர் கம்பெனியா? அப்புறம்…”
“அட கடவுளே… இந்த மங்களத்துக்கிட்ட அப்போவும்சொன்னேன்… நான் போகலைன்னு… கேட்டுச்சா? இப்படி ஒரு மன்னார் அண்ட் கம்பெனில வந்து மாட்டிகிட்டேனே!… மங்களம்ம்ம்ம்ம்… எனக்கு மங்களம் பாடிட்டியே மங்களம்!” சப்தமாகவே அவள் சலித்து கொள்வதை பார்த்து வாய் சிரித்தனர் இருவரும்!
“மன்னார் அண்ட் கம்பெனியா? அப்புறம்…”
“என்ன அப்புறம் விழுப்புரம்ன்னு… நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? ஆமா நீங்க என்ன இப்படி கேட்டுகிட்டே இருக்கீங்க… அண்ணா… என்னத்தான் விஷயம் சொல்லேன் அண்ணா!”
“ஹேய் எலிக்குட்டி… சொல்லட்டா?” என்று அர்ஜுனை பார்த்து கொண்டு கேட்கவும்
கண்களை சிமிட்டி சொல்லாதே என்று சைகை காட்டினான் அர்ஜுன்!
அதை புரிந்து கொண்ட கௌதம்.
“ஒண்ணுமில்ல நீயே அர்ஜுன் கிட்ட கேட்டுக்கோ!” என்று அவனை சாட்டி விட
“அர்ஜுன்… ஒழுங்கா சொல்லுங்க… அந்த கம்பெனி திவாலாக போகுதா?”
“அடப்பாவி விட்டா நீயே திவால் பண்ணிடுவ போல இருக்கே… சரி சொன்னா என்ன தருவ?”
“ம்ம்ம்… பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் தரேன்… மவனே இப்போ ஒழுங்கா சொல்ல போறியா இல்ல ட்ரெயின்ல இருந்து தள்ளி விடட்டா…” என்று கொஞ்சம் நஞ்சமிருந்த பொறுமையும் பறந்து போய் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கேட்டாள்!
“அடப்பாவி… விட்டா பண்ணிடுவா போல இருக்காளேடா இந்த அசுரி… சொல்லிடறேன்ம்மா தாயே… நான் அந்த கம்பெனில தான் வொர்க் பண்றேன்… அதான் சிரிச்சேன் போதுமா?”
இதை கேட்டவுடன் அஞ்சலியின் முகம் பிரகாசமானது!
“ஹய்… அந்த ஓட்ட கம்பெனில தான் நீங்களும் வேலை பாக்குறீங்களா? ஓகே ஓகே… எத்தனை நாளா வேலை பாக்குறீங்க?”
“ம்ம்ம்ம்… லொள்ளுதான்… நாளாவா? அந்த ஓட்ட கம்பெனில தான் ஒரு பன்னெண்டு வருஷமா இருக்கேன்…” தான் பதினாறு வயதில் இருந்தே கம்பெனி விவகாரங்களில் இருந்ததை வைத்து சொல்ல.
“ம்ம்ம் பன்னெண்டு வருஷமா… அப்போ நீங்க அங்கிளா?” என்று மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க
“ஏய் கழுதை… விட்டா என்னை தாத்தாவாக்கிடுவ போல… ஹலோ உன் அண்ணன் செட்மா நானும்… ஞாபகம் வெச்சுக்கோ! முதல்ல பார்ட் டைமா வேலை பார்த்தேன்… இப்போ புல் டைம் பாக்குறேன்… அதை சொன்னா…”
“ஓஓஓஓஓ… அப்படியா… ஓகே ஓகே… என்னவா வேலை பாக்குறீங்க?”
இந்த கேள்வியை தவிர்க்க நினைத்தவன்.
“அத விடு!… யார் உன்னை இன்டர்வியூ பண்ணது?”
“ம்ம்ம்… மொதல்ல ஒரு சொட்டை தலை இண்டர்வ்யூ பண்ணுச்சு… பேரு… ம்ம்ம்… ராமானுஜமாம்!” அடப்பாவி… சென்னை கிளை பர்சனல் மேனேஜர் இவளுக்கு சொட்டை தலையா? என்று நொந்து கொண்டான்.
“அப்புறம் ஒரு சறுக்கு மரம்…”
“சறுக்கு மரமா… அப்படீன்னா?” என்று குழம்பி போய் கேட்டான்!
“தொப்பை சைஸ் அர்ஜுன்… தொப்பைஐஐ… சைஸ்… அந்த ஆளோட தொப்பை சைஸ்க்கு பான்ட் போட்டு இருந்தத பாத்தீங்கன்னா… விழுந்து விழுந்து சிரிப்பீங்க… ஸ்லைட்ல சறுக்கர மாதிரி ஒரு எபக்ட் இருக்கும் அர்ஜுன்! அது தான் ஜெனரல் டேமேஜராம்ல…” என்று மிகவும் சீரியஸாகவே சொல்ல.
“அடப்பாவி… டேமேஜரா? !” இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது!
“ஹய்யோ… ஏன் அர்ஜுன்? நானே ஒரு நல்ல பிகர் கூட இல்லையேன்னு நொந்து போய் சொல்றேன்… நீங்க என்னடான்னா சிரிக்கறீங்களா?”
“ஏன் என்னை பார்த்தா உனக்கு நல்ல பிகர் மாதிரி தெரியலையா?” கிண்டலாக கேட்டவனை என்ன செய்யலாம் என்று பார்த்து வைத்தாள்… அவளது அந்த பார்வைக்கு அர்த்தம் தெரிந்த ஒரே ஜீவன் கௌதம்… எத்தனை பேரை ஓட வைக்க பார்வை அது… சிரித்து கொண்டான் தனக்குள்!
“நீங்க பிகரா… உங்க வீட்ல கண்ணாடியே கிடையாதா?” உதட்டை சுளித்து கொண்டு அவள் கூறிய அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் அர்ஜுன்! டேய் அர்ஜுன் மாட்டிக்காதடா என்று அவனது மனசாட்சி உள்ளே குரல் கொடுத்து கொண்டிருந்தது! அதை தட்டி கழித்து… மனசாட்சிக்கு உடனடியாக மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்தான்.
“எல்லாம் நேர கொடுமை எலி… நம்ம பெர்சனாலிட்டி முன்னாடி…” என்று அவன் நிறுத்த
“முன்னாடி… என்ன அர்ஜுன்? சிம்பன்ஸி தோத்துடுமா?” சிரிக்காமல் கேட்டவளை தினுசாக பார்த்தபடி
“அதை ஒரு உராங்கொட்டான் சொல்லுது… ம்ம்ம்ம்…” அவளை போலவே!
“ஆஹா ஒரு ஜூல என்டர் ஆன பீல் வருதுப்பா…” என்று கௌதம் சிரித்துக்கொண்டே கிண்டலடித்தான்.
“ஆமா அண்ணா… நீயும் உன் பிரெண்டும் இருந்தா அது ஜூ தான்… ஹேய்… இத விடுங்க… அர்ஜுன்… கடைசியா ஒரு சூப்பர் பிகர் ஒன்ன பார்த்தேன்… தெரியுமா? !” அவனை ஆனமட்டும் காலை வாரிவிட்டு சுவாரசியமாக கூற ஆரம்பிக்க
“ஹை… பிகரா? சொல்லு சொல்லு… யாரு அது? நீயே கவுந்த ஆளு?” சிரித்து கொண்டே கேட்டான் அர்ஜுன்!
“அந்த சேர்மன் தான் அர்ஜுன்! வாட் அ பெர்சனாலிட்டி!… என்ன கம்பீரம்! ஆனா வயசு தான் கொஞ்சம் ஜாஸ்தி… ம்ம்ம்… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!” மிகவும் தீவிரமான குரலில் அவள் கூறியதை கேட்ட கௌதம் வெடி சிரிப்பு சிரிக்க… அர்ஜுனுக்கு புரை ஏறியது! ஏறியது! ஏறிக்கொண்டே இருந்தது! இதை கண்டுகொள்ளாமல்.
“ஏன் அர்ஜுன்… உங்களுக்கு அவர தெரியுமா?” அப்பாவியாக அவள் கேட்க
“ம்ம்ம்… கொஞ்சம் தெரியும்… ஏன் கேக்கற?” என்று சிரிப்பு தாங்காமல் வயிற்றை பிடித்து கொண்டு கேட்டான்!
“இல்ல… அவரை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான் அர்ஜுன்! யூஸ் ஆகும்ல!” என்று சிரிக்காமல் சொல்ல.
“ஹய்யோ… போதும் கௌதம் என்னால முடில… எப்படிடா இவள வீட்ல வெச்சுட்டு இருக்கீங்க? சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது… இவ வாய தைக்க எதாச்சும் வழி இருந்தா சொல்லேன்…”
“அந்த வழி தெரிஞ்சா எங்க சித்தப்பா ஏன் இவள நாடு கடத்த போறார்? ஏய் வாலு… சும்மா இரு… பெரியவர போய்… என்ன பேச்சு இது?” என்று கௌதம் கடிக்கவும்
“ஹேய்… விடுடா… சின்ன பொண்ணு… ஜாலியா பேசிட்டு போறா?”
“அப்போ நீங்க என்ன கிழவனா அர்ஜுன்?”
“ம்ம்ம்… அப்படியா… அவசியம் தெரிஞ்சுக்கனுமா?” என்று ஒரு மார்கமாக அஞ்சலியை பார்த்தவன் பக்கத்தில் எல்லோரும் இருப்பதை உணர்ந்து வேறு பேச ஆரம்பித்தான்! ஆனாலும் ஒரு நிமிட பார்வை மாற்றத்தை உணர்ந்த அஞ்சலிக்கு தலை முதல் கால் வரை ஜிவ்வென்றது!
இதென்ன இப்படி ஒரு பார்வை? உயிரை ஊடுருவுகிறதே! ஏதோ மனதின் அடி வரை சென்று தீண்டி பின் செல்வது போல் ஒரு உணர்வு அவளை ஆக்ரமித்தது! இதுவரை இல்லாத, தான் உணராத உணர்விது! தன்னை அறியாமல் முகம் சிவந்தவள் அவன் புறம் திரும்பாமல் அருகில் அமர்ந்திருந்த மேகாவிடம் பேச்சு குடுத்தாள்!
அது வரை மூவரும் அடித்த அரட்டையை பார்த்து வயிறு குலுங்க சிரித்து கொண்டு இருந்தவளை பார்த்த அஞ்சலி.
“என்ன மேகா… இப்படி சிரிக்கறீங்க?”
“ஆமா அஞ்சலி… நான் இப்படி எல்லாம் சிரிச்சதே இல்ல… எனக்கு இதெல்லாம் புதுசா தான் இருக்கு அஞ்சலி! இப்படி நீங்க பேசிக்கறது!”
“நோ கவலை! நீங்க இப்படி எல்லாம் சொல்லாதீங்க! நான் இருக்கேன்ல மேகா! நீங்க ஏன் இப்படி பீல் பண்றீங்க? ம்ம்ம்ம்… நீங்களும் நானும் பிரெண்ட்ஸ்! நீங்க மும்பை போனாலும் ரெண்டு பேரும் மீட் பண்ணலாம் ஓகே வா?” என்று மேகாவிடம் உருக்கக்கமாக கேட்க
“மேகா… தப்பி தவறி ஓகே சொல்லிடாதீங்க… அதோட பிளான் கண்டிப்பா மூக்கு பிடிக்க சாப்பிடறது ஒண்ணுதான்! ஓகே சொன்னீங்க… உங்க வீட்டு அரிசி பருப்பு எல்லாம் காலி!” கௌதம் கனகச்சிதமாக மேகாவை எச்சரித்தான்!
“டேய் அண்ணா… நீயெல்லாம் ஒரு அண்ணனா? எட்டப்பா… நீ உருப்படவே மாட்ட…!” அவனை முறைத்து கொண்டே அஞ்சலி கூறியதை கேட்டவன்.
“பார்த்தீங்களா மேகா… தி கேட் இஸ் அவுட் ஆப் தி பேக்!”
“சார்… ஏன் அப்படி சொல்றீங்க? என் கல்யாணத்துக்கு என் பக்கம் யாருமே இல்லையேன்னு நினைச்சேன்! ஆனா நீங்க எல்லாரும் கிடைச்சு இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு… எனக்கு அஞ்சலி தான் மணப்பெண் தோழி கௌதம் சார்…”
“திருமணமா?”
இதை கேட்டவுடன் ஒரு நிமிடம் கலங்கி போனான்! ஏன்? தன் திருமணம் பற்றி மேகா பேசவும் ஏன் தன் மனதுக்குள் வெறுமை திடீரென்று பரவியது? ஏன் என்பது அவனுக்கு புரியவில்லை! யாரோ ஒரு மூன்றாம் மனுஷி! ரயிலில் சந்தித்தவள்! அதுவும் யாருக்கும் அசைந்து குடுக்காதவன் நான்! என் மனதில் ஏன் இந்த சலனம்? ச்சே… இப்படி எல்லாம் எண்ணுவதே எனது ஆண்மைக்கு இழுக்கு!
“பிறன் மனை நோக்காமை பேராண்மை”
ஏதோ அவள் கண்ணில் தென்படும் சோகம் தன் மனதை பிசைவதென்னவோ உண்மை! ஆனால் இன்னொருவனை நேசிக்கும் அவளை மனத்தால் தீண்டுவதும் பாவம்!
குழப்பங்களால் அழுத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறினான்! பின் அவனே… அவளை பார்த்து கொண்டிருக்கும் வரை தான் இந்த குழப்பம் இருக்கும்… நாளை மதியம் மும்பை சென்று சேர்ந்து விட்டால் அவள் யாரோ தான் யாரோதான் என்று ஒரு வழியாக தெளிவானான்!
“நீங்க கொஞ்சம் சொல்லுங்க அஞ்சலி… இவ ரொம்ப பயப்படறா… லவ் பண்ணும் போது இருக்கற தைரியம் கல்யாணம் பண்ணும் போதும் இருக்கனுமே… அந்த தைரியம் கொஞ்சம் கூட இல்ல இவ கிட்ட…” அமுக்குன்னி சித்தராக பேசாமலேயே இருந்த சசிதரன் பேசியது மேகாவுக்குமே ஆச்சரியமாக இருந்தது!
“இல்லண்ணா… யாருக்குமே இப்போ இந்த பயம் இருக்கும்! வீட்டை விட்டு வந்து இருக்காங்கல்ல… கொஞ்சம் டைம் குடுங்க அண்ணா… மேகாவுக்கு…” பெரிய மனுஷியாக சசிதரனுக்கு அட்வைசி கொண்டிருந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான் கௌதம்… அடடா நம்ம பாசமலருக்கு இம்புட்டு அறிவா என்று நினைத்துக்கொண்டுதான்!
“கண்டிப்பா அஞ்சலி! எவ்ளோ வேணும்னாலும் டைம் எடுத்துகட்டும்… ஆனா என்னால மேகாவை விட்டு தரவே முடியாது! ஷி இஸ் மைன்!” குரலில் உறுதியோடு கூறிய சசிதரனை பெருமையாக… காதலாக பார்த்தாள் மேகா!
“தட்ஸ் தி ஸ்பிரிட் அண்ணா…” என்று பாராட்டினாள் அஞ்சலி!
கௌதமும் அர்ஜுனும் தனியாக பேசி கொண்டு இருந்தனர்! மிக மெல்லிய குரலில் அர்ஜுன் கௌதமிடம்,
“என்னடா… உன் தங்கச்சி அவன் கிட்ட பாசபயிர் வளர்த்துட்டு இருக்கா? பார்த்து ஏதாவது மாடு மேய்ந்துட போகுது!”
“ஏன்டா… அவ அவனை அண்ணன்னு தானே சொல்றா? அப்போவும் உனக்கு ஏன் இந்த கொலைவெறி?”
“ப்ச்… அவன பார்த்தா எனக்கு பிடிக்கவே இல்ல… ஒரு சிலரை பார்க்கும் போது உடனே பிடிக்காம போய்டும்… அது இவன் கேஸ்ல உண்மை!”
“எனக்கும் அப்படி தான் அர்ஜுன்! நீ சொல்லிட்ட… நான் சொல்லல!”
“எத சொல்லல? அந்த பொண்ண சைட் அடிச்சுட்டே இருந்தியே அத தான!… இல்ல அவங்க கல்யாணம்னு சொன்னவுடனே உன் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆச்சே… அதையா?”
“டேய் கவனிச்சுட்டியா? ப்ச்… விடுடா…”
“ஹேய் கௌதம்… உண்மைய சொல்லு… டு யூ பீல் எனிதிங் சீரியஸ் அபௌட் ஹெர்?”
“தெரியலடா… லவ் அட் பர்ஸ்ட் சைட்ட ஹம்பக்ன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்… ஆனா இந்த பீலிங்க்கு என்ன அர்த்தம்னு தெரியல அர்ஜுன்! ஆனா அந்த பொண்ணு இன்னொருத்தனுக்கு மனைவி ஆக போறவன்னு தெரிஞ்சே இப்படி ஒரு சில்லி பீலிங்ல இருக்க மாட்டேன்… பெட்டர் லீவ் திஸ் அர்ஜுன்!”
அவனது முதுகை ஆதூரமாக தட்டி குடுத்தான் அர்ஜுன்! தன் நண்பனை நினைத்து ஒரு புறம் பெருமையாக இருந்தாலும் அவனது ஏமாற்றத்தை நினைத்து மனம் வலித்தது! எதற்குமே ஆசைப்படாத ரிஷியை போன்றவன்! தனக்கு தெரிந்து முதல் முதலாக ஆசைப்பட்ட பெண்! ப்ச்!… பள்ளி காலத்திலும் கல்லூரி காலத்திலும் தான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரிந்தே இருந்தாலும் கௌதம் தன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி கொண்டதும் இல்லை! அதே போல் அவனை கொண்டு காரியம் சாதிக்க நினைத்ததும் இல்லை!
அர்ஜுனுடைய செல்வாக்கை பற்றி சிறிது கூட நினைத்தும் பாராதவன்! தன்னை போல் மத்திய வகுப்பை சேர்ந்தவனுடன் இயல்பாக பழகும் எளிமையான குணம் இருப்பதினால் மட்டுமே அர்ஜுனுடன் சிறு வயது முதல் நட்பை பேணுபவன்! அதே போல் அர்ஜுனும் மிக இயல்பாக அவனது வீட்டிற்கு சென்று வருவான்! அவர்களது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தான்! அகமதாபாத் மிமிவி ல் விஙிகி செய்ய வேண்டும் என்பது கௌதமின் வெறி! அவனுடன் சேர்ந்து அர்ஜுனும் அதற்கு தயார் செய்தான்! இருவருமாக வெற்றிகரமாக முடித்தனர்!
விஙிகி முடித்தவுடன் தொழிற்பயிற்சிக்காக அர்ஜுன் தந்தை அவனை ஆறு மாதம் வெளிநாடு அனுப்ப கௌதமும் தனது தொழில் தீவிரமாக இறங்க… அப்போது கொஞ்சம் இடைவெளி விழுந்த நட்பு! நான்கு வருடம் கழித்து இப்போது இங்கே எதிர்பாராமல்!
பேசிக்கொண்டு இருந்த போதே ரேணிகுண்டா சந்திப்பில் ரயில் நின்றது!
“எலிக்குட்டி… இங்க கால்மணி நேரம் ட்ரெயின் நிற்கும்! உனக்கு ஏதாவது வேணுமா?” என்று அர்ஜுன் கேட்க
“ம்ம்ம்… எங்களுக்கே இறங்கி போய் வாங்கிக்க தெரியும்…” என்று கழுத்தை ஒடித்து கொண்டு கூறி விட்டு மேகாவை அழைத்து கொண்டு இறங்கினாள்!
“திமிரு… உடம்பு முழுக்க திமிரு தான் கௌதம் உன் தங்கச்சிக்கு!…” என்று கூறிவிட்டு செல்பேசியை குடைய ஆரம்பித்தான்!
***
“டேய் மச்சான்… அந்த பிகருங்கள பார்த்தியா… செம கட்டைங்களா இருக்குடா!” அந்த நால்வர் குழுவில் இருந்த ஒருவன் கூறினான்!
“பார்த்தா தமிழோ தெலுங்கோ மாதிரி தெரியல மாப்பு… வடக்கத்திகாரிங்களாட்டம் இருக்காளுங்கடா…”
“ஆமா மச்சி… இந்த நெகுநெகுப்பும் கலரும் நம்ம பக்கம் வரவே வராது! ரெண்டு பேருமே திருநெல்வேலி அல்வா கணக்கா இருக்காளுங்கடா… பாக்கும் போதே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!” அவனது குரலில் மட்டுமல்ல அவனுமே போதையில் தான் இருந்தான் போல.
“சரிடா மச்சி… வா போய் உரசி பாத்துரலாம்…”
அந்த குழுவில் இருந்த இன்னொருவன்
“டேய் வேணாண்டா… ஊரு விட்டு ஊரு வந்து அடி வாங்க போறீங்களா? ஒழுங்கா ட்ரெயின்ல ஏறுங்க…”
“இவன் கிடக்கறான்டா மாப்பு… நீ வாடா…”
புத்தகம் வாங்கி கொண்டு இவர்கள் பேசி கொண்டு இருந்ததை கவனித்து கொண்டிருந்த அஞ்சலிக்கு கோபச்சூடு ஏறி கொண்டு இருந்தது!
அந்த இருவரும் இவர்களின் இரு பக்கத்திலும் வந்து நின்றவர்கள் தண்ணீர் வாங்கும் சாக்கில் உரச ஆரம்பித்தனர்! ஆரம்பத்தில் மேகா பயந்து போய் தள்ளி போக ஒருவன் கொஞ்சம் அதிகமாகவே இடித்தான்!
“அஞ்சலி வா போயிரலாம்… எனக்கு பயமா இருக்கு!” என்று நடுங்கி கொண்டு மேகா கூற
“வெயிட் பண்ணு மேகா… இவனுங்களுக்கு ட்ரீட்மென்ட் கொஞ்சம் குடுக்கலாம்!” என்று கூறி விட்டு
அவனிடம் திரும்பிய அஞ்சலி
“சார்… இப்ப என்ன சார் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று மிகவும் பவ்யமாக கேட்க
“ஓ… தமிழா!… சாரி… தெரியாம பட்டுடுச்சு!”
“ஏன்டா நாயே! வந்து உரசுவ… கேட்டா தெரியாம பட்டுடுச்சுன்னு சொல்லுவியா? உனக்கு எவ்வளவு ஏத்தமிருக்கும்…” கோபத்தில் எகிற ஆரம்பித்தாள்!
அவள் சண்டை போடுவதை பார்த்த மேகா மிகவும் பயந்து போய்
“அஞ்சலி… வா போயிரலாம்… சண்டை எல்லாம் வேணாம்…” என்று நடுங்கி கொண்டே சொல்ல அதை லட்சியம் பண்ணாமல் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தாள் அஞ்சலி! அவசரமாக ரயில் பெட்டிக்கு விரைந்தாள் மேகா… கௌதமை அழைப்பதற்கு!
“அதான் சாரி சொல்லிட்டேன்ல… அப்புறம் என்ன?” என்று அவனும் பதிலுக்கு எகிற அவனது நண்பர்களும் அங்கே வந்தனர்!
“எருமை… சாரி சொல்லிட்டியா! சரி இப்போ இடிடா… பாக்கலாம்! நீ சரியான ஆம்பிளையா இருந்தா இப்போ இடி…” விடுவேனா என்று அவனை ரவுண்டு கட்டி கொண்டிருந்தாள்!
“ஏய்… என்னடி ரொம்ப சவுண்ட் குடுக்கற… ஒழுங்கா ஊர் போக வேண்டாமா?” பதிலுக்கு அவனும் எகிற
“ராஸ்கல்… நீ முதல்ல ஊர் போய் ஊர் சேருவியான்னு பார்த்துக்கோ! உனக்கு பேசறதெல்லாம் பத்தாதுடா…” என்று சொல்லி கொண்டே செருப்பை கழட்டியவள்.
அவன் யோசிக்கும் முன்னர் மாறி மாறி அடித்தாள்!





