அத்தியாயம் நான்கு
அடி வாங்கியவன் அதீத கோபத்தோடு
“ஏய்… உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா செருப்பால அடிப்ப? உன்னை இப்போ என்ன செய்யறேன்னு பாருடி!” என்று கூறியவாறே கையை இழுத்தான்!
உடன் இருந்தவர்களும் சேர்ந்து கொள்ள போவோர் வருவோர் பார்த்து கொண்டு போனார்களே தவிர யாருக்கும் தடுக்கும் எண்ணமில்லை! இது நமது தேசத்தின் சொத்து அல்லவா! யாருக்காவது உதவி தேவை எனும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்களே தவிர அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிகவும் குறைவு! துச்சாதனர்கள் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில் கிருஷ்ண பரமாத்மாக்களை எங்கே தேடுவது? அவர்கள் பாரதத்தோடு முடிந்து விட்டவர்களாயிற்றே!
அதில் இரண்டொருவர் போலீசை அழைக்க கூறினர்!
அந்த பகல் பொழுதில் அத்தனை கூட்டத்தினர் நடுவில் தன்னிடம் ஒருவன் தவறாக நடக்க முயல அதை தடுக்க மக்கள் முயலாமல் வெறுமனே போலீசை அழைக்க சொல்வதை பார்த்த அஞ்சலிக்கு ஒரு புறம் மக்களை நினைத்து கோபம் மிகுதியாக வந்தாலும் என்னவாகுமோ என்று பயந்து கொண்டே நால்வருமாக சேர்ந்து தன்னை இழுத்து கொண்டு போகும் அவனிடம் இருந்து கைகளை விடுவிக்க போராடினாள்!
அப்போது இடியென விழுந்தது அடி அவனுக்கு! திரும்பி பார்த்தாள்! அர்ஜுன்… அவனுடன் கௌதம்!
வாங்கிய அடியில் சுருண்டு விழுந்த அவனை தூக்கி நிறுத்திய அவனது நண்பர்கள்
“ஏய்… என்ன ஹீரோன்னு நினைப்பா உனக்கு…” என்று கை முஷ்டியை மடக்கி கொண்டு வர.
இருவரும் வந்தவர்களை இழுத்து அறைந்த வேகத்தில் சுருண்டு விழுந்தனர்!
பெட்டி பாம்பாக அடங்கிய அந்த நால்வர் குழுவில் இருந்த அஞ்சலியிடம் தகராறு செய்தவனை அழைத்த அர்ஜுன், அஞ்சலியின் கை பிடித்து
“டேய்… இப்போ இடிடா பார்க்கலாம்! தைரியம் இருந்தா இப்போ இடி பாக்கலாம்!…”
“சார்… வேணாம்… சார்…”
“டேய் இடிடா… சொல்றேன்ல…” கர்ஜித்தான்! இன்னமும் அவளை அவன் முன் இழுத்து
“சார்… பண்ணது தப்புத்தான்… வேண்டாம் விட்ருங்க…” என்றவனுக்கு விழுந்தது இன்னொரு அறை அர்ஜுனிடம் இருந்து!
“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலைய பண்ணுவ… நீ வா… போலிஸ் ஸ்டேஷனுக்கு போலாம்… அர்ஜுன் அவனுங்களை பிடி… ட்ரெயின் போனாலும் பரவால்ல… என் தங்கச்சி மேல கைய வைக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்…” என்று கௌதம் கொதித்தான்!
நால்வருமாக கெஞ்ச துவங்க
“சார்… விட்ருங்க… இனிமே இப்படி பண்ண மாட்டோம்! ப்ளீஸ்… எங்க எதிர்காலமே உங்க கைல தான் இருக்கு! தெரியாம பண்ணிட்டோம்! ப்ளீஸ் சார்… விட்ருங்க சார்…”
“எதிர்காலத்த பத்தி இப்போ தான் நினைக்கிறியாடா… நாயே! அது உனக்கு முதல்ல தெரியலையா?” என்று இன்னொரு அறை அர்ஜுன் குடுக்க
“சார் ப்ளீஸ் சார்…” என்று மற்ற அனைவரும் கெஞ்சினார்கள்!
“சரி திரும்பி பாக்காம ஓடி போய்டு… இங்க உங்க யாரையாச்சும் பார்த்தேன் தொலைச்சுடுவேன்… ஓடுங்கடா!” என்று கௌதம் கூறியவுடன் அவர்கள் அனைவரும் ஓடினார்கள்!
“எப்படி ஒரு ஆதரவு! இப்படி அண்ணன் கிடைக்க கொடுத்துத்தான் வைக்க வேண்டும்… எனக்கு தான் அந்த குடுப்பினை இல்லை…” என்று ஏக்கமாக நினைத்து கொண்டாள் மேகா! சசிதரன் செய்தது சிறிதும் பிடிக்கவில்லை! அவசரமாக இருவரையும் அழைக்க வந்தவளை, அவர்களை போக விட்டு
“நீ ஒன்னும் அங்கேயெல்லாம் போகாதே மேகா… அவங்க பார்த்துக்கட்டும்…” என்று இருக்க வைக்க முயல.
“ஏன் சசி… உங்க கூட இந்த ட்ரெயின்ல வந்த பொண்ணுதானே அஞ்சலி… பார்க்க போனா நீங்களும் இப்போ போய் இருக்கணும்… என்னையும் போக விடாம செய்றீங்க… சாரி சசி இது தப்பு!” என்று கூறி விட்டு விரைந்தாள்!
இந்த நிகழ்ச்சியை பார்த்து உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்த அஞ்சலியின் கையை பிடித்து கொண்டு ஆதரவாக மேகா தடவி குடுக்க அவளது முதுகில் ஒரு அடி வைத்த அர்ஜுன்,
“ஏய் அஞ்சலி… வந்து தொலை… இன்னும் என்ன பார்த்துட்டு இருக்க? இன்னும் எவன் கிட்ட வம்பு இழுக்கலாம்னா?”
அவன் சற்று சத்தமாக கூறவும் அஞ்சலி தன் சுய உணர்வுக்கு வந்தாள்! அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்த அஞ்சலியை பார்த்து
“இன்னும் என்னம்மா தாயே பிளான் பண்ணிட்டு இருக்க… ட்ரெயின் கிளம்ப போகுது… அங்க போய் உன் ப்ளான வெச்சுக்கோ…” என்று அர்ஜுன் ட்ரெயின் உள்ளே ஏறியவாறே கடுப்படிக்க
“டேய்… ஏன்டா அவ கிட்ட பாயற… பாவம் குழந்தை பயந்து போய் இருக்கா…” என்று வக்காலத்துக்கு வந்தான் கௌதம்!
“ஆமாம்டா… குழந்தையாம்… நீயே வெச்சு கொஞ்சிட்டு இரு… இங்கேயே…” . என்று அவனை காய்ந்தவன் அவளிடம் திரும்பி
“செருப்பால அடிக்கறாளாம்… கொஞ்சமாவது அறிவு இருக்கா உன் மரமண்டைல… வெளியூர் வந்த இடத்துல இப்படியா வம்பு இழுத்துக்குவ… பெரிய ஜான்சி ராணின்னு நினைப்பா உனக்கு…”
சரமாரியாக அவனிடம் இருந்து தாக்குதலை பெற்றவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க
“இப்போ என்ன உன் வாயில கொலுகட்டையா வெச்சுட்டு இருக்க? முதல்ல வாய் கிழிய பேசுவ… உன்னையெல்லாம் உங்க அப்பா எப்பிடி தனியா ட்ரெயின் ஏத்தி விட்டார்? அவரை சொல்லணும் முதல்ல…” அவளது அப்பாவையும் இழுத்து வைத்து அவன் பேச… கொதித்து எழுந்தாள் அஞ்சலி!
“ஹலோ… எங்க அப்பாவ இழுக்கற வேலையெல்லாம் வேணாம்… உங்க வேலைய பார்த்துட்டு போங்க…”
“ம்ம்ம்… ஆமா என் வேலைய பார்த்துட்டு இருந்திருக்கணும்… செய்யறதையும் செஞ்சுட்டு உனக்கு இப்படி வேற பேச்சு வேண்டி கிடைக்குதா?”
“என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி பேசுறீங்க… அவன் தப்பு பண்ணான் அதனால அடிச்சேன்… இதுல என்ன தப்பு…” சிலிர்த்து கொண்டு சண்டைக்கு வர
“தப்பே இல்ல… கரெக்ட் தான்… ஆனா டைமிங்னு ஒன்னு இருக்குல்ல… நீ இருக்கறது வெளியூர்… தனியா அந்த கடைக்கு போய் இருக்க… ட்ரெயின் கிளம்ப போற சமயத்துல இப்படி வம்பு வளர்த்துகிட்டா என்னவாகறது? உனக்கே அறிவு வேண்டாமா அஞ்சலி?” அவன் கூறுவது நியாயமாக இருந்தாலும் தவறை தவறென்று கூறாமல் சரியென்றா கூற முடியும்?
“அப்படின்னா தப்பு செய்றவன அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா அர்ஜுன்… உங்க கிட்ட இத எதிர்பார்க்கல…”
“அஞ்சலி முதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோ… எல்லா நேரத்துலயும் நம்ம உணர்ச்சிகள் ஜெயிச்சுட இடம் குடுக்க கூடாது… நம்ம மூளையும் யூஸ் பண்ணனும்… நீ அடிச்சது உன்னோட கோப உணர்ச்சி அதிகமானதுனால… அதுவும் வேணும் தான்… ஆனா இடம் பொருள் பாக்கணும்…”
“அப்படீன்னா அவன் மிஸ்பீகேவ் பண்ணத சகிச்சுக்க சொல்லவரீங்க… அதானே அர்ஜுன்…” அவனை கூர்மையாக பார்த்தபடி கேட்க
“இது தான் லூசுதனம் அஞ்சலி… அந்த இடத்த விட்டு உடனே காலி பண்ணி இருக்கலாம்… அதை தான் நான் சொல்றேன்… அது தான் விவேகம்! உன் கிட்ட இருந்தது வேகம் மட்டும் தான்… ஏன் உன் கூட மேகாவும் தான் இருந்தாங்க இல்ல… ஏன் அவங்க உன்னை கூப்டாங்க? இன்னும் குழந்தையாவே இருக்காத அஞ்சு!” பொறுமையாக அவன் கூறியது அவள் காதில் எட்டியதோ இல்லையோ மேகாவுக்கு எட்டியது!
“உன் நல்லதுக்கு தானே சொல்லறாங்க அஞ்சு… தப்பு இல்லப்பா…” என்று மேகா தனது ஆதரவு கரத்தை நீட்டினாள்!
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பொறுக்கிகளிடம் அவ்வளவு வேகத்தை காட்டியவன் தன்னிடம் இப்படி காய்வதை பார்த்த அஞ்சலிக்கு குழப்பமாக இருக்க அதை அவள் முகம் பிரதிபலித்தது! அதை புரிந்து கொண்ட அர்ஜுன்
“அப்போ அவனுங்க கிட்ட சண்டை போட்டா… உன்னை திட்ட கூடாதுன்னு என்ன சட்டமா என்ன? நீ பண்ணற தப்ப நான் சுட்டி காட்ட தான் செய்வேன்…”
அவன் தன்னை திட்டுவதை ஏற்று கொள்ள முடியாத அஞ்சலி கௌதமிடம் சரண்புகுந்தாள்!
“அண்ணா…” என்று அதுவரை தேக்கி வைத்த அழுகை வெளிப்பட கௌதமின் கழுத்தை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள்!
“டேய்… கண்ணா… அஞ்சும்மா… அழாதடா… தங்கம்ல…”
“நான் என்னண்ணா வேணும்னேவா சண்டைக்கு போனேன்… நானே ஷாக்ல இருக்கேன்… பாருண்ணா… அர்ஜுன… இப்படி திட்றான்…” என்று அழுது கொண்டே கூற ஆஹா இதற்கு தான் இந்த ட்ராமாவா என்று நினைத்த கௌதம்,
“சரிடா கண்ணா… அவனை அடிச்சுடலாம் செல்லம்… நீ அழாத… டேய் அர்ஜுன்… என் தங்கச்சிய திட்ற வேலை எல்லாம் வேண்டாம்…” என்று சொல்லி அவனிடம் கண்ணடிக்க
“ஏய் எலி… சந்தடி சாக்குல அவன் இவன்னு சொல்ற நீ…” என்று கடித்து விட்டு கௌதம் முதுகில் ஒரு அடி வைத்து
“டேய் கௌதம்… போதும்டா அவளுக்கு நீ செல்லம் குடுத்தது… தாங்க முடில… ஒரு பாசமலர் சினிமாவே ஓட்டி காட்டுறீங்க ரெண்டு பேரும் சேர்ந்து… சரிடா கண்ணா அடிச்சுடலாமாம்… டேய்… புல்லரிக்குதுடா!”
“ஏன்… எங்க அண்ணன் என்னை கொஞ்சுறாங்க… உங்களுக்கு என்ன?” என்று முகத்தை தேய்த்து கொண்டு அவனிடம் அழகு காட்ட.
ஒரு நிமிடம் இமைக்க மறந்தான் அர்ஜுன்!
அதே காட்சியை தன்னிடம் இப்படி பாசத்தை காட்ட அண்ணன் இல்லையே என ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மேகா!
அவள் ஏக்கத்துடன் பார்ப்பதை பார்த்து கொதித்து கொண்டிருந்தான் அது வரை பேசாமலேயே இருந்த சசிதரன்!
***
ரயில் கடப்பாவை தாண்டி போய் கொண்டிருந்தது! தின்பண்டமாய் வாங்கி தர சொல்லி கௌதம்மை மொட்டை அடித்து கொண்டு இருந்தாள் அஞ்சலி!
“ஐயோ… இதுக்கு பேசாம நான் பிளைட்லேயே போயிருப்பேன்டி எருமை! இப்படி தீனி திங்கற? உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கி குடுத்தே நான் போன்டி ஆய்டுவேன் போல இருக்கே எலி…”
“டேய் அண்ணா… என்னை பார்த்து கண்ணு வைக்காத… அப்புறம் என்னால சாப்பிட முடியாது… இளைச்சுடுவேன்!”
“இளைக்கறதா… நீயா… நோ சான்ஸ்… அதுவும் சாப்பிடாம இருந்து இளைக்கறதா? எப்படி செல்லம் இப்படி நீ புருடா விட்டுட்டு திரியற…”
“இரு மவனே… நீ இப்படி சொன்னேன்னு மஞ்சும்மா கிட்ட சொல்றேன்…”
“ஓ… ஒரு மணி நேரம் உன் பெரியம்மா எனக்கு செமினார் நடத்தனுமா? அதுக்கு தானே நீ பிளான் பண்றது!”
“தெரியுதுல்ல… ஒழுங்கா போய் எனக்கு கப் நூடுல்ஸ் வாங்கிட்டு வா கௌஸ்!”
“ம்ம்ம்… எல்லாம் நேரம்டி… உன் செல்லம் ஓவரா போயிட்டு இருக்கு… தட்டி கேக்க ஆள் இல்லாம தான் இப்படி ஆடுற… இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு ஒருத்தன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போற எலிகுட்டி… பாரு…” கௌதம் நொந்து போய் சொல்ல
“சாபமா… ஹஹஹா… போடா லூசு… உன் சாபம் என்னை ஒன்னும் பண்ணாது… உனக்கு வர அண்ணிக்கு நான் முதல்லயே ட்ரைனிங் குடுத்து உன்னை கொடுமை பண்ண வைக்கில… என் பேரு அஞ்சலி இல்ல…”
இருவரும் போட்டு கொண்ட சபதங்களை பார்த்து வயிறு வலிக்க சிரித்த அர்ஜுனும் மேகாவும்!
“அஞ்சலி உன் பேர மத்திக்க போறியா?” என்று அப்பாவியாக மேகா கேட்க
“நீயுமா மேகா… முடில… ஷப்பா… எத்தனை பேர் கிட்ட தான் அடி வாங்குறது… இப்போவே கண்ணை கட்டுதே!”
“ஹேய்… நான் உனக்கு தான் சப்போர்ட்… நீ கவலை படாத…”
“ஹப்பா… தாங்க் யூ… தாங்க் யூ… எப்பூடி…” என்று அஞ்சலி கேட்க
“ஹேய்… கூட்டணி சேர்த்துகிட்டா மட்டும் விட்ருவோமா? உன் பேரு இப்போ மட்டும் அஞ்சலின்னு யாரு சொன்னது… எலிக்குட்டி?” என்று அர்ஜுன் கலாய்க்க
“வேணாம் அர்ஜுன்… அப்புறம் உங்களுக்கும் நிக் நேம் வைச்சுடுவேன்… அப்புறம் நீங்க தான் அழுவீங்க!”
“யாரு… நானா? ஆசை தான் உனக்கு… நீ அழாம இருக்கியான்னு பாரு… அப்புறம் உன் அண்ணன் கிட்ட கம்பளைன்ட் பண்ணிட்டு அழுவ… அவனும் அர்ஜுன அடிச்சுடலாம் செல்லம்ன்னு ஓவரா ரீல் ஓட்டி காட்டுவான்… ஆனா சின்ன வயசு பழக்கம் இன்னும் மாறல எலிகுட்டி உனக்கு!”
“வேணாம்… மறுபடியும் இப்படி சொன்னீங்கன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” என்று வீராவேசமாக கூற
“இப்போ மட்டும் நீ மனுஷின்னு யாரு ஒத்துகிட்டது? நீ ஒரு ராட்சசின்னு தானே சொல்றேன்…”
“அர்ஜுன்ன்ன்ன்…”
“ஹேய்… நீ இப்படி மிரட்டினா மட்டும் நீ ஒரு பொண்ணுன்னு ஒத்துக்கவா முடியும்? அதான் பார்த்தேனே…”
அவனை பார்த்து அஞ்சலி முறைக்க
கௌதம் சிரித்து கொண்டே
“டேய் எலிக்குட்டி… உனக்கு வர மாப்பிள்ளை இப்படி உன்னை இவன மாதிரி தாளிச்சு எடுக்கனும்டா… பேசாம அர்ஜுன் கிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாம்… என்ன ஓகே வா?”
“பாவம் அஞ்சலி… ஏங்க ரெண்டு பேரும் இப்படி அவங்கள ஓட்றீங்க?” என்று மேகா சிரித்து கொண்டே கேட்க
“பாவமா… யாரு என் தங்கச்சியா… மேகா இப்படி நீங்க அப்பாவியா இருக்கீங்களே… அவளை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது…” என்று கௌதம் மேகாவிடம் சொல்வதை பார்த்த அஞ்சலிக்கு கோபத்தால் முகம் சிவந்தது!
“நீ மேகா கிட்டயும் என் பேர டேமேஜ் பண்றியா? இந்த அழகுல ட்ரைனிங் வேறயா… வேணாம்டா அண்ணா…”
“ட்ரைனிங்கா குடுத்துட்டா போச்சு! ஹேய் எலிக்குட்டி எனக்கு ஓகே! குப்பன், சுப்பன்னு யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வா எலி… நல்லா ட்ரைனிங் கொடுத்துடலாம்… ஓகே வா!”
கோபம் மிகுதியாக அஞ்சலி
“நான் எதுக்கு குப்பன் சுப்பன்னு கூட்டிட்டு வர போறேன்? எனக்கு வர ஹஸ்பண்ட் ரொம்ப ஹன்ட்சமா… செம ரிச்சா தான் இருப்பான்… நீங்க ரெண்டு பேரும் பாக்கத்தானே போறீங்க…”
“எப்பிடி என்னை மாதிரி தானே…” என்று அர்ஜுன் வம்பிழுக்க
“போயும் போயும் உங்களை மாதிரியா… சான்சே இல்ல… நான் தான் சொன்னேனே… ஹன்ட்சம்… ரிச்ன்னு… இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத விஷயம் அர்ஜுன்! மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பார்ட்டி தௌசன்ட் இருக்குமா உங்க சாலரி?”
கௌதம் பதறி போய்
“ஹேய் அஞ்சு… நீ நினை…” என்று கூறும் போதே அவனை கையமர்த்தி விட்டு கண்களால் சொல்ல வேண்டாம் என சைகை செய்து விட்டுஞ்அர்ஜுன் கண்கள் சுருங்க,
“ம்ம்ம் ஆமாம்… முப்பத்து அஞ்சு தான் வாங்குறேன்… உனக்கு ஓகே வா!”
“ம்ம்ம்… அதே தான்… நமக்கு இதெல்லாம் பத்தாது… எனக்கு நல்லா பெரிய பணக்காரன் தான் வேணும்… உங்களை மாதிரி மாச சம்பளம் வாங்குற குப்பன் சுப்பன் எல்லாம் வேணாம்!”
“பேச்சு வெள்ளியை போன்றது ஆனால் மௌனம் தங்கத்தை போன்றது”
என்று அஞ்சலிக்கு உணர்த்த போகின்ற கணம் இதுவாக ஆகி விட்டதை என்ன சொல்ல? அவனை மடக்கும் நோக்கத்தோடு மட்டுமே அஞ்சலி கூறிய வார்த்தைகள் இவை… குப்பனோ சுப்பனோ என்று அர்ஜுன் கூறியதற்கு! ஆனால் அன்று அவளுக்கு நாக்கில் சனி உட்கார்ந்து கொண்டு நடனமாடி இருக்க வேண்டும்! இல்லையென்றால் ஏன் இப்படி வாயை விடுகிறாள்! இதை கேட்ட மேகாவும் அவளிடம் கிசுகிசுப்பாக
“அஞ்சலி… என்ன இது… இப்படி சொல்ற… பாரு அர்ஜுன் அண்ணா முகத்தை… எப்படி அப்செட் ஆகிட்டாரு! நீ சொல்றது தப்பு அஞ்சலி…”
“ஹேய் மேகா… ச்சும்மாப்பா… விளையாட்டுக்கு தான் மேகா!”
“உன் விளையாட்டு வினையாகிட கூடாது அஞ்சலி!”
இருவரும் கிசுகிசுப்பாக பேசி கொண்டே இருக்க
அஞ்சலியை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்த அர்ஜுன் மனம் வலிக்க எழுந்து சென்றான்! அவன் பின்னர் கௌதமும் எழுந்து செல்ல இருவரும் ரயில் கதவு பக்கம் போய் நின்று கொண்டனர்!
“நான் சொன்னது உண்மையாயிடுச்சு பாரு அஞ்சலி… அர்ஜுன் நிஜமாவே அப்செட் ஆகிட்டார்ப்பா… போய் சமாதானம் சொல்லு அஞ்சலி!”
“ஹேய் அதெல்லாம் சும்மா மேகா… போனா ரெண்டு பேரும் சேர்ந்து மறுபடியும் என்னை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க… பரவால்ல அவங்களே வரட்டும்…”
***
இருவரும் மௌனமாக வெளியே வெறித்து பார்த்து கொண்டு வந்தனர்!
ரயில் குண்டக்கல் நோக்கி போய் கொண்டிருந்தது! மணி எட்டாகி இருந்தது! மெதுவாக ஆரம்பித்தான் கௌதம்,
“அர்ஜுன்… அப்செட்டா?”
“ம்ம்ம்… ஏன் கௌதம் அப்படி சொன்னா?”
“அவ விளையாட்டு குழந்தை அர்ஜுன்… அவ சொன்னத எல்லாம் பெருசா எடுத்துக்காத… சியர் அப் மேன்!”
“அந்த குழந்தையை எனக்கு பிடிச்சிருக்கே கௌதம்!” என்று மனம் வலிக்க கூறினான்!
“அர்ஜுன்… என்ன சொல்ற நீ!” என்று அதிர்ந்தான் கௌதம்!
“எஸ் கௌதம்… எதுனால அவ என் மனசுக்குள்ள வந்தான்னு சொல்ல தெரியல… இது இந்த ரயில் பயணத்தோடு முடியற விஷயமா எனக்கு தெரியல!… ஆனா நான் அவ கிட்ட கண்டிப்பா சொல்ல மாட்டேன்டா…” குரலில் இருந்த வலி தெரிந்தது!
“என்னாச்சுடா… கம் அவுட் அர்ஜுன்!”
“இனிமே நான் மாச சம்பளக்காரன் இல்லை… சம்பளம் குடுக்கறவன் தான்னு சொல்லி அவ கிட்ட பிச்சை கேக்க முடியுமா? இல்லை என்னோட ஸ்டேடஸ் தெரிஞ்சு அவ என்னை லவ் பண்ணா ஏத்துக்க முடியுமா… அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த வார்த்தை தான் தோன்றிகிட்டே இருக்கும்… வேணாம் கௌதம்…” என்றான் அடிபட்ட குரலில்!
“இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அர்ஜுன்… நீ அவளை லவ் பண்ணுன்னு சொல்லவே மாட்டேன் ஏன்னா அது கண்டிப்பா சரி வராது ஆனா அவ விளையாட்டா தான் சொல்லி இருப்பா அர்ஜுன்… அத மட்டும் தான் நான் உனக்கு சொல்ல முடியும்டா!”
இதை சொல்லி கொண்டிருக்கும் போதே ஏதோ எரியும் வாடை வரவே
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்!
சுற்றிலும் பார்த்து விட்டு சட்டென்று கதவை திறந்து பார்த்த கௌதம் அதிர்ச்சியாகி உறைந்தான்!
அடுத்த முதல் வகுப்பு ஏசி கோச்சில் புகை வர லேசாக நெருப்பு வெளியே தெரிந்தது!





