அத்தியாயம் பதினைந்து
பதிலே பேசாமல் மௌனமாக வீடு வந்தவர்கள் அனைவரும் யோசனையிலேயே இருந்தனர்! மௌனத்தை கலைத்தது அர்ஜுன்.
“கொஞ்சம் யோசிச்சு பேசு மேகா… நீ சொல்றது கண்டிப்பா சரியா வராதும்மா…” பொறுமையாக கூறினான்… என்ன இந்த பெண் இப்படி குண்டை தூக்கி போடுகிறாள் என்ற ஆற்றாமையோடு!
“யோசிக்க ஒன்னும் பெருசா இல்லண்ணா… இதுதான் என்னோட முடிவு… ராத்திரி எல்லாம் யோசிச்சேன்… என் சசி என்கிட்டே கடைசியா கேட்டது அவரோட அக்காவ பார்த்துக்க சொல்லித்தான்… அவங்களுக்காகவாவது நான் இருந்தே ஆகணும்னு புரிஞ்சுகிட்டேன்… அதான் இப்படி ஒரு முடிவு…”
“சரி நீ சொல்றது சரி… சசியோட அக்காவ பார்த்துகோ ஆனா ஏன் விதவை அது இதுல்லாம் பேசற மேகா…” அஞ்சலி வேதனையோடு கேட்டாள்!
“இதுல என்ன அஞ்சலி இருக்கு… அது தானே உண்மை… என்னோட சசி இறந்து போனாலும் அவரோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… இது தான் உண்மை…”
மனம் வலிக்க அவளை பார்த்து கொண்டிருந்த கௌதம்.
“சரி… அவன் நல்லவனாவே இருந்தாலும் உன்னை கடத்திட்டு போனவன் மேகா…” என்று கூற
“இல்ல… அவர் கூட நான் தான் வந்தேன்… இன்னும் எங்க கூப்பிட்டு இருந்தாலும் போய் இருப்பேன்… இப்போவும்… போ… போவேன்…” என்றவளது குரல் கலங்கி தேய்ந்தது.
கௌதம் ஒரு நிமிடம் யோசித்தவன்,
“இதுக்கு பேர் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மேகா… உன் அப்பா ஒரு வியாபாரி… அவருக்கு வியாபாரத்துல ஆயிரம் வழிமுறை இருக்கலாம்… அதுல எதாச்சும் ஒரு வழில சசி பாதிக்க பட்டு இருக்கலாம்… அவனை பத்தி தப்பு சொல்லல… ஆனா ஒரு விஷயத்த தெரிஞ்சுக்கோம்மா… ஆல் இஸ் ஃபேர் இன் பிசினெஸ்!”
அதை ஆமோதித்த அர்ஜுன்,
“ஆமா மேகா… கௌதம் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை… ஒரு வியாபாரியா இதை நானும் சொல்றேன்… எல்லா நேரத்திலும் நாம உண்மையோட நடக்க முடியாதும்மா… ஒரு விஷயத்துல வெற்றி வேணும்னா ஒரு சில விஷயத்த செஞ்சு தான் ஆகணும்… ஒரு சில விஷயத்த கண்டுக்க கூடாது… இப்படி நிறைய இருக்கும்மா… இத வெச்சு நீ அப்படி முடிவு எடுத்து இருக்கறது தப்பு…” உண்மை தெரியாமல் கணபதிக்கு பரிந்து கொண்டு இருவரும் பேச.
“ஒரு சில விஷயத்த செய்யனும்னு சொல்றீங்களே… என்னண்ணா? ஒரு அப்பாவி பொண்ண க்ரூப் ரேப் பண்றதா? இல்ல… சொத்த அபகரிக்க கொலை பண்றதா…” குரலில் சிறிதும் உணர்வின்றி தேங்காய் உடைத்தது போல மேகா கேட்க இருவராலும் பேச முடியவில்லை… அதிர்ச்சியில் வேரோடி போயினர் மூவரும்!
“என்னண்ணா பதிலே காணோம்… அப்போ இந்த விஷயத்த கேட்டப்போ எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு நினைச்சு பாருங்க…” என்று சொல்லி சசியின் கதையை முழுதாக கூறியவள் கடைசியில் கதறியபடி முடித்தாள்!
“என் அப்பாவ பத்தி இப்படி சொல்றதுக்கு எனக்கு முடில… ஆனா நான் தெளிவா இருக்கேன்… தப்பு செய்தது யாரா இருந்தாலும் தண்டனைல இருந்து தப்பிக்க கூடாது… அதே மாதிரி தப்பே செய்யாம தன்னை மறந்துட்டு இருக்கற சசியோட அக்காவுக்கு நான் ஏதாவது செய்யணும்…”
சசி… நீ இறந்து விடவில்லை… இவளுடைய உருவில் உனக்கான நியாயத்தை தேடிகொண்டிருக்கிறாய் என்று உரக்க கத்த தோன்றியது கௌதமுக்கு! அப்போது அதை முடிவு செய்தான் கௌதம்… அவளது வழியில் போய் தான் தன்னுடைய வழிக்கு கொண்டு வர முடியும் என்று.
ஆண்களின் உறுதி கல்லை போன்றது… போகும் திசையை மாற்ற முடியாது ஆனால் உறுதியைதன்மையை உடைத்து விடலாம்… பெண்களின் உறுதி நீரை போன்றது… அவர்களின் உறுதி தன்மையை மாற்ற முடியாது ஆனால் போகும் திசையை திருப்பி விடலாம்…
அதை சரியாக உபயோகபடுத்தினான் கௌதம்… தொண்டையை கனைத்து கொண்டவன்
“ஆமா மேகா…” இடைவெளி விட்டவன் “நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி… கண்டிப்பா நீ அதை செய்து தான் ஆகணும்…”
“தேங்க்ஸ் கௌதம் அண்ணா…” நன்றியாக கூறினாள் மேகா.
“ஆனா தயவு செஞ்சு என்னை அண்ணான்னு கூப்பிடாத… நீ என்னை லவ் பண்ணலன்னு இப்படி நீ ப்ரூவ் பண்ண வேண்டாம்…” முறைத்தவாறே கூற கௌதமை ஏறிட்டு பார்த்து தலையை அசைத்தாள்!
அஞ்சலியும் அர்ஜுனும் புரியாமல் ‘ங்கே’ என்று கௌதமை பார்த்து விழித்தனர்… மேகா அறியாமல் அர்ஜுனுக்கு ஜாடை காட்டியவன்… தொடர்ந்தான்!
“மேகா… உன் அப்பா செய்தது மிக பெரிய தப்பு… கண்டிப்பா யாராலையும் தாங்கிக்க முடியாது… சசி பாவம் தான்…” மேகாவின் மனதை ஆசுவாசப்படுத்தினான்!
மேகா நன்றியாக கௌதமை பார்த்து
“உங்களுக்கு புரியுதில்லையா கௌதம்?” என்று குரல் கமற கேட்டாள்!
“கண்டிப்பா மேகா… உன் பின்னாடி நான் இருக்கேன்ம்மா… நீ எடுத்து இருக்கற முடிவு ரொம்ப சரி மேகா…”
“தேங்க்ஸ் கௌதம்… நீங்களாவது என்னை புரிஞ்சுகிட்டீங்களே…” என்று மனமார நன்றி உரைத்தாள்.
“நீ என்ன கஷ்டம்னாலும் என் கிட்ட சொல்லு… நான் இருக்கேன்… நான் உன்னோட பிரெண்ட்… ஓகே வா?” என்று கேட்க
“ம்ம்ம் ஓகே…” என்று பதில் கூறினாள் மேகா!
“ஓகே பிரெண்ட்ஸ்…” என்று கௌதம் கை குடுக்க ஒரு கணம் தாமதித்தவள் கை குடுத்து
“பிரெண்ட்ஸ்…” என்று கூறி சிரிக்க
“ஆனா மேகா… இப்போ உன் படிப்பு பாதில நிக்குதே… அதுக்கு என்னப்பா பண்ணலாம்?” ஆதரவாக பேசி கொண்டே கேட்டான்!
“ம்ம்ம்… இன்னும் ஒன் இயர் தான் கௌதம்… கண்டிப்பா அதை நான் முடிச்சாகனும்… என் சுய கால்ல நிற்க வேணாமா?”
“பின்ன… அப்போ தானே உங்க அப்பா பிசினசை நீ உன் கண்ட்ரோல்ல கொண்டு வர முடியும்…”
“நோ… அது மட்டும் முடியாது… அவர் சம்பாரிச்ச எதுவுமே எனக்கு வேணாம்…” மீண்டும் முருங்கை மரத்தில் ஏற துவங்க
“உங்க அப்பா கெட்டவர்தான்… ஆனா அவர் வளர்த்து வச்ச அந்த நிறுவனம் என்ன பண்ணுச்சு மேகா… ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடற வியாபாரம் அது… அந்த தொழிலாளர்கள நடு தெருவுல நிறுத்த போறியாம்மா… இது உனக்கே நல்லதா படுதா?… உன் பின்னாடி நாங்க எல்லாரும் நிற்போம் மேகா…” அவன் உறுதியாக திடமாக ஆனால் மென்மையாக கூறிய அணுகுமுறை சரியான இடத்தை சென்றடைந்தது… மேகாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்…
“நானா… எனக்கு அந்த வேலை வேணாம் கௌதம்… அது பாவப்பட்ட பணம்?” குரலில் வலியோடு அவள் கூறியபோது அந்த வலி கௌதமையும் தாக்கியது… அர்ஜுனும் அஞ்சலியும் நடுவில் குறுக்கிடாமல் அவனுக்கு பேச இடமளித்து கேட்டு கொண்டிருந்தனர்!
“ஆமாம் மேகா… கண்டிப்பா அது பாவப்பட்ட பணம் தான்… அந்த பணத்துனால நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க தானே… அந்த பாதிக்க பட்டவங்களுக்கு எப்படிம்மா திருப்பி குடுப்ப?” … இடைவெளி விட்டு… “குடுப்ப தானே…”
“கண்டிப்பா கௌதம்…” அவள் கண்களில் அப்பாவித்தனமான உறுதி தெரிந்தது.
“அப்படீன்னா நீ உங்க பிசினஸ கைல எடுத்தா மட்டும் தான் முடியும் மேகா…” குறி பார்த்து அடித்து வீழ்த்தினான்… அவளறியாமல்!
“அப்படியா சொல்றீங்க கௌதம்?” அப்பாவித்தனமாக கேட்டாள் மேகா.
“நீ அங்க உள்ள நிர்வாகத்த கைல எடுத்தா தான் சசியோட அக்காவுக்கு ஏதாவது செய்ய முடியும் மேகா… ஏமாத்தி வாங்குன சொத்துன்னு சொல்றியே அதை கூட திருப்பி குடுக்கலாம்… என்ன சொல்ற நீ… தைர்யமா முடிவு பண்ணு மேகா… உனக்கு நா… நாங்க எல்லோரும் இருக்கோம்…”
வெற்றிகரமாக இரண்டாவது முறையாக அவளை குழப்பி விடுவதில் வெற்றியின் ஓரத்தில் இருந்தான் கௌதம்! அதுவும் சரியாக அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து பிடிக்க வேண்டிய இடத்தில் பிடித்தான்!… உண்மையை ஆராய்ந்தால் மேகா ஒரு சில விஷயங்களில் அப்பாவி… சொல்வதை அப்படியே நம்பும் சிறுபிள்ளைத்தனம் மிகுந்தவள்… அதை சசி பழிவாங்க உபயோகித்தான்! இப்போது கௌதம் அவளை காப்பாற்ற உபயோகப்படுத்தினான்! அவளது கவனத்தை திசை திருப்ப நிர்வாகத்தில் நுழைத்தால் தான் சரி வரும் என்று எண்ணியவன் அப்படி நிர்வாகம் செய்யும் போது சசியின் சொத்தை அவளது முயற்சியால் அவனது அக்காவிடம் ஒப்படைத்தால் அவளுக்கும் குற்ற உணர்ச்சியின் பெரும் பகுதி குறையும் என்பதோடு வெளி உலக அனுபவமும் இலவச இணைப்பாக கிடைக்கும்!
அவன் போகும் திசையை புரிந்து கொண்ட அர்ஜுனும் அஞ்சலியும் அவனை ஒட்டியே பேச பேச மூவருமாக சேர்ந்து அவளை வெற்றிகரமாக குழப்பி விட்டனர்! சில நேரங்களில் ஒரு விஷயத்தை குழப்பி விடுவதும் நன்மையில் முடிவதுண்டு! நாரதர் கலகம் நன்மைக்காக அல்லவா?
படிப்பை தொடர்ந்து கொண்டே நிர்வாகத்தை கையில் எடுக்க முடிவானது! அதை உடனே மேகாவின் தாய்க்கு தெரிவித்து விட்டு சென்னை வருவதை அவருக்கு உறுதி செய்தனர்! மற்ற விஷயங்களையும் அப்படியே பேசி பேசி வழிக்கு கொண்டு வந்தான் கௌதம்… என்னவென்றால் நேராக இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்லாமல் அவளுடனே ஒத்து பாடி விட்டு அவனது வழிக்கு கொண்டு வரும் கலையை மிகவும் நன்றாகவே கற்று தேறினான்!
***
மேகாவின் கார் அந்த வளாகத்தினுள் நுழைந்தது! காவலாளி வந்து அவசரவசரமாக திறந்து விட இறங்கிய மேகாவுககு உள்ளுக்குள் உதறல்! தன்னால் நிர்வாகம் செய்ய முடியுமா என்கிற சந்தேகம் அவளை ஆட்டுவித்தது! வலது காலை வைத்து உள்ளே செல்ல யோசித்து கொண்டு நின்றவளின் செல்பேசி கணைக்க காதுக்கு குடுத்தாள்… கௌதம்!
“ஹாய்… என்னப்பா உள்ள போயிட்டியா? இல்ல யோசிச்சிட்டு வெளிய நின்னுட்டு இருக்கியா?” ஆஹா கண்டுபிடித்து விட்டானே… என்று வியந்தவாறே
“ம்ம்ம்… ஆமாம் கௌதம்! கொஞ்சம் பயமா இருக்கு… கூட யாராச்சும் இருந்தா நல்லா இருக்கும்…” குரலில் நடுக்கம் வெளிப்படையாக தெரிய
“ம்ம்ம்… அப்படியா? கொஞ்சம் ரைட்ல திரும்பி பாரு!”
சட்டென திரும்பியவள் அங்கே கௌதமை பார்க்கவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போல முகம் பிரகாசமானது!
“அடபாவி… இங்க இருந்துட்டே தான் லைவ் ரிலே பண்ணுனீங்ளா?” என்று சிரிக்க அதை கேட்டு சிரித்தவாறே அருகே வந்த கௌதம்
“என்னப்பா… இன்னும் நல்ல நேரம் வரலையா? இங்கயே நின்னுட்டு இருக்க?” புருவத்தை உயர்த்தி கேட்க.
“இல்ல கௌதம்… ஒரு பயம் தான்!” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த கணபதியின் உதவியாளர் பெருமாள்,
“சின்னம்மா… சார் தான் நம்ம விளம்பரம் எல்லாம் எடுக்க போறாங்கம்மா… அப்பா தான் முடிவு பண்ணி வெச்சு இருந்தாங்க…” என்று கூறியவுடம் அவளையும் மீறி ஒரு குறுஞ்சிரிப்பு படர்ந்தது!
“ஏன் அங்கிள்… கொஞ்சம் நல்ல ஆட் டைரக்டர் கிடைக்கலையா?” என்று குறும்பாக கேட்கவும்… அதை ரசித்து கொண்டே
“ஏதோ தெரிஞ்ச வரைக்கும் ஆபீசர்… செஞ்சுட்டு இருக்கேன் ஆபீசர்!… தப்பு எதாச்சும் பண்ணா கோவுச்சுக்காதீங்க ஆபீசர்… ஓகே வா ஆபீசர்…” வளைந்து கொண்டு நக்கலாக கலாய்க்க மேகா மனம் விட்டு சிரித்தாள்! விளையாட்டாக பேசியபடியே உள்ளே சென்றவர்களை பார்க்க கடையில் பணிபுரியும் முக்கியமானவர்கள் வந்து இருந்தனர்!
அறைக்கு சென்றவுடன் நாற்காலியில் அமரும் முன் யோசனையாக நின்றாள்.
“என்னப்பா?” என்று ஆதூரமாக கேட்ட கௌதமிடம்
“சசி… இல்லையே கௌதம்…” குரலில் இருந்த வேதனை அவனது நெஞ்சை பிழிந்தது! அருகில் வந்து முதுகை தடவியவன், கைகளை பற்றி… கண்களை நேராக பார்த்து
“சசி இல்லடா… அது தான் உண்மை… உண்மை கசக்கத்தான் செய்யும்… மொத்தமா மறந்துடுன்னு சொல்லல… அது கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும்… கொஞ்சம் கொஞ்சமா உண்மைய ஏத்துக்கோ மேகா…”
அந்த மென்மையில் சசி கொஞ்சம் கொஞ்சமாக விலகி போக ஆரம்பித்தான்!
***
“என்ன மேடம் சொல்றீங்க? பெயில்ல எடுக்க வேணாமா? ஏன் மேடம் நீங்களே இப்படி சொல்றீங்க?” கணபதியின் வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் அதிர்ந்தார்!
“லாயர் சார்… நான் இதுக்கு விளக்கம் குடுக்கனும்ன்னு அவசியம் இல்ல… என்னோட முடிவு இதுதான்! அதோட அவருக்காக நீங்க வாதாடவும் வேணாம்…” தெளிவாக திடமாக அவள் உரைத்த இந்த வார்த்தைகள் பிருந்தாவை கலங்கடித்தது! பெயிலில் கணபதியை எடுப்பது பற்றி பேச வீடு வந்த வக்கீலிடம் தான் மேகா பேசி கொண்டிருந்தாள்!
“மேகா… என்னடா சொல்ற? அப்பாடா… உன் அப்பா… என்னதான் கோபம் இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப டூ மச் மேகா…” அழுகை பாதியும் கோபம் பாதியுமாக உரைத்த தன் தாயை பார்த்து
“அப்பா… ஆட்டுக்குட்டி… பொண்ணு இதெல்லாம் இப்பதான் உங்களுக்கு நினைவுக்கு வருதா? இத்தனை நாள் எங்க போய் இருந்தது இந்த நினைப்பு? அப்பா தப்பு வழியில போக ஆரம்பிச்சப்ப நீங்க தடுத்திருந்தா இதெல்லாம் நடந்து இருக்காதேம்மா… ஒரு குடும்பமே சீரழிஞ்சு போயிருக்காதே… என் மேல கொஞ்சம் அக்கறை காட்டி இருந்தா நானும் ஏங்கி போயிருக்க மாட்டேனே… ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேங்கற மாதிரி நீங்க நடந்துகிட்டீங்களே… இதை பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்ல… என்னோட முடிவு இதுதான்…” என்று முழுவதுமாக முடித்து விட்டாள்!
“பாப்பா யோசிச்சு சொல்லுங்க… மூணு பசங்க கேஸ் விட இப்போ பைல் ஆகி இருக்கற கேஸ் எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் பாப்பா… வாதாடலைன்னா கேஸ் நம்ம அப்பாவுக்கு எதிரா தான் தீர்ப்பாகும்… அதுவும் அந்த பொண்ணு ரம்யா அதாவது சசியோட அக்கா கேஸ்ல சாட்சி கூட நமக்கு சாதகமா இல்லம்மா… எப்படியாவது அப்பாவ காப்பாத்தலைன்னா கண்டிப்பா அப்பாவுக்கு அதிகபட்ச தண்டனை கிடைச்சுடும்… தயவு செஞ்சு வாதடனும் பாப்பா…” பெருமாள் தன்னால் இயன்றவரை மேகாவை சமாதானப்படுத்த முயல
“இல்ல அங்கிள்… இது யோசிச்சு எடுத்த முடிவு தான்… அந்த ஆள் இனிமே என் கண்ணுல பட கூடாது… அப்படி பட்டா அது அவரோட பிணமாத்தான் இருக்கணும்!”
***
ஓசோன் தலைமையகம் பரபரப்பாக சுழன்று கொண்டு இருந்தது சேர்மன் வானமாமலையின் வருகை அனைவரையும் அமர விடாமல் பறக்க செய்து இருந்தது! வானமாமலையின் இயல்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்று! வேலை செய்வதே தெரியாமல் ஆனால் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்ய வைப்பவர் என்ற பெயர் அவருக்குன்டு! கண்டிப்பான ஆனால் அன்பான முதலாளி… அர்ஜுன் இதில் அப்படியே தன் தந்தையை கொண்டிருந்தான்! அவனுக்குமே பரபரப்பு தொற்றி கொண்டது! தன் முழு மேற்பார்வையின் இயங்கும் அலுவலகத்திற்கு வருகை தரும் தன் தந்தையை நினைத்து… அவர் அவனது தந்தை மட்டுமில்லாமல் குருவாகவும் நண்பனாகவும் இருந்து வழிநடத்தும் ஆசானை கண்டு மரியாதையை குடுப்பது தவறில்லையே! இப்போதோ வேறொரு பயமும் சேர்ந்து கொண்டதல்லவா! அஞ்சலியை பார்த்து தான் சம்மதம் தெரிவிப்பேன் என்று சொல்லி விட்டு மும்பை வந்திருந்தார்!
நேரம் தவறாமல் வளாகத்தினுள் நுழைந்தவர் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆராய்ந்தார்! ஒவ்வொரிடமும் சென்று பேச ஒரே நாளில் அர்ஜுன் அலுவலகம் வானமாமலையின் ரசிகர் சங்கம் ஆனது! இதில் உள்ளுர நடுங்கி கொண்டிருந்த ஜீவாத்மாவும் உண்டு! அது தான் மேன்மை தாங்கிய அஞ்சலி! அர்ஜுனிடம் அவரை கலாய்த்தவள் ஆயிற்றே! அர்ஜுனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவனது தந்தைக்கு மட்டும் வணக்கம் தெரிவித்து விட்டு நெருப்பு கோழி போல கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் முகம் புதைத்து கொண்ட அவளை பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்து தன் தந்தையுடன் சென்றான் அர்ஜுன்!
அறைக்கு சென்றவுடன் அஞ்சலிக்கு அழைப்பு வந்தது! இந்த அர்ஜுன் எந்த வம்பும் இழுத்து வைக்காமல் இருந்தால் போதுமே என்று ஊரில் உள்ள கடவுளை எல்லாம் வேண்டி கொண்டு உள்ளே சென்றவள் சேர்மன் எதிரில் அமரும் முன்னமே வியர்த்து விறுவிறுத்து போனாள்!
“வாம்மா… நீ தான் அஞ்சலியா?” முகத்தில் புன்னகையோடு கேட்க
“ஆமாப்பா… ஆனா கூப்பிடறது அபிதகுஜலாம்பாப்பா…” என்று முந்தி கொண்டு பதிலளித்தவனை பார்த்து முறைத்து விட்டு அஞ்சலியை பார்க்க
“எஸ் சார்…” நடுங்கி கொண்டே
“என்ன படிச்சிருக்க?”
“வேலை செய்ய தெரியாத அளவு படிச்சு இருக்காப்பா… ஹிஹி… பி. ஈ எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்…” என்று மறுபடியும் முந்தி கொண்டு முறைப்பை வாங்கினான்!
“பி. ஈ… ட்ரிபில் ஈ சார்…” அர்ஜுனுடைய கிண்டலும் சேர்த்து நடுக்கத்தை அதிகரித்தது!
“சொந்த ஊர் சென்னையாம்மா?”
“ஆமாப்பா…” மறுபடியும் அர்ஜுனிடம் இருந்து பதில் வர
“டேய் தம்பி… நீ அஞ்சலியா இல்ல இவ அஞ்சலியா?” என்று கிண்டலாக கேட்க
“நீங்களே கேளுங்கப்பா…” அசடு வழிந்தான்!
“என்னம்மா ஆபீஸ் பிடிச்சு இருக்கா?”
“எஸ் சார்…” அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே!
“இந்த ஊரு?”
“எஸ் சார்…”
“இந்த வேலை…”
“எஸ் சார்…”
“என் பையன்?”
“எ…” சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்து திக்கி
“சார்…” விட்டால் அழுது விடுபவள் போல இருந்தவளை
“சொல்லுடாம்மா… கொஞ்சூண்டு குறும்பு தான்… ஆனா என்ன பண்றது பையன் நல்ல பையனா போயிட்டானே…” பதில் சொல்லாமல் தவிப்பாக பார்த்து தலை குனிந்து கொண்ட அஞ்சலியின் நிலை புரிந்த அர்ஜுன்,
“என்னப்பா என் ஆள ரொம்ப கலாய்க்கிறீங்க… அப்புறம் ஓடி போய்ட போறா…” என்று சொல்லிவிட்டு சிரிக்க அஞ்சலி ஒன்றும் புரியாமல் விழித்தாள்!
“தம்பி… நான் இன்னும் ஓகே சொல்லல… அதுக்குள்ள உன் ஆளா?” என்று பதிலுக்கு கிண்டலடிக்க
“சரி சரி அதை மெதுவா சொல்லிகோங்க… உங்க பேரனோ பேத்தியோ பிறந்த பின்னாடி…” என்று சிரிக்க
“டேய்ய்ய்ய்ய்யி தம்பி… என்னடா… சொல்ற? ? ? ?” அதிர்ச்சியோ அதிர்ச்சியாக “ரெடிமேடா வெச்சுகிட்டு தான் கல்யாணம் பண்ண போறியா?”
“ஐயோ அப்பா நான் சும்மா சொன்னேன்! என்னை முறைக்கிறதே நின்ன பாடில்லை… இந்த அழகுல…” என்று குறைபாட.
“மை சன்… அப்பா மாதிரி உனக்கு திறமை இல்லை…” என்று கிண்டலாக கூற
“ஆமா ஆமா உங்கள மாதிரி திறமை யாருக்குப்பா வரும்… உங்க பெர்சனாலிட்டிக்கு இன்னும் எத்தனை பேர் ரசிகர்களா இருக்காங்க…” வாரினான் அஞ்சலியை பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே
“பின்ன அந்த காலத்துல அம்மாகிட்ட…” என்று ஆரம்பிக்க.
“அப்பா… ப்ளீஸ்… ஆரம்பிக்காதீங்கப்பா… மீ பாவம்…” என்று போலியாக அழ
அதை கேட்டு சிரித்து கொண்டே
“டேய் உனக்கு பொறாமை… நம்ம பெர்சனாலிட்டிய பார்த்து…” என்று வார
“ஆமா ஆமா ஆமா… என்ன பண்றது கேர்ள்ஸ் எல்லாம் உங்களை பார்த்து தானே சைட் அடிக்கிறாங்க… அதான் உங்களை பார்த்து பொறாமை…” என்று அஞ்சலியை பார்த்து சிரித்து கொண்டே கூற
“ஹஹஹஹா… தட்ஸ் குட் தம்பி…” என்று விவரம் புரியாமல் வானமாமலை சிரித்து வைத்தார்! அஞ்சலிக்கோ அனல் மேல் அமர்ந்து இருப்பது போல இருந்தது! அவள் பேசுவதற்கு வாய்ப்பும் தராமல் தன்னை பற்றி முடிவுக்கு வந்து விட்டு பேசிக்கொண்டு இருந்த பெரியவரை பார்த்து அஞ்சலிக்கு தலை சுற்றி போனது… அதோடு அர்ஜுனின் கிண்டல் வேறு! ஆண்டவா என்னை காப்பாத்து இந்த மடையன் கிட்ட இருந்து என்று மனதிற்குள் அப்ளிகேஷன் போட்டு கொண்டு இருந்தாள்! வானமாமலை அஞ்சலியை பார்த்து
“என்னம்மா… ரெண்டு பேரையும் பார்த்து மிரண்டு போயிட்டியா? நாங்க எப்பவுமே இப்படிதாண்டா… பிரெண்ட்ஸ் மாதிரி தான்! அவனோட அம்மா தம்பியோட ஆறாவது வயசுல மூளை காய்ச்சல் வந்து இறந்து போய்ட்டா… அப்போ இருந்து எனக்கு தம்பி மட்டும் தான்மா உலகம்… தம்பியும் எல்லா விதத்திலும் கரெக்டா இருப்பான்… பதினாறு வயசிலயே தொழில கத்து குடுங்கப்பான்னு வந்து நின்னான்… அப்போவே அவ்வளவு பொறுப்பு! அவன் எடுக்கற முடிவு என்னைக்கும் தப்பா போனதே கிடையாது அஞ்சலி… உன்னை பத்தி சொல்லி அஞ்சலிய எனக்கு பிடிச்சு இருக்குப்பான்னு சொன்னப்போவே நான் சரின்னு சொல்ல முடிவு பண்ணிட்டேன்… ஏன்னா என் பையனோட தேர்வு என்னைக்குமே தவறா போகாது… இனிமே நீ என் பொண்ணு சரியா அஞ்சலி…” தடாலடியாக கூறியவரை பார்த்து ஒப்பு கொள்ளவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் வார்த்தைகளை தொலைத்து விட்டு பார்த்து கொண்டிருந்தாள்!
பேசி கொண்டிருக்கும் போதே அர்ஜுனின் செல்பேசி அழைத்தது! கௌதம் தான் அழைத்து இருந்தான்! செவிக்கு கொடுத்தவுடனே
“மச்சான்… ஒரு ஷாக்கிங் நியூஸ்…”
“என்னடா…” அர்ஜுன் குரலிலும் பதற்றம் தொற்றி கொண்டது!
“கணபதி இஸ் நோ மோர்… ஹார்ட் அட்டாக்…”
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா





