அத்தியாயம் 1
NEW AND UPDATED VERSION THAN PUBLISHED BOOK
வீரத்தின் விளைநிலங்களாய், நாட்டிற்காகவும், தாய் மண்ணின் பெருமைகாகவும், கலாச்சாரம், பண்பாடு, சமயம், கோயில்கள், சிலைகளைப் பாதுக்காக்கும் ஒவ்வொரு இந்திய பிரஜைகளுக்கும், களவாடப்பட்ட சிலைகளை, இந்திய அறிவினை மீட்டு கொண்டு வரும் கள பணியில் உள்ள அனைவருக்கும் கடின உழைப்பு, தியாகத்திற்கு இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.
வீர வணக்கம்!
‘ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுவது இரீஇய
கேள் ஆல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகையின்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ்வுலகத்தானே?’
குழந்தை இறந்து பிறந்தாலும், அல்லது பிறந்து இறந்தாலும், உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது, மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டிலிருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல், தொண்ணூற்றி ஒன்பதில் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
இப்படி ஒப்புமையைக் கூற முடியாத வீரம் கொண்ட நம் அரசர்களின் வாழ்விற்கும், வீரர்களின் தியாகத்திற்கும் இந்தக் கதை ‘சமர்ப்பணம்’.
ஆதித்திய கரிகாலன் அறிமுகம்
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் விடுவிக்க முடியாத புதிர் ஒன்றை பற்றி அறிய வேண்டுமா?
அப்படியென்றால் ஆதித்ய கரிகாலன் யார், அவன் வாழ்வு, மரணத்தைப் பற்றி அறிய வேண்டியது அவசியம்.
ஆதித்திய கரிகாலன், சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான, ‘முதலாம் இராசராசனின் தமையனும், ‘சுந்தர சோழரின்’ மகனுமாவான்.
ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே, சிங்கம், யானையிடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்டச் செய்த, ‘கண்டராதித்தனின்’ முயற்சிகளைத் தகர்த்து, தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக, ‘லெய்டன் பட்டயங்கள்’ புகழ்கின்றன.
புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, ‘சேவலி’ மலைகளுக்குத் தெற்கேயுள்ள, ‘சேவூர்ப் போர்க்களத்தில்’ ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, ‘வீரபாண்டியன் தலைகொண்ட’ என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது.
வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்ட தாகத் ‘திருவாலங்காட்டுப் பட்டயங்கள்’ கூறுகின்றன.
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் ‘பாண்டிய தலைகொண்ட கரிகாலச் சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை, மன்னன் கட்டளைப்படி, ‘திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை’ மேற்கொண்டதாகவும், ‘இராஜகேசரி இரண்டாம் ஆண்டு, உடையார் குடிக் கல்வெட்டு’ கூறுகிறது.
இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில், இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப் படவில்லை என்பது உண்மையே.
சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தம சோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை.
‘திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும்’ ‘உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும்’ காணப்படும் குறிப்புக்களை இணைத்துப் பார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக் கூடும் என்பது புலனாகிறது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
‘விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்). கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழி வர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர்.
ஆனால், க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரச பதவியை விரும்பவில்லை என்று கூறி விட்டான்.’ என்கிறது.
ஆதித்ய கரிகாலனைக் கொன்றது யார்? சந்தேகத்தின் ஊசி, ‘உத்தம சோழனைச்’ சுட்டிக் காட்டியதாகக்,’ கே.ஏ.நீலகாந்த சாஸ்திரி’ தெரிவித்துள்ளார்.
“நான் சிம்மாசனத்திற்கு தகுதியானவன், அது என் பிறப்புரிமை!
ராஜாவாக மாறுவதற்கான எனது முறை தாமதமானது. என் இடத்தில் மற்றவர்களை ஆள, நான் ஏன் அனுமதிக்க வேண்டும் ?
! “I deserve the throne and it is my birthright! My turn to become the King is overdue. Why should I let others rule in my place?!” என்பது, உத்தம சோழனின் எண்ணமாக இருந்திருக் கலாம்.
‘உதயர்குடி கல்வெட்டுகளின்’ அடிப்படையில்,’ குடவாயில் பாலசுப்பிரமணியன்’ ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கொலை செய்யப்பட்டதில், ‘உத்தம சோழர், ‘இராசராச சோழனுக்கும், இருவருக்கும் கை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படி ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் விடுவிக்க முடியாத புதிராய் இருக்கும் மரணத்தை, அரசியல் படுகொலையை விடுவிக்க முயலும் சிறு முயற்சியே, ‘காஞ்சி தலைவன்’
The most intriguing, multi angle political assasination of chola dynasty.
என் கற்பனைகளோடு ‘யூனிவர்சிட்டி ஆப் பிலடெல்பியா/ university of philadelphia’ ஆராய்ச்சி குறிப்புக்கள், நீலகண்டசாஸ்திரி குறிப்பேடுகள், திரு ஆலங்காடு செப்பு தகடுகள் , உடையார்குடி கல்வெட்டு தகவல்கள், மியூசிக் அகாடெமி தகவல்கள் அடிப்படையாகக் கொண்ட கற்பனை கதையே இது.
கல்கி அய்யா எழுதிய, ‘பொன்னியின் செல்வன்’ நந்தினி, மணிமேகலை, போன்றோர் இருந்ததற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை என்று ஒரு சாராரும், இவர்கள் நிஜ மனிதர்கள், கற்பனை கதாப்பாத்திரம் இல்லை என்று ஒரு சாராரும் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.
ஆதித்தியன் எங்கு, எதற்காக கொல்லப்பட்டான் என்பதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் விடுவிக்க முடியாத புதிரே!
‘அடுத்த சோழ சாம்ராஜ்ய அரசன் யார்?’ என்ற வாரிசு அரசியல் கொலை என்றும், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை கொன்றதற்கான, ‘பழி வாங்கல்/ revenge killing’ என்றும் சொல்லப் படுகிறது.
அகிலனின் கூற்றுப்படி, ‘ஆதித்யா கரிகலன் இருட்டில் கூண்டுக்குள் சிக்கிய சிங்கம் போல இருந்தார். அவரை மறைத்து கொலை செய்தனர்” என்று விளக்குகிறார்.
பொன்னியின் செல்வனில் வருவது போல், ‘ஆதித்தியன் கடம்பூர் அரண்மனையில்’ தான் கொல்லப்பட்டான் என்பதற்கான சரித்திர சான்று கிடைக்கவில்லை.
அதனால் கச்சியம்பதியில்/kanchipuram சில நிகழ்வுகள் நடப்பதாக எழுதி இருக்கிறேன்.
‘பொன்னியின் செல்வனில் ரவிதாசன்’ மட்டுமே, ’நந்தினியை’ வந்து சந்திப்பதாக இருக்கும்.
‘நந்தினி’ என்ற பெண் உண்மையிலிருந்ததற்கான குறிப்புகள் எங்கும் இல்லை.
ஆதித்ய கரிகாலனை கொன்ற குற்றத்திற்காக ரவிதாசன் என்ற பஞ்சவன் பிரம்மதி ராஜன் மற்றும் பரமேஸ்வரன் என்கிற இருமுடி சோழ பிரம்மதிராஜன், சோமன் என்ற மூன்று சகோதரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு , குடும்பத்தோடு நாடு கடத்தப்படுகிறார்கள் என்கிறது உடையார்குடி கல்வெட்டு.
இவர்கள், ‘வீரப்பாண்டியனின் ஆபத்துதவி, ஒற்றர்கள்’ என்பதற்கான சான்று இல்லை. தவிர இவர்கள் சோழ சாம்ராஜ்ஜித்தியதில் உயர்ந்த பதவியில் இருந்ததற்கான குறிப்பாக இவர்களின் பெயரில் உள்ள, ‘ப்ரமாதிராஜன்’ என்ற பட்டம் சொல்வதாக, ‘ நீலகண்ட சாஸ்திரியின்’ வாதம்.
தவிர முடி இளவரசனைக் கொன்றதற்கு வெறும் சொத்தை மட்டும் பறிமுதல் செய்து நாடு கடத்துவார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயமே!
ஆதித்யன் மரணத்திற்கு பிறகு ‘கண்டராதித்தன் செம்பியன் மாதேவியின் மகன்’ நிஜ முடி இளவரசன், ‘மதுராந்தக சோழன்’ சிறிது காலம் அரியணை ஏறுகிறான்.
இவர் காலத்திற்குப் பிறகு, ‘ராஜராஜன்’ அரசனாய் ஆகிய இரண்டாம் வருடம், இந்த சகோதரர்களின் குடும்பம், உறவினர், கொண்டார், கொடுத்தார் சொத்து எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு நாடு கடத்தப் படுகிறார்கள்.
இதை வைத்துத் தான் மதுராந்தக சோழனின் அரசியல், அரியணை ஆசைக்காக ஆதித்யன் கொல்லப் படுவதாகக் கூறி இருக்கிறேன்.
ஏனென்றால் அடுத்த அரசன் என்ற நிலையில் இருப்பவனைக் கொன்று அதைப் பற்றிய தடயம் இல்லாமல் போவது என்றால், அதன் பின் மிகப் பெரிய அரசியல் மூளைகள் இருந்து இருக்க வேண்டும்.
இவர் தான் ஆதித்தியனைக் கொன்று இருந்தார் என்றால் ராஜராஜன் மகன், ‘ராஜேந்திரனுக்கு, இரண்டாம் மதுராந்தகன் என்ற பட்ட பெயர் வந்து இருக்காது என்கிறார்கள்.
ஆனால், இவர்க்கு ஒரு மகன், மதுராந்தக கந்தாதித்தியா’ என்ற மகன் இருந்தும், மீண்டும் சோழ மணிமகுடம், ராஜராஜனுக்குச் சென்றது எங்ஙனம் என்பது வியப்புக்குரிய விஷயமே!
இந்தக் கதையில் தேவ நாராயணர் என்ற கதாபாத்திரம் கூறிய நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் விட்டு சென்ற புதையல்கள்.
இவற்றைப் படிக்க நேர்ந்தது மிகப் பெரும் பெருமையே! நம் முன்னோர்கள் கட்டிடக் கலைக்கென்று நூறுக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளை, குறிப்புகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள்.
இந்திய மக்களின் பெருமை நான்கு வேதங்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த வேத பொக்கிஷங்களில் போர் முறை, மருத்துவம், கட்டிட கலை, அரசியல், வான சாஸ்திரம் என்று எண்ணில் அடங்காப் பொக்கிஷம் இருக்கிறது.
வெறும் ஜாதியை மட்டும் சொல்லும் நூல்கள் இவை இல்லை. இன்னும் ஆராய்ச்சி செய்யப்படாத ஓலை சுவடிகள், வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட ஓலைகள் என்று ஒவ்வொன்றிலும் எத்தனை வைரங்கள் ஒளிந்து இருக்கிறதோ என்று தான் வியக்க தோன்றுகிறது.
அவற்றின் தகவல்களின் அடிப்படையில், சரஸ்வதி மஹால், சிற்ப சாஸ்திர நூல்களின் உதவியோடு சிலவற்றைக் கூறி இருக்கிறேன்.
அடுத்துச் சொல்லப்பட்டு உள்ள சண்டை முறைகளும், வாட்சண்டை முறைகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் கற்ற வித்தைகளின் ஓலைச் சுவடிகளில் இருந்து எடுக்கப் பட்டவையே.
தவிர இங்கே, ‘ஆதித்ய கரிகாலன் –நந்தினி’ காதல் பக்கமே போகவில்லை. இது நந்தினியின் காதல் இல்லை.
இது பொன்னியின் செல்வன் இல்லை.
நிஜமும், கற்பனையும் கலந்த தேடல் அவ்வளவு தான்.
ஜென்ம ஜென்மமாய் ஆதித்யனை மட்டுமேவிருபும் ஒரு ஜீவனின் காதல்.
யுகங்கள் பல கடந்தாலும் அவனை மட்டுமே சேரும் காதல்.
எப்படி ஆதித்ய கரிகாலன் சக்ரவர்த்தியாய், ராஜராஜ சோழனுக்கு பதில் இருந்து இருக்க வேண்டுமோ, அதே போல் நிறைவேறாத காதல் ஒன்றின் தேடலே இந்த,’காஞ்சி தலைவன்.’
‘காஞ்சி தலைவன்’ என்று, ‘நரசிம்ம பல்லவனை’ தான் சொல்வார்கள். இங்கே சரித்திரம், நிகழ் காலம் ரெண்டும் காஞ்சிபுரத்தை சுற்றி நடப்பதால் ஆதித்யனை, ‘காஞ்சி தலைவன்’ ஆக்கி இருக்கிறேன்.
சொல்குற்றம், பொருள் குற்றம் , எக்குற்றம் இருப்பினும் மன்னித்து அருள்க.
உங்கள் மேலான கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள்.
அன்புடன்
அனிதா ராஜ்குமார்.


forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!