arrow_back
காஞ்சித் தலைவன் அத்தியாயம் 2
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 2 / 19

அத்தியாயம் 2

visibility 572
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

1

அத்தியாயம்  — 1
காலம் – 965 A. D.

நீண்டு   வளர்ந்து   கொண்டிருந்தது   அந்த   ராஜபாட்டை…
இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள், அந்தக் காட்டிற்கு அரணாக     இருக்க, நடுவில் சுமங்கலிப் பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க…
இதமான  தென்றல்  தவழ்ந்து  வந்து,  அந்தப்   புரவிகளின் மேல் பயணம்  செய்து   கொண்டிருந்தவர்களைத்  தழுவியது!

“இளவரசே!” சற்று தயங்கியவாறு அழைத்தவனைப்,  புரவியை  மென்மையாகச்  செலுத்தியவாறு திரும்பிப்   பார்த்தான்  அவன்!

என்ன  ஒரு  தேஜஸ்  அந்தக்  கண்களில்!

நிமிர்ந்து  அவன்  அமர்ந்திருந்த  விதமே  தனி   கம்பீரத்தைத்  தர,  அந்தக்  கருமை   நிறத்தவனுக்கு     ரசிகர்   கூட்டமென்று    நிறைய   உண்டு!

மார்பை  மறைக்கவென  ஒரு மேலாடையும், இடுப்பில்  இறுக்கமாகக்   கட்டியிருந்த    கீழாடையும்,    முறுக்கிய  மீசையும்,  முறுக்கேறிய   புஜங்களும்,   திண்மையான   மார்பும்,  அதிலிருந்த  வடுக்களும்,  கூர்மையான கண்களும், அவனை  மிகச்சிறந்த  வீரனெனக்  கூற,  வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாகப்  பறிக்கப்பட்ட  ஆதித்த   கரிகாலன்  தான்  அவன்.

பராந்தக  சோழனின்  மூத்த  மகன்.
முடி  இளவரசு  அருள்மொழி   வர்மனுக்கு  மூத்தவன்.
இளவரசி குந்தவையின் அண்ணன்.

‘வீரபாண்டியன்    தலை    கொண்ட   பரகேசரி’ என்று திரு  ஆலங்காடு  செப்பு  தகடுகள்   போற்றும் மாபெரும்  வீரன்.

சோழவள   நாட்டின்    எல்லைகளை    விஸ்தரிக்கப்   பல திட்டங்களைச்   சிரமேற்கொண்டவன்.

சோழ சாம்ரஜ்ஜித்தியதை   உருவாக்கிய  விஜயாலய  சோழனின் நான்காம் தலைமுறை  சேர்ந்த   மதுராந்தக  உத்தம  சோழன்,    ‘தந்தையின் மூத்த  மகன்  அரசனாக வேண்டும்’ என்ற   வழக்கத்தின்  படி  சோழ  நாட்டின்   அரசனாகி    இருக்க   வேண்டியவன்.

ஆனால், காலத்தின் கட்டாயம் வேறு மாதிரி இருந்த  காரணத்தாலும்,  மதுராந்தகன் சிறுவனாய்   இருந்த  காரணத்தாலும், அவன்  சிற்றப்பா      மகனான   ‘பராந்தக சுந்தர சோழன்’ சக்ரவர்த்தியாய்,  சோழ தேசத்தை ஆண்டு   வந்தார்.

இவரின்   மகனே  ஆதித்திய   கரிகாலன்!.

அது பராந்தக சுந்தர சோழன் அரசராய் பொறுப்பேற்று 12 ஆண்டுகள் முடிந்து இருந்த நேரம்.

சிறுவனாய்    இருந்த  நிஜ அரச வாரிசான,   மதுராந்தகனும்   குமாரனாய்  வளர்ந்து  இருந்த   காலகட்டம்.

வழக்கப்படி   அவனுக்குத்  தான்  சோழ    தேசத்தின் மணி  முடிச்  சென்று  இருக்க  வேண்டும். ஆனால், தன்  வீர  தீரப் பராக்கிரமத்தாலும்,   மக்களின்   அன்புக்குப்   பாத்திரமானவன்    என்பதாலும்,  சோழ  வள  தேசத்திற்கு  சதா  தொல்லை  கொடுத்துக் கொண்டு  இருந்த  விஷ    செடியின்  ஆட்டத்தை   முடிவுக்குக்  கொண்டு    வந்தவன்   என்பதாலும்   பராந்தகனுக்குப்   பதில்,   முடி  இளவரசனாக  ஆக்க,  ஒட்டுமொத்த  சோழ  தேசமும்    ஆவல்  கொண்டது.

அதாவது,  ‘எதிர்  கால சோழ சக்ரவர்த்தியாகக்   கரிகாலன்  தான்  வர வேண்டும்’ என்ற குரல்,  நாலா  பக்கம் இருந்தும் ஒலித்ததன் பயனாய் அரசவை  கூடி,  கரிகாலனை, ‘முடி   இளவரசனாக’ அறிவித்து   இருந்தது.
வரும்   திங்கள்   முடிசூட்டு   விழா  ஏற்பாடுகள் தலைநகரில்  கோலாகலமாய் நடந்து கொண்டு இருந்தது.

‘மக்களின்  மனதில்  இடம்  பிடித்து விட்டால் ஒரே  நாளில்   யார்   வேண்டும்  என்றாலும் அரசனாய்  ஆகலாம்.’  என்ற  புதுமையைப்  பரத  கண்டத்திற்கு  அறிவித்தவன்  கரிகாலன்.

அவன் எண்ணங்கள் வானத்தைவிட உயர்ந்து பரந்தவை  அல்லவா?

அடுத்த  சக்ரவர்த்தி!…
பட்டுப்   பஞ்சணையில்,  மலர்களின் மென்மைக்கே   சவால்  விடும்  தஞ்சை    பதுமைகளின்  நெஞ்ச   மஞ்சத்தில்,   ‘சரச    கலையில்    நான்    அந்த       மன்மதனுக்கே   குரு’   என்று         காட்டிக்     கொண்டு   இருக்க             வேண்டியவன்.

காமத்துப்   பாலுக்குத்  தனி  அகராதி   படைப்பதில்   வல்லவன்.

அவனே   ஒரு    வசீகரன்    தானே!…
நூறு   மத   யானைகளின்    திண்மையை   நெஞ்சில்  கொண்டவன்.
அதைத் தழுவக் காத்து   இருக்கும்  அல்லி  கொடிகள்  ஏராளம்.

இவனைக்   கண்டு   கன்னிப்  பெண்கள்  விடும் ஏக்க மூச்சில்,  தஞ்சை   வீதிகளில்   புழுதி    காற்றே      பறக்குமாம்.

கண்களா அவை!….
காதல்  ரசம்  சொட்டும்  மன்மத  பாணங்கள்.
அந்தக்  கண்  பாணம்   பட்டு   அதில்  ஏற்பட்ட    விரக     தாபத்தில்    கன்னிகளின் இடை                                 மெலிய,    அவன்     மேல்   மோக      தீப்பொசுக்குவதில் கை வளை, இடை அலங்கரிக்கும்   மேகலையாய்   மாறிக்  கொண்டு  இருக்கிறதாம்.

அப்படி  தன்னை  காணும்  பெண்கள்  அனைவரின்   மனதில், ஒரு காதல் போர்க்களம்    உருவாக்கிய  வித்தகன்.

‘இன்பம்!…
அது  அவன்  கை  வளைவில், அவன் மார்பின்  சூட்டில்,  அவன்  மூச்சுக்  காற்று  மேல்  படும் போது  மட்டுமே கிடைக்கும்’ என்று புது காதல்  சட்டம்  போட்ட  ஆணழகன்.

அப்படிப்பட்ட   அவன், தன் அடையாளங்களைத் துறந்து, தஞ்சையை விட்டு வெளியேறி, மாறு வேடத்தில் கச்சியம்பதி (காஞ்சிபுரம்) அருகே இருந்த   அடர்ந்த  கானகத்தில்,  மூன்று   நாட்களாய்   பயணித்துக்  கொண்டு  இருக்கிறான்.

“சொல் முத்தழகா!…” குரலில் கூட ஒருவருக்கு    வசீகரம், கம்பீரம் இருக்க முடியுமா?

இருக்கும்’ என்று   ஆணித்தரமாய்  நிரூபித்தவன்  அவன்.

“இப்படிக் காவல் படை இல்லாமல் கானகத்தில் உலவுவது எனக்கு உசிதமாய் தோன்றவில்லை இளவரசே!…
ஒற்று கூறப் பட்ட செய்தியின் சாராம்சம், அதன் நம்பகத்தன்மை  மீது சந்தேகமாய் உள்ளது பிரபு!.
அதுவும்   பட்டத்து  இளவரசர் தாங்கள்.   இந்தச்  சோழ மண்டலத்தின் மஹா மன்னராய்   மூடிச்   சூடப்படப்   போகும்  வேளையில் இப்படி எதிரி  எல்லையில், ராப்   பகலாய்   உலவுவது.”   என்று   வார்த்தைகளை  முடிக்க முடியாதவனாய்  திணறினான்.

“இது  என்ன என்று பார்த்தாயா முத்தழகா?” என்ற  இளவரசன்,  தன்  இடைக் கச்சையிலிருந்து ஒரு  பொருளைத்  தன்  உள்ளங்கையில்  எடுத்துக்  காட்ட, அது அவன் முத்திரை ராஜ இலச்சினை (ராஜமுத்திரை மோதிரம்) என்பதைக்   கண்ட     அழகனின்   கண்கள்   விரிந்தன.

“இதை நான் என் குருநாதரும், இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின்   அனைத்து   கலைகளிலும் வல்லவருமான, இப்பொழுது கச்சியம் பதியின் பொன்  மாளிகையின்  நிர்மாணிப்பு பொறுப்பை ஏற்றுக்  கொண்டவருமான, ‘தேவ நாராயணருக்கு’ நான்  காணிக்கையாகக்  கொடுத்த இலச்சினை.

அவர்  முன்னோர்கள்  ராஜ குல விசுவாசிகள். அவர் எனக்குத் தந்தை போன்றவர். அவர் சொன்ன  செய்தியின்  நம்பகத்  தன்மையைப்  பரிட்சித்துப்   என்னையே  நான்  பரிட்சிப்பதற்கு இணை  அழகா.”  என்றான்  ஆதித்தியன்.

“புரிகிறது  இளவரசே!… ஆனால், இதைத்   தாங்கள்  தான்  செய்ய  வேண்டிய  அவசியம்  தான்  என்ன?…   தங்கள்    ஒரு கண் அசைவிற்கு இந்தப்  புவியையே   மாற்றிச்   சுழல   வைக்கும்   படை          நம்மிடம்  இல்லையா  என்ன?…
விஷயம்  சக்ரவர்த்தி காதுகளுக்குச் சென்றால், மகா பிரபு!  முதலில்  உருளும்  தலை     என்னுடையது   தான்.”  என்றான் அழகன்.

அவன்  உயிர்   பயம்   அவனுக்கு.

“இது நான் என் கையால் முடிக்க வேண்டிய கணக்கு அழகா!. தேவ நாராயணர் நமக்கு  வழி  காட்ட, நம்பிக்கையான நபரை அனுப்புவதாய் சொல்லி   இருக்கிறார்.” என்ற   அவன்  குரல்,  இதைப் பற்றி இனி வேறு எதுவும்    கேட்காதே,     நடப்பதை    ஒரு ஒரு  பார்வையாளனாய்  கவனி’  என்ற  மறைமுக  உத்தரவைத் தாங்கி  இருப்பதை    உணர்ந்தான்.

இருந்தாலும்    இளவரசனின்    தலைமைக்   காவலன்  என்ற பதவி, அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.

என்ன   தான் பகலவனை வெறும் கையால் மூடமுயன்றாலும், இளவரசனின் மாறுவேடம் அவன் ராஜக்களையை  அம்பலப்படுத்தவே    செய்தது.

குடுவை தண்ணீரை மறைக்கலாம். ஆழி   பேரலைலையின்  தண்மை கொண்டவனை எதைப்  போட்டு   மறைப்பது?

“இருந்தாலும் இளவரசே!. இதை நம் வீரர்களிடம் சொன்னால்…” என்று  ஆரம்பித்தவன், எரிமலையின் சீற்றத்திற்கு  நிகரான, ஆதித்யனின்             கண்களின்   வெப்பத்தைக்  கண்டு   சொல்ல  வந்ததையே  மறந்தவனாய்    மிடறு  விழுங்கினான்.

கண்கள்  சிவக்கத்  திரும்பிய ஆதித்தியனின் கோப பார்வை கண்டு வெலவெலத்து போனான் அவன்  நண்பன், பாதுகாவலன் முத்தழகன்.

“நான் உயிர்க்குப் பயந்தவன் என்ற எண்ணமா உனக்கு  அழகா?….
சேவூர்(புதுக்கோட்டை) போர்க்களத்திலிருந்து தப்பிச்  சென்ற கோழை வீரபாண்டியனின் தலை நம் தேசத்தின்   எல்லையில்    நடவில்லை               என்றால்   நான் எல்லாம் என்ன இளவரசனாக இருந்து  என்ன  பயன்?….

நம்   எல்லை    கிராமங்களைச்    சூறை     ஆடினான். பொறுத்துக்  கொண்டோம்.
நம் குலப்   பெண்களைக்  கடத்தி  சென்று  மானபங்கம்     செய்தனர்   அவனும்   அவன் ஆட்களும்… அதற்கே  அவர்களை  கழுவேற்றியிருக்க       வேண்டும். என்  குல  பெண்கள்  மேல்     கை  வைத்தவனின்   சிரம்    துண்டிக்கப்பட்டிருக்க   வேண்டும்.

இன்று  நம்  முன்னோர் விஜயாலய சோழ    சக்ரவர்த்தி    தன்    தவத்தின்     பயனாய்   உருவாக்கிய, ‘நிசும்பசூதனி தேவியின் திருவுருவைக்’ கொள்ளை  அடிக்க,  அவன்  போட்ட  திட்டம்.     எப்படி   வாய்  மூடி  இருக்க   முடியும்?

திருக்கோயில்களும், கலைகளும்  ஒவ்வொரு குடிமகனின்  சொத்து.  உயிர்க்கு நிகர். 

பண்பாடு  தான்   நம்  உயிர்,  மானம்  எல்லாம்.
அதை ஒருவன் களவாட முனைகிறான்…. நம் பழமையை, நம் முன்னோர்களின் வம்ச     பெருமையைப்  பொசுக்க  நினைக்கிறான்….
நம் குலப்   பெண்களின்   மானத்தோடு ஒருவன் விளையாடிப்  பார்க்கிறான். ’உன்னால்  என்ன  செய்ய   முடியும்?’ என்று     கொக்கரிக்கிறான்    என்றால்    அவனைக்    கொன்றால்     தான்  நான்  உண்மையான   ஆண்மகன். 

சோழ  தேசத்தின்   இளவரசன்.  நாளை  சக்ரவர்த்தி     என்று    சொல்லத்  தகுதி  வாய்ந்தவன்.” என்ற  அவன்   சிம்ம கர்ஜனை கேட்டு, அந்த வனமே  ஒரு  நொடி  ஸ்தம்பித்தது  என்றால்  மிகையல்ல.

முத்தழகனுக்கு  இளவரசனின்  கோபம்  புரியாமல் இல்லை.

வீரபாண்டியன்   சோழ   எல்லையில்   செய்த   அட்டூழியங்கள்  அப்படிப்பட்டவை.

பிறந்த     பச்சிளம்   குழந்தை       முதல், மூதாட்டி வரை  அவன் கரங்களில்  மடிந்தனர். வித  விதமான   சித்திரவதைகள்.

நேரிடையாகப் போரிட்டால்   வெல்ல    முடியும்.
அவன்  குள்ள  நரி.

அரச  படை  வருவதற்குள்  அவன்  கோரத்      தாண்டவம்  முடிந்து விடும். இவர்கள் சென்று பார்க்கும்போது  அழிக்கப்பட்ட எல்லைப்  புற    கிராமங்களே  மிஞ்சும்.

வீரபாண்டியனும்   அவன்   படையும்     தான்  இந்தக்   கோரங்களைச்  செய்தார்கள்   என்று சாட்சி சொல்ல  ஒருவராவது உயிர் மிஞ்சினால் தானே!

வெறும்   ஊகத்தின்  அடிப்படையில்       எல்லாம் போர்  தொடுக்க  முடியாதே!…
நாளை  வரலாறு  பழித்துக்  கூறுமே !

ஆனால்,  இந்த முறை வீரபாண்டியன் எல்லா வரம்புகளையும்   மீறி   இருந்தான்   என்றான்   மிகையல்ல.   இளம் சிங்கங்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு  என்பதை  அறியாதவனாய், அவர்களின் வீரத்தை  சீண்டி  பார்த்து  கொண்டிருந்தான்.

தாய்   மண்ணை,   குல   பெண்களை  தொட்டதற்கே,  அவனை  கருவறுக்க காத்திருந்த   சோழர்களின்   தன்மானத்தை    சீண்டுவது  போல்,  இன்னொரு    குற்றத்தை  செய்ய துணிந்து     இருந்தான்.

தஞ்சையின்  காவல்  தெய்வம்  நிசும்பசூதனி.

தஞ்சையின் எட்டுத்திக்கும், எட்டு காளி காவல் தெய்வமாய் அமர்ந்து இருக்க, இந்தத் தெய்வ  சிலையை  மட்டும்  வைரத்தால்  செய்து  இருந்தார் விசயாலயன்.

எங்குமே   கிடைக்கவே  முடியாத     விலை  மதிப்பில்லாத    வைர  விக்கிரக மூர்த்தம் அது.  அந்தத்   தெய்வம்   இருக்கும்  இடத்தில் மற்ற எல்லா   தெய்வங்களும்  இருப்பார்கள்  என்பது  ஐதீகம்.

தவிர  சோழர்களின்  போர்  தெய்வம்  அந்தத்  தாய்.

இந்தக்    கடவுளை    வழிபடாமல்,  எந்தச் சோழ   அரசனும்   போர்க்களத்திற்குச்     சென்றதாய்     சரித்திரம்    இல்லை.

எப்படி  மராத்திய  மன்னன், ‘வீரசிவாஜி’ காளியை வழிபடாமல்  போருக்குச்   செல்லமாட்டாரோ,    அதே   போல்  அக்கால மன்னர்கள் காவல்         தெய்வங்களை,  போர்  தெய்வங்களை  வழி  படாமல்,  பலி  பூஜை  போடாமல்,  போருக்குச்  செல்லமாட்டார்கள்.

தஞ்சை  பெரிய  கோயில்,  ‘பலி பூஜையே ஒரு கஜம்’   என்கிறார்  பாலகுமாரன்   உடையாரில்.

திரு  ஆலங்காடு  செப்பு  தகடுகள்.
‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம.
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:.
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்.
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்.
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்.
ரஹாஜ தேவோ தத்பராசதந’
என்று சோழ பேரரசை உருவாக்கிய விஜயலயா சோழனின்  செப்பு  தகடுகள்  பறை சாற்றுகின்றன.

‘அரக்கர்களான சூம்ப, நிசும்பனை வதம் செய்த நிசும்பசூதினியின் உருவச்சிலை தஞ்சை வளநாட்டில்   பிரதிஷ்டை   செய்யப்பட்டு  உள்ளது.
அவள்   காலடியைத்    தொழும் சக்ரவர்த்தி, கடல்கள்  சூழ்ந்த  இப்புவி  தன்னை, மலர் மாலை சூடிக் கொள்வது   எவ்வளவூ  எளிதோ  அதே  எளிதுடன்   ஆண்டு    விடுவான்’ என்று  அரச  சாசனம்   சொல்கிறது.’   என்கிறது   இந்த   பாடல்.

இந்தத் தாய் சோழ வம்சத்தின் உயிர்!
அந்த உயிரைக் களவாட வந்த திட்டம் வெளிப்பட, கொள்ளை அடிக்க  வந்த கயவர்கள் அரசவையில், மக்கள்  முன்   வீரபாண்டியனின்   சதித்     திட்டத்தை   ஒத்துக்   கொண்டார்கள்.

இதற்கும் பிடிபட்டவர்களின்  தலைவன்    வீரபாண்டியனின்   தலைமைக்   காவலர்களில்  ஒருவன்.

இதுவரை எதற்காகச் சோழ தேசம் குமுறிக் கொண்டு  இருந்ததோ,   அதற்கான  ருது கிடைத்து  விட்டது.
களவாட வந்தவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சோழ மண்டல வீதிகள் முழுவதும்  குதிரையால்   இழுத்துச்  செல்லப் பட்டு, ரண வேதனை    அனுபவிக்கும்    படி மரண   தண்டனை   கொடுக்கப் பட்டது.

மூண்டது சோழ -பாண்டிய போர்- சேவூர் (புதுக்கோட்டை) அருகே.

வானம் அதிர, பூமி கலங்க மீண்டும்,  ஒரு  மஹாபாரத யுத்தம்.

இந்த முறை  தங்கள்  குலப் பெருமை  காக்கச்    சோழர்களும்,  சோழ  நாட்டை அடைய வேண்டிய   வெறியில் பாண்டிய  வீரர்களும்  போரிட்டனர்.

சோழ படை ஆதித்யனின் தலைமையில் வீரம்,  விவேகம், யுத்த  தந்திரம் கொண்டு     போராடினார்கள்.
ஆதித்தியனின்    போர்  திறமைக்கு   முன்  .வீரபாண்டியனின்    படை   சுருண்டது    என்றால்    மிகையல்ல.

ரத (தேர்ப் படை),

கஜ (யானைப் படை),

துரக (குதிரைப் படை),

பத சைனியம் (காலாட்படை) என்று  ஆழி  பேரலையாய்,  2,18, 700 சோழ      இளசிங்கங்கள்,  தங்கள்  தாய் நாட்டிற்காகக்  களத்தில்  இறங்கினார்கள்.

போர்!…  போர்!…  பெரும் போர்.

எங்கும்    வாட்களோடு    வாட்கள் மோதும் ஒலி   காதைச்  செவிடு  ஆக்கியது.  வாள்கள் உரசும்போது, எழும்   தீப்பொறிகள் கண்ணைக்   கூசச்            செய்தன.

காயம்  அடைந்த வீரர்களின் மரண ஓலம்  கேட்பவர்களின்   இதயத்தை    நிறுத்திய   விட்டது.

‘இறந்த  போர்   வீரர்களின் உடலைப்  பல  நாட்களுக்குக்    கழுகுகளும்,   நாய்,  நரி     உண்டதாகவும், அதன் பிறகு பல    நூற்றாண்டுகளுக்கு    மக்களே  வசிக்க  முடியாத   நிலை’       இருந்ததாகவும்,  ‘நாதிர் ஷா’ படை  எடுப்பைப் பற்றி,  ‘வந்தார்கள்        வென்றார்கள்’ லில் மதன்  அவர்கள்,  முகமதிய  எழுத்தாளர்  ஒருவரின்   வரிகளை  மேற்கோள்  காட்டி  இருப்பர்.

அந்த  முகமதிய  எழுத்தாளர்  மட்டும்  சோழ  காலத்திலிருந்து இருந்தால், ஆதித்தியனின்  வீரத்தை   மட்டுமே எழுதி  இருப்பார்.
போர்க்கள  காட்சியினை  எழுதக் கையும்,  மனமும் துணிந்தே    இருக்காது  என்பது  தான் உண்மை.

‘கிரவுஞ்ச வியூகம், மகர வியூகம் (முதலை), கூர்ம வியூகம் (ஆமை), திரிசூல வியூகம்’ என்று அவன் கற்ற போர்த் தந்திரங்களுக்கு, வீரபாண்டியன் நிலைகுலைந்தான்.

கோழை போல் புறமுதுகிட்டு போர்க்களத்தை விட்டு ஓடினான். மன்னன் இல்லா படை, தலை இல்லா  உடலாய்  சிதறிப்  போனது.

அந்த  நாள்,  வெள்ளை  ஆடை  அணிந்த, வைகை நதி பெண்ணவளுக்கு, ஆதித்தியன் தன் வீரத்தால், ரத்த சிகப்பு   நிற   துகில்  அணிவித்தான்   என்றால்  மிகையல்ல.

‘குருதி  ஆறு   ஓடியது’ அன்று வைகை ஆற்றங்கரையில்.

தன்  பெண்களுக்கு  ஏற்பட்ட  களங்கத்தை,   ரத்தத்தால்   கழுவி   இருந்தான்   சோழ   மண்டலத்தின்    வருங்கால    சக்ரவர்த்தி.

அன்று எதிரிகளின்  குருதி  முகத்தில்  பட்டு,  அவனே  ஒரு  செஞ்சூரியனாய்    நின்ற   ஆதித்தியனின்  வீரம்   கண்டு   அழகன்    மட்டும்   அல்ல, ஒட்டுமொத்த   போர்க்களமும் , சோழ,  பாண்டிய     நாடுகளும்    திகைப்பில்    உறைந்தன.

இனி  பின்  வரும்  சந்ததிகளுக்கு,  அவன்  வீரம்  பற்றிச் சொல்லித்தான்  தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்குப்  பால் அமுதம் ஊட்டுவார்கள்’ என்று  நினைத்துக்  கொண்டான்  அழகன்.

‘இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்.
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்.
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்.
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை.
உளன்என வெரூஉம் ஓர்ஒளி.
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.’
என்ற புறநானூறு பாடலை நினைத்துப் பார்த்த அழகன், அந்த வரிகள் அவன் தலைவனுக்கு அப்படியே  பொருந்தி   இருக்கும்   ஒப்புமையைக் கண்டு  வியந்து  போனான்.

‘எதிரிகளின் போர்க்கருவிகளை உடைப்பதும், எதிரியை  வெல்வதும் யாரும் சுலபமாய் செய்து  விடக்கூடிய  ஒன்று.
ஆனால், கருநாகம் உறைந்து இருக்கும்  புற்று போல், எமனின் மறு உருவம்போல்   சுற்றி  வரும்  வெறி  கொண்ட எருதின்  களம்  போல்,   பெயரைக்  கேட்டாலே,  ‘ஆதித்தியன்   வருகிறான்’  என்றாலே  எதிரிகளுக்கு   உயிர் போய்  விடுமாம்.

அந்த  அளவிற்க்கு  வீரத்தில் யாராலும் ஒப்புமை கூற  முடியாதவன்  அவன்.  பெயரைக்   கேட்டே   எதிரிக்கு   உயிர் போகிறது என்றால், அப்படிப்பட்டவனின் வீரம் எத்தகையதாக  இருந்து இருக்க வேண்டும்.’ என்று   நினைத்து   பூரித்து   போனான்  முத்தழகன்.

அன்று    போர்க்களத்திலிருந்து    கோழை போல் ஓடிய  அந்த வீரபாண்டியன்   சோழ- பாண்டிய  எல்லையில்  உள்ள காட்டில் பலத்த காவலுடன் ஒளிந்து இருப்பதாய் தகவல், தலைமை   சிற்பி   தேவநாராயணர்  மூலம்  கிடைத்து   இருக்க,  வணிகர்களாய்  உருமாறி இளவரசனும்,   அழகனும் படை எதுவும்  இல்லாமல்  காட்டிற்குள்   நுழைந்து   இருந்தனர்.

புரவிகளா அவை!
இல்லை வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளா?
காற்றை விட வேகமாய், தங்கள் எஜமானர்களின் மன உணர்வினை உணர்ந்து    சிறிதும் களைப்பு இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாளாய் ஓடிக் கொண்டு  கொண்டு  இருந்தன.

அன்றைய   நகர்வலத்தை  முடித்துக்   கொண்ட  பகலவன், தன் தேரோட்டி, ‘அருணனுக்கு’ ஆணை இட, ஏழு குதிரைகள் ஆன, ‘காயத்ரி, பிருஹத்தி,  உஷ்ணி, ஜகதி, த்ரிஷ்துபா,      அனுஷ்துபா,   பங்க்தி’    மீண்டும் தன்   உறைவிடத்திற்குக்  கொண்டு  செல்ல,  வான  பெண்ணவள்  இரவூ உடை   உடுத்தி,  நிலா,  நட்சத்திரங்களை   ஆபரணமாக   அணிந்து,  தன்னை  விட்டுச்  சென்று  விட்ட சூரிய காதலனுக்காகக் காத்து  இருக்க  ஆரம்பித்தாள்.

இரவுப் பொழுது சூழ்ந்து விட, அருகே ஓடிக் கொண்டு  இருந்த  வேகவதி  ஆற்றின்  ஒரு  கிளை தென்பட,  அன்றைய  இரவினை   அங்கேயே கழிக்க  இளவரசன் முடிவு  எடுத்தான்.

புரவிகளைப்  பசியாற்றி  ஆற்றின்  நீரில்  சற்று நேரம்  விளையாட  விட  அழகன்  சென்றான்.

தன் ஆயுதங்களைக் களைந்து விட்டு, உடை நீக்கி,  இடுப்பில்  சிறு  துண்டுடன்  வேகவதி   ஆற்றினுள்  இறங்கினான் ஆதித்தியன்.

அவனின்  அந்த  நீராடல்  கோலம், பற்றி எழுத ஆயிரம்  கைகள்   வந்தாலும் முடியாது.

அந்த   ஆணழகனின்  ஆண்மையை  ரசிக்க லட்சம் கோடி கண்  தேவை  என்றே    நினைக்கத்    தோன்றுகிறது.
ஆண்மை என்னும் வார்த்தைக்கு, உருவத்திற்கு அகராதி அவன் மட்டும் தான்.

சேர நாட்டின் யானைகளின்  வலிமை,  தேக்கு  மர   மார்பின்    சொந்தக்காரன் அவன்.

முழங்கை உள்ள வடுக்கள் அவன் வீரத்திற்குக் கிடைத்த  பரிசுகள்.
குறுகிய இடை, தஞ்சை  தூண்களின்   வடிக்க  ஒப்புமையாய் அகன்று, நீண்ட கால்கள்.

அந்த   முழுமையான  ஆண்மகனை தன்னுள்       ஏந்திக்  கொண்டாள்  நீர்மகள்.

அந்தக் கைகளும், கால்களும் பதுமைகளின் ஆலிங்கனத்திற்கு  என்றே  இருப்பவையோ!….

காதலனின்   மேல்  படர்ந்த  வெட்கமோ, அது வரை  ஆர்ப்பரித்த   நதி  பெண்ணவள்,  இந்தத்   தலைவனுக்கு   வலிக்குமோ  என்று  தன்   ஓட்டத்தைச்   சிறிது  மட்டு படுத்திக்    கொண்டாள்.

அப்பொழுது தானே அவனுடன்,  ‘ஜலக்கிரீடை’ வெகுநேரம்   செய்ய   முடியும்   என்ற    கள்ள    எண்ணம்   பெண்ணவளுக்கு.

குளிர் நீர்   தேகத்தைச்  சிலிர்க்க  வைக்க,   ஆற்றின்  ஓட்டம்   உடல்  வலிக்கு  மருந்தாய்  மாற,      நிலவொளியில்  அந்த ஆற்றங்கரையும், படித்துறையும்,  ஒரு  மாய  உலகைச்  சிருஷ்டித்தது   என்றால்  மிகையல்ல.

நிலா,  நட்சத்திரங்களின் பிம்பம் ஆற்று நீரில் தெளிவாய் தெரிய, இளவரசனுக்கு அவனே வானத்தில்  மிதப்பது  போன்ற  ஒரு  பிரமையை ஏற்படுத்தியது.

“இயற்கை  இவ்வளவு  அழகா…?”  வியந்தான் இளவரசன்.

அவனுக்கு  இயற்கை எல்லாம் ரசிக்கக் காலம் தான்  ஏது?
முடி  இளவரசன்,  வருங்கால மன்னன், ஒரு  நாட்டிற்கே   தந்தை  ஆகப்  போகிறவன்.

யுத்த கலை,   போர்க்களம்    என்றே     அவன் வாழ்க்கை  ஓடி  விட்டது.

கண்  மூடி  ஆற்றின்  மேல்  மிதக்க  ஆரம்பித்தான்.

‘சில்லென்ற  காற்று, நில  ஒளி, மலர்களின் வாசம்.
சில்வண்டுகளின் ரீங்காரம்…
‘இது    நிச்சயம் சொர்க்கபுரி தான்…
இப்போது தேவை  தேவ  கன்னி  ஒருத்தி  தான்.’  என்று     மனதிற்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான் ஆதித்தியன்.

வானத்தில்   தேவதைகள்   சென்றார்களோ   என்னவோ,  அவனுள்ள கிடக்கு    அறிந்து ‘ததாஸ்து’ என்று   வாழ்த்த,  மிதந்து   கொண்டு   இருந்த  இளவரசனின்  மேல்  வந்து   மோதியது  ஒரு பூ.
இல்லை  பூந்தோட்டம்…
இல்லை  தேவ  கன்னிகை.

கண்விழித்த  ஆதித்தியன் ஸ்தம்பித்துப் போனான்.
காண்பது   கனவா   நினைவா  என்று கூடப்  புரியவில்லை.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 3

அத்தியாயம் -2 ஆண்டு -1800. இடம் -தஞ்சை -இரண்டாம் சரபோஜி -ராஜா போன்ஸ்லே  மன்னர்  ஆட்சிக் காலம்.சோழ  வம்சா  வழியினர் ஆட்சி முடிவடைந்து, ஆங்கிலேயர்கள் உதவியால், ‘சரபோஜி’ மன்னர் தஞ்சை ஆண்டு கொண்டு இருந்தார். மெல்ல மெல்லப்  பரத கண்டத்தின் மாண்பு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்