arrow_back
காஞ்சித் தலைவன் 10
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 11 / 19

10

visibility 524
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

(சேவூர்   போர்க்களத்திலிருந்து   தப்பி,   வீர பாண்டியன்,   சயாத்ரி   மலைக்காட்டிற்குள்  (உண்மையா என்று  அறிய  முடியவில்லை)  ஒளிந்து     இருந்ததாகவும், (கதைக்காகக் காஞ்சிபுரம்  அருகே    உள்ள    காடுகள்   என்று  கொடுக்கப்பட்டிருக்கின்றன.

காட்டிற்குள்   சென்று, ஆதித்தியன் அவன்    தலை கொய்ததாகவும்,  அதனால்,  ‘வீரபாண்டியன் தலை  கொய்த  பரகேசரி’  என்ற  பட்டம்      ஆதித்தியனுக்கு  வந்ததாகவும்,  ‘யுவராஜா’  என்ற  பட்டம் கொடுக்கப்பட்டதாகவும், ‘திருஅலங்காடு செப்பு  தகடுகள்’ எண் அறுபத்தியெட்டு சொல் வதாய், சரித்திர  ஆய்வாளர்  நீல கண்ட சாஸ்திரி ஆராய்ச்சி  குறிப்புக்கள்  சொல்கிறது.

சோழ  நாட்டைத்  துண்டம்  போடப்  பல குறுநில மன்னர்கள் வீரபாண்டியனுக்கு உதவியதாகவும், சோழ எல்லைகளைக் கொளுத்துவதும், பயணிகளை,  வியாபாரிகளைக் கொன்றதாகவும்,  குழந்தைகளின்  முடமாக்கியதாகவும்  தகவல் இருக்கிறது.

இளவரசன்  தனியாகச் சென்றாரா, இல்லை  படையோடு   சென்று    வீரபாண்டியனைக்  கொன்றாரா   என்பது   பற்றிய  தகவல்  இல்லை.  ஆதித்தியன்   காயம் அடைந்ததாக எந்தக் குறிப்பும்   இல்லை.

வீரபாண்டியன் தலை கொய்தது பிற்காலத்தில் ஆதித்தியன் உயிர் போகக் காரணமாய் இதுவும் காரணமாய்  இருந்து இருக்கலாம் என்று பல ஆராய்ச்சி  குறிப்புக்கள்  சொல்கிறது.)

வீரபாண்டியனின்    விஷம்    தோய்த்த   வாள்  ஏற்படுத்திய  காயம்  தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, ஆதித்தியன் தள்ளாடத் தொடங்க, அவனைத்   தாங்கிக்   கொண்டாள்  நித்திலவல்லி.

“அன்பரே!… அன்பரே!… ஒன்றும் இல்லை. கண்ணைத்  திறந்து பாருங்கள்… கண்ணை  மூட வேண்டாம்.”   என்ற   நித்திலவல்லி       குரலை கேட்டும்,  ஆதித்தியன்    கண்கள்    சொருக   ஆரம்பித்தது.
தன்  கையிலிருந்த  குறுவாள்  கொண்டு    ஆதித்தியன்  மேல்  ஆடையைக்  கிழித்து   எறிந்த நித்திலவல்லி,  அவன் மார்பு காயத்தை வெகு ஆழமாகக்  கீறி  விட, செங்குருதி பெருக் கெடுத்தது. 

தன்  கைகளை  வைத்து  மார்பினை   அழுத்தி விட, குருதியின் அளவு அதிகமாகியது. சிறிது நேரம்  அப்படியே  விட்டவள்,  பின் காயத்தில் தன்   வாய்   வைத்து, ரத்தத்தை உறிஞ்சி கீழே துப்ப ஆரம்பித்தாள்.

ஐந்து ஆறு முறை அதுபோல் செய்தவள், பின் அழகன்  கொண்டு  வந்த  பச்சிலை   ஒன்றின்   சாற்றைக்  காயத்தின்  மேல்  பிழிய,   ரத்த பெருக்கம்  நின்றது.

ஆதித்தியனின்   ஆடையை இரண்டாய் கிழித்தவள்  அதைக்  கட்டு போல்  மேல்  கரத்தில் அழுத்தமாய்   கட்டி   விட,   ரத்தப்    போக்கு    இதயத்திற்குச்   செல்வது   குறைய   ஆரம்பித்தது.

“அண்ணலே!..   காளகூடம்   ஆழமாய்  பரவி   இருக்கிறது  என்று  நினைக்கிறேன்… இதற்கு இவர்  கண்  விழித்து இருக்க  வேண்டும்… ரத்தத்தில் இதன்  மேலும்  கலக்க விடுவது ஆபத்து.

இவரைக் கச்சியம்பதி அருகே இருக்கும்  குடிகளிடம் கொண்டு செல்வோம். அவர்கள்   மருத்துவத்தில்  சிறந்தவர்கள். எந்தவித சர்ப்ப (நாக)  காளகூடத்திற்கும்  அவர்களிடம்        சல்லியக்காரணி   உண்டு.  இவரை என் புரவியில் ஏற்றுங்கள்.”  என்றாள்   நித்திலவல்லி.

ஆதித்தியனை  நித்திலவல்லியின் புரவியில் குறுக்காகப்   படுக்க  வைக்க, அதில் மிக  வேகமாய்,  ஏறிய  அவள்,   ஒரு   கையால்   ஆதித்தியனைப்   பிடித்துக்   கொண்டு,   மறுகையால்   குதிரையின்  சேனத்தை   இயக்க,  அந்தக்   காட்டுக்குள்   மிக  வேகமாய்  பறந்தது  அந்தப்   புரவி. 

ஆதித்தியனின்  வீரர்களில்  ஒருவன்  வீரபாண்டியனின்    தலையை    எடுத்துக்   கொண்டு  தஞ்சைக்குச்   செல்ல,  ஐந்து பேர் அங்கு மீதம் யாராவது   இருக்கிறார்களா  என்று  தேட சென்று விட,  மீதம் உள்ளவரோடு    நித்திலவல்லியை  பின்  தொடர்ந்து   சென்றான்  முத்தழகன்.

சில   காத  தூரத்தில்  தெரிந்தது  குடிகளின் வாழ்விடம். அங்கு  இருந்தவர்களுக்கு நித்திலவல்லியை  நன்கு தெரிந்து இருந்தது. இவர்கள் தான்  கச்சியம்பதிக்கு  பண்ட மாற்றம் செய்ய  வரும்  மலை குடிகள்.

“பிடகர் எங்கே?” என்ற நித்திலவல்லியின் குரல் கேட்டு அந்த மலைகுடிகளின் மருத்துவர்  வெளியே  வந்தார். 

அதற்குள் மலைக்குடிகள் சேர்ந்து ஆதித்தியனைத் தூக்கிச் சென்று பெரிய குடில் ஒன்றில் படுக்க  வைத்து  இருந்தனர்.

பிடகர் ஆதித்தியனைப் பரிசோதித்து, நான்கு வகை  சல்லியக்காரணி (மருந்து-அத்திரம் /    ஆயுதம்  உருவாக்கிய   காயத்திற்குக் கொடுக்கப்படும்  மருந்து), ‘சமணியகரணி,   மிருத சஞ்சீவனி’ போன்ற  மருந்துகளை,  குளிகைகளைக்  கொடுத்து,  காயத்திற்குப்    பச்சிலை  வைத்துக்  கட்டினார்.

“பிடகரே!.. இளவரசரின் சீவனுக்கு(உயிர்க்கு) ஏதும்   இல்லை  தானே?…” என்றாள்                              நித்தில வல்லி,  தன்   உயிரைக்  கையில்   பிடித்துக் கொண்டு.

“இல்லை தாயே!… தங்கள் முன்னேற்பாடாகக் காளம் கலந்த குருதியினை வெளியேற்றி         இருந்தது  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை.  

இந்த  குளிகை ஒரு நாழிகைக்கு (மூன்று மணி நேரத்திற்கு)  ஒருமுறை  அளியுங்கள்.  இது  காள முறிக்கவும், புது குருதி உற்பத்தியாகவும் உதவும்.  உடலின் வெப்பம் குறையாமல்   பார்த்துக்  கொள்ளுங்கள்    தாயே.”  என்றவர்   விடைபெற,   நித்திலவல்லி   கண்   மூடி,   உணராமை  (மயக்கத்தில்)  இருக்கும்  ஆதித்தியனின்   அருகில்   அமர்ந்து   கொண்டாள்.

நிம்மதி  பெருமூச்சு  விட்  அழகன்,  அந்த மலை குடிகளின் பூகம் (ஊர்) முழுவதும் தன் வீரர்களை அனுப்பி  நான்கு  திசைகளிலும்  நிற்கச் செய்தான்.

அவர்களுக்கு   உதவியாய்   அந்த  மலைவாழ்  மக்களில்,   திடமாய்  இருந்த  இருபது  வாலிபர்களும்  காவலுக்கு  எட்டுத்  திக்கும் நின்றார்கள்.

அங்கு  இருப்பவன் நாளை  அந்த  நாட்டின்  சக்ரவர்த்தி  ஆயிற்றே!

சூரியன் மீண்டும் எழுந்து, மறைந்து இருள் பரவ ஆரம்பித்தது.
ஏறக்குறைய    12  மணி  நேரத்திற்கு  மேல், ஆதித்தியன்    விஷத்தின்    வீரியம்      காரணமாய்            மயக்கத்தில்   தான்   இருந்தான்.

பல முறை   உடல் தூக்கிப் போட, உடல் வெப்பம் வெகுவாக உயர்ந்து,  பிடகரின்   மருந்துக்குக்  கட்டுப்பட்டது.
அவர்  கொடுத்த  மருந்துகளை வேளை தவறாமல்  நித்திலவல்லி  கொடுத்துக் கொண்டே    இருந்தாள்.

“உங்களுக்கு  ஒன்றும் இல்லை பார்த்திபரே!.. கண்   விழியுங்கள். இப்படி  நீங்கள்  இருப்பது  என்   மனதை வாள் கொண்டு அறுக்கிறது.   இதைக்  கண்  கொண்டு  பார்ப்பதற்கா இந்தப் பாவி,  இன்னும்    உயிரோடு    இருக்கிறேன்?
அன்பரே!…  வாக்கு கொடுத்து இருக்கிறீர்கள்.கண்  விழியுங்கள்.” என்று அவன் மேல் சாய்ந்து கதறிக்  கொண்டு  இருந்தாள்  அவன்  துணைவி.

“பின்னையே!… மன்னித்து விடு.” என்றான் அழகன், அவள் வருத்தம், இளவரசன் கண் விழிக்காமல்  இருக்கும்  நிலை  கண்டு.

“உங்களுக்கு என்ன  சைகை காட்டினேன்  அண்ணலே?…  நாம்  இருவரும் மற்றவர்களுடன்  போர்  புரிந்து  கொண்டு  இருந்தாலும், நம் கண்   இளவரசரின்  மேல்  இருக்க வேண்டும் என்று சொல்லி    இருந்தேன்  தானே? 

எதற்காக   இவரை  அந்தக்  குள்ளநரி   வீரபாண்டியன்  அருகே  செல்ல  விட்டீர்கள்?… நான்  தான் வெகு  தூரத்திலிருந்தேன்.  நீங்கள் இவர் அருகே அல்லவா போரிட்டுக் கொண்டு  இருந்தீர்கள்?…. 
உங்கள்  கவனம்    எப்படிப்    பிசகியது   அண்ணலே?…   நான்  அருகே  வந்தால்  இவர்  என்னைக்  காக்கத் தான்  முயல்வார்,  தனக்கு  வரும்  ஆபத்தின்   மேல்   கவனம்   செலுத்த  மாட்டார்  என்று  தானே,  உங்களை  இவர்  அருகே விட்டு  நான்   தொலைவில்  நின்று போரிட்டேன்!… இப்படி என்று தெரிந்து இருந்தால்…”  என்றாள்  நித்திலா   வேதனை யுடன்.

“மன்னித்து  விடு  பின்னையே!… மன்னித்து விடு…”  என்றான்  அழகன். 

“வீரபாண்டியன் ஆட்கள்   மீதம்   இங்கே  காட்டில் இருக்கலாம். அவர்கள் தலைவன்  இறந்த கோபத்தில்   மீண்டும்  தாக்க  முயலலாம். 
நம்  வீரர்கள்  விழிப்புடன்  இருக்கட்டும். 

இங்கு உள்ளவர்களும்  போர்க்கலையில்  வல்லவர்கள்  தான். ஆட்களை மாற்றிக் கொண்டே இருங்கள். இல்லை  என்றால்  சோர்ந்து விடுவார்கள்.  கச்சியம்பதிக்கும்  தகவல்  அனுப்பி விட்டேன்.அங்கிருந்து  சோழ  படை  வந்து  விடும். காவல் பலமாய்   இருக்கட்டும்.” என்றவளின் கட்டளை ஏற்று  அழகன்  வெளியேறினான்.

அழகன் வெளியேறியவுடன், அந்தக் குடிலின்  கதவை   அடைத்துச்  சாற்றிய   நித்திலவல்லி,   ஆதித்தியன்  கைகளைப் பிடித்துக்  கொண்டு  அவன்  அருகே அமர்ந்து    விட்டாள்.

பிடகர்  கொடுத்த குளிகை அவனுக்குக் கொடுத்து, அவன் அருகே அமர்ந்து இருந்தவள் அவளே  அறியாமல்  உறங்கி  இருந்தாள்.

சற்று   நேரத்தில் ஏதோ சத்தம் கேட்கக் கண் விழித்த   நித்திலா,  ஆதித்தியன்   அந்த   இரவு  குளிரில்  நடுங்கிக்  கொண்டு   இருப்பதையும், அவன்  உடல் வெப்பம்   வெகுவாகக்   குறைந்து விட்டதை  கண்டு  பிடகரை  அழைக்கக்    கதவின்  அருகே   சென்றவளுக்கு,   முன்னர்   வைத்தியம்   பற்றிக்  கற்பிக்கும் போது,   பிடகர் கூறியவை   நினைவுக்கு வர, ஆதித்தியன் அருகே சென்றவள், தன் ஆடைகளைக்  களைந்து   அவனை   அணைத்துக்  கொண்டாள்.

அவள்  ஆகாதின்  வெப்பம் (உடல் வெப்பம்) ஆதித்தியனின் உடல் குளிரைப் போக்கிக் கொண்டு  இருந்தது.

ஆண்டு -2019
இரவு -2. 00 மணி.
இடம் -காஞ்சிபுரம்.  

ஏகம்பநாதர் திருக்கோயிலில் சிலைகளைக் கடத்த  வந்த  நான்கு  பேர் அடங்கிய கும்பல்,    ஐம்பதிற்கும்  மேற்பட்ட  நாய்கள் துரத்தி, எதிரே வந்த காவல்துறை வாகனத்தில் மோதி, வசமாய் சிக்கி  கொண்ட   அன்றிரவு,   காஞ்சி   நகர    வீதிகள்  உறங்கிக்  கொண்டிருக்க,  காஞ்சிபுரம்  எல்லையில்   நடந்து   கொண்டிருந்தார், கோயிலுக்குள் அர்த்தஜாம  பூஜை   செய்த   அதே   தவசீலர்.

நள்ளிரவு,  வெளிச்சம்   இன்மை  எதுவுமே  அவரைப்  பாதித்தாய்   தெரியவில்லை.  அவர் அருகே நடந்து  கொண்டிருந்தது  அந்த  ஆள்  உயர   கறு  நிற  நாய்.

காஞ்சிபுர   நகர   மக்கள்   அறியாமல்,  அந்த  நள்ளிரவு   வேளையிலும் , காவல் துறை  வெகு    பரபரப்பாக    இயங்கி  கொண்டிருந்தது   சைரன்   இல்லாத   வாகனங்கள்,  நகரின்  பல  பகுதிகளில்  வெகுதீவிரமாய்  சோதனைகளில்   ஈடுபட்டு    இருந்தார்கள்.

அந்தச்   சோதனையின்   விளைவாக,  வெளி நாடுகளுக்குக்   கடத்த வைக்கப்பட்டிருந்த பல ஐம்பொன்  சிலைகள்  மீட்கப்பட்டு,  இடை தரகர்கள், சிலை  கடத்தல்  குழுக்கள்,  தமிழ்நாடு  முழுவதும் கைது   செய்யும்   படலம்  செவ்வனே நடந்து கொண்டிருந்தது.  எல்லாம்  முன்  தின  இரவு,  நாய்கள்  துரத்திச், சிக்கி  கொண்ட  அந்த   நால்வர்  கொடுத்த  தகவல்களின்   அடிப்படையில்  நடத்தப்பட்ட  சோதனையின்   விளைவே. 

வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்,            உண்மையைச்  சொல்லக்  கூடாது,  பொய்  சொல்ல  வேண்டும்  என்று  எவ்வளவு  தான் முயன்றாலும்,  அந்த   நால்வராலும்  அது  முடியாமல்,  எல்லா  உண்மைகளையும்  அவர்கள்   கட்டுப்பாட்டையும்   மீறிக்   காவல் துறையிடம் உளறிக் கொண்டிருந்தார்கள்.

காவல்  துறைக்கே அது அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இதற்கும் barbiturates, சோடியம் தாயோபென்டல்  போன்ற  எந்த  உண்மை  வெளிக்கொணரும்  மருந்துகள் எதையும்    கொடுக்கவே   இல்லை. 

யாராலோ    இயக்கப்படுவது  மாதிரி,  எல்லா     உண்மைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்  விவரிக்க  விவரிக்கச்  சிலை கடத்தல் தடுப்பு  பிரிவின் முன், விரிந்தது சிலை கடத்தல் நெட்ஒர்க் என்ற அரக்கனின் கோரமுகம்.

அதன் பின்   இருப்பவர்களின்   தகவல்கள்.       சிலை   கடத்தல்  தடுப்பு  பிரிவின்  ஸ்பெஷல்   அதிகாரிகள்  குழு,  காஞ்சிபுரத்தில் முகாம்    இட்டு  இருப்பதற்கான  காரணம்  சென்னை இன்ஸ்பெக்டர்  ஜெனரல்   ஏ.ஜி. சுந்தர  மாணிக்கவேல்,  சென்னை   உயர்நீதிமன்றத்தால் அவரிடம்   கொடுக்கப்பட்ட   வழக்கொன்றால். 

இது  ஒரு   வினோதமான   வழக்கு.
ஒரு    ‘இறந்த   நபர்,   தான்  உண்மையில்   உயிருடன்    இருப்பதாகவும்,  தமிழக  காவல்துறை வேண்டுமென்றே  உண்மையை  மறைத்து   விட்டதாகவும்,  நீதிமன்றத்தில்   மனு தாக்கல்      செய்திருந்தார். 

இந்த   அதிர்ச்சியூட்டும் மனுவைத் தொடர்ந்து, நீதிமன்றம்  முழுமையான  விசாரணைக்காக இந்த வழக்கைச்   சுந்தர மாணிக்கவேலிடம் ஒப்படைத்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, ஐ.ஜி.யின்  தொலைபேசி ஒலித்தது.  ஒரு  முக்கியமான ஆதாரம்  அவர்களிடம்  சொல்லப்பட்டது.    அந்த ஸ்பெஷல் காவலர்கள் குழு எதிர்பார்த்து காத்திருந்த,  உதவிக்குறிப்பு  இறுதியாக வந்துவிட்டது. 

திருடப்பட்ட   பழங்கால   சிலைகள் காஞ்சிபுரத்தில் ஒரு  வீட்டில்  ஏற்றுமதி  செய்யக் காத்திருப்பதாக  வந்து   சேர்ந்த தகவலைத் தொடர்ந்து, கடந்த ஒரு  மாதமாய்,  அங்கே  ஸ்பெஷல்   கேம்ப் நடந்து கொண்டிருந்தது. 
சுந்தர  மாணிக்கவேல்,  கிடைத்த  தகவல்  உண்மையானதா என்பதை கண்டறிய  ஏசிபி. ஆதவ் காலேஸ்வர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஸ்பெசல்  அதிகாரியைக் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி  வைத்திருந்தார். 

அந்த ஆதவ் காலேஸ்வரிடம் தான் முன்னிரவு அந்த  நால்வரும்  வகையாய்  சிக்கியது.   இதற்கெல்லாம்  காரணமாய்  இருந்த அந்தத்       தவசீலரும், நாயும் கடைசியாய் ஒரு குடியிருப்பு  பகுதியில்  வந்து  நின்றார்கள்.

அவர்கள்  சென்ற  பகுதியில்  அங்கொன்றும், இங்கொன்றுமாய்  வீடுகள் இருக்க,  தெரு விளக்குகள்  வெளிச்சத்தை  கொடுப்பதற்கு  அழுது   வடிந்து  கொண்டிருக்க,  அந்தத் தவசீலரும், நாயும்  ஒரு  வீட்டின்  முன்  வந்து  நின்றார்கள்.

குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அந்த வீட்டிற்கு என்று  தனித்துவம் எதுவும் இல்லை.  ஆனால், உள்ளே  இருந்த ஒவ்வொருத்தனும் எந்தவித  பஞ்சமா  பாதகத்திற்கும்  அஞ்சாதவர்கள். 

சிலை   கடத்தல்   என்ற   நிழல்  உலகின்  பின்  இருக்கும்  அரக்க  ஜென்மங்கள்.
பணம்   ஒன்றே   இவர்கள்  மதம். ஹவாலா, ஷெல் கம்பெனி, ஒரு நாட்டின்    கலாச்சாரம், பண்பாட்டை அழிப்பது, தீவிரவாதத்திற்கு  பணம்  சப்லை  செய்வது  என்பது  இவர்கள் வேலை.

அந்த   வீடு   லீசுக்கு   எடுத்து இருப்பது, 2008 ஆம்  ஆண்டில்,   சந்திர   கபூர்   சிலை  கடத்தல்      வழக்கின்  விசாரணையின்  போது  போலீசிடமிருந்து   தப்பிய   கடத்தல்  கிங்பின்  சகோதரர்களான  மூவர்  ரவி, சோமு, பரமு.

ரவி,  சோமு,  பரமு  மூவரும்   ஒரு   கலை  வியாபாரிகள்.    1995 முதல் சென்னையின் தேனாம்பேட்டையிலும், ஆல்வார்பேட்டையிலும்   ஒரு   சிறிய   கலைக்   கூடத்தை நடத்தி வந்தவர்கள். 

நியூயார்க்கின்   மோசமான சிலை கடத்தல் கிங்பின்/kingpin,  சந்திர கபூரின்  கூட்டாளியாக இருப்பவர்கள். 

இந்த  மூவரின் மோடஸ் ஓபராண்டி/ modus operandi/  செயல்படும்   முறை    கபூரைப்  போலவே   இருந்தது, சுந்தர மாணிக்க வேல், ஏ.சி.பி   ஆதவ்வின்  கவனத்தை   இந்த    மூன்று  சகோதரர்கள்  மேல்  விழ   வைத்தது.  

தொலைதூர  கிராமங்களில்  உள்ள பழங்கால   கோயில்களை   அடையாளம் கண்டு, பொதுவாகச்   சோழர்  சகாப்தத்தில் (கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை), கோயில்களை  உடைத்து  சிலைகளைத்   திருடிச்  சென்னைக்கு  கொண்டு    செல்வார்கள்.

தலைநகருக்கு  வந்ததும்,  இந்த   மூவரின்  கலைக்கூடம்   சரியான   பாதுகாப்பை  வழங்கியது.  பின்னர்   கள்ள  சிலைகளைத்   தயாரிப்பதற்காக  நகரத்திற்கு  அருகில்  உள்ள சிறிய  கைவினைஞர்களைப்  நியமிப்பார்கள்.

பின்னர் மும்பையில் உள்ள  முகவர்களுக்கு, ‘கைவினைப் பொருட்கள்’ என்ற  போர்வையில் உண்மையான மற்றும் போலி பழம்பொருட்களின் கலவையை  அனுப்புவார்கள்.

சிலைகளை ஆஸ்திரேலியா, ஹாங்காங்  போன்ற  பல்வேறு  நாடுகளுக்கு அங்கிருந்து சிலைகள்  கடத்தப்படும்.

இன்று  இந்த  மூன்று  சகோதரர்களைத் தேடி, அவர்கள் குழுவைக் கையும் களவுமாகப் பிடிக்கவே ஆதவ்வும் அவன்  குழுவும் அலைந்து கொண்டிருந்தது.  அவர்களுக்குச் சிரமம்   வைக்காமல்    தானாய் வந்து   சிக்கி  கொண்டார்கள்    அந்த   நால்வர். 

அந்த வீட்டின் உள்ளே கோபத்துடன் அமர்ந்து இருந்தார்கள் சகோதரர்கள் மூவரும். அதற்குக் காரணம்   இருக்கவே   செய்தது.  இவர்கள்   ஏகாம்பரநாதர்   கோயிலில்,  கொள்ளையடிக்க  அனுப்பிய  நால்வர்  குழு,  ஒரு நாளாகியும்   திரும்பியிருக்கவில்லை. 

எந்தவித தொடர்பும் இல்லாமல்,  மாயமாய்    மறைந்திருந்தார்கள். அவர்கள்  ஆதவ்விடம்  வசமாய்  சிக்கிக்  கொண்ட  தகவல், இன்னும் அவர்களை வந்து சேர்ந்திருக்கவில்லை.
“எங்கே  போய்த்   தொலைஞ்சானுங்க?… ஒரு    தகவலும்    இல்லை.”  என்றான்   ரவி.

“அவனுங்களை    நம்பாதே    என்று பலமுறை    படிச்சி    படிச்சி சொன்னேன். நீ  தான் கேட்கலை.”   என்றான்    சோமு.

“எனக்கென்னவோ கோயிலில் லம்பா ஏதாவது கிடைச்சிருக்கும்.  அதான் எஸ்ஸாகிட்டானுங்க போலிருக்கு.”  என்றான்  பரமு.

“அந்த ஹைவே அதிகாரி நிகிலையும், அவன் காதலி   கவிதாவையும்    என்ன    செய்வது?…  அவன் கிட்ட இருந்த குறிப்புப் படி தான் காஞ்சி புரத்தில்,  சோழ இளவரசன் ஆதித்யன் கட்டிய தங்க   அரண்மனை    இருப்பதாகவும், அதற்குள்   வைரத்தால்,   செய்யப்பட்ட    நிசும்பசூதனி    சிலை     இருப்பதாகவும்    நமக்குத்   தெரிய   வந்து ,  இந்த நகரத்தில் ஆறு மாசமாய்    நாயாய்,   பேயாய்     அலைஞ்சிட்டு இருக்கோம்.  பலன் என்னவோ ஸிரோ. காசு தான் செலவு ஆகிட்டு   இருக்கு.” என்றான்   சோமு.

“அந்த நிகிலுக்கும் அதுக்கு மேல் எதுவும்   தெரியலை. வெளியே  விட்டோம் நாம சிக்கிப்போம்.   கதையை    முடிச்சுட   வேண்டியது   தான்.” என்றான்  ரவி.  

  இவர்கள்  பேச்சிலிருந்து,  அந்த  மூவர்  அடங்கிய சகோதரர்  குழு,  எதற்காகக்   காஞ்சிபுரத்தில்வந்திறங்கி   இருக்கிறது    என்பது    புரிந்து   போனது.

தேவநாராயணர் தலைமையில் ஆதித்ய கரி  காலன்,  கச்சியம்பதியில் முழுவதும் தங்கத்தால் நிர்மாணித்த   அரண்மனையை    தேடியும், வீரபாண்டியன்  களவாட   முயன்ற,  நிசும்பசூதினி சிலையையும்   தேடி    வந்திருந்தார்கள்.

ஆயிரம்  ஆண்டுகளுக்கு  மேலாகியும்,  இன்னமும்   அந்தத்   தங்க  அரண்மனையும்,  வைரத்தால்      செய்யப்பட்ட  நிசும்பசூதினி  சிலை  மேல் உள்ள   பேராசையும்,  மனித   இனத்துக்கு   மறைவதாக இல்லை.

எந்தக்   காஞ்சிபுர   நகர   வீதிகள்,  ஆயிரம்  ஆண்டுகளுக்கு   முன்,   இந்தத்    தங்க அரண்மனையால், அந்த   வைர    சிலையால்   பல  மரணங்களுக்கு,   தியாகங்களுக்குச்    சாட்சியாய்   இருந்ததோ, அதே  நகரம்  மீண்டும்   காத்திருக்க    ஆரம்பித்தது .

எங்கே, எல்லாம்  தொடங்கியதோ  அதை  அங்கே முடித்து   வைக்க,  அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்    அந்தத்    தவசீலரும்,   அந்த   நாயும்.

சொந்த  வீட்டிற்குள்  நுழைவது  போல், எந்தவித பதட்டமும்    இல்லாமல்,  அந்தத்    தவசீலரும், நாயும்   உள்ளே    நுழைய,   வீட்டிற்குள் இருந்தவர்களுக்கு,   திடீரென்று   கண்  தெரியவில்லையா இல்லை  உள்ளே    வந்த    தவசீலரும்,   அந்த    நாயும்,   அரூப    ரூபமாய்    இருக்கிறார்களோ         என்பது    விளங்காத    புதிரே.

முதலில்  அந்த   தவ   சீலர்,    மூடியிருந்த அறைக்குள்  சென்றவர், அங்குத்   தலையில்,  அடிப்பட்டு மயக்கத்தில்   இருந்த   நிகில்,   கவிதா   இருவருக்கும்,  முதல்  உதவி   செய்து    அவர்கள்   மயக்கத்தை     போக்கினார். 

“எதையும் பேச வேண்டாம்… இது பைரவன். இவன்   உங்களுக்கு  வழிக்காட்டி   அழைத்துச் செல்வான்.  இவன்   பின்னால்,   பயம்    இல்லாமல்  செல்லுங்கள். எந்த ஆபத்தும் வராது.” என்றவர் பேச்சைக்    கேட்டு,    குழம்பி,   ஏதோ  மந்திரத்திற்கு   உட்பட்டவர்கள்   போல்,   பைரவன்    என்று  அழைக்கப்பட்ட   நாயைப்,  பொம்மை   போல்    பின் தொடர்ந்து    சென்றார்கள்.

பைரவன்   அவர்கள் இருவரையும் கொண்டு சென்று    நிறுத்திய     இடம், ரோந்து    பணியில்      ஈடுபட்டு   இருந்த    அழகர்    நம்பியின்    போலீஸ்  ஜீப்   முன். ஏ.சி.பி   ஆதவ்    காலேஸ்வரின்    நண்பனும்,  சக அதிகாரியான    அழகர்    நம்பியின்   ஜீப்   முன்.   

தன்  ஜீப்பிலிருந்து  இறங்கிய அழகர்   நம்பி    இவர்களை  யார்   என்னவென்று   விசாரிக்க, எதையும்    பேசாமல்,   மயங்கி    விழுந்தார்கள்    அவர்கள்     இருவரும்.

அதே   சமயம்   அந்தச்    சகோதரர்கள் மூவரும் நிகில்,  கவிதா   இருந்த  அறையைத் திறந்து கொண்டு   உள்ளே    நுழைந்து,    கட்டி    வைத்திருந்தவர்களை   காணாமல்   திகைத்து, தங்கள் ஆட்களைத்,     தப்பி    போன    இருவரை    தேட   அனுப்பி     வைத்தார்கள்.

“எப்படி  தப்பி  இருக்க  முடியும்?… ஹெவி டோஸ் மயக்க  மருந்து  கொடுத்து    இருந்தேன். எழுந்துக்கவே மூணு நாளாவது ஆகும்.”   என்றான் ரவி திகைப்புடன்.

“வெளியே   ஏற்கனவே   அந்தச் சுந்தர மாணிக்கவேல்,  அந்த   ஆளின் மகன் ஆதவ்,  நம்மையும், நம்ம    ஆட்களையும்    ஒருவழி     ஆக்கிட்டு         இருக்காங்க.  இவனுங்களை   மாதிரி பணத்திற்கு விலை போகாத அதிகாரிகள் இருக்கும் வரை நமக்குத் தலைவலி   தான். அவனுங்க   கையில்,  அந்த    இருவரும்  சிக்கினால், நம்முடைய  இந்த மறை விடம்   தெரிந்து   விடும்.”   என்றான்    சோமு.

“இங்கே  கடையை இப்போதைக்கு மூடிட்டு,   எல்லாம் அடங்கியபின், மீண்டும் வந்து சிலை களைக்   கடத்துவோம்.  அப்படியொரு தங்க அரண்மனையை    இத்தனை  காலத்திற்கு   எவனாவது   விட்டு     வைத்திருப்பானா?…

அப்படியொரு அரண்மனை இங்கே இருக்கும் என்பதெல்லாம் கட்டுகதை என்று    படிச்சி படிச்சி    சொன்னேன்.  நீங்க  ரெண்டு  பேரும்  கேட்டா  தானே!… இப்போ வசமாய்   சிக்க   போறோம்.” என்றான்    பரமு.

“பரமு   சொல்வது    தான்    சரி.    சில நாளாவே   யாரோ,  நம்மைக்  கண்காணித்து,   நம்முடன்  இருக்கும்  பீல். திடீர் திடீர்   என்று இங்கே  கடத்தி   வைத்திருக்கும் சிலைகளுக்கெல்லாம்  யாரோ   பூஜை   செய்துட்டு    இருக்காங்க.

கொலுசு சத்தம் எல்லாம் கேக்குது. கண்ணுக்கு முன்னாடி   யாரோ   நடந்து போவது     போல இருக்கு. 
காஞ்சிபுரம்   மாய நகரம் என்று சொன்னதெல்லாம்   உண்மை தானோ!.

அமானுஷயமாய் நம்மைச்   சுற்றி   என்னென்னவோ   நடக்குது.  இன்னும்   அரை  மணி   நேரத்தில் கிளம்பிடலாம்…”என்று  சொல்லிக் கொண்டே போன ரவி, பேசுவதை    நிறுத்தித்    திகைத்து    விழித்தான்.

அவன்   எதைப்    பார்த்து    அதிர்ந்து     நிற்கிறான் என்பது புரியாமல், அவன் பார்வைசென்ற    இடத்தைத் திரும்பிப் பார்த்த சோமுவும், பரமுவும்  கூட ஸ்தம்பித்து   நின்றார்கள்.

.கண்கள்   காண்பதை    மூளையால்    சரிவரக்    கிரகிக்க    முடியவில்லை. அவர்கள் மூவருக்கும் முன் இருந்த அறையில் ஆயிரம்   லட்சம்   சூரியன் ஒன்றாய் ஒளிர்வது போன்ற வெளிச்சத்துடன் அந்த அறை மிளிர்ந்துகொண்டிருந்தது.

“வாட் தி ஹெல்?…” என்று அலறியவாறு சென்ற மூவரும்,  அந்த   அறை    கதவைத் திறந்து கொண்டு   உள்ளே    சென்றார்கள்.

அறைக்குள்    வந்தவர்களின் கண்கள் அங்கு வீசிய,   ஒளியின்    தன்மையால்,   கண்கள் கூசி போக, அவர்களால்   கண்ணைத்   திறந்து    பார்க்கவே   முடியவில்லை.      

அவர்கள்   மூவரின்  கண்கள், அந்த வெளிச்சத்திற்கு   பழகிய   பின்னர்     கண்    திறந்து     பார்த்தவர்கள்,  வாயை    அகல     விரித்து     திகைப்படைந்து நின்றார்கள்.

அங்கே அந்திரத்தில் பறந்து கொண்டிருந்தது, இவர்கள்   எந்த   வைர    சிலையை     தேடி      வந்திருந்தார்களோ,    அதே    நிசும்பசூதனி   வைர   சிலை.    

வெற்றி அருளும் நிசும்பசூதனி... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome  | Glory of nisumbasoothani temple - Vikatan
அந்த வைர சிலையை ஆயிரத்தெட்டு தீபம் கொண்டு வழிபட்டு கொண்டிருந்தார் அந்த தவசீலர். 

அந்த    தீப   ஒளி வைரத்தின் மீது பட்டே, அந்த    இடம்,  ஆயிரம்   சூரியனின்    ஒளி    வீசுவது     போல் ஒளிர்ந்து    கொண்டிருந்தது.  அவர்களையும் அறியாமல் மூவரும் மண்டியிட்டு கை கூப்பினார்கள்.

அந்த  தவசீலர்   தன்    வெண்கல    குரலில், முத்துசாமி    தீக்ஷிதர்     இயற்றிய,
  “மகிஷாசுர    மர்தினிம்    நமாமி   
மகா    நிலைய கபர்தினிலிம்.
மகிஷாசுர   மர்தினிம்    நமாமி  
மகா    நிலைய கபர்தினிலிம். மஹிஷ
மஸ்தக   நா    தான பேத விநோதினிம்.”
என்பதை   சுருதி    சுத்தமாய்    பாட,    அதை     கேட்டவர்களின்   உடலும், உள்ளமும் சிலிர்த்து போனது. 

  அவர்  தம்  பூஜையை  முடித்தவுடன்,   அந்த   ஆள் உயர  வைர  சிலை,    கையளவிற்கு   சுருங்கி,   பறந்து   வந்து,   அந்தத் தவசீலரின் கைக்குள் அடங்கியது.

தன்   பூஜை    முடிந்து    திரும்பியவரின் பார்வை மண்டியிட்டுக் கை கூப்பி கொண்டிருந்த அந்த மூன்று    சகோதரர்களின்    மேல்   பதிந்தது.

‘இந்தப் பிறவியிலும் நீங்கள் திருந்தப் போவதில்லை. பேராசை, உங்கள்   கண்ணை மறைக்கிறது.   ‘விநாச   காலே  விபரீத புத்தி.’ அழிவு வரும்போது, எதுவுமே நமக்குத் துணை இருக்காது தான்.

முன்  ஜென்ம  புண்ணியத்தின் பலன் இதுவரை உங்களைச் செல்வந்தர்களாய்  வைத்திருந்தது.  ஆனால்,  அந்தப் புண்ணியமும் இதோ தெய்வ மூர்த்தங்களை    திருடி,  அந்த    மூர்த்தங்களுக்கு நிதமும்    கிடைக்க    வேண்டிய,   பூஜை      கிடைக்காமல்    செய்ததில்   அழிந்து    விட்டது.

போன   ஜென்மத்து,   ரத்த கரை வேறு உங்கள் மூவரின் கையில் இருக்கிறதே!….

சிவன் சொத்து மட்டுமல்ல,   எந்தக் கோயிலின் சொத்தும் குல நாசம்    தான்.
பிரபஞ்சத்தையே   படைத்தவனின்   முன்னால்    சிறு   எறும்பான,   உங்களைப்    போன்ற    அற்ப      பதர்கள்    ஆடிதான்     பார்க்கிறீர்கள். உங்களைப்    படைத்தவனும் உங்களை ஆடவிட்டு, நேரம் வரும்போது உங்கள் ஆட்டத்தை எல்லாம்    முடித்துத்    தான்    வைக்கிறான்.    அந்தக்    கடவுள்    அன்பை வாரி வழங்குவதில் அன்னைக்கும்  மேலானவன்.
அதே சமயம் நீதி, நியாயம், தர்மம்   என்னும் அரசவையின்  அரசன்.  அவன்    சாட்டையை   சுழற்ற ஆரம்பித்தால்   மனிதனால்   தாங்க    முடியாது.

உங்களுக்கான  அந்திம காலம் நெருங்கி விட்டது. இந்த  மூர்த்தம்  உங்களுக்குச் சொந்தமானது இல்லை.   இதற்கு    உரிமையானவர்கள்  வந்து விட்டார்கள். சென்று சேர வேண்டியவர்களிடம் சென்று    சேரும்…”   என்றவர்     புன்னகைக்க, சகோதரர்கள்    மூவரும்,   அடுத்த நொடி     அங்கிருந்து    ஓடி,    வெளியே இருந்த தங்கள் காரில் பாய்ந்து ஏற, சென்னையை நோக்கி அசுர வேகத்தில்   பறந்தது    அவர்கள்   சுமந்த    கார்.

ஒரு   வம்ச   கிளையையே,   ஆயிரம்  ஆண்டுகளுக்கு   முன்  கருவறுக்க காரணமாய் இருந்தவர்கள்  அவர்கள்.

சோழ மணிமகுடத்திற்கு உரியவனை, வீரத்தின் விளை  நிலம்   போன்றவனை,  வஞ்சத்தால்    சாய்த்தவர்கள் அவர்கள்.

பரிசுத்தமான  காதல் கொண்ட இரு உள்ளங்களைச்   சேர   விடாமல் செய்தவர்கள். சரித்திரத்தை மாற்றி எழுதி, ராஜராஜ சோழன் என்ற அரசன் உருவாகக் காரணமாய் இருந்தவர்கள்   அவர்கள்.

தங்கள்   முடிவை    நோக்கிச் செல்லும் அந்த மூவரை   கண்டு தெருவில் நின்றவர், அடுத்த நொடி காற்றோடு காற்றாய் கலந்து, மறைந்து போனார்

அடுத்த அத்தியாயம்

11

காலம் -965 A. D.இடம் - காஞ்சிபுரத்தின்  அடர்ந்த  கானகம்.  மறுநாள் காலைப் புள்ளினங்கால் ஒலியில் கண் விழித்தான் ஆதித்தியன். நடந்தவை ஒவ்வொன்றாய்  நினைவிற்கு வர, அவன்  கலக்கம், தவிப்பு,  நித்திலவல்லி  அந்தச்  சண்டையில் என்ன ஆனாள்  என்பதாய்   தான்   இருந்தது.பதறி  எழப்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்