11
காலம் -965 A. D.
இடம் – காஞ்சிபுரத்தின் அடர்ந்த கானகம்.
மறுநாள் காலைப் புள்ளினங்கால் ஒலியில் கண் விழித்தான் ஆதித்தியன். நடந்தவை ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர, அவன் கலக்கம், தவிப்பு, நித்திலவல்லி அந்தச் சண்டையில் என்ன ஆனாள் என்பதாய் தான் இருந்தது.
பதறி எழப் போனவன், எழ முடியாமல் மீண்டும் மஞ்சத்தில் விழுந்தான். அவன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள் அவன் தேவதை.
அவனையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளி வந்தது.
‘என் கை அணைப்பில் தன்னவள். எவ்வளவு நெருக்கம்!… இதைவிடச் சுவர்க்கம் பெரியதா என்ன?… இதற்காக எத்தனை காயம் வேண்டும் என்றாலும் ஏற்கலாம் போல இருக்கிறதே!’ என்று அவளை நெருங்கி மேலும் அணைத்து, அவள் உச்சியில் தன் இதழைப் பதித்தான் ஆதித்தியன்.
புன்னகையுடன் அவள் மதிமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவனின் புன்னகை உறைய ஆரம்பித்தது.
பெண்ணவள் இருந்த நிலை, அங்கு நடந்திருந்தவற்றை இளவரசனுக்கு பட்டவர்த்தன படுத்த ஸ்தம்பித்துப் போனான் அந்தக் காவலன்.
‘தானா!…. இப்படி?… அதுவும் என்னை நம்பி தன் அன்பைப் பொழிந்த பேதையவளின் அன்பை அல்லவா அழித்து இருக்கிறேன்!’ என்று வெகுவாய் கலங்கிப் போனவன், தன் மார்பினில் உறங்கிக் கொண்டு இருந்த நித்திலவல்லியை அசைத்து எழுப்பினான்.
“தேவி!.. அன்பே!… கண் விழித்துப் பார்.” என்ற அவன் குரலில், கண் விழித்த பெண்ணவளின் கண்கள், அவன் கண்களோடு கலந்து, அவள் இதழில் புன்னகை உருவானது.
“இறைவா! உனக்கு நன்றி. நல்லவேளை உங்களுக்கு எதுவும் இல்லை.” என்றவள் அவன் முகம் முழுவதும், தன் முத்தத்தால் அவனை மூழ்கடித்தாள்.
அதற்குள் வெளியே இருந்து கதவு தட்டப்படும் சப்தம் கேட்கவே, அவனை விட்டு நாணத்தோடு எழுந்தவள், தன் ஆடைகளை உடுத்திக் கொண்டு, கதவினை திறந்தாள்.
அழகனோடு, பிடகரும் ஆதித்தியனைப் பரிசோதிக்க வந்து இருந்தனர். அவன் கண் விழித்து எழுந்து இருப்பதைக் கண்டு, அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கியது.
அவர்கள் உண்ணப் பால், பழம், கிழங்கு, காய் வகைகள் கொண்டு வந்து குவித்தனர் அந்த மக்கள்.
நள்ளிரவில் கச்சியம்பதி படைகளும் வந்து சேர்ந்து இருக்க, அங்குக் காவல் மிக அதிகமாய் இருந்தது.
அந்த மலை குடிகளின் உள்ளே வீரபாண்டியன் ஆட்கள் யாரும் இல்லை என்பதைப் பல முறை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர், காலாட்படையை , அந்த ஊரைச் சுற்றி அரணாய் நிற்க வைத்தான் அழகன். இவர்களை மீறி ஒரு ஈ, காக்கை கூட உள்ளே செல்லவோ, வெளியே வரவோ முடியாது என்ற நிலை.
காவலில் முழுமையான திருப்தி வந்த பிறகே நான்கு நாட்களுக்குப் பின், அரை மணி நேரம் கண் அயர்ந்தான் அழகன். அந்த உறக்கமே அவனுக்கு மீண்டும் போதுமானதாய் இருக்க, கண் விழித்தவுடன் பிடகரோடு ஆதித்தியனைப் பரிசோதிக்க வந்து விட்டான்.
“அழகா!” இளவரசன் அன்பான குரலில், அவன் கால் அருகே, மண்டியிட்ட அழகன்,
“மன்னிக்க வேண்டும் இளவரசே!… சிறிது கவனம் சிதறி விட்டது. உங்கள் உயிர் காக்க வேண்டிய நான் அதில் தோற்று விட்டேன். இதோ எனது வாள். என் சிரம் கொய்து விடுங்கள்.” என்றான்.
“அழகா!… உயிர் போக வேண்டும் என்பது அந்த இறைவன் ஆணை என்றால், அது யார் தடுத்தாலும் நிற்கப் போவதில்லை. வீரபாண்டியன் வழக்கம்போல் யுத்த தர்மத்தை மீறுவான் என்று யார் தான் எதிர்பார்த்தது!.
போரிடும் வாள் தன்னில் ஆலகாலம் கலக்கக் கூடாது என்பது யுத்த தர்மம். அவனுக்கு எங்கே அது எல்லாம் தெரியப் போகிறது. இதில் உன் பிழை எதுவும் இல்லை. இங்கே நீ ஏற்படுத்தி இருக்கும் காவல் பற்றித் தேவி சொன்னதைக் கேட்டோம். உன்னைப் போல் திறமைசாலி வேறு எவரும் இல்லை. எனக்குக் குணமாகி விட்டது. உன் வேலையைச் சென்று கவனி.” என்ற ஆதித்தியன் மெல்ல எழுந்து, யாரின் உதவியும் இல்லாமல் குடிலை விட்டு வெளியே வந்தான்.
அந்தக் குடில் அந்தக் கூட்டத்தின் தலைவருக்குச் சொந்தம் போல் இருந்தது. சற்று பெரியதாக, ஒரு தோட்டத்தின் பின்புறம், ஆற்றின் ஒரு கிளைக்கு அருகே இருந்தது. மற்ற குடில்கள் எல்லாம் சற்று தொலைவிலிருந்தன.
சுற்றிலும் காடு, கண்ணுக்கு எட்டியவரைப் பசுமை பசேல் என்ற காட்சிகள். மான் மேய்ந்து கொண்டு இருக்க, மயில்கள் தோகை விரித்து ஆடிக் கொண்டு இருந்தன.
‘குயில்கள் எங்கள் குரல் வளத்தை மீறுபவன் யாரும் இல்லை’ என்று பாடிக் கொண்டு இருந்தன. அந்தத் தோட்டத்தில் வித விதமாய், ரக ரகமாய் பூக்கள், மரங்கள் நிறைந்து காணப்பட்டது.
குடிலின் வாயிலில் அமைக்கப் பட்டு இருந்த மேடையின் மீதே அமர்ந்து, இயற்கை அன்னையின் கலை பொக்கிஷத்தைக், கண் குளிர பார்த்துக் கொண்டு இருந்தான் அந்தக் கோமகன் (அரசன்).
அவன் கருத்தைப் பெரிதும் கவர்ந்தது, ஆற்றில் நீராடி முடித்து, மலை பெண்கள் கொடுத்த ஆடையில் தானே ஒரு பூவாய், மற்ற பெண்களுடன் தோட்டத்தில் பூ பறித்து, அதைக் கோர்த்து மாலையாக்கி, அந்தக் குடில்களின் அருகே இருந்த அவர்கள் குலதெய்வத்திற்கு மாலை இட்டு, வணங்கி வரும் நித்திலவல்லி.
நொடியும் அவன் பார்வை அவளை விட்டு நீங்கவில்லை. இமை தட்டி விழிப்பதும் தவறு என்று சீலை மூட முடியாமல் திணறும், அவள் அழகைப் பருகிக் கொண்டு இருந்தான் அவன்.
அவளைப் போல் ஒரு பெண்ணை இனி காண முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு.
அவள் பேரழகு, அவள் புத்திக் கூர்மை, அவள் வீரம், அவள் குறும்பினை மட்டும் அதுவரை கண்டவன் அவள் காருணியத்தையும் (கருணை) அன்று கண்டு இருந்தான்.
தன்னை காக்க அவள் செய்த செயல், எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத ஒன்று ஆயிற்றே!நினைவே அவன் கண்களைப் பொங்கச் செய்தது என்றால் மிகையல்ல.
மாலை வரை மீண்டும் அவள், அவன் கண்களுக்குப் படவேயில்லை. வீரர்களைப் பார்வை இடுவது, ஒற்றர்களுடன் ஆலோசிப்பது, அவள் தந்தைக்குத் தகவல் அனுப்புவது, அருகில் உள்ள மற்ற மலைக்குடிகளுக்கு தகவல் அனுப்பி, அங்கு விரோதிகள், யாராவது ஒளிந்து இருக்கிறார்களா என்று தகவல் அறிவது என்று பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள் அவன் பைங்கிளி.
அதுவரை அழகன், ஆதித்தியனுக்குத் தேவையான வற்றைப் பார்த்துக் கொள்ள, அங்கு இரவுப் பூஜை முடிந்த பிறகு, களைத்துத் திரும்பி வந்தாள் நித்திலவல்லி. மெல்லத் தலையசைப்புடன் விலகினான் அழகன் அவர்களுக்குத் தேவையான தனிமை கொடுத்து.
“என்ன தேவி!… நாட்டின் அரசி ஆகும் முன்னரே உங்களைப் பார்க்கக் காத்து இருக்க வேண்டியதாய் இருக்கிறது… இன்னும் அரசி ஆகி விட்டால், ஒட்டுமொத்த பாரதத்தையும் வெல்லும் வரை, ஓய மாட்டாய் போல் இருக்கிறதே!…” என்றான் ஆதித்தியன் அவளை நோக்கித் தன் கைகளை நீட்டி.
அவன் கரங்களுக்குள் தன் கரம் பாந்தமாய் பொருந்துவதைக் கண்டு புன்னகைத்து அவன் அருகே, அவனை ஒட்டி அந்த மேடையில் அமர்ந்தவள், “இந்த அரசனுக்கு ஏற்ற அரசியாய் இல்லை என்றால் எப்படி?… அரசன் எவ்வழியோ, இந்த அரசியும் அவ்வழி.” என்றாள்.
சற்று நேரம் எதையும் பேசாமல் இருவரும், ஒருவரின் அருகே இருப்பதை ஆழ்ந்து அனுபவித்தவாறு, எதிரே தெரிந்த பால் நிலாவை ரசித்துக் கொண்டு இருந்தனர்.
அங்குப் புள்ளி மான் ஒன்றின் குட்டி தாவிக் குதித்து வர, அதைக் கண்ட நித்தில வல்லி அதன் அருகே சென்று, அதை அணைத்து அதன் முகத்துடன் தன் முகத்தை வைத்து இழைக்க ஆரம்பித்தாள்.
அதைக் கண்டவாறு சிரித்துக் கொண்டு அவள் அருகே வந்த ஆதித்தியன், “இந்தப் புள்ளி மானாய், நான் பிறந்து இருக்கக் கூடாதா என்று ஏக்கமாய் இருக்கிறது தேவி.” என்றான் அவள் இடையில் கை கொடுத்து எழுப்பி தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு.
“நீங்கள் இந்தப் புள்ளிமானாய் பிறந்து இருந்தால் உங்களைத் தோட்டத்தில் தான் வளர்த்து இருக்க முடியும். என்னுடனே எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது!… மானுக்குக் கிடைத்தவற்றை விட, உங்களுக்கு… உங்களுக்குத் தானே நான் முழு உரிமை.” என்றாள் நித்திலா அவன் மார்பினில் தலை சாய்த்து.
‘அந்த அமைதி, சுகம், அணைப்பு காலம் முழுதும் கிடைக்கக் கூடாதா’ என்று இருவரின் மனமும் எண்ணாமல் இல்லை.
கண் விழித்த நொடி முதலாய், அவன் மனதைப் போட்டு அரித்து எடுத்துக் கொண்டு இருந்த கேள்வியை அந்தக் கணம் கேட்டான் ஆதித்தியன்.
“என்ன காரியம் செய்து விட்டாய் தேவி!… புவனம் அறிய உன் கரம் பற்றி, ‘இவள் என்னுடையவள்’ என்று அனைவரும் அறிய உன்னை இந்தத் தரணிக்கே ராணி ஆக்கிய பின், முழுதாய் உன்னுடன் கலக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், என்னைக் காக்க இன்று நீ உன்னையே எனக்குக் கொடுத்தது…” என்று கலங்கிய ஆதித்தியனின் இதழைக் கைகளால் மூடினாள் நித்திலா.
“அன்பரே!… என்னை அடைந்தது என் துணைவர் தான். என் பதி என்னில் கலந்தது எப்படி தவறாகும்? என் தலைவருக்குத் தான் என்னைக் கொடுத்தேன்.” என்றவள் தன் இடைக் கச்சையில் மறைத்து இருந்த குறுவாள் ஒன்றை எடுத்து, அவன் முன் நீட்ட, அதை உற்றுப் பார்த்தவன் கண்கள் வியப்பில் விரிந்தன.
“இது என் குறுவாள் ஆயிற்றே!… இது எப்படி தேவி உன்னிடம்?” என்றான் திகைப்புடன்.
“அன்பரே!… இன்னும் என்னை உங்களுக்கு நினைவிற்கு வரவில்லையா?. இந்தக் குறுவாள் கொண்டு தானே, தாங்கள் என் உயிரைச் சில வருடங்கள் முன் காத்தது?” என்றாள் நித்திலா.
“நான் உன்னைக் காப்பாற்றினேனா?” என்றான் ஆதித்தியன் குழப்பத்துடன்.
“ஹ்ம்ம்!… நீங்கள் தான் என்னைக் காத்தது. நான் அப்பொழுது குருமாக்கள் (சிறு பெண்).
நீங்கள் என் தந்தையிடம் தனுர் விதை (வில்வித்தை) பயில வந்தீர்கள். அப்பொழுது தான் ஒருநாள், நீங்கள் காட்டில் வேட்டை ஆட வந்து இருந்தீர்கள். உங்களைத் தொடர்ந்து, நீங்களே அறியாமல் பின்னே வந்த நான், குள்ளநரி கூட்டத்திடம் சிக்கி கொண்டேன்.
பன்னிரண்டு நரிகள். அப்பா!… இப்போது நினைத்தாலும் அவற்றின் கோரைப் பற்கள் நடுங்க வைக்கின்றன. நீங்கள் தான் அவற்றை அம்பால் அடித்துக் கொன்றீர். இனி, இந்தக் காட்டிற்குள் வந்தால், என்னைக்காத்துக் கொள்ள என்று உங்கள் குறுவாளினை கொடுத்து, என் மனை (வீடு) வரை, என் கை பிடித்து அழைத்து வந்தீர்கள்.
எப்படி பிற்காலத்தில், மக்களுக்கு உதவப் போகிறீர்கள் என்று எல்லாம் பேசிக் கொண்டே வந்தீர்கள். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் (தன் இதயத்தை சுட்டிக்காட்டி) இங்கே பதித்து வைத்து இருக்கிறேன் அன்பே!
அதன் பிறகு இந்த குறுவாளை, நான் என்றுமே பிரிந்தது இல்லை. காலங்கள் பல சென்றன. நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால், உங்களை அடிக்கடி யாரும் அறியாமல் கண்டு ரசிப்பேன்…
கடந்த நான்கு வருடமாய், என் தந்தை, உங்கள் விருப்பப்படி கச்சியில் பொன் மாளிகை நிர்மாணிக்க ஆரம்பித்த பிறகு, உங்களைத் தினமும் மிக அருகில் கண்டு, ரசித்து, உங்களுக்கு என் மனதைக் காணிக்கையாக்கிக் கொண்டு இருந்தேன்.
இந்த வாள், நீங்களாகக் கருதி என்றோ சத்திரிய முறைப்படி மாலையிட்டு உங்கள் மனையாட்டியாக (மனைவி) தான் வாழ்ந்து வருகிறேன்…
உங்கள் சரி பாதி நான். என் பதி தாங்கள்.என்னை நீங்கள் ஏற்றது குறித்து இந்த வருத்தம் ஏன் அன்பே?” என்றவள் அவன் மார்பினில் சாய, அவளைச் சுற்றி வளைத்தது ஆதித்தியன் கரங்கள்.
“தேவி!” அவள் பேச்சைக் கேட்டு நெக்குருகி நின்றான் அந்தக் காவலன்.
“சொல்லுங்கள் அன்பரே!” என்றாள் அவள், அவன் மார்புடன் உரையாடியவாறு.
“என் சரிபாதியாய் இருந்து கொண்டே தான், என்னைத் தவிக்க விட்டாயா இத்தனை நாள்?” என்றான் ஆதித்தியன்.
“என் துணைவருக்கு அவர் துணையைக் கூட இனம் காண முடியவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது?” என்றாள் அவள்.
“இனம் கண்டு கொண்டேன் தேவி! உனக்கு அதைப் புரிய வைக்கட்டுமா?” என்ற இளவரசனின் பேச்சைக் கேட்டு செங்க்கொழுந்தாகி போனாள் அவன் மனைவி.
அவள் கரம் பிடித்து அழைத்துச் சென்றவன் ஆற்றங்கரை அருகே, இருந்த அந்த மலை குடிகளின் குலதெய்வமான காளி தேவியின் கழுத்து மாலை எடுத்து அவள் கழுத்தினில் அணிவித்து, அந்தக் குடிகளின் திருமண முறைப்படி அங்கு இருந்த கருமை பாசி மணி ஒன்றை நித்திலாவின் கழுத்தில் சூட்டினான்.
தன் கையிலிருந்த ராஜ இலச்சசினை மோதிரத்தையும், அவள் விரலில் அணிவித்து, முப்பது முக்கோடி தேவர்கள், சப்த ரிஷிகள், பஞ்ச பூதங்கள், இயற்கை அன்னை, அந்த மலை குடிகளின் காவல் தெய்வம் சாட்சியாய், நித்தில வல்லியை தன் சரிபாதியாய், சகதர்மினியாய், மணவாட்டியாய் ஏற்றுக் கொண்டான் தஞ்சையின் வருங்கால அரசன்.
அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் நித்திலா.
கண்கள் கண்ணீரைச் சொரிய, அவள் முகத்தை நிமிர்த்திய ஆதித்தியன் அவள் கண்களின் மேல் முத்தமிட்டு, “இந்த நித்திலம் இந்தச் சோழனுக்குத் தான் இனி எப்பவுமே சொந்தம். இந்தக் கண்கள் காதலை மட்டுமே இனி சிந்த வேண்டும். கண்ணீரை அல்ல.” என்றவன் அவள் இதழோடு இணைய முயல, அவனைத் தள்ளி விட்டு, கலகலவெனச் சிரித்துக் கொண்டே பூஞ்சோலைக்குள் மறைந்தாள் நித்திலா.
“தேவி!” என்று அவளை அழைத்துக் கொண்டு அந்தச் சோலைக்குள் புகுந்தான் ஆதித்தியன்.
வானத்தை ஆளும் இந்திரனின் தோட்டத்திற்குக், ‘கற்பகச் சோலை’ என்று பெயராம். இந்த மலைக்குடிகளின் தோட்டம், அந்த இரவில், நில ஒளியில் அந்தக் கற்பகச் சோலைக்கே சவால் விடும் வண்ணம் தேவலோகமாய் ஜொலித்து கொண்டு இருந்தது.
பூக்கள் காற்றினில் தங்கள் மகரந்தத்தைப் பரப்ப, அதன் மணம் ‘ஆயிரம் வாசனைத் திரவியங்கள் வந்தாலும் இயற்கையின் முன் ஒன்றுமே இல்லை’ என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது. பூமி என்பதே தெரியாத வண்ணம் உதிர்ந்த பூக்கள் மலர் படுக்கையினை உருவாக்கி இருந்தது. இதன் மென்மைக்கு ஈடாகுமா அரண்மனை மஞ்சம்?.
இந்த மாயலோகத்தில், மதனன் (மன்மதன்) அம்பு பட்டு இரு காதல் கொண்டு விட்ட உள்ளங்கள், சத்திரிய முறைப்படி மணந்து விட்ட சரி பாதிகள் அடுத்த அடியை எடுத்து வைக்க ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு இருந்தன.
காதலில் துரத்துவதும், துரத்தப்படுவதும் சுகம் தானே!.
அவள் அகப்பட வேண்டும் என்றே ஓடிக் கொண்டு இருந்தாள். அவன் அவளை ஓட விட்டுத் துரத்திக் கொண்டு இருந்தான்.
அவளை மீண்டும் தன் கைச்சிறைக்குக் கொண்டு வந்தான் ஆதித்தியன். அந்த இன்ப சிறையில் விரும்பியே மாட்டிக் கொண்டாள் அவள்.
அவன் தந்த தண்டனைகள் என்ற முத்தத்தை வாங்கிக் கொண்டு, திரும்பி அவனுக்கே கொடுத்தும் கொண்டு இருந்த அந்தப் புது வகை சிறை அது.
காதல் கொண்ட தலைவனும், தலைவியும் போரிடும் மோக களம். தலைவி தன்னை தோற்று தலைவனை வெல்வதும், தலைவன் அவளை வென்று தன்னை தோற்கும் புதுவித யுத்தம்.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புனும்.
ஒண்தொடி கண்ணே உள.
‘விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும்,அனுபவிக்குப்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு’ என்பதை முழுதாய் உணர்ந்து கொண்டிருந்தான் ஆதித்யன்.
காமத்தில் காதலும் கலக்கும் பொது மட்டுமே கிடைக்கும் நிறைவு அது.
முழு சரணாகதி.
அங்குக் காதலும் இருந்தது, இன்பத்துப் பாலும் ஊற்றெடுத்துக் கொண்டு இருந்தது.
ஐயன் திருவள்ளுவரின், ‘இன்பத்துப் பாலின்’ விளக்கத்தினை இளவரசன் உணர்ந்து கொண்டு இருந்தான்.
அது புது விதமான தீ, எரிக்காமல் எரித்துக், குளிர்விக்காமல் குளிர வைத்து இரு உயிர்களை இணைக்கும் மாயம்.
நாடி நரம்பு எங்கும் ஆயிரம் மின்னல்கள் பயணிக்க, அறிவு செயல்படும் திறனையே மறந்து அண்டச் சராசரங்களை, பால் வெளிகளை நோக்கிப் பயணிக்க வைக்கும் விந்தை.
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்.
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.’
‘முறிந்து விடும் அளவிற்கு இலகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சிணுங்கல், என் மிது கொள்ளும் ஆர்வம், அவளது வாசனை, வேல் போன்ற கண், மூங்கில் போன்ற தோள்’ எனக் குறள் கூறும் காதலியின் சிறப்பை அங்கு உணர்ந்து கொண்டு இருந்தான் ஆதித்தியன்.
‘விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த இந்தபூஞ்சோலையின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்பம் வழங்குகின்றன.
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும். ‘என்ற நினைவில் அந்த அமிழ்தினை அள்ளி அள்ளி பருகிக் பருகிக் கொண்டு இருந்தான் அந்தக் காதலன்.
திகட்டாத அமிழ்தம்.
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து, அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன் அங்குப் பூரணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவதுபோல் போல் இருக்கும் என்று கவிஞ்சர்கள் கூறியது எத்தனை உண்மை.
காதலில் திளைத்து, மூழ்கி முத்து எடுத்துக் கொண்டு இருந்தன இளம் நெஞ்சங்கள்.
வாரங்கள் நொடிகளாய் கரைய இரவு, பகல் எல்லாம் அந்த மாயசுழலிலிருந்து இருவரும் நீங்கவே இல்லை.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்.
செம்பாகம் அன்று பெரிது.
‘கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!
அவள் ஒரு பார்வை, சிறு புன்னகை,நாணம்’ போதுமானதாய் இருந்தது அந்த ஜோடி புறாக்கள் தங்கள் இணையைத் தேட.
ஒரு வாரம் கடந்து இருந்தது.
அந்தக் கானகத்தில், சொர்க்கத்தை உருவாக்கி, அதில் மூழ்கி முத்தெடுத்து அப்பொழுது தான் கண் விழித்து இருந்தான் ஆதித்தியன்.
அவன் கை வளைவில் அவன் மார்பினை பஞ்சணையாக்கிக் களைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள் அவன் சகி.
ஒரு விரல் கொண்டு அந்தச் செம்பவள இதழ்களைப் பிடித்துச் சுவைக்க அவன் விரல்கள் முயல, வாயில் கதவு பெருத்த சப்தத்துடன் தட்டப் பட்டது.
“இளவரசே!.. இளவரசே!” என்ற அழகன் குரல் வெகு பதட்டத்துடன் கேட்க, ஆதித்தியன் துள்ளி எழுந்தான்.
அந்தக் குரல் கேட்டு, நித்திலவல்லியும் பதறி எழுந்து, ஆடைகளைப் புனைந்து கொண்டாள்.
“என்ன அழகா!… எதற்கு இந்த அளவு பதட்டம் உன் குரலில்?” என்றான் ஆதித்தியன் குடிலின் வாயில் கதவைத் திறந்து.
“இளவரசே!… மன்னிக்கவும். தலைநகரிலிருந்து அரசர் தகவல் அனுப்பி உள்ளார். சூழ்நிலை ஆபத்து. வரும் எந்தத் தகவலும் நல்லதாய் இல்லை இளவரசே.” என்றான் அழகன்.
“என்ன நடந்தது சொல்.” ஆதித்தியனின் குரல் கம்பீரத்துடன் ஒலித்தது அந்தக் காலை வேளையில்.
“இளவரசே!… அனுராதபுரம் சாம்ராஜ்யத்துடன் (ஸ்ரீலங்கா) போரிடச் சென்று இருந்த இளவரசர், உங்கள் இளவல் அருள்மொழிவர்மரின் மீது தாக்குதல் நடந்து உள்ளது. அவர் தங்கி இருந்த அரண்மனையும் தீக்கு இரையாக்கப்பட்டு உள்ளது.
இளவரசரும் அவர் நண்பருமான வந்தியத்தேவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பி இருக்கிறார்கள்.
நமது குலதெய்வம் நிசும்பசூதனி தேவியின் விக்கிரகம் அரண்மனையிலிருந்து காணாமல் போய் இருக்கிறது.
அரசரின் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டு இருக்கிறது.
மும்முனை தாக்குதல் இளவரசே!… எல்லாம் மறைவிலிருந்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்ச்சி வேலை.
தாங்கள் உடனே கச்சியம்பதிக்கு செல்லும் படி அரச ஆணை.” என்றான் அழகன்.
அதிர்ந்து நின்றான் ஆதித்தியன்.
‘தன் நாட்டில் இப்படிச் செய்யத் துணிந்தவர் யார்?.
ஒரு புறம் அரசர் மீது தாக்குதல், இன்னொரு புறம் இளவல் கொல்ல முயற்சி.
இன்னொரு புறம் குல தெய்வம் களவாடப்பட்டு இருக்கிறது..
இது இத்துடன் முடியப் போவதில்லை’ என்று மட்டும் ஆதித்தியனுக்கு விளங்கியது.
“ஹ்ம்ம்!… பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.” என்றவன் யாரிடமும் அதன் பிறகு பேசவில்லை.
அடுத்த சில மணித் துளிகளில் சோழ படையின் அந்தச் சிறு பிரிவு முன் செல்ல, நடுவே ஆதித்தியன், நித்திலவல்லி, அழகன் செல்ல, பின்னால் ஒரு காவல் படை பாதுகாப்பாய் வந்தது.
அடுத்த சில ஜாம பயணங்களில் கச்சியம்பதியை அடைந்து இருந்தான் ஆதித்தியன்.
இளவரசனின் விஜயத்தின் காரணமாய் விழாக்கோலம் பூண்டது.
மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டவன் அரண்மனைக்குச் செல்லாமல் தேவ நாராயனாரின் அறிவுரை கேட்க விரைந்தான்.
சில பல காரணங்களுக்காக தேவநாராயணர் அரசியலைத் துறந்து இருந்தார். ஆனால், நாடு இருக்கும் நிலையில், அவர் அறிவுரை ஆதித்யனுக்கு தேவைப் பட்டது.
வேகவதி அற்றன்கரையோரம் அந்தப் புரவிகள் பறந்து செல்லச், சற்று தொலைவில் விண்ணைத் தொடும் உயரத்தில் நிமிர்ந்து நின்றது ஆதித்தியனின் கனவுகளில் ஒன்றான தங்க அரண்மனை.
அங்கு ஆயிரக்கணக்கான உழைப்பாளிகள் அந்தத் தங்க அரண்மனையை நிர்மாணித்துக் கொண்டு இருந்தனர். எங்கும் உளிகளின் சப்தம்.
சிறு குன்றின் மேல் இருந்து அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் தேவநாராயணர். வயது நிச்சயம் ஐம்பது இருக்கலாம். ஆனால் கம்பீரம் மிஞ்சி இருந்தது.
பட்டு அங்கவஸ்த்திரம் அணிந்து, காதில் கடுக்கண், கையில், காலில் காப்பு, கழுத்தை ஒட்டித் தங்கச் சங்கிலியில் ஆடும் ருத்ராஷ்க்ஷம், நவரத்தின மாலை, இடையில் கட்ட பட்டு இருக்கும் வைரபிடி வைத்த வாள் என்று ஒரு அரசனின் கம்பீரம் அவரிடம். பல விதைகளுக்கு அதிபதி ஆயிற்றே தேவ நாராயணர்.
அவர் கை கட்டி பணிவுடன் தன் முன்னால் நின்று கொண்டு இருந்த நபரைப் பவ்யத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவரின் முன் காவி உடையிலிருந்தார் ஒருவர்.
முக அமைப்பு நிச்சயம் 2019 ஆம் ஆண்டு கச்சியம்பதி கோயிலில், நள்ளிரவில், பூட்டிய கோயிலுக்குள் பூஜை செய்து கொண்டு இருந்தவரை போன்றே இருந்தது.
அப்படியொரு தேஜஸ் அவர் முகத்தில்.
இடையில் காவி நிற ஆடை.
கழுத்தில் பெரிய ருத்திராட்சங்கள்.
ஜடா முடி. கண்களில் தீட்ஷட்சண்யம்.
பதினாறு இடங்களில் விபூதி தீற்று.
அவரே ஞானப் பழமாய், பக்தியின் வித்தாய் ஜொலித்து கொண்டு இருந்தார்.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
‘தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழுமாம்.’ என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு அவரே ஆகும்.
“கற்றது மறந்து விட்டதா தேவநாராயணா?… என்றார் அந்தக் காவி உடை புனிதர்.
குரலா அது!…
அப்படியொரு சாத்வீகம் அதில்.
“அய்யனே!… தாங்கள் கேட்பது இந்த அடியேனுக்குப் புரியவில்லை” என்றார் தேவநாராயணர்.
“இந்தக் கந்தகோட்டத்தை (அரண்மனையை) முதலிலிருந்து நிர்மாணிப்பது நீ தானா என்று கேட்கிறேன்?” என்றார் அவர்.
“இல்லை அய்யனே!… எனக்கு முன் வேறொரு கல்வினையாளர் தான் இந்தப் பணியைச் செய்து கொண்டு இருந்தார். ஆனால், துரதிஷ்ட வசமாய் அவர் உயிர் இங்கேயே பிரிந்து விட்டது. அதன் பிறகு தான் இளவரசர் என்னை நியமித்தார்.” என்றார் தேவநாராயணர்.
“விநாச காலே விபரீத புத்தி.” என்றார் அவர் தன் நெஞ்சில் உள்ள ருத்ராக்ஷத்தை பிடித்த படி.
“அய்யனே!” என்றார் தேவநாராயணர் ஒன்றும் விளங்காமல்.
“விதி வழி மதி செல்லும் என்பது இது தான் நாராயணா. அழிவு நெருங்கும் போது புத்தியும் விபரீதமாய் தான் எண்ணத் தொடங்கும். நடப்பது நடந்தே தீரும்.” என்று அவர் சொல்லி முடிக்கவும் அவர்கள் முன், மூவரும் புரவியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!