arrow_back
காஞ்சித் தலைவன் 9
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 9 / 19

9

visibility 528
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

காலம் -965 A. D.
இடம் – காஞ்சிபுரத்தின் அடர்ந்த கானகம். 
Queen #Rudramadevi Anushka Shetty Anushka Shetty Sweety-Smiling Queen
  இளவரசன் அடர்ந்த கானகத்தில் சந்தித்த அந்தப் காரிகை (பெண்) ,  தன்  தந்தை தேவநாராயணரின்    இலச்சினை     மோதிரத்தை  எடுத்துக்   காட்டினாள்.  
அதுவரை  இருந்த  சந்தேகம்  விலகி  விட, “வணக்கம்   பின்னையே  (தங்கை).   இந்த    நேரத்தில்  தாங்கள்   இங்கே?” என்று இழுத்தான் அழகன்.  

“அண்ணலே!.. கச்சியம்பதி இங்கிருந்து சில காத (கிலோமீட்டர்) தூரம்  தான். தாதை அவர்கள் இளவரசரின்  கட்டளை நிறைவேற்றும் பொருட்டு, கச்சியம்பதியில் குடி இருந்து, சாதரூபம்(தங்கம்) கொண்டு, கந்தவராம் (அரண்மனை) எழுப்பும் கல்வினையாளர்  பணியில்  உள்ளார்.

Beautiful ancient indian palace with romantic winds | Premium AI-generated  image
அங்கு  மலைகுடி  பெண்கள் கனி, தேன், போன்றவற்றை    பண்டமாற்றம்    செய்ய  வருவார்கள்.       இந்தக்  கானகம்  அவர்களின்  மனை (வீடு). அவர்களுடன்  உலவச்  சென்ற போது தான், செருக்களத்தில்  புறமுதுகிட்டு  ஓடி  வந்த  கோழையான,   வீரபாண்டியனை   இங்குக்  கண்டேன்.

தாதைக்கு  வேயர்  (ஒற்றர்)  மூலம்  தகவல்  அனுப்பினேன். அவர் உங்களுக்கு ஓலை  விடுத்தார்.   உங்களுக்கு   அயனம் காட்ட என்னையும் அனுப்பி  வைத்தார்.  உங்கள் வரவுக்காகவே காத்து    இருக்கிறேன்.” என்றாள் அவள்.

“பின்னை! வழி சொல். அது போதும். ஆபத்தான இடத்திற்கு எல்லாம் தாங்கள் வர வேண்டாம்.” என்றான்  அழகன்.

“உங்கள்  உத்தரவு  நான்  கேட்க வில்லையே   அண்ணலே!” என்றவள் வாயில் வினோத ஒலி எழுப்ப,  அங்கு ஓடி வந்து நின்றது அவள்  வெள்ளை   நிற   பரி (குதிரை).

அதில் நளினத்தோடு அவள் ஆரோகணித்து  ஏறி  அமர்ந்தவுடன் புரவி, ஒரு முறை தன் முன்னங்கால்களைத்  தூக்கி  கனைத்தது.

“கூதிர்  (குளிர் காற்று)   அதிகமாய் உள்ளது.      விடிவதற்குள் அவர்கள் இடத்திற்குச்  சென்றால்  தான்  இவர்களைத் தாக்கி அழிக்க முடியும். காலம்  கடக்கும்  முன்   நெடுந்தொலைவு  பயணிக்க வேண்டும்…  வாருங்கள்.” என்றவள்  புரவியை  முடுக்க முயல அதைத் தன் கைகளால் தடுத்து நிறுத்தினான்  அழகன்.

“பின்னையே!…  தங்கள்  பெயர்…” என்றான் அழகன்.

“நித்திலவல்லி!…” என்றாள் அவள்.

அவள்  கண்கள்  இளவரசனின்  கண்களோடு  ஒரு  நொடி கலக்க, அவன் கண்கள் மின்னியது.

அவள்  பெயர்  இறுதியில்,  “முத்து”.

‘இந்த முத்து தனக்கு உரிமை உள்ளதா? ‘என்று ஆதித்தியன்  கேட்டானோ,  அதே  பெயர்  தான் அவளுடையது  என்பது  தான்  விதி  என்பதா!

இதழில்  குறுநகை அரும்பி இருக்க, மையிட்ட கண்கள்  கருவண்டாய்   அவன்  மனதைக்  கொய்ய,  அவன்   கண்கள்  காதலைப் பறையறிவிக்க  அதற்கு மேல் அங்கு நிற்கத் தயங்கிய வளாய்  தன்  புரவியை  முடுக்கி  விட,  அது     காற்றைக்   கிழித்த  அம்பாய்   அடர்ந்த  கானகத்தில்  இருளில்   பாய்ந்து  சென்று  மறைந்தது.

“இளவரசே!” என்று அழகன் தயங்க,  “தொடர்ந்து   செல்வோம்  அழகா!… குருவின்  மகள். முக அமைப்பு சொல்கிறதே!   இன்னுமா உனக்குத் தயக்கம்?”  என்றான் ஆதித்தியன் தன் கரிய நிற புரவியான  கோரத்தை  முடுக்கி விட, நித்திலவல்லி   சென்ற, காட்டுப் பாதையில் அவன் புரவி சீறிப்  பாய்ந்தது.

(சேர, சோழ, பாண்டிய  மன்னர்களின்   புரவிகள்   ஒவ்வொன்றையும்     ஒவ்வொரு  பெயரில்  அழைப்பார்கள். 

சோழ  அரச  குல புரவிகள் -‘கோரம்’  என்று  அழைக்கப்படும்)

“தயக்கம்  தேவியை  நம்பாததால் வந்தது இல்லை. நாம் செல்வது வீரபாண்டியனை    கொல்வதற்கு.  இதில்  ஒரு  மங்கையை ஈடு படுத்துவதைத்  தான்  ஏற்க முடியவில்லை.  அவர்களுக்கு  ஏதாவது ஒரு ஆபத்து நேரிட்டால்? நாளை  அயன்மீர்க்கு  யார் பதில் உரைப்பது?”   என்றான்  அழகன்.

“முன்னமே  உன்னிடம் கூறி இருக்கிறேன்   அழகா.   நான்   சக்கரவர்த்தி ஆன பிறகு, ‘பெண்கள்  படை   குழு’   ஒன்று   ஏற்படுத்தப் போகிறேன். செருக்களத்தில் ஆண்களுக்கு நிகராய் இந்தப் பெண்களும் வில், வாள் ஏந்தி போரிடத் தான் போகிறார்கள்.  இந்தப்   புதுமையை   உலகிற்குக்   கூறப்   போகும் அறுவகை தானை (படை) நம்முடையது தான்.

காரிகை (பெண்கள்)  என்று  அற்பமாய்    நினைத்து விடாதே அழகா.  அவர்களின் உரண் (அறிவு), தெருள்(தெளிவு), ஆள்வினை (முயற்சி), கூர்மை (பேரறிவு)     ஆண்களுக்குக் கூடக் கிடையாது.  இதோ என் கனவிற்கு  உருவமாய்,  முன்  செல்லும்  நம்  குருவின்   குலத்தைப்   பார்.”   என்றான்   ஆதித்தியன்.

நித்திலவல்லி    புரவி    மேல்  செல்லும்  அழகை     வர்ணிக்க, இனி எல்லா மொழியிலும் வார்த்தைகளை உருவாக்கினால் கூடப் போதாது என்றே   தோன்றியது   ஆதித்தியனுக்கு.

மரக்கிளைகள், படர்ந்து இருக்கும் கொடிகள் என்று அனைத்தையும் வளைந்து, நெளிந்து, குனிந்து,  அவள்  கடந்த  விதம்,  புரவி  மேல் ஆடப்படும் புது வித நர்த்தனமாய் (நடனமாய்)  தோன்றியது   காதலில்  முழு சரண் அடைந்து இருந்த  ஆதித்தியனுக்கு.

‘பேரழகு, தேசத்தின் மீது உண்மையான பற்று, அதற்காக    இளவரசன்   என்று    தெரிந்த    பிறகும்,  எதிர்த்துப்  பேசிய   துணிவு,    நாட்டிற்காகச் சுக,  போகங்களை  விட்டுக்  கானகத்தில்  அயனம்  சொல்ல  வந்தது  என்று  எல்லா உயர்ந்த குணங்களின் கலவையாகப் பெண்ணவள்  இருந்தால், மனம் விரும்பாமல் என்ன செய்யும்?’ என்று   எண்ணம்   எழ   புன்னைகைத்து   கொண்டான்.

அவனுக்கு  இணையான  நாட்டினை ஆளும் தகுதிகள் கொண்ட ஒரு ராணியாக தான் அவள் தெரிந்தாள்.

‘எண்ணரும்   நலத்தினாள்    இனையள்     நின்றுழிக்.
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று.
உண்ணவும்  நிலை  பெறாது  உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான் அவளும்    நோக்கினாள்.’

‘கற்பனை செய்யவும் முடியாத அழகையுடைய சீதை,  கன்னி மாடத்தில்,  அழகுடன் நின்ற   போது, இராமன் மற்றும் சீதையுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து, அவர்களுடைய   மனங்கள்  அலை   பாய்ந்து,   பின்னர் இரண்டும்  ஒன்று சேர, இராமனும்  சீதையைப்    பார்த்தான், சீதையும் இராமனைப்   பார்த்தாள்.’   என்று  எழுதிய  வரிகள் ஆற்றின்   நடுவே   இவர்களுக்கு   மெய்  ஆனது.

‘ஒற்றை  பார்வையில் மறைபுகல்(சரண்புகல்) நடக்குமா?’  என்ற அவன் கேள்விக்கு, ‘நடந்துவிட்டது’  என்று  பதிலளித்தது  அவன்  இதயம்.

ஆதித்தியன் தன் மனதை பெண்ணவளிடம் கொடுத்து  விட்டு,   வெறும்  கூடாய் பின் தொடர்ந்து  சென்று  கொண்டு  இருக்கிறான்.

முன் செல்லும் பேதையவளோ, ஆதித்தியனை முன்னரே  பார்த்து,  மனதைப்  பறிகொடுத்து, குலம் என்ற அரண் தடுக்க, மனதிற்குள் மருகிக் கொண்டு  இருக்கிறாள்.

அழகன் முன் சென்று விட, இளவரசனுக்கு இணையாய் புரவியைச் செலுத்திக் கொண்டு இருந்தாள்  நித்திலவல்லி.

குறுகலான வழித்தடம் ஆகையால், புரவிகள் நெருக்கமாய் செல்ல,அதிலிருந்த இவர்கள் மிக நெருங்கினார்கள்.

கைகள், கால்கள், தோள்கள் உரச, அந்தக் கானகமே இவர்கள் விடும் வெப்ப மூச்சினில்  பற்றி  ஏரியாதது  அதிசயமே!

காதல், காமம் என்ற பிரளயம் மதனன் (மன்மதன்) இருவருக்குள்ளும்   ஏற்படுத்தி  விட, அதற்கான சல்லியக்காரணி (மருந்து) ஒருவருக்கொருவர்   என்பது   விந்தை.

புரவிகள்  எழும்பிக்  குதிக்க,  ஆதித்தியனின் கரம் இடையில் உரச, அதன் வீரியம் தாங்க முடியாதவளாய்  புரவியிலிருந்து  சரிந்த நித்திலவல்லியை, “தேவி!”  என்று  பதறி   அழைத்து,   ஒற்றைக் கையால்  புரவியிலிருந்து அவளைத் தூக்கி,   தன்    புரவியில்,   தனக்கு   முன்னே    இருத்திக்  கொண்டான்.

அவள் கரங்கள் அவன் தோளினில் பூஞ்ச்சரம் கொழு கொம்பைப் பற்றுவது போல் பிடித்துக் கொள்ள, அவன் கரங்கள் அவள் வெற்றிடையில் பதிந்தது.

‘இருந்தாலும்   நாயகருக்குக்   கள்ளத்தனம்   அதிகம்  தான். மற்றவர்களுக்குப் புரவி பயிற்சி அளிக்கும் நான் தான் புரவியிலிருந்து கீழே     சரியப்  போகிறேனாம். 
கள்ளர்!….  இது  தான்  சமயம்  என்று     இவ்வளவு   நெருங்கி  விட்டாரே!…. அதைத் தானே   நானும்   எதிர் பார்த்தேன். 

ஆயுகம் முழுதும், இப்படியே தலைவனின் கை வளைவில்,  இப்படியே சென்று கொண்டு இருந்தால்,  அதைவிட வேறு பேறு என்ன       வேண்டும்?’  என்றது  நித்திலவல்லியின்  மனம்.

‘ஆஹா!… என்னவொரு மென்மை? நறவம் (அனிச்சம் மலர்) தோற்று   விடும்   போல்   இருக்கிறதே!

‘கொங்கு  தேர்  வாழ்க்கை 
அஞ்சிறைத் தும்பி!
காமம்  செப்பாது,  கண்டது  மொழிமோ,
பயி்லியது  கெழீஇய  நட்பின்,  மயில்  இயல்,
செறி  எயிற்று,  அரிவை  கூந்தலின்.
நறியவும்  உளவோ?…  நீ  அறியும்  பூவே?
‘பூக்களிலே  இருக்கின்ற   பூந்தாதினை, ஆராய்ந்து உண்ணும்  வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய   வண்டே!… நான்    விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து   கண்டதைக்   கூறுவாயாக.

என்னோடு   பழகிய   நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும்,  நெருக்கமான  பற்களையும்  கொண்ட    அவளுடைய   கூந்தலிலே  வீசுகின்ற  நறுமணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே நறுமண முடைய  மலர்களும் உள்ளனவா?….’ என்று    நித்திலவல்லியின் கூந்தல் மனம் நாசியைத்  துளைக்க,  மீண்டும்  ஆராய்ச்சியில்  இறங்கியது   காதல்  கொண்ட  அவன்  மனம்.

“இளவரசரே!.. தாங்கள்   செய்து  கொண்டு   இருப்பது   என்ன?” என்றாள்  நித்திலவல்லி.

“புரவியைச் செலுத்திக் கொண்டு இருக்கிறேன்.” என்றான் ஆதித்தியன் அவள் கண்களோடு, தன் கண்களை  உறவாட  விட்டு.

“அதைப்  பற்றி நான் இயம்பவில்லை. உங்கள் கரம்  செய்யும்  செயலைச்  சொல்கிறேன்.” என்றாள்  அவள்   நகைப்புடன்.

“தேவி!…  புரவியிலிருந்து  நீ  கீழே  சரிந்து  விடக் கூடாதே   என்ற   உயர்ந்த     எண்ணத்தில்           உன்னைப்   பிடித்து  இருக்கிறேன்.”  என்றான்    அந்தக்   கள்ளன்.

நாணம் மேலோங்க, அவன் கை வளைவு தந்த ஏமம் (இன்பம்)  அவளை  நாண  வைத்தது.

“தேவி!… நான் கேட்ட வினாவிற்கு நீ இன்னும் விடை  அளிக்கவில்லையே?…
பாண்டிய     நாட்டினையும்,  இந்தச் சோழன் வென்று விட்டான். கொற்கை   முத்துக்களும்  இந்தச்  சோழனுக்கே உரிமை பட்டவை  எனும்  போது, இந்த முத்து,   இந்த   நித்திலம்  எனக்கு உரிமை பட்டவைதானே?” என்றான்  இளவரசன்  குனிந்து  அவளை நெருங்கி.

“இது  நீங்கள் வெல்லப் பாண்டிய நாட்டு முத்து இல்லை  என்று முன்னரே பகர்ந்து விட்டேன்.” என்றாள்  தன்  மனம்,  உடையவனின்  பேச்சில் தடுமாறுவதைத்  தடுக்கும்  பொருட்டு.

நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
‘நில்!’ என்றால்  மனம்  நின்றா  விடும்?… அதுவும் அவனை  மட்டுமே  தலைவனாய்  கொண்டு  விட்ட மனது.

“இந்த  நித்திலத்தை வெல்ல நினைக்கவில்லை தேவி. என் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க உரிமை  கோருகிறேன்.  இது சோழ முத்து என்பதால் இன்னும்  மதர்ப்பில் (களிப்பில்) தான் இருக்கிறேன்.
இரண்டரை    நாழிகை  (ஒரு மணி நேரம்)   தான்   நீயும் நானும்  சந்தித்து   ஆகிறது  என்றால்,  வியக்காமல்   இருக்க  முடியவில்லை.

பல   உம்மை (முன் ஜென்மம்)  நெருங்கிப் பழகியது   போல், அதன் தொடர்பாய் தான்  தோன்றுகிறது உன்  மேல்   நான் கொண்டு இருக்கும் இந்த ஆவல் (காதல்).  உன்னைக்    கண்ட   அந்த   நொடியே,  நான்  உன்னவன்  ஆகி  விட்டேன் தேவி” என்றான்    இளவரசன்  மிகவும் நெருங்கி அவளைத் தன் மேல் சாய்ந்தவாறு.

முழுவதும் கொழுகொம்பை நாடிய கொடியாய், அவன் மேல் சாய்ந்து அமர்ந்த நித்திலவல்லி, நீண்ட  பெருமூச்சினை  வெளியிட்டாள்.

‘எத்தனை நாள் கனவு இது!. இவர்  கை வளைவில் இவருக்கு உடையவளாய், உரிமையுடன் சாயும் உரிமை எதிர் பார்த்து… நினைவு   தெரிந்த   நாளாய்    இவரைக்    கண்ணில்,   மனதில்,   உடலின்     ஒவ்வொரு         அணுவிலும்    நிரப்பிக்    கொண்டு தானே,    ‘இவருடையவளாய்’  வாழ்ந்து  வருகிறேன்.

இன்று   அவரே  நான்   இது   நாள் வரை  எதிர்பார்த்த  உரிமை  தர  முன்  வந்து  விட்டார்.  இதை அவர் திருவாய் பகர்ந்து கேட்டதை விட வேறு பேறு இந்த பிறவிக்கு இருக்க முடியுமா?  அவர்  மனதில்   இந்த அடியவள்!

இந்த  தன்னிகரற்ற  வீரனின்  மனதில்  இந்தப்  பெண்மை.’  என்ற நினைவே  நித்தில      வல்லிக்கு   தித்தித்தது.

“சோழ சக்ரவர்த்தியின் அந்தப்புர ஆரணங்கு களில் (பெண்களில்)  நானும்  ஒருத்தியாய்  இருக்க  நான்  விரும்பவில்லை இளவரசே.”     என்றாள்  நித்திலவல்லி.

புரவி சேனத்தை (லகான்) இழுத்து நிறுத்திய ஆதித்தியன் அவள் கன்னத்தைத் தன் கையால் பிடித்து, முழுதும் தன் புறம் திருப்பி, “தேவி! உன்னை அந்தப்புர  ஆபரணமாய்   பத்தோடு  பதினொன்றாக    வைக்க   முயல்வதாகவா என் அளி (அன்பை) நினைக்கிறாய்?

ஒற்றை  பார்வையில்,   என்   உயிர்    வரை     உன்னிடம்   சரண்புகல் அடைந்து விட்டேன் அன்பே. நாளை  இந்தத் தரணியை ஆளும் சக்ரவர்த்தியாக,  முடி சூட்டப் பட்டபின், ‘என்னை ஆளும் பட்டத்து  மகிஷி  நீ’  என்று  இந்தப் புவனம் (உலகம்) அறிய,  உன்னைக்  கரம்  பிடிக்கத்  தான்  போகிறேன்.

உன்னை அன்றி இன்னொரு பெண்ணை இனி மனதாலும் தீண்டேன்.  இது இந்தக் கச்சியம்பதி ஆளும்,  அந்த  ஈசன்  மீது  ஆணை!

இனி வரும் மறுமைக்கும் (இனி வரும் பிறவிகள் தோறும் ) நீயே என் சரிபாதி.

இனி, ‘இந்த நித்திலவல்லி இல்லை என்றால்,  இந்த ஆதித்திய  கரிகால  சோழனே  இல்லை’  என்று  இனி  மேல்   புவனமே சொல்லட்டும். 
நம் காதல் யுகங்கள்   தாண்டியும்   வாழட்டும்.”  என்ற  இளவரசனின் காதலைக்  கேட்டு,  கண்கள்  கண்ணீரைப்   பொழிய,   அவன்    மார்பில்    சரண்    புகுந்தாள் அங்குக்  குடி  இருக்கும்   அவன் தலைவி / வல்லவீ/   அவன் சரிபாதி.

  “துணைவரே!” என்ற  அவள்  குரல்  அழுகையுடன் ஒலிக்க,

“ஹ்ம்ம்  இன்ப  கண்ணீர்  மட்டுமே  பொழிய     வேண்டிய   தருணம்  இது  அன்பே!… இந்தச் சோழனின்  காதல் பெற்றவள்  இப்படியா   கரைவாய்?” என்றவன்  மென்மையாய்,  அவள் விலோசனம் (கண்கள்) மீது முத்தமிட்டான்.

அவள் வதனத்தை(முகத்தை) இரு கையால் பிடித்து, கண்களால் மனதிற்குள் நிறைத்துக் கொண்டான்.  பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அந்த பூ முகம்.  

அடுத்து அவன் உதடுகள் கொடிரை (கன்ன கதுப்புகளை) ரசம் சுவைத்தன.  அடுத்து அடுத்து  அவன்   முத்தத்தில் (உதடுகளில்) முத்தம்   சேர்க்க,  இருவருக்குமே   இந்தப்     புவனம்  மறந்து  போனது.

தேன் சுவைக்கும் பிரசமாய் (வண்டாய்) அவன். அவன் பருகும் மகரந்தமாய் (மலர்த் தேனாய்) அவள்.   இருவரும் தீக்கங்குகளாய் மாறிப் பற்றி எரிந்து, அடுத்தவரின் அணைப்பில் குளிர்ந்து கொண்டு இருந்தனர். 

காதல்  என்னும் தீஞ்சுவை பனுவலின் அடுத்த கட்டம் நோக்கி அங்கு இரு மனம் பயணித்துக் கொண்டு இருந்தன.

அங்கு   நடக்கும்    காதலர்களின்  தேடலைக்  கண்டு  வெட்கிய நிலா, மேகம் என்னும்    போர்வைக்குள்  தன்னை ஒளித்துக் கொள்ள,       கொஞ்சமாய்  தெரிந்த  நிலவொளியும்  காணாமல் போய்,  அந்தக்  காதலர்களைச்  சுற்றி காரிருள் சூழ்ந்தது. உதடுகள், கைகள் எல்லை மீறிக் கொண்டு இருந்தன.

முதலில் தன்னை மீட்டுக் கொண்டது      ஆதித்தியன்  தான்.
தன்   மார்பின்   மேல்  கண்கள்   காதல் என்னும்  மயக்கத்தில்  மூடி, இதழ் வெளுத்து, கண்கள்  சிவந்து,  ஆடை நெகிழ்ந்து  இருந்த  பெண்ணவளை  கண்டு,  அவன்    உடலும்,    உள்ளமும்  அவளை  அங்கேயே,  அப்பொழுதே        தனதாக்கிக்  கொள்ளப்  பேயாட்டம்  ஆடிக்   கொண்டு           இருந்தது.
“தேவி!”.
“தேவி!”.
“ஹ்ம்ம்…” என்ற   மெல்லிய    முனகல் மட்டுமே  வந்தது    நித்திலவல்லியிடம்  இருந்து.

“தேவி!..  நீ   என்னுடையவள் தான். அதில் எந்தவித மாற்றமும்   இல்லை.   ஆனால், எல்லை மீறுவது    உனக்கு    நான்  தரும்  கவுரவம் கிடையாது. உன்னைப் புவனம் அறிய கை பிடித்த பிறகு, உன்னை   மகாராணியாய் பிரகடனப்படுத்திய பிறகு,  உன்னை  அடைவதே  உனக்கும்,     எனக்கும்,   நம்  அன்பிற்கும்  பெருமை.  கடமை வேறு இருக்கிறது.” என்றவனின் வார்த்தைகளில் மீண்டும்  கண்  கலங்க  நின்றாள்  அவன் சரி பாதி.

‘இதைவிட அவள் பெண்மையைப் பெருமைப் படுத்தும் செயல் என்ன இருக்க முடியும்? அவன் இளவரசன் தான்.

கந்தர்வமனம் என்பது பஞ்ச பூதங்களான நிலம், நீர்,  நெருப்பு, காற்று, ஆகாயம், இயற்கை, கோடான கோடி தேவர்கள், நிலா, நட்சத்திரம் சாட்சியாய் வைத்து அவளை ஏற்பதை யாரும் தடுக்கப்  போவதில்லை.

ஆனால்,  உலகத்தின் முன் அவளை கைப்பிடிக்க  எண்ணம்   கொண்டு,   விலகி     நின்று   இவருக்கு  சொந்தமான  பெண்மைக்கு, பெருமை சேர்த்திருக்கிறார்  எந்தன்  தலைவர்.    இவர்        அல்லவோ  உத்தமர்.’ என்று எண்ணிய நித்திலவல்லியின்   நெஞ்சம்   காதலில் விம்ம,  அதன்     தாக்கம்   தாங்க   முடியாதவளாய்   புரவியை  விட்டுக்  கீழ்  இறங்கியவள்,  தன்  ஆடைகளைச் சரி   செய்து  கொண்டாள்.

ஆதித்தியனின்  கண்கள்  மீண்டும் கள்வெறி     பூண்டது.
“அன்பே!.”    அவன்    குரல்   மாறுபாட்டைக்      கவனித்த  அவள்,
“இந்த   நித்திலம் இளவரசரின் ஏகபோக உரிமை தான். இப்பொழுது  வீரபாண்டியனை வெல்லும் கடமை இருக்கிறது. நமக்குக் காலம் இருக்கிறது அன்பரே!.”  என்றவள்  தன்  புரவியில்  ஏறி, அதைத்  தட்டி  விட  அது  பறந்தது.

புன்னகையுடன், மனநிறைவுடன் அவளைத் தொடர்ந்து சென்றான் இளவரசன்.

இருவருமே அறியவில்லை  அவர்களுக்கான காலம்  குறைவு என்று.

நித்திலவல்லி   வழி   காட்ட,   மூவரும் வீர   பாண்டியன்  தங்கி இருந்த காட்டின் பகுதியை அடையும் பொழுது புலர்ந்தும், புலராத காலைப் பொழுது.

பனி மூட்டம்  வெகு  அதிகமாய் இருக்க, அது இவர்களின் மறைந்து வர உதவியாய் இருந்தது. புரவிகளைச் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு நடந்தே  அங்கு  வந்து  இருந்தனர்.

முத்தழகன்  காவல் உலா செய்து கொண்டு இருந்த மூவரை தன் வாளுக்கு இரை ஆக்கினான். 

வீரபாண்டியன் தங்கி இருந்த குடிலை சுற்றி ஒரு  முறை  வலம் வந்தவன் மீண்டும் ஆதித்தியனும்,  நித்திலவல்லியும்  இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான்.

“ஒரு  முறை  பார்த்து  விட்டேன்.  வீரர்களின்     எண்ணிக்கை  பத்து  இருக்கலாம்.” என்றான் அவன்.

“இல்லை அண்ணலே!. உங்கள் எண்ணிக்கை தவறானது. குறைந்தது முப்பதிற்கும் குறையாத வீரர்கள்   அவனைக்   காத்துக் கொண்டு              இருக்கிறார்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கே  தான்  தங்கி  இருந்தேன்.   வீரர்களின்  எண்ணிக்கை  மிக அதிகம்.” என்றாள் நித்திலவல்லி.

“இளவரசே!.. கச்சியம்பதிக்கு சென்று நம் வீரர்களை  அழைத்து   வருவோம்.  இது ஆபத்து!    முப்பதிற்கும் மேற்பட்டோரை ஒரே நேரத்தில் நம் இருவராலும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.”  என்றான்  அழகன்.

“உன்  கூற்று  என்ன ஆயிற்று அழகா? தேவி யிடம், ஒரே    வீச்சில்   பத்து   தலைகள் உருளும்         என்றாய்…?  இப்பொழுது  நீ    பின் வாங்குவது    இல்லாமல்,  என்   வீரத்தையும் குறைத்து     மதிப்பிட்டுப்    பின்     வாங்கச்    சொல்கிறாய். ?” என்றான்  ஆதித்தியன்  புன்னகையுடன்.

“இளவரசே!.. உங்கள் இந்தச் செயல்பாடு   ஆரம்பம் முதலே எனக்குப் பிடித்தம் இல்லாத ஒன்று.  காவல்   படை   இல்லாமல்,   இப்படி தாங்கள்        வருவது  உசிதம்  இல்லை.  ஏற்கனவே  நான் கேள்விப்பட்ட சில விஷயங்கள், ஒற்றர் பகிர்ந்த விவரங்கள்   மனதிற்கு  ஏற்றதாய்   இல்லை.  இந்தச்   சமயத்தில்   தாங்கள்    இப்படிச்    செய்வது…”    என்றான்  அழகன்.

“என்ன கேள்விப்பட்டாய் அழகா?” என்றான் ஆதித்தியன்.

“உங்களைக்  கொல்பலர்  முயல்வதாய்…”   என்றான்   அழகன்    வேதனையுடன்.
“என்னைக்  கொல்லப்  போகிறார்களா?….  எதற்கு?”  என்றான்  ஆதித்தியன்  புன்னகையுடன்.

“நீங்கள்  அரசராய்  முடி  ஏற்பது, பலருக்கு விருப்பம்   இல்லை.   இதில் பல குழுக்கள் ஈடுபட்டு  இருக்கலாம்  என்று  தகவல்.” என்றான் அழகன்.

“இதை   ஏன்  முன்னரே நீ சொல்லவில்லை?” என்றான்  ஆதித்தியன்,  தன்னை  கொல்ல  பலர் சதி   செய்வது    தெரிந்த    பின்னும்,    அதிகமாய்      புன்னகைத்து.

“இது   உறுதி   செய்யப்படாத    தகவல்    தான் இளவரசே!… அதன் உண்மை நிலவரம் தெரிந்து, அதன்  படி  ஏற்பாடுகள்  செய்து  கொண்டு      இருக்கும்  போது   தான்,    என்னைத்    தாங்கள்,   இந்தக்  கானகத்திற்கு  அழைத்து   வந்தது…”   என்றான்   அழகன்   மன    வேதனை யுடன்.

“என்னைக்   கொல்ல    பலர்    முயலப்    போகிறார்கள்  என்று   ஒற்றர்கள்  அந்தத்  தகவலை  மேற்போக்காக   உரைத்து   இருக்கிறார்கள்.  யார்,  என்ன,  எப்பொழுது  என்பது   எல்லாம்   தெரியாது.  இதற்காக  இன்று  நம்  கண் முன்னே இருக்கும்  இந்த  அற்ப பதரை   கொல்லாமல் விட்டு விட்டு, கச்சியிலிருந்து படை வரும் வரை காத்து   இருக்க   வேண்டும்.

அப்படி  வந்ததும்,  அவர்கள் எல்லா வீரர்களையும்   கொன்று,   அதில் சில வீரர்கள் உயிர்  இழப்பார்கள். அவர்கள் தியாகத்தில் மேல் நின்று, நான் தான் வைரியை (எதிரியை) கொன்றேன் என்று இந்தப் புவிக்கு  உரைக்க  வேண்டும்  அதுதானே? நல்ல திட்டம் அழகா. பலே! பலே!…” என்றான் ஆதித்தியன்  வெகுநக்கலாக.

எதிரியான   வீரபாண்டியனின் சிரத்தை (தலையை)  கொய்ய  வந்த   வீரனான அவனிடத்தில்  படை வரட்டும் என்பது நகைப்பிற்குரிய விஷயம்              அல்லவா?

“இளவரசே!..  உங்கள் நலன் கருதித் தான் இதை இயம்புகிறேன். உங்கள் வீரத்தை சேவூர் போர்க் களத்திலேயே,   இந்தத்    தரணியே பார்த்து           விட்டது. 

உங்கள் ஆற்றல், வீரம் குறித்துத் தான் இனி பாடலாசிரியர்கள் கவிதை வடிக்கப் போகிறார்கள். வீரம்   என்றால்    அதற்க இலக்கணம்    எங்கள்    இளவரசரான   நீர்   இல்லையென்றால் வேறு  யார்? ஆனால் இது தேவையற்ற செயல்.” என்றான்  அழகன்.

“இருவரும்   உங்கள்   தர்க்கத்தைச்    சற்று    நிறுத்துங்கள். அண்ணலே! உங்களுக்கு இவர் நலன்  முக்கியம். இவருக்கு    இவர்  கையால் வீரபாண்டியனின் தலை கொய்ய வேண்டும் அது தானே!     இருவரின் எண்ணமும் நிறைவேறும்.” என்றாள் நித்திலவல்லி.

“எப்படி தேவி!…  ஏதாவது மாய மந்திரம் செய்யப் போகிறாயா என்ன?” என்றான் ஆதித்தியன் ஒரு கண்ணைச்  சிமிட்டி.
‘இவருக்கு  வேறு  வேலையே  இல்லை. பகை வனுடன்  போரிடப்போகும் போது தான்,     இவருக்கு  என்மேல் அன்பு பெருகும்.’ என்று மனதிற்குள்  சொல்லிக் கொண்டவள், அவனை நோக்கித்  தன்  கண்கள்  என்னும்  அம்பால்   தாக்கி   விட்டு, உதட்டைக்  குவித்து  வினோத  ஒலி  எழுப்ப,  அந்த இருளில்  பத்து பேர் அவர்களை  நோக்கி  வந்து  மண்டியிட்டு,   ஆதித்தியனுக்கு தங்கள்   வணக்கத்தைத்    தெரிவித்தனர்.
Raja Raja Chola and his Army | Stable Diffusion Online
“தேவி!…  யார் இவர்கள்?” என்றான் ஆதித்தியன்.

வந்தவர்களின்   திடகாத்திர சாரீரம், அவர்கள்    சத்தம்   எழுப்பாமல் வந்த முறை, அவர்களிடம் இருந்த  ஆயுதங்களைக்  கண்டு.

‘இவர்கள்  என்ன  பேய்க்கூட்டமா?  இல்லை   நிழல்  மனிதர்களா?…  இப்படி கூடச் சப்தம்  துளியும்  எழுப்பாமல்  நடக்க முடியுமா என்ன?’  என்ற   நினைவைக்   களைய         முடியவில்லை ஆதித்தியனால்.

“இவர்கள்  என்   தாதையின் மாணாக்கள்.   உங்களை அரசராய் முடி சூட்டுவது பற்றிச் சில ஆண்டுகளுக்கு  முன்னரே  அரசர் என் தாதை யிடம்   கலந்தாலோசித்து   இருக்கிறார். 

நீங்கள் முடிஅரசாய் வருவது பலருக்குப் பிடிக்கவில்லை என்பது புவி அறிந்த தகவல் தானே!    இத்தனை  வருடமாய்  இந்தக்  காவல்  படை         உங்களின்   பாதுகாப்பிற்காக என் தந்தையார் தயார்   செய்து   வந்தார்.

நீங்கள்   வீரபாண்டியன்   தலை  கொய்ய  எப்படியும்  படை   இல்லாமல்   தான்  செல்வீர்கள் என்று  அவர்  கணித்தே  இருந்தார். வழிகாட்ட  என்னையும்,  உங்களைக்  காக்க    இவர்களையும்,  என் தந்தை அனுப்பி வைத்தார். காலம்  விரயமாகிறது. தாக்குதலைத் தொடங்குங்கள்.”  என்றாள்   நித்திலவல்லி.

அடுத்த  சில  நொடிகளில்  அந்த  இடம்     ரண       களமானது.

ஆதித்தியன் பக்கம் எதிர்பாராமல்   தாக்குதலின்   பலன்  இருந்தது.  வீரபாண்டியன்   காவல்  படையில்     பலர்      அப்பொழுது   தான் கூச்சல் கேட்டு விழித்து இருக்க, அவர்கள் ஒரு நிலைக்கு வருவதற்குள் தாக்கப்பட்டனர். 

ஆதித்தியன்  வீரர்களுக்கு  அவர்களை  வெல்வது மிகச்  சுலபமாய்  இருந்தது  என்றால்  மிகையல்ல.

தேவநாராயணரின்  கற்பிப்பு  என்றால் சாதாரணமானதா  என்ன! ஒரே   வீச்சில் பத்து தலை பறப்பது,   எகிறிக் குதித்தவாறே  வாள் சுழற்றுவது, மணிக்கட்டு  சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது   போன்ற   பல   வித்தைகளை        உருவாக்கிக்  கற்பித்தவர்    ஆயிற்றே!  

ஆதித்தியன்   ஒரு  புறம்  ருத்திர   தாண்டவம்    ஆடினான்  என்றால்,   இன்னொரு    புறம்                நித்திலவல்லி,   தேவநாராயணரின்   மகள் என்பதை        நிரூபித்துக்  கொண்டு  இருந்தாள்.

‘புலிக்குப்  பிறந்தது,  தானும்  பெண் புலி தான்’ என்பதை  நிரூபித்துக் கொண்டு  இருந்தது.

ஒரு   கணம்   ஆதித்தியன் கூட   அவள்   லாவகத்தைக்    கண்டு,    மலைத்து  நின்று   விட்டான்      என்றால்  மிகையல்ல.

போர் சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரத்துடன் இணைந்தது  போல்  இருந்தது  நித்திலவல்லியின் போர் முறை.

நாணலாக   வளைந்து,  சூறாவளியாகச் சுழன்று, எரிமலையாகச்  சீறி,  அவள் போரிட்ட முறை,  அவளைத்  தவிர  வேறு  யார்  ராணியாய்  வரவும்  தகுதி  இல்லை   என்றே   உணர்த்தியது  ஆதித்தியனுக்கு.
Rudhramadevi' review: Anushka Shetty is the only saving grace in this film
ஆதித்தியன்    முன்    வந்தவர்கள்  எல்லாம்   அவரவர் பாவ, கர்ம வினைப் படி   சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அவன் வாள் முனையால் சென்றனர். 
எதிரிகளின் குருதியால் தன் மன புழுக்கத்தை,  கோபத்தை   ஆற்றிக்   கொண்டு இருந்தான்     தஞ்சையின்  தலைமகன்.

அவன்   சென்ற   வழி    எங்கும்  ஆழிப்பேரலை      தாக்கிய   இடம்   போல்,  கொத்து  கொத்தாய்    எதிரிகள்   வீழ்ந்து  இருந்தனர். 

அவன்  முன்  வந்து  நின்றான்  வீரபாண்டியன்.

“வா  ஆதித்யா!…  வா…  உன்னைக் கொல்லத் தான்  காத்து  இருக்கிறேன்…”  என்றது  அந்த  நரி.

“என்னைக்  கொல்ல  இனி  ஒருவன்  பிறந்து   தான் வர  வேண்டும்  வீர  பாண்டியா.” என்றான்       ஆதித்தியன்.

“வந்து   விட்டார்கள்   ஆதித்யா…   உன்னைச்   சுற்றியே இருக்கிறார்கள்…  பல வருடமாய் உன்னைப்    பலி    வாங்கப்  பலர்  காத்துக்  கொண்டு   தான்   இருக்கிறார்கள்   என்பதை   நீ அறிவாயா?…  

இந்த  முடி  உனக்கா  சேர  வேண்டியது?… யோசித்து  சொல்.
சேவூர்   செருக்களத்திலேயே    உன்னைக் கொல்லத்  தான்  முயன்றார்கள்  பல  முறை…   தப்பி  விட்டாய்   ஆதித்யா!… எதற்காக   உன் நாட்டின்  எல்லைகளைச்  சூறையாடினோம் என்று நினைக்கிறாய்?  எதற்காக உங்கள் குலதெய்வத்தைக் கடத்த முயன்றோம்  என்று   நினைக்கிறாய்?

இது    எல்லாம்    யார்    போட்டுக்  கொடுத்த    திட்டம்  என்று  அறிவாயா நீ? உன்னைச் சுற்றி சூழ்ச்சி   வலை  விரித்து  விட்டோம்  ஆதித்யா. இந்தத்  தரணி ஆளப் போவது நீ இல்லை.            இந்தப்  பரந்து  விரிந்த  சோழ  சாம்ராஜ்யம்  உனது இல்லை.”  என்றான்  வீரபாண்டியன்.

“யார்  திட்டம் இது?…  சொல் வீரபாண்டியா!… சொல்…”  என்றான்   ஆதித்தியன்   வெறியுடன்.

தன் அருகிலேயே இருந்து கொண்டு, தங்கள் நாட்டு  மக்களுக்கே  துரோகம்  செய்யும்  கயவன் யாரென்று   ஆதித்யனுக்கு   தெரிய  வேண்டி    இருந்தது.

சொந்த   நாட்டு  மக்களையே,  எல்லை பகுதி களில்  கொன்று  குவித்து,   ஒவ்வொரு சோழனுக்கும்   உயிர்க்கும்  மேலான  தெய்வ  சிலையைத் திருடத்   திட்டம்  போட்டுக்  கொடுத்த  பேடி பற்றித் தெரிய  வேண்டி  இருந்தது.    

இந்த   அளவிற்கா   பதவி  ஆசை, மணிமகுடம் மேல்  வெறி  இருக்கிறது?

   “அதைச்   சொல்ல எனக்கு  என்ன சித்தம் கலங்கி   இருக்கிறதா   என்ன?…  இன்று    என்  உயிர்      பிரியலாம். இன்று    நீ  என்னை   வெல்லலாம். ஆனால், நாளை  உன்னைப்  பற்றிய  தகவல்கள்  சரித்திரத்திலே   இருக்கப்  போவதில்லை.   அவர்கள்    வெல்லப்  போவது   உறுதி ஆதித்யா.”   என்ற  வீர பாண்டியன்    வெறி   கொண்டவனாய்   வாளினை  சுழற்ற,  பல  முறை  ஆதித்தியன்  கண்களை,   கழுத்தை   அந்த    வாள்   குறி வைத்தது.

நீண்ட  நேரம்  நடந்து  கொண்டு  இருந்தது  அங்கு வாள் சண்டை. 

போகும்    நிலை  என்ற     இறுதிக்    கட்டத்திலிருந்ததால்,   வீர  பாண்டியன்    காவல் படை, ஆக்ரோஷத்துடன் தான்             போரிட்டது.

பாரத மண்ணுக்கே உண்டான வீரம் ரத்தத்தில் ஊறிப்போன  ஒன்றல்லவா?… 

சேர, சோழ,      பாண்டிய சிங்கங்களை உலகிற்கே கொடுத்து, வீரம்,  கலை,  கலாச்சாரம், அறிவு, ஆன்மிகம் என்று  எல்லா  துறையிலும்,  உலகத்திற்கே       முன்னோடியாகத்   திகழ்ந்த  இனம் அல்லவா தமிழ் இனம்.

ஆதித்தியனைக் கொல்ல ஒரே வழி அவனை நெருங்குவது   தான், என்பதை உணர்ந்த வீரபாண்டியன்  விபரீத  முடிவு  எடுத்தான்.

வாளைச்  சுழற்றியவாறு    ஆதித்தியன்  மார்பினில் ,      ஆழமாகக்    கீறி   விட்டான்  வீரபாண்டியன்.  அடுத்த   நொடி,   ஆதித்தியன்   வாள் வீரபாண்டியன்   மார்பினில்  அவன்  கேடயத்தைத்  துளைத்து,   இதயத்தைக்   குத்தி   கிழித்தது.

வாயில்,  மூக்கில்  ரத்தம்  ஒழுக,   அந்த  நிலை யிலும்  அவன்  கடை  இதழில்  புன்னகை    அரும்பியது.

“என் உயிர் போவதற்கு நான் கவலைப்படவில்லை…  என்  ஒரே  கவலை  போகப் போகும் உன்    உயிரைப்  பார்க்கும்  பாக்கியம்  எனக்குக்  கிட்டவில்லையே   என்பது   மட்டும்   தான்.  என்ன   பார்க்கிறாய்?…  என்  வாளில்  கருநாகத்தின்  காளகூடத்தைத்  தீட்டி   இருக்கிறேன். உன்     மார்பில்,  அந்த  வாள்   கொண்டு   தான்  கீறி     இருக்கிறேன்.  உன்  உயிர்  இனி   மெல்லப் போகும்…   ஹா  ஹா ஹா…”  என்றவனின்  தலையை,  ஒரே வெட்டில்  வெட்டி  வீழ்த்தினான்  ஆதித்தியன்.

தலை  இல்லாத  அந்த  உடல்,  துடித்துத்  தன்  துடிப்பை  நிறுத்திக் கொண்டது.  வீரபாண்டியன்  இறப்பைக்  கண்ட அவன் படை  சிதறிப்  போக, ஆதித்தியன்   படையினர்           அவர்களை  வெட்டி  வீழ்த்தினார்கள்.

வீரபாண்டியனின்    விஷம்  தோய்த்த     வாள்    ஏற்படுத்திய   காயம் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, ஆதித்தியன் தள்ளாடத் தொடங்க, அவனைத்  தாங்கிக்  கொண்டாள்  நித்திலவல்லி. 

அடுத்த அத்தியாயம்

10

(சேவூர்   போர்க்களத்திலிருந்து   தப்பி,   வீர பாண்டியன்,   சயாத்ரி   மலைக்காட்டிற்குள்  (உண்மையா என்று  அறிய  முடியவில்லை)  ஒளிந்து     இருந்ததாகவும், (கதைக்காகக் காஞ்சிபுரம்  அருகே    உள்ள    காடுகள்   என்று  கொடுக்கப்பட்டிருக்கின்றன.காட்டிற்குள்   சென்று, ஆதித்தியன் அவன்    தலை கொய்ததாகவும்,  அதனால்,  ‘வீரபாண்டியன் தலை  கொய்த  பரகேசரி’  என்ற …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்