arrow_back
காஞ்சித் தலைவன் 8
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 8 / 19

8

visibility 529
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

7

காஞ்சி   ஏகாம்பரேஸ்வரர்  திருக்கோயிலில்    காவலுக்கு   என்று  வயதான காவலாளி இருக்க, அவரை  அடித்துப்  போட்டு,  உள்ளே  நுழைந்தது  அந்தச்  சிலை  கடத்தல்  கும்பல்.

“என்ன  கோயில்  இத்தனை பெருசாய் இருக்கு?…”  என்றான்  அந்தக்  குழுவில்  ஒருவன். 

அப்போ   நமக்கு   நல்ல வேட்டை தான்…”   என்றான்   இன்னொருவன்.

நடந்து  கொண்டே இருந்த அவர்களில் தலைவன் போல்  இருந்தவன்  சட்டென்று  நின்றான். 

அவன் கண்களுக்குக் கோயில் வெளி  பிரகாரம் முழுவதும், ஆயிரக்கணக்கான  சிவலிங்கம் இருப்பது போல் தோன்றியது.

கண் கோடி வேண்டும் அந்த விந்தையை காண!
ஒரு கணம் சர்வமும் ஆடிப் போக உறைந்து நின்றான்.

இறை தன்னுடைய லீலையை தொடங்கினால், மனிதன் அதன் முன் சிறு தூசு என்ற அமானுஸ்யம் அங்கே நடந்தேறியது.

ஒரு கணம் கண்ணை மூடித் திறந்தவனுக்கு  அடுத்த நொடி அங்கிருந்த சிவலிங்கங்கள் மறைந்து, அங்குக் காவி  உடை உடுத்தி, ஜடா முடியுடன், தாடி வைத்துப் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கும் மேல் அங்கே  தியானத்தில்  ஈடுபட்டு   கொண்டிருப்பது போல்  தோன்றியது.

ஒவ்வொருத்தரின் முன்பும் ஒரு லிங்கம் இருக்க, சில லிங்கம்  தங்கம்  போல் ஜொலித்தது.              
இன்னொரு  லிங்கம் வைரம்போல் மின்னியது.
இன்னொரு   லிங்கம்   காற்றில்  அந்தரத்தில்    பறப்பது  போல்  தோன்றியது.   

சாம்பிராணி  புகை  அந்த இடத்தைச் சூழ, கண் முன்   என்ன   காண்கிறோம்   என்பதே  அவனுக்குப்   புரிய   வெகுநேரம்   ஆனது.    

ஆயிரம்  பேரும்  சங்கினை  எடுத்து முழுங்க, அதன்  ஒலி  மனதை   உலுக்கி  எடுத்தது  என்னவோ  உண்மை.

காதுகளில்,  ‘ஓம் நமசிவாய…. ஓம் நம சிவாய’ என்ற மந்திர   ஒலி   விழுந்து   தேகம்  சிலிர்த்து  போனது. 

பார்த்த விழி பார்த்தது போல் நிலைகுத்தி நிற்க, திறந்த  வாய், திறந்த படி இருக்க, கண் முன்       விரியும் அந்தத் தெய்வீக காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான் அந்தக் கொள்ளை கூட்ட தலைவன். 

அடுத்த   நொடி,    ‘சிவதாண்டவ ஸ்தோத்திரம்’ காதில்  கேட்க, வானத்தில்  இருந்த மேகம் சிவனின் உருகொண்டு, அங்கு நிஜ சிவ தாண்டவத்தை     ஆடுவது   போல்     தோன்ற, ஸ்தம்பித்து   நின்றான்   அவன்.

கிடைத்து விடாத மகா பேரு அவன்  அங்குக்  கண்டு  கொண்டிருந்தது. 
ஜென்ம சாபல்யம்  கொடுக்கும்  தெய்வ    திரு விளையாடல்!

https://www.youtube.com/watch?v=MxTKqX2jiDc
“நடு ராத்திரியில் கோயிலுக்குள் யாரும் இருக்க மாட்டாங்க என்று சொன்னாங்க… இன்னைக்கு என்ன ஏதாவது திருவிழாவா இத்தனை பேர் அமர்ந்து  பூஜை செய்துட்டு இருக்காங்க?…”       என்றான்  தலைவன்  திகைப்புடன்.

“என்ன ஜீ  சொல்றீங்க?…  நம்மளை தவிர இங்கே யாருமே    இல்லையே!…” என்றார்கள் அவன்   கூட்டத்தினர்   திகைப்புடன்.

எதற்கும்  இருக்கட்டும் என்று சைலென்சர் பொருத்தப்பட்ட  துப்பாக்கியைக்  கையில் எடுத்துக்  கொண்டார்கள்.

“தோ அங்கே…” என்று தலைவன் கைக்காட்ட  இப்பொழுது   அவன் கண்களுக்கு எதுவுமே     தெரியவில்லை.    

 சுற்றும்  முற்றும்  பார்த்தும் அவர்களை  தவிர  இப்பொழுது,   அந்த  இடத்தில்  ஒரு   ஈ,   காக்கை   கூடத்   தென்படவில்லை.  

“அடிச்ச சரக்கு இன்னும் தெளியல போலிருக்கே!…” என்று கிண்டல் அடித்தவாறு,  தங்கள் நடையை   தொடர,  தலைவன் மட்டும் பேய் விழி விழித்தவாறு  சுற்றும்,  முற்றும் பார்த்துக் கொண்டே  நடந்தான்.

அவனின்    இதய   துடிப்பு  மட்டுபடுவதாய்  இல்லை. 
கருவறைக்கு   முன்னால்   இருந்த   தூண்      .மண்டபத்தை  அவர்கள்  அடைந்த  சமயம்,   அந்தக்   கூட்டத்தில்  ஒருத்தன், அதிர்ந்து    நின்றான்.

அந்தத்   தூண்   மண்டப  வாயிலில்,  வெள்ளை தாடி   வைத்து,  விசிறிக் கொண்டு விசிறிய படி படுத்துக்  கிடந்தார்  வயதானவர்  ஒருவர்.

கருத்த  தேகமும், வெள்ளைத் தாடியும், தீட்சண்ய பார்வையுமாக,  உடலில் ஒரு அழுக்கான கந்தல் ஆடை, கைகளிலும், இடுப்பிலும் குப்பை     கூளங்கள்  இருக்க  வாயிலிருந்து உமிழ்நீர் சுரந்து கொண்டிருந்தது.
அது அவரது உடலில் இறங்கி வழிந்து  கொண்டிருந்தது.

‘கோயில் தானே இது?… இங்கே எப்படி பைத்திய க்காரங்க உள்ளே விட்டாங்க?…’ என்று எண்ணி கொண்ட  அவன்  அறியவில்லை,  அங்கு அமர்ந்திருக்கும்  அவர்  பைத்தியக்காரர்  இல்லை.

ஒரு  சித்தர்  என்பதை.  ‘சத்குரு சிவசாமி சித்தர்’ என்றும், ‘போடாப் போடா சித்தர்’ என்றும் அழைக்கப்படவர்  அவர்.    
சித்தரின்  இந்தக்கோலம், அவரைச் சாதாரண   மனிதர்கள் யாரும் நெருங்கிவிட கூடாது என்பதற்காகத்தான் என்பது அவரின் சீடர்களின்    நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில்  வாழ்ந்து பல சித்தாடல்களும், அற்புதங்களும்   நிகழ்த்திய    சற்குரு சிவசாமி          சித்தரே   அவர் .
இவர்   சமீப காலத்து சித்தர் என்பதால்  காஞ்சி புரத்தில்   நிகழ்ந்த  அற்புதங்களைக்    காஞ்சி மக்கள்   பலர்   அறிவர்.
சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் காஞ்சிபுரம்   வரதராஜப்   பெருமாள் கோவிலிலும் காஞ்சிபுரம் தெருக்களிலும், ஒரு பிச்சைக்காரரைப் போலும், பித்தனைப்  போலும்  சுற்றித்  திரிந்தவர்.     

1989-ம்  ஆண்டே   சமாதி   அடைந்து விட்ட     .இவரின்   ஜீவசமாதி காஞ்சிபுரம் மேற்குப்புறம் உள்ள  மயான   பூமியின்  தொடக்கத்தில்   அமைய ப்பட்டுள்ளது.

ஆனால்,  அந்தக்    கொள்ளை   கூட்டத்தில்    ஒருவன்,  அந்தச்  சித்தரை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஓடி ஓடி  ஓடி ஓடி 
உட்கலந்த  சோதியை!
நாடி  நாடி  நாடி நாடி 
நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி
மாண்டுபோன  மாந்தர்கள்!
கோடிகோடி கோடிகோடி
எண்ணிறந்த கோடியே!.
என்னிலே  இருந்த   ஒன்றை யான் அறிந்ததில்லையே!
என்னிலே  இருந்த   ஒன்றை, 
யான்  அறிந்து கொண்ட பின்
என்னிலே  இருந்த   ஒன்றை
யாவர் காண  வல்லரோ!
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து  கொண்டெனே!..’  என்று புன்னகையுடன் அவனை    பார்த்து     சொன்னார்  அவர்.

அதைக்   கேட்டவனின்   கைகள் அவனையும்   அறியாமல்,  அவரை   நோக்கிக் கூப்பி இருக்க, குழந்தைத்தனமான   புன்னகை  ஒன்று அவர் முகத்தில்   விரிந்தது.  

அந்தச்    சிரிப்பின்    அர்த்தம்  யார்  அறிவார்? 
அதில்  ஆயிரம்  அர்த்தங்கள்!
அவர்   சொன்ன   பாட்டில்    லட்சம் மறைமுக   உட்  கருத்துக்கள்.

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்.
அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது.

அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி. பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ?

தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே!

“டேய்!… அப்படியே   நின்னுட்டு   தூங்கிட்டு  இருக்கியா என்ன?…” என்று இன்னொருத்தன் தலையில் தட்ட, 
“அந்தாளு என்னவோ சொல்றார்… புரியலை…” என்றான்.

“யாரு   என்ன    சொன்னாங்க?…” என்றான்  இன்னொருவன்.

“தோ  அந்த  கிழம்….” என்று கை காட்ட, அவன் கை   காட்டிய    இடத்தில் ஒரு அகல் விளக்கு   மட்டுமே  எரிந்து  கொண்டிருந்தது.

இதயத்தில்,  யாரோ  ஓங்கி   அடித்தது  போல்,  அவன்  கரம் அவனையும் அறியாமல் கூப்ப, அவனை  விநோதமாய்  பார்த்தார்கள்  அவன்       கூட்டாளிகள். 

“இங்கே  இருந்து போய்டலாம்…”  என்றான் சித்த தரிசனத்தை  நேரில்  கண்டவன்  பயத்துடன்.

“சும்மா   புலம்பாம வா! …’என்று அவனை விடாப் பிடியாக   இழுத்து  சென்றார்கள்
.
“வேணா…  இங்கே   ஏதோ   சரியாய் படலை…  .நம்மையும்  மீறிய  ஏதோ  இங்கே    இருக்கு… போய்டலாம்…” என்றான்  அவன்  மீண்டும்.

“வாயை   மூடிட்டு வா!…” என்றவர்களுடன் வேறு வழி இல்லாமல், ஆயிரம் கால் மண்டபத்தை கடந்து,  அங்கிருந்த  குளத்தின்  அருகே    வந்தவர்களில்  ஒருவன்  திகைத்து  நின்றான்.

“ஏய்!… ஏய்! … நில்லு… நில்லு… என்ன செய்யரே?…” என்று அவர்களின் ஒருவன் கத்தி கொண்டே போக, மற்றவர்கள் அவன் பின்னால் ஓடி சென்று, அவன்   நின்ற   கல்யாணி குளத்தின்   கரையில்  நின்றார்கள்.

“என்னடா…  என்ன  ஆச்சு?…” என்றான்  ஒருவன்.
“பொண்ணுடா!… வெள்ளை நிற புடவை கட்டி இருந்தது…  கோயிலுக்குள்  இருந்து  வேகமாய்  ஓடி  வந்து குளத்துல குதிச்சிடுச்சு… இப்போ ஆளையே காணோம்…” என்றான் பெண்ணை பார்த்து  முதலில்  ஓடி  வந்தவன்.

“என்ன விளையாடுறியா?… நாங்களும் கோயில் கதவின்  முன்   தான்   நின்றோம்… எங்க கண்ணுக்கு   எதுவுமே தெரியலையே!…” என்றான் இன்னொருவன்.

“அதானே!…” என்றார்கள்   கோரஸாக  மற்றவர்கள்.

திகைத்து    விழித்து அவன் நிற்கும் முன்னே, அவன் கண் முன்னே மீண்டும் அந்தப் பெண், குளத்திலிருந்து எழுந்து, மீண்டும் கோயிலுக்குள் சென்று   மறைந்தாள். 
ஒரு  கணம் திகைத்து நின்றான்.
ஏனென்றால் கண் முன்   இருந்தது    நிஜ    பெண்    அல்ல.   

   
அந்தக் கோயில்  குளத்தின்  நீரே, பெண்ணருவம்   எடுத்தது போல்  இருந்தது  அந்தப்  பெண்ணுருவம்.

நீருக்கு, பெண் உருவம் வந்து கண் முன்னே நடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படியொரு  உருவம்  அது.  

 கோயில்  திருக்கதவின்  அருகே  வந்து   நிற்க, அது இவர்கள் முன்னர் செய்த ஏற்பாட்டின் படி, திறந்தே  வைக்கப்பட்டிருந்தது.

“ஆமா   என்ன   கோயிலுக்குள்   இவ்வளவு  தண்ணீர்   தேங்கி  இருக்கு?…”‘   என்றான்               இன்னொருவன்.

“வெளியே தான் அப்படி பேய் மழை கொட்டுதில்லை…  அந்தக்  காலத்து  கோயில்… எங்கேயாவது     இடிஞ்சி    இருக்கும்.  அதான்    மழை   தண்ணீர்   உள்ளே  வருது.”  என்றான்     இன்னொருவன்.

“இல்லை… அந்தப் பொண்ணு… குளத்துல விழுந்த   பொண்ணு….  தண்ணீர்… அவ   கோயிலைக்    கழுவிட்டு    இருக்கா…  இருக்கு… குளத்து  நீர்  பொண்ணு ரூபத்துல கோயிலைக் கழுவிட்டு   இருக்கு…”  என்றான்   ஒருவன்.

அவன்  கண்களுக்கு  அந்தக்  குளத்து   நீர்,    பெண்ணுருவம்   கொண்டு பிரகாரத்தில் ஓடுவது  மிக  நன்றாகத்  தெரிந்தது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்  போதே,  அந்த  நீர்  வடிவம் கர்ப்ப கிரகத்திற்குள்   சென்று அங்கு லிங்க பீடத்தைச்  சுத்தம்   செய்ய  ஆரம்பித்தது.

ஏகம்பம்!

லிங்கம், மண்ணால் ஆனது.
வேகவதி பெருகி  வர,  பயத்தில்  பார்வதி  தேவி  தன்      கைகளால்   பிடித்த  மண் லிங்கம் அது.
     
பீடத்திற்கு  மட்டுமே  அந்தத்  திரு  கோயிலில்   அபிஷேகம் நடக்கும்.  அதை தான் அங்கு ஜல மகள்  செய்து  கொண்டிருந்தாள். 

   “உளறாதேடா!… ” என்று அவனை அதட்டிய    ஒருவன்,
   “தெரியலையே   ஜீ… கோயில் கதவைத் திறந்து  வச்சிட்டு     நமக்காகக்    காத்திருக்க தான்           சொன்னேன்…  பணத்தை   கட்டு   கட்டாய்    வாங்கிட்டு    எஸ்ஸாகிட்டான் போலிருக்கே…”    என்றான்.

“அவனுக்குக் காத்திருப்பது வீண்… நாமளே உள்ளே போய்டலாம்…” என்றவர்கள் கும்பலாக உள்ளே  நுழைய,  அடுத்த  நொடி  கோயில் திருக்கதவு   அவர்கள்  பின்னால்,  தானாக   மூடி    கொண்டதை  அவர்கள்  யாருமே  பார்க்கவில்லை. 

இவர்கள்  உள்ளே நுழைந்து, பத்தடி நடந்திருப்பார்கள், அதற்குள் இவர்கள் மேல் வந்து மோதி  விட்டு, அந்தப் பிரகாரத்தில் ஓடியது சின்னக் குழந்தை  ஒன்று.

காமாக்ஷி அம்மன் திருக்கோயிலில் கர்ப்ப கிரகத்தில் எந்தக் குழந்தைக்கு அதே சமயம் தீப ஆராதனை நடந்து கொண்டிருக்கிறதோ அதே குழந்தை   வடிவம், ஏகாம்பரேஸ்வரர்   கோயில்    பிரகாரத்தில்  ஓடிக் கொண்டிருந்தது.

அந்தப்    பிஞ்சு  குழந்தையின்  பாதங்களில்   இருந்த  சலங்கை  ஒலி  அந்தப் பிரகாரத்தில், ‘ஜல்!… ஜல்!…  ஜல்!…’    எதிரொலிக்க,  அதன் சப்தம்      கேட்பவரை  மதி  மயங்கச்  செய்தது. 

ஓடிய குழந்தையின் பின்னால்,  ஓடிக்  கொண்டிருந்தது   கன்றுக் குட்டி அளவிற்கு பெரிதாய்  இருந்த  கறு  நிற  நாய்  ஒன்று. 

ஓடிய  குழந்தையின்  பின்  கறு  நிற  நாய்   ஓட,  அந்த   நாயின்   பின், ஓடிக் கொண்டிருந்தான்,   திருக்கோயில்  கதவை   அந்தக்    கொள்ளை         கூட்டத்திற்கு  திறந்து  விட்டவன். 

முன்னால்  குழந்தை கலகலவென்று சிரித்தபடி ஓட,  அந்தக் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது போல் அந்த நாய் ஓட, அதைத் துரத்திக் கொண்டு கோயில் கதவைத்  திறந்து விட்டவன் ஓட, அவன் பின்னால் அந்தக் கொள்ளை கூட்ட ஆட்கள்   ஓட    என்று    ஆயிரத்து  எட்டு  முறை     அந்தக் கர்ப்பகிரகத்தை அவர்களே அறியாமல்   சுற்றி    வந்தார்கள்.

ஒரு  சுற்றுக்கு   மேல், அந்தக் குழந்தை   தன்    ஓட்டத்தை  நிறுத்தி விட்டு, கர்ப்பகிரகத்தில்   இருந்த    மண் லிங்கத்தை தன்   பிஞ்சு  கை களால்   தழுவிக்   கொண்டு,  லிங்க மூர்த்தத்திற்குள்    மறைந்து    போனது.

 சக்தியும்   சிவனும்   ஒன்றல்லவா!…
‘ஆணும் பெண்ணும் சமம்!’ என்பதை நிரூபிக்கும்    அர்த்தநாரி  சொரூபம்.
  
பார்வதி  தேவியின்  தழுவலுக்கு  குழைந்தவர்    அல்லவா  அந்த  ஏகம்பநாதர்!…

ஆனால், இன்னமும் தங்கள் முன்னால் அந்தக் குழந்தை  ஓடிக் கொண்டிருப்பது  போல்  அந்த  ஐவருக்கும்  தோன்றி  கொண்டிருந்தது.

 ராமேஸ்வரம்   கோயிலுக்கு   நிகரான  நீண்ட    பிரகாரம்   உடைய  கோயில்.
ஏறக்குறைய   பதினைந்து நிமிடம் ஆகும் ஒரு சுற்று  பிரதட்சணம் வந்து முடிக்க.

அப்படிபட்ட நீளம்  உடைய   திருக்கோயிலில்,  ஆயிரத்தி எட்டு    லிங்கம்!

அவையெல்லாம் சேர்ந்த சகஸ்ரலிங்கம்  இருக்கும்   பிரகாரத்தை,  ஆயிரத்தி எட்டு முறை சுற்றவது என்பது பல நூறு யாகம் செய்ததற்க்கு சமம்.

ஏதோ  மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல் வலம்   வந்து   முடித்தவர்கள்,   அந்த   மாயை      நீங்கியவர்களாக,  “எப்போ என்ன செய்தோம் நாம?…  எதுக்கு வலம் வந்தோம்?…”  என்று திகைப்புடன் ஒருத்தரையொருத்தர்   கேட்டுக்   கொண்டு    மிடறு  விழுங்கினார்கள்.

அவர்கள்   முன்   வந்து   நின்றார்   காமாக்ஷி      அம்மன்  திருக்கோயிலின்  கர்ப்பகிரகத்தில்      தியானத்தில்  இருந்த  அதே  தவ  சீலர்.  

“உள்  கடந்து சென்றால் மட்டுமே அறிய கூடியது கடவுள்…  நீ,  எனது என்ற  ஆணவம்  எங்கே   மறைகிறதோ  அங்கே    புரியும்   எது   கடவுள்      என்பது… 

அழியும் செல்வத்தைத் தேடி அலைந்து என்ன  பயன்?… அழியாத செல்வமாய், அள்ள அள்ளக் குறையாத   கருணை   பெருங்கடலாய்,   மனித பிறவி  கடைந்தேற  அவன்  பாதம்  சரண் அடையுங்கள்.

அவனைத்   தவிர   வேறொரு   தலைவன்  இல்லை. அவன்   வழி   செல்லாதவர்  மீள்வதுமில்லை. 

இங்கே உங்களுக்குத் தேவையான எதுவும் இல்லை. சென்று உங்கள் கூட்ட தலைவனிடம் சொல்லுங்கள்.
கூட்டத்தைக் கூட்டுபவன்  எல்லாம்  தலைவன்  இல்லை.

இங்கே    ஒரே  தலைவன் தான் உண்டு. அவன் கால் பெரு விரலின் கீழே, அவன் அருளாலே,   அவன்  தாள் வணங்கி வாழ்வது தான் மனித வாழ்க்கை.

  நீங்கள்   திருடுவது வெறும் உலோகங்களைத் தான். அழிய கூடிய செல்வத்தைத் தான். இன்று அதற்கு மதிப்பு இருக்கும். நாளையே மதிப்பிழக்கும்!…`

‘உடம்பே   ஆலயம்!   உயிரே    ஆண்டவன்!’     என்பதை    உணர்ந்து,  நமக்குரிய  செல்வம்        அஷ்டமா   சித்திகள்  தான்  என்பது  புரிந்து  கொள்ளுங்கள்.

பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை, ‘தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதை நிலைநிறுத்தித் தியானிக்கும் யோகிக்கு ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது.

இந்தச்   சித்திமூலம்  தன் உடலை அணுவைபோல்   மிகமிகச்  சிறிய  வடிவத்தை  எடுக்கலாம். ’மஹத்’  எனும்  தத்துவரூபமாக   விளங்கும்           பகவானிடத்தில்   மனதை  நிலைநிறுத்தித்  தியானிக்கும்  யோகிக்கு, ‘மஹிமா’ எனும் சித்தி கிடைக்கிறது.

இந்தச் சித்திமூலம் தன் உடலை மலைப் போல்  மிக   மிகப்  பெரிதாக்கிக்  கொள்ள  முடியும். பகவானை  ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘லகிமா’ எனும் சித்தி கிட்டுகிறது. 

  இந்தச்  சித்தி  மூலம்  உடலைக்  காற்றைப்  போல் இலேசான  எடையுடன்   மாற்றிக்  கொள்ள முடியும்.

பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’பிராப்தி’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்   கீழ் கொண்டு  வரும்  ஆற்றல்  பெறுகிறார்.

பிறப்பு   இறப்பு  இல்லாத  பகவானின்  ‘மஹத்’     தத்துவமே  ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில்   மனதை  நிலைபெறச்   செய்பவர்கள்  ‘பிராகாம்யம்’  எனும்  சித்தி  பெற்ற  யோகி பிரம்மாண்டம்  முழுமைக்கும்  தலைமை  தாங்குகிறார்.

முக்குணமயமான  மாயைக்கு  அதிபதியும்,  படைத்தல்,  காத்தல்,  அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘ஈசித்வம்’ எனும் சித்தி கிடைக்கிறது.
இந்தச்  சித்தியினால்  நான்முகன்  முதலான தேவர்களை  ஆணையிடும்  தகுதி பெறுகிறார்.

பகவான்  எனும்  சொல்லிற்கு பொருளாக       இருக்கும்,  விராட், ஹிரண்யகர்பன், அந்தக் கரணம்  எனும் மூன்று நிலைகளைக் கடந்து, நாலாவது  நிலையில்   உள்ள    பிரம்மத்தில்  மனதை  செலுத்தும்  யோகிக்கு ‘ வசித்துவம்’ எனும்  சித்தி  கிட்டுகிறது.
இதன்   மூலம்   யோகிக்கு அனைத்தையும்             வசப்படுத்தும்  ஆற்றல்  உண்டாகிறது.

நிர்குணபிரம்மத்(அருவநிலை)த்தில் மனதை நிலை   நிறுத்தும்    யோகிகள் மிக உயர்ந்த              பேரானந்தத்துடன்   விருப்பங்களின் இறுதி                எல்லையை   அடைந்து  “காமா வஸாயிதா”  என்ற சித்தி  அடைந்த  யோகி, இதனையே தன் விருப்பங்களின்   இறுதி      எல்லை (காமா வஸாயிதா) என்ற  சித்தியாகக்  கூறுகிறார்கள்.

இவை தான் உண்மையான செல்வம். இதை அடையும்   வழியைப்   பாருங்கள்.  நீங்கக்         கிளம்பலாம்…”    என்றவர்   கைக்காட்ட       கோயிலுக்குள்  இருந்தவர்கள், கண் சிமிட்டி பார்த்தபோது, அவர்கள்   வந்த வேனின் அருகே கோயிலுக்கு  வெளியே  நின்றார்கள்.

‘நாம  கோயிலுக்குள் போனோமா?… இல்லை   இங்கேயே நின்னுட்டு இருக்கோமா?…’ என்று குழம்பி  போய்   ஒருத்தரை  ஒருத்தர்    பார்த்துக் கொள்ள,  வேனில் இருந்த கடிகாரம்     விடியற்காலை  மணி  நான்கு  என்றது.
   
ஏறக்குறைய ரெண்டு  மணி  நேரமாய் கோயிலுக்குள்   இருந்திருக்கிறார்கள்.
உள்ளே   நடந்தது  எதுவுமே   அவர்கள்   யாரின்    நினைவில்  இல்லை.

“பொழுதே விடியப் போகுது… சீக்கிரம்… கோயிலுக்குள் போகணும்…” என்று அந்தக் கூட்ட தலைவன் துரிதப்படுத்த, கோயில் கதவருகே சென்றவர்களை  வரவேற்றது  கண்ணு  குட்டி  ஒன்றின்        அளவிற்கு  இருந்த  கறு  நிற  நாய்  ஒன்று.

அந்தத்  தவசீலர்  பூஜை  போது  வந்த  அதே  நாய்.
பிரகாரத்தில்  சின்னக்  குழந்தை  ரூபத்தின் பின்னே  ஓடிய  அதே  நாய்.  
அத்தனை  அழகு,  தேஜஸ்  அந்த  நாயிடம். 

தேவராஜ  ஸேவ்யமாந  பாவனாங்க்ரி  பங்கஜம் 

வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம் 
நாரதாதி யோகி வ்ருந்த வந்திதம் திகம்பரம்
  காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧||  என்று,  ‘காலபைரவ அஷ்டகம்‘   போற்றி   துதிக்கும், காலத்தின்   அதிபதி,   பைரவ     ரூபத்தில்,  அநீதியைத்  தடுக்க  அங்கு,  உக்கிரமாக  நின்று     கொண்டிருந்தது.

சிவபெருமானின்   ஐந்து     முகங்களில் ஒன்றான,  ‘தத்புருஷ   முகத்தில்’   இருந்து      தோன்றியவர்   பைரவர். 

இவர்  சிவபெருமான்  ஆட்சி  செய்யும் இடமாக  கருதப்படும்   காசியில், சிவ கணங்களுக்கு       தலைவராக     விளங்குபவர்.
சிவ    பெருமானின்  அறுபத்து  நான்கு  வடிவங்களில்  கால  பைரவர்   வடிவமும்  ஒன்று. 
இன்றளவும்   பல  கோயில்களுக்குக் கால    பைரவர்  காவல்  தெய்வம்  என்ற  நம்பிக்கை   பக்தர்களிடையே   உள்ளது.  

பிரம்மதேவர்   கர்வம் கொண்டபோது, பிரம்ம    தேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத்  தோன்றிய  கால பைரவர், பிரம்ம தேவரின் ஒரு தலையைக் கொய்தார்.

கர்வம் யாருக்கும்    இருக்கக் கூடாது  என்பதற்காக  சிவபெருமான்  நிகழ்த்திய   லீலை  இது.  முனிவர்களின்  சாபத்தில்  இருந்து,  தேவேந்திரன்  மகன்   ஜெயந்தனைக்   காத்து   அருளியவர்.      மன்மதனின்   கர்வம் அடங்கச்   செய்தவர். 

எல்லாவற்றுக்கும்  மேலாக  சூரியனின்  மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.
 
இப்படி  பல சிறப்புகளைக் கொண்ட பைரவ    மூர்த்தியை,  ‘கால பைரவர்,    மார்த்தாண்ட பைரவர், சேத்திர  பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர்,  சொர்ணகர்ஷண  பைரவர்         உள்ளிட்ட பல  பெயர்களில்  அழைத்து  வழிபடுகிறார்கள்.

பைரவர்  என்ற  பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று  பொருள்.  அதாவது   தன்னை  அண்டியவர்களின்   குறைகளைக்   களைய  அவர்களின்     எதிரிகளுக்கு  பயத்தை  அளிப்பவர். 

‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை  போக்குபவர்’  என்றும்  பொருள் உண்டு. 
சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல்  நம்மைப்  பாதுகாக்கக்  கூடியவர்.

அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய  ஐந்து  தொழில்களையும்  செய்கிறார்.
சிவ பெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு.

அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.  காலத்தை  வென்றவர்,  கால   சக்கரத்தை    இயக்கு பவர்   இந்த   கால  பைரவர்.  ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து    இருக்கும்  பைரவ  மூர்த்தி  மழு,  பாசம், சூலம்,  தண்டம்  ஏந்தி,  காண்பவரை மெய்சிலிர்க்கச்    செய்யும்   வடிவம்  கொண்டவர்.

  நம்பினோர்க்கு   சாந்த   வடிவமானவர்.  கால   பைரவர்  மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால், தன்னை நம்பியவர்களை  கண்ணின்  இமைபோல்  காப்பவர்.  இவரே  சிவ  ஆலயங்களின்  காவல் தெய்வம்.

இவரின் அருள்ன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண கால  பைரவரின்  அருள்  மிகவும்  அவசியம் ஆகும். உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத்  தான்.
அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால்,   ஒருவருக்கு   பாவமோ   அல்லது    புண்ணியமோ  இருந்தால்   மறுபிறவி உண்டு.

  எப்போது  பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து,  வெறுமை  நிலை  உண்டாகின்றதோ, அப்போது   தான்   பிறவி இல்லாத பெருநிலை         ஏற்படும். 

அத்தகைய   பிறவி   இல்லாத   பெருவாழ்வை    தருபவர்  கால  பைரவர். இவர் காலத்தை    மாற்றும்   சக்தி    .கொண்டவர்   என்பதால்,   ஒருவரது    பாவ-    புண்ணியங்களை அழிக்கும்   ஆற்றல்   இவருக்கு   உண்டு.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம்  என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 

21  அஷ்டமி   நாளில்    பைரவரை  வணங்கிய         எவரும்  வாழ்வில்   துன்பத்தை அடைவதே இல்லை  என்பது ஐதீகம்.

  காலத்தின் கடவுளான கால பைரவர்  தலை விதியை   மாற்றக்கூடிய   ஆற்றல்  கொண்டவர்.

வந்திருப்பது அந்தத் திருக்கோயிலின் காவல் தெய்வம்  என்ற தெளிவு இருந்திருந்தால்,  உள்ளே நடந்த திருவிளையாடல் உணர்த்தும் கருத்து புரிந்திருந்தால்,  அந்தத் தவசீலர் கொடுத்த உபதேசம் எல்லோருக்கும் கிடைத்திடாத  பேரு  என்பதை  உணராத  மூடர்   கூடம் மீண்டும் தெய்வ சிலையைத் திருட எண்ணம் கொண்டது.

இறைவன் அன்னையை போன்றவன். பிள்ளை தவறு செய்யும் போது முதலில் தடுத்தாட்        கொள்ளும்  அவன்,  அதே தவறு மீண்டும்          நடக்கும்    போது,  தண்டிக்கவும்  தயங்க             மாட்டான். கிடைத்த  அருளின்  பலன்  அங்கே  கைக்       கூடாமல் போனது.

இது தான் விதி என்பதோ!.

இறைவனாலேயே நேரில் தடுத்தாட்கொள்ளப்பட்டும்,  இறை  வழியில்  செல்லாமல்  பாவ  வழியில்  சென்றது   அந்தப்  பாவ ஆத்மாக்கள்.

‘ விநாச  காலே  விபரீத  புத்தி!’  என்பது  இது  தான்.   
‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது இது தான்  போலிருக்கு. 

அதோ,  தண்டிக்க  வந்து  விட்டது  பைரவ ரூபம்.
  கீழே  கிடந்த கல்லை எடுத்து  அந்த நாயை அடிக்க முயல, இப்பொழுது ஒரு நாய்க்குப் பதில் அங்கே  இருபது  நாய்  நின்றது.

“ஷ்… ஷ்… தூர போ… போ…”  என்று விரட்ட,        இப்பொழுது  அங்கே   ஐம்பது  நாய்  நின்றது.

‘கிர்!…. கிர்! …   என்று  ஐம்பது நாயும்,  பல்லை ஒரே   சமயத்தில்   காட்டி  உறும, அந்தச்     சப்தம்  அடி   வயிற்றில்   பயப்பந்தை  உருளச் செய்ய அடுத்த நொடி  அவர்கள்  எடுத்தார்கள்  ஓட்டம்.

காஞ்சிபுரத்தின்  நான்கு  ராஜ நகர  வீதிகளும் அதற்கு  முன்பும்  பல இறை  லீலைகளுக்குச்    சாட்சியாய்   இருந்திருக்கிறது தான். 

ஆனால்,  இந்த  இறை  லீலை  வார்த்தைகள் கொண்டு      வர்ணிக்க   முடியாத   ஒன்றாகவே   இருந்தது.  அந்த நால்வரை ஐம்பது நாய்கள் துரத்திக் கொண்டும் ஓடும் காட்சி காட்சியை யாராவது பார்த்து  இருந்தார்கள்  உறைந்து   போய்    நின்றிருப்பார்கள்.

கொள்ளை அடிக்க வந்த நால்வரும் காஞ்சிபுரத்தின்   ராஜ  வீதிகளில்  பின்னங்கால் பிடரியில் படும் படி,  உயிரைக்  கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்.

அப்படி    ஓடியவர்கள் மோதி நின்ற இடம், காஞ்சிபுர   நகர  வீதிகளை வலம் வந்து    கொண்டிருந்த  போலீஸ்  ஜீப்பின்  மேல்.

அவர்களை  எங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ அங்கே கொண்டு வந்து   சேர்த்து விட்டது   பைரவ  ரூபம். 

  மோதிக் கீழே விழுந்தவர்கள் திரும்பிப் பார்க்க, பின்னால்   துரத்தி   வந்த  அந்த  ஐம்பது   நாய்களையும்   இப்பொழுது   காணவில்லை. 

தூரத்தில் கருமை நிற மனிதன் ஒருவன் நடந்து சென்று  கொண்டிருந்தான். 
பத்தடி நடந்தவன் காற்றில்  அப்படியே  காணாமல்  மாயமாய்  மறைந்து   போனான்.     

“அய்யோ!… இனி   கோயில்   சிலைகளைத்  திருடமாட்டோம் சார்… அப்ரூவர் ஆகிடறோம்… எங்களை  அந்த   நாய்ங்க   கிட்டே    இருந்து   காப்பாத்துங்க…  எங்களைக் காப்பாத்துங்க…  அய்யோ  கடிக்க வருதே… ” என்று சிலை  கடத்தல்  தடுப்பு  பிரிவு  ஸ்பெஷல்  அதிகாரியான  அவன் காலைப் பிடித்துக்  கதறினார்கள்  அந்த  நால்வர். 

அந்த அதிகாரிக்கும், அந்தக் காஞ்சி  மாநகரத்திற்கும்,  காணாமல் போன வைர நிசும்பசூதனி சிலைக்கும்  நெருங்கிய  தொடர்ப்பு  உண்டு.

விதி   செய்த   சதியால்  தன்  உயிரையும்,   காதலையும்,ஆள வேண்டிய சாம்ராஜ்யத்தையும்    இழந்தவன்   அவன்.

அதற்குப்   பிராயசித்தம்   செய்யும் பணி அங்கு நடந்து   கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயம்

9

காலம் -965 A. D.இடம் - காஞ்சிபுரத்தின் அடர்ந்த கானகம்.   இளவரசன் அடர்ந்த கானகத்தில் சந்தித்த அந்தப் காரிகை (பெண்) ,  தன்  தந்தை தேவநாராயணரின்    இலச்சினை     மோதிரத்தை  எடுத்துக்   காட்டினாள்.  அதுவரை  இருந்த  சந்தேகம்  விலகி  விட, “வணக்கம்   பின்னையே  (தங்கை).  …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்