arrow_back
காதல் கடன் அத்தியாயம் 1
காதல் கடன் chevron_right பகுதி 1 / 16

அத்தியாயம் 1

visibility 537
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

காதல் கடன்

(1)

மெல்லிய நாதஸ்வர இசையுடன், சாம்பிராணி, ஊதுவத்தி வாசமும் இணைந்து வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வாசல் அடைத்த கோலம் முதல் சமையலறையில் தடபுடலாக ஏற்பாடாகிக்கொண்டிருக்கும் விருந்து வரை குடும்பமே மகிழ்ச்சி வண்ணம் பூசிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாக காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்துகொண்டிருந்தனர். காரணம் என்னன்னு கேக்கறேளா? இன்னிக்கி நம்ம கதாநாயகி ராதிகாவுக்கு நிச்சயதார்த்தம். வாங்கோ ராதிகா என்ன பண்ணிண்டு இருக்கான்னு பாப்போம்…

இத்தனை கலாட்டாவிலும் எதிலும் ஒட்டாமல் தாமரை இலை நீர்போல சலனமே இன்றி கண்ணாடி முன் அமர்ந்துகொண்டிருந்தாள் இருபத்தி ஆறு வயதான ராதிகா. பிராமணப் பெண்களுக்கே உரிய திருத்தமான பொன்னிற முகம். இடை வரை நீண்ட கூந்தல். இப்போழுதுதான் சிக்கெடுத்து தலை பின்னியிருந்தாள். ஆனால் எண்ணங்களில் சிக்கித் தவித்த மனதை சீராக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். எண்ணச்சுழலில் சிக்கி மைதீட்டிய விழிகள் தாமாகவே மூடிக்கொண்டன. முட்டிக்கொண்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். 

“ராதும்மா, ரெடியா?” என்றபடியே அறைக்குள் நுழைந்த அம்மாவின் குரலுக்கு சுதாரித்துக்கொண்டு, எழுந்து நின்றாள். ஊதா நிறத்தில் பச்சை பார்டர் போட்ட சில்க் காட்டன் புடைவையில் தேவதை போல நின்றிருந்த மகளைப் பார்த்து திருஷ்டி கழித்த மரகதம், கையிலிருந்த முல்லைச்சரத்தை அவள் தலையில் சூட்டியபடி,

“என்னடா, இன்னுமா குழப்பம், நீ சரின்னு சொன்னப்பறம் தானே உங்கப்பா இந்த ஏற்பாடே செஞ்சிருக்கார், இப்போவும் உனக்கு விருப்பமில்லைன்னா சொல்லிடு கண்ணம்மா, நான் எல்லாத்தையும் நிறுத்திடறேன்,” என்றார்.

“ஆமாம்டியம்மா, நிறுத்திடு, பொண்ணை ஆத்துலய வெச்சுக்கோ, கல்யாணமெல்லாம் ஒரு விஷயமா? பேசாம நிறுத்திடு,” என்று நாடியை தோளில் இடித்துக்கொண்டே வந்தார் அத்தை சுந்தரி. “இந்த மட்டுக்குமேனும் ஒரு ரெண்டாம் தார வரனாவது தகைஞ்சிருக்கேன்னு சந்தோஷப்படாம, அதையும் நிறுத்திடு, உனக்கு இவ மட்டுமே பொண்ணில்லை, உன்னை நம்பி இன்னும் ரெண்டுபேர் இருக்கான்னு நெனைப்புல இருக்கட்டும், நிறுத்தப்போறாளாம், நிறுத்த” என்று வெடித்தார்.

“அம்மா, நேக்கு ஒரு குழப்பமும் இல்லேம்மா, நன்னா யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கேன், நீ ஒண்ணும் கவலைப்படாதே,” என்று தன்னை உற்சாமாக்கிக்கொண்டு பதிலளித்தாள் ராதிகா.

“சரி, சரி, போய் வேலையை பாரு மரகதம், அவா வர்ற நேரமாச்சு, நீ சீக்கிரமா அலங்காரத்த முடி,” என்றபடி இருவரும் அறையை விட்டு வெளியேறினர்.

சற்று விலகி நின்றிருந்த குழப்பங்கள் மீண்டும் அவளை ஆட்கொண்டன. மனம் இரண்டு கட்சியாகப் பிரிந்து கேள்வி பதிலில் இறங்கியது.

“இது சரிதானா?” என்றது ஒரு மனம்.

“வேற என்ன வழி?” என்றது இன்னொன்று.

“Out of the frying pan into the fire,” என்று குற்றம் சாட்டியது ஒரு மனம்.

“மானம் கெட்டு வாழறதை விட ரெண்டாம் தாராமா வாழறது எவ்வளவோ மேல்,” என்றது இன்னொன்று.

“ஐயோ போதும்,” என்று காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

ஒரு முடிவாக அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலில் அப்பா ஆடியபாதம் ஜமுக்காளங்களை விரித்துக்கொண்டிருந்தார். கல்லூரி சம்ஸ்க்ருத விரிவுரையாளர். நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்ட தம்பி ஸ்ரீநிவாசன், அவளைப் பார்த்து, “அக்கா, சூப்பர்” என்றான். தங்கை பானுமதியும் பாட்டுப்பாவாடை தாவணி அணிந்துகொண்டு தயாராகி இருந்தாள். பரவலாக அனைவரிடமும் ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சி. 

ஏன் இருக்காது?ராதிகாவின் இருபத்தி இரண்டாவது வயதில் ஆரம்பித்த இந்த வரன் பார்க்கும் படலம், நான்கு ஆண்டுகள் கழித்து இன்றுதான் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நடக்கவே நடக்காதோ என்று ஏங்கிய வைபவம் இன்று நடக்கப் போகிறது. அழகிலோ, அறிவிலோ ராதிகாவிற்கு எந்தக் குறையும் இல்லாதபோதும், ஏதோவொரு காரணத்திற்காக பார்க்கவந்த வரன்கள் அனைத்தும் தட்டிப்போயிற்று. ஆரம்பத்தில் பெண் பார்க்கும் படலங்களை ஆவலாக எதிர்கொண்ட ராதிகா போகப்போக இயந்திரத்தனமாக மாறிப்போனாள்.ஆனாலும் விஷயம் பெண்பார்த்தலைத் தாண்டி நிச்சயதார்த்தம் வரை வந்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் வந்தவர்களெல்லாம் பெண் பார்த்துவிட்டு சென்ற பின் எந்த பதிலும் கூறாமல் தட்டிக்கழித்துவிட்டார்கள். இன்றும் அவளுக்கு இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. காரணம்… அவள் மட்டுமே அறிந்த காரணம்… தெரிந்தபோது வாழ்க்கையின் ஆதாரத்தையே உலுக்கிவிட்ட காரணம்…யாரிடமும் பகிர முடியாத காரணம்…

*******

அந்த ஆடி க்யூ7 கார் திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வீதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அதை ஓட்டிக்கொண்டிருந்தவனின் மனமோ அலையிலிட்ட துறும்பாய் அல்லாடிக்கொண்டிருந்தது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு நிலை. நீயாகத் தேடிக்கொண்டதுதானே என்று இடித்தது மனம். இயலாமை பெருமூச்சாக வெளிப்பட்டது.

அவன், பரத்வாஜ், நம் ராதிகாவோடு இன்று அவனுக்கு நிச்சயதார்த்தம். இந்தியாவில் நிகழ்ச்சி மேலாண்மைத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் இளம் தொழிலதிபர்களில் ஒருவன். இது அவனுக்கு இரண்டாவது திருமணம். அவனுடைய தாய் கரைப்பாய் கரைத்து அவனை சம்மதிக்க வைத்திருக்கும் சம்பந்தம். இதோ அம்மா பர்வத வர்த்தினி, அப்பா ஜகந்நாதன்,அண்ணன் ராகவன், மன்னி கீதாஞ்சலி, தங்கை துளசி, அண்ணன் குழந்தைகள் ஸ்வாதி மற்றும் ஷ்ரவனுடன் பெண் வீட்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறான். 

மனதில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அது நன்கு தெரிந்திருந்தும் யாரும் அதைப்பற்றி கவலைப் பட்டதாய் தெரியவில்லை. அவனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இந்தக் கல்யாணம் நடப்பதில் மிக மிக மகிழ்ச்சி. 

“ஏண்டா மூஞ்சிய உர்ருன்னு வெச்சிண்டு இருக்கே, உன்னைப் பாத்தா நிச்சயதார்த்தம் நடக்கப் போறவன் மாதிரியா இருக்கு, கொஞ்சம் ஸ்மைல் பண்ணினா என்ன கொறைஞ்சா போயிடுவே,” என்று துளசி மட்டும்  கோபப்பட்டாள்.

அவளுக்கு பதில் சொல்லக்கூட வாய் திறந்து பேசாத மகனைக் கவலையாய் பார்த்தார் ஜகந்நாதன். “நீ சித்த சும்மா இரு துளசி. அவனை தொந்தரவு பண்ணாதே” என்று அதட்டினார் பர்வதா மாமி. 

“ஆமாமா அண்ணா என்ன பண்ணினாலும் நீ அவனை மட்டும் விட்டே குடுக்கமாட்டியே,அடேங்கப்பா, என்ன ஒரு பார்ஷியாலிட்டி,” என்று நொடித்துக்கொண்டாள் துளசி.

மகளை ஒரு பார்வை முறைத்துவிட்டு,கியரின் மீது இருந்த மகனின் கையை ஆதுரமாகப் பற்றிக்கொண்டார் அந்தத் தாய். தாயின் ஸ்பரிசத்தில் மனம் கொஞ்சம் ஆறுதலடைந்ததோ என்னவோ, கோபத்தின் இடையிலும் அவரை அன்புடன் திரும்பிப் பார்த்தான் பரத். அவனுடைய இந்த நிலைக்கு காரணமே அம்மாதான் என்றாலும், அவர் மேல் கோபத்தைக் காட்டத் தோன்றவில்லை. 

மூன்றாண்டுகளாக மிகவும் முயற்சி செய்து கடைசியில் மகனை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார் பர்வதம் மாமி. அம்மாவின் நச்சரிப்பிற்காகவே அவன் மறுகல்யாணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டான். ஆனால் அவன் ஒப்புக்கொண்ட இரண்டு வாரங்களுக்குள் விஷயம் இப்படி நிச்சயதார்த்தம் வரை வரும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

ஸ்ரீரங்கத்திற்கு ரங்கமன்னாரை தரிசிக்க வந்திருந்த பர்வதவர்த்தினியின் கண்களில் சுவாமிக்கு பூமாலைகள் கொண்டுவந்த ராதிகா பட, பார்த்த மாத்திரத்திலேயே அவளை மிகவும் பிடித்துப்போய் கோவில் குருக்களிடமே விசாரித்திருக்கிறார். நான்கு வருடங்களாக தேடியும் வரன் தகையாத கதையை ஆடியபாதத்தின் நண்பரான குருக்கள் கூற, நேரே ராதிகாவின் வீட்டிற்கே ஜாதக பரிவர்த்தனை செய்ய சென்றுவிட்டார் மாமி. விளைவு,எல்லாம் பொருந்திவர இதோ இன்று நிச்சயதார்த்தம். 

அம்மா காட்டிய பெண்ணின் முகம் கூட நினைவில் இல்லை பரத்திற்கு. அவர் காட்டிய ஃபோட்டோவை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு சரி என்று கூறிவிட்டான். திருமணம் செய்வது என்று முடிவாகிவிட்டது, பிறகு யாராக இருந்தால் என்ன? இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி, யாரையாவது தலையில் கட்டுவது நிச்சயம். இதுதான் முடிவு என்றானபின் வேலை முடிந்தால் போதும். வாழாத வாழ்க்கைக்கு வக்கணை ஒரு கேடா… தலையாட்டி வைத்திருந்தான். இனி நடப்பதை நொந்து என்ன பயன்? வருவதை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்துகொள்ள வேண்டியதுதான் என்று தன்னையே தேற்றிக்கொண்டிருந்தான். நடப்பதையெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத பாவனையோடு ஒரு வெளியாள் போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். விதிவசமோ இல்லை வினைப்பயனோ, இன்று வேடிக்கை பார்ப்பவன், நாளை தானே வேடிக்கையாவனோ…

அடுத்த அத்தியாயம்

காதல் கடன் – 2

காதல் கடன்(2)இரவு மணி பத்து. ராதிகாவால் இன்னுமே நம்ப முடியவில்லை, உண்மையாகவே அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, தை மாதம் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என்றும் முடிவாகிவிட்டது. மாப்பிள்ளைக்கு ஒரு பிரேஸ்லெட்டும் மோதிரமும், பட்டு வேஷ்டி சட்டையும் வாங்கியிருந்தார் ஆடியபாதம். மாப்பிள்ளை வீட்டாருக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 5

உங்கள் கருத்தைப் பகிருங்கள்