காதல் கடன் – 15
காதல் கடன்
(15)
கோபத்தில் சிவந்த மனைவியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பீன்சை நறுக்கிக் கொண்டிருந்த பரத்தின் இதழ்கள் தன்னிச்சையாக “பஞ்சுமிட்டாய்” என்று முணுமுணுத்தன…
அப்படியும் இப்படியுமாய் அடுத்த ஒரு மணிநேரத்தில் “இந்த வெள்ளரிக்காயைத் துருவு,” “இஞ்சியை தோல் சீவு,” “ரசத்துக்கு கொத்தமல்லியை கிள்ளி அலம்பு,” “தக்காளியை பொடியா நறுக்கு”, என்று ராதிகாவை விரட்டி விரட்டியே வேலை வாங்கிவிட்டான் பரத். தேங்காயைத் துருவி முடித்துவிட்டு அவனுக்கு உதவ வந்த ராகவனையும், “ஒரு அசிஸ்டன்டையே மேய்க்க முடியல, இதுல நீ வேறயா,” என்று அவனையும் கடுப்பேற்றி, விரட்டி விட்டுவிட்டான்.
“தெரியாத்தனமா இவர்கிட்டக்க வந்து மாட்டிண்டுட்டோம், பேசாம துளசியோட கோலம் போடவே போயிருக்கலாம்,” என்று நினைத்தபடியே அவன் ஏவிய வேலைகளை எல்லாம் செய்துகொண்டிருந்தாள் ராதிகா.
அதற்குள் அவனும், ஒற்றை ஆளாக பொரித்த கூட்டு, இரண்டு பொரியல், பிட்லை, இரண்டு கோஸ்மல்லி, தயிர் பச்சடி, மோர்குழம்பு, இனிப்பு பச்சடி,என்று மொத்த சமையலுக்கும் தேவையான எல்லா காய்கறிகளையும் நறுக்கி முடித்திருந்தான். அவன் நறுக்கிய வேகத்தைப் பார்த்து அவன் அடித்துக்கொண்டிருந்த லூட்டியையும் மறந்து, திறந்த வாய் மூடாமல் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் ராதிகா.
கத்தியைக் கீழே வைத்தவன், அவள் முகம் தொட்டு, நாடியைத் தூக்கிவிட்டு ராதிகாவின் வாயை மூடியவன், “வேலை பண்றேன்னு இங்க ஒக்காந்துண்டு ஓபி அடிச்சது போரும், எழுந்து போய் உண்மையாவே ஏதாவது வேலை இருந்தா பாரு போ,” என்று கூற, மறந்து போயிருந்த முறைப்பு மீண்டும் வந்து குடியேறியது ராதிகாவின் முகத்தில். பரத்தை முறைத்தபடியே கையில் இருந்த பாத்திரத்தை “ணங்” என்று கீழே வைத்தவள், முணுமுணுத்தபடியே பர்வதத்திடம் சென்றாள்.
அவர் சமையலுக்கு வேண்டிய பொடிகளை அடிக்க வறுத்து ஆறவைத்திருக்க, அவற்றை மிக்சியில் அரைத்து கொடுத்தாள். கீதாவும், ராகவனும் போளி தட்டும் வேலையில் மும்முரமாய் இருக்க, ஒருவழியாய் பயத்தம்பருப்பு பாயாசம், வெள்ளைப் பூசணிக்காய் மோர்குழம்பு, மிளகு ரசம், கத்திரிக்காய் பிட்லை, புடலங்காய் பொரித்த கூட்டு, வாழைக்காய் பொரியல், கத்திரிக்காய் வதக்கல், பீன்ஸ் பருப்புசிலி, கடலைப்பருப்பு இனிப்பு கோஸ்மல்லி, பயத்தம் பருப்பு வெள்ளரிக்காய் காரக் கோஸ்மல்லி, தனிக்கூட்டு, இஞ்சி கறிவேப்பிலை துவையல், விளாம்பழ இனிப்பு பச்சடி, மாங்காய் ஊறுகாய், மா பலா வாழைப்பழக் கலவை, கலத்துப் பருப்பு, பருப்புப் போளி, எள்ளுருண்டை, புளியோதரை, எலுமிச்சை சாதம், சுமங்கலிகளுக்கு கொடுக்க, பானகம், நீர்மோர், சுக்கு வெல்ல உருண்டை என்று அனைத்தும் தயாரானது.
சமையல் முடிந்ததும் சமைத்த உணவுகளை நேர்த்தியாக பாத்திரங்களில் போட்டு சமையலறையில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு, சமைத்த இடத்தை சுத்தம் செய்யத் தொடங்கினர்.
இதற்கிடையில், பரத் உளுந்து வடைக்கான மாவை கிரைண்டரில் அரைத்து எடுத்துவிட, எண்ணை பட்சணம் செய்யும் வேலை தொடங்கியது. இதுவரையில் அவனிடம் மறுபடியும் மாட்டாமல் வேறு வேலைகளைச் செய்துகொண்டிருந்த ராதிகாவை, பரத் எண்ணை வாணலியை அடுப்பில் வைத்தவுடன் “ராதும்மா, நீ பரத்துக்கு ஹெல்ப் பண்ணு,” என்று மீண்டும் பரத்திடம் மாட்டிவிட்ட பர்வதம் வேறு ஏற்பாடுகளைக் கவனிக்க சமையலறையை விட்டு வெளியேறினார். அவருடனே மற்றவர்களும் வெளியேறிவிட, “பகவானே, மறுபடியும் தனியா மாட்டிண்டுட்டோமே,” என்று நினைத்தபடி, அவனருகில் சென்றவள், “ஹ்ம்ம், என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ,” என்றாள், அலுப்பாக.
“அச்சச்சோ, ரொம்ப அலுத்து போயிருக்கறாப்ல இருக்கே, சரி போனா போறது, உனக்கு ஈசியான வேலையே குடுக்கறேன்,” என்றவன், அவள் கையில் ஒரு ஜல்லிக்கரண்டியைக் கொடுத்து, “இந்தா, நான் வடையை எண்ணையில போடப்போட ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம பிரிச்சு விடு,” என்று கூறிவிட்டு, அடுப்பின்மீது வைத்திருந்த இண்டஸ்ட்ரியல் சைஸ் வாணலியில் கொத்தித்துக்கொண்டிருந்த இரண்டு லிட்டர் எண்ணையில் கையகலத்தில் ஒவ்வொரு வடையாகத் தட்டிப் போட ஆரம்பித்தான்.
கையை நீரில் நனைத்து, கைநிறைய மாவை எடுத்து, ஒரே சைசில் ஒவ்வொரு ஈட்டுக்கும் மொறுமொறுவென்று பொன்னிறத்தில், இருபத்தைந்து வடைகளாகப் போட்டெடுக்க, அவன் வேலை செய்யும் நேர்த்தியைப் பார்த்து வியந்துபோனாள் ராதிகா. அவனை வேடிக்கை பார்க்கும் மும்முரத்தில், வாணலியின் மீது கொஞ்சம் அதிகமாகவே குனிந்துவிட, சூடான வாணலியின் விளிம்பைத் தொடவிருந்த ராதிகாவின் கையைப் பிடித்து வேகமாக விலக்கியவன்,
“ம்ப்ச், என்ன பண்றே, எண்ணை வாணலி மேல இப்படியா குனியறது, கையை சுட்டுக்கப்போற, எங்க இருக்கு உன் கவனமெல்லாம்?” என்று கடிந்துகொண்டான். வெட்கமில்லாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததை நினைத்து முகம் சிவந்த ராதிகா, “சா…சாரி, இனி கவனமா இருக்கேன்,” என்று கூறியபடி அவனுடைய பிடியில் இருந்து கையை விடுவித்துக்கொள்ள முயன்றாள். ஆனால் பரத்தோ பிடித்த கையை விடாமல், இன்னொரு கையால் ராதிகாவின் கையிலிருந்த ஜல்லிக்கரண்டியை பிடுங்கிக்கொண்டு, அவளை இழுத்து அடுப்பிலிருந்து தள்ளி நிறுத்தியவன், ”நீ எனக்கு ஹெல்ப் பண்ணினதெல்லாம் போறும், போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு,”என்றான் சற்று கடுமையாக.
அவனது குரலின் கடுமையில் முகம் சுருங்கியவளைக் கண்டு குரலை சற்று மென்மையாகிக்கொண்டு, “பாரு, சூட்டு பக்கத்துல ஒக்காந்துண்டு இருந்ததால மொகமெல்லாம் செவந்து போயிடுத்து, போய் மொகம் அலம்பிக்கோ, இந்த ஈட்டோட முடிஞ்சுடுத்து, நான் பாத்துக்கறேன், நீ போ,” என்றான் அவளைப் போகுமாறு சைகை காட்டியபடி. ஆனாலும் போகாமல் அவனுடைய முகத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தவளை, “ம்ப்ச், போங்கறேன்ல,” என்று சமையலறை வாசலை நோக்கித் திருப்பி லேசாகத் தள்ளிவிட்டான்.
அதற்குப் பின்னாலும் அங்கு நின்றிருக்க என்னவோ போலிருக்க, மெதுவாக சமையலறையை விட்டு வெளியேறினாள் ராதிகா. வெளியே வந்தவளை பூஜையறைக்குள்ளிருந்த பர்வதம் அழைத்து “வேலை ஆயிடுத்தா ராதும்மா, நீ இங்கே நந்தினியோட சேர்ந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் ரெடி பண்றியா? நான் போயி சுமங்கலிகள் எல்லாரும் குளிச்சு ரெடியாயிட்டாளான்னு பாக்கறேன்,” என்று கூறியபடி, தன் கையிலிருந்த லிஸ்டை ராதிகாவின் கையில் கொடுத்து விட்டு, தாம்பூலத்துக்கு வேண்டிய எல்லா சாமானும் அந்த பெட்டிகள்ள இருக்கு, இந்த லிஸ்டைப் பார்த்து ஒவ்வொரு தாம்பாளமா ரெடி பண்ணி வையுங்கோ, நான் வந்து புடவைக் கலத்தையும் பூவாடை பானையையும் ரெடி பண்றேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அதன்படியே ராதிகாவும் நந்தினியும் இணைந்து, லிஸ்டைப் பார்த்து, நந்தினி ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொடுக்க, அங்கே இருந்த பித்தளை தாம்பாளங்களில், கருப்பு நூல் கலக்காத நிறங்களில் எடுக்கப்பட்டிருந்த ஆறு கஜம் சில்க் காட்டன் புடைவை, மேட்சிங் ரவிக்கைத் துணி, ஒரு கவுளி வெற்றிலை, கால்கிலோ களிப்பாக்கு, கால் கிலோ உருண்டை மஞ்சள், சீப்பு, கண்ணாடி, காதோலை கருகமணி, மடி மஞ்சள்பொடி, மடி குங்குமம், அரைத்த மருதாணி, கண்மை டப்பா, ஒரு டஜன் வாழைப்பழம், ஒரு வெற்றிலையில் செய்து வைக்கப்பட்ட மஞ்சள் உருண்டை, ஒரு வெற்றிலையில் செய்து வைக்கப்பட்ட நலங்கு மஞ்சள் உருண்டை, பத்து முழம் மல்லிகைப்பூ, ஒரு தங்க நாணயம் மற்றும் ஆயிரத்தொரு ரூபாய் வைத்து இருபது தாம்பாளங்களையும், புடவைக்கு பதிலாக கன்யா குழந்தைகளுக்காகத் தைத்து வைக்கப்பட்டிருந்த பட்டுப்பவாடைச் சட்டைகளை வைத்து நான்கு தாம்பாளங்களும், பிரம்மச்சாரிக்கு நான்கு முழம் வேஷ்டி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், சீப்பு, கண்ணாடி, ஆயிரத்தொரு ரூபாய், ஒரு தங்கக் காசு வைத்து ஒரு தாம்பாளத்தையும் தயார் செய்து வைத்தாள் ராதிகா.
அதன் பிறகு, ஒரு தட்டில் பூச்சரத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வைத்தனர். பானகம் நீர்மோர் கொடுக்க டம்பளர்களையும் தயாராக வைத்துவிட்டு, ஒரு தட்டில், வெற்றிலை பாக்கு, பழங்கள், சந்தனம், குங்குமம் அட்சதை, ஊதுபத்தி,ஒரு தட்டில் பெரிய கட்டி கற்பூரம் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்து, ஒரு தட்டில் ஆரத்தியும் கரைத்து வைத்தாள் ராதிகா. இன்னொரு தட்டில் உதிரிப்பூக்களையும் எடுத்து வைத்தாள். “அவ்வளவுதான் மன்னி, முடிஞ்சுடுத்து, இனி அம்மா வந்து புடவைக் கலத்தையும் பூவாடைப் பானையையும் ரெடி பண்ணிட்டா, இலை போட்டுடலாம்,” என்றபடி நிமிர, பர்வதமும் உள்ளேவர சரியாக இருந்தது.
இடுப்பில் கைவைத்தபடி மூச்சிரைக்க நின்றிருந்த மகளைப் பார்த்து, ‘போறும் நந்தினி, நீ போய் சித்த நாழி ஒக்காந்துக்கோ, நானும் ராதிகாவும் பாத்துக்கறோம்,” என்று அவளை அனுப்பிவிட்டு, புடவைக் கலத்தை தயார் செய்யத் தொடங்கினார். ஒரு தாம்பாளத்தில், மடி உணர்த்திய ஒன்பது கஜம் புடைவையை முந்தானை வெளியில் தெரியும்படி மடித்து வைத்தவர், மற்ற தாம்பூலத்திற்கான பொருட்கள் அனைத்தையும் அதன் மீது வைத்தார். பின்னர் ஒரு மூடி போட்ட வெண்கலப் பானையை எடுத்து, அதைச் சுற்றி சுண்ணாம்புக் கோடு போட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, கழுத்தில் பூச்சரத்தைக் கட்டி, அதற்குள் ஒரு கன்யா பெண்ணிற்கான தாம்பூலத்தையும் வைத்து தட்டால் மூடி அனைத்து தாம்பூலங்களையும் சுவாமி முன் வைத்தார்.
அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்தபோது மணி ஒன்பதாகியிருந்தது. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துக்கொண்டவர், “வா ராதும்மா, பெண்டுகள் எல்லாம் ரெடியாயிட்டா, நாம போய் இலை போடலாம், அப்போதான் காலாகாலத்துல அவாளை அழைச்சு பரிமாறமுடியும், என்று அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தார்.
பெண்டுகள், கன்யா குழந்தைகள், பிரம்மச்சாரி அனைவருக்கும் பர்வதம் மாமியே ஒன்பது கஜம் புடைவைகளையும், உடைகளையும் மடி உணர்த்தியிருக்க, அனைவரையும் கோலம் போட்ட மணையில் உட்காரவைத்து சந்தனம் குங்குமம் கொடுத்து, இரு கைகளின் கட்டை விரல்களால் அவர்களுடைய உச்சி, கன்னம், கைகள் மற்றும் கால்களில் எண்ணையும் மஞ்சளும் தடவி, சீயக்காய், வாசனைப்பொடி கொடுத்து மங்களஸ்நானம் செய்ய அனுப்பியிருந்தார். அனைவரும் அவ்வாறே எண்ணை ஸ்நானம் செய்து, ஒன்பது கஜம் புடவையை மடிசாராகக் கட்டிக்கொண்டு தயாராகி இருந்தார்கள். ஆத்து சம்பந்திகளாகிய ராதிகாவின் அம்மா, மரகதம், கீதாவின் அம்மா, ஸ்ரீராமின் அம்மா, மற்றும் குடும்பத்து தாயாதிப் பெண் குழந்தைகள், ஆகியோரே சுமங்கலிகளாக வரிக்கப்பட்டிருந்தார்கள். நந்தினி ஏழுமாத கர்பிணி என்பதால், அவள் புடைவைக்கலத்தில் உட்காரக்கூடாது என்பதால், குடும்பத்தில் மூத்த சுமங்கலியான ஒரு தாயாதிப் பெண்மணியை புடவைக் கலத்தில் உட்காரும்படியாக வேண்டிக்கொண்டிருந்தார் பர்வதம்.
முற்றத்தில் சுமங்கலிகளுக்கு இலை போடும் இடத்தை சுத்தமாக பெருக்கி மெழுகி, குட்டி குட்டியாக அழகாக இருபத்தியேழு படிக் கோலங்கள் போட்டு காவியிட்டிருந்தாள் துளசி. பூவாடைப் பானைக்கும் புடவைக் கலத்திற்கும் தனித்தனியாக கோலம் போட்டு, அதன் மேல் மனை போட்டு அதிலும் கோலம் போட்டிருந்தாள்.
ஊதுபத்தி சாம்பிராணி தூபம் போடப்பட்டு, அந்த இடமே தெய்வீகமாகக் காட்சியளித்தது. பரத்தும் ராகவனும் சேர்ந்து தலை வாழை இலைகளை அலம்பி எடுத்து வந்திருந்தனர். புடைவைக்கலத்திற்கு அருகில் இருந்த கோலத்தின் மீது இரட்டையாக நுனி வாழை இலைகளைப் போட்டு, மற்ற கோளங்களின் மீது ஒரு நுனி வாழை இலை போடப்பட்டது. எல்லா இலைகளுக்கும் அருகில் ஒரு டம்ப்ளரில் பானகம், ஒரு டம்ப்ளரில் நீர்மோர், ஒரு வெற்றிலையில் சுக்கு வெல்ல உருண்டை, ஆகியவை வைக்கப்பட்டன. பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த சுமங்கலிகளின் தாம்பூலம், புடவைக்கலம், பூவாடைப்பானை ஆகியவற்றிற்கு பூ அட்சதை போட்டு நமஸ்காரம் செய்தார்கள்.
அதற்குப் பிறகு, சுமங்கலிகளுக்கான இலைகளில், புடைவைக்கலம், அருகில் பூவாடைப்பானைக்கான இலை தொடங்கி, பர்வதம் மாமி நெய்யால் முதலில் சுத்தி செய்ய, ராதிகாவும், கீதாஞ்சலியும் சமைத்த அனைத்து பதார்த்தங்களையும் பரிமாறினார்கள். எல்லா இலைகளிலும் பரிமாறி முடிந்தபின், சுமங்கலிகளாக வரித்த பெண்களை ஆத்து வாசலில் நிற்கவைத்து, அவர்கள் அனைவருக்கும் மஞ்சள் கலந்த நீரைக் கொடுத்து கால் அலம்பிகொள்ளச் சொன்னார் பர்வதம் மாமி. அதன் பின், அவர்களுக்கு கீதா மஞ்சளும் குங்குமமும் கொடுக்க, ராதிகா தலையில் வைத்துக்கொள்ள வெட்டி வைத்த பூச்சரங்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும் “லக்ஷ்மி வா” என்று கூறி அழைத்தனர். அவர்கள் அனைவரையும் அகத்துக்குள்ளே அழைத்துச் சென்று சுமங்கலிகளுக்காகப் பரிமாறப்பட்ட இலையில் உட்காரவைத்துவிட்டு, பர்வதம்மாமி புடைவைக் கலத்துப் புடவைக்கு சந்தனம் குங்குமம் தெளித்து அட்சதை போட்டு, புடவைக்கலத்திற்கும், பூவாடைப்பனைக்கும் மற்ற சுமங்கலிகளுக்கும் தூப தீபம், கற்பூரம் காட்டிவிட்டு, பின்னர் எல்லார் கையிலும் பஞ்சபாத்திரம் உத்தரணியால் ஜாலம் விட்டு, தத்தம் குற்றி, எல்லாரும் திருப்தியா சாப்பிடணும்,” என்று வேண்டிக்கொண்டார்.
சமையலறையிலிருந்து ஒவ்வொரு பதார்த்தமாக ராகவனும் பரத்தும் எடுத்துக்கொடுக்க, ராதிகா, கீதா, துளசி மற்றும் பானு அனைவரும் சுமங்கலிகளுக்குப் பரிமாறினார்கள். பர்வதம் நின்று மேற்பார்வை பார்த்தபடி, யார் இலையிலும் எதுவும் குறையாமல் பார்த்துக்கொண்டு, மருமகள்களுக்கு பரிமாற வழிகாட்டிக்கொண்டிருந்தார்.
எல்லாம் சுமுகமாகச் சென்றுகொண்டிருந்தபொழுது, அங்கு வந்த சொந்தக்கார மூதாட்டி ஒருவர் பர்வதத்திடம் வந்து, “ஏண்டிம்மா பர்வதம், தவறிப்போன பரத்தோட ஆத்துக்காரிக்கும், அவனோட பொண் கொழந்தைக்கும் சேர்த்துதானே கணக்குப் பண்ணி இலை போட்டிருக்கே?” என்று கேட்க,
அதுவரையில் சிரித்தமுகமாக உணவு பரிமாற உதவி செய்துகொண்டிருந்த பரத்தின் முகம் கேட்ட அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் கடுமையாக இறுகிப்போனது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள கை முஷ்டிகளை மடக்கி இறுக்கியவன், அதற்கு மேல் அங்கே நிற்கமுடியாமல், யார் முகத்தையும் ஏறிட்டும் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான்.
பரத்தின் இந்த மாற்றத்தை வேறு யாரும் கவனித்தார்களோ இல்லையோ, பர்வதமும் ராதிகாவும் கவனிக்கத் தவறவில்லை.
மகன் மனம் கலங்கி அறையை விட்டு வெளியேறுவதை பர்வதம் கண்கலங்கிப் போய் பார்த்துக்கொண்டிருந்தார் என்றால், “குழந்தையா?” என்று கதிகலங்கி பரத் செல்வதையே வெறித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா…






Very nice. நேரிலே சுமங்கலி பிரார்த்தணையில் கலந்து கொண்ட மாதிரி இருக்கு. அருமை.
Hi.. super..
Thank you
Super next ud please