காதல் கடன் – 4
காதல் கடன்
(4)
மிகவும் அழகாக இருந்தது அந்த வீடு. வீடா அது…மாளிகை. கேட்டிலிருந்து வீட்டிற்குள் செல்லும் தூரத்திற்குள் தான் தாய்வீட்டைப் போல நான்கு வீடுகள் கட்டிவிடலாம் என்ற அளவிற்கு வீட்டின் முன்புறத் தோற்றமே பிரமிப்பைத் தந்தது. வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் ஒரு காலனியே கட்டி வசிக்கலாம் போலிருந்தது. இதுநாள்வரையிலும் எதையுமே நினைக்காமல் குழப்பத்திலேயே உழன்றுகொண்டிருந்த ராதிகாவிற்கு, இந்தக் குடும்பத்தைப் பற்றி தானும் அக்கறை கொண்டு ஏதாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாமோ என்று தோன்றியது.
“ஆமா, நடக்கவே நடக்காதுன்னு நெனைச்சுண்டு இருந்த கல்யாணத்தைப் பத்தி என்ன விசாரிக்கறதுனு சும்மா இருந்துட்டு, இப்போ குழம்பினா யார் என்ன பண்ணமுடியும்?” என்று எள்ளியது அவள் மனது.
வாசலில் விஸ்தாரமாய் படிக்கோலம் போடப்பட்டு, மத்தியில் குத்துவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்தோ மெல்லிய வாத்திய இசை கேட்டது. லேசாக பூமணமும் சாம்பிராணியின் நறுமணமும் காற்றில் மிதந்து வர, மனதில் மெதுவாக எட்டிப்பார்த்த கிலியையும் மீறி இந்தச் சூழல் ஒரு ரம்மியமான உணர்வை உண்டாக்கியது.
பெரிய மருமகள் கீதுவும் மகள் நந்தினியும் ஆரத்தி எடுக்க, வலது காலை எடுத்துவைத்து உள்ளே வந்த புதுமணத் தம்பதியரை நேராகப் பூஜையறைக்கு அழைத்துச்சென்று, “விளக்கேத்தும்மா, ராதிகா,” என்று பணித்தார் பர்வதம் மாமி. விஸ்தாரமாய் குடும்பத்தினர் எல்லோரும் அமர்ந்து பூஜை செய்யும்படியாக அமைந்திருந்த பூஜையறையில், தஞ்சாவூர் ஓவியங்களாக வீற்றிருந்த கடவுள்களை மனதார வணங்கி விளக்கேற்றிவிட்டு நமஸ்காரம் செய்தாள் ராதிகா. பின்னர் இருவரையும் முன் முற்றத்தில் இருந்த ஊஞ்சலில் உட்காரவைத்து பால் பழம் கொடுக்கப்பட்டது. பின்னர் கிரகப்பிரவேசத்திற்காக வாங்கப்பட்ட புடவையைக் கொடுத்து மாற்றிக்கொண்டு வரச் சொன்னார். கிரகப்பிரவேசப் புடைவையைக் கட்டிக்கொள்ள முறைப்படி நாத்தனார்களே உதவி செய்யவேண்டும் என்பதால், நந்தினியும் துளசியும் அவளுக்கு உதவி செய்ய வந்தார்கள்.
கர்ப்பிணியாய் இருந்த நந்தினியின் வயிற்றில் வருடலாய்க் கைவைத்து, “எத்தனை மாசம், மன்னி?” என்று கேட்டாள். “ஏழு மாசம் முடியப்போறது ராது, நீ கல்யாணம் முடிஞ்சு வந்த உடனேயே உனக்கு வேலை வைக்கப்போறேன்,” என்று கூறிய நந்தினியின் “ராது” என்ற அழைப்பு ராதிகாவை நெகிழ்த்தியது. லேசாகக் கண்களில் மிளிர்ந்த கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டாள், “வேலை என்ன மன்னி, நீங்க பிரசவத்துக்கு வர்றச்ச உங்களை கண்ணுக்குள்ள வெச்சு பாத்துப்பேன்,” என்றாள் ராதிகா.
“இங்க நானும்தான் இருக்கேன், எல்லா லவ்வும் அக்காவுக்கு மட்டும்தானா, என்னை கூட கொஞ்சம் கண்ணுல காதுலல்லாம் வெச்சு பாத்துக்கலாம்,” என்று மூக்கை சுருக்கிய துளசியின் சேஷ்டையால், நிலைமை சுமுகமாகியது. அவளையும் அணைத்துக்கொண்டு, “உன்னை கவனிக்காமலா, நீதானே இந்த ஆத்துல என்னோட முதல் ஃப்ரெண்ட்” என்று லேசாக அவள் கன்னம் வருடினாள் ராதிகா.
அதற்குள் கதவு தட்டப்பட, வேகமாக புடவையை மாற்றிக்கொண்டு, தலையில் பாரமாய் இருந்த பூஜடையை நீக்கி சாதாரணமாக பின்னிக்கொண்டாள். சாட்டையாய் நீண்டு இடைதொட்ட பின்னலில், “இது நம்மாத்துல பூத்த நித்தியமல்லி” என்று நெருக்கமாகக் கட்டிய பூச்சரத்தை வைத்துவிட்டாள் நந்தினி. ஏற்கனவே நாத்தனார்களால் லேசாகியிருந்த மனதில் பூவின் வாசம் புதுச்சாரலின் இதம் தந்தது. கதவைத் திறந்து வெளியே வந்தபோது ராதிகாவின் இதழ்களில் லேசான புன்னகையும் அரும்பியிருந்தது.
“எவ்வளோ நேரம் பண்றேள், குழந்தைகளா, எல்லாரும் நீ வந்து பால் காய்ச்சறதுக்காக காத்துண்டு இருக்கா ராதும்மா, சீக்கிரம்,” என்று துரிதப்படுத்தினார் அறையின் வாயிலிலேயே நின்றிருந்த மரகதம். இருபுறத்திலும் நாத்தனார்கள் இணைந்து நடக்க சமையலறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மகளைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு, இத்தனை நாள் அருமையாய் வளர்த்த மகளைப் பிரியப் போகிறோமே என்ற நினைவில் கண்கள் குளமாகின. அவசர அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டு அவர்களைத் தொடர்ந்து சமையலறைக்குள் சென்றார்.
அங்கே குடும்பத்தினர் அனைவரும், கூடவே பரத்தும் நின்றிருக்க, இருவரையும் அடுப்பிற்கு பூஜை செய்யச் சொல்லி, பாலை அடுப்பில் வைத்து ராதிகாவை காய்ச்சச் சொன்னார் பர்வதம். பால் பொங்கியது அதில் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி குங்குமப்பூ சேர்த்து கலந்து, பூஜையறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு வீட்டில் குழுமியிருந்த இருவீட்டு சொந்தங்களுக்கும் கொடுக்கப்பட்டது.
“வேலை முடிஞ்சுடுத்துன்னா, நான் கிளம்பலாமா?” என்று திடீரென்று தன்னருகில் ஒலித்த ஆண் குரலால் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் ராதிகா, அருகில் மொபைல் ஃபோனை காதில் வைத்தபடி, பரத் தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தான். அவன் குரலையே முதல் முதலாக இப்போதுதான் கேட்கிறாள் ராதிகா, இது என்ன விசித்திரமான பந்தம் என்று குழப்பமாக இருந்தது.
“இப்போதானேடா வந்தோம், அதுக்குள்ள எங்க போகணும் நோக்கு?” என்று கடிந்தார் பர்வதம். “ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா, போயிட்டு ரெண்டு மணிநேரத்துல வந்துடறேன்,” என்று கூறியவனிடம், “ஆத்துல கெஸ்ட் எல்லாரும் வந்துருக்கா, இந்த நேரத்துல கல்யாண மாப்பிள்ளை நீயே வெளில போனா நன்னா இருக்காது பரத், எதுவானாலும் நாளைக்கு பாத்துக்கோ, இப்போ ராதிகாவையும் அழைச்சுண்டு போயி ஹால்ல எல்லாரோடையும் ஒக்காரு,” என்று கட்டளையிட்டார்.
“அம்மா, ஒரு முக்கியமான டீல், அவா ஒரு வாரமா எனக்காக காத்துண்டு இருக்கா, இனிக்கும் போகலைன்னா பிஸினஸ் கைய விட்டுப் போயிடும், பெரிய டீல்மா, முன்னூறு கோடி ப்ராஜெக்ட், நான்தான் ரெண்டு மணிநேரத்துல வந்துடறேன்னு சொல்றேனே,” என்றான் பரத்.
“என்னோவோ போடா, நேக்குத் தெரியாது, உங்க அப்பாகிட்ட பேசிக்கோ, என்னை ஆள வீடு, நீ வா ராதிகா நாம போகலாம்,” என்று மருமகளைக் கையைப் பிடித்து சமையலறையை விட்டு வெளியே அழைத்து வந்தார் பர்வதம்.
ஹாலில் உறவினர்களின் மத்தியில் பேச்சுவார்த்தை கலகலத்துக் கொண்டிருந்தது. கீதாவும் நந்தினியும் ராதிகாவை தங்களுடன் அழைத்துக்கொண்டுவிட, பர்வதம் அங்கிருந்த சோபாவில் மரகதத்தின் அருகில் சென்று அமர்ந்துகொண்டார்.
அதற்குள் பரத் தன் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டான், அப்பாவுடன் கூடவே மாமனாரும் இருந்தபடியால் அனுமதி வாங்குவது இன்னும் எளிதாகிவிட்டது. அவர் மகள் காலடி எடுத்து வைத்த நேரம்தான், இவ்வளவு பெரிய டீல் கைகூடுகிறது என்று கூறி ஒரு டன் ஐஸை அவர் தலையில் இறக்கி, மாமனாரே மாப்பிள்ளைக்கு சிபாரிசு செய்து அனுமதியும் வாங்கிக்கொடுத்துவிட்டார். நினைத்ததை சாதித்துவிட்ட குஷியில் அவனும் உடை மாற்ற மாடிக்குச் சென்றுவிட்டான்.
மாடிக்குச் செல்லும் மாப்பிள்ளையையே பார்த்துக்கொண்டிருந்த மரகதத்தின் முகத்தில் தெரிந்த லேசான கவலை பர்வதத்தின் மனதைக் கிள்ளியது. ஆதூரமாக அவர் கையைப் பற்றிக்கொண்டார். “ஏன் மாமி, கவலையா இருக்கறாப்ல இருக்கே, என்னன்னு சொல்லுங்கோ, என்னால தீர்க்க முடியுமான்னு பாக்கறேன்” என்றார்.
“இல்லை சம்பந்திம்மா, மாப்பிள்ளை ஏதோ பட்டும் படாத மாதிரியா இருக்கறாப்ல தோண்றது, கலகலன்னே பேசலையே, ராதிகா கிட்டவும் பேசினா மாதிரி தெரியலை, அதுதான் யோசனையா இருக்கு’” என்று பட்டென்று மனதில் இருந்ததைப் போட்டு உடைத்தார் மரகதம்.
இதைக் கேட்டு தர்மசங்கடமாகிப் போனது பர்வதம் மாமிக்கு, “சரியான கல்லுளிமங்கன், எல்லார் கிட்டயும் நன்னா பேசினாதான் என்ன?, வரட்டும் அவனுக்கு இருக்கு இன்னிக்கி” என்று மனதில் நினைத்துக்கொண்டவர், “அது ஒண்ணுமில்லை மாமி, அவன் எப்போவுமே பேசறது கொஞ்சம் கம்மிதான், நானே அவன் வாயில இருந்து வார்த்தையைப் பிடுங்கணும், இப்போ எல்லாரும் வேற இருக்கேளா அதுதான் சைலண்டா இருக்கான், அவன் ஸ்வபாவமே கொஞ்சம் அப்படித்தான்,” நீங்கள்லாம் புதுசு பாத்தேளா, கொஞ்சம் சமயமாகும், அப்பறம் சகஜமாயிடுவான் பாருங்கோ,” என்று சப்பைக் கட்டு கட்டினார்.
அவர் கூறியது மரகத்தின் மனதிற்கு ஆறுதலாக இருந்ததோ என்னவோ, உடனே அடுத்த விஷயத்திற்குத் தாவினார் “அப்பறம், நீங்க இவ்ளோ இருக்கப்பட்டவான்னு நேக்கு தெரியாது, ஏதோ எடுத்தேன் கவுத்தேன்னு கல்யாணம் முடிஞ்சுட்டா மாதிரி இருக்கு, உங்க அந்தஸ்துக்கு எங்களால சீர் செனத்தி பண்ண முடியலைன்னாலும், ஏதோ எங்களால முடிஞ்சதை நாங்க பண்ணியிருக்கோம், நீங்க அதை தப்பா எடுத்துக்கக் கூடாது, அதோட இங்க வந்து உங்க ஆத்தை எல்லாம் பாத்தாவுட்டு மனசுக்குள்ள ஏதோ ஒரு கலக்கம், நீங்க இவ்வளோ வசதி படைச்சவா, உங்க அந்தஸ்துக்கு தகுந்தாப்ல பொண்ணு பார்க்காம எங்களை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல ஏன் பொண்ணு பார்த்து உங்கள் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேள், இந்த ஆத்துல ராதிகாவால பொருந்தமுடியுமான்னு மனசுல ஒரு பயம்,” என்றார்.
பர்வதம் மாமியின் முகத்தில் லேசான புன்னகை படர்ந்தது, “மாமி, அஞ்சு வருஷம் முன்னாடி வரைக்கும் எங்க வாழ்க்கையும் மிடில் கிளாஸ் வாழ்க்கைதான், ஏதோ இப்போ பரத்தும் ராகவனும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து, அவனோட அப்பாவோட சேர்ந்து கேட்டரிங் பிசினசையும் முன்னுக்கு கொண்டு வந்ததுனால இன்னிக்கு செல்வமும் செழிப்புமா இருக்கோம். அவனோட முதல் மனைவி தவறினதுக்கப்பறம் சிரிக்கறதையே மறந்துட்டான் என் குழந்தை, ராப் பகல்னு பாக்காம பிசினஸ் பின்னாலேயே திரிஞ்சுண்டு இருக்கான், என்னதான் பணம் வசதின்னு வந்துட்டாலும், இன்னும் மனசால அவன் அந்த மிடில் கிளாஸ் பிராம்மண பையன்தான், ஏன் நாங்க எல்லாருமே அவ்வளவுதான், நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்து அனுசரிச்சுண்டு வர்ற சாஸ்திர சம்பிரதாயங்களையோ நேம நிஷ்டைகளையோ இன்னிக்கும் மாத்திக்கலை நாங்க, அப்படி இருக்கறச்ச, நீங்க சொல்ற பணக்கார பொண்களால தான் இந்த ஆத்துல பொருந்த முடியாது, நம்ம ராதிகா பால்ல கலந்த சக்கரையாட்டம் எங்களோட கலந்துடுவா பாருங்கோ,” என்றார் ஆறுதலாக.
இப்படியாக இவர்களுடைய சம்பாஷனை இருக்க, அங்கே கீதாஞ்சலி, நந்தினி மற்றும் துளசியுடன் அமர்ந்திருந்த ராதிகா அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டபடி இருந்தாள், இதற்குள் மாடிக்குச் சென்ற பரத் உடை மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான், இங்க் ப்ளூ நிற சூட்டும், அதே நிற வெயிஸ்ட் கோட்டும், பளீரென்ற வெள்ளை நிற சட்டையும் அணிந்து, அலைபாயும் கூந்தலை பின்னோக்கி சீவி ஜெல் போட்டு அடக்கி இருந்தான், அவன் படி இறங்கி வரும் சப்தம் கேட்டு நிமிர்ந்தவள், ஒரு நிமிடம் மூச்சு விட மறந்து, அவனையே பார்த்தபடி இருந்துவிட்டாள், கச்சிதமாகப் பொருந்திய சூட்டும், அவன் நடையில் தெரிந்த ஆளுமையும், அவளை அப்படியே கட்டிப்போட்டு விட்டது, திருமணம் நிச்சயமானதிலிருந்து இன்று வரை அவனை சரியாக ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள், இப்பொழுதுதான் தன் கணவனை முதல்முறையாக முழுதாகப் பார்க்கிறாள், “பாக்க நன்னாத்தான் இருக்கார், ஆனா கொஞ்சம் மொகத்தை சிரிச்சாப்ல வெச்சுண்டா இன்னும் நன்னா இருக்கும்,” என்று நினைத்துக்கொண்டாள். கூடவே இவன் என் கணவன் என்னும் உரிமையுடன் கூடிய கர்வமும் லேசாக எட்டிப்பார்த்தது.
மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தவன், வாசலை நோக்கித் திரும்பும் முன், அவள் இருந்த பக்கமாகத் திரும்பி, “நந்து, ரிசப்ஷன் டிரஸ் பைனலைஸ் பண்ண டிசைனர் வருவா, கொஞ்சம் பாத்துக்கோ,” என்று கூறிவிட்டு, அவள் இருக்கிறாள் என்பதை கவனிக்காதவன் போல் சென்றுவிட்டான்.
சென்று வருகிறேன் என்னும்படியாக தன்னைப் பார்த்து தலையையாவது அசைப்பான் என்று எதிர்பார்த்த ராதிகாவிற்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது. அவனின் அந்த செய்கையால் ராதிகாவின் முகம் சுருங்கியதைக் கண்ட துளசி, “சின்ன மன்னி, அவன் அப்படித்தான், வர வர ரொம்ப முசுடா போயிட்டான், நீங்கதான் இப்போ வந்துட்டேளே, அவனுக்கு நன்னா வேப்பிலை அடிச்சு விடுங்கோ, அப்போவானும் அவன் மூஞ்சியில கொஞ்சம் சிரிப்பு வருதான்னு பாக்கலாம்,” என்றாள்.
அதற்குள், தனக்கு சோர்வாக இருப்பதாக நந்தினி ஓய்வெடுக்கச் சென்றாள், அவளுடனே கீதாஞ்சலியும் சென்றுவிட, துளசி, “வாங்கோ சின்ன மன்னி, உங்களுக்கு ஆத்தை சுத்திக் காட்டறேன்,” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். ராதிகாவிற்குமே அந்த அழகான வீட்டை முழுமையாகப் பார்க்கும் ஆசை இருந்ததால், மிகுந்த ஆவலுடன் அவளுடன் சென்றாள்.
வீடு என்று வாய் வார்த்தையாகச் சொல்லிவிட முடியாது, அரண்மனை போல இருந்தது. அக்ரஹாரத்து வீடு போல வடிவமைக்கப்பட்ட அந்த ஐந்து கட்டு மாளிகை. இப்படியெல்லாம் கூட வீடுகட்ட முடியுமா என்று ராதிகாவிற்கு வியப்பாக இருந்தது. வாசலின் இருபுறமும் இருந்த திண்ணையிலிருந்து பின்கட்டு வரை ஒவ்வொரு இடத்திலும் கலைநயம் தாண்டவமாடியது. வாசல் திண்ணையே வருவோரை சந்திக்க வரவேற்பறை போல சோஃபாக்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு என்பது போல இங்குள்ள ஆண்டிக் வகை வேலைப்பாடுகளும் சிற்பங்களும் வீட்டின் உள்ளழகிற்கு கட்டியம் கூறின.
பிறகு வந்த உள்திண்ணையில் ஒருபக்கம் இரண்டு விருந்தினர் அறைகளும் இன்னொரு பக்கம் ஒரு தேக்குமர ஊஞ்சலும் இருந்தன. சுவர்களில் அழகான தஞ்சாவூர் ஓவியங்களும், ஓடுகள் வேய்ந்த கூரையும் ஒரு இயற்கையான குளிர்ச்சியைத் தந்தது. ஊஞ்சலுக்கு அடுத்து வந்த முற்றத்தில் மையமாக ஒரு துளசி மாடத்தில் தளதளவென வளர்ந்து கொழித்திருந்த துளசிச் செடியும், முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் இன்னும் பலவகை பூச்செடிகளும் தொட்டிகளில் செழித்திருந்தன. வீட்டிற்குள்ளே ஒரு அழகான பூஞ்சோலையில் இருப்பது போல் இருந்தது ராதிகாவிற்கு.
தேக்குமரத் தூண்களும், இன்னும் பல மரவேலைப்பாடுகளும் பாரம்பரியமான அழகைக் கூட்டினாலும், முற்றத்தைச் சுற்றியிருந்த தாழ்வாரத்தில் வசதியான சோபாக்களும் மற்ற பர்னிச்சர்களும், வெளிச்சத்தை தடையில்லாமல் வீட்டுக்குள் கொண்டு வரும்படி சரியாக அமைக்கப்பட்ட ஜன்னல்களும் நவீனத்தைப் பறைசாற்றின. தாழ்வாரத்தின் மறுபுறம் ஒரு பெரிய ஆர்சினுள் நுழைந்தால் மூன்று படுக்கையறைகளும் மாடிப்படிகளும் இருந்தன. தாழ்வாரத்தின் இன்னொரு பக்கத்தில் ஆர்ச் அமைப்புடன் ஒரு ஃபிரெஞ்சு விண்டோவும் அதன் பின்னால் ஒரு கூடை ஊஞ்சலும் சில மூங்கில் நாற்காலிகளும் போடப்பட்ட ஒரு சிட் அவுட் இருந்தது. கூடவே மாடிப்படிகளும் இருந்தன. கிடைக்கும் இடத்தில் எல்லாம் இயன்ற அளவு செடிகளை வைத்து வீட்டையே சோலை போல ஆக்கியிருந்தார்கள்.
அடுத்து கட்டப்பட்டிருந்த ரேழி டைனிங் ரூமாகியிருந்தது. ஆளுயர ஜன்னல்கள் ஒருபக்கமும், அகலமான கிழக்கு பார்த்த பூஜையறை இன்னொரு பக்கமும், நடுவில் பதினைந்துபேர் அமர்ந்து உண்ணும்படியான டைனிங் டேபிளும் ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியது. அடுத்தகட்டு சமையல்கட்டு, பாரம்பரியமான வீட்டில் பாரம்பரிய சமையலறையை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தவளுக்கு ஒரு இனிய அதிர்ச்சி, உலகின் அதிநவீன சமையல் உபகரணங்களுடன் ஒரே சமயத்தில் இருபது பேர்வரை நின்று சமைக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி சூப்பர்மார்கெட் ரேஞ்சுக்கு ஒரு ஸ்டோர் ரூமும் இருந்தது.
வாசலில் இருந்து சமையல் கட்டுவரை பார்க்கவே அரைமணிநேரம் ஆகியிருந்தது. சமையலறையில் இருந்து பின்கதவைத் திறந்துகொண்டு இறங்கினால், பாத்திரம் தேய்க்க, வாஷிங் மிஷின் வைக்க பின்கட்டு இருந்தது. அதற்கும் பின்னால் திட்டமிட்டு அமைக்கப்பட்ட கிச்சன் கார்டன், மோட்டார் அறை என்று வீட்டின் ஒவ்வொரு அணுவையும் பார்த்து பார்த்து கட்டியிருந்தார்கள்.
வீட்டைச் சுற்றி இருந்த வெளிப்புறத் தாழ்வாரத்தில் அங்கங்கே மூங்கில் நாற்காலிகளும், சோபாக்களும் போடப்பட்டு, சுற்றிலும் நன்றாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்துடன் ஒரு இதமான உணர்வைத் தந்தன. தோட்டத்தில் ஜாதிமல்லி பந்தலும், நித்யமல்லி பந்தலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் மா, கொய்யா, தென்னை, கொன்றை, மாதுளை, வேப்ப மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. இங்கு கழிக்கப்படும் மாலை நேரங்கள் மிகவும் இனிமையாக இருக்கும் என்று தோன்றியது ராதிகாவிற்கு.
மாடிப்பகுதி நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு இளைய தலைமுறையினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
கீழிருந்த பாரம்பரிய அலங்காரத்தின் சாயல் மாடியிலும் இருந்தாலும் அவரவர் பகுதியை அவரவர் விருப்பம் போல வடிவமைத்துக்கொள்ளும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்ததால், ஒவ்வொருவரின் பகுதியும் அவர்களின் ரசனைகளையும் குணாதிசயங்களையும் வெளிக் கொணரும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க ராதிகாவிற்கு மலைப்பாக இருந்தது. இவை எல்லாவற்றையும் காட்டியபடி துளசி வீட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் விலாவரியாக விமர்சனங்களையும் விவரங்களையும் அள்ளி வழங்கியபடியே வந்தாள். மூன்றாவது மாடியில் ஒரு 15 – 20 பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு மினி ஹோம் தியேட்டரும், அதற்கடுத்து ஒரு எல்லா வசதிகளும் பொருந்திய ஜிம்மும் இருந்தது. மீதி இடம் முழுவதும் மொட்டை மாடியாக விடப்பட்டு டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் ஒவ்வொரு மூலையும் பார்த்து பார்த்து மிகுந்த ரசனையோடு அலங்கரிக்கப்பட்டிருந்து. “எல்லாமே பரத் அண்ணாவோட பிளான்தான், அப்பாவுக்கு சென்னையில வீடு கட்டறதுக்கு இஷ்டம் இருக்கலை, அண்ணாதான், அப்பாவை ஒத்துக்கவெச்சு, கும்பகோணம் ஆத்தைப் போலவே கட்டிக்கலாம்னு அப்பாவை கன்வின்ஸ் பண்ணினான்.” என்று கூறியபடி, இரண்டாவது மாடியில் அவர்கள் பார்க்காமல் விட்டுச் சென்ற அறைக்கு அழைத்துச் சென்றாள், “இதுதான், பரத் அண்ணாவோட ரூம், அதாவது இன்னியிலருந்து உங்களோட ரூம், த லயன்ஸ் டென்” என்று கண்களை உருட்டினாள். பின்னர் ஏதோ மஹாராஜாவின் அறையைத் திறப்பதுபோன்ற பாவனையுடன் இரண்டு கதவுகளையும் திறந்து, “வெல்கம், மன்னி உங்களோட ரூமுக்கு” என்று இடை வரை குனிந்து வணங்கும் பாவனயில் வரவேற்றாள்.
தன் வாழ்க்கையைத் தொடங்கப்போகும் அறை என்னும் ஒரு சந்தோஷக் குறுகுறுப்புடன் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ராதிகா, அப்பொழுதுதான் பரத் தயாராகிச் சென்றிருந்ததால், அறை முழுவதும் அவனுடைய பெர்ஃபியூம் வாசனை வீசிக் கொண்டிருந்தது. மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை, இடது பக்கத்தில் வாக் இன் வார்ட்ரோபுடன் கூடிய குளியலறை, வலது பக்கத்தில் ஜப்பானிய மாடலில் ஸ்லைடிங் டோருடன் கூடிய படுக்கையறை இருந்தது. நடுவில் இருக்கும் கூடம், ஒரு பக்கம் ஆபிஸ் ரூமாகவும், மற்றொரு பக்கம் வரவேற்பறை போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அறையை ரசித்துக் கொண்டே இருந்தவள், சில நிமிடங்களாக துளசி மௌனமாகிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள், அவளுடைய மௌனத்திற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு திரும்பியவள், துளசியின் பார்வை எதிரில் உள்ள சுவற்றில் நிலைக்குத்தி நின்றிருந்ததைக் கண்டு தனது பார்வையை அத்திசையில் செலுத்தினாள், அங்கே…ஒரு 75 இன்ச் டிவி சைசில் ஒரு பெண்ணின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மடிசார் உடுத்தியிருந்த அந்தப் பெண் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து வெட்கப்படும் பாவனையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாள். கண்களில் குறும்பும் விளையாட்டும் நிரம்பியிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி, துளசி, “இவாதான் லக்ஷ்மி மன்னி, பரத் அண்ணாவோட வைஃப்” என்றாள் பரிதாபமாக.






Nice