arrow_back
தித்திக்குதே அத்தியாயம் இருபத்து மூன்று
தித்திக்குதே chevron_right பகுதி 23 / 26

அத்தியாயம் இருபத்து மூன்று

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சித்ராவின் பெற்றவரிடமிருந்து செல்பேசியை வாங்கிக்கொண்டு தனித்துச் சென்ற கீர்த்திவாசனின் முகத்தில் நிலவிய திருப்தி, அந்த இருவரின் மனதை ஆற்றுப்படுத்தியது. நல்ல வேளையாக இந்த முட்டாள் பெண் செய்த காரியத்தை மருமகன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற நிம்மதி அவர்களது மனதில் சூழ்ந்தது. செல்பேசியை முத்துவேலிடம் கொடுத்தவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்துல சித்ரா வந்துடுவா மாமா. நீங்க எதுவும் அவளைத் திட்டாதீங்க. சின்னப் பொண்ணு… போகப் போகப் புரிஞ்சு நடந்துக்குவா” என்று அவளுக்கு வக்காலத்து வாங்கியவனை விழி விரியப் பார்த்தார் முத்துவேல். தனக்கு இப்படி ஒரு மருமகனா? இல்லை, தனக்கு வாய்த்த மகன் என்று எண்ணிக் கொண்டார்.

பெருமித உணர்வு அவரது முகத்தில் பிரதிபலிக்க, அதே உணர்வு வேணிக்கும் இருந்தது. ஆனாலும் ஓரத்தில் தன் மருமகனின் குண விசேஷங்களை மகள் கூறியிருந்தது வேறு மனதை அறுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் காலம் காலமாக அவருக்குப் போதிக்கப்பட்டிருந்தவை எல்லாம் நினைவுக்கு வந்து அவரது சிந்தனையைத் தடை செய்ய, மகளுக்காகக் காத்திருந்தார்.

மகள் வந்தவுடன் அவளுக்குக் கூற வேண்டிய அறிவுரைகள் ஆயிரம் இருந்தன. கணவனை அவன் எப்படி இருந்தாலும் அனுசரித்துப் போக வேண்டிய அவசியத்தைத் தான் கற்றுத் தந்தது போதவில்லையோ என்று வேணிக்குத் தோன்றியது. அவரைப் பொறுத்தவரை அனைத்தையும் விட உயர்வானது குடும்ப மரியாதை; அதைக் காப்பது அந்த குடும்பத்தின் பெண்கள். இதை மறந்து செயல்படுவது மன்னிக்க முடியாத பெரும் தவறு.

மெலிதான காலடிகளோடு கதவைத் திறக்கும் சப்தம் கேட்க, மூவரும் திரும்பிப் பார்த்தனர். சித்ரா இருண்ட முகத்தோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னே சக்திவேலும் நந்தினியும்.

சக்தி கொலைவெறிப் பார்வையோடு கீர்த்திவாசனை முறைத்தபடி நின்று கொண்டிருக்க, நந்தினி சக்தியின் கையைப் பற்றியபடி நின்று கொண்டிருந்தாள்.

“அங்கேயே நில்லு!”

முத்துவேல் இடியைப் போல முழங்க, ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது. ஆனாலும் அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்ட சித்ரா, அவரை ஏளனப் பார்வை பார்த்தபடி உள்ளே வந்தாள். வந்த பெற்றோரை ‘வாவ்’ என்றும் அழைக்கவில்லை. அவளது தந்தைக்கு அவளது மௌனம் கர்வமாக, திமிராகத் தோன்றியது என்றால், வேணி அவளது முகத்தைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்; அதில் கிடைத்த பதில் அவருக்கே உவகை தரக் கூடியதாக இல்லை.

“உள்ள வாங்கண்ணா… வா நந்தினி” அவர்களை மட்டும் சித்ரா அழைக்க,

“இப்போ இந்தப் பிச்சைகாரனை உள்ள கூப்பிட்டா நாங்க வெளிய போக வேண்டியிருக்கும்” முத்துவேல் கடினமான முகத்தோடு மிரட்ட,

“போறவங்க போகலாம். யாரையும் இருக்கச் சொல்லலை” அவளது தந்தை மீதான கோபம் வார்த்தைகளால் வெளிப்பட ஆரம்பித்தது.

“என்ன சித்ரா இப்படிப் பேசற? உன்னைப் பெத்தவர்கிட்ட பேசறதை நினைப்புல வெச்சுக்கோ” வேணி மகளைக் கண்டிக்க, அவரையும் முறைத்துப் பார்த்தாள் சித்ரா.

அவளுக்குத் தன் தமக்கையின் நினைவு வந்தது. தகப்பனாரைப் பார்க்கும்போது ‘மனிதர்களா இவர்கள்’ என்ற உணர்வு ஏற்படுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

“எனக்கு எந்த நினைப்பும் தேவையில்லை. என்னைப் பேச வைக்காத. போறதுன்னா இந்தாளோட சேர்ந்து நீயும் போ” ஒரு முடிவெடுத்து விட்ட தொனியில் அவள் பேச, முத்துவேல் சித்ராவை விட்டுச் சக்திவேலை முறைக்க ஆரம்பித்தார்.

“ஏன் இவன் சொல்லிக் கொடுத்துக் கூட்டிட்டு வந்தானா? உன் புருஷன் இங்க இருக்காங்கறதை ஞாபகம் வெச்சுக்கோ” கீர்த்திவாசனைத் காட்டி முத்துவேல் வார்த்தையில் விஷத்தைத் தடவி வீச,

நடந்து கொண்டிருந்தவற்றைச் சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் கீர்த்திவாசன். அவனுக்கு வேலை வைக்காமல் இருவருமாகவே பேசிக்கொண்டிருந்ததில், அவனுள் இருந்த மிருகம் என்றுமில்லாத பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது.

அவனை வெறித்த பார்வை பார்த்த சித்ராவுக்கு, அவனுடைய இயல்புக்கு காரணம் தேவையில்லை என்று தோன்றியது. சைக்கோவின் செயல்களுக்குக் காரணம் கற்பிக்க முடியாதே! அவன் வெளியில் தெரியாத மனநிலை பிறழ்ந்த பைத்தியக்காரன் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

அவர்களிடம் எதைச் சொல்வது? சொன்னாலும் தான் நடப்பது என்ன? ஒன்றுமில்லையே! பின் எதற்காக இவர்களிடம் கூற வேண்டும்? மனதுக்குள் கசப்பாக நினைத்துக் கொண்டாள்.

“சொல்லச் சொல்லக் கேட்காம இந்த பஞ்ச பராரி வீட்ல போய் எதுக்கு உட்கார்ந்த?” அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு முன்னே வந்தவரைச் சில அடிகள் தூரத்திலேயே நிறுத்தியது அவளது பார்வை.

அதுவரை நடப்பைக் கசந்த மனதோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, முத்துவேலை எதிர்த்துப் பேச முன்னே செல்ல, சக்திவேல் கையைப் பிடித்துத் தடுத்தான். அவனைப் பொறுத்தவரையில் அவனது இலக்கு கீர்த்திவாசன் மட்டுமே. அவனோ நல்லவனைப் போல வேடமிட்டு அமர்ந்திருக்க, அவன் எப்போது வார்த்தைகளில் சிக்கப் போகிறான் என்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தான்.

கீர்த்திவாசன் மிரட்டியதை நந்தினியிடம் கூறியபோது, சித்ராவை இங்கு அனுப்ப அவள் சற்றும் சம்மதிக்கவில்லை. கோப மிகுதியில் கைகள் நடுங்க, கண்களில் கண்ணீர் சூழ, சித்ராவின் கைகளைப் பற்றிக்கொண்டு ‘போகாதே’ என்று தடுத்த நந்தினியையும், கல் போல மாறிவிட்ட சக்தியையும் சமாதானப்படுத்தி விட்டு வருவதற்குள் மனதில் பல புயல்கள் கடந்து போயின. அப்போதும் தனியே விடவில்லை இருவரும்.

அவளைப் பொறுத்தவரை பெற்றோர் வீட்டில் இருக்கும்போது அவனது லீலைகளைக் காட்ட மாட்டான் என்பதை மிகவும் திடமாகவே நம்பினாள். அவர்கள் செல்வதற்கு உள்ளாக ஏதாவது காரணம் கிடைக்காமலா போய்விடும் என்று நந்தினியை ஆற்றுப்படுத்தி விட்டு வந்திருந்தாள். தந்தைக்கும் சக்திக்கும் ஆகவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், சக்தியிடம் அவளது தந்தை பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்கக் கூடாது என்பதற்காகவே அவள் தன் இயல்பிலிருந்து மாறிப் பேசினாள்.

ஆனாலும் அவளால் நடக்கவிருப்பதைத் தடுக்கத்தான் முடியுமா?

மெளனமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கீர்த்திவாசன் மெல்ல எழுந்து சித்ராவிடம் வந்தான். அதுவரை அவனது பார்வை பெரும்பான்மையான நேரத்தில் நந்தினியிடமே லயித்துக்கொண்டிருக்கிறது என்பதை சித்ரா கவனித்திருந்தாள். அருகில் வந்தவன், மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்பது போல,

“ஏய்! உன்னோட பிரெண்டா இவ?” என்று நந்தினியைக் காட்டிக் கேட்க, அவனை வெறுமையான பார்வை பார்த்தாள் சித்ரா. அவனோ நிறுத்தாமல்,

“ச்சே… செம கட்டை! என்னா லிப்ஸ்… என்னா ஹிப்ஸ்” என்று அடுத்தடுத்து அவளைப் பார்த்தவாறு வர்ணிக்க ஆரம்பிக்க, சித்ராவுக்கு அனல் மேல் நிற்பது போல் இருந்தது. இதை வெளிப்படையாகக் கூறவும் அவளால் முடியவில்லை. நந்தினியின் மரியாதை கெடுவதோடு சக்தியின் முகத்திலும் அவளால் விழிக்க முடியாதே!

“நந்தினி! நீ கிளம்பு” கீர்த்திவாசனை அருவருத்த பார்வை பார்த்தபடி அவள் சற்றுச் சப்தமாகக் கூற,

“சித்ரா! ஏன் அவங்களைக் கிளம்பச் சொல்ற? தே ஆர் ஸ்பெஷல்… உனக்கு மட்டும் இல்லை, எனக்கும் கூடத்தான்” என்று அவன் கூறியது சித்ராவுக்குப் புரிந்தது போலச் சக்திக்கும் புரிந்தது. ரத்தம் கொதித்தது.

“கீர்த்திவாசன்! ஒரு நிமிஷம் வர்றீங்களா? தனியா பேசணும்” தேனொழுகச் சக்தி அழைக்க, முத்துவேல் முறைத்தார்.

“ஏன்டா? என் மருமகன் கிட்ட என்ன பேசணும்? உன் வேலையைப் பார்த்துட்டு கிளம்பற வழியைப் பாரு” அவரது வார்த்தைகளைச் சற்றும் கண்டுகொள்ளாத சக்தி, கீர்த்திவாசனைப் பார்க்க, அவனோ மாமனாரைக் கண்டுகொள்ளாமல் சக்தியிடம் வந்தான்.

அருகிலிருந்து நந்தினியைப் பார்த்தபோது அவனுக்குள் தடதடத்தது. வெங்காயச் சருகு நிறத்தில் அணிந்திருந்த சேலை அவளது நிறத்தைக் கன்னாபின்னாவெனத் தூக்கிப் பிடிக்க, அவளது கண்களில் இருந்து பாதங்கள் வரை அங்கம் அங்கமாகப் போதையோடு விழுங்கிக் கொண்டிருந்தான். அவனது வெறித்த பார்வை நந்தினிக்கு அருவருப்பைத் தந்தது; சக்தியிடம் இன்னும் அதிகமாக ஒண்டினாள்.

“ஹாய் சக்திவேல்! நான் கீர்த்திவாசன்” என்று ஒன்றும் அறியாதவன் போலக் கை கொடுக்க, பற்றி வந்தது மூவருக்கும். அவனது பார்வையின் கோணத்தை அறிந்த சக்தி, நந்தினியைப் பார்த்து,

“நந்து! நீ போடா. வண்டிகிட்ட வெயிட் பண்ணு. சார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்” ஒன்றும் கண்டுகொள்ளாதவன் போல அவளை அனுப்பி விட்டு, அவனோடு பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்தான்.

கதவை மூடியவன்,

“சொல்லுங்க சக்திவேல். என்ன தனியா பேசணும்?” என்று கேட்க,

“சித்ராவை விட்டு விலகிரு” உணர்வுகளைக் காட்டாமல் அவனிடம் பேசினான்.

“விலகி?”

“டைவர்ஸ் கொடுத்துடு”

“ஓகே டைவர்ஸ் கொடுக்கறேன். அப்படீன்னா உங்க ஒய்பை என்கிட்டே அனுப்பி வைக்கறீங்களா சக்திவேல்?” கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல் அவன் கேட்க, சக்திக்கு ரத்தம் கொதித்தது!

கதவு மூடியிருந்ததை உறுதி செய்துகொண்டவன், முகத்திலேயே ஒரு குத்து விட, கீர்த்திவாசன் தடுமாறி கீழே விழுந்தான்.

“எவ்வளவு தைரியம் இருந்தா இந்தக் கேள்வியைக் கேட்ப? நாயே! உனக்கு அவ்வளவு திமிரா?” அவனது கழுத்தில் கால் வைத்து அழுத்தப் போக,

“பின்ன எதுக்கு என் பொண்டாட்டிய ஓட்டிக்கிட்டுப் போகணும்ன்னு நினைக்கற?” அவனது காலை வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டு அவன் கேட்க,

“நாதேறி நாயே! கட்டிகிட்டவளை ஒழுங்கா வச்சு குடும்பம் நடத்தத் தெரியலை. உனக்குக் கல்யாணம் ஒரு கேடா?” ஆவேசமாக அவன் கேட்க,

“நான் என் பொண்டாட்டிய என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அதைக் கேட்க நீ யாரு?” என்று கூறிவிட்டு மிகக் கேவலமான வார்த்தைகளை வீச ஆரம்பிக்க, சக்தி அவனை அடித்துத் துவைக்க ஆரம்பித்தான்.

இருக்கிற கோபத்தை எல்லாம் அவன் காட்ட ஆரம்பிக்க, கீர்த்திவாசன் அடி தாங்காமல் கத்த ஆரம்பித்தான். அவனது சப்தம் கேட்டு முத்துவேல் அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, சக்திவேலின் கோபம் அவரிடம் திரும்பியது.

“டேய்! ஏன்டா இவரை அடிக்கற? உன்னைக் கேட்க யாருமில்லைன்னு நினைப்பா?” என்று அவசரமாகத் தடுக்க, அவனுக்கு இருந்த கோபத்தில் அவரது கழுத்தைப் பிடித்தான் சக்தி.

“இந்த அரிப்பெடுத்த சொறிநாய காப்பாத்துனது போதும். உன் பொண்ணைக் கொஞ்சம் பாரு. அந்தப் பாவப்பட்ட பொண்ணு என்னய்யா பாவம் பண்ணுச்சு? உனக்குப் பொண்ணாப் பொறந்ததை விட? த்தூ… நீயெல்லாம் ஒரு அப்பன்? உன் வயசுக்காக விடறேன். உன் மருமகனைக் கண்டிச்சு வை முத்துவேல்! இல்லைன்னா வெட்டிட்டு ஜெயிலுக்குப் போகக் கூடத் தயங்க மாட்டேன். ஜாக்கிரதை!”

ஆவேசமாகக் கூறிவிட்டு அவரைத் தள்ளி விட்டு வெளியே செல்ல, கீர்த்திவாசனுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மிருகம் மிக பயங்கரமாக விழிக்க ஆரம்பித்தது; சித்ராவை குற்றுயிரும் குலையுயிருமாக நிறுத்தியது.

***

மெளனமாகச் சமையலறையில் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள் நந்தினி. சக்திவேலின் கோப முகத்தைப் பார்த்ததிலிருந்து அவனிடம் பேசவே பயமாக இருந்தது அவளுக்கு. தோழியின் துயரம் வேறு அவளது மனதை மிகவும் பாதித்திருக்க, அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவளது பெற்றோர் இருக்கும்போது வேலையைக் காட்ட மாட்டான் என்னும் தற்காலிக நிம்மதியில் அவளது மனம் அவர்களது பிரச்சனையை ஆராய்ந்து கொண்டிருந்தது.

நந்தினி சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்க, சக்திவேல் எதுவும் பேசாமல் எப்போதும் போல வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தான். ஓரக்கண்ணில் பார்த்த அவனது கல் போன்ற முகம் வேறு அவளது மனதில் கிலியைப் பரவச் செய்ய, பேசாமல் மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டு தனது இருப்பை உணர்த்தும் விதத்தில் கனைத்தாள்.

“க்கூம்…” அவளது சப்தத்தைக் கேட்டு நிமிர்ந்தவன் மீண்டும் அவனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் எதிலும் பாதிக்கப்படாதவனாக.

“சா… சாரி” சப்பாத்தி மாவை உருட்டிக்கொண்டே தயங்கித் தயங்கி அவள் கூற,

நிமிர்ந்து முறைத்துப் பார்த்தவன் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு கையைக் கழுவிக்கொண்டு அவன் போக்கில் செல்ல, அவசரமாக நந்தினியும் கையைக் கழுவிவிட்டு அவன் பின்னே கிட்டத்தட்ட ஓடினாள். ஓடிச் சென்று அவன் முன்னே சென்றவள் வழியை மறித்துக்கொண்டு,

“அதான் சாரி சொல்றேன்ல. ப்ளீஸ் மாமா” என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கெஞ்ச, அவனோ எதற்கும் அசைய மாட்டேன் என்று அவளைத் தள்ளி விட்டுப் படுக்கையறைக்குச் சென்று உடையை மாற்றத் துவங்கினான் வெளியில் செல்லும் பொருட்டு!

வேறு புறம் திரும்பிக்கொண்ட நந்தினி,

“ப்ளீஸ் பேசுங்க மாமா. நான் தான் சாரி சொல்லிட்டேன்ல” என்று விடாமல் கெஞ்சிக் கொண்டிருக்க, அவளைச் சற்றும் பாராமல் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்க, நின்று கொண்டு வழியைக் கைகளால் மறித்துக்கொண்ட நந்தினி,

“முடியாது! நான் விட மாட்டேன்”

சிறுகுழந்தையாக அடம் பிடிக்கலானாள். அவளை முறைத்துப் பார்த்தவன் அவளை வலுக்கட்டாயமாகத் தள்ளி நிறுத்திவிட்டுப் போக முயல, அவனது கையைப் பிடித்தாள். கண்களில் கண்ணீரோடு கெஞ்சலும் சேர்ந்து கொள்ள, அந்தச் சூழ்நிலை அவனுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது.

தனது செயல்களால் அவனை வலிக்கச் செய்கிறோம் என்பதை அறியாமலேயே அவனைச் சமாதானப்படுத்தப் பார்க்க, அவளது கணவனோ சற்றும் இறங்கி வர மாட்டேன் என்று உறுதியாக இருந்தான். அவனது பிடிவாதத்தைப் பார்த்தவளுக்கு மனம் சோர்ந்தது; தெய்வா கூறியது போல இவன் மிகுந்த பிடிவாதக்காரன்.

‘அவள் அறியாமல் அவனைச் சந்தேகப்பட்டுவிட்டாள் தான் இல்லையென்று கூறவில்லையே. இல்லை என்பதை விளக்கியவுடன் அவள் தான் புரிந்து கொண்டாளே. அதற்கும் மேல் அவனிடம் மன்னிப்பும் கேட்டு விட்டாளே. இதற்கும் மேல் என்ன எதிர்பார்க்கிறான்’ என்று புரியாமல் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தவள் முடிவாக நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“இப்போ என்னதான் மாமா நான் பண்ணணும்ன்னு சொல்றீங்க? உங்களைச் சந்தேகப்பட்டது தப்புதான். அதுக்குத் தான் சாரி கேட்டுட்டேன். ஆனா நடு வீட்டுல சித்ராவை ஹக் பண்ணிட்டு நின்னுட்டு இருந்தா திடீர்ன்னு பார்க்கற எனக்கு எப்படி இருக்கும்?” அவளது நியாயத்தை அவனிடம் கேட்க, அவள் முன் நிமிர்ந்து நின்று கைகளைக் கட்டிக்கொண்டு,

“உன்னை அந்த மாதிரி நிலைல பார்த்து இருந்தாலும் நான் கண்டிப்பா சந்தேகப்பட்டு இருக்க மாட்டேனே நந்தினி?” கூறிய கத்தி போன்ற அவனது சொற்கள் அவளைத் தாக்க வேண்டிய இடத்தில் சென்று தாக்க, அதை அவளும் ஆமோதித்தாள்!

“ஆமா… கண்டிப்பா. நீங்க சந்தேகப்பட்டு இருக்க மாட்டீங்க. அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு மாமா. ஒன்னு நான் உங்களை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். அது உங்களுக்கு நல்லாவே தெரியும்” என்று கூறி இடைவெளி விட்டவள், “ரெண்டாவது நான் தான் உங்களை லவ் பண்றேன்”

குரல் உடையும் நிலையில் அவள் கூற, முகம் தக்காளிப் பழமாகச் சிவந்து கொள்ள, சட்டென்று கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அவள் கூறுவது புரியாமல், “என்ன சொல்ற?” என்று சக்தி கேட்க,

“ஆமா! லவ் பண்ணா பொறாமை வரும், கோபம் வரும், எரிச்சல் வரும். எனக்கு கண்டிப்பா வரும் மாமா. எனக்கு மட்டும் தான் வரும்” என்று கண்களில் நீர் வழிய அவள் கூற, சக்திக்கு இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று மலைப்பாக இருந்தது.

அவள் ‘நீ என்னைக் காதலிக்கவில்லை’ என்று நேராகக் கூறவில்லை, ‘என்னைக் காதலி’ என்றும் கூறவில்லை. ஆனாலும் அவளது மன அவஸ்தை புரிந்தது அவனுக்கு. அதுவரை எதையும் வெளிப்படுத்தவில்லையே!

“ஆக மொத்தம் நான் உன்னை காதலிக்கலை இல்லையா? இதைத்தானே சொல்ல வர்ற?” என்று கூர்மையான பார்வையோடு கேட்க, அவள் தலை நிமிரவில்லை.

“சொன்னா தான் காதலா நந்தினி? மனசால உணர்வது கிடையாதா? இல்ல கொஞ்சம் கூட உணரவே இல்லையா? இன்னைக்கு அந்த கீர்த்திவாசன் உன்னை அசிங்கமா பார்த்தப்போ அவனை கொலை செய்யற வெறி வந்துதே, அது கூட உனக்கு புரியலை இல்லையா?” அவனது வலிகளை வார்த்தைகளில் கொட்டி விட்டு வெளியே போக எத்தனிக்க, லட்சம் பூக்கள் மேலே கொட்டியது போல இருந்தது நந்தினிக்கு. ஒரு நிமிடம் புரியாத பார்வை பார்த்தவள் அவசரமாக அவனது வழியை மறித்தாள்.

“மாமா… முழுசா சொல்லிட்டுப் போங்க. என் மரமண்டைக்கு ஏறணும் இல்லையா?” புன்னகை முகமாக அவள் கேட்க,

“எனக்கு அந்த மாதிரி எல்லாம் சொல்லிப் பழக்கமில்லை” அவளைப் பார்க்காமல் வேறு புறம் பார்த்துக்கொண்டு அவன் கூற,

“ம்ம்ம்… நாங்கள்லாம் நாலு பேர்கிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டுத் தான் சொல்றமாக்கும்?” நந்தினி முறைக்க,

“நான் ஒன்னும் டீனேஜ் பையனில்லை லவ் பண்றேன் லவ் பண்றேன்னு டமாரம் அடிக்க” அவனும் முறைக்க,

“பொண்டாட்டிகிட்ட சொல்றது கூட டமாரமா? அட ராமா! நீங்க சொல்லாம எனக்கு எப்பிடி தெரியும் மாமா? சொல்லவே மாட்டீங்களாம்… ஆனா நானா தெரிஞ்சுக்கணுமாம்? அந்த அளவு அறிவு எனக்கு வேலை செய்யுமா என்ன? இதெல்லாம் உங்களுக்கே நல்லா இரு…” என்று விடாமல் பட்டாசாகப் பொரிய ஆரம்பித்தவளைத் தன்னருகே இழுத்தவன் அவளைப் பேச விடாமல் அதரங்களை மூடினான் தன் உதடுகளால்!

முதலில் அவள் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து விலகப் பார்க்க, அவனது இறுக்கமான அணைப்பு அவளை நகர விடாமல் செய்தது.

உடல் நடுங்க அவனுள் மூழ்கத் துவங்கினாள். வெகு நேரம் கழித்து அவளை விடுவித்து விட்டு,

“எனக்கு வார்த்தைல சொல்லவெல்லாம் தெரியாது புரியுதா?” என்று கூறிவிட்டு மீண்டும் வெளியே போக எத்தனிக்க, மனம் படபடக்க இதழ்கள் துடிக்க அவள் நின்ற கோலம் அவனை என்னவோ செய்ய, அருகில் வந்து அவளது முகத்தைக் கைகளால் ஏந்தி,

“சும்மா பிடிக்கவே பிடிக்காம கல்யாணமெல்லாம் பண்ண முடியாதுடி. அதை இன்னமும் நீ புரிஞ்சுக்கலையா?” அவன் கிசுகிசுப்பாகக் கேட்டது அவளை மொத்தமாக வீழ்த்தியது.

“என் கிட்ட எதாவது சொன்னீங்களா?” அவனது கண்களைப் பார்த்து அவள் கேட்க,

“உன் படிப்பு, உன் வயசு, உன்னோட சிறுபிள்ளைத்தனம்… நிஜமாவே இதையெல்லாம் நினைச்சு கோபம் வந்தது நந்து. ஆனா பத்து வயசு பொண்ணா கொழுக் மொழுக்குன்னு உன்னை முதல் முதலா பார்த்தது நினைவுக்கு வந்து கோபத்தை எல்லாம் பின்னால தள்ளி விட்டுடுச்சு” அவனது மனதை முதல் முதலாக மறையாமல் தெரிவித்துக் கொண்டிருக்க,

“ஆனா நான் உங்களை சித்ராவுக்கே விட்டு கொடுத்திருந்தா இப்போ அவளுக்கு இந்தக் கஷ்டம் இல்லைல?” அவளுடைய மனதில் அழுத்திக் கொண்டிருந்ததை அவள் வாய்விட்டு கேட்டுவிட்டாள்.

“பல்லைக் கழட்டிடுவேன் ராஸ்கல்! நான் என்ன பொம்மையா நீங்க ரெண்டு பேரும் உருட்டி விளையாட? இங்க பார் நந்தினி… உன்னை எப்போவுமே பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும். என் மனசை அடக்கத்தான் உன்னை ‘அண்ணா’ன்னு கூப்பிடுன்னு திட்டுவேன் புரியுதா? ஆனா நீயா சொல்லலைன்னா நான் என்னிக்குமே சொல்லிருக்க மாட்டேன். அதையும் புரிஞ்சுக்கோ. அந்தச் சூழ்நிலை வேணும்னா கஷ்டமா இருக்கலாமே தவிர, நான் ஆசைப்பட்ட பொண்ணு நீ ஒருத்திதான். போதுமா?” கோபமாகப் பேசி முடித்தவனை ஆச்சரியம் தாங்க முடியாமல் பார்த்தாள்.

அவளால் அந்தச் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. இத்தனை காலமாகக் கல்லென நினைத்தவன், இன்று பூவாய் உதிர்ந்ததில் அவள் நிலை குலைந்து போனாள். மிகுந்த சந்தோஷத்தில் கண்களில் நீர் வழியத் தள்ளிப் போக முயன்றவளை, விடமாட்டேன் என்பது போலப் பின்னால் இருந்து வளைத்து இழுத்துத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். அந்தச் சூடான அணைப்பு அவளுக்குப் பெரும் பாதுகாப்பைத் தர, விழியோரம் வழிந்த கண்ணீர் அவனது கரங்களில் பட்டுத் தெறித்தது.

அவனது மூச்சுக் காற்று அவளது பிடரியில் பட்டுச் சுட, மெல்ல அவளது காது மடல்களில் இதழ் பதித்தான். அந்த முதல் தீண்டலில் நந்தினியின் உடல் சிலிர்த்து அடங்கியது.

“நந்து…” கிசுகிசுப்பாக அவனழைக்க, “ம்ம்ம்…” தன்னை மறந்து ம்மிட்டாள்.

கைகள் அதன்போக்கில் அவளது மேனியில் ஊர்வலம் போக, அவனது மூளை வேலைநிறுத்தம் செய்யத் துவங்கியிருந்தது. அவனது கட்டுப்பாடுகள் தளர துவங்கியது. எல்லைகளை ஆர்வமாக மீறத் துவங்கினான்!

நந்தினியோ மயங்கிக் கிறங்கிக் கொண்டிருந்தாள். இதுவரை படிக்காத பாடங்களில், முதல் பாடத்தை சக்தி சொல்லித் தந்து கொண்டிருந்தான்.

அவளைத் தன்புறம் திருப்பி இடையில் கை வைத்துத் தன்னோடு இழுத்து,

“அன்னைக்கு ஒரு விஷயம் சொன்னியே ஞாபகம் இருக்கா?” அவளது கண்ணோடு கண் பார்த்து அவன் கேட்க,

“எது?” உடல் முழுக்க வெட்க சிவப்பை பூசிக் கொண்டாள் அவள்!

“மூணு மாசம்ன்னு…” கிசுகிசுப்பான அவனது குரலிலிருந்த மயக்கம் அவளையும் தீண்ட கூச்சமாக நெளிந்தாள்.

“மாமா…” கிறக்கமாக சிணுங்கினாள்.

“அந்த மேட்டர் என்னன்னாவது உனக்கு தெரியுமா?” குறும்பாக அவன் கிசுகிசுக்க,

“ஹய்யோ சீய்ய்…” என்று அவள் சிணுங்க, அதுவே அவனுக்கு அழைப்பை விடுக்க, அவளது இதழ்களை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.

இருவருமே அந்த முத்த சுவைக்குள் கரைகாண முடியாமல் மூழ்கி கொண்டிருக்க, ஓரமாக இருந்த அவனது செல்பேசி அழைத்தது.

மெல்ல அவளை விடுவித்தவனின் கண்களில் சிறு ஏமாற்றம்.

நந்தினிக்கு மூச்சு வாங்கியது. அவளுள் காதல் பெருவெள்ளம். முகம் வெட்க சிவப்பில் மின்ன, அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டவள், அழைத்துக் கொண்டிருந்த செல்பேசியை கண்களால் காட்டி எடுக்க சொன்னாள்.

நந்தினியை பார்த்து பெருமூச்சு விட்டபடியே மனமே இல்லாமல் செல்பேசியை எடுத்தான்.

மறுபறத்தில் சித்ரா. அவனது உணர்வுகளெல்லாம் வடிந்தது. மனதுக்குள் சட்டென கலவரம் சூழ்ந்தது.பேசியை ஆன் செய்து காதுக்கு கொடுத்தான்.

ஹீனமான குரலில், “அண்ணா…” சித்ராவின் அழைப்பு காதில் விழ, அதிர்ந்து பேசியையும் நந்தினியையும் மாற்றி மாற்றி நோக்கினான் சக்தி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் இருபத்து நான்கு

“ஒரு நிமிஷம்” கூர்மையாக முத்துவேல் அழைக்க, திரும்பிப் பார்த்தான் கீர்த்திவாசன்.அவரது முகத்தில் குழப்ப ரேகைகள். முத்துவேலைப் பொறுத்தவரை குடும்ப கௌரவம், சாதி வெறி என்ற தளைகளில் சிக்கியிருந்தாரே தவிர, தான் பார்த்துத் தன் பெண்ணைத் தனது சாதியில் திருமணம் செய்விக்க வேண்டும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்