arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பதினேழு
தித்திக்குதே chevron_right பகுதி 17 / 26

அத்தியாயம் பதினேழு

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“வல்லவா என்னை வெல்லவா

கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா

வல்லவா என்னை வெல்லவா

உன்னை கண்டதே வரம் அல்லவா

பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே

உன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே”

தொலைக்காட்சியில் பாடல் சப்தமாக ஒலித்துக் கொண்டிருக்க, சமையலறையில் அதற்கேற்றார் போலக் கையில் கரண்டியை வைத்துக் கொண்டு அபிநயம் பிடித்து, அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு சமையல் செய்து கொண்டிருந்தாள் நந்தினி. முகம் குறும்பையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்திருக்க, விட்டால் முழு நீள நடனத்தையே ஆடி விடுபவள் போல யாருமில்லா வீட்டில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தாள்.

முன்தினம் இருவருமாகச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அளந்து வைத்தது போன்ற பொருட்கள். படுக்கையறைக்குக் கட்டிலும் மெத்தையும் மட்டும்; துணிகளை வைக்க அறையில் இருந்த செல்ப் போதுமென்று கூறிவிட, ஹாலுக்கோ ஒரு டிவி நான்கு சேர்கள் மட்டுமே. சமைக்க என்று இழுத்தவளை முறைத்துக் கொண்டு,

“நீ என்ன இப்போ சமையல் பண்ணிப் போடத்தான் வந்தியா? ஒழுங்கா படிக்கற வேலைய பாரு” எப்போதும் போல அவனது ஆஸ்தான வசனத்தை எடுத்துவிட,

“சமைக்க எவ்ளோ நேரம் மாமா ஆகிடப் போகுது? மொத்தமாவே ஒரு மணி நேரம் கூட ஆகாது. எத்தனை நாளைக்கு வெளிய வாங்கியே சாப்பிட்டுட்டு இருக்கறது? எனக்கெல்லாம் நாக்கே செத்துப் போச்சு”

நந்தினிக்கு இனியும் சக்தி வெளியே சாப்பிடுவதா என்ற கவலை. உடல்நிலை கெட்டு விடுமே என்ற கவலையில் அவள் புலம்புவது போல ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டே நடிக்க, யோசித்தான் சக்தி.

அவனுக்குமே வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறான்? வாழ்க்கையில் முதன்முறையாகத் தனது வீட்டில் தன் மனைவி சமைப்பது என்பது அவனுக்குமே மகிழ்ச்சி தருவதாகத்தான் இருந்தது; ஆனால் இதில் ஆழ்ந்து படிப்பை விட்டுவிடுவாளோ என்று பயந்தான்.

“ப்ளீஸ் மாமா… ப்ளீஸ்” மூக்கைச் சுருக்கிக் கொண்டு அவனைக் காக்காய் பிடிக்க ஆரம்பித்தவளைக் கண்டு அவனால் புன்னகைக்கத்தான் முடிந்தது. எப்படியாவது சாதித்து விடுகிறாள் திருடி! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

“சரி… என்ன வேணும்ன்னு சொல்லு. ஆனா எதுவுமே அளவாத்தான் இருக்கணும். உன் வீட்டுக்காரன் பர்ஸ் ஒன்னும் அவ்ளோ வெய்ட் கிடையாது பார்த்துக்கோ” வேண்டுமென்றே கறாராகச் சொல்வது போலக் காட்டிக்கொண்டாலும் சிறு புன்னகை அவனது இதழோரம் மலர்ந்து இருந்தது.

“பார்க்கறதா? நான் அதையேத்தான மாமா பண்ணிட்டு இருக்கேன். ஆனா படியத்தான் மாட்டேங்குது” என்று கண்ணடித்து விட்டு மளிகைச் சாமான்களை வாங்க என்று அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தப்பித்துப் போக, அவள் கூறியது அவனுக்கு ஒரு நிமிடம் கழித்தே அர்த்தம் புரிந்தது. மென் நகை பூத்தது அவளது குறும்பை நினைத்து! நடுவில் பிரச்சனைகளால் தொலைந்து போயிருந்த அவளது பழைய குறும்பு மீண்டும் திரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அவனிடம் தொனதொனத்துக்கொண்டே சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை எடுத்தவளை மனதில் பாராட்டிக்கொண்டான். தேவைக்கு அதிகமாகச் சிறு பொருளைக் கூட அவள் தொடவில்லை. வாங்கிய பாத்திரங்களும் கூட அளவான ஆனால் தரமான பொருட்கள் தான். சற்று விலை உயர்வாக இருந்தாலும் தரமான பொருட்களையே வாங்க,

“நந்தினி… அந்த இட்லி பாத்திரம் விலை கொஞ்சம் குறைச்சலா இருக்கு. அதையே எடுக்கலாமே” வேண்டுமென்றே அவளிடம் விட்டுப் பார்க்க,

“ஒரு தடவை வாங்கினாலும் உருப்படியா வாங்கணும். வருஷ கணக்குல நாம வெச்சுப் புழங்க வேண்டியது. அது பாருங்க சுத்தமா வெய்ட் இல்ல. ஆறு மாசத்துல ஓட்டை விழுந்துடும் மாமா” என்று அதற்கு அவள் விளக்கமளித்த போது மனதுக்குள் பாராட்டிக்கொண்டே,

“பொண்ணு தேறிடும் போல இருக்கே!” குறும்பாக மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

சிறிய டேபிள் டாப் கிரைண்டர், மிக்சி என்று மிகவும் அளவாக வாங்கிக் கொண்டு வந்தவர்களுக்கு, அன்று முழுவதும் வீட்டில் பொருட்களைப் பிரித்துப் போடுவதும் சிற்சில வேலைகளைச் செய்வதுமாகவே கழிய, அலைந்து திரிந்ததும் பயணக் களைப்புமாக இருவருக்குமே தூக்கம் கண்களை அழுத்தியது.

முதல் ஆளாகக் கட்டிலை நந்தினி பிடித்துக் கொள்ள, குளித்துவிட்டு வந்த சக்திக்கு எங்குப் படுப்பது என்ற சந்தேகம் தோன்ற, அறையின் நீள அகலத்தை அளக்கத் துவங்கினான். கட்டிலில் படுக்கலாமா அல்லது கீழே படுப்பதா? குழப்பமான குழப்பத்தில் அவன் குழம்பிக் கொண்டு நின்றிருக்க, ஓரக்கண்ணால் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தவளின் முகத்தில் குறும்பு தாண்டவமாடியது.

“ஹலோ… என்ன நின்னுட்டு இருக்கீங்க?” அதிகாரமாக அவள் கேட்க, அவனுக்கு இருந்த தூக்கத்தில் அவளைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டுத் தான் கட்டிலை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“ம்ம்ம்… நீயே கட்டிலைப் பிடிச்சுகிட்டா நான் எங்கடி படுப்பேன்?” சண்டியராக நின்று கொண்டு அவன் கேட்க, அவன் புறம் திரும்பிப் படுத்து ஒரு கையால் தலைக்கு முட்டு கொடுத்து, கள்ளத்தனமான குரலில்,

“உங்களை ரேப் பண்ற ஐடியாவெல்லாம் எனக்கு இல்ல மிஸ்டர் சக்திவேல். சப்போஸ் ஐடியா எதுவும் வந்துச்சுன்னா உங்ககிட்ட கண்டிப்பா சொல்லிடறேன். அதுவரைக்கும் இங்கயே படுத்துக்கோங்க” கண்ணடித்துவிட்டு அவளுக்குப் பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்ட,

“அடிங்க” என்று அடிப்பது போலப் பாவனை செய்துவிட்டு அருகில் படுத்தான் அவளது சதி வேலைகளைப் பற்றி அறியாமல்! பெரிய கட்டிலாகத்தான் வாங்கியதே; ஆனாலும் ஒரே படுக்கையில் தன்னோடு இன்னொரு பெண்ணா என்கிற கூச்சம் அவனை ஆட்கொண்டிருக்க,

“வாலு… சரியான வாலு… இதையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? என்னம்மா பேசுது!” என்று நினைத்துக் கொண்டு புன்னகையோடு உறங்க முயல,

“ஏங்க” கெஞ்சலான குரலில் நந்தினி அழைக்க,

“என்னங்க?” என்று அவளைப் போலவே அழைத்து அவள் புறம் திரும்பிப் படுத்தான்.

“இன்னும் ரெண்டு தலைகானி வாங்கியிருக்கலாம்ல” இவள் எதற்கு இப்படிக் கேட்கிறாள் என்று புரியாமல் அவளைப் பார்த்து,

“ஏன்?” என்று கேட்க,

“இல்ல… எனக்குத் தூங்கும் போது அம்மா மேல கால் போட்டுத் தூங்கணும். அப்படியே பழகிட்டேன்” சிறுபிள்ளையாக அவனிடம் நந்தினி கூற, சக்திக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“ஏய்… அதுக்கு என்னை என்னடி பண்ணச் சொல்ற?” அதிர்ந்து கேட்டது அவளுக்குச் சிரிப்பை வரவைக்க,

“நீங்க ஒன்னும் பண்ண வேணாம் மாமா. ஒன்னும் பண்ணவும் மாட்டீங்க” என்று கூறி கள்ளகுறும்புத்தனமாகச் சிரித்தவள் “உங்க மேல காலை மட்டும் போட்டுகிட்டா” அவளது குரலில் இருந்த குறும்பை உணர்ந்தவன்,

“உன் வாயை அடக்கியே வைக்க மாட்ட நந்தினி” கோபமாகச் கூறுவது போலத் தோன்றினாலும் அவனால் கோபத்தை இழுத்து வைத்துத் காட்டத் தெரியவில்லை. அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளைப் பார்ப்பதே போதையைத் தந்து கொண்டிருந்தது எனும் போது, அவளே வலிய வந்து இதுபோல அவனை வம்பிழுத்துக்கொண்டிருப்பது அவனை என்னென்னவோ செய்யத் திண்டாடிக் கொண்டிருந்தான்.

“நீங்கதான் அடக்கி வைங்களேன் மாமா என் வாய!” விடுவேனா என்று அவனை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி. கண்களில் அவனைப் பொத்தி வைத்திருந்த கரை காணாத காதல் இருக்க, உதடுகள் தேனில் ஊறிய ஆரஞ்சுச் சுளையாக மின்னித் கொண்டிருக்க, நைட்டியில் அவளது வரிவடிவமோ அவனது மனதில் மோகத்தீயைப்பற்ற வைத்துக் கொண்டிருந்தது.

“இப்படியே பேசிட்டு இரு. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கிட்ட வாங்கி கட்டப் போற” பாதுகாப்பாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு அவன் கூற,

“எப்போ மாமா?” அநியாயத்திற்கு ஹஸ்கியான குரலில் அவள் கேட்க, விட்டால் எழுந்து ஓடி விடலாம் போல அவனுக்குத் தோன்றியது. ராட்சசி பக்கத்தில் படுத்திருப்பதே படு பயங்கரமான கொடுமை என்றால், இப்படிக் பேசினால் தன்னால் தாக்குபிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் வந்தது சக்திக்கு!

“இப்போ என்னதான்டி உனக்கு வேணும்?” கடுப்பாக அவன் கேட்டாலாவது அடங்குவாளா என்ற எதிர்பார்ப்பும் பொய்க்க,

“எனக்குக் காலைப் போட்டுக்கணும்” அவளும் கறாராகக் கூறுவது போல நடிக்க, தான் தலைக்கு வைத்திருந்த தலையணையை எடுத்து அவளிடம் தூக்கி எறிந்தவன்,

“புடிச்சுக்கோ. இதுல காலைப் போடுவியோ இல்ல தலையை போடுவியோ எதையோ பண்ணித்தொலை என்னை விடு” என்று குப்புறப் படுத்துக் கொண்டவனுக்கு,

“இந்தத் தலைகானி எல்லாம் எனக்குப் பத்தாது சொல்லிட்டேன். நைட் அங்க கை பட்டுச்சு இங்க கால் பட்டுச்சுன்னு சொல்லக் கூடாது ஆக்கும்” என்று அவள் நொடிப்பது காதில் விழுந்தாலும் நிமிர்ந்து பார்த்தால்தானே?

நேற்றைய இரவினை நினைத்துச் சிரிப்பு மலர்ந்தது நந்தினிக்கு.

“நந்து… கலக்கறடி… யூ ஆர் கிரேட்… இப்படித்தான் நம்ம கருவாயனை டீஸ் பண்ணணும். பக்கி ஓவரா சீன் போட்டுட்டு இருக்கு” தனது தோளைத் தட்டிக் கொடுத்துத் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள் நந்தினி.

தொலைக்காட்சியில் வல்லவன் பாடல் முடிந்து, “கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு” என்ற பாடல் தொடங்க, சமைத்துக்கொண்டே பாடலுக்கேற்றவாறு இடுப்பை வளைத்து நெளித்து ஆடிக் கொண்டே அடுப்பில் கிண்டிக் கொண்டிருக்க,

“உன்னை பொத்தி வெச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்புத்தான். ஊரறிய பெத்துக்கணும் புள்ளை பத்து கருப்புதான்ன்ன்ன்” பாடிக்கொண்டே திரும்பியவளுக்கு லைன் அப்படியே ஜெர்க்காகப் பாடலை நிறுத்தினாள்.

சமையலறை வாசலில் சக்தி கைகளைக் கட்டிக் கொண்டு முறைத்தபடி நின்றிருந்தான். அவன் பார்வையில் அனல் பறந்தது.

“எப்போ வந்தீங்க?” தலைகுனிந்து கொண்டு அவள் கேட்க,

“ம்ம்ம்… கச்சேரிய ஆரம்பிச்சு உனக்கு நீயே செல்பா தட்டி கொடுத்துகிட்டியே அப்போவே வந்துட்டேன்” முறைத்தபடி அவன் கூறவும்,

அய்யயோ இவனை கருவாயனென்று கூறியதெல்லாம் அவன் காதில் விழுந்துவிட்டதா? என்று மனதில் பயம் எழுந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல்,

“சோ வாட்? எனக்கு யாரும் அவார்ட் கொடுக்க ஆளில்லை. அதனால தான் செல்ப் சர்விஸ் பண்ண வேண்டியதா இருக்கு” ஒன்றுமே நடவாதது போல் கூறிவிட்டு அடுப்பைக் கவனிக்கத் திரும்ப முயல, அவளது கையை முறுக்கிப் பின்னால் கட்டினான் சக்தி.

“ஆஆஆ ஐயோ… விடுங்க மாமா” என்று அவள் குதிக்க,

“ஏன்டி கருவாயனா நான்? உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும்?” முறுக்கிய கையை இன்னமும் முறுக்க,

“இப்படி மிரட்டினா மட்டும் கருவாயனை வெள்ளையன்னா சொல்ல முடியும்? ஆஆஆ… வலிக்குதுடா பிசாசு” அவளோ குதிக்க, விடாமல் முறுக்கினான்.

“இப்போ டா வேறயா? உன்னையெல்லாம் பாவம் சின்ன பொண்ணுன்னு நினைக்கவே கூடாதுடி” சற்று முரட்டுத்தனமாக இழுத்து முறுக்கியதில், வேண்டுமென்றே அவள் நெருக்கமாகவே வர, இருவருக்கும் இடையேயான தூரம் என்பது சிலபல சென்டிமீட்டர்கள் என்று மாற, அவன் கை தளர்ந்தது.

குக்கர் விசிலடித்தது! அவளிடமிருந்து மீட்டுக்கொண்டவன் அவளை முறைத்தவாறே,

“சமைச்சதெல்லாம் போதும். ப்ரிலிம்ஸுக்கு இன்னும் ஒன் மந்த் தான் இருக்கு. ஒழுங்கா வந்து படி” அவளது தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு விரட்ட, தலையைத் தடவியவாறே சிறுபிள்ளை போல,

“வர்றேன்” காலை உதைத்துக்கொண்டு கூற, சமையலறையிலிருந்து வெளியே வந்தவன் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளிவிட்டான்.

“ஷப்பா…”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினெட்டு

இரவு பத்து மணிக்கும் கோயம்பேடு மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடைகளுக்குச் சரக்கிறக்கும் நேரமாதலால் ஒவ்வொருவருக்கும் வேலையிருக்க, அந்த இடமே தூக்கத்தைத் தள்ளி வைத்து உழைத்துக் கொண்டிருந்தது. கோயம்பேடு உழைப்பாளர்களின் கோட்டை! உழைப்பிருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பி வருபவர்களின் சொர்க்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்