arrow_back
பரமபதம் அத்தியாயம் 1
பரமபதம் chevron_right பகுதி 1 / 54

அத்தியாயம் 1

visibility 795
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (13 மதிப்பீடுகள்)
பகிர்

விழிமின் எழுமின் குறிக்கோள் அடையும் வரை

நில்லாது செல்மின்!

-விவேகானந்தர்

 

 

பத்மவிலாசம்

சென்னையின் சப்தங்கள் சந்தடிகள் இல்லாத போட் கிளப்பில் அமைதியாக அழுத்தமாக வீற்று இருந்தது அந்த அழகான நந்தவனம்!

எழுவதற்கு சோம்பல்படும் குழந்தையாகச் சிணுங்கி கொண்டே சூரியன் எழ, இன்னமும் விடியலின் குளிர் மிச்சமிருக்க, பூவில் படர்ந்த பனித்துளி சில்லென்று தெறித்து கீழே விழுந்தது!

ஆடம்பரங்கள் அதிகமாக இல்லாத மிக நவீன வசதிகளை உள்ளடிக்கிய தொட்டி கட்டு வீடு.

சுற்றிலும் கண்களையும் மனதையும் வருடும் தோட்டம், உயர்ந்த மரங்கள், கிணறு, புறாக்கள், இது சென்னையா என்று நம்மை எண்ண வைக்கும்!

அதிகாலையை வரவேற்கும் துளசி மாடமும் சுப்ரபாதமும் நாசியைத் தடவி செல்லும் சாம்பிராணியின் மணத்தோடு சேர்ந்த பில்டர் காபியின் மணமும் சேர்த்து மயக்க,

“ஹாய் மா, ஹாய் பா…”

இளம் புன்னகையை முகத்தில் ஏந்தி சரசரவென்று மாடிப்படிகளிலிருந்து இறங்கினான் சத்யப்ரகாஷ்!

வயது இருபத்தி ஏழு. ஆறடி உயர கம்பீர கிரேக்க சிற்பம். இதமான தமிழ்நாட்டு நிறம். இயல்பில் சுறுசுறு துறுதுறு. ராஜசேகர், பத்மினி தேவியின் ஆத்மார்த்தமான காதலில் விளைந்த ஒரே தவப்புதல்வன்!

ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் கட்டிட வடிவமைப்பாளன். ஸ்டான்போர்டில் முதுநிலை தொழில் மேலாண்மை பயின்ற தெளிவு, துணிச்சல் ப்ளஸ் தைரியம்! வாழ்க்கையில் சந்தோஷத்தையும் வசதிகளையும் மட்டுமே நுகர வைக்கப்பட்டுத் துன்பமென்கிற சாயலே படியாமல் இருப்பவன்!

வார இறுதிகளை வரையறையோடு நட்பு கூட்டத்துடன் கழிக்க விரும்பும் இயல்பான இளம் தலைமுறை சென்னைவாசி. தந்தையின் தொழிலைத் தொடர தனித்தன்மையை விரும்பும் மனம் இடம் கொடாததால் தனக்கொரு பாதையை வகுத்துக் கொண்டுதனியாகக் கட்டிட வடிவமைப்பைத் திறம்படச் செய்து தனக்கென முத்திரை பதித்துத் தனது துறையில் முன்னேறிக் கொண்டிருப்பவன்!

அவனது இன்னொரு தகுதிஅடுத்த மாதத்தில் திருச் சுபர்ணாவாகப் போவது! பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவனுக்காகக் காத்து கொண்டிருக்கிறாள் மிக அழகான சுபர்ணா!

“வாவ்… வாசமே தூக்குதே… என்னம்மா டிபன்?” முழுக்கை போலோ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்தபடி ரவுன்ட் நெக் காலரில் கூலரை சொருகியபடி வந்தவனைப் பார்த்து,

“உனக்குப் பிடிச்ச இடியாப்பம் சொதி கண்ணா… வா சாப்பிடலாம்…” பத்மினி புன்னகைத்துக் கொண்டே

“ஹை சூப்பர்… தேங்க்ஸ்மா…” என்று அவரைப் பின்புறம் கழுத்தோடு கட்டி அணைத்து வாசம் பிடித்து,

“சொதி வாசத்தை விட அம்மா வாசம் தான் சூப்பர்…” புன்னகையோடு அமர்ந்தான்! சத்யனை பெருமித புன்னகையோடு பார்த்துக் கொண்டே கட்டியிருந்த கழுத்து டையைச் சரி செய்தபடி உணவு மேஜைக்கு வந்தார் ராஜசேகர்.

“ஹலோ… யார் என்னோட லைன் ஆப் கண்ட்ரோல க்ராஸ் பண்றது…” என்று கேட்க,

“லைன் ஆப் கண்ட்ரோலா… அப்பா… அம்மா இஸ் மைன்… எங்க அம்மாவ நான் கட்டிபிடிப்பேன் முத்தா குடுப்பேன்… இதைக் கேக்க நீங்க யார்… முதல்ல அதைச் சொல்லுங்க…” என்று கேலியாகக் கூறிவிட்டு சிரிக்க,

“அப்படிச் சொல்லு கண்ணா…” என்று அவனுக்கு ஹை பை கொடுத்தார் பத்மினி!

“எல்லாம் நேரம் தான்… சுபிக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சுக்கோடா தம்பி… இல்லைன்னாஎன் மருமக பொண்ணு கோவிச்சுக்கப் போறா…”

“யாரா இருந்தா என்ன… இதே தான் பதில்… ஓகேவா மிஸ்டர் ராஜசேகர்…” என்று கண்ணடிக்க, அவனை அடிக்கச் செல்லமாகக் கையை ஓங்கினார் பத்மினி!

“டேய்… அப்பாவையா பேர் சொல்லிக் கூப்பிடற… உன்னை…” பதிலுக்குச் சத்யன் இரு கைகளையும் உயர்த்தி,

“ஹலோ ஹலோ… பத்மினி தேவியாரே… எங்க அப்பாவ நான் பேர் சொல்லிக் கூப்பிடாம பக்கத்து வீட்டுல இருந்தா வந்து கூப்பிடுவாங்க. பேர் சொல்லும் பிள்ளை. இது தெரியாதா? தெளிவா இருங்க பத்மினி தேவியாரே…” என்று கண்ணடித்து விட்டுச் சிரித்தான்!

“அடப்பாவி…” என்று இருவரும் மலைத்து நின்றனர்!

“உன்னை எப்படித்தான் சமாளிக்கப் போறாளோ சுபி?”

“போம்மா… அவளை நான் எப்படிச் சமாளிக்கறதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன்… நீங்க வேற…” என்று அவன் சோகமாகக் கூறவும் வெடித்துச் சிரித்தார் ராஜசேகர்!

“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு தம்பி. எங்களை நீ எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ற?! அதுக்குதான்…”

“சேகர்… அது வல்லவன் இல்ல வல்லவி…” சிரித்துக் கொண்டே திருத்தினார் பத்மினி!

“ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்ல. ஒரு சின்னப் பையனைக் கல்யாணங்கற பேர்ல அரை லூஸ் கிட்ட மாட்டி விட்டுட்டுச் சிரிப்பு வேண்டி இருக்கா…” மீண்டும் சோக கீதம் வாசிக்க,

“பப்பிப் பாயிண்ட்ட நோட் பண்ணிக்கோ… அரை லூசாம்… பின்னால யூஸ் ஆகும்…” சேகர் சிரித்தார்!

“ஆமா ஆமா… உனக்கு எவ்ளோ தைரியம் சத்யா…”

“எனக்கு இல்லாத தைரியம் அவனுக்காச்சும் இருக்கே பப்பி. அது உங்க பெண்களுக்கே பிடிக்காதே. ஹ்ம்ம் எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா தாயே சரணம்ன்னு அவங்க கிட்ட விழுந்து தானே ஆகணும். நம்ம விதி அதுதானே…” சத்யனிடம் ராஜசேகர் பெருமூச்சு விட,

“ஹலோ… இங்க என்ன என்னை வெச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா ரெண்டு பேரும்… பிச்சு புடுவேன் பிச்சு… சின்னப் புள்ளை தனமால்ல இருக்கு… யார்கிட்ட… கைப்புள்ள களத்துல இறங்கினா எத்தனை தல உருளும்ன்னு தெரியாது…” வடிவேலுவின் குரலில் சத்யன் மிரட்ட,

“சரி எத்தனை தல கைப்புள்ள?” பத்மினி சிரித்துக் கொண்டே கேட்க,

“அதான் தெரியாதுன்னு சொல்றோம்ல…” வடிவேலுவின் குரலிலேயே பதில் தர, கேட்டதும் மற்ற இருவருக்கும் சிரிப்புப் பொங்கியது!

“சரி கைப்புள்ள… இதை விடு… அப்படி என்னத்தான் சுபி சொல்லி உன்னை மிரட்டுனா… அதையாவது சொல்லு…” பத்மினி அப்பாவித்தனமாகக் கேட்க,

“பப்பி… இது என்ன… அவங்க ரெண்டு பேர்குள்ள ஏதாவது சம்திங் சம்திங்கா இருக்கும்… இதைப் போய் நீ கேட்பியா…” நக்கலாக ராஜசேகர் சிரிக்க, இருவரையும் முறைப்பதாகப் பாவனைச் செய்து,

“ம்ம்ம் நத்திங், கல்யாணத்துக்கு முன்னாடி டேட்டிங் போலாமான்னு கேட்டா… அவ்ளோதான்…” மிகத்தீவிரமாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டே சாதரணமாக அவன் கூற, ராஜசேகருக்கு புரை ஏறியது! பத்மினியும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தவர் அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு அதிர்ச்சியை மறைத்துச் சிரித்தார்!

“சேகர், இந்தப் பொண்ணு இன்னும் விளையாட்டுத்தனமாவே இருக்கா பாருங்க!” சாதரணமாகச் சொல்வது போலச் சொல்லிவிட்டு மீண்டும் பரிமாற ஆரம்பித்தார்! எங்கே தன் மகன் அந்தப் பெண்ணைத் தவறாக எடுத்துக் கொண்டு விட்டானோ என்ற தவிப்பு அந்த நேரத்தில் அந்தத் தாய்க்கு!

மும்பையைச் சேர்ந்த சுபர்ணா, ராஜசேகரின் நண்பர் சீதாராமனின், மும்பை கலாசாரத்தில் ஊறி திளைத்த மிகுந்த வசதி படைத்த பெற்றோருக்கு ஒரே மகள்! மும்பையின் முக்கியமான பைனான்சியல் சர்விஸ் நிறுவனத்தின் வாரிசு! அவர்களது பைனான்சியல் சர்விஸ் மட்டுமல்லாது சென்னையிலும் பல்வேறு துறைகளில் கால் பதித்த வெற்றிகரமான நிறுவனம்!

விஷயம் என்னவென்றால் இது இரு குடும்பங்களின் வசதிக்கான திருமணம். மேரேஜ் ஆப் கன்வீனியன்ஸ்! கன்வீனியன்ஸ் இருக்கும் ஆனால் காதல் இருக்குமா என்ற கேள்விக்கெல்லாம் இடம் கொடாமல்சம்மதித்து இருந்தான் சத்யப்ரகாஷ்! அவனைப் பொறுத்தவரை இந்தத் திருமணம் எதையும் மாற்றபோவதில்லை. அவனது வாழ்க்கைமுறை. வார இறுதிகள். நண்பர்கள். தோழிகள் என்று எதையும்! சுபர்ணாவும் இதையே தான் எதிர்பார்ப்பாள் என்பதும் அவன் அறிந்ததே! இது தவறு இது சரி என்று ஆராய்ந்து பாராமல் எல்லாவற்றையும் இயல்பாக ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் அவனது தந்தை!

தொழிலில் என்று வரும்போது அவனது சுதந்திர உணர்வை ரசித்து அவனுக்கே விட்டுக் கொடுத்த ராஜசேகர் அவனிடம் கேட்டது சுபர்ணாவை மணந்து கொள்ள வேண்டித்தான்! தந்தை எதையோ மனதில் கொண்டு தான் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு அதற்கு மேல் அவரிடம் கேள்விகள் கேட்டு ஆராய மனம் இடம் கொடுக்கவில்லை மேலும் அவனுக்குக் கேள்வி கேட்குமளவு எந்தக் கமிட்மென்ட்டும்இல்லை!

“ஹ ஹ ஆமாம் பப்பி. தம்பி… உனக்கேத்த ஆள் தான். இன்னும் என்னன்ன வெடிகுண்டு தூக்கி போடப் போறாளோ… நல்லா தயாரா இருந்துக்கோ…”

அவரும் சமாளித்தார்! உணவை முடித்து வாஷ்பேஷினில் கையைக் கழுவியவன், பத்மினியின் சேலை தலைப்பைக் கொண்டு கையைத் துடைத்தான்! வெளியே செல்வதற்குத் தயாராகச் சோஃபாவில் அமர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷூவை அணிய ஆரம்பித்தான்!

“தம்பி… இன்னைக்குக் கொஞ்சம் என் கூட வர முடியுமா?” பக்கத்தில் வந்தமர்ந்த ராஜசேகர் கேட்க,

“என்னப்பா விஷயம்…” கேஷுவலாகவே கேட்டான் சத்யன்!

“ஒன்னுமில்லடா கண்ணா… ஜஸ்ட் தெரிஞ்சுக்கோ… நம்ம ஆபீஸ் பத்தி!” எளிதாகச் சொல்வது போல இருந்த அவரது குரலில் இனம் தெரியாத உணர்வு கலந்து இருந்ததை உணர்ந்தாலும் அதை ஆராய முயலவில்லை சத்யன்!

“அப்பா இப்போதைக்கு உங்க வழில நான் வரபோறது இல்ல… என்னைச் சுதந்திரமா கொஞ்ச நாள் விடுங்கப்பா. கண்டிப்பா ஒரு நாள் உங்க ஆபீஸ்க்கு நானும் வந்து தான் ஆகணும். அதுவரை நான் ஜாலியா என்னோட வேலைய மட்டும் பார்க்கறேனே ப்ளீஸ்…” என்று கெஞ்சுதலாக அவன் கூறவும் அவர் முகம் சோர்ந்தது… ஆனாலும் தோளுக்கு மேல் வளர்ந்த தன் மகனை வலுகட்டாயமாக வரச் சொல்ல அவரால் முடியவில்லை!

“ஓகே தம்பி… உன்னால எப்போ முடியுதோ… அப்போ அப்போ கொஞ்சம் வாயேன்…” அவனிடம் காட்டிக்கொள்ள விரும்பாத அவருடைய முகச்சோர்வை உணர்ந்தவனுக்கு மனம் சூம்பியது. அதற்க்கு மேல் மறுத்துப் பேச அவன் மனம் இடம் தரவில்லை. அவரது சோர்வை மாற்ற வேண்டி,

“ஓகேப்பா. இன்னைக்கு நான் மும்பை போறேன். அங்க ஒரு கிளையன்ட் மீட்டிங் இருக்கு. அதை முடிச்சுட்டு ப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டு அப்புறமா சுபிய பார்த்துட்டு நாளைக்கு நைட் ரிடர்ன் ஆகிடுவேன்ப்பா. முடிஞ்சா நெக்ஸ்ட் வீக் உங்க ஆபீஸ் வரேன் ஓகே வா…” என்று கேட்டபோது முகம் பிரகாசமானது அவனது தந்தைக்கு!

“ஓகே கண்ணா… தேங்க்ஸ்டா… அப்புறம் நீ மும்பை வர்றதா சுபிட்ட சொல்லிட்டியா? முதல் முறையா தனியா போய்ப் பார்க்கப் போறியே…”

“ஹஹா இல்ல… சஸ்பென்ஸ்… தீடீர்ன்னு போய் நின்னு ஷாக் குடுக்கலாம்ன்னு சொல்லலப்பா. நீங்க யாரும் சொல்லிடாதீங்க…” என்று சத்யன் கண்ணடித்துத் தம்ஸ் அப் காட்ட,

ராஜசேகரோடு பத்மினியும் சிரித்துக் கொண்டே கட்டை விரலை உயர்த்திக் காட்டி,

“சந்தோஷமா போயிட்டு வா சத்யா… ஜாக்றதையா ட்ராவல் பண்ணு!”

முகம் முழுக்கப் பூரிப்போடு விடை கொடுத்தார் பத்மினி. சத்யனை வழியனுப்பி விட்டு வந்து அமர்ந்த இருவருக்குள்ளும் ஒரே கேள்வி!

“நான் தப்புப் பண்றனா பப்பிம்மா?” குழப்பமாக ராஜசேகர் கேட்க அதற்குப் பத்மினியால் பதில் தர இயலவில்லை. ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார்!

“சொல்லுடா கண்ணம்மா…” அந்த அழைப்பு பத்மினியை நெகிழ வைத்தது. தனிமையில் இருக்கும்போது மனதுக்கு நெருக்கமான வேளைகளில் ராஜசேகர் தன் மனைவியை அழைக்கும் முறை அது!

“சொல்ல முடியல சேகர். ஒரு வேளை நம்ம சுயநலத்துக்காகச் சத்யாவைஅடகு வைக்கறமோன்னு எனக்குத் தோணுது. ஆனா நமக்கும் வேற வழி இல்லையேம்மா. அவனோட முகத்துல இருக்கற சந்தோஷம் வாழ்நாள் முழுக்க நீடிக்கனும். அது மட்டும் தான் எனக்கு இந்த நிமிஷத்துல தோன்றுது” அவரோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு சேகரின் கையை இறுக்கமாகத் தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தார்.

அந்த அழுத்தத்தில் அவரது உடல் நடுக்கம் குறைவதாக ராஜசேகருக்கு தோன்றியது!

ஆண்களுக்கான மன உறுதி என்பது பொதுவாக ஒரு மாயத்தோற்றம். கல்லுக்குண்டான உறுதி இருப்பது போலத் தோன்றினாலும் சிறு அதிர்ச்சிக்கும் நிலைதடுமாறுவது. அதன் உறுதித்தன்மையை உறுதி செய்யபின்னால் கட்டாயம் ஒரு பெண்இருந்தே தீர வேண்டும்.

தூண்டுகோலாகப் பெண் அதாவது சக்தி அமையும் பட்சத்தில் மட்டுமேஅவர்களின் உறுதியும் லட்சியத்தைத் தேடும் முயற்சியும் வெளிப்படுகிறது. சக்தி இல்லாதபோது சிவனுக்கு என்ன வேலை? ராஜசேகருக்கு இந்த வார்த்தைகள் ரொம்பவே பொருந்தும்!

சின்னச் சின்ன விஷயங்களைக் கூடச் சொல்வதற்குப் பத்மினி தேவை. வெற்றி பெறும்போது ஆர்பரிக்கவும் தோல்வியின்போது பரிதவிக்கவும் அதைத் தாண்டி வருவதற்கு அவருக்கு இன்னோரு உயிர் கொடுக்கவும் அவரது மனைவி அவரது முக்கியத் தேவை. ஆத்மார்த்தமான காதல் என்பதைத் தாண்டி உயிரோடு ஒன்றிய நேசம்.

இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் உயிர்ப்போடு இருவருக்கும் இடையில் இருக்கும் அந்தப் புரிதல். இவற்றைப் பார்த்து உருகி போவான் சத்யப்ரகாஷ்! தாயும் தந்தையும் ஒருவருக்கு நல்ல முறையில் அமைந்து விட்டால் ஒருவரது வளர்ப்பு தவறாகவே வாய்ப்பு இராது. இதற்கு உதாரணம் சத்யன்!

பெற்றோர் பார்த்த பெண்ணை என்னவென்று ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் ஒப்புக்கொண்டதை இப்போது நினைக்கும்போது ராஜசேகருக்கு அவனது நம்பிக்கை வீணாகி விடக் கூடாதே என்ற பெரும் கவலை சூழ்ந்தது!

“இல்லம்மா. அந்தச் சுபி இவனுக்கு மேட்ச் ஆகுமான்னு சந்தேகமா இருக்கே. நாம எந்த அளவுக்குக் காதலித்து, எல்லாரையும் எதிர்த்துட்டுக் கல்யாணம் பண்ணி, உன்னை விட்டு நான் இல்ல என்னை விட்டு நீ இல்லைன்னு இருக்கோம். அதே காதலை நம்ம தம்பிக்கு அந்தப் பொண்ணு தருவாளா கண்ணம்மா…

கொஞ்சம் பிசகினாலும் நமக்காகத் தம்பி எதுவுமே சொல்லமாட்டான். ஆனா நம்மளால தாங்கிக்க முடியாதேடா…” அவரது குரல் தழுதழுத்தது! அவரது கரத்தை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்ட பத்மினி,

“சேகர்… ப்ளீஸ் கண்ட்ரோல்… நீங்கச் சும்மா மனசை போட்டுக் குழப்பிட்டு இருக்கீங்கம்மா… சத்யா சமாளிச்சுடுவான்… கண்டிப்பா…” தைரியம் கூறினார் பத்மினி! பெண் பார்த்து விட்டு வந்தபின் அன்று நடந்த விவாதம் நினைவிற்கு வந்தது!

“இல்லம்மா… நம்ம நிலைமைய சீதாராம் யூஸ் பண்ணிகிட்டார்…”

பெண்ணின் மேல் பெரிய அபிப்ராயம் வராத பத்மினி ஏன் இந்தப் பெண்ணையே சத்யனுக்கு முடிக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவருக்குத் தன் கணவரிடமிருந்து வந்த பதில் அவரைத் திகைக்க வைத்தது. உள்ளம் பதைத்தது!

“என்ன சொல்றீங்க சேகர்…” பத்மினிக்கு அதீத அதிர்ச்சி!

“ஆமான்டா. இந்த விஷயத்துல நாம கொஞ்சம் பின்வாங்கினாலும் பிசினஸ்ல நம்மளை முழுசா விழுங்கிடுவார் பப்பி. அதான் சத்யன் கிட்ட கூட இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்ண முடியல…” வார்த்தைகள் தடுமாறியது!

அவரின் தடுமாற்றத்தை உணர்ந்த பத்மினி அவரது கையுடன் இறுக்கமாகக் கையைப் பிணைத்துக் கொண்டாலும் அவர் உள்ளேயும் ஒரு நடுக்கம் ஓடியது!

“பிசினஸ்ல நம்ம நிலைமை என்ன சேகர்? எனக்குக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க…” உணர்ச்சியைத் துடைத்து விட்டு பத்மினி கேட்க,

“ம்ம்ம்… எர்த் மூவர்ஸ்ல இறங்கினது தான் ரொம்பத் தப்பா போய்டுச்சும்மா. அதோட ரெடிமேட் கான்க்ரீட்டும் சேர்ந்து அடிவாங்கினதுல நமக்கு நஷ்டம் இருபது கோடி…” நேரடியாக ஆனால் தீனமான குரலில் ஒலித்தது அவரது சொற்கள்!

“ம்ம்ம்… சமாளிச்சுடலாம் சேகர்…”

“இல்லம்மா. எர்த்மூவர்ஸ காப்பாத்த நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல இருந்து பணத்தை எடுத்துப் போட்டுட்டேன். அதனால அங்க ஏகப்பட்ட கெடுபிடி. அதோட நம்ம பைனான்ஸ்ல பண்ட்ஸ்இன்னும் ஒரு மாசத்துல மெச்சூர் ஆகுது. அதை நினைச்சா எனக்குத் தலையே சுத்துது பப்பிம்மா. அந்த ஃபண்ட்ஸ உடைச்சு எடுத்துத் தான் ரெடிமேட் கான்க்ரீட் யூனிட் போட்டதே. சுத்தமா அங்க வாஷ் அவுட். மெச்சூர் ஆன பணத்தை யாராச்சும் கிளைம் பண்ணா அவ்வளவு தான். ஈவன் ஒரு ஆள் பிரச்சனை பண்ணா கூட மொத்தமா பெரிய பிரச்சனை வந்துடும்…” முதல் தோல்வி அவரைப் புரட்டிப் போட்டிருந்தது!

“சமாளிக்கலாம் சேகர். இதைவிடப் பெரிய பிரச்சனை எல்லாம் பார்த்துத் தானே இங்க இருக்கோம்…” பத்மினியின் குரலில் முழு நம்பிக்கை!

“ம்ம்ம்… ஆமா பப்பி… ஆனா சீதாராம் கிட்ட இப்போ இருக்கற ஆயுதம்… டிபெஞ்சர் சூட் மா…”

“வாட்? என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியாகக் கேட்டார் பத்மினி!

“கன்ஸ்ட்ரக்ஷன்னோட சேர்த்து தான் எர்த் மூவர்ஸ் அன்ட் ரெடிமேட் கான்க்ரீட்டும்… லிமிட்டட் கம்பெனி பேசிஸ்ல டிபெஞ்சர் ஷேர் இஸ்யு பண்ணி இருக்கோம் இல்லையா…”

“ம்ம்ம் ஆமா…”

“நம்ம கம்பெனில லக்ஷ்மி பைனான்சியலுக்கு இருக்கற டிபெஞ்சர் ஷேர் அமவுண்ட் கிட்டத்தட்ட ஐம்பது கோடி பப்பி. அதாவது அவங்க சியு பண்ணி நம்மளால திருப்ப முடியலைன்னா அவங்க டிபஞ்சர் சூட் போட்டு கம்பனிய மொத்தமா லாக் அவுட் பண்ணிடலாம்…”

அவர் கூறி முடித்ததும் அங்கே மௌனம் ஆட்சி செய்தது. தள்ளி அமர்ந்து இருந்த பத்மினி அவர் அருகே நெருங்கி வந்து தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தவாறே மௌனத்தைப் பதிலாக்கி கொண்டிருந்தார். இந்த மாதிரியான மௌனம் சில வேளைகளில் மிக வசதியானது. சூழ்நிலைகளின் தாக்கத்தைக் குறைப்பது. தங்கள் முன்னே இருந்த பிரச்சனைகளின் தீவிரம் இருவரையும் பேச விடாமல் செய்தது!

“எப்படி இப்படியொரு நிலைமைன்னு கேட்கமாட்டேன். உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. நீங்க எப்படியும் சமாளிப்பீங்க. ஆனா இங்க சத்யன் எப்படி வந்தான்?” அவருக்குக் குழப்பம்!

“சுபர்ணாவுக்குச் சத்யனை கல்யாணம் பண்ணி வெச்சுட்டா எல்லா இஸ்யுசையும் அவர் பார்த்துக்கறதா சொல்லி இருக்கார் பப்பி…” என்று அவர் கூற அணைத்திருந்த கையை மெதுவாக விலக்கினார் பத்மினி! முகம் இன்னதென்று கூற முடியாத அளவு வேதனையைச் சுமந்தது. உதடுகள் துடிக்கக் கண்கள் கலங்க அவர் தள்ளி அமர்ந்த விதம் ராஜசேகரின் மனதை ஊடுருவித் தைத்தது!

“பப்பிம்மா…” ராஜசேகரின் குரல் தீனமாக ஒலிக்க நிமிர்ந்து அவரைக் கண்ணோடு கண்ணாக நேர்கொண்டு பார்த்தார். அந்தப் பார்வையின் தீட்சண்யத்தையும் பொருளையும் தாங்க முடியாத சேகர், தனது கண்களைத் தாழ்த்தி கொண்டார்!

“ப்ளீஸ் பப்பிம்மா அப்படிப் பார்க்காத. என்னால உன்னைப் பேஸ் பண்ண முடியல…”

“சேகர்… நீங்க இவ்வளவு சுயநலம் பிடிச்சவரா? நிஜமா நான் நினைத்துப் பார்க்கலை…” வார்த்தைகளில் வலி!

“பப்பி…”

“நம்ம சுயநலத்துக்காகச் சத்யனை… ச்சே… எப்படிச் சேகர் மனசு வந்தது? வாழ்க்கைல எத்தனையோ போராட்டத்தைப்   இந்த உச்சிக்கு வந்து இருக்கோம். இந்தக் கஷ்டத்தையும் பேஸ் பண்ணலாம். ஆனா சத்யனுக்கு நீங்கச் செய்றது துரோகம் சத்யாப்பா…”

“உச்சில இருக்கறதனால தான் சொல்றேன் கண்ணம்மா. கரணம் தப்பினா மரணம். கீழ விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது. இந்த நிலைமைல இந்த ஆஃபர விட்டுட மனசு வரல. எந்தக் காரணத்தை முன்னிட்டும் சத்யனுக்கு வியாபாரத்துல கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. அவன் வந்து பொறுப்பு எடுக்கும்போது வியாபாரம் முன்னை விட நல்ல நிலைமைல இருக்கணும். அது மட்டும் தான் என்னோட கண்ணுக்குத் தெரியுது பப்பி. வேற எதுவும் இல்லை…”

அன்று அவரது வார்த்தைகள் பத்மினியை மேற்கொண்டு யோசிக்க விடவில்லை ஆனால் சுபர்ணா அந்த மூவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடப் போவது தெரிந்து இருந்தால் ராஜசேகர் தவிர்த்து இருப்பாரோ? வருவது அனைத்தும் தெரிந்து விட்டால் இறைவனுக்கு என்ன வேலை? விதிக்குதான் என்ன வேலை?

வாழ்க்கையின் சுவாரசியமும் சாபமும் அதன் ரகசியங்கள் தான்! சிலருக்கான சுவாரசியம் பலருக்கான சாபமாக மாறும்போது நியாயங்கள் தடுமாறி நேர்மைகள் தடம் புரள்கின்றன! அந்தத் தடம் புரண்ட பாதையின் மீதான பயணமும் முட்கள் நிறைந்த பாதையிலேயே செல்கிறது. அது முழுச் சுற்றையும் முடித்தபின்பு தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறது மீண்டு வருகிறது! இயற்கையின் இந்த ரகசிய புதிரின் விடைகளுக்கான சாவி அந்த இயற்கையிடமே!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 2

Conscience is a sacred sanctuary where god alone enter as judge -Lamennais கடவுள் மட்டும் நீதிபதியாக நுழையக்கூடிய கோவில் மனசாட்சி, -லமேனியஸ் மும்பை (ஹிந்தி வசனங்கள் தமிழில்) மும்பையின் பிரபல செயின் ஆப் ஹோட்டல்ஸின் அதிபர் நேமிசந்த்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 5 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்