arrow_back
பரமபதம் அத்தியாயம் 54
பரமபதம் chevron_right பகுதி 54 / 54

அத்தியாயம் 54

visibility 426
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

இரவு உணவை முடித்து விட்டு மொட்டை மாடியைத் தேடி போனவனைத் தேடி சென்றாள் அமிர்தா!

மெளனமாகக் கையைக் கட்டி கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனை மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள்… எத்தனை மாற்றங்கள்… எத்தனை அனுபவங்கள்… எத்தனை மனிதர்கள்… அவர்களில் எத்தனை நிறங்கள்! அவனது மன கண் முன் அனைத்தும் வந்து போனது,

ஒரு ஓரத்தில் அவனது மனதில் ஒரு உறுத்தல் இருந்தது… சுபர்ணாவை தான் தவிர்க்கக் காரணமான அனைத்து காரணங்களும் குண விசேஷங்களும் குறைவு இல்லாமல் அமையபெற்றவன் நிகில்… அவனைத் தன நண்பன் என்று ஏற்றுக் கொண்ட மனம் சுபர்ணாவை குற்றம் கூற காரணம் என்ன? வழி வழியாக ஆண்களின் மனதில் படிமமாகப் படிந்திருக்கும் ஆணாதிக்க மூலக்கூறா? கலாசார விதிமீறல் என்று சுபர்ணாவை குற்றம் கூறியவன் நிகிலை என்னவென்று கூறுவான்? இவ்வளவுக்கும் சுபர்ணாவை தெரிய வந்ததே அவன் மூலமாகத்தான்! அப்படியென்றால் ஆண்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொண்டு பெண் தவறு செய்தால் மட்டும் கூப்பாடு போடும் இந்தச் சமூகக் கட்டமைப்பின் அடிப்படைவாதத்தின் பிரதிநிதியாகத்தான் தான் இருக்கிறோமா?

சுய அலசலில் ஈடுபட்டு கொண்டிருந்தவன் அமிர்தாவின் அன்மையுனர்ந்து புன்னகைத்தான்! திரும்பி அவளைப் பார்த்தவன் புருவத்தை உயர்த்தி எப்போதும் போல அவளது இதயத்துடிப்பை எகிற வைத்தான்!

“என்ன பயங்கரமான ஆலோசனை? அடுத்தது எங்க ஓடலாம்னா?” கண்களில் தீப்பொறி பறக்க அமிர்தா கேட்க… அவளது இடையை வளைத்துத் தன்னோடு பிடித்துக் கொண்டு,

“வேணும்னா நாம ரெண்டு பேரும் ஓடிப்போலாமா?” கண்ணைச் சிமிட்டி அவன் கேட்க,

“அடப்பாவி…” அவனது முதுகில் அடி வைத்தவள்…” எப்படி இருந்தாலும் நீ தானே சத்தி ஜெய்ச்சுக்கற? அந்த லொள்ளு உன்னை இப்படிப் பேச வைக்குது…”

“ஹேய் குட்டி… என்னடா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க? நமக்குள்ள என்ன வெற்றி தோல்வி? நீ வேற நான் வேற இல்லடி செல்லகுட்டி… நாம… அவ்வளவுதான்… என்ன ஓகே வா?” அவனுடைய மூக்கால் அவளது மூக்கை வருட… அந்த அருகாமையில் கண்கள் சொருகியது அவளுக்கு! பதில் பேசாமல் அந்த நெருக்கத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தவளை வம்பிழுக்கத் தோன்றியது அவனுக்கு,

“அம்மு…”

“ம்ம்ம்…”

“இந்த லிப்ஸ் செம டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கே… கொஞ்சூண்டு கடிச்சுக்கட்டா?” குறும்பாக அவன் கேட்க… ம்ம்ம் என்று மயக்கத்தில் கூற போனவள்… சட்டெனத் தெளிந்து,

“பிசாசு… ஒழுங்கா என்னை விடு…”

“ஹஹா… இவ்வளவு நேரம் தோணலையா பப்ளிமாஸ் உனக்கு?” அவளது உதட்டை இழுத்து பிடித்து விளையாட… அவனது கைகளைத் தட்டி விட்டாள் அமிர்தா,

“ஆமா… நிம்மதிய தேடி போனேன்னுபோயிட்டு… இப்போ இங்க வந்து அதைக் கடிக்கட்ட இதைக் கடிக்கட்டான்னு கேக்கறியா… பிசாசு… பேய்… உன்னையெல்லாம்…” கடுப்பில் சரமாரியாக அவனை அடிக்க அவளது கைகளைத் தன் ஒரு கையால் விலங்கிட்டுப் பின்னால் கட்டி வைத்து அவளை மிகவும் நெருக்கமாகத் தன்னோடு இழுத்தவன்,

“நான் லிப்ஸ மட்டும் தான் கேட்டேன்… நீயா அது இதுன்னு ஆபர் பன்றியே… எது அம்முகுட்டி…” கண்களைச் சிமிட்டி அந்தக் குறும்பு கண்ணன் கேட்ட தோரணையில் வெட்கத்தில் உடல் சிவந்தது அமிர்தாவிற்கு!

“ச்சீ… போ… பேச்சை மாத்தாத…”

“இப்படி ஓவரா வெட்கபடாதடி… என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… ஒரு மாதிரியா இருக்கு…” அவளது முகத்தில் கைகளால் கோலமிட்டுக் கொண்டு அவன் கூற,

“என்ன ஒரு மாதிரி?” அமிர்தா புரியாமல் கேட்க,

“என்ன ஒரு மாதிரின்னு சொல்லனுமா? அவளது காதில் கிசுகிசுப்பாகக் கேட்டுக் கொண்டே மீசையால் உராய… அவளது மேனி சிலிர்த்தது!

“சத்யா… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…”

“ம்ம்ம்ம்…” கன்னத்தில் உதடால் கோலமிட்டு… நடுங்கி கொண்டிருந்த அவளது இதழ்களைச் சிறு நொடிகள் போதையோடு பார்த்தவன் அந்த இதழ்களைத் தன் வசம் எடுத்துக் கொண்டான்… முதலில் மென்மையாகக் கையாள துவங்கியவன் அதுவே வன்மையாக… அமிர்தா மூச்சுக்கு திணறினாள்! பார்வையில் இருந்த மயக்கம் குறையாமலிருக்க… முதல் முத்தம் ஏற்படுத்திய போதை அவனை இன்னமும் அவளை நாட வைக்க… அமிர்தா திணறித்தான் போனாள்!

அவனது இந்தத் தீவிரத்தை எதிர்பாராமல்… தாங்கள் இருப்பது மொட்டை மாடி என்னும் வெட்டவெளி என்பதையுணர்ந்து… கீழே தனது அன்னை என்ன நினைப்பார் என்பதையும் நினைவில் வலுகட்டாயமாகக் கொண்டு வந்து,

“ஹய்யோ… ப்ளீஸ்… விடு சத்யா…” வெட்கத்தோடு ஆனால் வலுகட்டாயமாக அவனிடமிருந்து தன்னைப் பிரிக்க… கையை இழுத்து பின்னோடு கட்டி கொண்டான்!

“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… போகாதடி…” பின் கழுத்தில் முத்தமிட்டபடியே கேட்க… அவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்தாலும்,

“நிம்மதிய தேடி போறேன்னு சொல்லிட்டு… இப்படிப் பேசறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” அவளது மனகிலேசம் அவளை விட்டுப் போவேனா என்றுஅடம் பிடிப்பதை உணர்ந்தான்… அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்… அவளது இடையைத் தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டே,

“சரி… இந்த ரெண்டு வருஷத்துல எந்த அவுட்லெட்ட நான் தேடி போய் நீ பார்த்த… சொல்லு…” அவளைக் கேட்க… அமிர்தாவும் யோசித்துத் தான் பார்த்தாள்… அப்படி எதுவுமே இல்லையே… முன்னர்த் தன் நண்பர்களுடன் வீக்என்டை குதூகலமாகச் செலவு செய்யும் அந்தப் பழைய சத்யனும் இல்லையே… அவன் இப்போது பார்த்ததெல்லாம் உழைப்பு உழைப்பு மட்டுமல்லவா… குடிப்பழக்கமோ வேறெதுவோ எதுவுமே இல்லாதவனாயிற்றே,

தலையை இடம் வலமாக ஆட்டி”ஒன்னும் இல்ல…” என்று மெலிதாகக் கூறினாள்,

“அப்போ என்னோட ஸ்ட்ரெஸ எப்படி நான் பர்ஸ்ட் பண்ணுவேன் சொல்லு?” அவன் கேள்வி கேட்க… அவள் பதில் கூற முடியாமல் அவனைப் பார்த்தாள்,

“என்னோட ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர் நீ மட்டும் தான் அம்முகுட்டி… ரொம்ப ஸ்ட்ரெஸ்புல்லா இருந்தடைம்ல ஐ நீடட் யூ பேட்லி… நான் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? பட் பேசக் கூட யோசிச்சா கஷ்டமா இருக்குமா இருக்காதா?” நடந்து முடிந்ததை வலியோடு அவன் கூற அவனது அந்த வலியைப் பொறுக்க முடியாமல் அவனது இதழ்களைக் கை கொண்டு மூடினாள்… கண்களில் நீர் சூழ்ந்து இருக்க… அவன் கைகளை எடுத்து விட்டு எதையோ கூற வர… முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து அவளது இதழ் கொண்டு மூடினாள்… ஆரம்பித்து வைத்தது மட்டுமே அவளது நினைவில்… தொடர்ந்தது முடித்தது என அனைத்தும் அவன்,

முத்தமிட்டு வெட்கத்தோடு நிமிர… அவளைக் குறும்பு புன்னகையோடும் கண்களில் வற்றாத ஜீவ நதியாகக் காதலோடும் பார்த்தவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவனது நெஞ்சினில் சாய்ந்தாள்,

“என்னோட மனசு பட்ட வேதனை உனக்குத் தெரியாது சத்தி… முதல்ல காதலை நீ சொன்னப்போ எனக்கு நிஜமாவே ஷாக்கா இருந்துது… ஆனா உன்னைப் பார்க்க முடியாம கஷ்டபட்டப்போ கூடத் தெரியல… ஆனா சுபர்ணா உன் மேல பைத்தியமா இருந்தான்னு தெரிஞ்சப்போ… முடியல சத்தி… விட்டுக் கொடுக்க முடியல…” சிறிது இடைவெளி விட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க… நீ சொல்லி முடி என்பதைப் போலப் பார்த்தான்,

“அதுக்காக அவ கெட்டு போகணும்ன்னு நினைக்கற அளவு நம்ம பேரன்ட்ஸ் நம்மளை வளர்க்கலையே… உன்னால தான் அவ அந்த அளவு ஹர்ட் ஆகி வீட்டை விட்டுப் போனான்னு நினைக்கும்போது அவ்வளவு வேதனையா இருந்தது… அவளைப் பார்த்துட்டா போதும்… அவ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா போதும்ன்னு தான் நான் தினம் நினைச்சுப்பேன்…” இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள்,

“ஆனா சுபி இவ்வளவு தெளிவா பேசுறதை பார்த்தப்போ… எனக்கு வாழ்க்கைய எப்படி வாழணும்ன்னு சொல்லிக் கொடுத்தது சத்யாதான்னு சொன்னப்போ எவ்வளவு பெருமையா இருந்துது தெரியுமா சத்தி… ஆனாலும் நிம்மதிய தேடி போனேன்னு நீ சொன்னதை என்னால தாங்க முடியல…” முழுவதுமாகப் பேசிவிட்டு அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க,

“புரியுது குட்டிம்மா… சாரிடா…” உளப்பூர்வமாக அவன் கூற,

“அட சாரிஎல்லாம் சொல்ற?” அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டே கேட்க

“ஏன் நாங்க சாரி கேக்க மாட்டோமா?” வளைத்துப் பிடித்திருந்தவளை இன்னமும் தன்னோடு சேர்த்து இறுக்க,

“இல்ல… அது வந்து…” அவனது கைகளிடையில் போட்ட கோலத்தில் இதழ்கள் தந்தி பாஷை பேச… அவளது நிலையைப் பார்த்துச் சிரித்தான் சத்யன்… அவன் சிரிப்பதை பார்த்து அவளுக்குக் கோபம் வர அவனிடமிருந்து விடுபட்டுக் குச்சியைத் தேட துவங்கியிருந்தாள்… அடிக்க!

“ஹேய் வேணான்டி… உன் புருஷன் பாவம் இல்லையா…”

“இல்லை…” சிரித்துக் கொண்டே அவள் மற்றொரு அடியைப் போட,

“நோ… இது தப்பு… எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்… இல்லைன்னா முன்ன நீ குடுத்தது மாதிரின்னாலும் எனக்கு ஓகே…” குறும்பாக அவளை வம்பிழுக்க… சிவந்து போன முகத்தோடு,

“ச்சீ போடா…” வெட்கத்தோடு அவள் ஓட… அதையும் அவன் ரசிக்க,

அடுத்து வந்த சுப முகூர்த்தத்தில் மத்தள மேளம் முழங்க வரிசங்கம் நின்றூத தலைவியின் கைத்தலம் பற்றினான் தலைவன்… இனி எந்தப் பிறவியிலும் நின்னைப் பிரியேன் என்று அந்த இரு மனங்களும் திருமணத்தில் சங்கமித்தன!

forum 3 கருத்துகள் உள்ளன

  1. மேடம் உங்கள் தளம் திரும்ப வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.

  2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் தளத்தில் நாவல் படிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இங்கு உள்ளது மிக்க நன்றி சசி சகோ

உங்கள் கருத்தைப் பகிருங்கள்