அத்தியாயம் 53
“ஏய் எங்க தப்பிச்சு போற… அத்தைக்கிட்ட நீயே சொல்லு…” தப்பித்துப் போக முயன்றவளை கைபிடித்துக் கொண்டு குறும்பாகச் சத்யன் கேட்க
“என்ன சொல்றது…” வேறு புறம் திரும்பிக் கொண்டு அவனைப் பாராமல் கேட்க… அவளது முகத்தைத் தன் புறம் திருப்பியவன்… ஒரு மார்கமாகப் பார்த்து,
“என்ன சொல்றதா? ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணினது பத்தாதா? ஒழுங்கா அத்தை கிட்ட சொல்றியா இல்லையா…” கறாராகக் கூற
“நான் எப்படிச் சொல்றது சத்யா… ப்ளீஸ்… எனக்கு ஒரு மாதிரி இருக்குடா…” கூச்சமாய் அவனது தோளில் முகத்தை மறைத்துக் கொள்ள…
“ஷப்பா போதும்டா கண்ணுங்களா உங்க ரெண்டு பேரோட அலம்பல்… எங்களையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டு பப்ளிக்கா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?” விஷ்வா சற்றுச் சப்தமாகக் கேட்க… சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சாவித்ரிவிற்கு மனதெல்லாம் நிறைந்தது! மனம் ஒரு சேர அமைதியில் ஆழ்ந்தது!
“டேய் விஷ்வா… இதெல்லாம் ரொமான்ஸா? இதெல்லாம் உனக்கே டூ மச் த்ரீ மச்சா இல்ல…” வெட்க சிரிப்போடு சத்யன் கேட்க
“ஹேய்… மச்சான்… வெட்கபடறேன்னு சொல்லிட்டு நீ கிணறை தோன்டாதடா… அதெல்லாம் இந்த லவுட் ஸ்பீக்கர் வக்கீலம்மா செய்ய வேண்டியது…” இருவரையுமாகச் சேர்த்து அவன் கலாய்க்க… அமிர்தா விஷ்வாவை குறும்பாக முறைக்க… அவனது முதுகில் ஒன்றை வைத்து விட்டுச் சிரித்த சத்யன்… அமிர்தாவிடம் திரும்பி அவளது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான் சத்யன்… அவனது அத்தையை நோக்கி!
அவர் முன் சென்று நின்றவன்… அமிர்தாவை பார்க்க… அவளோ அவனது கையிலிருந்து தன்னை விடுவிக்கப் போராடி தோற்று அவனது முகத்தைப் பார்த்தாள்… பரிதாப முகத்தோடு! சாவித்ரியோ நடக்கும் நாடகத்தைக் குறுஞ்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருக்க,
“அத்தை இவளுக்கு என்னமோ உன் கிட்ட சொல்லணுமாம்…” சந்தோஷமாக இருக்கும்போது மரியாதை பன்மையை மறந்துவிடும் சத்யன் எப்போதும் போல அவரை அழைக்க… அமிர்தா அவனை முறைத்தாள்! அத்தையாக மட்டும் இருக்கும் வரை அவன் எப்படி அழைத்தாலும் கண்டுகொள்ளாதவள்… இப்போது அவனது மாமியார் என்று வரும்போது எப்படி ஒருமையில் அழைக்கலாம் என்று முகம் சுருங்க,
“ஏன் அவனை முறைக்கற அம்மு… அவன் என் செல்லம்… அப்படித்தான் என்னைக் கூப்பிடுவான்… உனக்கென்ன…” குறுஞ்சிரிப்போடு அவர் கூற,
“அடடா மருமகனுக்குத் தகுந்த மாமியார் தான்… ஜால்ரா சத்தம் தாங்கலைப்பா…” வாய்க்குள் முனகிக் கொண்டவளை பார்த்துச் சிரித்தார் சாவித்ரி!
“நீ என்ன சொல்ல வந்த அதைச் சொல்லு…” சாவித்ரி ஒன்றையும் அறியாதவர்போலக் கேட்க… சத்யனையும் சாவித்ரிவையும் நிகிலையும் விஷ்வாவையும் மாற்றி மாற்றிப் பார்த்த அமிர்தா… சொல்லத் தயங்கி வார்த்தைகள் தொண்டையில் அடைத்துக் கொள்ள… அன்னையின் முகம் பார்க்கத் தயங்கி நிலம் பார்த்தாள்!
“ஏய் பப்ளிமாஸ்… இப்போ சொல்லப் போறியா இல்லையா…” கறாராகக் கூறியவனை வெட்கத்தோடு பார்த்தவள்,
“சத்யா… ப்ளீஸ்…” அவனதுமுதுகில் ஒன்றிக் கொள்ள… அவளைத் தன்புறம் இழுத்து சேர்த்து கொண்டவன்… சாவித்ரிவிடம் புருவத்தை உயர்த்தி,
“அத்தை… சொன்ன மாதிரியே செஞ்சுட்டேனா… இவளை வழிக்குக் கொண்டு வர்றது என் பொறுப்புன்னு சொன்னேனே… என்ன ஓகே வா…” சிரிப்போடு கேட்க… சாவித்ரி அவனது காதைத் திருகினார்,
“திருட்டு பசங்களா…” சிரித்துக் கொண்டே!
அன்று மாலைவரை அங்கிருந்து விட்டு சத்யானந்தரின் சமாதியை வணங்கி விட்டுச் சிவானந்தரிடம் வந்து சாஷ்டங்கமாக வணங்கியவன் அடுத்து செய்ததைப் பார்த்து அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தனர்… எதிர்பாராமல்! சிவானந்தரை தவிர்த்து!
சாஷ்டாங்கமாகச் சுபர்ணாவின் முன் விழுந்திருந்தான் சத்யன்! சுபர்ணாவும் அவனது தலையில் கை வைத்து அதை ஏற்றுக் கொண்டிருந்தாள்!
மனைவியாகவோ காதலியாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்தவன் இன்று அவளைக் குருவாக முழுமையாக வரித்து ஏற்றுகொண்டிருந்தான்!
சுபர்ணா இங்கிருப்பதைச் சீதாராமனிடம் கூற… உடனே கிளம்பி அவர் வந்தபோதும் இருவரிடமும் கூறிய பதிலையே அவரிடம் சுபர்ணா கூற… என் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என அவரும் அங்கேயே தங்கி விடுவதாகக் கூற அனைவருக்கும் மனம் நிறைந்தது!





