arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் 1
மலரும் அரும்பே! chevron_right பகுதி 1 / 30

அத்தியாயம் 1

visibility 236
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

மலரும் அரும்பே!

அகிலா கண்ணன்

1

தனித்தனி வீடுகளாக அமைந்திருந்த வீடுகள் அது பெருநகரம் என்று கூற முடியாதபடியும், கிராமம் என்று கூற முடியாதபடியும் காட்சியளித்தன.

அந்த வீட்டின் முன்பாக, ரோஜா, முல்லை, பிச்சி என பூஞ்செடிகள் அமைந்து இருந்தன. இரண்டு பக்கமும் தென்னை, மா மரங்கள் காட்சியளிக்க, காற்றின் வேகம் சற்று அதிகம் என்பதை எடுத்துக்காட்டுவது போல மரங்களின் கிளைகள் வேகமாக அசைந்து கொண்டிருந்தது. அந்த மரத்தின் வேகத்தை விட அந்த வீட்டில் ஐம்பது வயதை மதிக்கத்தக்க பெண்ணின் வேகம் சற்று அதிகமாக இருந்தது.

வாசலுக்கு வந்தார், பின்பு உள்ளே சென்றார். வாசலுக்கு வந்தார், பின்பு உள்ளே சென்றார். வேகவேகமாக அவர் நடந்து கொண்டிருந்தார்.

அந்த வீட்டு திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தன் மூக்கு கண்ணாடியை கீழே இறக்குவதும் மேலே ஏற்றுவதுமாக தன் மனைவியின் நடையை பார்த்துக் கொண்டிருந்தார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர். தன் மனைவியை பார்த்து சோர்வடைந்த அவர், ஒரு முறை தன் மனைவியை போலவே நடந்து மீண்டும் அந்த நாற்காலியில் அமர்ந்து, தன் மனைவியை பார்த்து கேலியாக சிரித்தார்.

“என்ன, என் பதட்டம் உங்களுக்கு கிண்டலா இருக்கா?” என்று கோபமாக கேட்டார் அந்த பெண்மணி. “பூரணி கிண்டல் எல்லாம் இல்லை. இருந்தாலும், உனக்கு ஒவ்வொரு தடவை நடக்குறதுக்கு ஒரு ரன் ஸ்கோர் கொடுக்கிற மாதிரி இப்படி வேகவேகமா நடக்குற… நடக்குற… இல்லை… இல்லை… ஓடற அதுதான் சரி. நானும் இப்படி நடந்தா… ஓடுனா ஏதாவது மாற்றம் வருமான்னு பார்த்தேன்” என்று அவர் மீண்டும் சிரிக்க, பூரணி இப்பொழுது சற்று ஆக்ரோஷமாகவே தன் கணவரை பார்த்தார்.

“சரி சரி இப்படியெல்லாம் பார்க்காத, நான் பயப்படுவேன். என்ன தான் என் பேரு சிதம்பரமா இருந்தாலும், நம்ம வீட்ல நடக்கிறது என்னவோ மீனாட்சி…” என்று கூறிவிட்டு பயந்தபடியே, “பூரணியின் ஆட்சி தானே…” என்று மீண்டும் சிரித்தார்.

எங்கு மீனாட்சி என்று இறைவனின் பெயரைச் சொல்லி, இறைவன் பெயர் என்றாலும் பெண் பெயராக இருப்பதால், அதைச் சொல்லி ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று அவர் அச்சம் கொண்டது போல பாவனை காட்ட, பூரணி இப்பொழுது சிரித்தார். “சும்மா அப்படியே எனக்கு பயப்படுற மாதிரி பேச்சு தான். இந்த வீட்டில் நடக்கிறது எல்லாம் நீங்க நினைக்கிறபடி தான்.” என்று தன் சிரிப்பை மறைத்துக் கொண்டு தன் கணவனிடம் சிடுசிடுத்தார்.

“நான் நினைத்தது என்ன நடந்தது பூரணி?” என்று அவர் கேட்க, “நடக்காம என்ன?” என்ற பூரணி ஆரம்பிக்க, அங்கு இடியின் சத்தமும் கீற்றாக மின்னலும் வந்தது.

“உங்களுக்கு தெரியாது, நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு தெரியாது? நான் அவளை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன். அதையும் நீங்க கேட்கல” என்று பூரணி கூற,

“பூரணி நீ சொல்றது நியாயமா இருக்கா? படிச்ச பொண்ணு வேலைக்கு போகக்கூடாது அப்படின்னு சொன்னா, என்ன நியாயம்? அதுவும் நம்ம பொண்ணு படிச்ச படிப்புக்கு வெளியூர் போய் வேலை பார்க்கலாம். ஆனால், அவ நம்ம ஊரில் தான் வேலை பார்க்குறா. அது கூட பார்க்க கூடாதுனு சொன்னால் எப்படி?” சிதம்பரம் நியாயத்தை கேட்டார்.

“சரி, வேலைக்கு போனாலும் நேரா நேரத்தில வீட்டுக்கு திரும்பி வந்துடனுமுன்னு நான் சொல்லி இருக்கேன். போறது இங்க இருக்குற ஸ்கூலுக்கு. அங்க இருக்குற எல்லா டீச்சரும் கிளம்பி வீட்டுக்கு போயிடுறாங்க. ஆனா இவ மட்டும் என்னவோ இவ தலைமையில் தான் அந்த ஸ்கூலே நடக்குற மாதிரி அந்த ஸ்கூலே கதின்னு கிடக்குறா. சரி அது கூட பரவால்ல மத்த நாள் எல்லாம் நான் விட்டுட்டேன்.

இன்னைக்கு காலைல படிச்சு படிச்சு சொன்னேன் மழை வர்ற மாதிரி இருக்கு. விடிகாலைல இருந்தே மூடாக்கா இருக்கு சாயங்காலம் கண்டிப்பா மழை வந்துரும். இருட்டறத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வான்னு நான் சொன்னேன். ஆனா கேட்டாளா? பாத்தீங்களா, கேட்கவே இல்லை மணி ஆறரை தாண்டிட்டு. ஸ்கூல் முடிஞ்சிட்டு. டியூஷன் பிள்ளையிலும் போய்டுவாங்க. இவ மட்டும் ஸ்கூல்ல என்னத்த செய்வானே தெரியாது. கூட்டிட்டு வாங்கன்னு சொன்னா அதையும் கேட்க மாட்டேங்குறீங்க.” என்று பூரணி கோபமாக கூற, சிதம்பரம் மீண்டும் சிரித்துக் கொண்டார்.

“நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் பிரச்சனையே கிடையாது. ரெண்டு தெரு தள்ளி ஸ்கூல். வர்ற வழியில் எல்லார் வீடும் நமக்கு தெரியும். ஏதாவது பிரச்சனைனா சொல்லிடுவாங்க. அப்புறம் என்ன பிரச்சனை? அவ பத்திரமா வந்திருவா.” என்றவர் கூறும் பொழுதே மழை, ‘சோ’வென கொட்ட ஆரம்பித்தது. வானம் கருகருவென்று இருட்டி விட்டது.

மழையின் வேகத்தைப் பார்த்து, அவருக்கும் இப்பொழுது சற்று பதட்டாமாகவே இருந்தது. “இன்னைக்கு வரட்டும் அவ, கம்பால் அடி வெளுக்குறேன்.” பூரணி சபதம் செய்ய, “அவளே ஒரு டீச்சர். அவளை நீ அடிக்க போறியா?” தன் பதட்டத்தை மறைத்து தன் மனைவியை கேலி பேச, மழை ஊற்ற ஆரம்பித்தது.

அப்பொழுது மழையில் நனைந்தபடியே சர்ரென்று வண்டியில் வந்தாள் பாரதி. “இப்படி மழையில வந்திருக்க, உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று கேட்டுக்கொண்டே, அவள் தாயார் வெளியே வர,

“அம்மா ஸ்டாப்… ஸ்டாப்… அங்கேயே இருங்க. நீங்க மழையில நனைஞ்சுராதீங்க. உங்க உடம்புக்கு ஒத்துக்காது.” என்று தன் வண்டியை தன் வீட்டுக்குள் கொண்டு வந்து வண்டியை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு இரு கைகளையும் விரித்தாள். அவளுடைய நீல நிற சேலை உடம்போடு ஒட்டிக் கொண்டிருக்க, அதன் முந்தியை எடுத்து தன் இடுப்பில் சொருகிவிட்டு, அந்த மழையை ரசித்தபடி கண்களை மூடிக்கொண்டு வானத்தை பார்த்தாள் பாரதி.

மழை மொத்தமாக அவளை நனைத்துக் கொண்டிருந்தது. “பாரதி… பாரதி… பாரதி…” என்று அவள் தாய் சத்தம் அதிகமாக எழுப்பிக் கொண்டே இருந்தாள். ஆனால் பாரதியோ, “அம்மா, ப்ளீஸ்… கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்… கொஞ்சோண்டு நேரம்…” என்று கெஞ்சி, தன் தாய் கொடுத்த அவகாசத்தை எல்லாம் தாண்டி அங்கு நின்று கொண்டிருந்தாள்.

வானமே அவள் உடல் நலத்தை மனதில் கொண்டு, சற்று நேரத்தில் தன் மழையை நிறுத்திக்கொள்ள, தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “தம்… தம்…” என்று வீட்டுக்குள் நடந்தாள்.

“நீ எல்லாம் ஒரு டீச்சரா? இப்படி நடந்துக்கலாமா?” என்று பூரணி கேட்க, “ஏமா டீச்சர்னா நான் மழையில் நனைய கூடாதா? ஆடக்கூடாதா? பாடக்கூடாதா? சந்தோஷமா இருக்க கூடாதா? அப்படின்னு யாருமா சொன்னா? டீச்சர்னா ஒரு கொண்டை போட்டு இருக்கணும், கண்ணாடி போட்டு இருக்கணும், கையில் கம்பு இருக்கணும், இதெல்லாம் அந்த காலத்துல அம்மா. இப்போ டீச்சர் பாதி நேரம் லெக்கின் டாப்ஸ் தான் போடுறோம், சுடிதார் போடுறோம். கம்பெல்லாம் கிடையாது. குழந்தைகள் கிட்ட கொஞ்சி பேசுறோம்.” என்று நீட்டி முழக்கிய பாரதியின் தலையை துவட்டினாள் அவள் தாய்.

“ஏண்டி உன் மக வந்ததும் அவளை கம்பால அடிக்கணும்னு சொன்ன… அடிக்கலையா?” என்று கேட்டார் சிதம்பரம். “அப்பா, அம்மாவே மறந்தாலும் எனக்கு அடி வாங்கி கொடுக்குறதுல உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா?” என்று இப்பொழுது பாரதி தன் தந்தையிடம் சண்டைக்கு செல்ல,

“இல்ல, அடிக்கிறேன்னு சொன்னாலே அடிப்பாளா… மாட்டாளா என்று பார்த்தேன்” சிதம்பரம் தன் மகளிடம் கேலி பேச, இப்பொழுது பூரணியும் பாரதியும் ஒருசேர அவரை முறைத்தனர்.

“சரி… சரி… நான் ஒன்னும் சொல்லல” அவர் பின்வாங்க, “அம்மா, சூடா மிளகாய் பஜ்ஜி போட்டு தேங்காய் சட்னி செய்து தாங்களேன். மழைக்கு சாப்பிட நல்லாருக்கும்.” பாரதி கோரிக்கை வைக்க, “செய்து தரேன்.” என்று தன் மகளுக்கு இசைந்து கூறி, மெதுவாக பேச ஆரம்பித்தார் பூரணி.

“பாரதி ஒரு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை சென்னை.” அவர் கூற, “ஐயோ அம்மா, என்னால சென்னை எல்லாம் போக முடியாது. நான் எத்தனை மணி நேரம் டிராவல் பண்றது? அதெல்லாம் முடியாது.” என்று மறுப்பு தெரிவித்தாள் பாரதி.

“இன்னொரு இடம் வந்து இருக்கு. அது நம்ம ஊரிலிருந்து மூணு மணி நேரம் தள்ளி தான்.” என்று அவள் தாய் கூற, “அய்யய்யோ! என்னால் அவ்வளவு நேரம் எல்லாம் தள்ளிப் போக முடியாதுமா. இதே ஊர்ல அடுத்த தெரு, முந்தின தெரு, இப்படி ஏதாவது ஒரு மாப்பிள்ளை வீடு இருந்தா பாருங்க. நான் ஒரே பொண்ணு. நான் உங்கள பார்க்க எப்ப வேணும்னாலும் வருவேன். எப்பனாலும் போவேன்” என்று பாரதி கூற,

“உனக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைக்காது.” என்று கோபமாக தலையை துவட்டி கொண்டிருந்த துண்டை வைத்து தன் மகளின் முதுகில் அடித்து விட்டு கோபமாக எழுந்து சென்றார் பூரணி.

இப்பொழுது சிதம்பரத்தை பார்த்து கண் சிமிட்டி சிரித்துவிட்டு, தன் சேலையில் இருந்து ஈரத்தை பிழிந்து விட்டு துள்ளாட்டம் போட்டு தன் அறைக்குள் சென்றாள் பாரதி.

“கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இவளுக்கு இருக்கா, இல்லையா? அத கேட்டு சொல்லுங்க” என்று பூரணி இப்பொழுது தன் கணவனிடம் கோபமாக ஆரம்பிக்க, “பூரணி அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு. இப்பதானே கல்யாணம் பேச்சை எடுக்க ஆரம்பிச்சிருக்கோம். அவளே மனசு இறங்கி வருவா. நீ வேற அவளை ரொம்ப கட்டாயப்படுத்தாதே” என்று சிதம்பரம் பொறுமையாக இருக்கும்படி செய்கை காட்ட, “அது சரி உங்களுக்கு என்னைக்கு கவலை இருந்திருக்கு?” என்று கோபமாக பேச முயன்று தோற்று முகத்தை நொடித்துக் கொண்டார் பூரணி.

பாரதி அந்த ஊரில் இருக்கும் தனியார் பள்ளியில் மேல்நிலை ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்று உற்சாகமாக தான் இருந்தாள். அவள் பெற்றோரும் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் தன் அறைக்குள் சென்றதும் அவள் முகத்தில் இருந்த மொத்த சந்தோசமும் வடிந்து விட்டது.

இன்று பள்ளியில் விழா என்பதால் சேலை அணிந்திருந்தாள். வீட்டிற்கு வந்ததும் சேலையில் இருந்து லாங் மிடி டாப்ஸிற்கு மாறிவிட்டாள். அவளை பார்த்தால், பள்ளி ஆசிரியை என்று சொல்ல முடியாது. கல்லூரி பெண் என்று கூறுவது போல் தான் காட்சி அளித்தாள். அவள் உடையும் அவள் உடல்வாகும் அவளை கல்லூரி பெண் போல் காட்டினாலும், அவள் முகத்தில் இருந்த தீவிரம் அவளின் பக்குவத்தை காட்டியது.

அவள் சிந்தை முழுவதும், ‘சைந்தவி… சைந்தவி…’ என்ற பெயரே ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த சைந்தவியின் வெளிறிய முகம் அவளுக்கு அவள் மீது பாசத்தை கொடுத்தது. அவள் மீது பச்சாதாபத்தை உண்டு செய்தது.

அந்த வெளிறிய முகத்தோடு, ‘அரவிந்த்…’ என்ற பெயரும் அவளுக்கு நினைவு வந்தது. அந்த நினைவு பல எண்ணங்களை எழுப்ப, அந்த எண்ணங்கள் அவளுள் பல கேள்விகளை எழுப்பியது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 2

2டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் மழை வெளுத்துக் கொண்டே இருந்த மாலை நேரம். அதே நேரம் அமெரிக்காவில் டிசம்பர் மாதம் காலை நேரம் . குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. பனிமழை பொழிந்து கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தன் வீட்டில் வேலையில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்