arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 2
மலரும் அரும்பே! chevron_right பகுதி 2 / 30

அத்தியாயம் – 2

visibility 140
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

2

டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் மழை வெளுத்துக் கொண்டே இருந்த மாலை நேரம். அதே நேரம் அமெரிக்காவில் டிசம்பர் மாதம் காலை நேரம் . குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. பனிமழை பொழிந்து கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தன் வீட்டில் வேலையில் மூழ்கி இருந்தான் அரவிந்த். அதை வீடு என்று சொல்லக்கூடாது, மிகப்பெரிய பங்களா என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்க பாணியில் இருந்த அந்த வீடு மிக பிரமாண்டமாக இருந்தது. பேஸ்மெண்ட் என்று சொல்லும் கீழ் தட்டில் மிகப்பெரிய அறை. அவனுக்கு தேவையான ஜிம் செட்டப் எல்லாம் இருந்தது. அதற்கு மேல் ஒரு தளம் இருந்தது. அங்கு அனைவரும் அமர்ந்து பேசக்கூடிய ஹால் மற்றும் சமையலறை. வீட்டிற்குள்ளே இருந்த அந்த படிக்கட்டுகள் விலையுயர்ந்த வேலைப்பாடுகளுடன் மிக அழகாக இருந்தது.

அதற்கு மேல் தட்டில் படுக்கை அறையும், அவனுக்கு தேவையான வேலையை செய்யக்கூடிய அறையும் பிரம்மாண்டமாக இருந்தது. ஒவ்வொரு துரும்பிலும் செல்வம் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

பளபளப்பான கண்ணாடி பொருட்கள், பல அழகான ஓவியங்கள், விலை உயர்ந்த மின்னனு பொருட்கள் என அவன் வீடே நிறைந்திருந்தது. மனிதர்கள் அனைவரும் புகைப்படங்களாக மட்டுமே இருந்தனர். அந்த மொத்த வீட்டில் அரவிந்த் மட்டும் தான் தனியாக இருந்தான். அதை எல்லாம் சிந்திக்க அவனுக்கு நேரம் இல்லை என்பது போல், அவன் தன் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க, அவன் அலைபேசி ஒலித்தது. அந்த அலைபேசி ஒலியை சற்று எரிச்சலோடு பார்த்தான் அரவிந்த்.

‘ஐயோ, இந்த நேரத்துல யார் கூப்பிடறாங்க? நான் என் ஆபீஸ் காலை நேர வேலையை ஆரம்பிச்சிட்டேனே.’ என்று சற்று முகசுளிப்போடு அந்த அலைபேசியை பார்த்தான். வழக்கமாக அந்த நேரம் அவன் அலுவலகத்திற்கு சென்று விடுவான். இன்று பனிப்புயல் காரணமாக அவன் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அம்மா…’ என்ற பெயரைப் பார்த்ததும் தாய் பாசத்தில் அவன் முகம் சற்று மின்னினாலும், ‘அய்யய்யோ! என்ன பேச போறாங்களோ?’ என்ற பதட்டமும் அவனை சூழ்ந்து கொண்டது.

“அம்மா…” என்று அவன் மென்மையாக அழைக்க, “என்னடா, ஏன் ஃபோன் பண்றேன், ஏன் இந்த நேரம் ஃபோன் பண்றேன் அப்படின்னு நினைச்சியா? ஆபிஸ் நேரத்தில் கூப்பிட்டு என்ன பேசுவாங்கன்னு யோசிச்சியா?” என்று அவன் அழைப்பை எடுத்ததும் அவன் நினைப்பை சரியாக கண்டுபிடித்து சண்டைக்கு ஆயத்தம் ஆவது போல் பேசினார் நித்தியகல்யாணி.

“ஐயோ, அப்படி எல்லாம் இல்லவே இல்லை அம்மா. அம்மா கூப்பிட்டு இருக்காங்களே அப்படின்னு பாசத்துல எடுத்தேன்.” என்று மிக பவ்யமாக கேலி தொனிக்கும் குரலை மறைத்துக் கொண்டு பேசினான் அரவிந்த்.

“நடிக்காத டா. உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்டா.” என்று நித்திய கல்யாணி கூற, “சரி சரி சரிம்மா, உங்களுக்கு எல்லாம் தெரியும். இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்களே, என்ன விஷயம்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அரவிந்த்.

“நீ எப்போ இந்தியா வர?” என்று அவரும் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“அம்மா, இதைக் கேட்க நேரம் காலமே இல்லையா? இதை இப்ப தான் கூப்பிட்டு கேட்பீங்களா?” என்று கேட்டான்.

“ஏன் ராத்திரி நேரம் கூப்பிட்டு கேட்டா சரியான பதிலை சொல்லுவியா? இல்லை, நான் அமெரிக்காவுக்கு நேர்ல வந்து கேட்கட்டுமா?” என்று அவன் தாய் எரிந்து விழ, “நான் உங்களை வரவேண்டாம்னா சொல்றேன்? உங்களையும் அப்பாவையும் ஒரேடியாக இங்க வாங்கன்னு தான் சொல்றேன். எதுக்கு அங்கே இருக்கறீங்கன்னு தான் நானும் கேட்கிறேன்” என்று அவன் சமாதான கொடியை பறக்கவிட,

“அப்படியெல்லாம் எங்களால் வர முடியாது. இங்க அடிக்கிற டிசம்பர் மாச குளிரையே எங்களால் தாங்க முடியல. இதுல உங்க ஊர்ல வந்து பனியில் வேற நான் சாகனுமா?” என்று அவர் படபடக்க,

“அம்மா… கூல்… ஈன்னு சிரிப்பீங்களாம். எதுக்கு இவ்வளவு டென்சன்? அப்பா எங்க?” என்று தன் தாயிடமிருந்து தப்பிக்கும் மார்க்கம் தேடினான் அரவிந்த்.

“என்னடா என்கிட்ட இருந்து தப்பிக்கலாமுன்னு பாக்கறியா? நானாவது பொறுமையா அன்பா தன்மையா பேசிட்டு இருக்கேன். உங்க அப்பா உன்மேல கொலைவெறில இருக்காங்க. இனிமேல் உன்கிட்ட பேசவே கூடாதுன்னு முடிவோட இருக்காங்க.” என்று அவர் கூற, “ஏம்மா ஏன் எடுத்ததும் இவ்வளவு கோவம்? என்ன விஷயமுன்னு சொன்னால் தானே தெரியும்” அவன் பேச்சை முடிக்கவே முயற்சி செய்தான்.

“இது தான் விஷயம். இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு அக்கறை இல்லை. அதில் உனக்கு ஈடுபாடு இல்லை. எல்லாமே மொபைல் வழியா விஷயமா மட்டுமே கேட்டுக்குற. இது தான் பிரச்சனை. நீ இங்க வந்து வருஷக்கணக்காவுது. எங்கள வா வான்னு சொல்ற. வயசான காலத்துல நாங்க அங்கேயும் இங்கேயும் அலைய முடியுமா? எங்களால அங்க வர முடியாது. நீ சீக்கிரமா ஊருக்கு வர” என்று நித்தியகல்யாணி கட்டளையாக கூற,

“சரிமா இந்த ப்ராஜெக்ட்…” என்று அவன் தொடங்க, “என்ன ஈர  மண்ணு பிராஜெக்ட்? பிராஜெக்ட்டும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம். ப்ராஜெக்ட்… எப்ப பார்த்தாலும் ப்ராஜெக்ட் தான்…” என்று அவர் மீண்டும் படபடக்க, “சரிம்மா… எனக்கு ஒரு மாசம் டைம் கொடுங்க. நான் வரேன். அண்ணா, அண்ணி எப்படி இருக்காங்க?” என்று தன் பேச்சை வேறு பக்கம் திருப்பினான் அரவிந்த்.

“அவங்க ரெண்டு பேரும் தானே. கூறுகெட்ட தனமா குடும்பம் நடத்துறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை போட தான் நேரம் சரியா இருக்கு.” அவர் பெருமூச்சு விட்டு, “கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது. பெரியப்பொண்ணு ஆகுற வயசில் பொண்ணு இருக்கு. தோளை தொடுற உயரத்தில் பையனும் இருக்கான். இன்னும் ரெண்டு பேருக்கும் புத்தி வரலை. என்னத்த குடும்பம் நடத்துறாங்கன்னு எனக்கு தெரியல.” என்று அவர் வேதனையோடு பேசினார்.

“சைந்தவி குட்டி எப்படி இருக்கா?” என்று ஆர்வமாக கேட்டான் அரவிந்த்.

“நீதான் அவளை இன்னும் குட்டின்னு சொல்லணும். அவ சின்ன குழந்தைன்னு நினைக்கணும். ஆனால், அவ அப்படி இல்ல, அவ பாவம். அவளுக்கு நிறைய கஷ்டம்.” என்று நித்தியகல்யாணி கூற, “என்னம்மா பேசுறீங்க? சைந்தவிக்கு என்ன கஷ்டம்? நம்ம கிட்ட இல்லாத காசு பணமா?” என்று அரவிந்த் கேட்க, “காசு, பணம் இருந்தா போதுமா சொந்த பந்தம் வேண்டாமா?” என்று அவர் கேட்டார்.

“சைந்தவிக்கு அம்மா அப்பா கூட இருக்காங்க. பாட்டி தாத்தா நீங்க இருக்கீங்க. அப்புறம் என்ன கவலை? அது பத்தாதுன்னு அண்ணி வீட்ல இருந்தும் வந்து போறாங்க தானே?” அவன் கேள்வியாக நிறுத்த,

“நாங்க எல்லாம் பத்தாதுடா அவளுக்கு சித்தப்பா வேணும்.” என்று நித்தியகல்யாணி கூற, இப்பொழுது அரவிந்த் பெருங்குரலில் சிரித்தான்.

“நீங்க சொல்றது நியாயமா இருக்கா? எல்லாரும் இருக்கும் பொழுது இல்லாத சித்தப்பாவை வான்னு சொன்னா என்னமா அர்த்தம்?” என்று அவன் கேலியாக கேட்க, அவன் தாய் கோபமாக அலைபேசி பேச்சை துண்டித்து விட்டார்.

“அம்மா, ஏன் இப்படி பேசும் பொழுதே ஃபோனை வச்சுட்டாங்க?” அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“ஏதோ சரி இல்லையோ?” அவன் மனம் சற்று படபடத்தது. தன் தந்தைக்கு அழைத்தான். அவர் அலைபேசியை எடுக்கவில்லை. அடுத்த முறையும் அழைத்தான். அவர் எடுக்கவில்லை. மூன்றாம் முறையும் அழைத்தான். அவர் எடுத்தார். “அப்பா சைந்தவிக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான்.

“ஏன்டா? ஏன்? நீ அப்ப தான் வருவியா? சைந்தவிக்கு உடம்பு சரி இல்லைனா வருவ. இல்லன்னா உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா வருவ. இல்ல அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னா வருவ. இல்லை, நாங்க ரெண்டு பேரும் உடம்பு சரியில்லாமல் ஐ சி யூ வரைக்கும் போனதுக்கு அப்புறமும், மாத்திரை சாப்பிடுங்க… மருந்து சாப்பிடுங்க… அப்படின்னு ஃபோன்லயே நல்ல விசாரிப்ப. அப்புறம் நாங்க செத்தா தான் வருவியா?” என்று அவர் ஆக்ரோஷமாக கேட்க,

‘நான் அம்மா அப்பா இரண்டு பேரையும் இங்க வர சொல்றேன். வராமல் இதென்ன பிடிவாதம்.’ அவன் எண்ண ஓட்டம் இப்படி இருந்தாலும், அவன் எதுவும் பேசவில்லை. தன் பேச்சு தன் தந்தையை காயப்படுத்திவிட கூடாது என்று கவனமாக மௌனித்துக் கொண்டான்.

“என்னங்க நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? உங்க உடம்புக்கு ஏதாவது வந்திட போகுது.” அவன் தந்தையிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த அலைபேசியை படக்கென்று பிடுங்கினார் நித்தியகல்யாணி.

“யார் உடம்புக்கும் ஒண்ணுமில்லை. அவங்க அம்மா, அப்பா படுத்துற பாட்டில் சைந்தவி தான் ஒரு மாதிரி இருக்கா. அரவிந்த் நீ இப்ப இங்க வர அவ்வளவுதான். எல்லாம் நேரில் பேசுறோம். உனக்கு ஒரு கல்யாணத்தை முடிக்கிறோம். அதுக்கப்புறம் தான் நாங்க நிம்மதியா கண்ணை மூடுறோம்.” என்று சொன்னார் நித்தியகல்யாணி.

“அம்மா நீங்க பேசுறது கொஞ்சமாவது லாஜிக்கா இருக்கான்னு பாருங்க. அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இல்லைன்னு சொல்றீங்க. அவங்க வாழ்க்கையே இப்படி குழப்பமா இருக்கும்போது எனக்கு எதுக்கு கல்யாணம்? என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் அரவிந்த்.

“என்னது, கல்யாணம் பண்ணிக்க முடியாதா?” என்று நித்தியகல்யாணி கேட்க, “அம்மா நான் இன்னும் நிறைய சாதிக்கணும். இங்க இருந்து லட்சம் இல்லை கோடி கோடியா சம்பாதிக்கணும். அப்படியே நான் கல்யாணமே பண்ணிக்கிட்டாலும், நான் நம்ம ஊர்ல இருக்குற பெண்ணை கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். நீங்க அமெரிக்கால இருக்குற நம்ம நாட்டு பொண்ண பாருங்க. கல்யாணம் பண்ணி அமெரிக்காவில் தான் செட்டில் ஆவேன்.” அவன் கூற, நித்திய கல்யாணி நெஞ்சை பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாக அமர்ந்தார்.

“அம்மா… அம்மா…” என்று அவன் அழைக்க, “டேய், எடு வாரியலை. நீ நினைக்கறது ஒன்னும் நடக்கவே நடக்காது. அங்க இருக்க பொண்ண பார்த்து நீ கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச, அதுக்கப்புறம் இங்க வரவே வராத. அம்மா அப்பான்னு ஒருத்தங்க இருக்கிறத ஒரேடியா மறந்திடு” என்று அவன் தாய் கூற, “சரிம்மா, அங்க இருக்கிற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துடறேன்” அவன் கூற, “அரவிந்த் முதல்ல நீ இங்க வா. அதுக்கப்புறம் மத்ததெல்லாம் பேசிக்கலாம்.” நித்தியகல்யாணி பேச்சை முடித்துக் கொண்டார்.

‘வீட்டுல ஏதோ பிரச்சனை மாதிரி தெரியுது. இந்த லட்சணத்துல நமக்கு வேற கல்யாணம் பண்ணனுமுனு சொல்றாங்க. வீட்டுல இருக்குற குழப்பம் எல்லாம் பத்தாதா? இதுல நான் வேற கல்யாணம் பண்ணி இன்னும் குழப்பத்தை கொண்டு வரணுமா?’ என்று அரவிந்த் தலையை தட்டி சிந்தித்தான்.

அவன் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். தாயிடம் ஏதோ வேகத்தில் திருமணம் அது இது என்று பொதுவாக பேசி விட்டான். ஆனால் அவனுள் கேள்வி வந்தது. தன் வீட்டைப் பற்றி எண்ணினான். ‘பணம் காசு போதுமான அளவிற்கு டாலரில் கொட்டுது. ஆனால் பொண்ணு! நமக்கு கல்யாணமா?’ என்று அவன் சிந்தித்தான்.

அவனுக்கு இந்த அறையை மட்டுமில்லை இந்த வீட்டை கூட யாரிடமும் பங்கிட்டு கொள்ள விருப்பமில்லை. ‘ஒரு பொண்ணு கூட நான் என் வாழ்க்கையை பங்கிட்டு கொள்ளணுமா? எதுக்கு?’ என்று யோசித்தான். ‘வர்ற பொண்ணு எனக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும், அவளுடைய சிந்தனையும் என் சிந்தனையும் ஒண்ணா இருக்கணும். இதெல்லாம் நடக்குமா?’ என்று யோசித்தான்.

‘ஒருதடவை அவளை பார்த்தா அவளை திரும்ப பார்க்கனுமுனு தோணனும். அப்படி கூட தோணலைனா, நான் எப்படி அவளை கல்யாணம் செய்யறது? ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு அந்த பொண்ண பிடிக்காம போயிடுச்சுன்னா, நான் என்ன பண்ணுவேன்? கட்டிக்கிட்ட பாவத்துக்காக அந்த பொண்ணு கூட நான் வாழணுமா? இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குமே.’ என்று அரவிந்த் தீவிரமாக சிந்தித்தான்.

‘இப்படி நிம்மதியை கெடுக்குற கல்யாணம் தேவையா? நிம்மதியா கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாமே.’ என்று அவன் தன் இந்திய பயணத்தை ரத்து செய்ய திட்டம் தயார் செய்து கொண்டிருக்க, அவன் உடனடியாக கிளம்ப வேண்டிய செய்தியோடு அலைபேசி அழைப்பு வந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

3தன் குளியலை முடித்துவிட்டு, முடியை துவட்டியபடி வந்து அமர்ந்தாள் பாரதி.“ஏய், இப்ப தான் மழையில் நனைஞ்சன்னு தலையை துவட்டி விட்டேன். திரும்பவும் ஈரத்தலையோட வந்து உட்காந்திருக்க?” பூரணி கடிந்து கொள்ள, “அம்மா, நான் என்ன சின்ன பிள்ளையா? நான் துவட்டிக்குறேன். எனக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. ஹீரோ சாருக்கு அமெரிக்கா பொண்ணு வேணுமாம் ஹீரோயினுக்கு பக்கத்தூரில் பையன் வேணுமாம் இவங்களை ஒண்ணு சேர்க்க சைந்தவி தான் பாலமோ.,?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்