arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 30 (Final Episode)
மலரும் அரும்பே! chevron_right பகுதி 30 / 30

அத்தியாயம் – 30 (Final Episode)

visibility 108
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

30

பாரதி தன் வீட்டில் தாய் தந்தையோடு பேசிக்கொண்டிருந்த பொழுது மோகன் அங்கு வந்தான். “பசங்க உன்னை ரொம்ப தேடுறாங்க, வீட்டுக்கு வர முடியுமா?” அவன் கேட்க, அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. மோகன் இந்த இரண்டு வாரங்களில் ஒருமுறை கூட இவ்வாறு வந்து அழைத்ததில்லை. அதுமட்டுமில்லாமல், மூன்று நாட்களுக்கு முன்பு தான் அங்கு போய் தங்கியிருந்தாள். அன்றிரவு அரவிந்த் இல்லாமல் அவர்கள் அறையில் தங்கவே கூடாது என்ற முடிவும் எடுத்திருந்தாள். இப்படி இருக்க இன்று மோகன் அழைத்தது அவளுக்கு சற்று ஆச்சர்யமாகவும் சங்கடமாகவும் இருந்தது.

அவள் மறுக்கும் முன் அவள் தாய் பூரணி, “போயிட்டு வா, கூப்பிடுறாங்க இல்ல” என்று கூற, வேறு வழியின்றி கிளம்பி அரவிந்த் வீட்டிற்கு சென்றாள்.

நேற்றே அரவிந்த், ‘வேலைப்பளு அதிகம். அதுமட்டுமில்லாமல் மீட்டிங்கில் இருப்பேன். நானே உன்னை அழைக்கிறேன் பாரதி.’ என்றும் கூறியிருந்தான். அதனால் பாரதி அவனுக்கு அழைக்கவில்லை. குழந்தைகளோடு விளையாடிவிட்டு படுக்க சென்றாள். தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள்.

அதிகாலை நேரம் விழிப்பு தட்டிடவே, அவள் எழுந்து வாசலில் கோலமிட, அங்கு கார் வந்து நின்றது. காரில் வந்து இறங்கிய அரவிந்தை பார்த்து அவள் ஸ்தம்பித்து நின்றாள். சூரியனை கண்டு விலகும் பனி போல, அவள் துன்பம், சோகம் எல்லாம் நொடிக்கும் குறைவான பொழுதில் மறைந்து போயின. அவள் முகத்தில் ஆயிரம் மத்தாப்பூக்கள் பூத்ததற்கான மினுமினுப்பு.

அவள் ஸ்தம்பித்து நின்றது என்னவோ ஒரு நொடி தான். சுற்றுப்புறத்தை மறந்து அவள் கால்கள் பறந்தோடி அவன் அருகே செல்ல, அவனோ பின்னே வந்த தந்தையை பார்த்து பேசியபடி அவளை பார்க்காது போல் சென்றான்.

அவளுக்கு கண்கள் கலங்கியது. அவனுக்கோ, ‘நீங்க அங்க இருங்க, நான் இங்க இருக்கேன். நாம அப்பப்ப பார்த்துக்கலாம்.’ அவள் பேசிய வசனம் எல்லாம் நினைவில் வர, ‘அப்பப்ப பார்க்குற மூஞ்சியை பாரு’ அவன் அவளை மனதார திட்டினான்.

அவளுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியது. அவன் அனைவரிடமும் பேசினான். அவன் கவனம் முழுவதும் அவள் மேல் தான். ஆனால், பேசியது என்னவோ அவன் தந்தையிடமும் தாயிடமும் சைந்தவியிடமும், வருணிடமும் தான். அவர்களுக்கு என்று ஒரு வருடமாக அவர்கள் வாங்கிய பொம்மைகளை கொண்டு வந்திருந்தான். “உங்க சித்தி உங்களுக்காக வாங்கினா, ஆனால், இங்க வர்ற அவசரத்துல எடுத்துட்டு வரலை” என்று குழந்தைகளிடம் நீட்டினான்.

பெரியவர்கள், அவர்கள் வேலையை பார்க்க, சிறியவர்கள் விளையாட ஆரம்பித்தனர்.

அப்பொழுது, “அத்தான் காபி.” மோகனிடம் நீட்டிவிட்டு, “அத்தான் காபி…” அவள் அரவிந்த் அருகே படக்கென்று வைக்க, அவனுக்கு முதலில் புரியவில்லை. “நான் தான் காபி வாங்கிட்டேனே” மோகன் இப்பொழுது அப்பாவியாக கூற, தன்னவனை பார்க்காமல் , “அத்தான் காபி…” என்று அவள் மீண்டும் கூற, இப்பொழுது அரவிந்த் அவளை ரசித்து பார்த்தான்.

அவனுக்கு அவள் கோபம் மிகவும் பிடித்திருந்தது. “அண்ணி, எனக்கு காபி வேண்டாம் டீ” என்றான், தன்னவளை பார்த்தபடி.

“அக்கா, என்னால ரெண்டு வேலை எல்லாம் பார்க்க முடியாது. வேணுமின்னா குடிக்க சொல்லுங்க. இல்லைனா அவங்களை கிளம்ப சொல்லுங்க. நான் இங்க இருந்துக்குறேன். அவங்க அங்க இருக்கட்டும்” அவள் கூற,

“ஏன், எங்க தூக்கம் போகவா?” இப்பொழுது மோகன் கேட்க, அவள் மோகனை புரியாமல் பார்த்தாள்.

பாரதி இப்பொழுது புரியாமல் பார்க்க, “என்ன இரண்டு பேரும் முழிக்கறீங்க? நீ ஒரு பன்னிரண்டு மணிக்கு அவனுக்கு போன் போட்டு பேச வேண்டியது. அப்புறம், அவன் ஒன்றரை மணிக்கு எனக்கு போன் பண்ணுவான். அண்ணா, எல்லாரும் நல்லாருக்காங்க தானே? பாரதி எப்படி இருக்கானு கேட்பான், ஒரு பிரச்சனையும் இல்லை தானேன்னு கேட்பான்” அவன் போலியாக சலித்துக்கொள்ள,

“பாரதியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கனு அனுப்புவான்” என்று விஜயா எடுத்து கொடுக்க, “அது தானே, இனி அவன் அங்க இருந்தா, நீயும் அங்க தான் இருக்கனும். இல்லை நீயும் இங்க பாரதி கூட வந்திரு.” மோகன் கூற, “சரி அண்ணா…” இப்பொழுது அரவிந்த் நழுவிக் கொள்ள, பாரதி சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் நினைப்பு முழுதும் அவன் மீது மட்டுமே. ஆனால், கோபம். ‘அரவிந்த் என் கூட பேச மாட்டாங்களா? நானும் பேச மாட்டேன்…’ அவனை போலவே வக்கனை செய்து கொண்டிருந்தாள்.

“கொழுப்பு, கொழுப்பெடுத்தவள், அவளே வர மாட்டாளா?” அவன் அவளை திட்டிக்கொண்டே அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். சில நொடிகளில், “பாரதி… பாரதி…” அவன் அழைக்க, “சைந்தவி, உங்க சித்தப்பாவுக்கு என்ன வேணும்னு கேளு.” அவள் சொல்லி அனுப்ப, “சித்தப்பா… என்ன வேணும்?” சைந்தவி அவர்கள் அறையில் இருந்தாள்.

“என் ப்ளூ துண்டு” அவன் பற்களை நறநறத்தபடி கூற, “சித்தி சித்தப்பாவுக்கு துண்டு…” என்று சைந்தவி கூற, அவள் இடத்தை கூற, சைந்தவி அவனிடத்தில் கூறினாள்.

“திமிர் பிடித்தவள் என்ன பண்றேன்னு பாரு” முணுமுணுத்தபடி, “பாரதி… பாரதி…” என்று அழைக்க, “சைந்தவி…” என்று மீண்டும் சைந்தவியை அழைக்க, அவன் அவள் காதில் ஏதோ சொல்ல,

“சித்தி… சித்தப்பாவுக்கு சித்தி தான்…” சைந்தவி சத்தமாக கூறி முடிக்குமுன் துள்ளி குதித்து படியேறி மூச்சு வாங்கி சைந்தவியின் வாயை மூடினாள்.

“என் மானத்தை வாங்காமல் விடமாட்டீங்க போல…” தனக்கு தானே முணுமுணுத்து கொண்டு, “நீ விளையாட போ…” என்று அவளை அனுப்பி வைக்க, இதை கீழே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மோகன் தன் மனைவியிடம், “ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்லை” என்று கூற, விஜயா தலையசைத்து சிரித்தாள்.

“சித்தி என் வாயை அழுத்தி மூடிட்டாங்க” சைந்தவி விஜயா கிட்ட சொல்ல, “சித்தி கிட்ட என்னனு கேட்போம்.” அவள் சிரிப்பினோடு குழந்தையை சமாதானம் செய்தாள்.

அவள் படபடப்போடு அறைக்குள் நுழைந்தாள், அவனிடம் சண்டையிடத்தான்!

அவள் உள்ளே சென்றதும் கதவு தாழிட்டுக் கொள்ள, அவன் கதவின் மேல் சாய்ந்து நிற்க, அவள் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். கண்ணீர் திரையிட அவன் உருவம் மங்கலானது. அவள் கண்ணீரை கண்டவன், இரு கைகளையும் விரிக்க, அவள் துள்ளி குதித்து அவனிடம் பாய்ந்தாள். அவன் மார்பில் அவள் சரணடைய அணைப்பு அவனது ஆனது.

அவள் விசும்பல் அவன் செவிகளை தீண்ட, “டீச்சரம்மா, இது தான் நீங்க வீராப்பா கிளம்பி வந்த அழகா?” அவள் செவிகளில் அவன் கிசுகிசுக்க, “இது தான் நீங்க என்கூட வரமாட்டேன்னு சொன்ன அழகா?” அவள் முகத்தை சிலுப்ப, அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

“எனக்கு இங்கையும் பிடிக்கலை தெரியுமா?” அவள் சோகமாக கூற, அவன் அவள் முகம் நிமிர்த்தி, “அப்படியா?” அவள் கண்களை பார்க்க, அவள் மேலும் கீழும் தலையசைத்தாள். “இப்ப?” அவளை மெத்தையில் அமர வைத்து, அவள் மடியில் படுத்துக் கொண்டே அவன் கேட்க, “இப்ப எல்லாமே பிடிச்சிருக்கு” அவள் அவன் தலை கோதினாள்.

“எல்லாத்தையும் விட்டுட்டு இங்கயே வந்துட்டேன் பாரதி” அவன் கூற, அவள் கைகள் அசையாமல் நின்றது. அவன் அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து கொண்டு, “ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தியா? சீதை இருக்கும் இடத்துக்கு ராமன் வரலாமே!” அவன் கூற, அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அப்ப, சீதை தீக்குளிக்க வேண்டாமில்லை? ராமன் கூட சந்தோஷமா இருக்கலாமில்லை?” அவன் கண்சிமிட்ட, “நான் சொல்றதை உங்ககிட்ட வந்து ஒப்பிக்குறது யாரு? அவங்க சரியா ஒப்பிக்கலை” அவள் முணுமுணுக்க, “நம்ம அம்மா அப்பா தான் நம்ம வேர், அதை விட்டுட்டு நம்ம கிளைகள் மட்டும் அங்க இருந்தா எப்படி? நாம உயிர்ப்போடு இருக்க முடியுமான்னு விஜயா அண்ணி சொல்லுவாங்க!” அவர்கள் குழந்தைகளை மலர், அரும்பு மொட்டு என பேசியதை கொஞ்சம் மாற்றி அவன் இப்பொழுது கூறிக்கொண்டே, அவள் மூக்கை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்ச, “நாங்க பேசினதை உங்ககிட்ட சொன்னது யார்?” அவள் அவன் காதை திருகினாள்.

“ஏய்! நான் என்ன உன் ஸ்டுடென்ட்டா? அடிக்கிற?” அவன் எழுந்து அமர்ந்தான். “யார் சொன்னா?” அவள் கேட்க, “சொல்லலை. நீங்க பேசினதை நானே கேட்டேன். அண்ணா கிட்ட பேசினேன். அப்ப நீ வந்தது தெரியும். அண்ணா தான் நீங்க பேசுறதை கேட்க சொல்லி வச்சாங்க நான் கேட்டேன்.” அவன் பெருமையாக கூற, “என்னத்த கேட்டீங்க? தப்பு தப்பா சொல்லறீங்க” அவள் இப்பொழுது அவனை அடிக்க முற்பட, அவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு, “தப்பில்லை பாரதி. ரீடிங் பிட்வீன் தி லைன்ஸ். நீ சொல்ல வர்ற சாராம்சம் இது தானே? எனக்கு என்னவோ நீ சொல்றது சரின்னு தோணுச்சு” அவன் சொல்ல, “உங்க கனவு?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.

“எனக்கு அமெரிக்கா போகணும். அங்க வேலை பாரக்கனும்னு ஆசை. அது தான் நிறைவேறிடுச்சே! நமக்கு என்ன பண தேவையா அங்க இருக்க? அங்க இருக்கிற எல்லாம் இங்க இருக்கு. அன்னைக்கு என்கிட்ட நீ பேசினப்ப இருந்த தவிப்பு என்னை கொன்னுடுச்சு பாரதி. என் பாரதி, பேச முடியாமல் மென்று முழுங்கிய சோகம். போதும் பாரதி. நீ நான் இல்லாமலும் இப்படி தான் தவிப்ப, அத்தை மாமா இல்லாமலும் இப்படித்தான் தவிப்ப. அந்த வருத்தத்தை நான் உனக்கு ஆயுசுக்கும் தர மாட்டேன்.” அவன் அவளை தோளோடு சேர்த்துக் கொண்டான்.

“நான் இங்க வந்ததில் எல்லாருக்கும் சந்தோசம் தெரியுமா? டீச்சரம்மா சொன்னா சரியா தான் இருக்கும். என் பாரதி தப்பு பண்ண மாட்டா, தப்பா சொல்லவும் மாட்டா” அவன் உறுதியாக கூற, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“நான் தப்பு பண்ணுவேன் அரவிந்த், தப்பும் பண்ணிருக்கேன் அரவிந்த்.” அவள் கூற, அவன் அவளை நம்பாமல் பார்த்தான்.

“என்ன பாரதி?” அவன் கேட்க, அவன் கைகளை அவள் வயிற்றில் வைத்து, “துடிப்பு கேட்குதா அரவிந்த்?” அவள் கேட்க, அவன் அசையாமல் நின்றான்.

“பாரதி…” அவன் தடுமாற, “நான் ஊருக்கு கிளம்புற முதல் நாள் எனக்கு தெரியும். சொன்னால், நீங்க என்னை தனியா அனுப்ப மாட்டிங்க, பயப்படுவீங்க. அது தான் சொல்லலை. இங்கயும் நான் யார் கிட்டயும் சொல்லலை. எனக்கு உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்.” அவள் சொல்ல, அவன் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

“இதை தான் அன்னைக்கு சொல்ல வந்தியா பாரதி?” அவன் கேட்க, “இல்லை… அன்னைக்கு சொல்ல முடியலையேன்னு வருத்தப்பட்டேன்… அவ்வளவு தான். அன்னைக்கும் நான் உங்ககிட்ட சொல்ல நினைக்கலை.” அவள் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“ஏன் பாரதி? இங்க வந்த பிறகாவது சொல்லிருக்கலாமே?” அவன் கிஞ்சித்தும் கோபம் இல்லாமல் பொறுமையாக கேட்க, “சொன்னா நீங்க உடனே கிளம்பி வருவீங்கன்னு எனக்கு தெரியும்” அவள் புன்னகைக்க, அவள் மனம் புரிந்தவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.

அவன் தோளில் அவள் தன் கைகளை மாலையாக்கி கொள்ள, அவன் அவள் முகத்தை ஏந்தி, “நான் உனக்காக இங்க வரணும். அது தானே? நான் உனக்காக இங்க வந்திருக்கேன் பாரதி.” அவன் கூற, “நான் சொல்லாம இருந்தது தப்பு தான்” அவள் சலுகையாக சாய்ந்து கொள்ள, “அதெல்லாம் இல்லை பாரதி. நீ சொல்லிருந்தா கூட நான் எமோஷ்னலா தான் யோசிச்சிருப்பேன். நீ சொல்லாம இருந்தது தான் சரி. நான் தெளிவா யோசிச்சேன்.” அவன் கூற, ‘நானும் இதை தான் யோசிச்சேன்…’  தன்னவனின் புரிதலையும் பெருந்தன்மையையும் எண்ணி சிரித்துக் கொண்டாள்.

இருவரும் சில மணித்துளிகள் பேசிவிட்டு, அவள் பெற்றோரை பார்க்கச் சென்றனர்.

ஓரிரு நாளில் இருவரும் பள்ளிக்கு சென்றனர். அவன் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவள் ஆசிரியையாக அவள் பணியை தொடர்ந்து கொண்டே அரவிந்துக்கும் உதவி செய்தாள். அவன் பல மாற்றங்களை சொல்ல ஆரம்பித்தான். அவள் வாக்குவாதத்தில் இறங்கினாள். இருவருக்கும் இடையே சண்டை வர, வகுப்பை முடித்துவிட்டு வருவதாக பாரதி கிளம்பினாள்.

அவன் மேஜையிலிருந்த விநாயகரை பார்த்து, “நான் கேட்ட மாதிரி எல்லாத்தையும் கொடுத்தியே பிள்ளையாரப்பா, என் சொல் பேச்சை கேட்குற மனைவியை மட்டும் தரலியே!” அரவிந்த் புலம்ப, “அதனால தானே நான் கல்யாணமே பண்ணிக்கலை” விநாயகர் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினார்.

அவர்கள் இருவரும் ஊரில் உள்ள அரும்புகள் அனைத்தும் அழகாய் அறிவாய் மலர்ந்திட திட்டமிட்டனர். வாக்குவாதங்களுக்கு இடையே! ஆம், வாக்குவாதங்களுக்கு இடையே!

அவன் சொல்வதை அவள் அப்படியே கேட்பதிலும்

அவள் சொல்வதை அவன் அப்படியே கேட்பதிலும்

வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருந்திட போகிறது?

சுவாரஸ்யத்தோடு மலர்ந்தது அவர்கள் வாழ்க்கை!

அவர்களோடு அங்கிருந்த அரும்புகள் வாழ்க்கையும்!

*நன்றி

அகிலா கண்ணன்*

 

forum 3 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்