அத்தியாயம் – 29
29
அவன் அவளை விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பினான். அவன் திரும்பினானே ஒழிய, அவன் மனம் அவளோடு சென்றிந்தது. பரந்து விரிந்த அந்த நாட்டில் அவன் தனிமையே உணர்ந்தான். வீட்டிற்குச் சென்ற பின் அவனுக்கு வேலையே ஓடவில்லை. ‘இத்தனை வருடங்கள் அவள் இல்லாமல் தான் இங்கு இருந்தேனா?’ என்று அவன் மனம் தவித்தது.
அதன் பின்னர் அலைபேசியில் செய்திகளை பார்த்துக் கொண்டே இருந்தான். பனி கொட்டிக் கொண்டே இருந்தது. பனிப்புயலின் வேகம் மட்டுப்பட்டு, விமானங்கள் இயங்க ஆரம்பித்திருந்தாலும் விமானம் புறப்படும் வரை பனிப்புயல் இருந்து கொண்டேதான் இருந்தது.
“இப்படி அவசரப்பட்டு தனியா போகணுமா?” என்று அவன் தனக்கு தானே புலம்பினான். அவளிடம் பேச முடியாது. நேரம் சென்று கொண்டே இருந்தது. அவன் வானத்தை வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அவள் சிந்தனைக்கும் என் சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆனதோ?’ அவள் அவனை விட்டு சென்றது அவனுக்கு வலித்தது. அதுவும் அவள் சொன்ன வார்த்தை, ‘அவள் அங்கே… நான் இங்கே…’ அவனுக்கு இப்பொழுது வருத்தம் மாறி, வலி அதிகமாகி அவள் மீது கோபம் வந்தது. நேரம் அசையாமல் இருந்தது.
அவன் மெத்தையில் சரிந்தான். அவனுக்கு தூக்கம் வரவில்லை. ‘பாரதி பத்திரமாக போய்விடுவாளா? பிளைட் ஏதாவது கேன்சல் ஆகி இடையில் மாட்டிக்கிட்டா அது பெரிய தொந்தரவு ஆயிடுமே. என்ன சாப்பிடுவா? எப்படி இருப்பா?’ என்று அவன் தவித்துக் கொண்டே இருந்தான்.
ஆனால் எந்தவித பிரச்சனையுமின்றி பாரதி இந்தியா வந்து சேர்ந்தாள். அவளுள் கலவையான எண்ணப்போக்கு. அரவிந்தை விட்டுவிட்டு வந்த வலி, பெற்றோரை பார்க்க போகும் சந்தோசம்.
விமான நிலையத்தில் அவளை அழைப்பதற்காக மோகன் வந்திருந்தான். “நீ முதலில் அப்பாவை பார்த்துட்டு நம்ம வீட்டுக்கு வா. நம்ம வீட்டில் யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. அதனால நான் உன்னை உங்க வீட்டிலேயே விடுறேன்” என்று கூறி, பாரதியை அவள் வீட்டில் விட்டுச் சென்றான். இவளின், ‘ரீச்ட்’ என்ற குறுஞ்செய்தியை பார்த்த பின்பு தான் அவனுக்கு அங்கு நிம்மதி பிறந்தது.
“அப்பாவுக்கு சரியாயிடுச்சு. நீ எதுக்கு இப்படி அடிச்சு புடிச்சு வரணும்? மாப்பிள்ளையோட சேர்ந்து வர வேண்டியதுதானே? நீ தனியா வர்றத நினைச்சி எங்களுக்கு ஒரே பயம். அதுவும் ஒரே பனியாமே?” என்று பூரணி அக்கறையோடு கூற, “ஏம்மா, ஒரு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்து இருக்கேன். வந்த உடனே இதைத்தான் கேட்பீங்களா?” என்று அவள் கேட்க, “சரி சரி” என்று அவளை வரவேற்றார்.
மோகன் கிளம்பிவிட, அதன் பின், தாய், தந்தை, மகள் என்று மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அரவிந்தை பற்றி அவர்கள் பல கேள்விகள் கேட்க, அவள் அரவிந்தை வானளவாக புகழ்ந்தாள். அதேபோல் அவர்களும் அவள் வீட்டினரை புகழ்ந்தனர். “அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நல்லா பாத்துக்கிட்டாங்க. விஜயா கூட முன்னாடி கல்யாணத்தப்ப சரியா பேசல. அதனால நான் பயந்தேன். ஆனால் இப்ப வீட்டு பொண்ணு மாதிரி இருந்து எல்லாம் பார்த்துக்கிட்டா. நீ இல்லாத குறையே தெரியாத மாதிரி பார்த்துக்கிட்டாங்க” அவர் கூற, பாரதிக்கு தன் தாயின் பேச்சு நிம்மதியை தந்தது.
ஆனால், அவள் தந்தையை பார்த்து கண்கலங்கினாள். “நான் அப்பா கூட இல்லையே?” அவள் புலம்ப, அவள் தந்தை அவள் தலையை வாஞ்சையோடு தடவினார். “அப்பாவுக்கு சரியாகிடுச்சு பாரதி. முன்ன விட இப்ப எவ்வளவோ பரவாயில்லை.” என்று அவர் கூற, அவள் தலையசைத்துக் கொண்டாள்.
“அப்பா இப்ப நல்லா தேறிட்டாங்க பாரதி. நான் சாப்பாடெல்லாம் செம்ம ஸ்ட்ரிக்ட்.” அவர் கூற, “ஒண்ணுமே தர மாட்டேங்குறா” இப்பொழுது சிதம்பரம் குற்ற பத்திரிகை வாசித்தார்.
இடையே அரவிந்த் வீட்டினரை பார்த்துவிட்டு வந்தாள்.
“சித்தி” என்று சைந்தவி கட்டிக்கொண்டாள். வருண் நல்ல கலகலப்பாக பேசினான். ஒரு வருடத்தில் பல மாற்றங்கள் தெரிந்தது. மீண்டும் தன் வீட்டிற்கு சென்றவள், தாய்க்கு உதவி செய்தாள். ஆனால் இரண்டு வாரத்திற்கு மேல் அவளால் இருக்க முடியவில்லை.
அரவிந்த் அவ்வப்பொழுது பேசி, “என்ன ஏது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தானேயொழிய, அவனால் அதிக நேரம் பேச முடியவில்லை. நேர வித்தியாசம், வேலை என்று இருவருக்கும் அடுக்கடுக்காக இருக்க, அவர்களால் பல மணி நேரம் பேசிக்கொள்ள முடியவில்லை.
அவளுக்கு அவன் மீது எந்த கோபமும் இல்லை. தந்தையை பார்க்க வேண்டும் என்று எண்ணினாள், வந்துவிட்டாள். அவள் வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாம் அத்தோடு முடிந்துவிட்டது. ஆனால், அவனுக்கு அவள் மீது கோபம், வருத்தம் எல்லாம் இருந்தது. இரண்டு வாரத்திற்கு பின், அன்று அவள் அரவிந்தின் வீட்டிற்கு வந்திருந்தாள். விஜயா, மோகன், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். சில நேரம் சில மணித்துளிகள் கழித்து பெரியவர்கள் உறங்கச் சென்றிட, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் பாரதி.
“வந்ததிலிருந்து இன்னும் ஸ்கூலுக்கு போகலையா பாரதி?” மோகன் கேட்க, “இல்ல அத்தான் அவங்க வந்த உடன் அவங்களோட போறேன்” என்று கூற, ‘பள்ளி… பள்ளி…’ என்று தான் சுற்றி வந்ததும், இப்பொழுது அவன் இல்லாமல் அங்கு போக விருப்பம் இல்லாமல் இருப்பதும், அவளுக்கே விசித்திரமாக இருந்தது. அதன் பின் விஜயா ஏதோ பேச வாய் எடுத்து, வாயை மூடிக்கொள்ள மோகன் புருவம் உயர்த்தினான்.
அதை பார்த்த பாரதி, “அரவிந்த் இப்படியே தான் பண்ணுவாங்க. என்னனு கேட்க மாட்டாங்க. புருவத்தை தான் உயர்த்துவாங்க” என்று பாரதி கூற, “என்ன பாரதி அரவிந்தை மிஸ் பண்றியா?” என்று விஜயா கேட்டாள்.
“மிஸ் பண்ணாம இருப்பேனா அக்கா?” என்று அவள் கூற, “அப்புறம் ஏன் இப்படி அவசரமா வந்த? அது தான் நாங்க அப்பாவை பார்த்துப்போமில்லை?” என்று விஜயா கேட்க, “எனக்கு அம்மா, அப்பாவை பார்க்கணும்னு தோணுச்சு. எல்லாரையும் பார்க்கணும்னு தோணுச்சு. அதான் வந்துட்டேன்” பாரதி கூற, அதற்கு மேல் விஜயா தோண்டி துருவவில்லை.
ஆனால் மோகன் பேச்சை தொடர்ந்தான். “என்ன பாரதி இங்கே இருக்கணும்னு நினைக்கிறாயா?” அவன் கேட்க, “ஆமா அத்தான், எனக்கு இங்கே இருக்கணும்னு தான் ஆசை. ஆனால் அவங்களுக்கு அங்க இருக்கணும்னு ஆசை” சற்று வருத்தமாகவே கூற, “என்ன பண்றது பாரதி நம்ம கட்டமைப்பு அப்படித்தானே ராமன் இருக்கும் இடம் தானே சீதைக்கு அயோத்தி?” என்று விஜயா கேலியாகவே கூற, “அப்படி பேசி பேசி சீதையை தீக்குளிக்க வச்சது தானே மிச்சம்?” இப்பொழுது அவளும் கேலி போல் சொல்லி சிரித்தாள்.
“எல்லார் வீட்டிலையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருன்னு தானே அக்கா சொல்லுவாங்க. இல்ல உனக்கு இங்க தான் புடிச்சிருக்கு அப்படினா மாப்பிள்ளை இல்லைனாலும் பரவால்ல இங்க இருன்னு சொல்லுவாங்களா?” என்று பாரதி சலிப்பாக கேட்டாள்.
“சரி அப்படி இருக்க சொன்னாலும் நீ இருப்பியா பாரதி அரவிந்த் இல்லாமல்?” என்ற விஜயா அவளை கிடுக்குப்பிடியில் நிறுத்த, இப்பொழுது பாரதி மறுப்பாக தலையசைக்க, “அம்மா அப்பா மட்டும் இல்ல பாரதி நம்மளாலயும் இருக்க முடியாது” அவள் கூற, பாரதி மௌனித்தாள்.
“கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் பழகிடும்.” விஜயா சமாதானம் செய்ய, தன் கண்கள் கலங்கி விடுமோ என்ற அச்சத்தில் பாரதி தன் பேச்சை மாற்றினாள். “அக்கா வருண் கிட்ட நல்ல மாற்றம் தெரியுது. சூப்பரா படிக்கிறான். முன்னாடி விட இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. குழந்தைங்க கிட்ட நல்ல மாற்றம் தெரியுது, படிக்கறதுலயும் சரி… நடவடிக்கைகளிலும் சரி” பாரதி இன்முகமாக குழந்தைகளை பற்றி பேச ஆரம்பித்தாள்.
“எல்லாருக்கும் எல்லா விஷயமும் உடனே புரியறதில்லை பாரதி. குழந்தைகள் மலர வேண்டிய அரும்புகள் தானே. தனியாக இயங்குறாங்க, தனியா இருப்பாங்கன்னு விட்டுட்டு போனேன். ஆனா அது ஒரு செடியிலிருந்து ஒரு மொட்டை கீழ பறிச்சி போட்ட மாதிரி ஆயிடும் இல்லையா? நாம தானே கிளையா இருந்து அந்த அரும்பை தாங்கி பிடிக்கணும். இறுக்கி பிடிச்சாலும் பூவா மலர மாட்டாங்க. கொஞ்சம் சுதந்திரம் கொடுத்து அவங்க போக்குல விட்டு பிடிக்கணும். நம்ம கண்காணிப்பில் இருக்கனும்” என்று விஜயா சிரித்துக் கொண்டாள்.
“ரொம்ப பெரிய பாடத்தை சிம்பிளா சொல்லிட்டீங்களே அக்கா.” பாரதி சிலாகிக்க, “உன்கிட்ட கத்துக்கிட்டது தான் பாரதி” அவள் கூற, மோகனின் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் தெரிந்தது.
அன்றிரவு பாரதி அவர்கள் அறையில் படுத்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இருண்ட வானம், அவளுள் வெறுமையை தந்தது. நிலவும், வானமும், இருளும் அதில் தெரிந்த நட்சத்திரங்களும் என அனைத்தும் அவன் நினைவுகளையே தர, ஜன்னலை இறுக மூடினாள்.
ஆனால், அவள் மனக்கதவு?
‘என் வீட்டில் படுத்தாலும் தூக்கம் வர மாட்டேங்குது. ஒரு தனிமை இருக்கு. இங்க வந்து படுத்தா சுத்தமா முடியலை.’ எண்ணத்தோடு அலைபேசியை எடுத்து, தன்னவனுக்கு அழைத்தாள்.
அவளுக்கு நள்ளிரவு! அவன் பணியில் இருக்க, “பாரதி…” பதட்டத்தோடு எடுத்தான். “எல்லாரும் நல்லாருக்காங்களா?” அவன் கேட்க, “ம்… எல்லாரும் நல்லாருக்காங்க” அவள் கூற, அவன் பதட்டம் குறைந்தது.
“என்ன பாரதி, என்ன இந்த நேரத்துல? தூங்கலியா?” அவன் கேட்க, “இல்ல…” என்றாள் அவள்.
“என்ன விஷயம்?” அவன் கேட்க, “ஒண்ணுமில்லை சும்மா தான்” அவள் கூற, “மாமாக்கு உடம்பு நல்லா தேறிடுச்சா?” அவன் கேட்க, “ம்… அப்பா நல்லாருக்காங்க.” அவள் கூற, “அத்தை…” அவன் ஆரம்பிக்க, “அம்மா, அப்பா, அத்தை, மாமா, மோகன் அத்தான், அக்கா, சைந்தவி, வருண், ஸ்கூல், அங்க பசங்க, எதிர் வீட்டு ஆட்டு குட்டி, பக்கத்துக்கு வீட்டு நாய் குட்டி… நாலு வீடு தள்ளி இருக்கிற கன்னுகுட்டி எல்லாம் நலம்” அவள் எரிந்து விழ, அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.
“என்ன வேணும் பாரதி உனக்கு? உன் விசா ஸ்டம்பிங் பண்ணனும். வர கொஞ்சம் டைம் எடுக்கும். அது வந்ததும் நீ கிளம்பி வந்திடலாம் சரியா?” அவன் கேட்க, அவள், “ம்…” கொட்டினாள்.
“இப்ப இங்க என் விசால இருக்கிறவங்க ட்ராவல் பண்றது அவ்வளவு சரி இல்லை பாரதி. நான் வந்தால் அங்கயே இருக்கிற மாதிரி ஆகிடும்.” அவன் அவளுக்கு புரிய வைக்க முனைய, “இல்லை… இல்லை… நீங்க வர வேண்டாம். நானே வரேன். கொஞ்ச நாள் தானே,” அவள் கூற, “சரி பாரதி…” என்றான்.
அவள் மேலும் பேசாமல் நிற்க, “பாரதி…” நேசத்தை வெளிப்படுத்தியது அவன் குரல். அவன் ஆழமான குரலில் அழைக்க, அவளிடம் பதிலில்லை. “பாரதி…” அவன் மீண்டும் அழைக்க, அவளிடம் பதில் இல்லாமல் போக, அவன் அவள் மௌனத்தை உள்வாங்கினான்.
சத்தத்தை விட மௌனம் சில நேரங்களில் பேரொலி!
அவள் மனதின் பேரொலியை அவன் உணர்ந்தானா?





சூப்பர் சூப்பர் ❤️