அத்தியாயம் 10
பித்து பிடித்தார் போல யார் கேட்ட கேள்விக்கும் பதில் கூறாமல் அறைக்கு சென்று முடங்கினாள் திவ்யா! அவளது மனமோ குரங்காக கார்த்திகேயனையே பற்றி கொண்டு தொங்கியது! கடவுளே என்னை காப்பாற்று! என்னுடைய மனதிடம் இருந்து என்னை காப்பாற்று! கார்த்திகேயன் இன்னொரு பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டவன்… அவனை இப்படி நினைப்பது அந்த பெண்ணுக்கு செய்யும் துரோகம்… வேண்டாம் என்று ஒரு மனம் கூறினாலும் மறுமனமோ அவன் வேண்டும் என்று கூப்பாடு போட்டது! அடங்கு மனமே அடங்கு! கடமையை பார் என்று கடிவாளமிட்டது அறிவு!
செல்பேசி அழைத்தது! பேசியது நிலா தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர்!
“என்னம்மா… பெரிய ஸ்கூப் ஒன்னு கொண்டு வரேன்னு போனீங்க… என்ன ஆச்சு?”
“ஆச்சு சார்… நாளைக்கு பிளாஷ் பண்ணிடலாம்…”
“ரொம்ப கான்ட்ரவர்சியா இருக்கணும் திவ்யா! டிஆர்பி ரேட்டிங் எகிறனும்… சரியாம்மா?”
“ஓகே சார்… கண்டிப்பா…”
சொல்லி விட்டு செல்பேசியை வைத்து விட்டு மெயில் பாக்ஸ் திறந்தாள்! மறுபடி ஒரு அனாமதேய கடிதம்! காலாவதியான மருந்துகளை எப்படி சுஷ்ருதா வாங்கி மறுபுழக்கத்தில் விடுகிறது என்று! சிறிய சிறிய ஆதாரத்தை கூட விடாமல் பதிவு செய்திருந்தனர்… ஸ்ரீராமை அவசரமாக அழைத்தாள் திவ்யா! ரிங் போய் கொண்டே இருக்க எடுக்கவில்லை! அவசரமாக அவளே அமர்ந்து அனைத்து எடிட்டிங் வேலையும் முடித்தவள் ஷூட் செய்வதற்காக அவளே கிளம்பினாள்!
நாளை காலை அதிர போவது தமிழகம் மட்டுமா?
அத்தியாயம் பத்து
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே…
இடுக்கண் களைவதாம் நட்பு…
சச்சிதானந்தம் மிக தீவிரமாக வக்கீல்களிடம் பேசி கொண்டிருந்தார்! உடன் அரவிந்தன்! ஷாலினி உட்பட அனைவரும் அதிர்ந்து போயிருந்தனர்! காலையில் நிலா தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி அனைவரையும் புரட்டி போட்டிருந்தது! கேள்வி மேல் கேள்வி… செல்பேசியில் கேட்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதில் கூற முடியாமல் சலித்து போயிருந்தாள் ஷாலினி! அவளை போலவே அவளது தந்தையும்! திருமணம் சமீபத்தில் இருக்கும் போதா இப்படி ஆக வேண்டும் என்று நொந்து போயிருந்தாள் ஷாலினி! அரவிந்தனும் தன் பங்குக்கு சச்சிதானந்தத்திடம் கூறி கொண்டிருக்க அழுத்தம் அதிகரித்து கொண்டிருந்தது!
“இப்போ என்ன ஆகும்ன்னு சொல்றீங்க ராமசுப்பு?” ராமசுப்பு உச்சநீதிமன்ற வக்கீல்… நிமிட கணக்கில் சம்பாதிப்பவர்!
“சார்… பிரஷர் ஜாஸ்தி ஆகற மாதிரி தான் தெரியுது… கார்த்திகேயனால எப்படி சமாளிக்க முடியும்ன்னு கணிக்க முடியலை… இப்போ நான் சென்னைல பேசின வரைக்கும் பார்த்தா அரெஸ்ட் ஆக வாயிப்பு அதிகம் இருக்குற மாதிரி தெரியுது… மருந்துன்னா எப்படி வேணும்னாலும் சட்ட ஒட்டைல புகுந்து நான் வெளிய வந்துடலாம் சார்… ஆனா நார்கொடிக்ஸ்… எந்த செக்ஷன்ல பைல் பண்றாங்கன்னு பொறுத்துதான் சொல்ல முடியும்… ஒரு சில செக்ஷன்ல கேள்வியே கேக்க முடியாம ஒரு வருஷம் கூட உள்ள வைக்கறதுக்கு வழி இருக்கு சச்சிதானந்தம் சார்…”
“ஆனா இப்படி ஒரு விஷயத்த எனக்குமே தெரியாம எப்படி கார்த்தி பண்ணிட்டு இருந்தான்னு எனக்கும் புரியலை அங்கிள்… கடவுளே… எப்படி வெளிய வர்றதுன்னு தெரியலையே…” அரவிந்தன் புலம்பி கொண்டிருக்கும் போதே ராமசுப்பு…
“நீங்க ஒரு அறிவிப்பு குடுத்துடுங்க… எனக்கும் சுஷ்ருதாவுக்கும் சம்பந்தம் இல்லைன்னும்… உங்களுக்கு தெரியாம இப்படி இல்லீகல் வேலைல ஈடுபட்ட கார்த்திகேயன் மேல சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க போறதா மென்ஷன் பண்ணிருங்க…”
“அப்படி அறிவிப்பு குடுத்துட்டா எனக்கு பிரச்சனை வராம இருக்குமா?” அவனது கண்கள் மின்னியது! அவனை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் அல்லவா!
“மேல ஏதாவது வந்தா நான் பார்த்துக்கறேன்… ஆனா எப்படியும் கார்த்தி அரெஸ்ட் ஆக போறது உறுதி…”
இதை கேட்கும் போதே சச்சிதானந்தத்திற்க்கும் ஷாலினிக்கும் முகம் கருமை படர்ந்தது! ஷாலினிக்கு உள்ளே குளிர் எடுத்தது! அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி பூதாகரமாக தோன்றியது! எதிர்காலத்தை எண்ணிய பயம்…
“கல்யாண டைம்ல இப்படி ஆயிடுச்சே அர்விந்த்…” ஷாலினியின் குரலில் டன் கணக்கில் வருத்தம்!
“கல்யாணத்துக்கு முன்னாடியே கார்த்தியோட முகம் தெரிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கோ ஷாலினி… உனக்கென்ன தேவதை மாதிரி இருக்க… உனக்கா மாப்பிள்ளை கிடைக்காது?” அரவிந்த் நேரம் பார்த்து அடித்தான்!
“அர்விந்த் என்ன சொல்ற நீ?” என்றாள் அதிர்ச்சியாக…
“ஆமா ஷாலு… அரவிந்த் சொன்னதுதான் கரெக்ட்… நல்லவேளை இந்த விஷயம் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிய வந்துட்டது… தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்…” சச்சிதானந்தம் ஒரேடியாக முடிக்க பார்க்க…
“அப்பா… இந்த நேரத்துல தானே அத்தான் கூட…” என்று அவள் சொல்ல வர கோபமாக தடுத்து முறைத்தார்!
“ஏன் உன் அத்தான் கூட நீயும் களி திங்க போறியா?” கோபமாக அவர் கேட்கவே ஒன்றும் பேசாமல் மௌனமானாள்!
“இந்த மாதிரி வரும் போது நமக்கு சேதாரமில்லாம கழண்டுக்கறதுதான் புத்திசாலித்தனம் ஷாலினி… இப்போ நாம தலைய குடுத்தா நம்ம தலை தான் உருளும்… இந்த பிரச்சனைல இருந்து கார்த்தி வெளிய வரட்டும் அப்புறமா பார்த்துக்கலாம்…” சட்டென்று முடிவு எடுத்து தனது பெண்ணையும் அதற்க்கு உடன்பட செய்து விட்ட நிலையை என்ன சொல்ல? உறவு முறை என்றால் துன்பம் வரும்போது சிறிதாவது உதவிக்கு வர வேண்டும்… ஆனால் கஷ்டம் என்று வரும் போது தாங்கள் மட்டும் தப்பித்து கொள்வதை என்ன சொல்லுவது?
இதை கேட்கும் போதே சட்டென்று எழுந்து உள்ளே சென்றாள் ஷாலினி! போதுமடா சாமி என்றிருந்தது! இவனென்ன ஆணா என்று நிறைய முறை சந்தேகப்பட்டு இருக்கிறாள்… தான் நெருங்கி நெருங்கி போனாலும் அதற்கு விடையே கிடைக்காமல் போனது இப்போது அவளுக்கு தப்பிய உணர்வையே தந்தது!

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!