arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 11

அத்தியாயம் 11

visibility 772
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

கார்த்திகேயனின் வீட்டில் கிளம்பிய புயல், வைஷ்ணவியின் வீட்டில் மையம் கொண்டு திவ்யாவின் வீட்டையும் தாக்கியது! பெரியவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி திட்டி கொண்டிருக்க, அந்த ஏச்சுக்கு தலைவி வீட்டிற்கே வராமல் இழுத்தடித்து கொண்டிருந்தாள்! வீட்டில் உள்ளவர்களின் கொதிநிலை எல்லையை கடந்து கொண்டிருந்தது! ஏனென்றால் ஷாலினியின் வீட்டில் இருந்து செய்தி வந்திருந்தது… திருமண ஒப்பந்தத்தை முறித்து கொள்வதாக… அதை தொடர்ந்த உற்றார் உறவினரின் கேள்விகள் வேறு… பாண்டியில் மங்கை தனியாக நொந்து போனார்… சென்னையில் வைஷ்ணவி!

“எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்” என்று ஸ்ரீயை பிடித்து உலுப்ப அவனால் ஒன்றுமே பேசமுடியவில்லை! தான் வேண்டாம் என்று கூறியும் இப்படி செய்து விட்டாளே என்று கோபம் அளவு கடந்து கொண்டிருந்தது! திவ்யாவின் வீட்டினர் அனைவரும் வைஷ்ணவியின் வீட்டிற்கு சென்று தங்களால் இயன்றவரை ஆறுதல் கூறி சாந்தபடுத்த முயன்றனர்! ஆனால் நாயகனான கார்த்திகேயன் வரவே இல்லை! அவனை கெஸ்ட் ஹவுஸ் சென்று அழைக்கவும் அனைவரும் பயந்து கொண்டு தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்! நேரம் கடந்து கொண்டே இருந்தது… மதிய உணவுக்கும் திவ்யா வரவில்லை… எல்லாரையும் பார்க்க சங்கடப்பட்டு கொண்டு எங்காவது இருப்பாள் என்று நினைத்தான் ஸ்ரீ! அவளது செல்பேசியும் உயிருடன் இல்லாதது அவளுக்கு உதவியாக போனது!

வெளியே நிழலாட… திவ்யா!

ஒவ்வொருவராக முகத்தை திருப்பி கொண்டு போக ஸ்ரீயும் வைஷ்ணவியும் அவளை உள்ளே அழைத்தனர்! எப்படியும் பிரச்சனை வெடிக்கும் என்று கணித்தே வந்து இருந்ததால் அவளுக்கு ஒன்றும் மாற்றாக தெரியவில்லை! வைஷ்ணவியின் மாமியார் தான் அனைத்தையும் கொட்டி விட்டார்! திருமணம் நின்றது முதற்கொண்டு… அதை கேட்டவுடன் அவளது மனம் வருத்தத்தை சுமந்தது!

“கார்த்திக் எங்க அண்ணி?” நேராக அவனையே கேட்ட முறை வைஷ்ணவியின் மனதுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது! இவளுக்கு அண்ணனிடம் பகை என்று ஒன்றுமில்லை என்று நினைத்து கொண்டு…

“அண்ணா… கெஸ்ட் ஹவுஸ்ல இருக்காங்க… காலைல இருந்து வெளியவே வரலையாம்… எங்களுக்கும் போகவே பயமா இருக்கு…”

“நான் போய் பார்க்கட்டா?”

“ரொம்ப கோபத்துல இருப்பாங்க திவி… உனக்கு அவங்க கோபம் பற்றி தெரியாது…”

“நான் சமாளிச்சுக்கறேன் அண்ணி…”

“இப்போ நீ அங்க போய் என்ன பண்ண போற? எல்லாத்துக்கும் காரணமே நீ தானே… சொல்ல சொல்ல கேட்காமல்…” ஸ்ரீ மற்றவர்கள் அறியாதவாறு கடித்தான்!

“ஏன் ஸ்ரீ இப்படி சொல்ற? அது என் வேலை… என் வேலைய நான் கரெக்டா செய்தேன்… இது என்னோட பிரெண்ட்ஷிப்… நீயும் புரிஞ்சுக்க மாட்டியா?” வேதனையாக கேட்டாள்!

“எனக்கு என்னவோ இது சரியா படலை திவி… நீ செய்து வச்ச வேலைக்கு அண்ணன் கிட்ட உன் முகத்த காட்டாம இருக்கறதுதான் பெட்டர்ன்னு தோணுது…” ஸ்ரீ தனது மெய்யான கவலையை வெளியிட…

“இல்ல ஸ்ரீ… எப்படியும் சமாளிச்சுடுவேன்… ஒரு பிரெண்டா இப்போ நான் கூட இருக்க நினைக்கறேன்… தப்ப சுட்டி காட்டுறது கண்டிப்பா தப்பு கிடையாதே ஸ்ரீ…” அவளது மனநிலையை பார்த்து ஸ்ரீக்கு ஆச்சரியமாக இருந்தது… வரிந்து கட்டி கொண்டு அவனுக்கு எதிராக நிகழ்ச்சி கொடுத்துவிட்டு இப்போது அவனுக்கு துணையாக இருக்க நினைக்கிறாளே? இவளை என்னவென்று சொல்வது?

“என்னவோ சொல்ற… ஆனா எனக்கு பயமா இருக்கு… இப்போ தனியா அங்க போறது நல்லது இல்ல… வேணும்னா நானும் கூட வரேன் திவி…” என்று சொன்னவனை கையமர்த்தி விட்டு…

“நம்ம கார்த்திக் தானே… அதெல்லாம் அவர் எப்படி பேசினாலும் ரியாக்ட் பண்ணாலும் என்னால சமாளிச்சுக்க முடியும்டா…” சொன்னவள் கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் சென்றாள்… ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த கார்த்திகேயனை சந்திக்க… சிங்கத்தின் குகையில் சந்திக்கும் புள்ளிமானா?

***

கெஸ்ட் ஹவுஸ் ஜன சந்தடி இல்லாமல் அமைதியாக வீற்று இருந்தது! சென்னை வரும் போது கார்த்திகேயன் உபயோகிக்க… விருந்தினர் வந்தால் தங்கவென்று அதுவும் ஒரு மினி பங்களா அளவில் இருந்தது! வாட்ச்மேனிடம் தன்னுடைய விபரத்தை கூறவும், கார்த்திகேயனிடம் கேட்டு உள்ளே அனுப்பினான்!

மாடியில் இருந்த அறைக்கு சென்ற திவ்யா கதவை தட்ட, தானாக திறந்து கொண்டது… ஒரு முறை கண்களை சுழற்றி பார்த்தாள்! கார்த்திகேயன் அந்த அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து ரெக்கார்ட் செய்யப்பட்ட அவளது நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தான் செல்பேசியில் பேசியபடி! கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க… உடன் மதுகின்னத்துடன்… அரவம் கேட்டு திரும்பியவனின் சிவந்த கண்களில் இருந்ததென்ன? கோபமா? பழியா? இல்லை… ஏளனம்! செல்பேசியில் பேசி கொண்டே சைகையால் அவளை அமர சொன்னான்! இதென்ன இவ்வளவு அமைதியாக இருக்கிறான்… புயலுக்கு முன்பு வரும் அமைதியோ?

“ம்ம்ம்… கேவலமா முதுகுல குத்திட்ட போல இருக்கே…” ஏளனமாக ஒரே வார்த்தை! பதில் கூற வந்தவளை பேச வேண்டாம் என்று கையை காட்டி நிறுத்தும்படி கூறி விட்டான்! அப்போதே அவனது செல்பேசி அழைக்க…

“சொல்லுங்க சித்தார்த்…”

“சிஎம் பேசினார் சார்… எனக்கு தெரியாம நடந்துட்ட விஷயம் சார் அது…”

“அது எப்படி உங்களுக்கு தெரியாம உங்க சேனல்ல ஒரு ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் பண்ண முடியும்?” நிலா தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சித்தார்த்திடமா பேசுகிறான்? கேள்வியாய் பார்த்து கொண்டிருந்தாள்!

“அந்த நிகழ்ச்சியை நடத்தினது திவ்யதர்ஷினி… ப்ரோக்ராம் ஹெட் கல்யாணராமன்… ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டு இருக்கேன்… இன்னைக்குள்ள கண்டிப்பா மன்னிப்பு போட்டுடுவோம்… ப்ளீஸ் சிஎம் கிட்ட சொல்லுங்க…”

“எனக்கு இந்த விளக்கமெல்லாம் வேண்டாம் சித்தார்த் சார்… ஐ நீட் ஆக்ஷன்…”

“ஓகே சார்… கண்டிப்பா…”

“ஓகே…”

செல்பேசியை வைத்து விட்டு தொடர்ந்து தொலைகாட்சியை பார்த்து கொண்டிருக்க மதுவின் அளவு கூடி கொண்டிருந்தது! தனியே வந்தது தவறோ என்று எண்ணினாள்! கிளம்பிவிடலாம் என்று எண்ணி கொண்டிருக்கும் போதே அவளது செல்பேசி இசைக்க, நிகழ்ச்சி இயக்குனர் கல்யாணராமன் அழைத்து இருந்தார்!

“எங்கம்மா இருக்க?”

“வீட்ல சார்…”

“இங்க ஒரே கலவரமா இருக்கு திவ்யா… எம்டி கத்திட்டு இருக்கார்…”

“அதுக்கு என்ன சார் பண்றது? உங்க ஒப்புதலோட தான டெலிகாஸ்ட் பண்ணினேன்…”

“இல்லைன்னு சொல்லல திவ்யா… இப்போ மன்னிப்பு கேட்டு ஒரு ப்ரோக்ராம் போட சொல்றாங்க…”

“நீங்க என்ன சார் சொன்னீங்க?”

“நான் ஒப்புக்கிட்டேன்… நீயும் ஒப்புக்கோ…”

“முடியாது சார்… நான் என்ன தப்பு செய்தேன்… மன்னிப்பு கேட்க?” அவனை பார்த்து கொண்டே அவள் கூற…

“இல்லம்மா… எம்டி உன் கிட்ட பேசி மன்னிப்பு கேக்க சொன்னா என்ன செய்வ?”

“அப்படீன்னா என்னோட ஜாப் ரிசைன் பண்ணிருவேன்…” ஒரேடியாக முடித்தவளை எரிக்கும் பார்வை பார்த்தான் கார்த்திகேயன்! அவளும் அவனிடம் தானாக பேச முனையவில்லை! தனது செயலர்களுக்கு எங்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்து இந்த விஷயத்தை பெரிதாக்காமல் இருக்க முடியுமோ அத்தனையும் பார்த்து கொண்டிருந்தான்… இடை இடையே சிகரெட்டும்… மதுவுமாக… இவை அனைத்தையும் மௌனமாகவே அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்! உள்ளுர கார்த்திகேயனின் இந்த முகத்தை பார்த்த அதிர்ச்சி… குளிறேடுத்தது! அவளது செல்பேசி அழைத்தது! எம்டி அழைத்து இருந்தார்!

“சார்… திவ்யா ஸ்பீக்கிங்…”

“ஏம்மா… அந்த ப்ரோக்ராம்க்கு ஒரு மன்னிப்பு கேட்டு ப்ரோக்ராம் ஒன்னு போட்டுடலாமே… ஒத்துழைக்க மாட்டியம்மா? ரொம்ப பெரிய இடம் திவ்யா…”

“இல்ல சார்… மன்னிப்பு கேக்கற அளவு நான் தப்பா ஒன்னும் பண்ணல… உண்மைய மட்டும் தான் சொல்லி இருக்கேன்… இதுல என்னோட ஒத்துழைப்ப எதிர்பார்க்காதீங்க… அப்படி உங்களுக்கு அந்த மன்னிப்பு கேட்கறதுதான் முக்கியம்ன்னா நான் ராஜினாமா செய்துடறேன்…” அவள் பேச பேச கார்த்திகேயனுக்கு கோபம் பல்கி பெருகி கொண்டிருந்தது! அவளது செல்பேசியை பிடுங்கியவன்…

“சித்தார்த் சார்… கண்டிப்பா திவ்யா மன்னிப்பு கேட்ப்பா… அதை நீங்க டெலிகாஸ்ட் பண்ணியாகணும்… அதுக்கு முன்னாடி உங்க சேனல்ல அபீசியலா ஒரு சாரி நோட் குடுங்க…” என்று உத்தரவிட அந்த புறம் பேசி கொண்டிருந்தவருக்கு அவன் கார்த்திகேயன் என்று உணர கொஞ்ச நேரம் பிடித்தது! ஆனால் அடுத்த நிமிடமே திவ்யாவை நினைத்து கவலையில்…

“கார்த்திகேயன் சார்… ப்ளீஸ்… சின்ன பொண்ணு… அவளை விட்டுடுங்க…” என்று அவர் வேண்டுகோளாக வைத்தார்!

“விரோதிகள கூட மன்னிச்சுடுவேன்… ஆனா கூடவே இருந்து துரோகம் செய்த துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன்… அது என்னோட கவலை… நீங்க உங்க வேலைய செய்ங்க…” ஒரே வாக்கியத்தில் அவன் முடித்த போது அந்த சித்தார்த் குப்தாவின் முகத்தில் வியர்வை அரும்புகள்! கல்யாணராமன் வேறு ஏதாவது நிகழ்ச்சி செய்து இருக்க கூடாதா? வேலியில் போகிற ஓணானை எடுத்து இப்படியா வேட்டியில் விட்டு தொலைவது? இந்த பிரச்சனை என்னதான் ஆகும்? சோர்ந்து நாற்காலியில் விழுந்தார்!

***

“நீ போகலாம்…” ஒரே வாக்கியத்தில் அந்நியமாக முடித்தவனை பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ செய்தது! அவனது திருமணம் நின்ற செய்தி அவளை நிலைகுலைய செய்து இருந்தது! அதோடு சுஷ்ருதாவில் இருந்து அரவிந்தன் விலக போவதாக ஒரு செய்தி வந்திருந்தது… அவள் இது நடக்க வேண்டுமென்று நினைக்கவில்லையே…

“கார்த்திக்… கல்யாணம் நிற்கும்னு நான் நினைக்கவே இல்லை…” அவள் வருத்தத்தோடு…

“துரோகிகளோட வருத்தம் எனக்கு தேவை இல்லை…”

“நான் துரோகம் பண்ணல…” உணர்ச்சியை தொலைத்த முகத்துடன்!

“பின்ன வேற என்ன பண்ண? உன்னை என்னோட க்ளோஸ் பிரெண்டா நினைச்சேன்… அதுக்கு நீ செய்தது என்ன? கேவலமா முதுகுல குத்தினததுதான்… ச்சே எல்லா பக்கமும் முதுகுல தான் குத்தறாங்க… ஷிட்…” அரவிந்தனையும் ஷாலினியையும் நினைத்து விரக்தியின் விளிம்புநிலையில் இருந்தான்! ஆனால் ஷாலினியோடு நடக்க இருந்த திருமணம் நின்றது நிம்மதியை தோற்றுவித்தாலும் அவளுடைய தந்தையும் அவளும் தன்னை மறுத்த விதமும் நேரமும் அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்தி இருக்க…

“இல்ல… நான் முதுகுல குத்த கிடையாது… உண்மைய தான் சொன்னேன்… மக்களுக்கு அதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு…” அவளது நியாயத்தை எடுத்து கூறினாள்! அவன் புரிந்து கொள்ள வேண்டுமென்று ஏன் நினைக்கிறாள்?

“எது உண்மை? உனக்கு பிரபலமா ஆகணும்… அதுக்காக நீ என்ன வேணுமானாலும் செய்வடி?” மரியாதை குறைய துவங்கியது!

“வேணாம் கார்த்திக்… நீங்க சொன்னது சரியான வார்த்தை கிடையாது… அதுக்கு வேற அர்த்தம்…”

“ஆமா நீ நினைக்கிற அர்த்தம் தான்… நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கம்பெனிய இந்த நிலைக்கு கொண்டு வந்தேன் தெரியுமா? உயிரை கொடுத்து வளர்த்த குழந்தைடி இது… அது தெரியுமா உனக்கு?” கோபத்தில் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தது! அப்படி வளர்த்த குழந்தையின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக நிற்கிறதே என்ற கோபம் அவனது கண்ணை மறைத்தது!

“அதுக்காக இல்லீகலா நடக்கற விஷயத்த கண்டுக்காம நானும் போகனும்ன்னு எப்படி நினைப்பீங்க கார்த்திக்…”

“உன் கிட்ட நான் அட்வைஸ் கேக்கல… இப்போ மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா?” மன்னிப்பு கேட்டு இவள் ஆரம்பித்த விஷயத்தை இவளே முடித்தால் மட்டுமே இந்த விஷயம் செயலிழக்கும் என்ற நிலையில் உறுதியாக அவன் கேட்டான்! உள்ளுக்குள் கிலியை பரப்பினாலும் உறுதியாகவே…

“நான் தப்பு செய்யல… நான் செய்ய வேண்டிய கடமைய சரியாத்தான் செய்தேன்… கண்டிப்பா அதை நான் செய்ய முடியாது கார்த்திக்…” அவளது குரலிலும் இருந்த உறுதி அவனது கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது! கோபம் அதிகம் ஆக ஆக மதுவின் அளவும் கூட, அவளை பற்றி எப்படியெல்லாம் கற்பனை செய்து இருந்தேன் என்ற கழிவிரக்கம் அவனை ஆட்டி படைத்தது! எந்த பெண்ணிடமும் இந்த அளவு நெருங்கியதில்லையே… ஆனால் இவள் என்னை இதற்காக உபயோகப்படுத்தி விட்டாளே என்று உள்ளுக்குள் கோபம் கொதிக்க, அதோடு அரவிந்தனின் துரோகமும், ஷாலினியின் தந்தை அவனிடம் பேசிய வார்த்தைகளும் அவனை நிதானம் இழக்க வைத்து கொண்டிருந்தன!

“ச்சே துரோகிங்க… பச்சை துரோகிங்க…” முன்னாடி இருந்த கண்ணாடி டீ பாயை குத்த அது உடைந்து அவனது கையை கிழித்தது!

“ஐயோ கார்த்திக் ரத்தம்…” பதறினாள் திவ்யா!

“தொடாத… மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா?” அவன் அதிலேயே இருக்க…

“முடியாது கார்த்திக்…” அவளும் இறுதியாக கூற…

“எனக்கு என்னோட கம்பெனி தான் முக்கியம்… உனக்கு தெரியாது திவ்யதர்ஷினி… நான் எந்த நிலைக்கு இறங்கவும் தயங்க மாட்டேன்… என்னோட ஒரு முகத்தை தானே பார்த்து இருக்க… இன்னொரு முகத்தை காட்ட வைச்சுடாதே…” வெறி அதிகமாகி ஆத்திரத்தில் மிரட்ட துவங்க… இனி இங்கிருப்பது சரி இல்லை என்று வெளியே போக எத்தனித்தாள்! கதவு தானாக மூடியது!

“ரிமோட்… எனக்கு நீ பதில் சொல்லாம வெளிய போக முடியாது திவ்யதர்ஷினி…” சிவந்து இருந்த கண்கள் அவளுள் கிலியை ஏற்படுத்தினாலும் இதற்கெல்லாம் பயந்தால் இந்த வேலையில் இருக்க முடியாதே!

“மிரட்டறீங்க கார்த்திகேயன்…”

“ஆமா மிரட்டறேன்… முடியுமா முடியாதா?”

“முடியாது?”

“அப்படீன்னா உன்னோட நியுட் போட்டோஸ் இன்னைக்கு நைட் டிவி, நெட், செல்போன் எல்லாத்திலையும் வரும்… எப்படி வசதி?” எழுந்து சோம்பல் முறித்து கொண்டே அவள் அருகில் வந்தான்!

“கார்த்திக்…” அதீத அதிர்ச்சியில் அவளது கால்கள் தள்ளாடின! பூமாதேவியே என்னை உன்னுள் எடுத்துக்கொள்ள மாட்டாயா?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 12

“கார்த்திக் விளையாடாதீங்க...” திவ்யாவின் குரலில் நடுக்கம்! “ம்ஹூம்... கண்டிப்பா இல்ல... எனக்கு என்னோட தொழில் ரொம்ப முக்கியம்... அதை பாதிக்கிற எதுவா இருந்தாலும் அதை நான் டெலீட் செய்தே ஆகணும்... அது நீயா இருந்தாலும் கூடத்தான் திவ்யா... எனக்கு வேற எதை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்