arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 9

அத்தியாயம் 9

visibility 787
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

கார் அமைதியாக கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து கொண்டிருந்தாலும் இருவரின் மனமும் கொதித்துக் கொண்டிருந்தது! அரவிந்தனின் செய்கை திவ்யாவுக்கு அவன் மேல் கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக கார்த்திகேயன் மேல் ஆத்திரத்தையே வரவழைத்தது!

கார்த்திகேயனுக்கோ அரவிந்தனை பற்றி தெரிந்தும் இந்த வேலையில் இறங்கி விட்டோமே என்று மனதிற்குள் வருத்தம் கரை கடந்தது! அவனது அழுத்தம் மிகவும் அதிகமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், தானும் இறங்கினான்! பகலும் இரவும் சங்கமிக்கும் அந்த வேளையின் சூன்யத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்! அந்த நேரத்தில் அவனுக்கு அது தேவைப்பட்டது அவனது அழுத்தத்தை குறைக்க! இந்த மாலை பொழுதின் சங்கடத்தை மறக்கவே முடியாதோ?

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!

“சாரிடா… நீ வரலைன்னு தான் சொன்ன… நான் தான்… ஷிட்… இப்படி ஆகும்ன்னு நினைக்கவே இல்லை…” மௌனத்தை உடைத்தான் கார்த்திகேயன்! அவனை நிமிர்ந்து கூட பார்க்காத திவ்யா கையை காட்டி அவன் பேசுவதை நிறுத்த சொன்னாள்!

“திவி… ப்ளீஸ்…”

“வேணாம் கார்த்திக்… பேசாதீங்க…”

“இல்லடா… அவன் இப்படி உன்கிட்டயே பண்ணுவான்னு நினைக்கில… உன்னை கல்யாணம் பண்ணிகிட்டாவாச்சும் அவன் திருந்துவான்னு நினைச்சேன் திவி…” என்று வெறுமையாக கூறி கொண்டிருக்கும் போதே அவளது முகம் கோபத்தில் சிவந்தது…

“ஸ்டாப் இட் கார்த்திக்… ஊர்ல தறுதலையா இருக்கறவனை எல்லாம் திருத்த நான் என்ன மடமா வெச்சு நடத்தறேன்? இல்ல என்னோட வாழ்க்கைய பணயம் வைத்து அந்த தறுதலைய திருத்த நான் என்ன அன்னை தெரெசாவா? எந்த தைர்யத்துல நீங்க இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? உங்க தங்கைய இப்படி ஒரு பொறுக்கிக்கு குடுத்து நீ திருத்தும்மான்னு சொல்லுவீங்களா? டோன்ட் டேக் திவ்யா பார் கிரான்ட்டட்…” உள்ள கொதிப்பு வெளிப்பட…

“ஐம் நாட் டேக்கிங் யூ பார் கிரான்ட்டட் திவி… நான் உன்னை அவன் கிட்ட விட்டு கொடுத்து பேசலையேடா!” சமாதானப்படுத்த முயன்றான்!

“ஆரம்பத்துலையே அவன் கிட்ட என்னை விட்டு கொடுத்துட்டீங்க கார்த்திக்… அந்த நேரத்துல பால்ரூம்ல நான் ஹார்ஷா ரியாக்ட் பண்ணி இருந்தா என்னோட பேர் எவ்வளவு டேமேஜ் ஆகி இருக்கும்… நினைச்சு பார்த்தீங்களா?”

“இல்லடா… உன்னோட நேர்மையான இந்த கேரக்டர் பிடிச்சுது… உன் கிட்ட எதையும் மறைக்காமையே சொல்றேனே! அவனுக்கு வியாபாரத்த விட ஜாலியா பொழுதை கழிக்கணும்… அதுல தான் இன்ட்ரெஸ்ட்… அங்கிள் ரொம்பவே கவலை படுவார்பா… ஆபீஸ் பக்கமும் ரொம்ப வர மாட்டான்… அதுக்காகவே ஒரு பேக்டரிய அவனோட கண்ட்ரோல்ல விட்டேன்… ஆனாலும் பிசினெஸ் பக்கம் வர மாட்டேங்கறான்… நீ எப்படியும் அவனை இந்த மாதிரி விஷயங்கள்ல இருந்து திருந்த வைப்பன்னு தான் நான் நினைத்தேன்…” ஆக அரவிந்தன் வியாபாரத்தில் ஒட்டுவதில்லை… கார்த்திகேயன் தான் முழு பொறுப்பு என்பதை அவனது வாயாலேயே கேட்க பெற்றாயிற்று… திவ்யாவின் மனதில் ஓடி கொண்டிருந்தது!

“மறுபடியும் இதையே சொல்லாதீங்க… இந்த மாதிரி பொறுக்கித்தனம் பண்றவங்களை திருத்த தான் பொண்ணுங்க பிறப்பெடுத்து வந்திருக்கோமா? எப்படி நீங்க அப்படி நினைக்கலாம்? சரி இதே கல்யாணம் முடிஞ்சு அவன் இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டு இருந்தா அப்போ என் நிலைமை என்ன கார்த்திக்?” அவன் மேலும் தவறிருந்ததால் அவனால் அதற்கும் மேல் பேச முடியவில்லை! ஆனால் நடனமாட அவன் அழைத்த போதே இவள் மறுத்திருக்க வேண்டுமல்லவா?

“அவன் கூப்பிட்டபோவே நீ போய் இருக்க கூடாது திவி…”

“தப்புதான்… அந்த இடத்துல சீன் க்ரியேட் பண்ண வேனாமேன்னு நினைத்தேன்… அதுதான் தப்பா போய்டுச்சு…”

“ம்ம்ம் ஆமாம்… சரி டா… ப்ளீஸ் அதை மறந்துடு… நான் பார்த்துக்கறேன்…” வெள்ளை கொடி பிடித்தவனை மேலும் திட்ட முடியவில்லை!

“எனக்குன்னு நிறைய குறிக்கோள்கள் இருக்கு கார்த்திக்… சாதிக்கனும்ன்னு ஆசை மட்டும் இல்ல வெறியே இருக்கு… என்னோட லட்சியம் தான் எனக்கு ரொம்பவே பெரிசு…” மௌனமாகவே கேட்டு கொண்டு வந்தான்! தொடர்ந்தாள்…

“ஆனா எங்க வீட்ல தான் இதை புரிஞ்சுக்காம கல்யாணம் அது இதுன்னு… ச்சே… அரவிந்துக்கு அவங்க சொல்ற ரீசன் பெரிய இடமாம்… போய் குப்பைல போடணும் அவனோட பணத்த… யாருக்கு வேணும் அவன் பணம்…” கார்த்திகேயன் மிக ஆச்சரியமாக திரும்பினான்! அவனது மனதில் உயர்ந்து கொண்டே போனாள் திவ்யா!

“அப்படீன்னா வாழ்க்கைய வாழறதுக்கு பணமே தேவை இல்லைன்னு சொல்றியா… இங்க எல்லாமே பணத்த வெச்சு தான் மதிப்பிடப்படுது… அது தெரியாதா திவி?”

“இருக்கலாம் கார்த்திக்… எனக்கும் பணம் தேவை தான் ஆனா பணமே வாழ்க்கை கிடையாது… அதை தாண்டி எவ்வளவோ விஷயம் இருக்கு… என்னை பொறுத்தவரை லட்சியம் முக்கியமா? பணம் முக்கியமான்னு? கேட்டா எனக்கு என்னோட லட்சியம் தான் முக்கியம்ன்னு சொல்லுவேன்…”

“ம்ம்ம் பரவால்ல… பைத்தியம் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு…” வேண்டுமென்றே உசுப்பேத்தினாலும் அவளது இந்த குணம் அவனை மிகவும் வசீகரித்தது! அவனது உணர்வுகளின் பிரதிபிம்பமாகவே திவ்யா தோன்றினாள்! வெறும் அலங்கார பொம்மையாக வலம் வரும் ஷாலினியின் செய்கை பிடிக்காததினால் தானே அவளிடம் மனம் ஒட்டாமல் தவிக்கிறது என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை!

“பைத்தியமா? ம்ம்ம் சொல்லிகோங்க… ஆனா இது தான் நான்… நானாகிய நான்… என்னோட சுயம்… இதை என்னால கல்யாணம்ன்னு ஒரு பேர சொல்லிட்டு மாத்திக்க முடியாது…” தான் எப்போதும் நினைக்கும் சுயமும் இதுதானே!

“காதலித்து பார்!

இந்த உலகம் தலைகீழாக சுற்றும்…

இதயம் வெளியில் துடிக்கும்…

காற்று வெளியில் கதைகள் மலரும்…

கூட்டத்தின் நடுவிலோ மௌனம் பேசும்”

வைரமுத்துவை போல பேசி அவளை கிண்டல் செய்ய கடுப்பான திவ்யா…

“ஆஹா கவிதை கவிதை! இப்படி ஒரு மொக்கைய ஷாலினி கிட்ட சொன்னா தெரியும்… நீங்க வாங்கற அடி…” என்று அவள் கூறிய போதே அவனுக்கு உரைத்தது! இது வரை ஷாலினியிடம் இந்த மாதிரி எல்லாம் பேசியதே இல்லை என்று! திவ்யாவை சிறிது நாட்கள் தான் தெரியும் ஆனால் இவளிடம் என்னால் பேச முடிந்த அளவு ஷாலினியிடம் பேச முடிந்ததே இல்லையே! அவனது மனம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்க திவ்யாவோ தொடர்ந்தாள்!

“முதல்ல இருந்தே அவனை பிடிக்கல பிடிக்கலன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்… யாரும் என் பேச்சை கேக்கவே இல்லை…” என்று நொந்து போய் கூறியவளை பார்க்கையில் அவனது முகம் கனிந்தது!

“ஏன் அப்படி சொன்ன திவி… நீ வேற யாரையாவது லவ் பண்றியா?” என்னவோ அவளை கேட்டு தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்ற…

“ம்ம்ம் மண்ணாங்கட்டி… நான் எந்த கூமுட்டையையும் லவ் பண்ணல… அவனோட பார்வையே சரி இல்ல… அதனால தான் சொன்னேன்…” என்று கூறவும் அவனது இறுக்கமான மனநிலை மாறி சிரித்தான்!

“அடப்பாவி… உன்னை லவ் பண்றவன் கூமுட்டையா?” என்று மறுபடி சிரிக்கவும்…

“சிரிக்காதீங்க கார்த்திக்… பேச்ச மாத்தாதீங்க…” ஒற்றை விரலை காட்டி மிரட்ட, அந்த விரலை பிடித்தவன் தன் விரல்களோடு சேர்த்து வைத்து கொண்டு…

“ஹே… சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… உன்னை சின்ன பொண்ணுன்னு நினச்சேன்… ஆனா…” கைகளை மென்மையாக விடுவித்து கொண்டவள்…

“என்ன ஆனா?”

“பொண்ணுங்களுக்கு இன்டியுஷன் கொஞ்சம் அதிகமாத்தான் வேலை செய்யும் போல …உனக்கு கூட தோன்றி இருக்கு பார்த்தியா?” என்று சிரித்து கொண்டே அவளை வாரினாலும் அவளது புத்திசாலித்தனம் அவனை மிகவும் ஈர்த்தது! அரவிந்தனை சரியாக கணக்கிட்டு இருக்கிறாளே என்று!

“அதென்ன எனக்கு கூட? எங்களுக்கு வேலை செய்தா உங்களுக்கு என்ன போச்சாம்?” என்று சிலிர்த்து கொண்டு மல்லுக்கு நின்றவளை பார்த்து புன்னகைத்து கொண்டே…

“இந்த இன்டியுஷன் எதுக்குன்னா அச்சம் மடம்… லொட்டு லொசுக்கு எக்ஸ்ட்ரா எல்லாம் இருக்கற பொண்ணுங்களுக்கு இயற்கையே குடுத்து இருக்கற மனசோட விழிப்பு நிலை… எந்த மனநிலைலையும் சுத்தி நடக்கறத இன்னொரு ஆங்கிள்ல பார்க்குற தன்மை… அதே இந்த தியரிய கன்வர்ஸா பார்த்தா என்ன அர்த்தம்?” சிரித்து கொண்டே கேட்டவனை பார்த்து…

“ம்ம்ம்ம் என்ன அர்த்தம்…?” முறைத்தாள்!

“பொண்ணுன்னா அச்சம் மடம் எல்லாம் இருக்கணும்ன்னு அர்த்தம்… அது தான் இது கிட்ட இல்லையே அப்புறம் எப்படி இந்த இன்டியுஷன் வேலை செய்ததுன்னு தான் எனக்கு சந்தேகமே…” என்று கூறி பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு சிரிக்க, அவளும் தன் கோபத்தை மறந்து சிரித்து, அவனை அடிக்க கை ஓங்கி…

“யூ… யூ… வேண்டாம்… மறுபடி சண்டை வந்துரும்… இந்த டாப்பிக் வேண்டாம்…”

“என்ன வேண்டாம்… உண்மைய தானே சொல்றேன்…” குறும்பான சிரிப்போடு…

“உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கன்னா கிள்ளுக்கீரையா இருக்கு கார்த்திக்… ஆண்களா போட்ட வரைமுறை தான் இந்த கான்செப்ட்… பொண்ணுங்க இப்படி இருந்தாதான் உங்களுக்கு பிடிக்கும்… அதையே நீங்க எல்லாரும் ஸ்கேல் ஆப் ரெபரன்ஸா வெச்சுட்டீங்க…” சண்டை போடுவதற்காகவே ஆரம்பித்தவளை புன்னகையோடு பார்த்து…

“ம்ம்ம்… ஸ்கேல் ஆப் ரெபரன்ஸா… நானும் பார்க்க தானே போறேன்… இப்படி பேசற வாய் எப்படி பேச போகுதுன்னு…”

“கண்டிப்பா நான் மாற மாட்டேன் கார்த்திக்…”

“இல்லடா… கண்டிப்பா நீ மாறிடுவ…” அவனுடைய குரலின் உறுதி அவளை ஏதோ செய்தது! சொல்லி கொண்டே காரில் ஏறி அமர்ந்தவன் அவளுக்கு திறந்து விட்டு அவள் அமர்ந்தவுடன்…

“தேங்க்ஸ் திவி…”

“எதுக்கு…” புரியாமல் கேட்டாள்!

“அரவிந்த் கிட்ட பேசுனப்போ இருந்த டென்ஷனுக்கு ஒரு ரெண்டு பாக்கெட் சிகரெட்டாவது காலி ஆகி இருக்கும்… இப்போ ஒன்னே ஒன்னு தானே! உன் கிட்ட பேசிட்டு இருந்ததிலேயே டென்ஷன் போய்டுச்சு… அதுக்கு தான் தேங்க்ஸ்…” என்று சிரிக்க…

“ஹலோ… அதுல டென்ஷன் ஆக வேண்டியது நான்! அப்படீன்னா எனக்கும் ஒரு சிகரெட் குடுங்க…” மிகவும் சீரியசாக கேட்பது போலவே கேட்க…

“ஆத்தா… நீ சிகரெட் மட்டும் கேக்கற ஆத்தா இல்ல… குடிக்க சாராயமும் கேக்கற ஆத்தான்னு எனக்கு நல்லாவே தெரியுமே ஆத்தா…” சிரிக்காமல் சொன்னவனை முதுகிலேயே நாலு அடி வைத்தாள்!

“இந்த வாய் கொழுப்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை… கடவுளே ஷாலினி எப்படி தான் சமாளிக்க போறாளோ?” கேட்டவளிடம் கேட்க தோன்றியது…

“நீ ஏன் அவளை நினைவுப்படுத்தி கொண்டே இருக்கிறாய் பெண்ணே!” என்று! தனது உணர்வுகள் புரியாமல் மௌனமாய் வண்டியை செலுத்தியவன் திவ்யாவின் வீடு வரவும் காரை மெதுவாக செலுத்தினான்! அவளுக்குமே மனதில் அலையடித்து கொண்டிருந்தது! இவன் தவறு செய்பவன் இல்லை என்று மனது கூறினாலும் புத்தி அதை ஏற்க மறுத்து வாதம் புரிந்து கொண்டிருந்தது!

“கார்த்திக்…”

“ம்ம்ம்…”

“உங்களை ஒன்னு கேக்கலாமா?” அவள் புறம் திரும்பியவன் பார்த்த பார்வையில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக திவ்யாவுக்கு தோன்றியது! ஆனால் என்னவென்று வரையறுக்க முடியாமல்…

“ம்ம்ம் கேளு திவி…”

“நீங்க ஏதும் தப்பு செய்யலியே…” திக்கி திணறி கேட்டவளை விசித்திரமாக பார்த்து விட்டு காரை நிறுத்தி இருந்தான்!

“எதுக்கு திவி இப்படி ஒரு கேள்வி?”

“இல்ல கார்த்திக்… கேக்கனும்னு நினைச்சேன்… கேட்டேன்… தப்பா?”

“ம்ம்ம் இல்லடா… இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் எனக்கு தெரியல…”

“ஏன்?”

“ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்… அது தெரியுமா திவி?”

“ம்ம்ம்”

“அதோட நம்ம பிசினெசையும் சேர்த்துக்கலாம்… சில நேரங்கள்ல சிலதை செய்தாகனும்… பல நேரங்கள்ல அது நமக்கு மனசுக்கு ஒவ்வாம இருக்கலாம்… ஆனா ஜெய்க்கனும்ன்னு வந்துட்டதுக்கு அப்புறம் வேற வழி இல்ல… நோ கோயிங் பேக்…”

“அதுவே சட்டப்படி தவறா இருந்தா என்ன பண்ணுவீங்க கார்த்தி…” மனம் படபடக்கவே கேட்டாள்! மறுத்து கூற மாட்டானா? ஏங்கியது நெஞ்சம்!

“ம்ம்ம்… கண்டிப்பா சிலது உண்டு… ஆனா என்னோட இமேஜ் என்னன்னு தெரியும்ல?” கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியின் விளிம்பு நிலைக்கு சென்றாள் திவ்யா! என்னதான் தெரியும் என்றாலும் அவனாக கூறுகிறானே! தான் கேட்டபோது கூட மறுக்க மாட்டானா என்று மனதில் எழுந்த ஏக்கம் இப்போது வருத்தமாக மாறியது!

“ம்ம்ம்… பாண்டில ரொம்ப பவர்புல் ஆள்ன்னு கேள்வி பட்டிருக்கேன்!” கேட்டவன் சிரித்தான்!

“பாண்டில மட்டும் இல்ல திவி… தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா… எல்லாம் தான்… சுஷ்ருதா சவுத் இந்தியால நம்பர் ஒன் பார்மாவா கொண்டு வர்றதுக்கு நான் எல்லா வழியையும் கடைப்பிடிக்கத்தான் செய்தேன்…”

“ஆனா அந்த வழி யாருக்காச்சும் கஷ்டத்துல முடிஞ்சா என்ன பண்ணுவீங்க?”

“அதுக்கெல்லாம் நாம கவலை பட்டுட்டு இருக்க முடியாதே… எனக்கு சக்சஸ் ஒன்னு தான் குறிக்கோள்… என்னோட வழியையும் மாத்திக்க முடியாது என்னோட கொள்கைகளையும் விட்டு தர முடியாதே திவி!” ஐயோ என்றிருந்தது!

“இது சரியான கொள்கையா எனக்கு தெரியல…” என்று கூறியவளின் கையை பிடித்த கார்த்திகேயன்…

“சரியோ தப்போ… இதை இந்த அளவு ஓபனா சொன்னதும் உன் கிட்ட தான் திவி… ஏன்னா என்னோட க்ளோஸ் பிரெண்டா உன்னை நினைக்கிறேன்… அதனால உன்னோட குட்டி மண்டைல இதையெல்லாம் போட்டு குழப்பிக்காத… ஓகே…” ஆனால் அவனது சமாதானத்தை ஏற்று கொண்டால் அவள் திவ்யா இல்லையே!

“கார்த்திக்… நீங்க நல்லவரா கெட்டவரா?” என்று அவள் கேட்கவும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

“ஹே இதென்ன… நாயகன் மாதிரி… பிஜிஎம் இல்லையா?”

“விளையாடாதீங்க… நான் சீரியஸா கேக்கறேன்… ப்ளீஸ் கார்த்திக்”

“நல்லவன் கெட்டவன்னு எதை வைத்து சொல்ல முடியும் திவி? வாட் இஸ் த ஸ்கேல் ஆப் ரெபரன்ஸ்?” கேள்வி கேட்டவனுக்கு அவளால் பதில் கொடுக்க முடியவில்லை! அவனே தொடர்ந்தான்!

“சொல்ல முடியாதில்ல… எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் நாம நல்லவங்களா இருக்கவே முடியாது திவி ! அது நமக்கு அவசியமும் இல்லாதது… என்னை சுற்றி நிறைய வட்டம் இருக்கு… பிசினெஸ், அரசியல், சமூகம், எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா… இந்த வட்டத்தை எல்லாம் தாண்டின ஒரு மைய புள்ளி இருக்கும் திவி! அது எனக்கே எனக்கான புள்ளி… அது நான் மட்டும் தான்… என்னோட தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் தான்… அது என்னோட கொள்கை, ஆசை, விருப்பம், பாசம் அப்படீன்னு நிறைய விஷயங்களால சூழ பட்ட ஒரு புள்ளி… அந்த புள்ளி நிச்சயமா மனசாட்சிக்கு பதில் சொல்ற இடம்… ஆனா சுற்றா இருக்கற வட்டத்தில இருக்கற என்னோட முகம் வேற தான்… விரோதிகள நான் விட்டு வைக்கறது கண்டிப்பா இல்ல… அதுக்கு பேர் வேற தான்… இது தான் நான்… நீ சொன்ன மாதிரி நானாகிய நான்… என்னோட சுயம்…” நீளமாக தெளிவாக முடித்தவனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா! பெருமூச்சு ஒன்றை விட்டவள்…

“கார்த்திக்… மனசெல்லாம் குழப்பமா இருக்கு…”

“ஏன்டா… பயமா இருக்கா? உனக்கு என்னடா பயம்… நீ என்னோட தோழிடா…”

“இல்ல கார்த்திக்… மனசு ஒன்னு சொல்லுது அறிவு ஒன்னு சொல்லுது… என்ன பண்றதுன்னே ஒன்னும் புரியலப்பா…” மன குழப்பத்தை கூற…

“மனசு ஒன்னு அறிவு ஒன்னுன்னு சொல்ல கூடாதுப்பா… ரெண்டுமே ஒன்றைத்தான் சொல்லணும்… என்ன அப்படி குழப்பம்?”

“இல்ல… என்னோட கடமைன்னு ஒன்னு இருக்கில்லையா? அதுல தான் குழப்பமே…”

“திவி… நீ பாரதம் படிச்சு இருக்கியா?”

“ம்ம்ம்… படிச்சு இருக்கேன்…”

“அதுல கீதா உபதேசம் எப்போ வரும்?”

“அர்ஜுனன் போர் முனைல இருக்கும் போது…”

“அதாவது குறிப்பா சொல்ல போனா, போர்ல தன்னோட சொந்தகாரர் எல்லாரையும் பார்த்துட்டு அம்பு விட முடியாம கலங்கி நிற்பார் அர்ஜுனன்… அப்போ அவருக்கு தைர்யத்த சொல்லி… கடமை தான் முக்கியம்னு புரிய வைப்பார் கிருஷ்ண பரமாத்மா…

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது… எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்… எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு… எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு… எது இன்று உன்னுடையதாக உள்ளதோ அது நாளை மற்றொருவருடையதாகும்… இந்த மாற்றம் உலக நியதியாகும்…

இது தான் என்னோட தினசரி ஜெபம் திவி… கண்டிப்பா எது உன்னோட கடமையில் குறுக்க வந்தாலும் கவலை படாத… கடமை தான் முக்கியம்மா…” அவனுக்கு எதிராகவே அவனே சொல்கிறான் என்பது புரியாமல் அவன் கூற… விழிஎடுக்காமல் அவனை பார்த்து கொண்டிருந்து விட்டு மெளனமாக இறங்கினாள்! காரிலிருந்து இறங்கியவளை அழைத்த கார்த்திகேயன்…

“திவி… எதை பற்றியும் நீ கவலை படாத… நான் இருக்கேன்… கல்யாண விஷயத்துல யாரும் உன்னை கம்பெல் பண்ண மாட்டாங்க… அதுக்கு நான் கேரண்டி… ஓகே வா…” தலையசைத்து சரியென்று விட்டு வீட்டிற்குள் செல்ல இருந்தவளை மீண்டும் அழைத்து…

“உன்னோட லட்சியம் என்னடா? என்னமோ சொன்னியே…” அவன் சொன்னது அவள் காதில் விழுந்தால் தானே? சூழ்ந்து இருந்த குழப்பம் அவளை தின்று தீர்த்தது!

“ஓகே… ரொம்ப குழப்பத்துல இருக்க போலிருக்கு… சரி நீ போ…” விடை கொடுத்து அனுப்பினான்! உள்ளே செல்ல எட்டு வைத்தவள் கட்டியிருந்த சேலை தடுத்து தடுமாறி விழ பார்க்க, சட்டென்று கார்த்திக் கை கொடுத்து அவளை தாங்கி பிடிக்க, அவனது கை அவளது வழுவழுப்பான இடுப்பு பிரதேசத்தில் படிந்தது! சில்லென்ற அவளது இடை அவனது கையை காந்தமென ஈர்க்க ஒரு கணம் ஒன்றும் புரியாமல் நின்றான்! அவளோ சொல்லவே முடியாத அளவு தத்தளித்தாள்!

இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா?

இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா?

இந்த மௌனம் இந்த மௌனம் இப்படியே உடையாதா?

இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா?

பாய்ந்த அந்த மின்சாரம் இருவரையும் தாக்க, சட்டென்று கையை எடுத்தான்! அவளும் தன்னை சட்டென மீட்டு கொண்டு அவனை திரும்பியும் பார்க்காமல் கேட்டை திறந்து உள்ளே சென்றாள்!

அவள் போய் சிறிது நேரம் வரை அந்த கைகளையே பார்த்து தடவி கொண்டிருந்தான்! மனம் முழுக்க சந்தோஷம்… தடுமாறினாலும் பிடிக்காமல் இல்லையே? எந்த பெண்ணிடமும் இந்த அளவு மனம் திறந்து பேசியதில்லை தனக்காக நிச்சயிக்க பட்ட ஷாலினி உட்பட… அவளை தொட்ட இந்த ஒரு நிமிடமே அவனது சந்தோஷ ஊற்று அனைத்தையும் மீறுகிறதே! இந்த உணர்ச்சிக்கு பெயர் தான் என்ன?

“காதல்”

நான் காதல் வயப்பட்டு விட்டேனா? திருமணத்திற்கு முன் காதலிப்பது எல்லாம் போலித்தனம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிய எனக்கு காதலா? ஆமாம்… நான் காதலிக்கிறேன்! உரக்க கத்த தோன்றியது! கல்லூரி மாணவனை போல குதித்து ஆட தோன்றியது! எல்லையில்லா சந்தோஷத்தில் கும்மாளமிட்டது மனது! திவ்யா… சொல்லி பார்த்தது மனம்… இனித்தது! மனம் நிறைய இனிப்புடன் வைஷ்ணவியின் வீடு நோக்கி போனான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 10

பித்து பிடித்தார் போல யார் கேட்ட கேள்விக்கும் பதில் கூறாமல் அறைக்கு சென்று முடங்கினாள் திவ்யா! அவளது மனமோ குரங்காக கார்த்திகேயனையே பற்றி கொண்டு தொங்கியது! கடவுளே என்னை காப்பாற்று! என்னுடைய மனதிடம் இருந்து என்னை காப்பாற்று! கார்த்திகேயன் இன்னொரு பெண்ணுக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்