arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 15

அத்தியாயம் 15

visibility 803
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

திருமண மண்டபம் திணறி கொண்டிருந்தது! முக்கியமான தென்னிந்தியாவின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு வாங்கியதால் மூச்சு கூட விட கூட முடியாமல் தடுமாறி கொண்டிருந்தது! ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியே மேலாளர்கள் இருந்ததால் சிறிது கூட எங்கும் ஒரு சுணக்கம் ஏற்படாமல் மிக அழகாக நடந்தேறி கொண்டிருந்தது திருமணம்! திருமண ஏற்பாடு முன்னிருந்தே நடந்து கொண்டிருந்ததால் எந்த இடையூறும் நிகழவில்லை… மணப்பெண் மாற்றம் மட்டும் தானே! முன்னரே திருமண அழைப்பு போனவர்களுக்கு மறுஅழைப்பும், மற்றவர்களுக்கு புதிய அழைப்பும் விடுக்கபட்டிருந்தது!

ஆங்காங்கே வளைத்து வளைத்து கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த அகேலா கிரேன்களும், நிமிடத்துக்கு ஒரு முறை ஏதாவது நிகழ்ச்சியுமாக மண்டபம் பரபரத்தது! அவ்வப்போது முக்கிய பிரமுகர்களின் வருகை வேறு சலசலப்பை தோற்றுவிக்க எல்லாவற்றையும் சமாளித்து கொண்டிருந்தது சுஷ்ருதாவின் படை! மேலும் அத்தனை மேலாண்மையும் சஞ்சய், ஸ்ரீராம், விகாஷ் என அனைவரும் செய்து கொண்டு நிற்காமல் சுழன்று கொண்டிருந்தனர்!

வைதீக முறையில் திருமணம் முடிந்த கையோடு வாழ்த்த வந்த முக்கிய பிரமுகர்களை அறிமுகபடுத்தி கொண்டிருந்தான் கார்த்திகேயன், தனது மனைவிக்கு! திவ்யாவோ ஒவ்வொருவர் காலிலும் விழுந்து எழுந்தே மயங்கி போனாள்! ஓரக்கண்ணில் கார்த்திகேயனை பார்க்க அவனோ கொஞ்சம் கூட அந்த களைப்பே இல்லாமல் வந்தவர்களிடம் எல்லாம் பேசி சிரித்து அவ்வப்போது திவ்யாவிடம் வந்தவர்களை பற்றி கூறிக்கொண்டு வெகு சாதாரணமாக இருக்க, அவனது அந்த அலட்சியமே இன்னும் அவளுக்குள் கொதிப்பை அதிகப்படுத்தியது! ஆனாலும் அத்தனை பேர் முன்னர் காட்டிக்கொள்ளவா முடியும்? செயற்கையாக புன்னகையை ஒட்டவைத்து கொண்டு பேச அதை பார்த்த கார்த்திகேயன் உள்ளுக்குள் பொங்கி சிரித்தான்… அவளது சிறுபிள்ளை தனத்தை எண்ணி! பேசி கொண்டிருந்தவர்கள் அகன்றபோது…

“ஹேய் தர்பூஸ்… ரொம்ப கஷ்டபட்டு சிரிக்கிற மாதிரி தெரியுது…” கன்னத்து ஓரங்கள் சிரிப்பால் சுருங்க, கண்களில் குறும்பான சிரிப்போடு காதருகே கேட்டவனை பார்த்த போது ஒரு கணம் தடுமாறித்தான் போனாள்! ஆண்மையின் சின்னமாக தன்னருகே வந்து காதோரமாக கேட்டபோது, வந்து உராய்ந்த அவனது மூச்சுகாற்று அவளது இதயத்துடிப்பை எகிற வைத்ததென்னவோ உண்மை! ஆனால் அவளை தர்பூஸ் என்று அழைத்தது கடும் கோபத்தை கிளப்ப…

“ம்ம்ம் ஆமாம்… வேணும்னா ஒரு சப்ஸ்டியூட் கொண்டு வந்து நிறுத்தேன்?” கோபத்தை எல்லாம் விழுங்கி கொண்டு வெளியில் சிரித்து கொண்டே அவனை கடிக்க…

“உனக்கு சப்ஸ்டியூட்டா? ஹஹா… நல்ல கதை… நாங்க எல்லாம் ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் பரம்பரைம்மா… அது இந்நேரத்துக்கு உனக்கு புரிந்து இருக்கணுமே…” சிரித்து கொண்டே வாரியவனை மற்றவர்கள் அறியாத வண்ணம் திரும்பி முறைத்து விட்டு சட்டென்று முகத்தை மாற்றிகொண்டாள்!

“இதுல ஒன்னும் குறைச்சலே இல்ல…” அவள் முனக…

“வேற எதுலடி குறைச்சல்?” குறும்பாகவே! அவள் தனது மனைவியாகிவிட்ட உரிமையோடு!

“வாட்… டியா…” குரலில் அதிர்ச்சியோடு கேட்க…

“ஆமாம்டி பொண்டாட்டி…” என்று குறும்பாக கூறி விட்டு, “ஹேய் தர்பூஸ்… கேமரா ரன்னிங்…” என்றும் எச்சரித்தான்!

“ம்ம்ம்… என்ன தர்பூஸ் தர்பூஸ்ன்னு… எனக்கு பிடிக்கல”

“எனக்கு பிடிச்சு இருக்கே!”

“ஏன் இப்படி பண்ற? இத்தனை பேர் முன்னாடி இருக்காங்களே கொஞ்சமாவது வெட்கம் இருக்கா?” மற்றவர்கள் அறியாதவண்ணமே இந்த சொற்போராட்டம் நடந்து கொண்டிருக்க…

“நான் எதுக்குடி வெட்கபடனும்? மப்பும் மந்தாரமுமா அப்படியே அள்ளிக்கலாம் போல ஒரு பொண்டாட்டி பக்கத்துல நிற்கும் போது அந்த அழகான தர்பூசை தர்பூஸ்ன்னு சொல்றது ஒரு தப்பா தர்பூஸ்?” குறும்பு குரலில் கொப்பளிக்க அவளிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கே வந்தவன் அரவிந்தன்… தனது தந்தையோடு! உடன் வைஷ்ணவியும்… துணி கொண்டு துடைத்தாற்போல அவனது முகத்தில் இருந்த புன்னகை காணாமற்போனது!

“ஆல் தி பெஸ்ட் கார்த்தி… நூறு வருஷம் ஷேமமா நீடூழி வாழனும்…” மனதார வாழ்த்திய மாசிலாமணிக்காக அரவிந்தனை பொறுத்துக்கொண்டான்! என்ன செய்வது? இன்னமும் தன் மேல் பாசமும் பிரியமும் வைத்திருக்கும் ஜீவனல்லவா!

“கார்த்தி… என்னை தப்பா நினைக்காதப்பா… தம்பி கிட்ட எவ்வளவோ சொன்னேன்… கேக்காம லீகல் நோட்டிஸ் கொடுத்துட்டான்… தயவு செய்து அதை எல்லாம் கணக்குல வைக்காதேப்பா… நீ இருக்குற தெம்புல தான் அரவிந்த பற்றின கவலை இல்லாம இருந்தேன் கார்த்தி… எப்படியும் நீ உருப்படி பண்ணி கொண்டு வந்துடுவன்னு… ஆனா இந்த பக்கிபயபுள்ள இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்ல ராஜா…” மெய்யான வருத்தத்துடன் கார்த்தியிடம் புலம்பினார்! அவருக்கு மிகுந்த மனஉளைச்சலுடன் குற்ற மனப்பான்மையும் சேர்ந்து கொள்ள, அவனுக்கோ என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை! அரவிந்தனை மறுபடியும் உள்ளுக்குள் விட்டால் திரும்பவும் ஏதாவது பிரச்சனையின் போது பயந்து கொண்டு ஓட மாட்டான் என என்ன நிச்சயம்? ஆனால் அதையெல்லாம் பேச திருமண மேடை ஒரு தளம் இல்லையே! புலம்புபவரிடம் என்ன சொல்வது?

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் அங்கிள்… டோன்ட் ஒர்ரி!” அரவிந்தனை சுத்தமாக கண்டுகொள்ளாமல் மாசிலாமணியிடம் பேசி கொண்டிருக்க, வைஷ்ணவி அங்கிருந்த வேளைகளில் கண்ணிமைக்காமல் இயங்கி கொண்டிருக்க, அரவிந்தன் திவ்யாவிடம் சென்றான்!

“நீயும் ஏமாந்து… என்னையும் ஏமாத்திட்டியே திவ்யா…” மிக மெல்லிய குரலில்! திவ்யா… அதை சிறிதும் கண்டுகொள்ளாமல்… வாழ்த்த வந்தவனுக்கு நன்றி சொல்வது போல…

“ரொம்ப தேங்க்ஸ் அர்விந்த் சார்…” பெரிய புன்னகையோடு கொஞ்சம் குரலை உயர்த்தியே கூறி அவனை தள்ளியே நிறுத்த, அவனுக்கோ அவளது அந்த புன்னகை கோபத்தை கிளறியது! ஆனாலும் அதை காட்டி கொள்ளாமல் சகுனியின் சிரிப்போடு…

“நீ நல்லா இருந்தா போதும் திவ்யா…” நல்லது நினைத்து சொல்பவன் போல சொல்லவும், அவளுக்கு அவனை பார்க்கவே பற்றி கொண்டு வந்தது! வெறுப்பாகவே தலையை திருப்பியவள் கண்டதென்ன? கார்த்திகேயன் கண்களில் தீப்பொறி பறக்க, அரவிந்தனை முறைத்து கொண்டிருந்தான்! இவனுக்கென்ன திவ்யாவிடம் பேச்சு வேண்டி கிடக்கிறது? அதே எண்ணம் தான் வைஷ்ணவிக்கும்… தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஸ்ரீராமுக்கும்! ஆஹா இவனிடம் பேசினால் கார்த்திகேயனுக்கு கோபம் வருகிறதே! தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுகிறதே! ஏளனமாக நினைத்தவள் இன்னும் அவனிடம் சிரித்து பேச… அரவிந்தனோ இவை அனைத்தையும் ஒரே நொடியில் கிரகித்தவன், இன்னும் கொஞ்சம் என்ன… அதிகமாகவே அவளிடம் சிரித்து பேசி கார்த்திகேயனின் வயிற்றில் அமிலத்தை கரைத்து ஊற்றி விட்டே கீழிறங்கினான்! அதோடு கார்த்திகேயனின் குறும்பு பேச்சு காணாமல் போயிருந்தது!

அதன் பின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அந்த மதியமே பெண்ணை அழைத்து கொண்டு புதுவை செல்ல தயாராக, திவ்யா மனம் கலங்கினாள்! இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்யபட்டாயிற்றே! தனது ஆசைகளும் லட்சியங்களும் எங்கே போனது? இனி இந்த குடும்பத்திற்கும் தனக்கும் உள்ள உறவு என்பது கட்டிகொடுத்த பெண் என்பது மட்டும் தானோ? அம்மாவின் சேலையை பிடித்து கொண்டே சுற்றி அவரிடம் திட்டு வாங்கியதெல்லாம் அவ்வளவு தானா? ஸ்ரீராமிடமும் விகாஷிடமும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடித்து அடித்து கொண்டும் கொஞ்சி கொண்டும் போனதெல்லாம் அவ்வளவுதானா? இருபத்து இரண்டு வருடமாக தன் வீடு என்று நினைத்தது இனி அம்மா வீடு என்று ஆகி விடத்தான் போகிறதா? இத்தனை வருடமாக எனக்கு உற்றதோழியாக இருந்த என்னருமை மல்லிகை கொடியே உன்னை பிரிந்து நான் போகிறேன்… வெறுப்பை மட்டுமே கணவனுக்காக சுமந்து கொண்டு!

பெண் வீடு வந்திருந்த மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கும் சடங்கு நடந்து கொண்டிருக்க, அவளோ ஒவ்வொரு முறையும் மற்றவர்களுக்காக பார்த்து கொண்டு விஷத்தை விழுங்குவது போல் பழத்தை விழுங்கி கொண்டிருந்தாள்! கார்த்திகேயன் அனைவரிடமும் சந்தோஷமாக சிரித்து பேசி வம்பு இழுத்து கொண்டிருக்க திவ்யாவுக்கு அனல் மேல் அமர்ந்த உணர்வு! அருகில் வந்து அமர்ந்த ஸ்ரீராம் திவ்யாவின் கையை பிடித்து…

“திவிகுட்டி… நீ நல்ல பிள்ளை தானே… நான் சொன்னா கேட்டுக்குவதானே…” பீடிகையோடு ஆரம்பிக்க கார்த்திகேயனுக்கு அதை பார்க்க சிரிப்பு தாளவில்லை!

“ஸ்ரீ… வேணும்னா ஒரு பீடிங் பாட்டில் எடுத்துட்டு வந்து இவளுக்கு கொடு… எப்பா பில்ட் அப் தாங்கலடா சாமி…” வேண்டுமென்றே கிண்டலடிக்க…

“அண்ணா… இருக்கற வரைக்கும் தெரியல… ஆனா இந்த வாலு மறுவீடு போகுதுன்னு நினைக்கும் போது நிஜமாவே கஷ்டமாத்தான் இருக்குண்ணா… கூடவே சுத்திட்டு இருந்துட்டா…” கண்களில் நீரோடு உணர்ந்தே அவன் கூற…

“ஸ்ரீ… அதுக்கு நீ சந்தோஷம் தானே படனும்… இந்த தொல்லைய நான் தான் தைர்யமா கூட்டிட்டு போறேனே… அதுக்கே நீங்க என்னை மெச்சிக்கணும்…” என்று சிரிக்காமல் கிண்டலடிக்க இருந்த அனைவரும் சோகம் மறந்து சிரிக்க, திவ்யா அவனை எரிப்பது போல முறைத்தாள்!

“பாரு விகாஷ்… உன் தங்கச்சி இப்போவே என்னை இப்படி முறைக்கிறா… இன்னும் நாளைக்கெல்லாம் எப்படியோ…” விகாஷிடம் புகார் கூற…

“மோனே… என்னை எப்படி எல்லாம் கிண்டலடிப்பீங்க… இனிமே நீயும் அதே ரேஞ்ச் தான்… போடு தோப்புகரனம்ன்னு திவி சொன்னா போட்டு தான் ஆகனும்…” விகாஷ் போட்டு தாக்கினான்! அதை கேட்ட ஸ்ரீ…

“ஹலோ… நாங்க எல்லாம் ஆம்பிளை சிங்கம்ல… தோப்புகரணம் அவ சொல்லி கார்த்தி அண்ணா போடுறதா? சான்சே இல்ல…” என்று கூறி நிறுத்த அதை தொடர்ந்த சஞ்சய், “சொல்றதுக்கு முன்னாடியே எண்ணிக்கோ தாயேன்னு சரண்டர் ஆகிருவோம்ல… எப்பூடி…” என்று தாக்க…

“சஞ்சய்… என் தங்கச்சி சூப்பரா என்னுவாளே… ஆனா ஸ்ரீ… நீ சொல்லவே இல்ல… தினம் இதுதான் நடக்குதா சகி கிட்ட…” என்று நேரம் பார்த்து போட்டு கொடுக்க இளையவர்கள் மட்டுமே இருந்த அந்த இடத்தில், ஹோ வென எல்லோரும் சேர்ந்து குரல் எழுப்ப, ஸ்ரீ கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல்…

“ஹய்யோ குருவே… தேங்க்ஸ் குருவே… எப்படிடா டாப்பிக் ஓபன் பண்றதுன்னு இருந்தேன்… நீங்க இவ்ளோ நல்லவர்ன்னு இப்போ தான் தெரியுது குருவே… எங்களுக்கு பையன் பிறந்தா கண்டிப்பா உங்க பேர் தான் வைப்போம் குருவே…” என்று நக்கலாக வணங்கி கொண்டே கூற அதற்கு கார்த்திகேயன் ஆசி வழங்குவது போல காட்டி சிரித்து கொண்டே…

“தான்க் யூ… தான்க் யூ…” இளையவர்களின் மத்தியில் சிரிப்பு சரவெடி கிளம்பியது!

“அடப்பாவி… கல்யாணமாச்சும் செய்துக்குவியா… இல்ல அதுவும் இல்லையா?” சஞ்சய்யோடு சேர்ந்து எல்லோருமாக ஓட்ட…

“ஹேய் சகி… என்னடி சொல்ற?” என்று அங்கு முகமெல்லாம் சிவந்து நின்று கொண்டிருந்த சாஹித்யாவை பார்த்து ஸ்ரீ கேட்க…

“என்னடா…” புரியாமல் சகி கேட்டாள்!

“தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? இல்ல புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?” என்று அங்கிருந்த சஞ்சய், விகாஷ், உள்ளிட்ட இளைய கூட்டம் பாட்டு பாடி கலாய்க்க… அவளுக்கோ கூச்சம் மேலிட்டு ச்சீ போடா பிசாசு என்று கூறி அவன் மேல் சோபா குஷனை எடுத்து எறிந்து விட்டு சமயலறைக்கு ஓடினாள்! கார்த்திகேயன் பக்கம் ஸ்ரீயின் கவனம் திரும்ப…

“அண்ணா… நிஜமா கஷ்டம் தான்… உங்களை சமாளிக்கறது…” ஸ்ரீ சிரித்து கொண்டே சீண்டினான்!

“ஆஹா… இப்படி ஒரு குற்றசாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்… நானே பயந்துகிட்டு இருக்கேன்… பச்சை புள்ளைய பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட ஸ்ரீ… என்ன வார்த்தை சொல்லிட்ட…” சிவாஜியை போல நக்கலடிக்க…

“ஐயோ… கார்த்திக்… என் ஹார்ட்டே ப்ரேக் ஆகிடுச்சு…” விகாஷ் நெஞ்சை பிடிக்க, சஞ்சய் அதற்க்கு உதவுவது பல நடிக்க…

“விக்கி… உன்னோட ப்ரேக் வயர கேக்காம எப்படி உன்னோட ஹார்ட் ப்ரேக் ஆகலாம்? மோனே… இரு உனக்கு அடுத்த பூஜை ரெடி ஆகுது…” என்று ரக்ஷிதாவை குறிப்பிட்டு கிண்டலடிக்க சிரிப்பால் சூழ்ந்திருந்த அந்த இடத்தின் நாயகியோ அதில் கலக்காமல் சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள்! அதை பார்த்த ஸ்ரீ…

“டேய் திவிக்குட்டி… இதுநாள் வரைக்கும் நீ சின்ன பொண்ணா இங்க செல்லமா இருந்து இருக்கலாம்டா… ஆனா இனிமே நீ உன்னோட ஹஸ்பண்ட் மனச புரிஞ்சுகிட்டு நடந்துக்கோடா…” ஸ்ரீ பெரிய மனிதனாக அட்வைஸ…

“ஹாஆஆஆ… ஸ்ரீ… என் ஹார்ட்ட டச் பண்ணிட்ட… டச்ச்ச்ச் பண்ணிட்ட…” கார்த்திகேயன் அவனது பங்குக்கு நெஞ்சை பிடிக்க, ஸ்ரீ சிரித்து கொண்டே…

“அண்ணா… கஷ்டப்பட்டு சீரியஸா பேச ட்ரை பண்றேன்… நீங்க சிரிப்பு கூட்டாதீங்கண்ணா…” அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

“அதெல்லாம் விட்டுடு… உனக்கு அதெல்லாம் வராது…” அப்போதுதான் அங்கே வந்த வைஷ்ணவி ஒரு பிட்டை போட சஞ்சய்யும் விகாஷும் அவளுக்கு ஹை பை கொடுத்தனர்!

“ச்சே… சுத்தி வில்ல கூட்டமா இருக்கே ஸ்ரீ… இப்போதைக்கு நீ பதுங்கிடு ஸ்ரீ பதுங்கிடு… இல்லைன்னா சேதாரம் உனக்குத்தான்!” அவனே அவனுக்கு கூறுவது போல நக்கலடிக்க வைஷ்ணவி பத்திரம் காட்டிவிட்டு போனாள்! ஸ்ரீ நிஜமாகவே திவ்யாவிடம் சீரியசாகத்தான் பேசி கொண்டிருந்தான்! கார்த்திகேயன் பக்கமிருந்து பிரச்சனை எதுவும் வராதென்பது அவனுக்கு உறுதியான ஒன்று! ஆனால் திவ்யாவின் மனதை தான் கணிக்க முடியவில்லை… அவளிடம் நேராக கார்த்திகேயன் கூறியதை எல்லாம் கூறவும் முடியவில்லை! சொல்வதென்றால் அவனிடம் முன்னமே சொல்லி இருப்பாளே… அவளே சொல்லாதபோது எனக்கு தெரியும் என்று தோழியிடம் காட்டிக்கொள்ள பிடிக்கவில்லை! அவளது அந்தரங்கத்தை அந்தரங்கமாகவே வைக்க முயற்சித்தான்!

“திவிக்குட்டி… ஏதுவா இருந்தாலும் விட்டு கொடுத்து போடா… பழசு எதாச்சும் உனக்கு பிடிக்காம இருந்தா நினைக்காத குட்டி… இந்த வீட்டோட மரியாதை உன் வீட்டோட மரியாதை எல்லாம் இனிமே உன் கைல தான் இருக்கு… முக்கியமா உன் ஹஸ்பண்டோட மரியாதை!” உன் வீடு, உன் ஹஸ்பண்ட் என்பதில் மிகுந்த அழுத்தம் கொடுத்து அவன் கூற, அவளது இமைகுடையோ தாழ்ந்தே இருந்தது! அதில் கண்ணீர் குளம்!

எல்லோரிடமும் பேசி விடை பெற்ற திவ்யா கண்ணீரில் கரைய, அனைவரின் கண்களிலும் கண்ணீர்! தாய், தந்தை எல்லோரிடமும் விடை பெற்ற திவ்யா… ஸ்ரீயிடம் வரும்போது அவன் இன்முகமாகவே பேசி அனுப்ப பார்க்க…

“ஸ்ரீ…” என்று தோளை அணைத்த திவ்யா கதறினாள்! உள்ளுக்குள் இருந்த சோகம், கோபம் எல்லாம் கண்ணீராக பொழிய, அவனோ அவளை பிரியும் வேதனையில் கலங்கினான்! பிறந்தது முதல் எங்கு சென்றாலும் திவ்யா தொற்றுவது ஸ்ரீயைத்தான்… முதன்முதலாக அவளை பிரியும் வேதனை… எல்லாமாக சேர்த்து அவனது கண்களிலும் கண்ணீர் அணை உடைப்பெடுக்க, கார்த்திகேயன் தான் சுதாரித்து தேற்றினான்!

“ஸ்ரீ… அவ எங்க போய்ட போறா? நினைச்சா பாண்டிச்சேரி வர போற… ஏன் நீயும் இப்படி அழற? நீதானே அவளுக்கு அட்வைஸ் பண்ணனும்…” என்று பொறுப்பாக கூற கொஞ்சமாக சமாதானமாக, மனம் முழுக்க குழப்பமும் வேதனையுமாக, கார்த்திகேயன் மேல் அதீத வெறுப்புமாக விடை பெற்றாள் திருமதி திவ்யதர்ஷினி கார்த்திகேயன்!

***

வெண்ணிலவு வெளியே காய்ந்து கொண்டிருக்க, நட்சத்திரங்களின் ஊர்வலம் வானவீதியில் நடந்து கொண்டிருக்க, சில்லென்ற கடற்கரையின் வாடைக்காற்று பட்டு தலைவி பிறைநுதல் நொந்தாளோ இல்லையோ தலைவன் கார்த்திகேயன் நுதல் சுருங்கி வெண்குழல் வத்தியில் காய்ந்து கொண்டிருந்தான்! வேறொன்றுமில்லை சிகரெட் தான் அது! தங்களது அந்தரங்கத்தை மற்றவர் அறிய பொதுவில் கொண்டாட விருப்பமில்லாத கார்த்திகேயன், மங்கையிடம் கூறி திவ்யாவை அழைத்து கொண்டு காலாபேட்டில் இருந்த தங்களது கடற்கரை பார்ம் ஹவுஸ் வந்திருந்தான்! வைஷ்ணவி ஆட்களை விட்டு முன்னரே அனைத்து அலங்காரங்களையும் முடித்து திவ்யாவுக்கு ஆயிரம் அறிவுரைகளை சொல்லி அனுப்பி இருந்தாள்! மங்கையிடம் ஆசி பெற்று கொண்டு கணவனோடு வந்தவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது! ஆனாலும் இருவரும் பேசி கொள்ளாமலே வந்து சேர்ந்திருந்தனர்…

வெகு தனிமையான பெரிய வீடு!

சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்திருந்த தோப்பு!

யாருமற்ற தனித்தனியான தனிமை!

சிலுசிலுவென்று வீசும் கடற்கரை காற்று!

அருகில் கேட்கும் கடற்கரையின் அலையோசை!

உடலை ஊடுருவி சென்ற வாடை குளிர்!

ஏகாந்தத்தின் இனிமையை அனுபவிக்காத இரண்டு மனம்!

அவரவருக்கான நியாயங்கள் அவரவருக்கு!

நிசப்தத்தின் பெரிய இரைச்சலை காற்றில் மிதந்து வந்த சிதார் இசை முடிவுக்கு கொண்டு வந்தது! கார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தது இந்த வீடு! தனிமை மிக அவசியமாக தேவைப்படும் போது இங்கு வந்து விடுவான்! அதை விட பிடித்தது அந்த தனிமையில் சிதாரை வழிய விடுவது! அந்த கஜல் இசையில் மனம் லயித்து ஒரு விதமான மோன நிலையில் அமர்ந்து இருப்பது அவனுக்கு மிகவும் பிடித்தது! அந்த தியான நிலையில் எடுக்கும் முடிவுகள் கொஞ்சம் கூட பிசகாமல் அவனுக்கு வெற்றியை அள்ளி தந்து இருக்கின்றன! ஆனால் இன்றோ இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தின் வெம்மை தாங்காமல் இசையை வழிய விட்டு சிகரெட்டை எடுத்தான்! அவளுக்கு மாடியறையை காட்டி விட்டு கீழே ஹாலில் அமர்ந்து கண்களை மூடினான்! அவள் அரவிந்தனோடு பேசி சிரித்தது கண் முன் வந்து கடுப்பேற்றியது… தேவையான நேரத்தில் விட்டு விட்டு ஓடிய கோழையின் முகத்தை பார்க்கவே பிடிக்காதபோது அவனிடம் என்ன அப்படி ஒரு சிரிப்பு?

மௌனமாகவே மாடிக்கு சென்ற திவ்யா குளித்து முடித்து நைட்டியை மாற்றி கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கண்களை மூடினாள்! மனதுக்குள் இருந்த எக்கச்சக்க கோபம்! காலையில் இருந்து அலைந்த அயர்ச்சி! பிறந்த வீட்டை பிரிந்து வந்த சோகம்! ஆற்றாமை, துயரம், வேதனை எல்லாமுமாக அவளை அலைகழிக்க மனதின் கூச்சல் தாங்காமல் தள்ளாடினாள்!

கதவு திறக்கும் ஓசை! கண்களை திறவாமலே அமர்ந்து இருந்தாள்! அமர்ந்து இருந்தவளை பார்த்த போது அள்ளி அணைக்கத்துடித்த கரத்தை அடக்கி வைத்தான்! ஒரு புறம் தயங்க… மறுபுறம் மயங்க… அவளுடனான அந்த சில நிமிடங்களின் நினைவு வந்து அவனது மோகத்தை கொழுந்து விட்டு எரிய செய்ய அந்த தீயை அணைக்க வழி தெரியாமல் போராடினான்! விசித்திரமானது இந்த போராட்டம்… அவனுக்கும் அவனுக்குமான போராட்டம்! முடிவில் மோகம் வெல்ல…

“திவி…” தோளில் கைவைத்தான்!

கண்களை திறந்தபோது அதில் இருந்தது என்ன? கண்டிப்பாக காதல் கிடையாது… பழி உணர்ச்சியா? கொடும் பகை உணர்ச்சியா? வெறுமையான கண்களில் தென்பட்ட சீற்றம் கார்த்திகேயனை பாதிக்கவில்லை! இதையெல்லாம் எதிர்பாராமல் இல்லையே!

“இப்போ என்ன பண்ணனும்? அன்னைக்கு லைசென்ஸ் வாங்காம செய்தத இப்போ லைசென்ஸ் வாங்கிட்டு செய்ய போறியா? உன்னால அவ்வளவு தான முடியும்… வா வந்து வெறிய தீர்த்துக்கோ…” தீயாக வந்து விழுந்தன வார்த்தைகள்! உனது காதலை மட்டுமே கேட்க வந்தேன் திவ்யா என்றது அவன் மனம்! மோகத்தை வடிய வைக்க மோகம் தேவை இல்லை என்று கார்த்திகேயன் உணர்ந்த கணங்கள் அவை! பொங்கும் பாலில் விட்ட நீர் போல அவனது உணர்வுகள் மரித்தன!

“ச்சீ… என்ன பேசற திவ்யா நீ?”

“ஓ… இதெல்லாம் உன்னை பொறுத்தவரை குடும்பப்பெண்கள் பேசற வார்த்தை இல்லை… இல்லையா? நான் தான் உன்னை பொறுத்தவரை குடும்ப பெண்ணே இல்லையே…” எள்ளினாள் திவ்யா!

“திவ்யா… திஸ் இஸ் த லிமிட்… அளந்து பேசு!”

“சார்… எதுல சார் அளக்கறது? கிலோ கணக்கிலா இல்ல கிராம் கணக்கிலா? அதையும் சொல்லிடு…”

“வேணாம் திவ்யா… என்னோட கோபத்தை கிளராதே…”

“அப்படி கிளறினா என்ன பண்ணுவ? மறுபடி ரேப் பண்ணுவியா? ஓ… இப்போ பண்ணா அதுக்கு பேர் ரேப் இல்ல… புனிதமான தாம்பத்தியம்… இல்லையா? நல்லா குடுத்து வச்சு இருக்கீங்கடா பேர… ஷிட்…” கண் மண் தெரியாத கோபம் அவளை கொதிக்க வைத்து கொண்டிருந்தது! அதே கோபத்தில் கார்த்திகேயனும்…

“ஏய்… என்னடி விட்டா பேசிட்டே போற? உனக்கு தான் பேச தெரியுமா? ரேப் ரேப்ன்னு சொல்றியே… உன்னை அப்படியே தத்தளிக்க விட்டுட்டா போயிட்டேன்? ஊர்ல அவனவன் தெருவுக்கு நாலு வைப்பாட்டி வெச்சு இருக்கான்… நான் தொட்டவளையே கட்டினேன் பாரு… இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ!”

“ஓ… அது உங்களோட பெருந்தன்மை இல்லையாங்க மகாராஜா… ச்சே ச்சே… உங்க பெரிய மனசு யாருக்கு வரும்? ஒரு நாள் நீ செய்ததுக்கு பேர் கற்பழிப்புன்னா… தாலின்னு ஒன்ன கட்டி… நீ தினம் தினம் செய்ய நினைக்கறதுக்கு பேரும் கற்பழிப்பு தான்… ச்சே கேவலமா இருக்கு… அருவருப்பா இருக்கு…”

“எது அருவருப்பா இருக்கு?” அவனது கண்கள் இடுங்கின!

“உன் பக்கத்துல நிற்கிறதே அருவருப்பா இருக்கு… ஆயிரம் புழு என் மேல ஊருற மாதிரி இருக்கு… உன் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கல…” கோபத்தில் வார்த்தைகள் அதிகமாக…

“அப்படீன்னா யார பிடிச்சு இருக்கு? அந்த அரவிந்தா?” கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்!

“ஏன்… உன்னோட கம்பேர் பண்ணா அவன் எவ்வளவோ மேல்… அன்னைக்கு என்ன சொன்ன? விருப்பமில்லாத பொண்டாட்டிய கூட தொட கூடாதா? பேஷ்… என்னம்மா சீன் போட்டு இருக்க? நான் தான் அதை எல்லாம் நம்பிட்டு… ச்சே…” அவனை நோக்கி அப்போது சரிந்த தனது மனதை நினைத்து வேதனை பட்டாள்!

“ப்ச்… எனக்கு சீன் போட வேண்டிய அவசியம் இல்ல திவ்யா… அது தான் என்னோட கொள்கை… நான் தவறி போனதெல்லாம் உன் கிட்ட மட்டும் தான்…” உணர்ந்தே கூற…

“இது மாதிரி எத்தனை பேர் கிட்ட சொன்ன? அவங்களையெல்லாம் கவிழ்த்த மாதிரி என்னையும் கவிழ்க்க திட்டம் போட்டியோ? அப்புறம் ஏன்டா கல்யாணம் வேற பண்ணிகிட்ட? ஓ… அப்போதானே நீ செய்யற தப்பெல்லாம் வெளிய வராது… ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி வாயை அடைக்க கத்து வெச்சு இருக்க கார்த்திக்…” கூரிய வாளாக குத்தி கிழித்தன அவளது வார்த்தைகள்!

“நான் யாரையும் கவிழ்த்தது இல்ல… ஏன்… உனக்கு மட்டும் தான் கற்பு போச்சோ? அத்தனை நாள் நான் கொண்ட கொள்கையும் போனது அன்றைக்கு தான்டி… கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்றதே தப்புன்னு நினைச்ச கேனயன் நான்… அந்த அர்விந்த் கூப்பிடுவான்… சூப்பர் பிகர் ஒன்னு வந்திருக்கு… வான்னு… அப்போல்லாம் கொள்கை மண்ணாங்கட்டின்னு பேசினேன் பாரு… எனக்கு இதெல்லாம் ரொம்ப தேவைதான்! அப்புறம் என்ன? உன் வாயை அடைச்சு வைக்க உன்னை கல்யாணம் பண்ணினேனா… ரப்பிஷ்… உன்னை தொட்டுட்ட ஒரே ரீசன் தான் இந்த கல்யாணம்… வேற ஒண்ணுமில்ல… ஆனா இந்த கல்யாணத்தை உடைச்சுட்டு வெளிய போய்டலாம்ன்னு மட்டும் கனவு காணாதே… எனக்கு என்னோட பெயர் ரொம்ப முக்கியம்… ஸ்டேடஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்… நீ இனிமே மிசஸ் கார்த்திகேயன்! அவ்வளவுதான்… அதுக்கு மேல உன் கிட்ட எனக்கு எதுவும் தேவை இல்லை… ஆனா இதெல்லாம் வெளிய தெரிஞ்சுது… நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” மனதில் இருந்த காதலை எல்லாம் மறைத்து கோபம் மிகுந்து வார்த்தைகளை கொட்டி விட்டு கதவை அறைந்து மூடி சென்றான்!

வேதனை மிகுந்து இருந்தது அவனது மனதில்… உயிருக்கு உயிராக காதலித்த தன் காதலியிடம் சொல்ல கூடிய வார்த்தைகளா இவை? காதலை கேட்ட பாவத்திற்கு எத்தனை வார்த்தைகளை கொட்டி விட்டாள்? காதலை கூறாமல் திருமணத்தை நடத்த செய்த குற்றமா? வாழ்கையை நினைத்து மனம் வலிக்க வெண்ணிலவை வெறித்தான்! அதுவரை அவனை வார்த்தைகளால் குத்தி கிழித்த திவ்யா தளர்ந்து சரிந்தாள்!

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே…

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

பறவைகளின் கீச் கீச் சப்தம் காதில் விழும் போதே இது என்ன இடம் என்ற கேள்வியோடு எழுந்தாள் திவ்யா! சுகமாக படுக்கையில் படுத்து கொண்டிருப்பதை சட்டென்று உணர்ந்தவளுக்கு தனக்கு திருமணமாகி கணவனோடு அவனது வீட்டில் இருப்பது உரைத்தது! முன் தினம் இரவு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்