arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 16

அத்தியாயம் 16

visibility 766
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

பறவைகளின் கீச் கீச் சப்தம் காதில் விழும் போதே இது என்ன இடம் என்ற கேள்வியோடு எழுந்தாள் திவ்யா! சுகமாக படுக்கையில் படுத்து கொண்டிருப்பதை சட்டென்று உணர்ந்தவளுக்கு தனக்கு திருமணமாகி கணவனோடு அவனது வீட்டில் இருப்பது உரைத்தது! முன் தினம் இரவு நடந்ததெல்லாம் நினைவுக்கு வர, தான் எங்கனம் படுக்கைக்கு வந்தோம் என்பது புரிபடவில்லை! சோபாவில் தானே அமர்ந்தவாறே உறங்கினோம் என்று நினைத்து கொண்டே அறையை சுற்றி பார்த்தாள்!

பெரிய அறை இரண்டாக தடுக்கபட்டிருக்க சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு அறையில் கார்த்திகேயன் இல்லை என்பது தெளிவாகியது! எங்கே சென்றிருப்பான்? அவன் எங்கே சென்றால் உனக்கென்ன என்று அவளது மூளை வசை பாட, மெல்ல எழுந்து ஜன்னலருகே வந்து சற்று தூரத்தில் தெரிந்த கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்! அலைகள் ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு ஓடியது!

மனிதர்களும் இப்படித்தானே… ஒன்றை ஒன்று துரத்துத்தலும் ஒன்றுக்காக ஒன்று துரத்துதலும் தானே வாழ்க்கை! ஆனால் மனிதனின் தேடல்களும் துரத்தல்களும் முடிவு பெற்றதாக சரித்தித்திரமும் இல்லை பூகோளமும் இல்லையே! ஆனால் இந்த தேடல் பெரும்பான்மையான நேரங்களில் நல்லதாகவே முடிந்து இருக்கிறது! தேடுதல் இல்லாமல் மனித குலத்திற்கு எதுவுமே கிடைத்து இருக்காது… குரங்கு மனிதனானதும் ஒரு தேடலின் விளைவுதானே! கற்களுக்கு இடையே இருந்த நெருப்பை தேடிய மனிதக்குரங்கு மனிதனானது! இது உடல் ரீதியான பரிணாம வளர்ச்சி என்பதை விட அறிவு ரீதியான பரிணாம வளர்ச்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம்! அப்படியென்றால் அறிவை துரத்திக்கொண்டு இப்போது ஓடுகிற மனிதன் மேலும் இன்னொரு நிலைக்கும் போவானோ?

மனதில் ஏதேதோ எண்ணம் தோன்ற அவற்றையெல்லாம் கடிவாளமிட்டு அடக்கி வெளியே வந்தாள்! இருளில் பார்த்த போது வசீகரிக்காத வீடு… இப்போது அதிகாலையில் அழகாக இருந்தது! அப்போது கோபம் அதிகமாக இருந்த காரணமாக இருந்திருக்கும்… இப்போது மனதிலிருந்ததை கொட்டிய திருப்தி! காலை கடன்களை முடித்துக்கொண்டு வெளியே வந்தவள்… மாடிக்கு வழி இருக்க… சென்று தான் பார்ப்போமே என்று ஏறினாள்!

சிலுசிலுவென்ற காற்று… இதமான தென்னந்தோப்பின் வாசம்… பறவைகளின் சப்தம் என அந்த இடமே ரம்யமாகத்தான் இருந்தது! சோகத்தில் இருந்த அவளின் மனம் கூட லேசானது! குருவி, கூட்டில் இருந்த அதன் குஞ்சுகளுக்கு உணவு தேட அவைகளிடம் விடைபெற்று போக குருவி குஞ்சுகள் தங்களுக்குள் கீச் கீச் என்று கத்தி கொண்டிருந்தன! திவ்யாவுக்கு அவை என்ன பேசுகின்றன என்பது புரியவில்லை என்றாலும் அந்த காட்சி மனதை லேசாக்க… ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்! சட்டென்று அரவம் கேட்க திரும்பி பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்தாள்! அந்த பெரிய மொட்டை மாடியின் ஒரு பகுதியில் கார்த்திகேயன் ஆசனபயிற்சிகளை முடித்து ப்ராமரியை ஆரம்பித்து இருந்தான்! அந்த ஓம்காரம் காற்றில் கலந்து வந்து அவளையும் அதிர வைத்தது!

ஆனால் அவளை அதிர வைத்தது வெறுமனே ஷார்ட்ஸ் பனியன் அணிந்து அவன் யோகபயிற்சியை செய்தது தான்! அவளால் நிமிர்ந்தே பார்க்க இயலாமல் கண்களை தாழ்த்தி கொண்டு சட்டென்று கீழே போக எத்தனிக்க, அவளது அரவம் கேட்டு விழித்த கார்த்திகேயன், அவளை இருக்குமாறு சைகை செய்து விட்டு விரைந்து முடித்து முகத்தை தேய்த்து கொண்டே எழுந்தான்!

“ஹாய் பொண்டாட்டி… குட்மார்னிங்!” பழைய குறும்பு கண்களின் குறுகுறுப்பான சிரிப்போடு மீண்டிருந்தது! அதை கேட்கும் போதே அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது! நேற்றுத்தான் அந்த அளவு சண்டை போட்டுவிட்டு அவனுமே வார்த்தைகளை கொட்டி விட்டு சென்றிருக்க, எப்படி மறுபடியும் இது போல பேச அவனால் முடிகிறது? முறைத்து கொண்டே கீழே போக முயல…

“இருடா… கொஞ்ச நேரம்…” என்று அவளது கையை பிடித்து இழுத்தான்! அவளது பார்வை அந்த கையை நோக்கி போனது!

“கொஞ்சம் கையை விடறீங்களா மிஸ்டர் கார்த்திகேயன்…”

“இந்த கையை விட்டுட மாட்டேன்னு சொல்லித்தான் தாலி கட்டினேன் மிசஸ் கார்த்திகேயன்…” குரலில் குறும்பு தெறித்தது!

“டோன்ட் கால் மீ மிசஸ் கார்த்திகேயன்… ஐம் மிஸ் திவ்யா…” கறாராக வந்து விழுந்தன வார்த்தைகள்!

“மிஸ்ஸ நீ மிஸ் பண்ணி ரொம்ப நாளாச்சே… மிசஸ் கார்த்திகேயன்…” கண்களை சிமிட்டி அவன் கூறியதை பார்க்கும் போது வயிற்றில் பூச்சி பறந்தது! கையை உதறி முறைப்பான பார்வையை அவன் மேல் பாயவிட்டு கழுத்தை நொடித்து திருப்பி கீழே சென்றாள்!

காபி கலந்து கொடுக்க யாருமில்லாததால் தானே பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி காபி கலந்து கொண்டு வந்து உட்கார…

“ஹை காபி… தேங்க்ஸ் குட்டி…” வெகுசாதாரணமாக அவளது காபியை பிடுங்கி குடிக்க ஆரம்பித்தான்! திவ்யா கோபமாக…

“அது என் காபி…” கடுப்பாக…

“ம்ம்ம்… அப்படியா… சரி குடிச்சுக்கோ…” என்று குறும்பாக கண்களை சிமிட்டி கொண்டே அவன் குடித்ததை அவளிடம் தர…

“ச்சே…” என்று கடுப்படித்து விட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றாள்! இன்னொரு காபி கலக்குவதற்கு! அவள் பின்னால் சமையலறைக்கு சென்றவன் வாகாக மேடையில் அமர்ந்து கொண்டு அவளை பார்த்தவாறே காபியை சுவைக்க ஆரம்பித்தான்! அதை பார்த்தவளுக்கோ கோபம் பற்றி கொண்டு வந்தது!

“ச்சே… உனக்கு வெட்கமே இல்லையா? நேற்று அவ்வளவு பேசின…” கடுப்பாக கூற…

“ஏன் நீ பேசாமதான் நான் பேசினேனா திவி? சரி ஏதோ சின்ன பொண்ணு கோபத்துல பேசினான்னு என்னை நானே சமாதானபடுத்திகிட்டு இருந்தா… ரொம்ப துள்ளறடி…” சிரித்தவாறே கூற…

“நான் தான் ரொம்ப துள்ளற ஆள்ன்னு தெரியுமில்ல… அப்புறம் ஏன் கட்டி தொலைச்ச…” வெறுப்பாகவே கேட்டாள்!

“என்ன பண்றது விதி…” என்று நக்கலாக பதில் வர நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்தது என்ன? அவனால் சரியாக வரையறுக்க முடியாத அந்த உணர்வு? மெளனமாக அவள் காபியை கலக்க…

“எந்த கடையில நீ அரிசி வாங்குற…” சிரித்துக்கொண்டே பாட அவன் தான் படுக்கையில் படுக்க வைத்தான் என்பது புரிந்தது! கையில் வைத்திருந்த பாத்திரத்தை நங்கென்று மேடையில் வைத்தாள்! அதையும் பார்த்து சிரித்தவன்…

“ஓகே ஓகே… திவி… இப்போ வீட்டுக்கு போலாமா? இல்ல இங்க இருக்கலாமா?”

“போலாம்…” எங்கோ பார்த்தபடி பதில் வர… தோளை குலுக்கியபடி…

“ஓகே… ரெடி ஆகிடு…” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றான்! இங்கே இருவரும் திரும்பி நின்று முறைப்பதை விடவும் வீட்டில் இருந்தாலாவது மற்றவர்களிடம் பேசிகொண்டாவது இருக்கலாம் என்ற எண்ணத்தில்! எதிர்காலத்தை நினைத்து சலிப்பாக இருந்தது கார்த்திகேயனுக்கு… எப்படி இவளை தன் வழிக்கு கொண்டு வருவதென்று!

***

“மறுபடி பார்ட்னர்ஷிப் கன்டினியு பன்றத பற்றி எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்ல அங்கிள்… ஆனா வியாபாரம்னா நல்லதும் இருக்கும் அப்போ அப்போ இந்த மாதிரி கஷ்டமும் வரும்… நல்லா இருக்கும் போது மட்டும் தான் கூட இருப்பேன்… கஷ்டம் வந்தா கழண்டுக்குவேன்ன்னு சொல்றது தப்பு இல்லையா… அந்த நேரத்துல அர்விந்த் உதவி செய்யாதத விட விட்டுட்டு ஓடினவன எப்படி இனிமே நம்ப சொல்றீங்க? முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் அங்கிள்… இனிமே சேர வேண்டாம்… கணக்கை முடிச்சுக்கலாம்…” கறாராக கூறியவனை பரிதாபமான பார்வையோடு எதிர்கொண்டார் மாசிலாமணி! எப்படியாவது அரவிந்தனை சுஷ்ருதாவில் மறுபடி இணைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு!

“கார்த்தி… நீ இப்படி சொல்லகூடாதுப்பா… நீ இருக்குற தைர்யத்துல தான் இந்த உதவாக்கரைய பற்றின பயம் இல்லாம இருந்தேன்… நிஜமா இப்படி செய்வான்னு நினைக்கவே இல்ல… எனக்காக கொஞ்சம் பாரு கண்ணா…” பெரியவர் தன்னால் இயன்றவரை கார்த்தியிடம் கெஞ்சி கொண்டிருக்க அரவிந்தனின் பார்வை முழுக்க திவ்யாவின் மேல் மட்டுமே படிந்து இருந்தது! அவள் குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தபோதும் அவர்கள் இருந்த ஹாலை தாண்டி சென்ற போதும் அவளையே தொடர்ந்து கொண்டிருந்தது! இதை கவனித்த கார்த்தியின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்க அதை உணராத மாசிலாமணி எப்படியாவது கார்த்தியை சமாதானபடுத்த முயன்றார்!

“ம்ம்ம்… பார்க்கலாம் அங்கிள்… மறுபடி பார்ட்னர்ஷிப் தொடரனும்னா அது அரவிந்தோட பிஹெவியர் பொறுத்து தான்…” என்றவன் முடித்து இருவரையும் அனுப்பவே முயன்றான்! மாசிலாமணியை பொறுத்தவரை நட்புக்கு மதித்தவர்! ரங்கராஜனுக்கு உண்மையாகவே இருந்தவர்! தன்னிடம் பெரிதாக வசதி இல்லாதபோதும் தன்னை வொர்கிங் பார்ட்னராக சேர்த்து தனக்கு அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுத்த ரங்கராஜனின் மேல் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது! அதே மரியாதையை ரங்கராஜனுக்கு பிறகு தொழிலில் முழு மூச்சாக இறங்கிய கார்த்திக்கும் கொடுத்தார்! அதை அரவிந்திடமும் எதிர்பார்த்ததில் தவறில்லையே! அந்த எதிரொலி அவனிடம் கிடைக்காததில் மனவருத்தம் இருந்தாலும் பெற்ற பிள்ளையை அப்படியே விட்டுவிடவும் முடியாதே!

கார்த்தி கூற கேட்டு கொண்டிருந்த அரவிந்தனுக்கு மனம் எரிந்தது! இவ்வளவு அனாயசமாக பிரச்னையை முடிப்பான் என்று எதிர்பார்க்காத அரவிந்தன் அவசரப்பட்டு முடிவை எடுத்து விட்டு இப்போது பொன் முட்டையிடும் வாத்தான சுஷ்ருதாவை விட்டுவிடவும் முடியாமல் அதே சமயத்தில் கார்த்தியின் ஆதிக்கத்தையும் ஏற்க முடியாமல் மனம் குமுறி கொண்டிருந்தவன் கோடை மழையாக திவ்யாவை கண்டான்! மனதில்ஒரு மின்னல்!

“கார்த்திக்… உனக்கு ஆப்பு வைக்கிறேன்டா…” கறுவிகொண்டவன் மெதுவாக நழுவினான்!

“ஹாய் திவ்யா…” தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருந்த திவ்யா முன் சென்று நின்றான் முகமெல்லாம் புன்னகையாக…

“ஹாய் அர்விந்த்…” அதே புன்னகையை அவளிடமும் கண்ட அர்விந்த் கள்ளுண்ட மந்தியாக, அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்த போது திவ்யாவே ஆரம்பித்தாள்!

“அர்விந்த்… ஆரோவில் எங்க இருக்கு…?” ஆர்வமாக கேட்க…

“ஏன் திவ்யா… கார்த்தி அழைச்சுட்டு போகவில்லையா?” இருவரையும் உளவறியும் எண்ணத்தோடு!

“ம்ம்ம்… அவருக்கு டைம் இல்லையாம்…” குரலில் வருத்தத்தோடு கூறியவளை பார்த்தபோது அரவிந்துக்கு அவனது வேலை மிக சுலபமாகவே முடியும் என்று தோன்றியது! திருமணமான ஒரு மாதத்தில் ஒரு நாள் கூடவா கிடைக்கவில்லை? அப்படியென்றால் இவர்களது திருமணவாழ்க்கையின் லட்சணத்தை புரிந்து கொள்ள வேண்டாமா? அரவிந்தா… இது மிக நல்ல சந்தர்ப்பம்! இந்த அடி மரண அடியாகத்தான் விழ வேண்டும் கார்த்திகேயனுக்கு! விட்டு விடாதே… பற்றி கொள்! எச்சரித்தது மனம்! கார்த்திகேயன் என்கிற யானையை பிடிக்க திவ்யாவுக்கு குழி வெட்ட ஆரம்பித்தான்! அந்த குழியில் கார்த்திகேயன் அகப்படுவானா?

“திவ்யா… நான் எப்போவுமே ஆஸ்ரமம் போவேன்… அம்மாவுக்கு ரொம்ப இஷ்டமாம்… குருஜியை வேண்டித்தான் நான் பிறந்தேன்னு அப்பா சொல்லுவாங்க… வேணும்னா நீயும் வா…” ஒன்றும் அறியாதவன் போலவே கூற…

“ஹய்… அப்படியா? நான் அத்தம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்… எப்போ கூட்டிட்டு போறீங்க?” ஆர்வமாக கண்களில் மின்னல் மின்ன கேட்டபோது அவளின் குழந்தை தனத்தை நினைத்து ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கார்த்திக்கை நினைக்கும் போது அவனுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று அரவிந்துக்கு தோன்றியது!

“சரி திவ்யா இப்போவே கூட கூட்டிட்டு போறேன்… ஆனா நான் ஒன்று கேட்கட்டா?” மிக சாதாரணமாகவே கேட்டான் அரவிந்த்!

“கேளுங்க அர்விந்த்…” ஹாலில் இருந்து முறைத்து பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கை கண்டபோது மனம் துள்ளியது! ஒரு மாதத்தில் அவனை எந்த அளவு வெறுப்பேற்ற முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றி கொண்டு தான் இருந்தாள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம்!

“கார்த்திக் உன்னை நல்லா பார்த்துக்கறாப்லையா? இல்ல… உன்னை பார்த்தா என்னமோ மிஸ் ஆகற மாதிரி தெரியுதே திவ்யா… என்னோட அவசர புத்தி அப்போ…” என்று கூறி கொண்டிருக்கும் போதே இடையிட்டது கடினமான குரல்!

“பார்த்துக்கலைன்னா என்ன பண்ணறதா உத்தேசம் அர்விந்த்?” கார்த்திகேயனே தான்! வெலவெலத்தது அரவிந்துக்கு!

“இல்ல கார்த்திக்… ஒண்ணுமில்ல… அது வந்து சும்மா…” குரலில் நாட்டியம் ஆடினான் அர்விந்த்!

“எப்படி பார்த்துக்க போறன்னு சொல்லு அரவிந்த்… தெரிஞ்சுக்கறேன்…” கார்த்திகேயனின் குரலில் இருந்த கடினத்தன்மை அர்விந்தை ஒரு வழி செய்து இருந்தது!

“இல்ல கார்த்தி… நான் அந்த மாதிரி சொல்லல…”

“வேற எந்த மாதிரி சொன்ன?” அவனின் இந்த நிதானமான கேள்வி அரவிந்தின் வயிற்றில் அமிலத்தை கரைத்தது!

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கார்த்தி… சும்மா சிஸ்டர் கிட்ட பேசிட்டு இருந்தேன்…” திக்கி திணறினான்!

“உன் சிஸ்டர் கிட்ட பேசணும்னா ஹால்ல வெச்சு பேசு… இனிமே இந்த மாதிரி பார்த்தேன்… முழுசா நீ வீடு போய் சேர மாட்ட…” அவள் உனது தங்கை என்பதை அழுத்தந்திருத்தமாக தலையில் அடித்து புரிய வைத்து அடிக்குரலில் சன்னமாக உறுமியவனிடம் இருந்து தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்தான் அரவிந்த்! இவையெல்லாம் அறியாமல் ஹாலில் அமர்ந்து இருந்த மாசிலாமணி கார்த்திகேயனிடமும் மங்கையிடமும் விடைபெற்று கொண்டு சென்றார்! கார்த்திகேயனின் கவனம் திவ்யா பக்கம் திரும்பியது!

“அவன் கூட உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்குது?” சமையலறையில் மங்கை வேலையாட்களுக்கு இரவு உணவுக்கான பட்டியலை கூறி கொண்டு அந்த வேளையில் ஆழ்ந்து இருக்க ஹாலில் கார்த்திகேயன் திவ்யாவிடம் கொதித்து கொண்டிருந்தான்!

“அவர் கூட பேச எனக்கு ஆயிரம் இருக்கும்… இதில் உனக்கென்ன…” முகத்தில் அறைந்தார் போல அவள் கூறியது இன்னமும் கோபத்தை கிளறி விட்டது!

“ச்சே… கட்டின புருஷன் கிட்ட இப்படி சொல்றியே உனக்கு வெட்கமா இல்ல…”

“ஒரு சில வேலைய செய்ய நீ வெட்கபடாதப்ப நான் எதுக்கு வெட்கப்படனும்?”

“திவ்யா… என் கோபத்தை கிளருற… அது உனக்கு நல்லதில்ல…” கோபம் எல்லையை கடந்து கொண்டிருந்தது!

“அதை பற்றி எனக்கு கவலை இல்லை… ஐ டோன்ட் கேர்…” அலட்சியமாக வந்த பதிலில் சுத்தமாக தன்னிலை இழந்து இருந்தான் கார்த்திகேயன்!

“அப்படீன்னா அப்படித்தான் அவன் கிட்ட பழகுவேன்ன்னு சொல்ற…” முறைப்பை தாண்டிய கடுப்பில் வந்து விழுந்தன வார்த்தைகள்!

“எக்ஸாக்ட்லி…” எதையும் கண்டுகொள்ளாத அலட்சியம்!

“இதுக்கு என்ன அர்த்தம்…” நிதானத்துக்கு வந்தது கோபம்!

“உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு அர்த்தம்… என்னோட விஷயத்துல நான் தான் டெசிஷன் எடுப்பேன்னு அர்த்தம்… அவசியமில்லாம மூக்கை நுழைக்காதன்னு அர்த்தம்… புரியுதா…” கொஞ்சமும் தயக்கமில்லாமல் திவ்யா கூறிய போது உள்ளுக்குள் சில்லுசிலாக உடைந்து கொண்டிருந்தான்! எத்தனையோ பேர் அவன் முன் கை கட்டி நின்று அவன் வார்த்தைகளை எதிர்பார்க்க அவனது மனைவி கூறிய வார்த்தைகளை கேட்டு வாயடைத்து போனான்!

“மொத்தத்துல என்ன சொல்ல வர?” இறுகிய முகத்தோடு!

“என்னை கேள்வி கேட்கற உரிமை உனக்கு இல்லைன்னு அர்த்தம்…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே காது ஞொய் என்றது! சுற்றியடித்து பக்கத்தில் இருந்த சோபாவில் விழுந்து இருந்தாள்! அப்போதுதான் அவளுக்கும் உரைத்தது… அடித்திருந்தான்! கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் அடித்து வைத்த சிலையாக அமர்ந்து இருந்தாள் திவ்யா! சத்தம் கேட்டு வெளியே அவசரமாக வந்த மங்கை பதறினார்!

“திவ்யா… என்னடா ஆச்சு?” மங்கை பதறி திவ்யாவின் கையை பற்ற… கோபம் குறையாத கார்த்திகேயன்…

“என்னை பற்றி உனக்கு தெரியாது திவ்யா… நான் பொறுமையா இருக்கறதுனால என்னை மடையன்னு நினைச்சுடாத… என் பொறுமை எல்லை மீறினா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது! நீ மிசஸ் கார்த்திகேயன்… அந்த பெயரை கெடுக்க நினைச்சா என்னை மிருகமாத்தான் பார்ப்ப… மைன்ட் இட்…” கோபத்தில் வெடிக்க, மங்கைக்கோ தலைவால் புரியாத அந்த பேச்சை… அந்த நேரத்தில்… அவனை மறுத்து கருத்து கூறவே பயமாக இருந்தது! மகனின் இந்த கோபங்களை பார்த்தவர்தானே! சீண்டி விடும் வரை அவனை போல நல்லவனும் இல்லை… ஆனால் சீண்டி விட்டாலோ அவனை போல ஒரு மூர்க்கனும் இல்லை என்பது அவர் அறிந்தது தானே! திருமணமாகி வந்த ஒரு மாதத்தில் இந்த பெண் இந்த முகத்தை பார்க்க வேண்டுமா என்று மனம் வருந்தினார்!

“தம்பி… விடுப்பா… சின்ன பொண்ணு… போக போக சரியாகிடும்… நீ போ நான் பார்த்துக்கறேன்…” எப்படியாவது கார்த்தியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தால் போதுமென்றாகி விட்டது மங்கைக்கு! கையில் இருந்த ரிமோட்டை தூக்கி எறிந்தவன் அவளை திரும்பியும் பார்க்காமல் வெளியே சென்று காரை எடுத்தான்! எறிந்த ரிமோட் சுக்கல் சுக்கலானது! கோபம் மொத்தத்தையும் அந்த பிஎம்டபிள்யு மேல் காட்ட, கடற்கரை சாலையில் பறந்தது அந்த வாகனம்!

கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் சோபாவில் அமர்ந்தவாறே விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா! கண்களில் கண்ணீர் குளம்… அருவியென இறங்கவா ஓடையென பாயவா என்று அனுமதி வேண்டி நின்று கொண்டிருந்தது!

“கண்ணா… கொஞ்சம் முன்கோபிடா… கோபம் வந்தா கண்மண் தெரியாமத்தான் வரும்… அதுக்காக கோபிச்சுக்காத தங்கம்… கோபம் இருக்கற இடத்துல தான் கண்ணா குணம் இருக்கும்… அழாதடா…” மருமகளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார் மங்கை!

அவன் அடித்த அதிர்ச்சியில் இருந்து அவளால் வெளியே வர முடியவே இல்லை! கண்களை இருட்டி கொண்டு வந்தது…

“அத்தை… இப்போ அவர் மேல தப்பு இல்ல…” ஒரே வார்த்தையில் முடித்து விட்டு அறைக்கு தள்ளாடியபடியே சென்ற தன் மருமகளை விசித்திரமாக பார்த்தார்! இதழோரத்தில் மென்புன்னகை மலர்ந்தது மங்கைக்கு!

“விட்டுகொடுக்கவே மாட்டாளே…”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 17

காற்று தாலாட்டு பாட கார்த்திகேயன், கடற்கரையில் அவனுடைய இடத்தில் அமர்ந்து செல்பேசிக்கு காதை கொடுத்து இருந்தான்! வானம் இடித்து கொண்டு தன் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தது! வாடை காற்று ஊதல் காற்றாகி மழைமகள் வருவாளோ என்ற ஊகத்தை எழுப்பியது! அவளை வரவேற்கதானோ…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்