arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 17

அத்தியாயம் 17

visibility 755
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

காற்று தாலாட்டு பாட கார்த்திகேயன், கடற்கரையில் அவனுடைய இடத்தில் அமர்ந்து செல்பேசிக்கு காதை கொடுத்து இருந்தான்! வானம் இடித்து கொண்டு தன் எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்தது! வாடை காற்று ஊதல் காற்றாகி மழைமகள் வருவாளோ என்ற ஊகத்தை எழுப்பியது! அவளை வரவேற்கதானோ இடியும் மின்னலும் போட்டி போட்டு கொண்டன?

“அண்ணா… நீ கூட இப்படி செய்வியா? என்னண்ணா கல்யாணமானவுடனே சாதாரண லோக்கல் மாதிரி இப்படி பீகேவ் பண்ணி இருக்கற? நீ திவிய அடிச்சன்னு என்னால ஜீரணம் பண்ண முடியவே இல்லைண்ணா… அப்படியே உன்னோட பார்வைல அவ தப்பே பண்ணி இருந்தாலும் நீ அடிக்க கூடாதுண்ணா… உன்னை நம்பி தான் அத்தையும் மாமாவும் அவங்க பொண்ணை அனுப்பி வெச்சு இருக்காங்க… அப்படி இருக்கும் போது நீ இப்படி தான் ட்ரீட் பண்ணுவியா?” அமைதியை வேண்டி கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்தவனை பிலுபிலுவென பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் வைஷ்ணவி! ஒரு வார்த்தை கூட பேசாமல் கேட்டு கொண்டிருந்த கார்த்திகேயனுக்கு கசப்பான புன்னகை மலர்ந்தது! அவளே தொடர்ந்தாள்…

“நீ அடிச்சப்போ கூட உன்னை விட்டு கொடுத்து பேசாத பொண்ணை நடத்தற விதம் இதுதானா கார்த்தி அண்ணா?” சிவகாசி பட்டாசாக பொறிந்தபோது ஒன்றும் புரியவில்லை கார்த்திகேயனுக்கு!

“என்ன சொல்ல வர வைஷு குட்டி?”

“பின்ன என்னண்ணா? அம்மா அவளை சமாதானப்படுத்த உன்னை திட்டினா, இவ ரோஷமா உன் மேல தப்பு இல்லைன்னு உனக்கு வக்காலத்து வாங்குறாளாம்! எல்லாம் நம்ம நேரம்ன்னு அம்மா சிரிக்கறாங்க கார்த்தி அண்ணா… அப்படிபட்ட பொண்ணை போய்… ச்சே என்னண்ணா நீ?” நொந்து போய் கூறிய வைஷு சொன்னதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! வைஷு கூறுவது உண்மையாக இருக்குமா என்ற ஏக்கம் வந்தபோதே வானில் பறப்பது போன்ற உணர்வு கார்த்திகேயனுக்கு! என்னுடைய திவி என்ற இறுமார்ப்பு வந்தது! தான் நடந்து கொண்ட முறையினால் வந்த கோபம் தானே தவிர தன் மேல் வேறு பழி உணர்ச்சி திவிக்கு கிடையாதுதானே என்று தன் மனதை கேட்டு கொண்டிருந்தான்! மனதை மயிலிறகென வருடி சென்ற அந்த மென்மையான உணர்வில் உள்ளம் கரைந்து போய் தொலைந்தான்! அப்போதே அவளை பார்க்கும் ஆவல் மேலிட…

ஓகே வைஷு, அப்புறம் பேசறேன்டா… கொஞ்சம் வேலை இருக்கு…” என்று பேசி முடித்து விட்டு வைத்தபோது பரபரத்தது மனம்! செல்பேசியை துண்டித்து விட்டு சிறிது நேரம் யோசித்தவன், நிலா டிவி சேர்மன் சித்தார்த்தை அழைத்தான்!

“ஹாய் சித்தார்த் சார்… எப்படி இருக்கீங்க?” உற்சாகத்தோடு பேசியவனை வியப்போடு எதிர்கொண்டார் சித்தார்த்!

“நல்லா இருக்கேன் கார்த்தி சார்… அதிசயம் தான்… இந்த நேரத்துல நீங்க?” குரலில் வியப்போடு பேச, வாய் விட்டு சிரித்தான் கார்த்திகேயன்!

“ஏன் சார்… நாங்க இந்த நேரத்துல பேசக்கூடாதா?” என்று சிரித்து கொண்டே கேட்க சித்தார்த்துக்கு வியப்பே மேலிட்டது!

“தாராளமா… விஷயம் இல்லாமையா நீங்க பேசுவீங்க? அதான் என்னன்னு யோசிக்கறேன்…”

“ம்ம்ம்… ஆமா சித்தார்த் சார்… போன மாதம் நீங்க ஒரு டீல் சொன்னீங்க இல்லையா… அதை பற்றி பேசத்தான் கூப்பிட்டேன்…” என்று ஆரம்பித்தவன் சிறிது நேரம் விவாதித்து விட்டு செல்பேசியை வைத்தான்! புருவம் சுருங்க யோசித்தவன் சிறிது நேரம் கழித்து அவரை அழைத்து…

“டீல் ஓகே சார்… எப்போ சைன் பண்ணலாம்… நாளைக்கு பாண்டி வந்தீங்கன்னா முடிச்சுடலாமா?” என்று கார்த்தி கேட்டபோது, சித்தார்த் ஒரு கணம் அதிர்ந்து தன்னிலைக்கு வந்தார்! இவ்வளவு விரைவாக இப்படி ஒரு பெரிய முடிவை எடுக்க மிகப்பெரிய தைர்யம் வேண்டுமல்லவா… அதை உணர்ந்தபோது வந்த அதிர்வே அது! இதனால் தான் எடுத்து வைக்கும் அடியில் எல்லாம் வெற்றிபெறுகிறான் போல… இந்த விஷயம் முடிந்தால் தனக்கு எவ்வளவு பெரிய நிம்மதி என்று தனக்குத்தான் தெரியும் என்று சித்தார்த் எண்ணி கொண்டார்! இருபக்கமும் வெற்றியாக முடியும் ஒப்பந்தத்தை வின் வின் ஒப்பந்தம் என்பார்கள்… அது போன்ற ஒரு ஒப்பந்தமாகவே கருதினார் சித்தார்த்!

“ஓகே கார்த்தி சார்… நல்ல நேரம் பார்த்துட்டு வச்சுக்கலாம்…” என்று அவர் முடித்தபோது பெரும் நிம்மதி அவரது மனதில்!

சித்தார்த்திடம் பேசி விட்டு நெற்றியை சுருக்கியபடி யோசித்த கார்த்திகேயன் அடுத்து அழைத்தது கிருஷ்ணாவை! ஒரு வாரம் முன்பு தான் ஒரு பெரிய குண்டை போட்டு இருந்தவன் அதற்கான ஆதாரங்கள் எதையுமே சேகரிக்க முடியவில்லை என்று தவித்து கொண்டிருந்தான்! அவன் கொடுத்த அதிர்ச்சி இன்னமும் கார்த்திகேயனை ஒன்றுமே செய்யவிடாமல் செய்து இருந்தது! அந்த கோபம் எல்லோர் மேலும் சீறி பாய்ந்து கொண்டுதான் இருந்தது!

“ஹாய் கிருஷ்ணா… என்னடா தூங்கிட்டியா?”

“இன்னும் இல்ல மச்சான்… முக்கியமா ஒரு கேஸ பார்த்துட்டு இருக்கேன்…”

“இந்த நேரத்திலா… ஏன்டா உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா… மணி பதினொன்னுடா மாப்ள…”

“ஹலோ… கேஸ் பார்த்துட்டு இருக்கேன்னு தான் சொன்னேன்… எங்க… எந்த கேஸ்ன்னு சொன்னேனா? சிவபூஜைல கரடி மாதிரி போன பண்ணிட்டு… கடுப்பேத்தாத மச்சி…” என்று நொந்து போய் கூறவும் கார்த்திகேயனால் சிரிப்பை அடக்க முடியவில்லை… வாய் விட்டு சிரித்து…

“சரி மாப்ள நீ நல்லா கேஸ பாரு… காலைல பேசறேன்…”

“இல்ல இல்ல… நீ சொல்ல வந்தத சொல்லு… பாலா கிட்ட அப்புறம் பேசிக்கறேன்…”

“டேய் என்னடா சொல்ற… பாலாவா… உன் மனைவி பெயர் சங்கீதா தானே…”

“ஹலோ… அவ பேர் பாலசங்கீதா… நான் கூப்பிடறது பாலா… பார் யுவர் இன்பர்மேஷன், அவ அம்மா வீட்ல இருக்கா… சோ உன் கற்பனை குதிரைய தட்டி விடாதே புது மாப்பிள்ளை… சரி நீ என்ன இந்த நேரத்துல… உன் கேஸ பார்க்கறத விட்டுட்டு…”

“டேய்… உன் அழும்புக்கு அளவே இல்லையா… நானே இங்க தலைஇடில இருக்கேன்…”

“ஏன்டா… திவ்யா அதுக்குள்ளே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா? இப்போவே புலம்பற… இன்னும் எவ்வளவோ இருக்குடா… இதுக்கே அசந்துட்டா எப்படி?” சிரித்து கொண்டே அவன் வாரி கொண்டிருக்க…

“கிருஷ்ணா… நேரம் காலம் பார்க்காம கடிச்சுட்டு இருக்காத… பதிலுக்கு நானும் கடிக்க ஆரம்பிச்சுடுவேன்… அப்புறம் உன் கேஸ நீ நைட் புல்லா பார்க்க முடியாது…”

“இப்போ மட்டும் என்ன மச்சான் வாழுது… ஆன்னா ஊன்னா அம்மா வீடு… எப்போவும் தனியா உட்கார்ந்து போன்ல குடும்பம் நடத்துறதே வேலையா போச்சு… சரி நீ விஷயத்த சொல்லு…”

“டேய் கூமுட்டை… நீ தான் சொல்லணும்… இன்னும் எந்த சாலிட் ப்ரூப்பும் கிடைக்கலியா? இன்னும் எவ்வளவு நாள் தான் பண்ண போற?”

“இன்னும் ஒரு வாரம் டைம் குடு மச்சான்… இவ்வளவு தூரம் வந்துட்டோம்… கையும் களவுமா பிடிச்சாதானே ஸ்ட்ராங் எவிடென்ஸ குடுக்க முடியும் கார்த்தி… கொஞ்சம் பொறுமை…”

“என் பொறுமை எருமையா ஆகறதுக்குள்ள குடுடா…” என்று ஆரம்பித்து சிலபல விஷயங்களை பேசி முடித்தபோது மனம் தெளிவாகி இருந்தது! வானம் பெருமழை பெய்வதற்கான அறிக்கையை தூறல் மூலமாக தெரிவித்து கொண்டிருந்தது! சடசடவென மழை பிடிக்க சற்று நேரம் அந்த மழையை அனுபவித்து நனைந்து விட்டு காரை எடுத்தான்!

***

மெலிதாக சீழ்க்கை அடித்தவாறே வந்த மகனை ஹாலிலேயே எதிர்கொண்டார் மங்கை! எப்போதும் இது போல காத்திருப்பது இல்லை… தாயின் ஆரோக்கியத்தை முன்னிட்டு கார்த்தி அதை விரும்புவதும் இல்லை… வலுகட்டாயமாக படுக்க கூறி விடுவான் ஆனால் இன்று மகனை கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்து கொண்டிருக்க அவனோ உற்சாகமாக வந்து கொண்டிருந்தது அவருக்கு சிறிது வியப்பாகவே இருந்தது… அதோடு மழையில் வேறு நனைந்து வந்திருக்க…

“என்னப்பா விசில் தூள் பறக்குது… திவிய அடிச்சதுல அவ்வளவு சந்தோஷமா இருக்கா?” குரலில் கடுமையான கோபம் கலந்தே இருக்க…

“ஆஹா… பின்ன பொண்டாட்டிய அடிக்கறதுக்கு எவ்வளவு தைர்யம் வேணும்… வீர செயல பண்ணிட்டு வந்தா பாராட்டாம நிற்க வைத்து கேள்வி கேட்க்கிறாயே தாயே… இது உனக்கே தகுமா?” வசனமாக பேசியவனை பார்த்து உண்மையிலேயே வியந்து தான் போனார்! கல்லூரி காலத்து கார்த்திகேயனாக தெரிந்தான்! வியாபாரத்தில் நுழைந்து அதில் மூழ்கிய பின் இந்த மாதிரி குறும்பாக பேசுவது வெகுவாக குறைந்து இருந்தது!

“ம்ம்ம்… வசனமும் தூள் பறக்குது… சரி… இதென்ன இப்படி மழைல நனைந்து வந்து இருக்கற… சின்ன பையனாட்டம்…” துவட்ட துண்டை எடுத்து கொடுத்தவாறே கேட்க…

“பீச்ல உக்கார்ந்துட்டு இருந்தேன்… மழை வந்துடுச்சு… ஜாலியா நனைஞ்சேன்… இதுல என்ன இருக்கும்மா?” தலையை துவட்டி கொண்டே!

“ம்ம்ம்… அப்படியா” என்றவர், “தம்பி… உன்னை ஒன்னு கேட்க்கட்டா?”

“கேளுங்கம்மா…” சாதாரணமாகவே பதிலிருத்தான்!

“உனக்கும் திவிக்கும் என்ன கண்ணா பிரச்சனை… கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி அப்புறமும் சரி… உங்க ரெண்டு பேர் முகத்திலும் மருந்துக்கு கூட சந்தோஷத்தை பார்க்க முடியலை… புதுசா அடிக்கவெல்லாம் செய்ற… நீங்க விரும்பித்தானே கல்யாணம் பண்ணி வைத்தோம்… அப்புறம் என்ன ராஜா? திவியும் ரொம்ப நல்ல பொண்ணுடா கண்ணா…”

“ம்ம்ம் தெரியும்மா… அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல… சந்தோஷமாத்தான் இருக்கோம்… நீயா மனதை போட்டு குழப்பி கொள்ளாதேம்மா…” சமாதானம் கூறினான்!

“அப்புறம் ஏன்டா கண்ணா அவளை எங்கயுமே கூட்டிட்டு போகலை… சின்ன பொண்ணும்மா… அவளுக்கும் ஆசை இருக்குமில்ல…”

“வேலை ஜாஸ்த்திம்மா… கண்டிப்பா கூட்டிட்டு போறேன்…” என்று அவர் வாயை அடைத்து விட்டு மாடிக்கு விசில் அடித்தவாறே இரண்டு இரண்டு படியாக தாவி ஏறி போனான்!

அறையில் இருந்த பிரெஞ்சு விண்டோ கதவை திறந்து வைத்து கொண்டு மாடி பால்கனியில் நின்றபடி மழையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா! பால்கனியை தாண்டினால் திறந்தவெளி சிட்அவுட் இருக்க… அங்கே பெய்து கொண்டிருந்த மழையின் வாசம் நாசியை தீண்டி சென்றது! அறைக்குள் வந்தவனை திரும்பியும் பாராமல் ஓவியமாக நின்று கொண்டிருந்தவளை பார்த்து அயர்ந்து தான் போனான்! அன்றைக்கென சேலையில் வெண்ணிலவென கைகளை கட்டி கொண்டு மழையை பார்த்து கொண்டிருந்தவளை அணைக்க துடித்த கைகளை அடக்கி குளியலறையில் புகுந்தவன் வெளியே வரும்போது குளித்து முடித்து இரவு உடையில் அவள் முன்னர் போய் நின்றான்!

அவன் வரவும் அவள் திரும்பி கீழே விரித்து வைத்திருந்த தனது படுக்கைக்கு செல்ல எத்தனித்தாள்!

“திவி… சாரிடா…” கையை பிடித்த கார்த்தி! கையை உதறிய திவ்யா அவனது முகத்தை பார்க்காமல் அவளது படுக்கைக்கு சென்றாள்! வெளியே மழை புயல் காற்றோடு பெருமழையாக பிடித்திருந்தது!

“அடிச்சது தப்புத்தான்… ப்ளீஸ் திவி… எப்போவும் போல சண்டையாச்சும் போடுடா… உன்னோட அந்த மனோகரா வசனத்தையாச்சும் பேசு… ப்ளீஸ்…” குறும்பாக கூறியவனை முறைத்து…

“மன்னிக்க முடியாத தப்பெல்லாம் பண்றவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லையே சார்…”

“சரி செய்ய முடியாத தப்புன்னு ஒன்னும் இல்லையே திவி… நான் சரி செய்துட்டேன்…” இதற்கு மேல் உனது விருப்பம் என்று உறுதியாக பதில் கூறினான்! அவனது முகத்தை நேருக்கு நேராக பார்த்தவள், புருவத்தை சுளித்து கொண்டு…

“நீங்க தப்பு பண்றதுல இவ்வளவு தெளிவா இருக்கும் போது நானும் தெளிவா இருக்கணும் இல்லையா…” என்று கூறி நிறுத்த…

“அப்படீன்னா…”

“நானும் பண்ண போறது தப்பு தான்… அதையும் உங்க கிட்ட சொல்லிட்டே செய்யறேனே… அப்புறம் அதை சரி செய்ய முடியுமா இல்ல முடியாதான்னு சொல்லுங்க…”

“உளறிட்டு இருக்காத திவ்யா…” எரிச்சலானான் கார்த்திகேயன்! திவ்யாவின் செல்பேசி மெல்லிய சப்தமிட்டது! மெசேஜ் டோன்! எடுத்து பார்த்தாள்!

“இல்லை… உண்மையைத்தான் சொல்றேன்… பாருங்க… நாளைக்கு நானும் அரவிந்தும் ஆரோவில் போறோம்… முடிஞ்சா என்ன வேணும்னாலும் நீங்க செய்துக்கலாம்…” அரவிந்திடம் இருந்து வந்த மெசேஜை காட்டி கார்த்திகேயனிடம் கூற அவனுக்கோ ரத்தம் கொதித்தது!

“என்ன தைர்யம் இருந்தா என் கிட்டேயே இப்படி சொல்லுவ…” கோபத்தோடு அவளை பிடித்து உலுக்கினான் கார்த்திகேயன்!

“உஷ்… ஷட் அப்… என்ன அலட்டிக்கறீங்க? என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சு தானே எல்லா வேலையும் செய்தீங்க கார்த்திக்… அப்போ வேணும்னா நீங்க ஜெய்ச்சு இருக்கலாம்… ஆனா எப்போவுமே நீங்க ஜெயக்க முடியாது… புரியுதா?” நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூற…

“ஷிட்… டோன்ட் பீ ஸ்டுபிட் திவ்யா… உன்னோட தரத்தை நீயே குறைச்சுக்கற… என்னை பழிவாங்க நீ இப்படி கீழ இறங்கி போகனுமா? உனக்கே வெட்கமா இல்லை?” கோபத்தோடு கூடவே இருந்த எரிச்சலோடும்…

“தரத்தை பற்றி நீங்க பேசறீங்களா கார்த்திகேயன்? அதை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என் தரத்தை பற்றி பேச…” கோபமாக இருந்தாலும் நிதானமாகவே வந்து விழுந்தது வார்த்தைகள்!

“உரிமை பற்றி நான் பேசாமா வேற யாருடி பேசுவாங்க… போனா போகுது சின்ன பொண்ணுன்னு விட்டு பிடிச்சா… ரொம்பத்தான் துள்ற? இப்போ நீ தெரிஞ்சுக்கணும் என்னோட உரிமையோட அளவை பற்றி…” என்று மிகவும் கோபமாக அவளை அணைத்தவன் வேறு எதையும் பேச விடாமல் அவளது உதடை சிறை செய்திருந்தான்! எப்போதும் போல தன்னிடம் சண்டை போட்டுவிட்டு போய் விடுவான் என்று எண்ணி அவனிடம் வார்த்தையாடிய திவ்யா, அவனது இந்த தாக்குதலை எதிர்பார்க்காமல் மூச்சுக்கு தள்ளாடினாள்! கோபத்தோடு அவன் உதடு அவளது முகமெங்கும் பயணம் செய்தது! அவனை தாக்குபிடிக்க முடியாமல் தத்தளித்தாள்! திவ்யாவால் அந்த அவமானத்தை தாங்க இயலவில்லை!

சிறிது நேரம் கழித்தே அவனது இறுக்கமான அணைப்பு தளர, விடுவித்தான்!

“புரிஞ்சுக்கோ… நான் கையாலாகாம உன்னை தொடாம இருக்கேன்னு பகல் கனவு காணாத… நீயா என்னை ஏற்றுக்கனும்ன்னுதான் காத்துட்டு இருக்கேன் திவி!”

“அது இந்த ஜென்மத்துல நடக்காது…” என்று கூறியவள் உதடை தொட்டு பார்த்து…

“ச்சே… அருவருப்பா இருக்கு… என்ன செய்தா இந்த அருவருப்பு போகும்ன்னு தெரியலையே…” கண்களில் நீரோடு கூறிவிட்டு வேறெதுவும் பேசாமல் மாடி சிட்அவுட்க்கு போய் நின்று கொண்டு, கதவை தாள் இட்டாள்! பிரெஞ்சு விண்டோ கதவு, அவள் கைகளை கட்டி கொண்டு மழையில் நனைவதை சொல்லியது! புயல் காற்று பெருமழையோடு தாண்டவமாடி கொண்டிருக்க, மழையில் வேண்டுமென்றே நனைபவளை பார்த்து உள்ளம் துடித்தது! எப்படியும் சிறிது நேரம் கழித்து வந்துவிடுவாள் என்று எண்ணி படுக்கையில் அமர்ந்து தலையில் கை வைத்து கொண்டான்! நேரம் தான் கடந்து கொண்டு இருந்ததே தவிர அவள் வருகிற வழியை காணவில்லை! குளிர் வேறு வாட்டி எடுக்க, பற்கள் தந்தியடிக்க கைகளை கட்டியவாறே அந்த புயல்மழையில் நனைந்து கொண்டிருந்தாள்!

தட்டினால் கீழே இருக்கும் தாய்க்கு தெரிந்து விடுமே என்று என்ன செய்வது என்று யோசித்தான்! அறை கதவை திறந்து கொண்டு மேலே மொட்டை மாடிக்கு சென்றவன், அங்கிருந்து அவன் அறையின் சிட்அவுட்டில் குதித்தான்! மழை… இன்னும் பேய் மழையாக கொட்டி கொண்டிருக்க, குளிர் உடலை துளைத்து கொண்டு போனது! திவ்யாவின் அழுத்தத்தை நினைத்து ஒரு கணம் தடுமாறினான் கார்த்திகேயன்!

“இவ்வளவு அழுத்தம் ஆகாது திவி உனக்கு…” கார்த்திகேயன் குரலில் வலியோடு கூற, ஒன்றுமே பேசாமல் கண்களை மூடி அதே நிலையில் நின்றாள் திவ்யா!

“வா திவ்யா… ப்ளீஸ் உள்ள வா…” அவளிடம் இருந்து பதிலில்லை!

“இனிமே இப்படி நடக்காது வாம்மா… ப்ளீஸ்…” மாற்றி மாற்றி அவன் அழைத்து கொண்டே இருக்க, அவளிடம் இருந்து சிறு அசைவு கூட இல்லாமல் செய்து வைத்த சிற்பம் போல் கைகளை கட்டி கொண்டு கண்களை மூடியவாறே உடல் வெளுத்து நின்றாள்!

இவளிடம் பேசினால் ஆகாது தூக்கி கொண்டு போய்தான் ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு அவளை தூக்க போக, அந்த நிலையிலேயே மயங்கி அவன் கைகளில் சரிந்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

திவ்யா எழும்போதே அவளுக்கு தலைவலி மண்டையை பிளந்தது! தலையை சுற்றி கொண்டு வந்தது! மணி என்னவென்று பார்த்தாள்... எட்டாகி இருந்தது! ஐயோ இவ்வளவு நேரமா என்று பதறி எழ முயன்றவளை சாய்த்தது தலைசுற்றலும் சோர்வோடு வந்த காய்ச்சலும்! ஆகா மொத்தம் இரவில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்