arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 19

அத்தியாயம் 19

visibility 747
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

வீட்டை விட்டு வெளியே வந்தவள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்! எங்கு போவது என்ன செய்வது என்ற குறிக்கோள் இல்லாத நடை… தலையை கையால் தாங்கி முகத்தை மூடி கட்டிலில் அமர்ந்து இருந்தவனை ஒரு முறை முழுக்க பார்த்து விட்டு வந்தவள் தான்! மங்கை கோயிலுக்கு சென்று இருந்ததால் திவ்யா வெளியேறியது யாருக்கும் தெரியவில்லை! செல்பேசியையும் எடுக்காமல், பணத்தையும் எடுக்காமல் வெளியேறியவளுக்கு எந்த பாதையில் செல்வது என்பது கூட புரியவில்லை… கால் போன போக்கில் நடக்க… சென்று முடிந்த இடம் தேவாலயம்!

தன்னையும் அறியாமல் உள்ளே சென்று அமர்ந்தாள் திவ்யா! தேவ அன்னை அவளை அணைத்து தன்னுள்ளே உள்வாங்கி கொள்வதாக ஏதோ ஓர் நினைவு ஓடியது! அன்னையின் மடி தேடியது மனது! தேவ அன்னையின் முன் அமர்ந்து இருந்தவளுக்கு வருவோர் யார்? போவோர் யார்? என்பதும் புரியவில்லை! குமுறி கொண்டு வந்த அழுகையை எப்படி அடக்குவது என்று புரியாமல் அன்னையை பார்த்து கொண்டிருந்தாள்! ஏன் இந்த அழுகை என்பது கூட புரியவில்லை… நானாகத்தானே பேசினேன்… அபார்ஷன் செய்து கொள்வதாக கூறினேன்… பின் எதற்காக இந்த அழுகை?

அன்னையை பார்த்து கொண்டிருந்தவளுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்து இருந்தாள்! பக்கத்தில் இன்னொரு பெண் இவளை போலவே வெகு நேரமாக அமர்ந்து கண்களில் நீர் வழிய ஜெபித்து கொண்டிருந்தாள்! திரும்பி அவளை பார்த்த போது அவளும் திரும்பி திவ்யாவை பார்த்தாள்!

“என்னம்மா… உங்க வீட்டுக்காரருக்கும் முடியலையா?” அந்த பெண் கேட்க திவ்யா கசப்பாக புன்னகைத்தாள்! அந்த பெண்ணே தொடர்ந்தாள்!

“எங்க வீட்டுக்காரர் ஆட்டோரிக்க்ஷா ஒட்டுதும்மா… குடிச்சு குடிச்சு உடம்பை சீரழிச்சு, இப்போ ஜிப்மர்ல தான் இருக்கு… என்ன பண்ண விதின்னு விட முடியலையே… பேருக்காவது புருஷன் வேணுமே… அதான் மேரியம்மா கிட்ட யாசகம் கேக்க வந்தேன்…” என்று கூறி கொண்டிருந்தவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்!

“அது இல்லைன்னா எனக்கு இந்த உலகத்துல ஒண்ணுமே இல்லம்மா… எல்லாத்தையும் ஏற கட்டிட்டு நானும் போய்டுவேன்… இன்னைக்கு தான் அதுக்கு ஆப்பரேஷன் பண்ணுறாங்க… அதான்…” என்று கூறி கதற…

“கவலை படாதீங்கம்மா… கண்டிப்பா சரி ஆய்டும்…” என்று அவளால் முடிந்த ஆறுதலை அந்த நேரத்துக்கு அளித்தாள்! இந்த பெண்கள் திருந்தவே மாட்டார்களா? என்னதான் குடித்து விட்டு அடித்து உதைத்தாலும் அந்த ஆணுக்கு ஏதாவது ஒன்று என்றால் இப்படி தான் ஏமாளித்தனமாக இருப்பார்களா? இதற்கு பெயர் தான் பத்தினித்தனமா? இந்த மாதிரியான பத்தினித்தனத்தை தான் கார்த்திக்கும் தன்னிடம் எதிர்பார்த்தானா? தாலி ஒன்றை கட்டி விட்டால் போதும் தான் செய்த அனைத்தும் குற்றமில்லை என்ற அவனை எண்ண தூண்டிய சமூக கட்டமைப்பு இதுதானோ? இந்த மனோபாவத்துக்கு ஏழை பணக்காரன் என்று பாகுபாடு கிடையாதோ?

அவனது அந்த ஆணாதிக்க கட்டமைப்பை தவறென்று கூறினால் இப்போது எதற்காக அழுகிறாய் என்று புத்தி அவளை கேள்வி கேட்டது! சிறிதும் காதலில்லாமல் தொட்டு விட்ட கடமைக்காக தாலி ஒன்றை கட்டியவனிடம் இருந்து எதை நீ எதிர்பார்க்கிறாய் என்று அந்த புத்தி எள்ளி நகையாடியது…

அவன் செய்தது குற்றமென்றாலும் அதற்கு இன்று எத்தனை முறை எவ்வாறெல்லாம் மன்னிப்பு கேட்டான்… அதை நீ புரிந்து கொண்டாயா? அவன் செய்தது தவறென்று கூறுகையில்… நீ பேசிய வார்த்தைகளின் பொருள் உணர்ந்து தான் பேசினாயா? மனம் அவளை திருப்பி கேள்வி கேட்டது… அவனை நீ வெறுக்கிறாய் என்றால் அவனது வெறுப்பும் கோபமும் உன்னை பாதித்த காரணம் என்ன திவ்யா? கடைசியாக அவளது முகத்தை பார்க்காமல் அவன் கூறிய வார்த்தை…

“என் முகத்துல விழிக்காதே திவ்யா…”

இந்த அளவு அவனது வெறுப்பு தன்னை பாதிக்குமா என்ன? கண்மூடித்தனமாக அவன் தன்னை கட்டாயப்படுத்தி மணந்து கொண்டவன் என்ற வெறுப்பில் இருந்த தனக்கு அவனது வார்த்தைகள் இப்படி காயப்படுத்துமா? நடைபிணமாக அல்லவா நடந்து வந்தேன்… அவனது விருப்பங்களை எப்போதும் மதித்ததில்லையே… ஆனால் அவன் வெறுத்து ஒதுக்கி முகத்தில் விழிக்காதே என்று கூறிய அந்த நிமிடம் உயிர் இறந்து மறுபடி உயிர்த்ததே! இதற்கு என்ன காரணம்?

நோக்கம் இல்லாமல் அவளது மனதும் புத்தியும் ஒன்றை மாற்றி ஒன்று சண்டையிட்டு கொண்டு இருந்தன!

***

நெடுநேரம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தவன் நிமிர்ந்து பார்த்த போது அறையில் திவ்யா இல்லை! அவனது குழந்தையின் நிலை அவனை வாட்டியது… ஒரு வேளை நிஜமாகவே குழந்தையை கலைத்து விடுவாளோ என்ற பயம் அவனை ஆட்டிப்படைத்தது! அவளது மனநிலை அவனுக்கு புரியாமல் இல்லையே… தன்னை ஏற்று கொள்ள முடியாமல் அவள் தத்தளிப்பதை பார்த்து இந்த ஒரு மாதத்தில் அவளை நெருங்காமல் தானே இருந்தேன்! ச்சே… நேற்றும் இன்றையும் தான் எதோ பிசாசு புகுந்து விட்டது போலும் தனக்குள்! அவளாக தன்னை புரிந்து கொள்ளட்டும் என்றே இருந்து இருக்கலாமோ? குழந்தையாவது தப்பித்து இருக்குமோ?

மனைவியை அடிப்பவன் கோழை என்று எக்காளமிடும் தான் தானா திவ்யாவை இந்த நிலையில் அடித்தது? அவளோ இன்னொரு குழந்தையை போல் அல்லவா? உயிருக்கு உயிராக அவளை காதலித்து விட்டு அவள் சிறுபிள்ளை தனமாக பேசினாள் என்பதற்காக இப்படியா நடந்து கொள்வது? அவளது குணம் தான் தெரிந்ததாயிற்றே… அதன் பின்னரும் அவளை… ச்சே என்று அவனது மனம் அவனை திட்டி தீர்த்தது! கிருஷ்ணாவும் தானும் ஆதாரங்களுக்காக தேடி அலைந்து கொண்டிருந்த போது மிக சாதாரணமாக சாதித்த திறமைசாலியை பாராட்டாமல் விட்டாலும் அவளை வெறுத்து பேசி இருக்கவும் கூடாது, அடித்து இருக்கவும் கூடாது… கடவுளே… எனக்கு நீ பொறுமையை கொடுக்கவே மாட்டாயா?

இதெல்லாம் தெரிந்தால் வைஷ்ணவியும் அம்மாவும் என்ன சொல்வார்களோ? அதற்குள் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்… அவளிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஏன் தயங்க வேண்டும்… எனது மனைவி… என் உயிருக்கு உயிரான காதலி… எனக்கு தோள் கொடுத்த தோழி… எல்லாவற்றுக்கும் மேலாக எனது குழந்தையின் தாய்!

மனதில் தீர்மானம் வந்த பின்னர் அவளை அவசரமாக தேடியது மனது! மாடியில் இருந்து இறங்கி வீடெங்கும் தேடினான்! அப்போதுதான் கோவிலில் இருந்து வந்து இருந்தார் மங்கை!

“ஹப்பா… கோவில்ல செம கூட்டம் கார்த்தி… திவ்யா எங்கப்பா… பாவம் வரும் போதே தங்கம் ரொம்ப சோர்வா தெரிஞ்சா…”

“அம்மா… நீங்க இப்போ தான் வந்தீங்களா? வீட்டுல நீங்க இல்லையா?” புரியாமல் கேட்டான் கார்த்தி!

“ஆமா கார்த்தி… நான் உன் கிட்ட சொன்னேனே… இன்னைக்கு சதுர்த்தி… மணக்குள விநாயகர் கோயிலுக்கு போயிட்டு வரேன்னு… அதுவும் இல்லாம நல்ல செய்தி சொல்லி இருக்கா ஜானகி… அதான் உங்க ரெண்டு பேர் பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டுதானே கண்ணா போனேன்…” சொன்னது எங்கே காதில் விழுந்தது? அவள் மேல் கோபத்தில் கண் மண் தெரியாமல் இருந்தானே… தாயிடம் காட்டி கொள்ளாமல்!

“பாவம் வந்த குழந்தை காபியாவது குடிச்சாளோ இல்லையோ… அவசரமா தங்கத்துகிட்ட சொல்லிட்டு போனேன்… எங்க கார்த்தி திவி?” அவனிடமே கேட்டவருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தான் கார்த்திகேயன்…

“தெரியலம்மா… அவளை தான் நானும் தேடிகிட்டு இருக்கேன்… பின்னாடி தோட்டத்துல இருக்காளோ என்னவோ?” அவனது பேயறைந்த முகம் எதையோ உணர்த்தியது மங்கைக்கு!

“கார்த்தி… உண்மைய சொல்லு… என்ன ஆச்சு?”

“ஒன்னுமில்லமா… தோட்டத்துல இருப்பா…” மென்று விழுங்கி கொண்டு கூறியவனை பார்த்தபோது கண்டிப்பாக இவன் ஏதோ மறைக்கிறான் என்று எண்ணி கொண்டிருக்கும் போதே…

“ஹாய் அண்ணா… ஹாய் பெரியம்மா…” என்று ஸ்ரீராம் உள்ளே வந்தான்! அவனை பார்த்தபோதுதான் மனதில் நிம்மதி வந்தது… எப்படியும் ஸ்ரீயிடம் அவள் பேசாமல் இருக்க மாட்டாளே!

“வா ஸ்ரீ… வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” மங்கை பாந்தமாக விசாரித்தார்!

“அங்க எல்லாரும் பரமசௌக்கியம்… அந்த கழுதை எங்கம்மா…” திவ்யாவை குறித்து கேட்க…

“டேய்… என் மருமகளை கழுதைன்னு சொல்ல எவ்வளவு தைர்யம் இருக்கணும்…” சிரித்து கொண்டே அவர் கேட்க…

“ஆஹா… ஒன்னு கூடீட்டாங்கப்பா… ஒன்னு கூடீட்டாங்க…” என்று கிண்டலடிக்க மங்கை சிரித்து கொண்டே சமையலறைக்கு சென்றார்… சமையல்காரரிடம் காபியோடு டிபனை சேர்த்து செய்ய சொல்ல, கார்த்தியை குழப்பமாக பார்த்து கொண்டே!

“அண்ணா… என்ன? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? திவி எங்க?”

“அவளை தான் நானும் தேடிகிட்டு இருக்கேன் ஸ்ரீ… போன் ஹன்ட்பேக் எதுவும் எடுக்காம வெளிய போய் இருக்கா…” தலையில் கை வைத்து கொண்டு கூற அவனுக்கு பகீரென்றது!

“என்ன சொல்றீங்க? சாயங்காலம் பேசும்போது கூட நல்லா தானே பேசினா… அப்புறம்… ஏன் ண்ணா ஏதாவது சண்டையா? ஆனா இன்னைக்கு அரவிந்த்த ட்ரேஸ் பண்ணதுக்கு அப்புறம் கண்டிப்பா உங்க ரெண்டு பேர் இடைல இருக்க பிணக்கு சரி ஆகிடும்ன்னுல நினைச்சேன் கார்த்தி அண்ணா…”

“நீ நினைச்சுகிட்டே இரு ஸ்ரீ… எதுவுமே சொல்லிடாதே…” கடுப்படித்தான் கார்த்தி!

“அண்ணா… அதை அவ வாயால சொல்லணும்… உங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் சரியாகனும்ன்னு நினைச்சேன்… ஏன்னா நீங்க தப்பா நினைச்சது அவளைதான்னு எனக்கு தெரியும்…”

“ம்ம்ம்… சொன்னா… நல்லாவே சொன்னா… எல்லாத்தையும் சொல்லிட்டு நீயும் வேணாம்… உன் குழந்தையும் எனக்கு வேணாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டா…” முகத்தை கை வைத்து மறைத்து கொண்டு அவன் கூற… கலங்குகிறானோ? ஸ்ரீராமுக்கு மனம் வலித்தது!

“என்ன சொல்றீங்க அண்ணா… குழந்தையா? அதை அவ வேணாம்ன்னு சொல்லிட்டு போயட்டாளா? ஒண்ணுமே புரியலையே…”

“ம்ம்ம் ஆமா… போய்ட்டா… எங்க போனான்னு புரியலை… விட்டுட்டு போய்ட்டா…” நிமிர்ந்தே பார்க்கவில்லை அவன்… ஒரு பெண்ணின் வெறுப்பு இந்த அளவு ஒரு மனிதனை பலவீனப்படுத்துமா? பெண்கள் பலவீனர்களா? ஆண்கள் பலவீனர்களா?

“அண்ணா… ப்ளீஸ்… கொஞ்சம் பொறுமையா யோசிங்க… கண்டிப்பா அவ எங்கயும் போய்ட மாட்டா… நிதானமா யோசிங்கண்ணா…” என்று கூறி விட்டு வேலையாட்களை கேட்க அவள் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வெளியே சென்றது தெரிய வந்தது! காரை எடுக்காமல் நடந்தே சென்றதாக கூற மனம் நொந்து போனான் கார்த்திகேயன்… அதுவும் இந்த நேரத்தில்… இப்படி பட்ட உடல்நிலையில்… தன் மனைவி எப்படி சிரமப்படுகிறாளோ என்று எண்ணி தன்னை தானே திட்டி கொண்டான்! மங்கைக்கு தலை சுற்றி கொண்டு வந்தது! இதனால் தான் தன்னிடம் பதிலே கூறாமல் மழுப்பினாயா என்று கார்த்திகேயனை உலுக்க நினைத்து கைவிட்டார்! அவனும் நொந்து போய் தானே இருக்கிறான்!

இருவருமாக காரில் ஊரை சுற்றி வந்தனர்… இந்த ஒரு மாதத்தில் அவளை எங்கும் அழைத்தும் போனதில்லையே… வர மாட்டாளே! என்ன இடம் இந்த புதுவையில் தெரிந்து இருக்கும்? பைத்தியம் பிடித்தவன் போல ஒவ்வொரு இடமாக தேடினான்! கிருஷ்ணாவிடம் சொல்லி பத்து பேரை அழைத்து கொண்டு ஆளுக்கொரு இடமாக தேட சொல்லி ஸ்ரீயை அழைத்து கொண்டு தெரு ஒன்று விடாமல் தேடி கொண்டு கடற்கரையோரம் பார்த்து கொண்டே வந்தான்! தலையை பியைத்து கொண்டு ஓடாத நிலைமை! ஸ்ரீராம் தைர்யம் கூறி கொண்டே வர, கடற்கரையை ஒட்டிய ரிச்சி ஸ்ட்ரீட்டில் தேடி கொண்டு வந்த போது பிளாட்பார்மில் யாரோ ஒரு பெண்ணிடம் நான்கு ஆண்கள் குடித்து விட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தது தெரிந்தது! காரை மெதுவாக செலுத்தி கொண்டே பார்க்க…

“திவ்யா”

கார்த்திகேயன் உயிர் மீண்டது!

அவசரமாக காரை நிறுத்தி விட்டு ஓடினான் கார்த்திகேயன், ஸ்ரீராம் பின்னால் ஓடி வர!

“திவ்யா…” திருவிழாவில் தாயை தொலைத்த குழந்தை மீண்டும் தாயை கண்டால் எவ்வளவு சந்தோஷப்படுமோ அந்த நிம்மதியில் அவளை அழைக்க, அந்த முரடர்கள் இன்னமும் அவளிடம் வம்பு செய்து கொண்டிருந்தனர்! திவ்யா ஏதாவது பற்று கிடைக்காதா என்று அழாத குறையாக பார்த்து கொண்டிருக்க… கார்த்தி இரண்டே எட்டில் அவர்களை நெருங்கி ஒருவனை இழுத்து வைத்து அறைந்தான்! கப்சிப்! அந்த கூட்டம் அப்படியே பின்வாங்கி கொண்டு ஓடியது!

“ஸ்ரீ…” கதறி கொண்டு கார்த்தியை தாண்டி கொண்டு ஸ்ரீராமிடம் தஞ்சம் புகுந்தாள் திவ்யா! சில்லுசில்லாக உடைந்தான் கார்த்திகேயன்! இந்த நேரத்தில் கூட தன்னிடம் வர பிடிக்கவில்லையா? ஸ்ரீராமின் கழுத்தை கட்டி கொண்டு கதறி அழும் தனது மனைவியை பார்த்தான் கார்த்திகேயன்… நெஞ்சில் வலி!

“ஸ்ரீ… வேணாம் ஸ்ரீ… வேணாம்… இந்த வாழ்க்கையே எனக்கு வேணாம்… நம்ம வீட்டுக்கு போய்டலாம் ஸ்ரீ… நம்ம வீட்டுக்கு போய்டலாம்… ப்ளீஸ் கூட்டிட்டு போ… என்னை கூட்டிட்டு போடா…” கதறி துடித்த மனைவியை பார்த்த கார்த்திகேயனுக்கு இதயத்தில் பூகம்பம்! தொலைத்த தாய் பசுவை கண்ட கன்றாக திவ்யா ஒரு நொடி விடாமல் பிதற்றி அழுது கொண்டிருந்தாள்! ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் பொங்கி பொங்கி கதறிய திவ்யாவை பார்த்து கசப்பாக புன்னகைத்து பின்வாங்கினான் கார்த்திகேயன்! இருவரையும் விட்டு தனியே மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்!

அவன் போய் நின்ற இடம் கடற்கரை! மணி பதினொன்றை தான்டி இருந்த நேரத்தில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அங்கும் இங்கும் போய் கொண்டிருந்தன! பிளாட்பார்மில் சரிந்து அமர்ந்தான்… பக்கத்தில் குப்பை தொட்டி! நாய் அந்த குப்பை தொட்டியில் தன் உணவை தேடி கொண்டிருக்க… அதனருகே கார்த்திகேயன்! புதுவையின் நிழல் முதல்வன்! தொழிலில் யாராலும் அணுக முடியாத வெற்றியாளன்… மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி… ஜெய்த்து கொண்டிருக்கின்ற பேரரசன்! எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் கலங்காமல் எதிர்கொள்ளும் சிங்கம்… இன்று!

பிளாட்பாரமில் வசிக்கும் ஒரு குடும்பம் படுத்து இருக்க… அவர்களுக்கு மூன்று குழந்தைகள்! நை நை என்று சிறு குழந்தை ஒன்று அழுது கொண்டிருக்க அதை சமாதானப்படுத்தும் முயற்சியில் பெற்றோரோடு சேர்ந்து மற்ற இரு குழந்தைகளும்! அந்த காட்சியை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் கார்த்திகேயன்…

இந்த மாதிரி குடும்பம் என்று ஒன்று அமையவும் குடுத்து தான் வைத்து இருக்க வேண்டுமோ? மனதை புரிந்து உடல் பொருள் ஆவியாக கலந்து இல்லறம் நடத்தும் மனையாளும், ஆசைக்கும் ஆஸ்திக்குமாக குழந்தைகளும் அமைவது இறைவனின் கையில் தானோ? யாருடைய குடும்பத்தை குலைத்தேனோ… யாருடைய கருவை கலைத்தேனோ… யார் இட்ட சாபமோ? கைகளை பின்புறம் ஊன்றி மின்கம்பத்தில் சாய்ந்து அமர்ந்து இருந்தவனின் கண்களில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீர்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 20

“ஹேய்... திவி கண்ணா... இங்க பாரும்மா... என்னடா... ஏன் இப்படி செய்த?” ஸ்ரீராம் மாற்றி மாற்றி இந்த கேள்வியை கேட்டு சலித்து விட்டான்... வந்த பதிலோ மௌனம் மட்டுமே... மீண்டும் மீண்டும் அவள் ஜெபித்தது... சென்னைக்கு அழைத்து செல்ல மட்டுமே! “இங்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்