அத்தியாயம் 2
ஒயிட் டவுனில் அமைதியாகக் கடலைப் பார்த்து வீற்று இருந்தது அந்த வெள்ளை மாளிகை! ரங்கராஜனின் இல்லம்! எதிரே கடல் ஆர்பரித்தாலும் அதிலும் ஒரு அழகான ஆழ்ந்த அமைதி தென்பட்டது! அனைத்தையும் உள்ளடக்கிய அமைதி! வாழ்க்கையின் சிறு துளியைச் சுவைத்து விட்டே இத்தனை ஆட்டம் போடுகிறாயே மனிதா! என்னுடைய அளவு என்னவென்று யோசித்தாயா? என்று கேள்வி எழுப்பியது அந்தக் கடல்!
இரவு மணி பதினொன்றை தொட்ட காரணத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடந்து கொண்டிருந்தனர்! புதுவையில் இது ஒரு வசதி… பத்து மணிக்கு மேல் நகரமே அமைதியாகி விடும்! கடற்கரைக்குப் பதினோரு மணிக்குச் சென்றால் ஏகாந்தமாகக் காற்று வாங்கி விட்டு வரலாம்… சில நேரம் கவிதைகளையும் சில நேரம் வம்பையும்… அது அவரவர் அதிர்ஷ்டத்தை பொருத்தது! சில்லென்ற காற்று இதமாக முகத்தைத் தடவி காதல் மொழி பேசி மயக்கி விட்டுச் செல்ல… உடலை வந்து முத்தமிட்டு சென்றது அலையின் தூறல்!
எப்போதும் வீடு திரும்புவதற்கு முன் கார்த்திகேயன் அந்த அலைகளோடு சிறிதாவது உரையாடாமல் வந்தது இல்லை! எந்த விஷயமாக இருந்தாலும் அவனுடைய முதல் நண்பன் இந்தக் கடற்கரைதான்… வந்து அமர்வதோடு இல்லாமல் பாறைகளைத் தான்டிப் போய்க் கடலில் கால்களை நனைத்தவாறு அமர்ந்து கொண்டு சிறிது நேரம் தியானிப்பது அவனுடைய பழக்கங்களில் ஒன்று!
இன்று…, ஷாலினியை பற்றிச் சில முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருந்தான் கார்த்திகேயன்! காலையில் அவளிடம் கடிந்துக் கொண்ட பிறகு அவள் அவனின் அன்னை மங்கையிடம் கூறி அவர் தன செல்ல மகன் கார்த்திகேயனிடம் மிகவுமே கெஞ்சிக் இருந்தார்! அப்போது அவன் தட்டாஞ்சாவடி தொழிற்சாலையைப் பார்வையிட்டு முடித்துவிட்டு பின் திருபுவனை தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றுகொண்டிருந்தான்! திருபுவனை தொழிற்சாலையில் முக்கியமாக உயிர்காக்கும் மருந்துகள் பல தயாராகிக் கொண்டிருந்தது! அது அனைத்துமே அரவிந்தனின் பார்வையில் இருந்தது.
“சொல்லுங்கம்மா…” என்றான் அவசரமாக.
“என்ன கண்ணா… எங்க இருக்க?” வாஞ்சையாகக் கேட்க.
“திருபுவனைல தான்ம்மா இருக்கேன்… என்ன விஷயம் சொல்லுங்க…?” குரலில் இருந்த அவசரம் மங்கையையும் பதட்ட படுத்தியது!
“ஒன்னும் இல்ல கார்த்தி… ஷாலு பேசினாளா?” கார்த்திகேயனுக்கு முகம் சுருங்கி நெற்றியில் ரேகைகள் தோன்றியது!
“ம்ம்ம் ஆமாம்… அதுக்கென்ன இப்போ?” எரிச்சலோடு தொக்கி நின்றது கேள்வி!
“கண்ணா கொஞ்சம் பொறுமையா கேளுப்பா… நாங்களே ஒன்னும் சொல்லலியே… அந்தப் பொண்ண கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போனாதான் என்ன கண்ணா?” தனது ஆதங்கத்தை வெளியிட…
“அம்மா எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு… இந்த அழகுல அந்தப் பொண்ணை அண்ணாமலைஸ் கூட்டிட்டு போறதுக்கு தான் எனக்கு டைம் இருக்கா? ஏன்மா நீங்களே இப்படி புரிஞ்சுக்காம இருக்கீங்க?” கோபத்தை உள்ளடக்கிய குரலில் கூற…
“என்னப்பா? அந்தப் பொண்ணு இந்தப் பொண்ணுன்னு பட்டும் படாம பேசற? நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுப்பா…” அவரது குரலில் அதிர்ச்சியோடு பயமும் தெரிந்தது!
“அது கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பார்க்கலாம்…” என்றான் அலட்சியமாக.
“ஏன் கார்த்தி… அப்பவும் இப்படியே அலட்சியமா நடந்துக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?”
“அதுக்காக இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க?” கல் கூட உருகும் நான் உருக மாட்டேன் என்ற சுளீர் வார்த்தையோடு அவனது கேள்வி முன் நின்றது!
“ஷாலுவ சாயங்காலம் அண்ணாமலைஸ் கூட்டிட்டு போம்மா… என் செல்லப் பையனில்ல… ப்ளீஸ் கண்ணா… அம்மாவுக்காகவாச்சும்…” மகனைக் கெஞ்சும் தாயாக மாறினார்!
“இல்லம்மா எனக்கு டைம் இல்ல… வேணும்னா நீங்கக் கூட்டிட்டு போய் என்ன வேணும்னாலும் வாங்கி தாங்க…” அவன் குரலே இதற்க்கு மேல் நான் பணிய மாட்டேன் என்று உணர்த்த…
“ஏன் கார்த்தி… நீ வேற ஏதாவது பொண்ண பார்த்து வெச்சுட்டியா? இப்போ அம்மாவுக்காக ஷாலுவ ஒத்துகிட்டியா?” குற்ற உணர்ச்சியோடு…
“அம்மா… பொண்ணை பார்த்து இருந்தேன்னா முதல்ல உங்க கிட்ட தானே அழைச்சுட்டு வந்து இருப்பேன்… அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மா… நீங்கக் குழப்பிக்காதீங்க… என்னோட டைமையும் ஸ்பாயில் பண்ணாதீங்க… எனக்கு வேலை இருக்கு…” எனப் பட்டென முடித்தான்.
கார்த்திகேயன் அப்படிபட்டவன் தான்… எதற்கும் தயங்கியது இல்லை… தனக்கு சரி என்று பட்டதை செய்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பான்… மற்றவர்களுக்காக என்று என்றுமே பார்த்தது இல்லை! ஆனால் தனது தாயிடம் அதீத அன்பும் மதிப்பும் வைத்து இருந்தாலும் அவ்வப்போது இப்படி கடிக்க தயங்க மாட்டான்!
“உனக்கு எப்போதான் தம்பி வேலை இல்ல… அது எப்போவுமே இருக்கறதுதானே… சரி அதை விடு… நாளைக்கு ஷாலுவோட நம்ம வைஷ்ணவி… பசங்க… எல்லாரும் தேங்கா திட்டு போறாங்க… நீயும் வாயேன்…” எப்படியாவது ஷாலுவுடன் பழக வைக்க முடியுமா என்று யோசித்தது தாய் மனம்…
“அம்மா… பணம் வேணுமா… வாங்கிகோங்க… என்னைக் கூப்பிடாதீங்க…” இறுதியாக முடித்து விட்டவனிடம் என்ன பேச?
“கார்த்தி… இது நல்லதுக்கே இல்ல… கொஞ்சமாவது குடும்பத்த பாரு… என் தங்கம் இல்ல… உன் முசுட்டு தனத்தை மூட்டைக் கட்டி வெச்சுட்டு ஷாலு கூடக் கொஞ்சம் பழகு கண்ணா… உன்னோட கவலையே எனக்குப் பெருங்கவலையா இருக்கு…” மிகுந்த கவலையோடு சொல்லி முடிக்க… பார்க்கலாம் என்று அவரைச் சமாளித்து வைப்பதற்குள் கார்த்திகேயனுக்கு போதுமென்றாகி விட்டது!
அதற்குப் பின் திருபுவனையில் வேலைகளை முடித்து விட்டு மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வருவதற்கு இரவு மணி பதினொன்றாகி விடக் கடற்கரையின் அவனது ஆஸ்த்தான இடத்திற்கு வந்து அமர்ந்தான்! அந்தக் குளிர்ந்த காற்று மனதை அமைதி படுத்த எப்போதும் போல அவனது குரு ரமணரை நினைத்துத் தியானம் செய்து விட்டு மனதை நிர்மலமாக்கினான்! அமைதி சிறிது சிறிதாக வசப்பட்டது… எம்பி 3 யை ஆன் செய்து விட்டுச் சிகரெட்டை எடுத்துப் பற்ற ! இரண்டு முறை புகையை இழுத்து விட்டவன் கண்களை மூடிப் பாடல்களை ரசிக்க முயன்றான்! ஆனால் ரசிக்க விடாமல் ஷாலினி வந்து தொல்லை செய்ய ஆரம்பித்தாள் எண்ண சிதறல்களில்!
தன்னை துரத்தித் துரத்திக் காதலை சொன்னதை தவிர அவள் செய்த தவறுதான் என்ன? தன்னால் ஏன் அவளுடன் பொருந்தி போக முடியவில்லை? தான் மிகவும் அதிகமாக வேலை என்று குடும்பத்தைக் கவனிக்காமல் தான் இருக்கிறோமா… தாய் கூறுவது போல! இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு எவ்வளவோ மனச் சுமைகள் இருக்கலாம்… அதை நான் தானே பார்க்க வேண்டும்… இதுவரை எப்படியோ… இனி ஷாலினியிடம் சற்று நிதானமாகவே பேச வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தவனின் முதுகில் ஒரு அடி விழ… திரும்பிப் பார்த்தால் அரவிந்தன்!
“என்னடா அரவிந்தா… நீ இன்னும் வீட்டுக்குப் போகல?” வியப்பாக வினவினான் கார்த்திகேயன்!
“இன்னும் இல்ல… சரி நீ என்ன? இங்க… இலவு காத்த கிளி மாதிரி… பீச்ச வெறிச்சு பார்த்துட்டு உக்கார்ந்து இருக்கற?” கேலி வழிந்தது! வியாபார கூட்டாளி என்றாலும் நெருங்கிய நண்பன்! அனைத்து ரகசியங்களும் அறிந்தவன்!
“ம்ம்ம்…” பெருமூச்சு ஒன்று புறப்பட்டது!
“ஏன் கார்த்தி? என்ன ஆச்சு?” கவலையாக விசாரிக்க…
“ஒண்ணுமில்ல மச்சான்… ஷாலினிய பற்றிதான்…” என்றவுடன் அரவிந்தனின் நெற்றி சுருங்கியது…
“என்ன டா?”
“இல்ல… கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு… ஆனா அந்தப் பொண்ணு கூடப் பழகவே எனக்கு மனசு பொருந்தி வரவே மாட்டேங்குதுடா… நானும் அந்த வேலை இந்த வேலைன்னு சொல்லித் தட்டி கழிச்சுகிட்டே இருக்கேன்… ஆனா எனக்கு என்னவோ அந்தப் பொண்ணுக்கு தப்பு செய்கிறோமோன்னு கவலையா இருக்கு…”
“என்ன… திடீர்ன்னு கார்த்தி இப்படியொரு எண்ணம்…” கையில் இருந்த பீர் பாட்டிலை தான் சிறிது குடித்து விட்டு கார்த்தியிடம் கொடுக்க அவனுக்கும் அது அப்போது தேவையாக இருந்தது!
“இல்ல அரவிந்தா… முதல்ல இருந்தே மனசு பொருந்தல… அப்படி இருக்கறச்சே எப்படிடா அவளைக் கல்யாணமும் பண்ணிக்கறது?” என்றான் தவிப்பாக…
“ஏன்டா மச்சான்… எல்லாரும் இப்படியா பேசிட்டு இருக்காங்க? அப்படீன்னா ஒரு பொண்ண பார்த்து லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ண வேண்டியதுதானே… ஏன் ஷாலினிய கட்டிக்க ஒத்துகிட்ட? இப்போ இப்படி பேசுனா அந்தப் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுறது? அதைப் பற்றி யோசிச்சியா?” கேட்ட கேள்விகளின் நியாயத்தை உணர்ந்தவனால் மறுதலிக்க முடியவில்லை!
“எனக்கு எந்தப் பொண்ணு மேலையும் லவ் வரலியேடா… உனக்குத் தெரியாதா? அதோட ஷாலினி அம்மாவோட செலக்சன்…”
“அப்படீன்னா… கண்ணை மூடிகிட்டு கல்யாணத்த பண்ணிக்கோ… எல்லாம் தானா சரி ஆகிடும்… அப்புறம் நாம தானா இப்படி எல்லாம் பேசினதுன்னு நீயே நினைப்ப கார்த்தி!”
“ம்ம்ம்… அதைத் தான் நானும் இப்போ நினைச்சுட்டு இருக்கேன்…”
“ஓகே மாப்ள… ஹோட்டல் மாஸ்ல நல்ல ஐட்டம் வந்து இருக்காம்… நீ எப்படி வர்றியா?” என்றவனை பார்த்து முறைத்தான் கார்த்திகேயன்!
“இந்த விஷயத்துக்கு எல்லாம் என்னைக் கூப்பிடாத… இந்தப் பழக்கத்தை எல்லாம் உன்னோட நிறுத்திக்க அரவிந்தா…” கறாராகச் சொன்னவனை பார்த்து வியந்து…
“எப்படிடா நீ இப்படி இருக்க? சாமியாரா?” நையாண்டி கலந்து கேட்டவனை பார்த்து…
“இந்த விஷயத்துல என்னால உன்னோட ஒத்து போக முடியாது மச்சான்… மனசும் உடம்பும் ஒருத்திக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும்… என்னோட மனைவிய தவிர வேற யாரையும் தொடர மாதிரி ஐடியா இல்ல எனக்கு!”
“இதெல்லாம் எனக்கு ஒத்து வராது அரவிந்தா… நமக்கே ஆயிரம் டென்ஷன் பிசினெஸ்ல… இதெல்லாம் கொஞ்ச நேர ரிலாக்சேஷன்…”
“அப்படீன்னா நீயும் ஒரு கல்யாணம் கட்டிக்கோ சீக்கிரமா!” குரலில் கோபம் மிகுந்து இருந்தது!
“எனக்கு ஒரு டீ குடிக்க டீ எஸ்டேட்யையே வாங்க இஷ்டம் இல்ல? ஆள விடு சாமி… அந்த கமிட்மென்ட் எல்லாம் நமக்கு ஒத்துவராது!” தப்பிக்க பார்த்தான் அரவிந்தன்!
“இதே மாதிரி பொண்ணுங்களும் நினைச்சா விளங்கிடும்… போ…” இப்போது கிண்டல் செய்வது கார்த்திகேயனின் முறையானது!
“சரி நான் கிளம்பறேன்… நீயும் ஷாலினிகிட்ட எதாச்சும் பேசிச் சரி பண்ணிக்கடா… இப்படியே திங் பண்ணிட்டு இருக்காத…” சொல்லிவிட்டு சென்று விட்டான்… ஆனால் கார்த்திகேயனுக்கு தான் அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்பது புரியாமல் தவித்தான்! ஒரு வழியாக முடிவு செய்து செல்பேசியில் அவளது எண்ணை அழுத்தினான். அந்தப் புறம் பெல் போக மணியைப் பார்த்து விட்டு அழைப்பதை பற்றி யோசித்தான்… இந்த நேரத்தில் அழைக்க வேண்டுமா என்று? நினைத்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பெற…
“ஹாய் அத்தான்… வாட் எ சர்ப்ரைஸ்…” குரலில் டன் கணக்கில் வியப்பு தெரிந்தது!
“என்னம்மா தூங்கிட்டியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” குரலில் குற்ற உணர்வு!
“ஹய்யோ நீங்கப் பேசுவீங்கன்னா நான் நைட் முழுக்க உக்கார்ந்து இருப்பேனே…” மகிழ்ச்சி தளும்பச் சொன்னவளை நினைத்துத் தன்னை கடிந்து கொண்டான்!
“நான் காலைல டென்ஷன்ல இருந்தேன் ஷாலினி… அதான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் மனசுல வைச்சுக்காதம்மா…”
“இதுக்கு போய் நீங்கச் சொல்லித் தான் தெரியனுமா அத்தான்… எனக்கே தெரிஞ்ச விஷயம் தானே… அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கில…” அதுவரையில் மனதில் இதை வைத்தே எல்லாரிடமும் காய்ந்து கொண்டிருந்தவள் இப்போது அவனே பேசவும் குளிர்ந்து உருகி போனாள்!
“ஓகே ஷாலினி… நீ தூங்கு… அப்புறமா பார்க்கலாம்…” அதற்கு மேல் பேச்சை வளர்த்தாமல் முடித்து விட்டான்!
“ஓகே அத்தான்… பை… குட் நைட்…” என்றாள் ஏமாற்றம் தொனிக்க!
பேசி விட்டு வைத்தவன் மூச்சை இழுத்து விட்டபடி வீட்டை நோக்கிப் போக ஆரம்பித்தான்!

அருமையான பதிவு