அத்தியாயம் 21
ஸ்ரீராம் திவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது மணி ஒன்று! பதறி கொண்டு வைஷ்ணவி சென்னையில் இருந்து கிளம்பி வந்திருந்தாள் திவ்யா வீட்டினருக்கு தெரியாமல்! தெரிவிப்பதில் பிரச்சனை ஒன்றும் இருக்க போவதில்லை… ஆனால் கண்டுபிடித்தபின் சொல்வது அவர்களுக்கு பதட்டத்தை உருவாக்காதல்லவா… அதுவும் இல்லாமல் பெரியவருக்கு இப்போதுதான் ஆஞ்சியோ செய்து இருந்தனர்! இரண்டு மாதமே கழிந்த நிலையில் அவருக்கு அதிர்ச்சி என்றால்… நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது! அவள் வீட்டிற்கு வந்த போது வைஷ்ணவி கோபத்தில் கொதிக்க மங்கையும் கார்த்திகேயனும் சைகை காட்டி பேச வேண்டாம் என்று கூற… ஆனாலும் அவளால் ஆற்றாமை தாங்க முடியாமல்…
“திவி… உன்னை விளையாட்டு பிள்ளைன்னு நினைச்சேன்… ஆனா வாழ்க்கைய இப்படி விளையாட்டா எடுத்துகிட்டு விளையாடிட்டு போவன்னு நினைக்கவே இல்லடி… ச்சே… இப்படியுமா செய்வ? எப்படிப்பட்ட குடும்பத்துக்கு மருமகளா வந்து இருக்கன்னு உனக்கு புரிந்து தான் செய்தியா? இதென்ன நீ பசங்க கூட விளையாடுற சொப்பு விளையாட்டா?” திவ்யாவிடம் பொரிந்து தள்ளி கொண்டிருந்தாள் வைஷ்ணவி! தான் வீட்டை விட்டு வெளியேறிய காரியம் மட்டுமே அறிந்திருந்த வைஷ்ணவிக்கு காரணம் தெரியாதல்லவா?
“வைஷு… தப்பு உன் அண்ணன் மேலையும் இருக்கு… திவி கிட்டேயே பொறியாத…” மங்கை வைஷ்ணவியை அடக்க பார்க்க அவளோ தன் அன்னையை முறைத்தாள்!
“அம்மா நீயும் இவளுக்கு செல்லம் கொடுக்காதே… எல்லாரும் ஓவரா செல்லம் குடுத்து தான் இந்த அளவு வந்திருக்கா… இதோ இங்க நிற்கறானே இவனை சொல்லணும் முதல்ல…” ஸ்ரீராம் மேல் பாய்ந்தாள் வைஷ்ணவி… எப்படியாவது திவ்யாவுக்கு அவளது தவறை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு!
“ஐயோ… நீ சொல்றது ரொம்ப கரெக்ட் வைஷுக்கா… என்ன வேணும்னாலும் இவளை திட்டு… இந்நேரம் வரை என்கிட்டயும் நல்லா அர்ச்சனை வாங்கிட்டு தான் வந்து இருக்கா… நீ திட்டறதுக்கு முழு ரைட்ஸ் இருக்குக்கா…” ஜகா வாங்கினான் ஸ்ரீராம்! அவர்கள் வீட்டு பெண்… கண்டிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற தொனியில்! மற்றபடி திவியை விட்டு கொடுப்பவன் அவன் அல்ல என்பதுதான் வைஷு அறிந்த ஒன்றாயிற்றே! வைஷ்ணவி திட்டுவதற்கு ஒன்றும் பேசாமல் கேட்டு கொண்டிருந்தாள் திவ்யா! அதற்குள் சாப்பிட தட்டில் இரண்டு இட்லி எடுத்து கொண்டு…
“ஹய்யோ போதும் வைஷு… தங்கம் பாவம் களைச்சு போய் இருக்கா… ஈவினிங் கூட சாப்பிட்டாளோ இல்லையோ… நான் கோயிலுக்கு போயிருக்க கூடாது… அவனோட கோபம் தெரிஞ்சும் தங்கத்தை அவன் கிட்ட தனியா விட்டுட்டு போனது என் தப்பு வைஷுகண்ணா… அவ இப்போ சாப்ட்டுட்டு போய் படுக்கட்டும்டா… விடும்மா…” என்று மங்கை கூறவும் தலையில் அடித்து கொண்டாள் வைஷ்ணவி!
“அம்மா… நீயெல்லாம் ஒரு மாமியாரா? மாமியார் பதவிக்கே லாயக்கில்லம்மா நீ… இன்னும் இந்த குழந்தைக்கு வேற ஊட்டி விடு” என்று ஊட்டி விட்டு கொண்டிருந்த தன் அன்னையை பார்த்து சலித்து கொள்ள, அந்த சலிப்பு வெறும் நடிப்பு என்பது மங்கை அறியாததா?
“பெரியம்மா! உங்க தலைல மிளகாய் அரைச்சுடுவா… பாத்து பாத்து…” ஸ்ரீராம் உடன் சேர்ந்து சலித்து கொண்டு சிரித்தான்! இருவருக்கும் உதட்டை சுளித்து அழகு காட்டி விட்டு…
“ச்சே… என்னை பார்த்து எல்லாருக்கும் பொறாமைப்பா… அத்தை நாம சுத்தி தான் போட்டுக்கணும்…” அதுவரை ஒன்றுமே பேசாமல் மங்கை கொடுத்த இட்லிகளை விழுங்கி கொண்டிருந்தவள், முடிக்கும் போது நக்கலடிக்க, வைஷ்ணவி அவளை அடிக்க கையை ஓங்கினாள்! ஓடி போய் மங்கை பின்னால் ஒளிந்து கொண்ட திவி வெவ்வேவ்வே என்று வைஷ்ணவிக்கு அழகு காட்ட…
“அடப்பாவி… இவளை காணோம்ன்னு சென்னைல இருந்து பதறிகிட்டு வந்தா… இட்லிய முழுங்கிட்டு செய்யற லொள்ள பாரு அண்ணா” அதுவரை கண்களில் உணர்வே இல்லாமல் தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்த கார்த்தியை வம்புக்கிழுத்தாள் வைஷ்ணவி!
அப்போதும் எதையும் கண்டுகொள்ளாமல் தொலைக்காட்சியோடு கண்களை ஒட்டினார் போல் பார்த்து கொண்டிருந்த தனது அண்ணனின் உணர்வு புரிந்தது! திருமணமாகிய ஒரே மாதத்தில் மனைவி சிறுபிள்ளை தனமாக செய்த காரியம் அண்ணனை வருத்துகிறது என்று நினைத்துக்கொண்டாள்! பொதுவாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு அறைக்கு சென்றவனை கூர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி! ஏதோ உறுத்துகிறதே…
“ஓகே அண்ணி… குட் நைட்… சாரி அண்ணி… உங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… ரியலி சாரி… ப்ளீஸ்…” சிறுகுழந்தையாக தன்னிடம் மன்னிப்பு கேட்கும் திவியை ஆதரவாக தலையை தடவினாள்!
“திவிம்மா… நீ இப்போ சின்ன பிள்ளை கிடையாதும்மா… பார்க்க போனா எனக்கு அண்ணி முறை ஆகுது… சின்ன சின்ன பிரச்சனை எல்லார் வீடுகள்லயும் இருக்கறதுதான்… அதுக்காக இப்படி செய்றது ரொம்ப தப்புடா… அண்ணாவ பார்க்கவே சகிக்கல… ஒரு வார்த்தை கூட நல்லபடியா பேசல… ப்ளீஸ் திவி… இது சாதாரண குடும்பம் இல்லை… ஊரெல்லாம் அழைச்சு எவ்வளவு பெருமையா செய்தாங்க உங்க கல்யாணத்தை… ஒரே மாதத்துல இப்படி ஒரு சம்பவம்னா அண்ணன் பேர் எப்படி டேமேஜ் ஆகும் தெரியுமா திவி… புரிஞ்சு நடந்துக்கோடா” நடந்த எதை பற்றியும் அறியாமல் ஒரு கார்த்திகேயனின் தங்கையாக திவிக்கு அறிவுரை கூற, அதை சிரித்தவாறே கேட்டு கொண்டாள் திவி!
வைஷ்ணவி அறிவுரை கூறும் போதெல்லாம் எதை கூறி வைப்பாளோ என்ற பயத்தில் பார்த்து கொண்டிருந்த ஸ்ரீராம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான்! வெளியே சொல்ல கூடாது என்பதற்காக அல்ல… தன் தோழியின் வாழ்க்கை யாருக்குமே அவலாக இருக்க கூடாது என்பதற்காகவே!
“அவ தூக்கம் கெடுதும்மா… நாளைக்கு பேசேன் வைஷு கண்ணா…” என்று கூறி மருமகளை மாடிக்கு கிளப்பி விட்டு ஸ்ரீராமை விருந்தினர் அறையில் உறங்க கூறிவிட்டு தன்னறைக்கு வைஷ்ணவியை அழைத்து சென்றார் மங்கை!
பார்க்கும் போதே ஸ்ரீராமின் மனம் நிறைந்தது! இப்படி உறவுகள் கிடைக்க திவி கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்! அவர்களுக்கு எதுவுமே தெரியாதுதான்… தெரியாமலே இந்த அளவு பாசம் வைப்பவர்கள்… நிச்சயம் திவி சமாளிப்பாள் என்ற எண்ணம் வந்தது!
***
அறைக்குள் போகும் போதே படப்படப்பாக இருந்தது திவ்யாவிற்கு! எப்படி கார்த்திகேயனை எதிர்கொள்வது என்ற பயம் தான்! இவ்வளவு சீக்கிரம் நீ அவனை மன்னித்து விடுவாயா? அவன் உன்னிடம் இருந்து பறித்தது சாதாரண ஒன்றை இல்லை திவி என்று உள்மனம் எடுத்துரைக்க அவளது புத்தியோ அவனை அப்படியே நிறை குறைகளோடு ஏற்று கொள்ளவே நினைக்கிறேன்… எப்படி இருந்தாலும் உணர்ந்து மன்னிப்பு கேட்டவனிடம் இன்னுமென்ன வீண் பிடிவாதம் என்று மறுத்துரைத்தது!
படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவாறு புருவம் சுருங்க இருந்தவனை பார்த்தபோது மனம் ஏனோ உருகும் மெழுகாக, சுளித்த அந்த புருவங்களை நீவி விட வேண்டும் போல எண்ணம் எழ, ஆனால் கால்களோ பழக்கத்தை மாற்ற மாட்டேன் என்றன! குளியலறைக்கு சென்று நைட்டி மாற்றுவதற்குள் இதை பேச வேண்டும் அதை பேசவேண்டும் என்று ஆயிரம் பட்டியல் படித்தது மனது! ஆனால் அவளது புத்தியோ இன்னமும் அவனாக வாய் திறந்து எதையும் பேசவில்லை… அதனால் அடங்கு என்று அடக்கியது! அவனை ஏற்று கொள்ள நினைக்கிறேன் என்று ஸ்ரீராமிடம் கூறினாலும் அவளது ஈகோ அவளை சட்டென அனைத்தையும் மறந்து பேச விடவில்லை!
உடை மாற்றி கொண்டு வந்த போது உறங்கி இருந்தான் கார்த்திகேயன்!
***
மங்கை காலை டிபன் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க, வைஷ்ணவி மனிஷாவுக்கு ஊட்டி விட்டு கொண்டிருக்க கனிஷ்கர் அவனது திவி அத்தையிடம் சாப்பிட்டு கொண்டு இருந்தான்! வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் பரபரப்பானார்கள்… கார்த்திகேயன் தொழிற்சாலைக்கு கிளம்ப ஆயத்தமாகி வந்து கொண்டிருந்தான்! கை கழுவி விட்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான்… சிறிதும் திவ்யாவை நோக்காமல்! கனிஷ்கருக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்த திவ்யா ஓரக்கண்ணில் கவனித்து கொண்டே…
“கனிஷ் குட்டி… நான் ஒரு கேள்வி கேட்கட்டா உன் கிட்ட?” வாண்டுகள் அவளிடம் எப்போதுமே இது போல் கேள்வி கேட்டு விளையாடுவது சகஜம் என்பதால்…
“கேளு திவிக்கா…” அக்கா இன்னும் அத்தைக்கு மாறவில்லை அவனுக்கு!
“ஹேன்ட் வாஷ்ன்னா கை கழுவறது… பேஸ் வாஷ்ன்னா முகம் கழுவறது… அப்ப பிரைன் வாஷ்ன்னா என்ன கண்ணா?”
“ஹஹா திவி… அது உனக்கு தெரியாதா? மூளைய கழுவறது…” மனிஷா சிரித்து கொண்டே கூற…
“வெரி குட் மோனி… எல்லாரும் அவங்க அவங்க மூளைய நல்லா பத்திரமா கழுவி பாதுகாப்பா வெச்சுக்கணும்… ஓகே வா…” சிரித்து மனிஷாவுக்கு ஹைபை குடுத்து ஓரக்கண்ணில் கார்த்திகேயனை பார்த்து கொண்டே கூறினாள்! அதை கேட்டு கொண்டிருந்த ஸ்ரீராம்…
“ஏய் வாலுங்களா… மூளை இருக்கவங்க வேணும்னா கழுவி வெச்சுக்கலாம்… ஆனா நம்ம திவிக்கா பாவம்… இல்லையா… மூளையே இல்ல…” நக்கலடித்து சிரிக்க…
“ஆமா… ஆமா… உன் கூட எல்லாம் பழகினா எனக்கு எப்படிடா மூளை ஸ்டாக் இருக்கும்… உனக்கு கடன் கொடுத்தே எனக்கு எனக்கு தீர்ந்து போச்சு…” என்று சலித்து கொள்ளவும்…
“எப்படியோ நீ இப்போ எம்ட்டின்னு ஒப்புக்கோ… ஏன்னா எம்ட்டி வெசல்ஸ் மேக் மச் நாய்ஸ் திவி…” என்று அவன் சிரிக்க அவனை அடிக்க கை ஓங்கியவள் கார்த்திகேயன் அன்றைய டிபனான பொங்கலையும் இட்லியையும் சாப்பிட ஆரம்பித்து இருப்பதை பார்த்து…
“மனிஷ் குட்டி… இப்போ நீ பதில் சொல்லு… பொங்கலுக்கு உனக்கு லீவ் உண்டா…” குட்டி பொண்ணை பார்த்து அவள் கேட்க, அவள் கேட்க வரும் இடம் புரிந்து ஸ்ரீராம் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்!
“இம் உண்டு திவிக்கா…”
“அப்போ இட்லிக்கு…” என்று கடிக்கவும் மனிஷாவும் ஸ்ரீராமும் சேர்ந்து அவளது தலையில் தட்டினர்!
“ஹய்யோ… ஏன் திவி… ஒரு மாசமா உன் கல்யாணத்துக்கு அப்புறம் நிம்மதியா இருந்தோம்… இங்க வந்ததுக்கு இப்படி சேர்த்து வைச்சு கடிக்கிறியே… எனக்கு தலை தான் சுத்துது…” என்று நொந்து போக, அவனை தட்டி…
“என்னதான் தலை சுத்துனாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா ஸ்ரீ?” என்று அதற்கும் கடிக்க… தாங்க முடியாமல் புலம்ப ஆரம்பித்தான் ஸ்ரீராம்! கார்த்திகேயனை பார்த்து…
“ஐயோ… அண்ணா… தாங்க முடியல… காப்பாத்துங்க… இவ கடிச்சு கடிச்சு தலையே வலிக்குது…” என்று அவனை சரணடைய அதற்கும் அவள்…
“ஸ்ரீ… பல் வலின்னா பல்ல புடுங்க முடியும்… ஆனா தலை வலின்னா தலைய புடுங்க முடியுமா?” என்ற மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க…
“ஹய்யோ மரண மொக்கையா இருக்கே… ஆத்தா காப்பாத்து…” கையை தூக்கி வணங்கியவனை ஆசீர்வாதம் செய்வதை போல் திவ்யா நடிக்க ஸ்ரீராம் முறைக்க கார்த்திகேயனோ இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் ஹாலுக்கு செல்ல, மங்கை அவசரமாக காபி எடுத்து கொண்டு விரைந்தார்!
“கனிஷ் குட்டி… இப்போ நீ ஆன்செர் பண்ணனும்… ஓகே வா?” என்றவாறு கூறி விட்டு கார்த்திகேயனை ஓரக்கண்ணில் பார்த்து கொண்டே…
“காபி கப்ல காபி இருக்கும்… வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?” நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய சந்தேகமாக அவள் கேட்க அதை கேட்டு கொண்டிருந்த வைஷ்ணவி உட்பட வெறியானார்கள்!
“வேணாம் திவி… இன்னைக்கு உன் ராசிபலன்ல செம அடின்னு போட்டு இருக்க போகுது… காலைல இருந்து ஓவரா கடிச்சு குதறிகிட்டு இருக்க…” என்று வைஷ்ணவி பத்திரம் காட்ட, திவ்யா கண்ணை சிமிட்டி சிரித்தாள்! பேசி கொண்டிருக்கும் போதே வந்தவர் மாசிலாமணி… முகம் முழுக்க சந்தோஷமாக… தன மகன் அரவிந்தனுடன்! திவ்யாவும் ஸ்ரீராமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு வரவேற்று விட்டு உள் ஹாலுக்கு சென்றனர்!
“வாங்க… வாங்க அண்ணா…” வெள்ளந்தியாக மங்கை வரவேற்றார்!
“வாங்க அங்கிள்…” அழைத்து விட்டு அவர்களிடம் சிறிதும் கவனமில்லாமல் தொலைக்காட்சி செய்திகளில் கவனமாய் இருந்தான்! மாசிலாமணியே மங்கையிடம் ஆரம்பித்தார்!
“மங்கா… தம்பிக்கு நிச்சயமாகி இருக்கும்மா… அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்… நீங்க எல்லாரும் இருந்து தான் கல்யாணத்தை நடத்தனும்…” என்று மகிழ்ச்சியாக கூறினார்! அவருக்கு எப்படியாவது தனது மகன் திருந்தி நிலையான வாழ்க்கை அமைந்தால் போதுமென்ற எண்ணம்!
“அப்படியா ண்ணா… ரொம்ப சந்தோசம்… இதை விட வேறேன்னாண்ணா வேலை இருக்க போகிறது நமக்கு… ஜமாய்ச்சுடலாம்…” என்று கூறி தன்னை போலவே சந்தோஷப்படுவான் என்று கார்த்திகேயனை பார்க்க அவனோ தொலைக்காட்சியில் ஐக்கியமாகி இருந்தான்! என்ன இவன் இப்படி இருக்கிறானே என்று எண்ணியவாறு அந்த குறையை மறைக்க இரு மடங்கு சிரித்து பேசிக்கொண்டிருந்தவர்…
“பொண்ணு யாருண்ணா?” என்று கேட்க…
“நம்ம ஷாலினி தான் மங்கா… சச்சியே கேக்கவும் உடனே முடிவு செய்துட்டேன்…”
“ரொம்ப சந்தோஷம் அண்ணா… கண்டிப்பா நாங்க முன்னாடி இருந்து எல்லாத்தையும் பார்த்துக்குவோம்ல…” என்று கூறி விட்டு அவர்கள் அருந்த காபி தயார் செய்ய சொல்ல உள்ளே சென்றார்!
“கார்த்தி கண்ணா… அன்னைக்கு சொன்னதுக்கு இன்னும் ஒரு பதிலும் சொல்லவே இல்லையே…” மறுபடி ஆரம்பித்தார் மாசிலாமணி… இதை பார்த்து கொண்டு அரவிந்தனின் கண்கள் அந்த வீட்டை அளவெடுத்தபடியே இருந்தது… திவ்யாவை தேடியபடியே…
“என்ன சொல்ல சொல்றீங்க அங்கிள்…” அவனது நடவடிக்கையை உணர்ந்தே முகத்தில் உணர்வின்றி கார்த்தி கேட்க…
“என்ன கண்ணா சொல்ற? நீயே இப்படி கேட்டா நான் என்ன பண்றது? உன் கூட இருந்தாலாவது பொறுப்புப்பும் திறமையும் நூற்றுல ஒரு பங்காவது வரும்ன்னு நினைச்சேன் கார்த்தி… நீ இப்படி சொன்னா எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை கண்ணா…” என்று ஆற்றாமையுடன் கூற…
“என்ன திறமை அங்கிள்? போதை மருந்து கடத்துறதிலையா? இல்ல உலகத்துல என்னவெல்லாம் தப்பு இருக்கோ அதையெல்லாம் செய்றதா?” கண்களின் கூர்மையோடு அரவிந்தனை பார்த்து கொண்டே மாசிலாமணியிடம் கேட்க…
“என்னப்பா சொல்ற? எனக்கு புரியலை…” குழப்பமாக மாசிலாமணி!
“இதை கேளுங்க…” என்று ஆதாரங்களை ஓட விட்டான்! கேட்கும் போதே முகம் வெளுத்தது மாசிலாமணிக்கு! அதை கேட்டு கொண்டிருக்கும் போதே இன்னும் சில பைல்களை அவர் முன்பு தூக்கி போட்டான்!
“இதெல்லாம் அரவிந்தனோட வண்டவாளம் அங்கிள்… இவனை நம்பி என் கூட வெச்சுட்டு இருந்ததுக்கு அவனோட நன்றி இது… இதுக்காகத்தான் கூட வெச்சுக்க சொல்றீங்களா?” கிருஷ்ணாவும் கார்த்திகேயனுமாக சேகரித்த ஆதாரங்கள் அரவிந்தனை முழுவதுமாக காட்டி கொடுக்க… மகிழ்ச்சியாக வந்த மாசிலாமணி முகத்தில் ரத்தஓட்டமே இல்லாமல் வெளுத்து போனார்! அவனது போதை மருந்து புழக்கம், காலாவதியான மருந்துகளை மறுபுழக்கத்தில் விடுவது தொடர்பான ஆவணங்களோடு கம்பெனியில் செய்திருந்த தில்லுமுல்லுகளையும் துகிலுரித்தது அந்த ஆவணங்கள்! தனது மகனா இப்படி என்ற அதிர்ச்சி! இதை பார்த்து கொண்டிருந்த திவ்யாவுக்கும் ஸ்ரீக்குமே அந்த ஆதாரங்கள் புதிதுதான்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
“இல்ல கார்த்தி… என்னால நம்பவே முடில… கண்டிப்பா நம்ம அரவிந்தன் இதை செய்து இருக்க மாட்டான்… யாரோ உன்னை தப்பா வழிநடத்துறாங்கப்பா…” அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவர் கூற…
“இல்ல அங்கிள்… இது தான் உண்மை… இதே வேற யாரவது இதை செய்து இருந்தா இந்நேரம் உயிரோட விட்டு வச்சு இருக்கவே மாட்டேன்… உங்க முகத்துக்காக ரொம்ப பொறுமையா இருக்கேன்…” முகம் முழுக்க கடுமையாக கூற அதை பார்த்த அனைவருக்குமே உள்ளுக்குள் குளிர் எடுத்தது! அது வரை மெளனமாக இருந்த அரவிந்தன்…
“ஆமா… நான் தான் செய்தேன்… அதுக்கு இப்போ என்ன சொல்ல வர?” அதிரடியாக அவன் அப்படி கேட்கவும் ஒரு கணம் திகைத்தார் மாசிலாமணி… ஆனால் இதை எதிர்பார்த்தே இருந்த கார்த்திகேயன்…
“கம்பெனிய விட்டு வெளிய போய்டு… அவ்வளவுதான்… பாட்னர்ஷிப்ப கேன்சல் பண்ண போறேன்… வெளிய போய் நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ… ஐ டோன்ட் கேர்…” ஒரே முடிவாக தெளிவாக உரைத்தான்!
“அது முடியாது… சுஷ்ருதா தங்க முட்டையிடற வாத்து… அதை நான் விட்டு கொடுக்க முடியாது… அதென்ன கூட வெச்சுட்டு இருந்தேன்னு சொல்ற? ரெண்டு பேருமே பார்ட்னர்ஸ்… நான் சொல்லறேன்… நான் தான் உன்னை கூட வெச்சுட்டு இருந்தேன்னு…” சுயநலத்தின் உச்சமாக இருந்தது அவனது பேச்சு!
“இதே நினைப்பு உன்னால சுஷ்ருதாவுக்கு பிரச்சனை வந்துச்சே… அப்போ வரலியா? மூழ்குற கப்பல்ல இருந்து தப்பிக்க நினைக்கிற மாதிரி ஓடுன?”
“சமாளிக்கத்தான் நீ இருக்கியே… கொடுத்த நோட்டிஸ்ஸ நானே கேன்சல் செய்துட்டேனே…” மிக சாதாரணமாக கூறினான் அரவிந்தன்!
“அதனால் இப்போ என்ன பண்ண போற?” முகம் கல் மாதிரி இறுக கூறினான்!
“சுஷ்ருதா ரெண்டு பேருக்கும் சொந்தம்… நீ மட்டும் சொந்தம் கொண்டாட அது உன் அப்பன் வீட்டு சொத்து இல்ல…” அவனது இந்த சுயநல ஆணவ முகம் வெளிப்பட மாசிலாமணிக்கு தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது! ஆனால் கார்த்திகேயன் இதை எதிர்பார்த்தே இருந்தான் போல…
“முடிஞ்சா கம்பெனில கால வெச்சு தான் பாரேன் அரவிந்த்… இது சேலஞ்ச் தான்…”
“பார்க்கலாமே கார்த்தி… சுஷ்ருதா யாருக்குன்னு முடிவாகற வரை அதை ரன் பண்ண விட மாட்டேன்… இதுவும் சேலஞ்ச் தான்…”
“அரவிந்த் நீ என்ன பேசிட்டு இருக்க? இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல… ஏன்டா இப்படி செய்த…” மாசிலாமணி செய்வதறியாமல் அரவிந்தன் மேல் பாய…
“அப்பா… சும்மா இருங்கப்பா… எப்போ பாரு கார்த்தி கார்த்தி… இவன் தான் பெரிய இவனா? எதுக்கு நீங்க இவன் கிட்ட கெஞ்சிகிட்டு நிற்கறீங்க? எனக்கு உரிமையானத கொடுக்க மாட்டேன்னு சொல்ல இவன் யாரு? இப்போ சொல்றேன் கேட்டுக்க கார்த்தி… சுஷ்ருதா எனக்கு தான்… உன்னால முடிஞ்சத நீ செய்… என்னால முடிஞ்சத நான் செய்றேன்… யார் வின் பண்றாங்கன்னு பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியே சென்றான்!
மாசிலாமணியின் நிலைமைத்கான் இக்கட்டில் இருந்தது! மகன் இப்படிப்பட்டவன் என்ற அதிர்ச்சியே அவரால் தாங்க முடியாமல் இருந்ததென்றால் அவன் பேசிவிட்டு போன விதத்தை பார்த்து உள்ளுக்குள் நடுங்கி போய் இருந்தார்! கார்த்திகேயனை பற்றி நன்றாக அறிந்தவரால் வேறு என்ன செய்ய முடியும்? அவருக்கு பயத்தை கொடுத்ததே கார்த்திகேயனின் மௌனம் தான்… அரவிந்தனின் நிலை என்னவாகுமோ என்ற பயத்தோடு கண்கலங்க கார்த்திகேயனிடம் கண்களால் விடைபெற்று கொண்டு வெளியேறினார் மனம் முழுக்க ரணமாக!
அவர் போனபின் யோசனையாக அமர்ந்து இருந்தவனிடம் வந்தனர் ஸ்ரீராமும் வைஷ்ணவியும்! திவ்யா அவள் இருந்த இடத்தில் இருந்தே யோசனையாக பார்த்து கொண்டிருந்தாள்! எப்படி இந்த நிலைமையை சமாளிக்க போகிறானோ என்ற பதட்டம் அவளுள் எழுந்தது உண்மை! ஆனால் சட்டென அவனிடம் நேரடியாக பேச இயலவில்லை! அவன் தொழிற்சாலைக்கு கிளம்ப வேண்டிய நேரம் கடந்து கொண்டிருக்க அவனோ கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்து இருந்தான்!
“அண்ணா…” ஸ்ரீ பக்கத்தில் அமர்ந்து அவனை அழைக்க கண்களை திறந்து பார்த்து மெலிதாக புன்னகைத்தான்!
“சொல்லு ஸ்ரீ…”
“எப்படிண்ணா சமாளிக்க போறீங்க அரவிந்த…” வைஷ்ணவி கவலையாக கேட்க… அதற்கு இன்னமும் புன்னகைத்த கார்த்திகேயன்…
“இது பெரிய விஷயம் இல்லடா… அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்…”
“மருந்துல ஏதாவது கலப்படம் பண்ண சான்ஸ் இருக்கேண்ணா…” ஸ்ரீராம் அவனது கவலையை வெளியிட…
“அதுக்கெல்லாம் சான்ஸ் கம்மி ஸ்ரீ… எவ்வளவோ டெக்னாலஜி இருக்கு… இப்போ புதுசா ஒரு மெத்தட் அறிமுகபடுத்தி இருக்கோம்… எல்லா மருந்து கம்பெனிங்களும்… பின்னாடி பார் கோட் கொடுத்துடுவோம்… ஒரு கோட் நம்பரோட… வாங்குறவங்களுக்கு அந்த மருந்துல சந்தேகம் இருந்தா அந்த நம்பர எஸ்எம்எஸ் பண்ணா போதும்… அதை பற்றின கம்ப்ளீட் டீடெயில்ஸ் அவங்களுக்கு போய்டும்… அதே மாதிரி அந்த மருந்தை பில் போடும் போதே நமக்கு அந்த பார்கோடு மூலமா தகவல் வந்துடும்… நான் இதை தனியா பண்ணா சரி வராதில்லையா அதான் எல்லா மருந்து கம்பெனிலையும் இந்த ப்ரோசெஸ் அப்ளை பண்ணியாச்சு… கண்டிப்பா இவனால ஒன்னும் பண்ண முடியாது வைஷு…” ஸ்ரீக்கும் வைஷ்ணவிக்கும் பொதுவாக கூற…
“ஆனா கம்பெனிய அரவிந்த் டேக் ஓவர் பண்ணிக்குவேன்னு சொல்றது…” என்று வைஷ்ணவி இழுக்க…
“ஏன்டா உன் அண்ணன் என்ன அந்த அளவு முட்டாளா இல்ல ஏமாளியா? அது நடக்க சான்ஸ் இல்ல… அவனுக்கு வேற ட்ரீட்மென்ட் காத்துட்டு இருக்கு… அங்கிள்க்காக பார்த்துட்டு இருந்தேன் வைஷு…” பொறுமையாக தங்கையிடமும் ஸ்ரீராமிடமும் பேசுவதை பார்த்து கொண்டிருந்த திவ்யாவுக்கு ஒரு வகையில் பார்த்தால் பெருமையாகவும் இன்னொரு வகையில் நெருடலாகவும் இருந்தது… அரவிந்தனின் செயலை நினைத்து!

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!