அத்தியாயம் 22
வீடு சாம்பிராணி புகையில் இதமாக மணத்து கொண்டிருந்தது! வேத விற்பன்னர்கள் பூஜையில் ஈடுபட்டு கொண்டிருக்க மங்கை கவலையே வடிவாக அவர்கள் முன் அமர்ந்து கொண்டிருந்தார்! இதில் பெரிதாக நம்பிக்கை இல்லாத திவ்யா தனது அத்தைக்காக ஸ்ரத்தையாக உடன் அமர்ந்து இருந்தாள்!
“உங்க பையனை வரசொல்லுங்கோ…” அய்யர் அழைக்க, மங்கை திவ்யாவை பார்த்து…
“திவி… தம்பி ரெடி ஆகிட்டாப்லையா?” கேட்க…
“தெரியலைத்தை… பார்த்துட்டு வரேன்…” என்று அறைக்கு விரைந்தாள்! மனம் பட பட!
கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் பட்டது எதையோ எழுதி கொண்டிருந்தவன் அவளை கண்டவுடன் சட்டென மறைத்ததுதான்! கண்களோ அவளை பார்த்தும் பார்க்காதது போல திரும்பி கொண்டது!
“அத்தை கூப்பிடறாங்க…”
“ம்ம்ம்…” வெறுமனே ம்மில் முடித்தான்! திவ்யாவுக்கோ கோபம் வரவே பார்த்தது! ஏதாவது சொல்லிவிட்டால் முத்தா உதிர்ந்து விடும் என்று மனதுக்குள் திட்டி கொண்டே முறைத்தாள்! அப்போதுதான் கவனித்தாள்… அவனை! அழகும் கம்பீரமுமாக வேஷ்டி சட்டை உடுத்தி நெற்றியில் திருநீறோடு… எழுந்து ஞாபகமாக எதோ ஒன்றை செல்பில் வைத்து விட்டு வந்தான்! காந்தம் வைத்து இழுத்தது போல் அவளால் கண்களை திருப்பவே முடியாமல் போக, அவன் அறையை விட்டு வெளியேறிய போதுதான் சுயநினைவே வந்தது திவ்யாவுக்கு! தன்னையும் கவனித்தாள்… ஏதோ நாமும் சேலையில் ஏதோ நன்றாகத்தான் இருக்கிறோம் என்று மனம் நினைக்க, தலையில் ஒரு தட்டு தட்டி கொண்டாள்! திரும்பி கீழே செல்ல எத்தனிக்க அப்போதுதான் பார்த்தாள் அவனது செல்பேசியை! அங்கிருந்த சிறிய டைனிங் டேபிளில் சப்தமிடாமல் வீற்று இருந்தது!
“அடடா… ஏதாவது கால் வந்தால் என்ன செய்வது?” என்று நினைத்து கொண்டே அதை எடுத்தாள்! இதுவரை அவனது செல்பேசியை கவனித்ததில்லை… பார்த்தபோது ஒரு நொடி இனிமையான அதிர்வே உண்டானது! ஸ்க்ரீன் சேவரில் அவளது படம்… அதுவும் அவன் அரவிந்தனையும் தன்னையும் அழைத்து கொண்டு விருந்துக்கு போன போது கட்டி இருந்த சேலையில்… பின்னணியில் அந்த ரெஸ்டாரன்ட்!
“திருடா… எப்போ எடுத்தது இது…” என்று நினைத்து கொண்டே செல்பேசியை நோண்ட ஆரம்பித்தாள்! அதிர்ஷடவசமாக செல்பேசி பூட்டபடாமல் இருக்க… பிக்சர் கேலரியை திறந்து பார்த்தவள் இன்னமும் அதிர்ந்தாள்… விதம் விதமாக திவ்யா! திவ்யா! திவ்யா!
மனம் சந்தோஷசாரலில் நனைய… இனிமையான உணர்வில் சிக்குண்டு செல்பேசியை விட மனமில்லாமல் கிளறி கொண்டு இருந்தாள்! ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சுக்களில் திருமணத்திற்கு முன் அவனுடனும் அரவிந்தனுடனும் விருந்துக்கு சென்று ரசாபாசமாகி காரில் திரும்பிய போது பேசிய பேச்சுக்களும் இருக்க… எதற்கு இதை ரெகார்ட் செய்திருந்தான் என்று புரியாமல் குழம்பினாள்! அன்றைய பொழுதை அவளாலும் மறக்கவே முடியாதே… கண்கள் என்ன அவனோடே சென்று விட்டதா என்று தன் மனம் கேள்வி எழுப்பிய பொழுதாயிற்றே… அந்த எதிரொலி அவனிடமும் இருந்ததை பார்த்து உணர்ந்த போது மனம் சிறகடித்தது!
“உன் திருவாயால் சொன்னால் ஆகாதா? எல்லாவற்றையும் மனதுகுள்ளாகவே வைத்து கொள்ள வேண்டியது… பழி அனைத்தையும் என் மேல் சுமத்த வேண்டியது…” செல்லமாக மனதுக்குள் கடிந்து கொண்டிருந்தாள் கார்த்திகேயனின் மனைவி!
“வரும் போது எதையோ ஒளித்து வைத்தானே… என்ன அது…” என்று அந்த செல்பை குடைய… அதுவோ அனுமதி இல்லாமல் நான் திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது…
“எங்கே ரிமோட்…” கண்கள் பரபரவென தேடியது… ஏனென்றால் அது ரிமோட்டினால் திறக்கும் கதவு! சில பல நிமிட தேடலுக்கு பிறகு ரிமோட் கிடைக்க எடுத்து அழுத்தினாள்! படக் என்ற சப்தத்தோடு திறந்தது செல்ப்!
உள்ளே அவனுடைய புத்தகங்கள் பைல்களோடு இருந்தது டைரி… திறந்து பார்த்த போது வரவேற்றது திவ்யாவின் நிழல்!
“இங்கேயுமா… ஓவரா தான் பீல் பண்ணி இருக்காப்ல போல இருக்கே…” என்று நினைத்து கொண்டே அடுத்த பக்கங்களை புரட்டினாள்! கண்களின் சிரிப்போடு…
“ஏய்… இன்னொருத்தர் டைரி இது…” மனம் அவளை தாக்கியது!
“ம்ம்ம்… என் புருஷன் தானே… நான் படிச்சா என்னவாம்?” என்று இன்னொரு மனம் சண்டைக்கு வர…
“ஆஹா புருஷனா? எப்போல இருந்து… சரி சரி… யாரா இருந்தாலும் அவங்க டைரி ரொம்ப பர்சனல்… வைச்சுட்டு ஒழுங்கா நட…” நக்கலடித்து விட்டு அந்த மனம் நியாயம் பேச அதை இன்னொரு மனமோ அலட்சியபடுத்தி தன்னுடைய வேலையில் கவனமாகியது!
அவள் இங்கு வந்த தினம் முதல் அவளை பற்றிய ஏதாவது ஒரு சில வரிகள் என ஆரம்பித்து போக போக அவளை பற்றி கட்டுரையே எழுதும் அளவுக்கு இருந்தது கார்த்திகேயனின் டைரியில்! ஷாலினியை எப்படித்தான் மணப்பது என்று ஆரம்பித்து… திவ்யாவை முதலிலேயே பார்த்து இருக்க கூடாதா என்று ஒரு சில இடங்களில் ஏங்கி இருந்தான்! அவளை தன் நண்பனுக்கு முடிக்க தானே யோசனை கொடுத்ததை சாடி இருந்தான்… நிறைய இடங்களில் அவளை எண்ணி சுயபுலம்பல்கள்… நிறைய இடங்களில் திவ்யாவை பற்றிய வர்ணனைகள் இருக்க… அவளுக்கோ சந்தோஷத்தில் கன்னம் கூசியது… இருவருக்கும் பிளவை உண்டாக்கிய அந்த தினத்தை பற்றியும் எழுதி இருந்தான்…
“திவி… என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான தவறு… இது! உனக்கு இது கொடுமையாக அமைந்து விட்டது தான் வருத்தம்… ஏனென்றால் இரு மனம் ஒரு மனமாகி திருமணத்தில் இணைந்து உன்னில் கலந்து இருக்க வேண்டும்… ஆனாலும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத இனிமையான தவறு இதுதான் கண்ணம்மா… ஐ லவ் யூடா குட்டி!”
இதை படித்தபோது ஏனோ கன்னம் சிவந்தது! அதற்கும் மேல் அவளால் படிக்க முடியவில்லை… மனம் திறந்து அவளை பற்றி நிறைய எழுதி இருந்தான்!
“படவா… இந்த அளவு லவ்வ மனசுல வெச்சுகிட்டு ஒண்ணுமே சொல்லலியே… எதுக்கெடுத்தாலும் முசுட்டுத்தனமா ஒரு பதில்… முரடா” மனதில் திட்டினாள் திவ்யா!
“ஆமா சொன்னாலும் கேட்டுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்ப…” மனசாட்சி சாடியது! ஆஹா தல கீழே போய் வெகு நேரமாயிற்றே… மேல வந்தா காரியம் கெட்டுடும் டோய்… என்று நினைத்து கொண்டே மான்குட்டியின் துள்ளலோடு பூஜை அறைக்கு விரைந்தாள்! மங்கை திவ்யாவுக்காக ஆர்வமாக காத்து கொண்டிருந்தார்…
“என்ன கண்ணா… தம்பி வந்துட்டாப்ல… உன்னை காணோம்… இப்போ தான் விஜயாவ மேல பார்த்துட்டு வர சொன்னேன்…” சிரித்து கொண்டே கேட்ட மங்கையிடம்…
“இல்லத்தை… புகைல கொஞ்சம் தலை வலிச்சது… அதான்…” பூஜை பலகையில் செல்பேசியை அவனிடம் கொடுத்தவாறே கார்த்திகேயனுடன் சேர்ந்து அமர்ந்தாள்!
“கொஞ்சம் பொறுத்துக்கோ கண்ணா… கொஞ்ச நேரம் தான்… பூஜைக்கு நீயும் இருக்கனும்டா…”
“சரித்தை…” புன்னகைத்தாள்! உலகத்திற்கு அன்னமிடும் அன்னபூரணியின் விக்ரகம் அழகாக வீற்று இருக்க அதன் முன்னர் அமர்ந்து வேத விற்பன்னர்கள் நால்வரும் மந்திரம் கூறி கொண்டிருந்தனர்!
“இவங்க என்ன செய்றாங்க…” அவனது காதுக்கு மட்டும் கேட்குமாறு நெருங்கி கேட்க…
“ம்ம்ம்…” அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பூஜையில் கவனத்தை செலுத்தினான்!
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு கார்த்திகேயா…” அவனது பெயரை நீட்டி முழக்கி அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுக்க, அதற்கும் அவனிடம் இருந்து வந்த விடை… ஒரே பார்வை!
“தீர்த்தத்தை வீட்டுல தெளிச்சுட்டு மீதத்தை துளசிக்கு விட்டுடுங்க… தம்பதியா செய்துடுங்க” பூஜை முடிய ஒரு அய்யர் வெள்ளி குடத்தை எடுத்து கார்த்திகேயனின் கையில் கொடுத்தார்! இருவருமாக தீர்த்தத்தை தெளிக்க சென்றனர்!
“என்னன்னே தெரியாம நான் என்னன்னு வேண்டிக்கறது?” சிறு பிள்ளையாக மறுபடி அவனிடம் சிணுங்கினாள் திவ்யா!
“என்னை எப்படி எல்லாம் வதைக்கறதுன்னு மட்டும் பிளான் பண்ணி சுவாமி கிட்ட வேண்டிக்கோ… மற்றதெல்லாம் உனக்கு தேவை இல்லை…” மௌனம் கலைந்தவன் அவளை கடித்து அவளது வாயை அடைக்க நினைக்க, இதற்க்கெல்லாம் அசைந்தால் நான் திவ்யதர்ஷினி இல்லையே என்று…
“ம்ம்ம் அதை தான் செய்துட்டு இருக்கேன் கார்த்திக்…” முகத்தை ஒன்றும் அறியாத பிள்ளை போல வைத்து கொண்டு அவள் கூற… கார்த்திகேயன் மறுபடி மௌனகுருவானான்!
“ஆமே நண்டு கன்னி சுறா தன்னில் நல் பாம்பு வீற்றிருக்க பூ மேடை படுத்துறங்கும் ராஜ யோகம்ன்னு சொல்லுவா… அது மாதிரிதான் பிள்ளையாண்டான் ஜாதகம்… கிரக மாலிகா கோடில ஒருத்தருக்கு தான் அமையும்… ராஜயோக ஜாதகம்மா… ஆனா இப்போ கொஞ்சம் நேரம் சரி இல்லை… சமீபத்துல குலதெய்வத்துக்கு படையல் போட்டேளா?” மங்கையை பார்த்து அவர் கேட்க…
“கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் போகலை…”
“முதல்ல அதை செய்திடுங்கோ… பொண்ணு ஜாதகமும் அமோகமா இருக்கு… இந்த அளவு பொருத்தம் பொருந்தி வர்றது ரொம்ப விசேஷம்… ஸ்ரீராமன் ஸ்ரீதேவி மாதிரி… ரெண்டு பேரும் ஒருத்தருக்காகவே இன்னொருத்தர்…” என்று அந்த அய்யர் சிலாகித்து கூற கார்த்திகேயனின் முகத்தில் எள்ளலான கசந்த சிரிப்போன்று தோன்றியது!
“ஆமா இது ஒன்னு தான் இப்போ குறைச்சல்…” என்று தான் அவனுக்கு தோன்றியது! அவனது முகத்தில் இருந்து அவனது மனதில் ஓடியவற்றை ஒருவாறு ஊகித்தாள் திவ்யா! பழம் வெற்றிலை பாக்கு தட்சணை அனைத்தும் வைத்து அவர்கள் அனைவரையும் வழியனுப்பும் போது சித்தார்த் வந்தார்!
“வாங்க அங்கிள்… வாங்க…” உற்சாகமாக வரவேற்றாள் திவ்யா… உடன் கார்த்திகேயனும் வரவேற்றான்!
“என்னம்மா எப்பிடி இருக்கீங்க? எங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்டாப்ல தெரியுதே…” சிரித்து கொண்டே சோபாவில் அமர்ந்தார்!
“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல அங்கிள்…” அவளும் சிரித்து கொண்டே பதில் கூறி விட்டு சித்தார்த்துக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்டு உள்ளே சென்றாள்! பழரசம் எடுத்து கொண்டு வந்த போது மங்கையும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்!
“கார்த்தி… நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தேவையா? எனக்கு என்னவோ சரி வரும்ன்னு தோன்றலை கண்ணா…” கார்த்திகேயனிடம் கவலையை தெரிவித்து கொண்டிருந்தார்! அவரது கவலை அவருக்கு!
“இல்லம்மா… திறமை இருக்கும் போது எதுக்கு வீண் பண்ணனும்? அதுவும் இல்லாம இந்த ஐடியா ரொம்ப நாளா எனக்கு இருக்கறதுதான் மா!” என்று அவன் முடித்த போது மங்கையால் மறுத்தொன்றும் பேச இயலவில்லை! ஆனாலும்…
“சரிப்பா… நீ சொல்றதுக்காக ஒப்புக்கறேன்… ஆனா திவ்யாவுக்கு பேறு காலத்துல எந்த சிக்கலும் இல்லாம நீ தான் பார்த்துக்கணும்…” அவளது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கூற, கார்த்திகேயனுக்கு உள்ளுக்குள் கசப்பாக இருந்தது… அந்த குழந்தை இன்னும் எத்தனை நாளைக்கோ என்று மனம் வெதும்பினான்! அவனை பொறுத்தவரை அவள் பிரிந்து போவது என்ற முடிவு எடுத்தாலும் ஒரு முதலாளியாகவே பிரிந்து செல்லட்டும் என்றே நினைத்தான்! கார்த்திகேயனின் மனைவி இன்னொருவரிடம் வேலை செய்கிறாள் என்று மற்றவர் எண்ணி விட கூடாதாம்! பழரசம் எடுத்து வந்தவளுக்கு தலையும் அறியாமல் வாலும் அறியாமல் கேட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது! ஒரு வேளை ஸ்ரீ சொன்னதாக இருக்குமோ என்ற எண்ணம் வந்தாலும் நூற்றில் ஒரு பங்காக கூட அதற்காக ஆசைப்படவில்லை!
“வாம்மா… இங்க வந்து உட்காரு…” சித்தார்த் அழைத்து கார்த்திகேயனின் பக்கத்தில் அமர சொன்னவர்…
“திவ்யா… உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும்… அதே மாதிரி நிலா டிவியை பற்றி உனக்கும் நல்லா தெரியும் தானே…” பூடகமாக கேட்கவும்…
“தெரியும் அங்கிள்… உங்க கடின உழைப்புதானே நாங்க எல்லாருமே பிரபலமாக காரணம்…” மனதுக்குள் எப்போதும் சித்தார்த்தை பற்றிய அந்த நல்ல அபிப்ராயம் திவ்யாவுக்கு உண்டு!
“அதுக்கு உன்னோட தனிப்பட்ட திறமையும் இருக்கு திவ்யா… நிலா டிவி வேற யார் கைக்கோ போறதை விடவும்… அதோட அருமை தெரிந்த உன் கிட்ட வர்றது எனக்கு சந்தோஷமா இருக்கும்மா… நிம்மதியா இருக்கு…” என்று அவர் கூறவுமே அவளுக்கு விளங்கியது… ஆனாலும் அதிர்ந்தாள்!
“அங்கிள்… என்ன சொல்றீங்க? எனக்கு விளங்கலை…” கார்திகேயனையும் சித்தார்த்தையும் மாற்றி மாற்றி பார்த்து கேட்க… அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டார்!
“கார்த்திக் ஒண்ணுமே சொல்லலியா உன் கிட்ட… நான் தான் அவுட் பண்ணிட்டேனா?” என்று சிரிக்க அதற்க்கு மங்கையும் சிரித்து கொண்டு…
“இனிமே நிலா டிவிக்கு என் மருமகள் தான் முதலாளியாம் திவி… உனக்கு அது யார்ன்னு தெரியாதா?” என்று சிரிக்க… ஆனந்த அதிர்ச்சியில் கார்த்திகேயனை கேள்வியாக பார்த்தாள்! அவனது முகத்தில் இருந்து ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை!
“அத்தை… நிஜமாவா…” ஆனந்தத்தில் திக்கு முக்காடினாள் திவ்யா!
“இன்னைக்கு தான் திவ்யா சைன் பண்ண போறோம்… அதுக்கு தான் வந்து இருக்கேன்… இன்பாக்ட் என்னோட பர்சனல் ப்ராப்ளம்ஸ் இருக்கும்மா… நிறைய… ஐ நீட் மணி நவ்… டைமிங்கா கார்த்திகேயன் கேட்டாப்ல… ஏதாவது ஆபர் இருக்கான்னு… நான் பிடிச்சுக்கிட்டேன்… ஆனா செம தில்லு வேணும் திவ்யா… டக்குன்னு முடிவு எடுக்க… கார்த்திக்க பார்த்தா எனக்கு அது தான் தோன்றுது…” சித்தார்த் சந்தோஷமாக கூற திவ்யா பெருமையாக தன் கணவனையும் மாமியையும் பார்த்தாள்! இவன் என் கணவன்!
“ஆனா திவ்யா… உன்னோட ஹெல்த் ரொம்ப முக்கியம் கண்ணா… அதுக்கப்புறம் தான் எதுவுமே…” மங்கை அவருடைய கவலையை வெளியிட்டார்!
“ஓகே அத்தை… என் ஸ்வீட் அத்தை…” என்று அவரது பக்கத்தில் வந்து மங்கையை இறுக கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்! ஆனால் மங்கைக்குள் ஒரு சந்தேகம் ஓடி கொண்டே தான் இருந்தது! இவள் சிறிய பெண்ணாயிற்றே எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை தாங்குவாள் என்பதே அது! அதை வாய் விட்டு கார்த்தியிடம் கேட்கவும் செய்தார்!
“ஏன் கார்த்தி… சின்ன பொண்ணும்மா… எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை… குருவி தலைல பனங்காய் இல்லையா கண்ணா!” அதற்க்கு அவரது மகன் வேறு பதில் வைத்து இருந்தான்!
“இல்லம்மா… இவளோட திறமைய பற்றி மற்றவங்களை விட எனக்கு நல்லாவே தெரியும்… அரவிந்தன் விஷயத்துல அவனோட நூல பிடிக்க முடியாம நாங்க தத்தளிச்சுட்டு இருந்த நேரத்துல இவ ரொம்ப கேசுவலா சால்வ் பண்ணிட்டு வந்தா… கண்டிப்பா ஷைன் பண்ணுவாம்மா…” உறுதியாக தன்னை பற்றிய கணக்கீடை தாயிடம் தெரிவித்த தன் கணவனை பார்க்கும் போது அவளது பெருமை தலைக்கு ஏறியது! தன்னை பற்றி எவ்வளவு உயர்வான ஒப்பீடு! பேசி கொண்டிருக்கும் போதே தொலைகாட்சி செய்திகளில் இந்த செய்தி முக்கிய செய்தியாக்க பட்டது!
“Pharma giant enters the media… Sushrutha Karthikeyan takes over Nila groups!”
வரிசையாக ஒவ்வொரு சேனலிலும் இந்த செய்தியே கலக்கியது! நண்பர்களிடம் செல்பேசியில் இருந்து வந்த வாழ்த்துக்களை சிரித்தபடியே பெற்று கொண்டாள் திவ்யா! கார்த்திகேயனை பெருமையாக பார்க்க, அவனோ அவள் புறம் திரும்பினால் தானே! செல்பேசியில் பேசுவதில் மும்முரமாக இருந்தான்! முகத்தில் இரும்பின் கடினம்!
“கோ அஹெட் சபாபதி சார்… ஐ வோன்ட் கம் இன்…” என்று முடித்து விட்டு வைத்தவன் முகம் இன்னும் இறுகியது! அதை பார்த்து கொண்டிருந்த மங்கைக்கோ வயிற்றை கலக்கியது…
“என்ன கண்ணா… ஒரு மாதிரியா இருக்க…” என்று தயங்கி தயங்கி கேட்கவும்…
“நேத்து நைட் அரவிந்த் குடிச்சுட்டு டிரைவ் பண்ணி ஆக்ஸிடென்ட் பண்ணி இருக்கான்… வேற ஒண்ணுமில்ல…” அவன் இப்படி சொல்லும்போதே திவ்யாவுக்கு அதில் ஏதோ இருப்பதாக பட்டது! ஆனால் என்னவாக இருக்கும் என்பது புரியவில்லை!
அதற்கு பின் கார்த்திகேயன் பேசி முடித்து… சித்தார்த்தை அழைத்து கொண்டு அலுவலகம் சென்றிருந்தான்! ஒப்பந்தம் கையெழுத்திட… மருந்துக்காக கூட அவள் புறம் திரும்பாமல்! அவனை முகத்துக்கு நேராக நோக்க தவித்து கொண்டிருந்த திவ்யாவோ இன்னமும் தவித்து போனாள்!
***
ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறப்பெடுக்கும் போதே அதன் தாய், தந்தை, மனைவி, குழந்தையும் கூட யார் என்று எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது! நாமாக தீர்மானிக்கும் ஒரு உறவு இருக்கிறது என்றால் அது நட்பு தான்! நமது விதியை தீர்மானிப்பதும் நட்பு தான்… வெகு நேரங்களில்! நல்ல நட்பு… கிடைத்த வரம்! கூடா நட்பு… பெற கூடாத சாபம்! இதை புரிந்தவர்கள் உறவுகளை சீராக்கி கொள்கிறார்கள்… புரியாதவர்கள் சீரழித்து சீரழிந்தும் போகிறார்கள்! அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அரவிந்தன் ஆகி போனதுதான் மாசிலாமணியை மிகவும் பாதித்தது!
கார்த்தி வீட்டிலிருந்து வந்தது முதல் மனதுக்குள் உடைந்து வெறுத்து சின்னாபின்னமாகி இருந்தார்! என்ன செய்வது… அவருக்கு வாய்த்த விதி இப்படி ஆகி விட்டதே! அவரால் முடிந்தவரை அரவிந்தனுக்கு எடுத்து சொல்ல முயன்றதெல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது!
“அரவிந்தா… நீ போகற பாதை கண்டிப்பா சரி இல்லப்பா… தயவு செய்து உன்னை மாற்றிக்கோ… நான் கார்த்தி கிட்ட பேசுறேன்… எப்படியாவது அவனை கன்வின்ஸ் பண்றேன் அரவிந்தா…” கிட்டத்தட்ட கெஞ்சினார் தோளுக்கு மேல் வளர்ந்த தன் மகனிடம்!
“நீங்க கன்வின்ஸ் பண்ற அளவு நான் என்ன தப்பு பண்ணிட்டேன் பா… என்னோட உரிமைய நான் விட்டு கொடுக்க முடியாதுன்னு சொல்றது தப்பா?” கோபத்தில் கொதித்தவனுக்கு எங்கனம் புரிய வைப்பது? உரிமையே ரங்கராஜன் கொடுத்ததுதான் என்பதை!
“உரிமை உரிமைன்னு சொல்றியே… என்ன உரிமை இருக்குன்னு நினைச்சுட்டு பேசற? ரங்கராஜன் முதல்ல என்னை சேர்த்துகிட்டதே வொர்க்கிங் பார்ட்னராதான்… அது உனக்கு தெரியாதா?” உண்மையை எடுத்து கூற…
“அதை பற்றி எனக்கு கவலை இல்ல…” அலட்சியமாக பதில் இருத்தவனை என்ன செய்வது? மாசிலாமணி தலையை பிடித்து கொண்டார்!
“எதை பற்றித்தான் நீ கவலைபடர அரவிந்தா? குருவோட பேர வச்சா அவரை மாதிரியே சாத்வீகமா வருவன்னு தான் அம்மா இந்த பேர வச்சா… ஆனா நீ… போதை மருந்து அளவு கீழ இறங்கிட்ட… ச்சே… கார்த்தியோட குணத்துல ஒரு சதமாச்சும் வருவியா… நீயெல்லாம்…” வெறுத்து போய் அவனது தந்தை கூற…
“கார்த்தி கார்த்தி கார்த்தி… எப்போ பாரு அவன் புராணம் தான்… ஏன் பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா… எனக்கு நீங்க அப்பாவா இல்ல அவனுக்கு அப்பாவா…” என்பதை தொடர்ந்து இன்னும் சில மோசமான வார்த்தைகளை உதிர்க்க…
“ஐயோ… நிறுத்துடா… நீ எனக்கு பிள்ளையே இல்ல… இப்படி ஒரு பிள்ளைக்காக தவமே இருக்கலைன்னு நினைச்சுக்கறேன்…” என்று பதிலுக்கு கத்தவும் போலீசார் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது! எதற்காக வந்துள்ளனர் என்று இருவரும் யோசித்து கொண்டிருக்கும் போதே மாநகர போலீஸ் கமிஷனர் சபாபதி உள்ளே வந்தார்!
“வாங்க சபாபதி… என்ன இந்த பக்கம்?” சாதாரணமாக மாசிலாமணி விசாரிக்க, அவர் அரவிந்தனிடம் திரும்பி…
“சார் நீங்க நேற்று நைட் எங்க இருந்தீங்க?” கொஞ்சம் கடுமையாக சபாபதி கேட்கவும் அரவிந்தனின் புருவம் சுருங்கியது!
“என்ன கமிஷனர் சார்… என்ன விஷயம்?” கண்களால் அளந்து கொண்டே கேட்க…
“நீங்க நேற்று மிஷன் ஸ்ட்ரீட் போனீங்களா இல்லையா?”
“இல்ல… நைட் அண்ணாமலைஸ்ல எனக்கு ஒரு மீட்டிங்… அதை முடிச்சுட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டேன்… மிஷன் ஸ்ட்ரீட்ல எனக்கு வேலை இல்லையே…” முதலில் தயங்கியவன் பின் சரளமாக கூறலானான்!
“இல்ல… நேற்று நீங்க அண்ணாமலைஸ்ல இல்ல… மிஷன் ஸ்ட்ரீட்ல குடிபோதை அதிகமாகி ஒரு பொண்ணு மேல கார மோதிட்டு தப்பிச்சு வந்திருக்கீங்க…”
“இல்ல… நான் கிடையாது… மே பீ என் டிரைவரா இருக்கலாம்…” என்று படபடவென கூறி விட்டு அவனது ஓட்டுனரை சத்தம் போட்டு அழைத்தான்!
“நோ அரவிந்த் சார்… ட்ராபிக் கேமரால நீங்க ரெக்கார்ட் ஆகி இருக்கீங்க… ஆதாரம் இருக்கு…” சபாபதி ஆதாரத்தை கூறவும் அதற்கும் மேல் அரவிந்தனால் பேச முடியவில்லை! மாசிலாமணி கலங்கிய கண்களோடு அவனை பார்த்து கொண்டிருந்தார்… அடுத்து என்ன செய்வது என்பதை யோசித்து கொண்டு! அவராக தனியாக இது போல யோசித்ததில்லை என்றே கூற வேண்டும்… ரங்கராஜன் இருந்தவரை மாசிலாமணிக்காக அவர் தான் யோசித்தார்… அதன் பின் கார்த்திகேயன்! கடலுக்கு நடுவில் தத்தளிக்கும் துடுப்பில்லாத படகாக தவித்தார்!

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!