arrow_back
மாலைப் பொழுதின் மயக்கத்திலே அத்தியாயம் 24

அத்தியாயம் 24

visibility 777
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 2.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

மேட்டுப்பாளையம் தாண்டி போய் கொண்டிருந்தது கார்த்திகேயனின் பிஎம்டபிள்யு! திருமணமாகி எங்கும் போகாததால் குலதெய்வ வழிபாட்டுக்காக இருவர் மட்டும் போகட்டும் என்று மங்கை கூற கார்த்திகேயன் திவ்யாவை அழைத்து கொண்டு மேட்டுபாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தான்!

வழியில் கடந்து சென்ற பாக்கு தோப்புகளையும் சிறு ஓடைகளையும் தாண்டி இருந்தது அந்த அழகான திருகோயில்… இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடங்களை பார்வையிட்டு கொண்டே வந்த திவ்யாவுக்கு மனம் லேசாக பறப்பது போல் இருந்தது! அவ்வப்போது ஸ்டியரிங் பிடித்திருந்த வலிய கைகளையும் பார்வையிட்டுகொண்டு வந்தவளுக்கு (அதாங்கோ சைட்டு), முகத்தில் உணர்ச்சிகளை சுத்தமாக துடைத்து விட்டு இருக்கும் கணவனை பார்த்து ஒரு வகையில் ஆயாசமாக இருந்தது!

“இன்னும் எவ்வளவு தூரம்?” எதையாது அவன் வாயிலிருந்து பிடுங்க முடியுமா என்று முயன்று கொண்டே தான் இருந்தாள்!

“ம்ம்ம்… வந்துடும்…” என்று ஒட்டாமல் முடித்தவனை பார்க்கும் போது கோபம் பற்றி கொண்டு வந்தது… கோபிக்க வேண்டியது தான் தானே… தானே கோபத்தை மறந்து அவனிடம் பேசினால் இந்த அளவு அலட்டி கொள்கிறானே என்று மனம் அவனிடம் சண்டையிட்டு கொண்டிருந்தது! கார் நிற்க இறங்கியவள் மயங்கினாள்… அந்த இடத்தின் அழகை கண்டு… குளிர் உடலை தாக்க…

“வாவ்…” கைகளை உரசி கன்னத்தை தேய்த்து விட்டு கைகளை இறுக்கமாக கட்டி கொண்டு வாய் விட்டே கூற, அவனையும் அறியாமல் இயற்கையை ரசித்த அவளை கண்களால் விழுங்கினான்!

“இந்த இடத்துக்கு பேர் என்ன கார்த்திக்?” சுற்றிலும் பார்த்து கொண்டே கேட்க…

“நெல்லுதுறை…” என்று கூறிவிட்டு பொருட்களை இறக்க பார்க்க… அதற்குள் சின்னா என்கிற சின்னசாமி ஓடி வந்தான்! அவனது ஓட்டத்தில் பதட்டம் இருந்தது… எஜமானனை பார்த்த மரியாதை கலந்த பதட்டம்…

“அய்யா… விடுங்க நான் தூக்கிட்டு வரேன்…” என்று பையை அவன் வாங்கி கொள்ள… கார்த்திகேயன் அவனிடம் தோப்பு நிலவரத்தை விசாரித்து கொண்டு வந்தான். மொத்தமுள்ள இருநூறு ஏக்கர் தோப்பில் நூற்றியிருபது ஏக்கர் பாக்கும் என்பது ஏக்கர் தென்னையும் இருந்தது… பாக்கோடு வெனிலாவும் பயிரிடப்பட்டு இருந்தது… தென்னை மொத்தமாக வேறொருவரால்குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருக்க… அங்கேயே கயிறு தயாரிக்கும் தொழிலகமும் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது… ஊடு பயிராக இடப்பட்டு இருந்த வெனிலா மிகுந்த லாபத்தை அள்ளி கொடுக்க… மங்கையின் முழு கட்டுபாட்டில் இருந்தது நெல்லுதுறை தோப்பு! இவையெல்லாம் சின்னாவிடம் கார்த்திக் பேசி கொண்டு வந்ததில் இருந்து திவ்யா அறிந்து கொண்டது… அவளுக்கு இதில் கிஞ்சிற்றும் ஆர்வம் இல்லாமல் இருக்க அவர்களை விட்டு சற்று தள்ளி ஓடிய கல்லாறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்!

நீலகிரியில் இருந்து கீழிறங்கிய கல்லாறை கிட்டத்தட்ட ஒரு காட்டாறோடு தான் ஒப்பிட முடியும்… அப்போது மழைகாலமானதால் தண்ணீர் நிறைந்து பாய்ந்து கொண்டிருந்தது… அசுர வேகத்தில் மலையில் இருந்து இறங்கும் ஆறு அதே வேகத்தில் சமதளத்தில் ஓடுவதை அங்கு பார்த்தாள்… அந்த பகுதியின் வளத்திற்கும் பாக்கு மரங்களுக்கும் வற்றாத அந்த கல்லாறே காரணம் என்பதை பார்க்கும் போதே அறிந்து கொள்ள முடியும் என்று நினைத்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க…

“போலாமா?” பக்கத்தில் அவனது குரல் கேட்கவும் ஒரு நிமிடம் உடல் தூக்கி வாரி போட திரும்பினாள்!

“கோயில காணோம்?” சந்தேகமாக அவள் கேட்க…

“நம்ம தோப்பு வீட்டுல கொஞ்சம் பிரெஷ் பண்ணிட்டு போக சொல்லி அம்மா சொன்னாங்க… கோயிலுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகணும்…” எந்தபுறமோ திரும்பியபடி எனக்கென்ன என்று அவன் கூற…

“ஆமா… எல்லாம் அம்மாவ கேட்டு தான் எல்லா செய்ற மாதிரி…” முனகி கொண்டு திரும்பி நடந்தாள். அது அவனது காதில் வேறு விழுந்து வைக்க கொஞ்சமிருந்த இளக்கமும் அவனது முகத்தில் இருந்து காணாமல் போனது! அதை எல்லாம் மனைவி பதவியில் இருந்த மகாராணி கண்டுகொண்டால் தானே…

“கார்த்திக்…” கல்லாறை வேடிக்கை பார்த்தபடியே அவனை அழைக்க…

“ம்ம்ம்…” வேலை செய்யும் வேலையாட்களை பார்த்தபடியே ஒற்றை வார்த்தையில் கேட்டான்…

“அந்த ஆற்றுல இறங்கலாமா?” சிறுபிள்ளையாக ஆசையோடு தோப்பின் எல்லையில் ஓடி கொண்டிருந்த கல்லாறை காட்டி கேட்டவளை ஒரு கணம் கேலியாக பார்த்து விட்டு…

“இந்த இடம் சரிப்படாது… இந்த இடத்துல ஆத்துல வேகமும் அதிகம் சுழற்சியும் அதிகம்…”

“ப்ளீஸ் கார்த்திக்… ஆசையா இருக்கு… கொஞ்சம் காலை மட்டும் நனைச்சுக்கறேனே… ப்ளீஸ்…” கெஞ்சிய மனைவியை பார்த்து…

“திவ்யா… இங்க இறங்க படித்துறை கூட கிடையாது… இந்த தோப்புல இருந்து இறங்கனும்னா இடம் ரொம்ப செங்குத்தா இருக்கும்… நாங்க வேணும்னா இறங்க முடியும்… லேடீஸ் கஷ்டம்…” இப்படி சொன்னதற்கு அவனே வருத்தப்பட வேண்டி இருக்கும் என்று தெரியாமல் அவன் கூற அவனது மனைவி சிலிர்த்து எழுந்தாள்!

“அதென்ன லேடீஸ் இறங்க முடியாதா? நாங்க ப்ளைட்டே ஓட்டுவோம்… இதென்ன பிசாத்து…” வெகுண்டு எழுந்து அவனிடம் சண்டை பிடிக்க… கார்த்திகேயனும் அவனை மறந்து அவளை கேலி செய்வது போல…

“ஆஹா நீ தான் சுவரேறி குதிக்கிற ஆளாச்சே… ஆனா இப்போ அந்த வேலை எல்லாம் வேணாம்…” என்று முடிக்க, அவள் விட்டால் தானே!

“ஏன்… ஏன்… ஏன்…” அவனது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக அவனிடம் கேட்க…

“ப்ச்… யூ ஆர் கேரியிங் திவ்யா…” என்று அவன் கூறிவிட்டு வேறுபுறம் திரும்பியபோது தான் அவளுக்கும் அவன் சொன்னது புரிந்தது… ஆனால் வாரிசை சுமந்து கொண்டு இருக்கும் தனது மனைவியின் ஆசையை அப்படியே விட்டுவிடவும் அவனுக்கு பிடிக்கவில்லை…

“சரி… வா… ஆனா ரொம்ப ஜாக்கிரதையா இறங்கணும்… இப்போ வெறுமனே கால மட்டும் நனைச்சுக்கோ… கோயிலுக்கு போயிட்டு வந்துட்டு வேணும்னா குளிக்கலாம்… அதுக்கு நம்ம தோப்பிலேயே வேற இடம் இருக்கு… அங்க யாரும் வர மாட்டாங்க அதோட பாதுகாப்பாவும் இருக்கும்…” என்று நிதானமாக அவளுக்கு விளக்கி அவனே இறங்கி வரவும் திவ்யாவுக்கு பறப்பது போல இருந்தது!

“ம்ம்ம்… ஓகே… ஓகே…” என்று சிறுபிள்ளையாக சந்தோஷமாக தலையாட்டினாள்! இளம் சிவப்பு நிற சேலையில் பார்பி பொம்மையாக தன்னருகே துள்ளி கொண்டு வந்த மனைவியை பார்க்கும் போதே மனதில் தாபம் எழ… அடுத்த நிமிடமே அவள் தன்னை மறுத்து பேசிய வார்த்தைகளும் அன்று இரவு ஸ்ரீராமிடம் கதறியதும் நினைவுக்கு வர தலையை உதறி கொண்டான்! அவனது மனவோட்டத்தை புரியாத திவ்யா குதூகலித்து கொண்டிருந்தாள்!

“அச்சோ… என்ன அழகு… இந்த இடம்… கிளைமேட் சூப்பர் கார்த்திக்… இங்கேயே இருந்துடலாம் போல இருக்கு… இந்த குளிரை சென்னைலையோ பாண்டிலையோ பார்க்கவே முடியாதில்ல…” குளிரை அனுபவித்தபடியே கைகளை இறுக்கமாக கட்டி கொண்டு அவள் கூற அந்த நிமிடம் அவனுள் உறைந்தது! என்னதான் அவள் மேல் வருத்தமும் ஆற்றாமையும் இருந்தாலும் அவனது ஆசை காதலியல்லவா! மனம் தடுமாறியது!

தோப்பில் இருந்து ஆற்றில் இறங்கியவன் தண்ணீரில் நின்றவாறே திவ்யா இறங்குவதற்கு கை கொடுத்தான்! செம்மண் தோப்பு… தண்ணீர் சேர்ந்து வழுக்க…

“பார்த்து இறங்கு திவ்யா…” பதறினான்… ஆனால் அவனது பதற்றம் அங்கிருந்த மிஸ்டர் கல்லுக்கு தெரியாமல் போக, அந்த கல் தடுக்கி மேலிருந்து கீழே விழ போனவளை பூமாலையாக தன் மேல் தாங்கினான் கார்த்திகேயன்! அவனது வலிய கைகள் அவளது மெல்லிடையில் பரவ இருவருக்குமே மின்சாரம் பாய்ந்த உணர்வு! வெண்பளிங்கு போன்ற அந்த இடை பிரதேசத்தில் பட்ட கை இருவருக்குள்ளும் ஏதோ ஒன்றை தட்டி எழுப்ப… அந்த இடத்தின் தனிமையும் காற்றில் இருந்த மென்மையான சில்லிப்பும் மேகம் கூடியதால் கவிழ்ந்து கொண்டிருந்த இருளும் சலசலவென ஓடிய நதியின் சலசலப்பையும் கீச் கீச் என்ற பறவைகளின் சப்தத்தையும் தவிர வேறெதுவும் இல்லாத அந்த சூழ்நிலையில் மயங்கியது நெஞ்சம்…

இடையில் துவங்கிய பயணம் இனிமையாக முன்னேற இதை எதிர்பார்க்காத திவ்யாவுக்கு மனம் படபடத்தது… அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் அவளை தடுக்க அவனது கைகளை எடுத்து விடும் தைர்யம் வராமலும் அவனது இந்த செயலை சட்டென ஏற்றுகொள்ளவும் முடியாமலும் தவித்தாள்… என்ன தான் யாருமற்ற தனிமை என்றாலும் அது பொது இடம் என்ற லஜ்ஜையும் அவளை அவனோடு ஒன்ற விடாமல் தடுத்தது… ஆனால் அவளது கணவனோ தன்னை மறந்து அவளுள் மூழ்கி கொண்டிருந்தான்…

“கார்த்திக்… ப்ளீஸ்…”

“ம்ம்ம்…” அவனது தேடலை கழுத்து வளைவில் உதட்டை பதித்த படி துவங்க… அவளது பூவுடல் நடுங்கியது… நடுக்கத்தை உணர்ந்த ஆண்மை இன்னும் வேகமாக அவளது இதழ்களில் தேட துவங்க…

“கா… கார்த்திக்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… விடுங்க…” தடுமாறியபடியே வந்து விழுந்தன வார்த்தைகள்…

“திவி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… ஐ நீட் யூ…” அவனது தடைகள் அனைத்தையும் தகர்த்தது அவனது தாபம்… ஆனால் அவன் மனைவியின் நிலையோ சங்கடமான ஒன்றாக இருந்தது… அவளது மனம்…

“ஹய்யோ… பப்ளிக் பிளேஸ்… வேணாம்…” கணவனின் நெருக்கத்தில் நெகிழ்ந்து இருந்தவளின் மனம் பொது இடம் என்று மட்டுமே குரல் கொடுக்க…

“நோ கார்த்திக்… இதென்ன இன்டீசன்சியா… ப்ளீஸ் விடுங்க…” குரலில் கொஞ்சம் கடுமை சேர்ந்து அவனை தள்ளி நிறுத்த முயல… அவனது தாபம் அனைத்தும் பொங்கும் பாலில் பட்ட நீராக தணிந்தது! அவளை தள்ளி நிறுத்தி…

“இது இன்டீசென்சியா…?” அவளிடம் வெட்கத்தை விட்டு கூறியும் இப்படி செய்கிறாளே என்ற கோபம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது!

“இல்ல கார்த்திக்… பப்” பப்ளிக் பிளேஸ் என்று அவனுக்கு புரியவைத்து விடும் நோக்கத்தில் அவள் ஆரம்பிக்க கார்த்திகேயன் கோபத்தோடு கைகளை உயர்த்தி தடுத்தான்!

“வேணாம் திவ்யா… போதும் நான் அசிங்கபட்டதெல்லாம் போதும்… நான் தொட்டா புழு ஊரற மாதிரி இருக்குன்னு சொல்லியும் அதை மறந்துட்டு… ச்சே…” என்று தலையில் கை வைத்து கொண்டான்… அந்த குரலில் அவனது அடிபட்ட வேதனை மிகுந்து தெரிய அதை தாள முடியாத திவ்யா…

“கார்த்திக்… நீங்க…” தப்பாக புரிந்து கொண்டு இருக்கீங்க என்று சொல்ல வந்தவளை அப்படியே நிறுத்த கூறி விட்டு மர கிளையை பிடித்து மேலே ஏறினான்…

“மேலே ஏற கை குடுக்கலாம் இல்லையா… இல்ல அதுக்கும் நீ சொன்ன மாதிரி புழு ஊறுமா?” என்று கோபத்தோடு அவன் கேட்க மௌனமாக் அவனது கைகளை பிடித்து மேலே ஏறினாள்!

மெளனமாக அறைக்கு சென்றனர்… ஒன்றும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் கார்த்தி! குளித்து முடித்து பாந்தமாக வேஷ்டி சட்டை அணிந்து வெளியே வந்தவன் திவ்யாவை பார்த்து ஒரு கணம் திகைத்துத்தான் போனான்! இளம் பச்சை நிறத்தில் பட்டு புடவையுடுத்தி சிறு நகைகள் மட்டும் அலங்கரிக்க இடை தாண்டிய கூந்தலில் சின்னசாமியின் மனைவி கொடுத்த நெருக்கமாக தொடுத்த மல்லிகை சரத்தை வழிய விட முயன்று கொண்டிருந்தாள்! இயற்கையாக சிவந்த கன்னகதுப்புக்களும் அதரங்களும் தாய்மையின் காரணமாகவோ என்னவோ மின்னியது!

“அழகு ராட்சசி… பிசாசு…” மனதில் திட்டியவாறு கோயிலுக்கு அவளையும் அழைத்து சென்றான்!

***

புதுவை சிறைச்சாலையில் வக்கீல்களுடனும் தந்தையுடனும் ஆலோசித்து கொண்டிருந்தான் அரவிந்தன்! மொத்தமாக அரைமணி நேரம் ஒதுக்கி இருந்தனர் ஆலோசனைக்காக… சற்று தள்ளி போலீஸ் நின்று கொண்டு கண்காணித்து கொண்டிருக்க வெளியே நிருபர்கள் செய்திக்காக ஆவலாக காத்து கொண்டிருந்தனர்! ஏதாவது பரபரப்பாக கொளுத்தி போட இது நல்ல தருணமல்லவா! அவர்களை முறைமை படுத்தி கொண்டிருந்தனர் காவலர்கள்!

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்று இதோடு பத்து நாட்களாகி இருந்தது… ஜாமீன் பெறுவதற்கு எவ்வளவு முயன்றும் ஆனானபட்ட ராமசுப்புவாலேயே முடியவில்லை என்பதில் கடும் கோபத்தில் இருந்தான் அரவிந்தன்! கமிஷனர் வீட்டுக்கு கைது செய்ய வந்தபோது கூட இவ்வளவு பிரச்சனை வரும் என்று நினைக்கவில்லை… ஆனால் கேஸ் பைல் பண்ணும் போது போதையில் இருந்தான் என்பதற்கு ஆதாரமாக ஐம்பது கிராம் ஹெராயின் வைத்திருந்தான் என்று குறிப்பிட்ட போது ஆடித்தான் போய்விட்டான்… இந்த பிரிவுக்கு சட்டத்தில் ஜாமீன் கூட கிடையாதே… எந்த கேள்வியும் கேட்க முடியாமல் ஒரு வருடம் வரை கூட காவலில் வைக்க முடியுமே… இதை செய்தது கார்த்தி தான் என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு…

“ராமசுப்பு சார்… இப்போ என்ன தான் பண்ண முடியும்ன்னு சொல்றீங்க?” பொறுமையை கடந்து அவரிடம் கொதித்தான் அரவிந்தன்!

“அரவிந்த் சார்… கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா பைல் பண்ணி இருக்காங்க… ஹெராயின் தவிர வேற என்னமோ எல்லாம் உள்ளார கொண்டு வர்றாப்ல தெரியுது… பெட்டர் நீங்க கார்த்தி கிட்ட தகைஞ்சு பாக்கறது நல்லது…”

“நானா? கார்த்தி கிட்டயா? நெவர்… அவன் தான் என்னோட முதல் எதிரியே… அவனை…” என்று கொலைவெறி கண்ணில் தெரிய பேசி கொண்டிருந்தவனை பார்க்கும் போதே மாசிலாமணிக்கு உள்ளுர நடுக்கம் வந்தது! மகன் இந்த அளவு கார்த்தியிடம் பகைத்து கொண்டால் அவனது வாழ்க்கை என்ன ஆவது என்ற பயம் அவரை ஆட்டுவித்தது!

“அர்விந்த்… கண்ணா… தயவு செய்து கார்த்தி கிட்ட பேசுப்பா… நீ அவன் கிட்ட பேசுனா எல்லாம் சால்வ் ஆகிடும்… நான் அழைச்சுட்டு வரேன்டா…” தந்தை மகனுக்காய் துடிக்க…

“அப்பா… பேசாம இருக்கீங்களா? எனக்குன்னு என்ன மரியாதைய முதல்ல இருந்து கொடுத்தீங்க? உங்களுக்கு கார்த்தி தான் உசத்தி… இப்போவும் அவனையே கட்டிட்டு அழுங்க… என்னை விட்ருங்க… போங்க… என் கண் முன்னால நிற்க்காதீங்க…” கோபத்தை எல்லாம் மாசிலாமணியிடம் காட்ட…

“அரவிந்த்… நீ இப்படி இருக்கறத நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்குப்பா…” என்று கூறி விட்டு தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டார்! நெஞ்சு வலித்தது அவருக்கு… இந்த வயதில் தனக்கு இந்தேல்லாம் தேவையா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை! ராமசுப்புவிடம் பேசி பயனிருப்பதாக அரவிந்துக்கு தோன்றவில்லை!

“ராமசுப்பு சார்… வெளிய பாண்டியன்னு ஒருத்தன் இருப்பான்… அவனை உள்ள அனுப்ப ஜெயிலர் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு உள்ள அனுப்புங்க…” என்று கூறிவிட்டு நெற்றியில் கைவைத்து யோசித்தான்!

பாண்டியன்… அரவிந்தனின் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் தூண்! விநியோகிப்பதில் பெரும் பங்கு வகிப்பவன்… புதுவையில் முன்னணியில் உள்ள ரவுடி கும்பலின் தலைவன்… அரவிந்தனின் வலது கரம்!

“அண்ணே…” அரவிந்தனை பார்த்து அவசரமாக வணக்கம் வைத்தான்!

“பாண்டி… சச்சிதானந்தத்துகிட்ட பேசினியா? எதாவது ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரா?”

“பேசினேன்ணா… ஆனா அவர் பிடி கொடுக்கல… அவர் பொண்ணுக்கு கூட வேற இடம் முடிவு பண்ணிட்டதா சொன்னாரு… அவரை காண்டாக்ட் பண்ண வேண்டாமாம்… பண்ணினா அவருக்கு தான் பிரச்சனைன்னு சொல்ல சொல்றாருண்ணா…” ஷாலினி வீட்டில் நடந்ததை பாண்டியன் விவரிக்க அரவிந்தனுக்கு ரத்தம் கொதித்தது! தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறார்களா? கார்த்திக்கும் ஷாலினிக்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்த அவனுக்கு பிரச்சனை வந்த போது தான் கொடுத்த ஐடியாவை தன்னிடமே காட்டுகிறான்… இருக்கட்டும் வெளியே வந்ததும் வைத்து கொள்கிறேன் என்று கருவி கொண்டான்… அந்த கோபம் அப்படியே கார்த்தி மேல் பாய்ந்தது… இவனால் தானே அத்தனையும்…

சிறு வயது முதலே தன்னை விட அவனுக்கு தான் எல்லா இடத்திலும் முக்கியத்துவம்… அதற்கேற்ப படிப்பிலும் விளையாட்டிலும் அறிவு கூர்மையிலும் அவனே முந்த அரவிந்தனின் தந்தைக்கும் அவனே செல்ல பிள்ளையானான்… தான் அமர வேண்டிய மடியில் அவன் அமர்ந்து செல்லம் கொஞ்சுவதை பார்க்க பார்க்க அரவிந்தனுக்கு கோபம் பற்றி கொண்டு தான் வரும்… ஆனால் தந்தையிடம் கோபத்தை காட்டாமல் தனிமையில் வெதும்புவான்… சில நேரம் அழுவான்!

நாள் ஆக ஆக தனது தோழனான கார்த்தி மேல் நட்புக்கு பதில் வஞ்சம் தானே வளர்ந்தது! பண்பாம் பண்பு… யாருக்கு வேண்டும் அவனது பண்பு என்று மனதுக்குள் கருவியது அந்த பிள்ளை மனம்… எடுத்து கூற தாயும் இல்லாமல் அந்த வஞ்சம் இலை விட்டு கிளை விட்டு அவனது மனதில் வளர்ந்து நின்றது அவனுக்கு ஷாலினியை பேசி முடித்தபோதுதான்! அந்த அழகு புயலின் மேல் கண்ணாக இருந்தவனுக்கு சச்சிதானந்தம் கார்த்திகேயனுக்காக பேசி முடிக்க பொறாமை தீ பற்றி கொண்டது… அதற்கு முன்னமே அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டு இருந்தவனுக்கு அந்த தீ பற்றியதில் வியப்பேதுமில்லையே!

ஷாலினியை அடுத்து திவ்யாவிடம் கார்த்திக் தோழமையை காட்டியபோது அந்த தீ பலமாக எரிந்தது… ஷாலினி போனால் போகட்டும் திவ்யாவையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று துடித்தான்! தனது தந்தையை வைத்தே கார்த்தியிடம் மெதுவாக ஆரம்பிக்க வைத்தான்! முதலில் தயங்கிய கார்த்திக் பின்னர் தனது நண்பனின் நல்வாழ்வுக்காக என்று ஒப்பு கொண்டு அவனே வைஷ்ணவியை விட்டு திவ்யாவின் வீட்டில் பேச செய்ய அரவிந்துக்கு வானமே வசப்பட்ட உணர்வு… ஆனால் தனக்கு பேசிய திவ்யா தன்னை விட்டு அவனையே பிடித்து தொங்கி கொண்டிருக்க பொறாமை தீ கொழுந்து விட்டெறிந்தது… அவனுக்கே அத்தனை நல்ல விஷயங்களையும் தருகிறாயே இறைவா என்று கடவுளிடம் சண்டை போட்டான் அரவிந்தன்!

இடையில் அந்த பிரச்சனை வந்தபோது மிகவும் சந்தோஷித்தது அரவிந்தன் தான்… அப்போது கம்பெனி எப்படியும் கவிழ்ந்து விடும் நாம் தப்பித்தால் போதும் என்று நினைக்க நடந்தது அப்படியே உல்ட்டாவாக… சோர்ந்து போய் அமர்ந்தான்! பொன் முட்டையிடும் வாத்தாயிற்றே சுஷ்ருதா! அதையும் தாண்டி திவ்யாவை கார்த்திக் மணம் புரிந்தது… அவனால் ஜீரணம் செய்யவே முடியாத ஒன்றாகியது… அவர்களை பிரிக்க நினைத்தான்… முனைந்தான்… அதிலும் தோல்வி கண்ட மனம் உலைகளனாக கொதித்தது!

“கார்த்தியோட நடவடிக்கைகளை கண்காணி பாண்டி…” உணர்ச்சியற்ற முகபாவத்தோடு அவன் கூற…

“எதுக்குண்ணா…” குழப்பமாக அந்த பாண்டியன் கேட்க குரலை கீழிறக்கி…

“முடிச்சிடு…” கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது…

“அண்ணா…” அதிர்ந்தான்… கார்த்தி மேல் கை வைக்க நினைப்பவர்களையே இந்த அளவு பந்தாடும் அவனை… பாண்டி பின் வாங்க…

“உஷ்… இந்த ஜெயில்ல உட்கார்ந்துகிட்டு நான் இதை சொல்றேன்னா நான் எதுக்கும் தயார்ன்னு அர்த்தம் பாண்டி… ஆனா அதுக்கு முன்னால அவன் இருக்க கூடாது… முடிச்சிட்டு வா… உனக்கு என் சொத்தையே எழுதி வைக்கிறேன்…” என்று முடித்தான்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 25

“வானிலை அறிக்கை... தமிழகம் மற்றும் புதுவையிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது... புதுவை கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்