அத்தியாயம் 25
“வானிலை அறிக்கை… தமிழகம் மற்றும் புதுவையிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது… புதுவை கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது… இதனால் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்த படுகிறார்கள்…” நிலா செய்திகளில் அறிவிப்பு வெளியாகி கொண்டிருந்தது… நிலா தொலைக்காட்சியின் தலைமை அலுவலகம் புதுவைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும் தொழில்நுட்ப செயல்பாடுகள் அனைத்தும் சென்னையிலேயே இருந்தது… அனைத்தும் ஸ்ரீராமின் கண்காணிப்பில்… அவனுக்கும் சாஹித்யாவுக்குமான திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளையில் அவன் பொறுப்பெடுத்து கொண்டிருந்தான்!
கார்த்தியும் திவ்யாவும் மேட்டுப்பாளையம் சென்று வந்த பிறகு அவளிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் பிரான்ஸ் கிளம்பியவன் தான்… இன்று வரை அவனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை அவளுக்கு! வெளியே புயல் மழை கொட்டி கொண்டு இருக்க மனமும் அதற்கு ஈடாக தவித்து கொண்டு தான் இருந்தது…
நெருப்புக்கு எப்படி காற்று துணை புரிகிறதோ காதலுக்கு பிரிவு என்பார்கள்… சிறிய நெருப்பை காற்று அணைத்து விடும் ஆனால் பெருநெருப்பை இன்னும் ஊதி பெரிதாக்குவது காற்று தான் அது போலத்தான் காதலுக்கு பிரிவும்… இருவரிடையே காதல் என்பது குறைவாக இருக்கும் பட்சத்தில் பிரிவு அவர்களிடையே நிரந்தரமாகிறது அதே வேளையில் காதல் அளவிடமுடியாமல் இருக்கும் பட்சத்தில் அந்த பிரிவே அந்த காதலை இன்னமும் பெரிதாக்கி விடுகிறது… அதை இப்போது அனுபவபூர்வமாக உணர்ந்தாள் திவ்யா!
அவனை பாராத ஒவ்வொரு கணமும் முள் மேல் அமர்ந்த உணர்வை தர ஒவ்வொரு முறையும் செல்பேசி அழைத்த போது ஆர்வமாக எடுத்து பார்த்து ஏமாந்து போனாள்! ஸ்ரீராமிடம் அவனை அவனது தவறுகளோடும் குறைகளோடும் ஏற்று கொள்ள நினைக்கிறேன் என்று கூறியபோதும் அவளால் அவனுடன் ஒன்ற முடியவில்லை என்பதை மேட்டுப்பாளையத்தில் உணர்ந்தாள்… ஏதோ ஒன்று தடுக்கிறது என்று நினைத்தவளுக்கு இன்றோ அவனை பார்த்தால் போதுமென்றாகி விட்டது… பிரிவு துயரம்!
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறாய் கண்ணா என்று பாரதி பாடியது கண்ணனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவனுக்கு பொருந்துகிறது என்று அவனிடம் மனதில் சண்டை போட்டு கொண்டிருந்தாள்! ஒரு வாரமாக தன்னிலை மறந்து அமர்ந்து இருப்பதும் மங்கை அவளை கட்டாயபடுத்தி உணவு உண்ண வைப்பதும் சகஜமாகி போனது!
“அத்தை எனக்கு ராட்டு தொக்கு கத்து கொடுங்க” என்று வந்து நின்ற மருமகளை வியப்பாக பார்த்தார் மங்கை! இறால் என்றாலே மூக்கை மூடி கொண்டு ஒடுபவள்… அசைவம் பக்கம் தலை வைத்து படுக்காத ஆள் ஆயிற்றே!
“என்னடா கண்ணா… புதுசு புதுசா…” என்று சிரித்தபடியே அவர் கேட்க…
“கார்த்திக்குக்கு அதுதானே அத்தை பிடிக்கும்… நானும் கத்துக்கறேனே…” என்று மூக்கை சுளித்த படி செல்லமாக கேட்ட மருமகளை இருத்தி வைத்து ராட்டு தொக்கை அழகாக கற்று கொடுக்க ஆசையாக கற்று கொண்டாள் திவ்யா!
“ஏன்டா கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி பெண்ணியம் பேசுவ… இப்போ என்ன கிட்சன்ல… அவ்வளவுதானா உன்னோட பெண்ணியம்?” கிண்டலாக கேட்ட தனது அத்தைக்கு சிரித்தபடியே…
“அத்தை பெண்ணியம்னா எல்லாரையும் அடக்கி ஆளறதோ சமைக்க மாட்டேன்னு சொல்றதோ இல்லத்தை… தன்னோட மனைவி தன்னை மாதிரியே ஈக்வல் பிரஜைன்னும் அவளால எல்லா விதத்திலும் சாதிக்க முடியும்ன்னு நம்ப வைக்கறது தான் ஒரு மனைவி கணவன் கிட்ட பேசற பெண்ணியம்… கார்த்திக் என்னோட திறமைகள மதிச்சு எனக்காக யோசிச்சு செய்றவர்… அதை விட என்னன்னா கார்த்திக் சொன்னமாதிரி ஆத்மார்த்தமா காதலிச்சா எதுவுமே தன் மேல திணிக்கபடறதா உணர்வு வராது இல்லையாத்தை… அதோட என்னோட பெண்ணிய கருத்துக்கள் எல்லாம் அப்படியே பத்திரமாத்தான் இருக்கிறதத்தை…” மங்கையிடம் தனது கருத்தை கூறி கேட்க அவரது முகம் பெருமையில் ஒளிர்ந்தது! திருஷ்டி கழித்தவர்…
“இப்படி ஒரு அறிவான பொண்ணு தான் கார்த்திக்கு சரியான ஆள்… அவனோட ஈக்வலா விவாதம் பண்ண… நான் கூட என்னமொன்னு நினைச்சேன்… கார்த்தியோட சாய்ஸ் தப்பாவே போகலை கண்ணா…” தனது மருமகளின் அறிவை மெச்சி கொண்ட மாமியாரும் இவராகத்தான் இருப்பார் என்று மனதுக்குள் நினைத்தவள் அதையே வாய் விட்டும் சொல்ல செய்தாள்!
“மருமகளோட அறிவை பாராட்ற அத்தம்மா நீங்களா மட்டும் தானத்தை இருப்பீங்க…” என்று அவரை கட்டி கொண்டாள்!
“இதுல என்னடா கண்ணா இருக்கு… நீ அறிவா இருக்கறது தானே நல்லது… எனக்கப்புறம் என்னோட பொறுப்பெல்லாம் நீதானே கண்ணா பார்க்கணும்… அதோட உன்னோட அறிவு தானே என்னோட பேரன் பேத்திக்கு ட்ரான்ஸ்பர் ஆக போகுது… எல்லாம் அந்த சுயநலம் தான்டா…” என்று சிரிக்க…
“ஆஹா அத்தை… இப்படி போட்டு தாக்குறீங்களே…” என்று சிரித்த மருமகளின் அழகை கண்டு மயங்கி நின்றார்… இந்த அருமையான பெண்ணிடம் கார்த்தி மயங்கியத்தில் என்ன தவறு இருக்கிறது என்று அவரது உள்ளம் நினைத்தது! ஆனால் இருவரிடையே இன்னமும் ஏதோ சரியாகாமல் இருக்கிறது என்று உள்மனம் சொல்ல…
“திவி… ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே கண்ணா?” பலமான பீடிகையோடு ஆரம்பிக்க…
“சொல்லுங்தை…” என்று புன்னகையோடு கூற…
“திவிகண்ணா… கார்த்தி உன்னை சொல்லி கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னப்போ நாங்க யாருமே ஒண்ணுமே சொல்லல… சொல்லபோனா வேண்டாம்னு சொல்ற துணிச்சல் தான் இல்ல… ஏன்னா ஒரு முடிவெடுத்துட்டா அவனை மாற வைக்கறது ரொம்ப கஷ்டம்…”
“ஏன் அத்தை இதை இப்போ சொல்றீங்க?” சாதாரணமாகவே கேட்டாள் திவ்யா!
“இல்ல கண்ணா… அவ்வளவு ஆசையாத்தான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டான்… ஆனா அவன் முகத்துல அந்த பழைய குறும்பும் சிரிப்பும் மிஸ்ஸிங்டா… அதான் கேக்குறேன்… உங்க ரெண்டு பேர் இடைல எதாவது பிரச்சனையா?” கேள்வி கேட்டுவிட்டு உயிரை கண்களில் தேக்கி மருமகளின் முகம் பார்த்த அந்த அன்னையை பார்த்து மனம் சிலிர்த்தாள்!
“கொஞ்சம் கொஞ்சம் பிரச்சனை இருந்தது அத்தை… ஆனா இப்போ இல்ல… இனிமே கண்டிப்பா அப்படி இருக்காது…” என்று பொதுப்படையாக முடித்ததே போதுமானதாக இருந்தது மங்கைக்கு!
“போதும்டா… என்ன பிரச்சனை இருந்தாலும் எல்லாத்தையும் மறந்திடுமா… ரெண்டு பேருமே லைப்ல ஜெய்க்கணும்… அது போதும் திவி கண்ணா…” என்று கூறி விட்டு…
“இந்த கார்த்தி கடலூர் போனானே… இன்னும் ஒரு போனை கூட காணோமே…” என்று வருத்தமாக கூற அவள் அதிர்ந்தாள்! கார்த்திகேயன் பிரான்சில் இருந்து வந்து விட்டானா? என்ற அதிர்ச்சி! அதை காட்டி கொள்ளாமல்…
“எப்போத்தை வந்தார்?” சாதாரணமாக கேட்பது போல கேட்க…
“நைட் தான் திவி… ஏன் உன் கிட்டயும் இன்னும் பேசலியா?” கேள்வியாக பார்த்து கொண்டே கேட்க…
“இல்லத்தை… மொபைலுக்கு சார்ஜ் போட மறந்துட்டேன்… ஆப்ல இருந்துச்சு… இப்போ தான் சார்ஜ் போட்டேன்…” ஏதோ ஒன்றை கூறி சமாளித்து கொண்டு இருக்கும் போதே அவளது செல்பேசி அழைக்க… எடுத்து பார்த்தவள் ஏமாந்தாள்! மாசிலாமணி தான் அழைத்து இருந்தார்! அவன் இல்லாத நேரத்தில் இவர் எதற்கு அழைக்கிறார் என்ற குழப்பத்தோடு செல்பேசியை காதுக்கு கொடுத்தவள்… அவர் பேச பேச முகம் மாறினாள்!
“அங்கிள்… உங்களுக்கு ஒன்னும் இல்ல… இதோ நாங்க உடனே கிளம்பி வந்துடறோம்… டோன்ட் வொர்ரி அங்கிள்…” பதட்டமாக சமாதானம் கூறிய வார்த்தைகள் அங்கு எடுபடவில்லை!
“…”
“அங்கிள்…” என்று அதிர்ந்தவள், அவர் மேலும் கூறியவற்றை கேட்டபோது காலடியில் பூமி நழுவியது! கடவுளே… இதென்ன சோதனை! பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லாதவளுக்கு அப்போது அந்த கடவுளை அழைப்பதை தவிர வேறு வழியிருப்பதாக தோன்றவில்லை! பேசி விட்டு வைத்தவளிடம் பதட்டமாக மங்கை என்னவென்று கேட்க… மற்ற விஷயங்களை கூறி அவரை பதட்டப்பட வைக்காமல்…
“மாசி அங்கிளுக்கு ரொம்ப நெஞ்சு வலிக்குதாம்… ஹார்ட் அட்டாக் போல இருக்குன்னு பதட்டபடறார் அத்தை… நீங்க டிரைவர் இன்னும் ஒரு அஞ்சாறு பேர அழைச்சுகிட்டு மாசி அங்கிள் வீட்டுக்கு போங்கத்தை… நான் கார்த்திக்க அழைச்சுகிட்டு ஹாஸ்பிடல் வந்துடறேன்…” என்று கூறி விட்டு ஒரு நொடி கூட நிற்காமல் டிரைவரை அழைத்து காரை எடுக்க கூறினாள்!
காருக்குள் அமர்ந்து இருந்தவளின் பதட்டத்தை எதை கொண்டு தணிக்க? அதற்கு காரணமானவனின் முகத்தை ஒரு நொடி பார்த்தால் கூட போதுமே! மாசிலாமணி அங்கிள் கூறியது அவளது காதில் ஒலித்து கொண்டே இருந்தது! அவரது நெஞ்சை பிடித்தபடி அவளிடம் பேசியதை உணர்ந்தாள்!
“திவ்யா… கார்த்திக் கிட்ட பேசுறதுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லம்மா… எந்த முகத்தை வெச்சுட்டு பேசுவேன்… காப்பாத்து திவ்யா… காப்பாத்து…”
“என்ன அங்கிள்… என்ன சொல்றீங்க… புரியவே இல்லையே…”
“அர்விந்த என்னால கட்டுபடுத்த முடியலை திவ்யாம்மா… இப்போ பாண்டியன்னு ஒருத்தனை ஏவி விட்டு இருக்கான்… கார்த்திக்கை கொல்ல சொல்லி… அந்த பாண்டியும் இன்னைக்கு கடலூர்ல இருக்க கார்த்திய முடிச்சுடறேன்னு போய் இருக்கான் ஆளுங்களோட… அவனுங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எதோ ஆக்சிடென்ட் மாதிரி பண்ண போற மாதிரி தெரிஞ்சுது… கார்த்தி கிட்ட சொல்லி ஜாக்கிரதையா இருக்க சொல்லும்மா… எப்படியாவது காப்பாத்து… அவனும் எனக்கு பிள்ளை மாதிரித்தான் திவ்யா…” என்று அந்த பெரியவர் வெடித்து அழ அவளால் அந்த நொடியை மறக்கவும் கூடுமோ?
காரில் போய் கொண்டே அவனது செல்பேசியை அழைக்க… அழைப்புக்கள் எடுக்கபடாமலேயே இருந்தது…
“ஹய்யோ கார்த்திக்… பிக் அப்… பிக் அப்… கார்த்திக்…” பதட்டத்தில் கைகள் சில்லிட கண்ணீர் கொட்ட பார்த்தது! வெளியே புயல் மழை கொட்டி கொண்டிருக்க அதே புயல் அவள் மனதில் மையம் கொண்டிருந்தது! கார்த்திக் உன்னை நான் இழந்து விடுவேனா? அதை என்னால் தாங்க முடியுமா? வேண்டாம் கார்த்திக்… இந்த நினைப்பையே தாங்க முடியவில்லையே… ஐயோ… அந்த நிலையை நினைத்து பார்க்கவே முடியவில்லையே!
“அண்ணா… கடலூருக்கு எதுக்கு போயிருக்காங்க… தெரியுமா?” டிரைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலையை என்ன சொல்ல?
“கடலூர்ல புயலால ரொம்ப பாதிப்பு வந்துருச்சாம்மா… எப்போவுமே நம்ம அய்யா இந்த மாதிரி விஷயங்கள்ல முன்னாடி நிற்பார்… இப்போ கூட அந்த மக்களுக்கு சாப்பாடு… மருந்து… தற்காலிக வீடு எல்லாம் அமைச்சு தர்றது அய்யாதான்… பாண்டி, விழுப்புரம் எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஆள போட்டுட்டு… கடலூருக்கு அய்யாவே கிளம்பி போனார்ம்மா…” என்று அந்த ஓட்டுனர் விளக்கமாக கூற, அவளுக்கு தனக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்ற நினைப்பும் வந்தது! அதை உணர்ந்து அவர்…
“ஆர்டர் எல்லாம் அய்யாவோட பிஏ குடுத்துடுவாப்லமா… எல்லாருமே எல்லா நேரத்திலும் அலர்ட்டா இருக்கணும்ன்னு இந்த மாதிரி நேரத்துலன்னு எல்லாருக்குமே தகவல் போய்டும்… நம்ம கம்பெனில…” என்று கூறவும் அவளது கணவனை நினைத்து பெருமையாக இருந்தது! கார்த்திக் என் கணவன்… உன்னை இழக்க கூடாது கார்த்திக்… எனக்கு நீ வேண்டும்… உன்னுடைய காதலை சிறிதும் உணராமல் உன்னை தள்ளி வைத்த எனக்கு பெரிய தண்டனையை கொடுத்து விடாதே கார்த்திக்… ப்ளீஸ்! மனதுக்குள் மறுகினாள் திவ்யா!
“கொஞ்சம் பாஸ்டா போங்கண்ணா… சீக்கிரம்…” என்று பதட்டமாக அவள் கூறவும் கார் இன்னும் வேகம் பிடித்தது! அவள் செல்பேசியில் கார்த்திக்கை பிடிக்க முயன்று தோல்வி அடைந்து கொண்டே வந்தாள்! ஜிஎம் பிரகாஷை பிடிக்க முயன்றவளுக்கு அவரும் கிடைக்காமல் போகவே அடுத்து அவனது உதவியாளர்களுக்கு அழைக்க முயன்றாள்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் புயல் பாதிப்பு பணிகளுக்காக இருப்பதாக கூறவே… மனம் சோர்ந்தது! இன்னொரு முறை பிரகாஷுக்காவது அழைக்கலாம் என்று அளித்த போது…
“வணக்கம் மேடம்…” என்று லைனில் வந்தார்!
“சார்… அவர் பக்கத்துல இருக்காறா?” பதட்டமாக அவள் கேட்டதற்கு அவரும் பதட்டமாகவே…
“இருக்கார் மேடம்… இதோ குடுக்கறேன்…” செல்பேசி கரகரத்தது மழையில்! அப்போது பார்த்து அவள் போய் கொண்டிருந்த இடத்தில் டவர் ரிசெப்ஷனும் சதி செய்ய…
“சொல்லு திவ்யா…” என்று அவன் சொன்னது ஒன்றுமே கேட்கவில்லை!
“கார்த்திக்… ஹலோ…” என்று கேட்பதற்காக அவள் கத்த…
“ம்ம்ம் சொல்லு…”
அவன் பேசுவது கேட்காகாதது அவளுக்கு இன்னும் பதட்டத்தை அதிகப்படுத்த அதே நேரத்தில் அவர்களது கார் கடலூருக்குள் நுழைந்தது! செல்பேசி இணைப்பு விட்டு போனது!
“அண்ணா… எங்க இருப்பாங்கன்னு தெரியுமா?” டிரைவரிடம் கேட்க…
“காக்கா தோப்பு மண்டபம்ன்னு தான்ம்மா எங்களுக்கு சொன்னது… ஆனா அங்க இல்லாமலும் இருக்கலாம்… என்னோட போன்ல இருந்தும் கால் போக மாட்டேங்குதும்மா…” அவரும் கால் செய்து பார்த்து தோற்றார்! புயல் மழையின் பாதிப்பு! வழியெங்கும் மரங்கள் வேரோடு விழுந்து இருக்க கூரைகள் பியைந்தும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் பறந்தும் இருந்தன! வழியில் பார்த்த முந்திரி தோப்புகள் முற்றிலுமாக சேதமடைந்தும் வாழை தோப்புகள் இருந்த சுவடே இல்லாமலும் இருந்தன!
ஒரு வேளை அங்கு கார்த்திக் இல்லாமல் இருந்தால்… நெஞ்சு கூடே காலியாவது போல உணர்ந்தாள் திவ்யா! பதட்டத்தில் தலை சுற்றியது அவளுக்கு! காக்கா தோப்பில் அந்த மண்டபத்தை கண்டுபிடித்த போது அவன் இங்கே இருக்க வேண்டுமே என்று ஆயிரம் வேண்டுதல்களை மனதுக்குள் வைத்தபடியே காரில் இருந்து இறங்கினாள்… செல்பேசியில் அவனை அழைக்க முயன்றபடி! அவளது அழைப்பை அவன் எடுக்க…
“கார்த்திக் எங்க இருக்கீங்க?” பதட்டமாக அவள் கேட்டது அவனிடமும் பதட்டத்தை உருவாக்க…
“ஏன் திவ்யா… என்னாச்சு…”
“ஹய்யோ கார்த்திக்… எங்க நீங்க இருக்கீங்க… அதை முதல்ல சொல்லுங்க…” அவளுக்கு பொறுமை பறந்தது!
“கடலூர்ல காக்கா தோப்பு திவ்யா… ஏன் என்னாச்சு?”
“நான் வெளிய தான் இருக்கேன்… கொஞ்சம் வாங்களேன்… ப்ளீஸ்…” அழுதுவிடுபவள் போல அவனை அழைக்க, பேசி கொண்டே வெளியே விரைந்தான்! என்ன காரணமாக இருக்கும்… திவ்யா இந்த அளவு உணர்ச்சிவசப்படுகிற ஆள் இல்லையே என்று நினைத்தவாறே வந்தான்!
மழை கோட் அணிந்தபடி வெளியே வந்தவனை பார்த்த போதுதான் திவ்யாவுக்கு உயிரே வந்தது… ரோட்டின் ஒரு புறத்தில் இருந்து…
“கார்த்திக்…” நெஞ்சு நிறைய காதலோடும் கண்கள் நிறைய கண்ணீரோடும் அழைத்து அவனை நோக்கி போக, காத்திருந்த எமன் லாரி உருவில் கார்த்திக்கை நோக்கி விரைந்தான்… அசுர வேகத்தில்! ஒரு நிமிடம் முன்பே அந்த லாரியை கவனித்தவளுக்கு தலை சுற்றியது… அதீத பதட்டத்தில்…
“கார்த்திக்க்க்க்க்க்க்…” என்று கத்தி கொண்டு அவள் மயக்கமாகவும் லாரி அவனை நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது…
திவ்யா யாருமில்லா இருட்டுக்குள் பயணிக்க ஆரம்பித்து இருந்தாள்!

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!