அத்தியாயம் 4
“ஹாய் வைஷு… காலை வணக்கம்…” என்று ஆங்கிலம் பாதி தமிழ் பாதியெனச் சிரித்து கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு அன்றைய செய்தித்தாளைப் புரட்டினான் கார்த்திகேயன்!
“அண்ணா… என்ன இன்னைக்கு செம மூட்ல இருக்க… எது கேட்டாலும் கிடைக்கும் போல…” என்று வைஷ்ணவி அவனுக்குக் கலக்கிய காபியை கொடுத்துக் கொண்டே அவனைக் கிண்டலடிக்கும் வேளையில் இறங்கினாள்!
“ஹஹா அப்படி என்ன ஆத்தா கேக்க போற? ஹவாய்ல தீவா கேட்டுற போற?” பதிலுக்கு நக்கலடித்தவனை பார்த்துச் சிரித்து விட்டு…
“இப்படி எல்லாம் சொல்லித் தப்பிச்சுக்காத அண்ணா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தைகள் இரண்டும்…
“அம்மாஆஆஆ… இங்க வா…”
கேட்டுப் பதறி அவர்களிடம் ஓடிய வைஷ்ணவியும் கார்த்திகேயனையும் பார்தது… குதித்த கனிஷ்கர்…
“அம்மா… திவிக்காமா…” என்று கூறியவுடன் தான் அவளுக்கு உயிரே வந்தது!
“குட்டி பிசாசுங்களா… இதுக்கு தான் இந்தக் கத்து கத்துனீங்களா? இவ தினமும் தானே டிவில வர்றா… இப்போ என்ன புதுசா வர்ற மாதிரி… ஒரு நிமிஷம் ஹார்ட்டே நிக்கற மாதிரி…” வைஷு அவளது தினசரி லட்சார்ச்சனையை ஆரம்பித்தாள்!
“ஏய் வைஷு… என்ன செல்லம்ஸ போய்ப் பிசாசுன்னு சொல்ற? உன்னை அடி பிச்சுடுவேனாக்கும்…”
“ம்ம்ம்… நீ தன் மெச்சிக்கணும் இந்த வானரங்கள… இந்தத் திவி வந்ததுக்கு எப்படி கத்துதுங்க, குதிக்குதுங்க பாரு அண்ணா…” என்று குற்றபத்திரிக்கை வாசிக்க…
“அந்தத் திவி எங்க வந்து இருக்கா?” புரியாமல் கேட்ட கார்த்திகேயனை பார்த்து…
“இதோ அண்ணா… இவ தான் திவி… இதுங்களோட பிறாண்டு…” என்று தொலைக்காட்சியைக் காட்டி விட்டுப் பிறாண்டுவது போல நடித்த வைஷ்ணவியை பார்த்துச் சிரித்தான் கார்த்திகேயன்.
“ஏன் ரொம்ப பிறாண்டிடாளோ? ஹஹா… இப்படி நீயே அரிச்சுக்கற?”
“பின்ன… சுவரேறி குதிக்கறது… பைப் பிடிச்சுகிட்டு மாடிக்குப் போறது… நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்குச் சுடுகாட்டுல போய்த் தேவுடு காக்கிறது… இதெல்லாம் தான் இவ வேலை… இதை இப்போவே இதுங்களுக்கும் சொல்லிக் குடுத்தா எனக்குக் கோபம் வர்றாதா அண்ணா?” என்று சொல்லவும் கார்திகேயனால் சிரிப்பை அடக்க முடியவில்லை…
“அப்படீன்னா அது ஒரு வடி கட்டுன கிராக்னு சொல்லு…” நக்கலடிக்கவும்…
“இல்லண்ணா… நிறைய மூளை இருக்கு… அதே சமயம் அதே அளவு லூசுதனமும் இருக்கு… இன்வெஸ்ட்டிகேட் பண்றேன்னு ஏதாவது லூசுதனம் பண்ணிட்டு இருப்பா… நிஜம் என்ன அப்படீங்கற இந்த ப்ரோக்ராம இது தான் பண்ணுது…”
“அப்படீன்னா ஆம்பிளையா பிறக்க வேண்டியது தப்பி தவறி பொண்ணா பிறந்துட்டா… ரைட்டா?” என்று கார்த்தி சிரிக்கவும்…
“ஹய்யோ… இதே மாதிரி அவ இருக்கும்போது சொல்லிடாதன்னா… அவ்வளவு தான்… காதுல ரத்தமே வந்துடும்… அந்த அளவுச் சண்டை போட்டு உயிரை வாங்கிடுவா…”
“ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்ப போல இருக்கு… ஹஹஹா…” என்று கார்த்திகேயன் சிரிக்க…
“ஆமாண்ணா… கொஞ்ச நாள் முன்னாடிதான் பக்கத்து வீட்ட விலைக்கு வாங்கிட்டு வந்தாங்க… இவ அப்பா சாப்ட்வேர் கம்பெனி வெச்சுருக்காங்க அண்ணா… திவி டெக்னாலஜிஸ்”
“ஓ… அதோட எம்டி விகாஷ் தானே…”
“ஆமாண்ணா… இவ அண்ணன் தான்…”
“அவனை எனக்கு நல்லா தெரியுமே… அவனுக்கு இப்படியொரு லூசு தங்கச்சியா?”
“இதை மட்டும் அவ கேக்கணும்… அப்புறம் இருக்கு உனக்குக் கச்சேரி… அதுவும் இதோட டெயில் பீஸ் ஒன்னு இருக்கு… ரெண்டும் தான் அறுந்த வாலுங்க…”
“டெயில்பீஸா? ஹஹா யாரும்மா?”
“இதோட அத்தை பையன்… ஸ்ரீராம்… ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ற ஐடியால இருக்காங்க… ஆனா ரெண்டும் ஒரு இடத்துல இருந்தா… அவ்வளவுதான்… அந்த இடமே உருபட்டாப்ல தான்… இவ வேலை பாக்குறான்னு சொல்லியே அந்த நிலா டிவில அவனும் போய் ஜாயின் பண்ணி ரெண்டு சேர்ந்து இன்வெஸ்டிகேட் பண்றோம்ன்னு அலையுதுங்க…”
“ஆஹா கூடவே இன்னொரு லூஸா… சூப்பர் போ…”
“இந்த பீல்ட்ல ஏதாவது சாதிச்சே ஆகணும்னு ஒத்தை கால்ல நிக்கறா… அப்புறம் தான் கல்யாணமாம்… தினம் அவங்க அம்மா வந்து புலம்பித் தீர்த்துருவாங்க…” என்று கூறி விட்டு அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த, அது ஒரு செய்தி சேனல்… திவி என்று இந்நேரம் வரை வைஷ்ணவியால் லட்சார்ச்சனை செய்யப்பட்ட அந்த மிக அழகான லூசு தொலைகாட்சியில் ஒருவரை பேட்டி ! ஒரு துளி ஒப்பனை இல்லாமல் ஸ்டோன் வாஷ் ஜீன், டாப்ஸ் என்று மிகவும் சாதாரணமாக இருந்தவள் வித்யாசமாகத் தனது வெகுநீளமான முடியை ஒரு பட்டர்பளை க்ளிப்பில் அடக்கிக் கீழே வழிய விட்டு இருந்தாள்! அதுவும் அவளுக்கு வித்யாசமான தோற்றத்தை அழகை அள்ளித் தெளித்து இருந்தது!
“இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன அய்யா? இதுக்கு என்ன அவசியம் இருக்கு?” கேள்விகள் வரிசையாக அவளிடமிருந்து வர அந்த மனிதர் பொறுமையாக விடை அளிக்க ஆரம்பித்தார்!
“ஏனம்மா உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது, மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது, சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளைக் காலைத் திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது, நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்ஸ் நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?” கேட்டவரை பார்த்துச் சிரித்து விட்டு…
“அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி ருபாய் போட்டபிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?”
“பொண்ணே இந்தப் போராட்டம் ஒன்றும் நேற்றோ இல்லை இன்றோ தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு 1987ல் மீனவ கிராமங்களில் தொடங்கிய எதிர்ப்பில் ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது!”
“ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?”
“கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது… கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம். அதோடு யாரும் வசிக்காத பகுதியில் தான் அணு மின் நிலையம் அமைக்க வேண்டும் ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி. மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் மாநில சராசரியை விட அதிகம் வசிக்கிறார்கள் பெண்ணே… இது நமது மக்களை அழிக்க நாமே வகை செய்வது போல் அல்லவா…”
“ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறுமணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?”
“அப்படி இல்லையம்மா… இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள்! வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி ரூபாய் தான்.
அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி ரூபாய். ஆனால் அவை தருவது 2. 5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட் மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி ரூபாய் செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம். சுற்றுபுரத்துக்கும் கேடில்லாத முறை அதுதானே…”
“வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே! ஏன் அய்யா?”
“நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?”
“எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?”
“தாராப்பூர் அணு உலை தொடங்கியபோது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள்.
கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளைக் கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள்… சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?”
“அய்யா… முன்னாள் ஜனாதிபதி கலாம் கூட அணு உலைகள் நூறு சதவிதம் பாதுகாப்பானது என்றும் அணுக் கழிவுகளை எட்டாண்டுகள் வரை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும் என்றும் அணு மின்சாரம் தான் மிகவும் மலிவானது என்றும் கூறுகிறாரே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”
“இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசியஅரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற (Atomstroyeksport) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’.
அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு? அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை? மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?
அடுத்து கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் ரஷ்யா (ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது? அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டிலிருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்தக் கழிவு இரண்டு இலட்சம்ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்… இருபத்திஐந்தாயிரம் ஆண்டுகள் வரையிலாவது பாதுகாக்க வேண்டிய ஒரு பொருளை வெறும் எட்டு ஆண்டுகள் பாதுகாத்து விட்டு அதை நாம் என்ன செய்யப் போகிறோம் பெண்ணே? கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தானென அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?”
“நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?”
“நல்ல கேள்வி! கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது. அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய்பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. அணு உலையைச் சுற்றி ஐந்து கி. மீ. சுற்றளவுப் பகுதிகளில் அதாவது சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்… தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம்பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன.
தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும். இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் மறுக்கவில்லை பெண்ணே”
“இது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?”
“ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படியொரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்!”
“கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?”
“மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ. வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ. வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாதும்மா!”
“சரி… மாற்று தான் என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?”
“தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு மாற்றாக சி. எப். எல் விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ. வா. மின்சாரம் மிச்சமாகும். தமிழ்நாட்டில் கயத்தாற்றிலிருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ. வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இதுபோல் காற்றடிக்கும் கடற்கரை குஜராத் முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி. மீ. நீளத்திற்கு உள்ளது.
அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ. வா. மின்சாரம் பெற முடியும். இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி. மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை 4-5 கி. மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ச. கி. மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ. வா. மின்சாரம் பெற முடியும்.
நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச. கி. மீ பரப்பளவில் அதாவது 175000 மெ. வா சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும். இன்னும் குஜராத்தில் நீர் கால்வாய்களுக்கு மேல் சூரிய மின்சாரம் தயாரிக்க தகடுகள் பொருத்தப்படுகிறது… அதை நாமும் செயல்படுத்தலாமே… நீரும் ஆவியாகி வீணாகாது அதே சமயம் நமக்கும் மின்சாரம்… இது தானே புத்திசாலித்தனம்…”
“மிகவும் நன்றி அய்யா… உங்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”
“இது எங்களது போராட்டம் இல்லை பெண்ணே… நமது போராட்டம்… நமக்கான போராட்டம்… நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ள நாம் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்! அதைப் புரிந்து கொள்ளாத நமது மக்களே இந்தப் போராட்டத்தை எதிர்ப்பது தான் வேதனையம்மா… இந்தப் போராட்டத்தைக் குலைக்க அரசு பல வழிகளில் முயல்கிறது… அதற்கு நமது மக்களே துணை போவது சரியா பெண்ணே?”
அவரது கேள்விக்குப் பதில் கூற முடியாமல் ஒரு நிமிடம் தாமதித்த திவி…
“அய்யா… தர்மத்தை சூது கவ்வலாம் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்… இதுவே இன்னொரு வார்த்தையிலும் கூறலாம், கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்கு அய்யா… அரசாங்கமே எத்தனை பொய்களை அடுக்கினாலும் எல்லா நேரத்திலும் அது செல்லுபடியாகாது… பகலவனை கண்ட பனி போல அவைகள் காணாமல் போய் விடும்…”
நிகழ்ச்சியை முடிக்கும் வரை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன்…
“இதோட வேலையே இப்படி உளறிக்கிட்டு இருக்கறதுதானா வைஷு?”
“என்ன ண்ணா இப்படி சொல்ற? இதை மட்டும் அவ கேட்டான்னா அவ்வளவு தான்… சாமியாடிடுவா…”
“வைஷு… அது எப்படி வேணும்னாலும் ஆடட்டும்… இதெல்லாம் வேலை இல்லாதவங்க பண்ற வேலை… நமக்கெல்லாம் தலைக்கு மேல வேலை இருக்குடா… இந்த மாதிரி ஆளுங்கள முதல்ல நாடு கடத்தனும்… அப்போ தான் நாம உருப்படுவோம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க…
“சொல்லு அரவிந்த்…”
“கார்த்தி… நம்ம எத்தனால் லோட விழுப்புரம் செக் போஸ்ட்ல சீஸ் பண்ணி வெச்சு இருக்காங்களாம்…”
“வாட்… என்ன தைர்யம்? யார் சீஸ் பண்ணது?”
“சீஸ் பண்ணது விழுப்புரம் சர்கிள் கார்த்தி… ஆனா மதகடிப்பட்டு சர்கிள் தான் சேஸ் பண்ணி இருக்காப்ல… அதுல பயந்துகிட்டு நம்ம டிரைவர் விட்டுட்டு ஓடிட்டான்…”
“வாட் சேஸா? ஹொவ் டேர்? ஸ்பிரிட் லாரி தானே… சரி டெஸ்டிநேஷன் எது?”
“நம்ம கொச்சி பாக்டரிக்கு போன லாரிதான் கார்த்தி…”
“ம்ம்ம்… இரு நான் பேசறேன்… இவனுங்களுக்கு எல்லாம் துளிர் விட்டுடுச்சு… நம்ம மேல கை வைக்க எவ்வளவு தைரியம் இருக்கணும்… காசு காசுன்னு மட்டும் அலையுவானுங்க… ஆனா குடுத்த காசுக்குக் கொஞ்சமாவது நன்றி இருக்குதான்னா கிடையவே கிடையாது…” வேறென்ன குடுத்த லஞ்சத்தை கூறி கொண்டிருந்தான் கார்த்திகேயன்! கோபம் கொப்பளிக்க மதகடிபட்டு சர்கிள் இன்ஸ்பெக்டருக்கு அழைத்தான்!
“சார்… நான் விநாயகம் பேசறேன்…” பவ்யமாக வந்தது பதில்!
“என்ன விநாயகம்… புது புது வேலை எல்லாம் செய்துட்டு இருக்கீங்க? ம்ம்ம்… என்ன விஷயம்?” உறுமினான் கார்த்திகேயன்!
“சார்… ஒண்ணுமில்ல… அனுமதி இல்லாம…” அவர் சொல்ல வருவதற்குள் மறித்த கார்த்திகேயன்…
“அனுமதி பற்றி எனக்கு நீங்கச் சொல்லித் தரீங்களா? ம்ம்ம்ம்…” உறுமல் அதிகமானது!
“சார் அப்படி எல்லாம் இல்லை… அதுவும் இல்லாம மருந்தெல்லாம்…”
“விநாயகம் இதுக்கு மேல என்னைப் பேச வைக்காதீங்க… லாரிய ரிலீஸ் பண்ணுங்க…”
“அப்படீன்னா சார்… இது எல்லாமே உங்க ரிஸ்க் தானா…” அந்த விநாயகத்தின் குரலில் இருந்த அதிர்ச்சியை புரிந்து கொள்ளவில்லை கார்த்திகேயன்!
“யோவ் ரிலீஸ் பண்ணுங்கறேன்ல… என்ன வந்தாலும் எனக்குப் பார்த்துக்க தெரியாதா? உன் வேலைய பாரு…”
“ஓகே சார்…” சொங்கி போன குரலில் அவர் செல்பேசியை வைக்க… அத்தனையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது கேமரா கண்கள்!
அத்தியாயம் நான்கு
“ஏய் அறிவு கெட்ட முண்டம்… இங்க ஷூட் பண்ண சொன்னா எங்கடா பண்ணிட்டு இருக்க? ச்சே போயும் போயும் உன்னைக் கூட்டிட்டு வந்தேன் பாரு… என் புத்திய…” ஸ்ரீராமிடம் பொரிந்து கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி!
“இது வேண்டுமா திவி?” என்று தான் அணிந்திருந்த ஷூவை எடுத்துக் காட்டிய ஸ்ரீராமை பார்த்து…
“நீ இவ்வளவு பரந்த மனசோட இருப்பன்னு நான் நினைக்கில… குடு குடு… என்னோடத நான் எதுக்கு வேஸ்ட் பண்ணனும்…” என்று வாங்க போக…
“விட்டா பண்ணிடுவ ராட்சசி…” என்று அவளது தலையில் நங்கென்று கொட்டினான் ஸ்ரீராம்!
“எருமை மாடு ஏன்டா கொட்டி தொலையற… வலிக்குது…” என்று கொண்டே இருட்டில் தேட அவளது கைக்குக் கிடைத்தது ஒரு குச்சி. எடுத்துப் படீரென்று ஸ்ரீராமை ஒரு அடி அடிக்கத் துள்ளி கொண்டு திரும்பியவன்…
“பிசாசு அறிவே இல்லையா உனக்கு… ஏன்டி டிஸ்டர்ப் பண்ணி தொலையற… நான் வீக் என்ட்ட சூப்பரா அத்தையோட சாப்பாட்டோட கொண்டாடி இருப்பேன்… பாண்டிச்சேரின்னு சொல்லவும் கொஞ்சம் ஜொள்ளு விட்டுட்டு வந்துட்டேன்… இப்போ இப்படி தனியா புலம்ப விட்டுட்டாளே!” புலம்ப ஆரம்பிக்கவும்…
“டேய் ஸ்ரீராமா சாப்பாட்டு ராமா… உன்னை யார்டா இங்க அழைச்சாங்களாம்… நீயா என் கூட தொத்திகிட்ட… பிரெஞ்சு பீச் ஆசைல… இப்ப புலம்பி புண்ணியமில்ல அசட்டு ராமா” என்று சிரிக்கவும்…
“சொல்லுவடி… இன்னமும் சொல்லுவ… பிசாசு… சென்னைல இருந்து பாண்டிச்சேரிக்கு இன்வெஸ்ட்டிகேஷன் மண்ணாங்கட்டிபிகேஷன்னு கடத்திட்டு வந்துட்டு…”
“ஆமா நீ பெரிய மன்மதனாக்கும்… உன்னை போய் கடத்தி நான் என்னடா பண்ண போறேன்… அட்லீஸ்ட் இந்த கம்பெனி ஓனர கரெக்ட் பண்ணினாலும் பரவால்ல… ச்சே ச்சே… ஓவரா திங்க் பண்ணாத… இருக்கற ரெண்டு கிராம் மூளையும் உருகிடும்…” என்று தலையை சிலுப்பி கொண்டு சொல்லவும் அவளது முதுகில் ஒரு அடி வைத்த ஸ்ரீராம்…
“உனக்கு ஒன் கிராம் மூளை கூட இல்ல ஆத்தா… மூளையே இல்லாத ஒரு மனிதப்பிறவின்னா நீ தான்! இங்க பாரு திவி… மச்சான பகைச்சுக்காத… அய்யாவோட வால்யு உனக்கு இன்னும் தெரியல…” என்று ஸ்ரீராம் காலரை தூக்கி விடவும் முதுகை தடவி கொண்டே சுற்றி முற்றி பார்த்தாள் திவி…
“என்ன பார்க்கற?”
“இல்ல யாராச்சும் வேலிடேட்டேர் இருக்காங்களான்னு தான்… உன்னோட வால்யுவ அளக்க தான் ஸ்ரீ…” என்று சிரிக்காமல் நக்கலடித்து அவனது முதுகில் மறுபடி அடிக்கவும் திரும்பிய ஸ்ரீராம்…
“நம்ம வால்யு எல்லாம் அளக்க ஆளே கிடையாது… இதெல்லாம் எப்படி உனக்கு தெரிய போகுது? நீ தான் ஒரு தத்தி ஆச்சே!” வலுவாக அவளது தலையில் கொட்டினான்…
“சனியனே… ஏன்டா இப்படி கொட்டி தொலைக்கற… எருமை எருமை… உயிரே போகுது…” தலையை தடவி கொண்டே கொஞ்சம் சத்தமாக கூறியவளை முறைத்து பார்த்தான் ஸ்ரீ!
“இப்படியே உன் செங்கல் கால வாயை ஓபன் பண்ணி வை… சொன்னாலும் சொல்லாட்டாலும் நம்ம ரெண்டு பேரோட உயிர் போய்டும்… அறிவு கெட்ட கூமுட்டை… வாயை மூடி தொலை… இல்லைன்னா நாம இப்ப பண்ணிட்டு இருக்கற வேலைக்கு மாட்டினா அவ்வளவுதான்! இது தி கிரேட் கார்திகேயனோட கோட்டை… அதை ஞாபகம் வெச்சுக்கோ…”
“ஆமாம்ல…” என்று அப்போதுதான் உணர்ந்தது போல தலையை தட்டி கொண்டு தேட வந்ததை தேட ஆரம்பித்தாள்!
“ஸ்ரீஈஈஈஈஈஈ…” எதையோ பார்த்தவள் ஸ்ரீராமை பார்த்து கத்த…
“என்ன திவி…” அவசரமாக திரும்பினான்!
“ஐ காட் இட் மேன்!” அவளது கண்களில் தெரிந்த ஒளி பெருமையாய் ஒளிர்ந்தது! திவ்யாவின் கைகளில் ஒரு டைரி! புரட்டியவர்கள் வயிற்றை கலக்கியது! ஏனென்றால் கார்த்திகேயன் இன்னின்ன தேதிகளில் இன்னாருக்கு எல்லாம் எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுத்தான் என்பதை அக்குவேறு ஆணிவேராக எழுதி இருந்தான்! பார்த்ததும் இருவருமே துள்ளி குதித்தனர்!
“ஹே மக்கு… செம மாட்டு மாட்டி இருக்கு… சூப்பர் ஸ்கூப் செல்லம்… அசத்திரலாம்ல…” ஸ்ரீராம் சந்தோஷத்தில் குதித்தான்!
“பின்ன… யாரோட கைங்கர்யம் இது… தி கிரேட் திவ்யா… அதை ஞாபகம் வெச்சுக்கோ மக்கு மாமா…”
“ஓகே ஓகே… வெயிட்… யாரோ வர்ற மாதிரி தெரியுது திவி… சைலன்ஸ் பா…”
சொன்ன மாதிரி இருவர் ஒரு பார்சலை சுமந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தனர்! வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தவர்கள் பிரித்து சிறு சிறு பையில் அடுக்க ஆரம்பித்தனர்! இந்த இரவில் இவர்களுக்கு என்ன வேலை, இங்கே? என்று புரியாமல் திவ்யாவும் ஸ்ரீராமும் அவர்களை சத்தம் போடாமல் கவனித்து கொண்டிருந்தனர்! திடீரென்று பூனை கத்தும் சத்தம் கேட்க என்னவென்று பார்பதற்கு ஒருவன் எழுந்து போக பின்னர் இன்னொருவனின் செல்பேசி அழைக்க அவனும் போக அவசரமாக அந்த பார்சல் இருக்கும் இடத்திற்கு ஓடிய ஸ்ரீராம் அதில் இருந்து இரண்டு வேறு வேறு பொட்டலங்களை எடுத்து கொண்டு வந்து அவசரமாக ஒளிந்திருந்த இடத்துக்கு வந்து நின்று கொண்டான்! குண்டூசி விழும் சப்தம் கூட கேட்க்கும் போல இருந்தது அந்த இடத்தின் அமைதி! நேரம் போய் கொண்டிருக்க அந்த இருவரும் அவர்களது வேலையை பார்த்து கொண்டிருந்தனர்! விடிவதற்கு சிறிது நேரம் இருக்கும் போது வந்தவர்கள் விட்ட வேலையை தொடர்ந்து சிறு சிறு பைகள் ஆக்கினர்… அதை ஒரு பெரிய பையில் போட்டு கொண்டு வெளியே இருந்த ஒரு கண்டைனர் லாரியில் ஏற்றி கொண்டனர்! இப்போது ஸ்ரீராம் கையில் அந்த இரண்டு பொட்டலங்களும் இருக்க…
“ஹே ஸ்ரீ… சீக்கிரம் வா…” திவ்யா அவனை அவசரப்படுத்தினாள்! அவசரமாக வேறு வழியாக வெளியே வந்த இருவரும் மறைவாக நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி அந்த லாரியை தொடர்ந்தனர்! வெளியே விடிந்து கொண்டிருந்தது! இரவு முழுவதும் சிறிது கூட தூக்கம் இல்லாமல் அங்கே ஆராய்ந்த களைப்பே இல்லாமல் இரண்டு ஜீவன்களும் அந்த லாரியை துரத்தி கொண்டு சென்றனர்!
மதகடிப்பட்டு வழியாக ஹைவேவில் பறந்தது அந்த லாரி! விடாமல் துரத்தி கொண்டு ஓட்டினான் ஸ்ரீராம்! பின்னால் அமர்ந்து இருந்த திவ்யா அதை அப்படியே கேமராவில் சுருட்டி கொண்டிருந்தாள்!
வேகமான குளிர்காற்று முகத்தில் அறைய ஒட்டிகொண்டிருந்த ஸ்ரீராமின் மனதிலும் திவ்யாவின் மனதிலும் ஒரே எண்ணம் தான்…
“நாம் தேடி வந்த பிரச்சனை மிக பெரியது”
விழுப்புர செக்போஸ்ட் நெருங்கி கொண்டிருந்தது! மதகடிபட்டில் இருந்தே இன்னொரு ஜீப்பும் அந்த லாரியை தொடர்ந்து கொண்டிருந்தது! கண்டிப்பாக அது ரோந்து வாகனம் தான் என்பது இருவருமே அறிந்தது தான் பின்னால் தொடர்ந்து போனால் கண்டிப்பாக ஏதாவது விஷயம் கிடைக்கலாம் என்பது உறுதியாகியது இருவருக்குமே!
திடீரென்று விழுப்புர செக் போஸ்டில் அந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர் அந்த சரக போலீஸ்! ரோந்து வாகனங்களும் முன்காலை நேரத்தில் அந்த இடத்தை கடக்கும் வாகனங்களும் மட்டுமே இருக்க இன்ஸ்பெக்டர் அந்த லாரியை நிறுத்த சொல்லி கையை காட்ட… யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அந்த லாரியில் இருந்தவன் குதித்து தப்ப முயல… அவனை இரண்டு பேர் துரத்தி கொண்டு சென்றனர்!
லாரியை சோதனையிடுவது ஆரம்பித்தது! இவற்றையெல்லாம் சற்று தூரம் தள்ளி நின்று கொண்டு க்யூவில் இருந்த வாகனங்களுக்கிடையே இருந்து படமாக்கி கொண்டிருந்தாள் திவி! இருவருக்கும் உச்சபட்ச பதட்டம்! உண்மையில் அவர்கள் தேடி வந்த பிரச்சனை வேறு! இங்கே நடந்து கொண்டிருக்கும் வேறாக அவர்களுக்கு தோன்றியது! ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொண்ட திவி…
“ஸ்ரீ முன்னாடி போ… அந்த இன்ஸ்பெக்டர் கிட்டக்க போ…”
“வேணாம் திவி… பார்த்துடுவாங்க…” என்று சொல்லி கொண்டு திரும்பிய ஸ்ரீராம் அவள் ஹெல்மெட் அணிந்து இருப்பதை பார்த்து புன்னகைத்து கொண்டு முன்னே சென்றான்! அது வெறும் ஹெல்மெட் இல்லை… ஸ்பை கேமரா பொருத்துத்தபட்ட ஹெல்மெட். அதற்கான விசை அவளது கையில் இருந்தது… உடனடியாக ப்ளூடூத் மூலமாக எந்த படிவத்திற்க்கும் மாற்றி கொள்ள கூடியது! அதை அணிந்து கொண்டு முன்னே சென்றால் அவர்கள் பேசுவதையும் பதிவு செய்யலாம் அல்லவா… திவியின் இந்த யோசனை வெற்றிகரமாக செயல்பட கார்த்திகேயன் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேசிய அனைத்தையும் பதிவு செய்தாள்! அவனிடம் பேசிவிட்டு வைத்த இன்ஸ்பெக்டர் உடனே இன்னொரு போன் செய்தார்!
“சார் நான் விநாயகம் பேசறேன்…”
“சொல்லுங்க விநாயகம்…”
“சார்… இங்க கார்த்திகேயன் சார் லாரி ஒன்னு… செக்போஸ்ட்ல நிற்குது…”
“ஏன் நிற்குது விநாயகம்… அனுப்ப வேண்டியதுதானே?”
“சார்… இல்ல…” என்று தயங்கி விட்டு, “ஸ்பிரிட் கண்டைனர செக் பண்ணினதுல முன்னாடி கொஞ்சம் நார்கொடிக்ஸ் கிடைச்சு இருக்கு!”
“வாட்… என்ன கிடைச்சு இருக்கு?” அந்த குரலில் அதீத அதிர்ச்சி!
“எல்எஸ்டி, ரோஃபினால், அப்புறம் ஜிஎச்பி சார்… எதுக்குமே சிபோரம் கூட இல்ல… பெர்மிஷன் லெட்டரும் இல்ல… கார்த்திகேயன் சார் கிட்ட சொல்ல ஆரம்பிக்கும் போதே குதிக்கறார்… ஆனா இது சின்ன பிரச்சனை இல்லையே… அதனால தான் சார் உங்க கிட்ட ஒபினியன் கேக்கலாம்னு போன் பண்ணினேன்!”
சிறிது நேரம் யோசித்த கமிஷனர்…
“விட்டுடுங்க விநாயகம்… சப்போஸ் நாம கைய வெச்சா சிஎம்ல இருந்து எல்லாரும் தலையிடுவாங்க… இது பெரிய இடத்து விவகாரம்… வேணாம்… விட்டுடுங்க…”
“ஆனா ஏதாவது பிரச்சனை வந்தா?”
“அப்போ பார்த்துக்கலாம் விநாயகம்…”
“ஓகே சார்…”
போனை வைத்து விட்டு சிறிது நேரம் யோசித்த விநாயகம்…
“ச்சே… எதுக்கு தான் இந்த வேலைக்கு வந்தேனோ? இந்த கார்த்திகேயன் மாதிரி மொள்ளமாரிங்களுக்கு சேவகம் செய்ய வேண்டி இருக்குதே… இவனுங்களுக்கு தேவை பணம்… இந்த போதை மாத்திரை எத்தனை பேரோட வாழ்க்கைய நாசம் செய்றதுக்கோ? கடவுள் தான் காப்பாத்தணும்…” புலம்பி கொண்டே அந்த கண்டைனர் லாரியை விடுவித்தார்!
இவை அத்தனையும் தனது ஹெல்மெட் கேமரா மூலம் படமாக்கி கொண்டிருந்த திவிக்கு மனம் கொதித்தது! வைஷ்ணவி அண்ணிக்கு இப்படி ஒரு அண்ணனா?
“கார்த்திகேயா உன்னுடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏற போகிறது!” மனதிற்குள் சூளுரைத்து கொண்டாள்!
“ஸ்ரீ… அப்படீன்னா நம்ம கைல இருக்கற அந்த ரெண்டு பேக்கட்டும் அந்த போலிஸ்காரர் சொன்ன மாதிரி எல்எஸ்டி அண்ட் அதர் நார்கொடிக்ஸா?” வண்டியை ஒட்டி கொண்டிருந்த ஸ்ரீராமிடம் கேட்க…
“கண்டிப்பா அப்படித்தான் இருக்கும் திவி! என்னன்னு முழுசா இறங்கி பார்த்துடலாம்…” அவனது வண்டி மறுபடியும் பாண்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது!
“ஏண்டா மறுபடி பாண்டி போற? இப்ப இந்த வீடியோவ டெலிகாஸ்ட் பண்ண வேண்டாமா? நாம சென்னை போகணும் ஸ்ரீ…”
“இல்ல திவி… இப்போதைக்கு இந்த வீடியோவ இப்போ ரிலீஸ் பண்ணா உஷார் ஆய்ட மாட்டாங்களா அந்த க்ரூப்?”
“ம்ம்ம் ஆமா…”
“அதனால முழுசா, அப்படி முடியலைன்னா இன்னும் கொஞ்சமாவது இன்வெஸ்ட்டிகேட் பண்ணிட்டு ஆதாரங்கள சேகரிச்சிட்டுதான் இதை வெளியிடனும் திவி!”
“அதுவும் கரெக்ட்தான் ஸ்ரீ… அப்படியே பண்ணிடலாம்…”
“அதிசயம் தான் போ… என்னோட கருத்த நீ ஒப்புக்கற? எங்க இருந்து மழை வர போகுதுன்னு தெரியலியே ஆத்தா?” என்று கூறியவனை தலையை பிடித்து மாவாட்டுவது போல் ஆட்ட…
“ஏய்… சனியனே… முடியை விட்டு தொலை… நீ ஆட்டுற ஆட்டுல என் முடி எல்லாம் உன் கைக்கு வந்திடும் போல இருக்கே… அப்புறம் நான் கல்யாணத்துல சொட்டைதலையோட தான்டி நிற்கணும்…” வண்டியை ஒட்டிகொண்டே அலறினான்!
“எனக்கு ஓகே தான்டா மாமா… டோன்ட் ஒர்ரி… நீ சொட்டைமண்டையா இருந்தாலும் உன்னை நான் காலம் முழுக்க கண்கலங்காம வைச்சுக்கறேன்!” என்று நக்கலாக கூறி விட்டு சிரித்தவளை கண்ணாடி வழியாக பார்த்து சிரித்தவன்…
“சாஹித்யாக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தானப்பா… என்ஜாய் ஸ்ரீராம் என்ஜாய்… கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?” என்று ஏற்ற இறக்கத்தோடு கூறிவிட்டு சிரிக்க…
“படவா… உனக்கு இப்படி வேற ஆசை இருக்கா… மவனே நீ இன்னைக்கு தொலைஞ்சடா…” என்று நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டு…
“இந்தா பிடி… யாரோ உன்கிட்ட பேசணுமாம்…” ஒட்டி கொண்டிருந்தவனிடம் செல்பேசியை குடுக்க திரையை பார்த்தால் சாஹித்யா சிரித்து கொண்டிருந்தாள்!
“ஹாய் சகி… சொல்லுடா…” வண்டியை ஒட்டி கொண்டே காதுக்கு கொடுத்தவன்…
“மவனே… ரெண்டு லட்டு திங்க ஆசையா இருக்கா?” கேள்வி வந்து விழுந்த வேகத்தில் அரண்டவன் அப்படியே அவனது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கெஞ்ச ஆரம்பித்தான்!
“ஹய்யோ சகி… நீ அரையும்குறையுமா கேட்டு இருக்கடா… அது இல்ல அர்த்தம்…”
“அப்புறம் வேற என்னவாம்? அதுல மோடுலேஷன் வேறயா? உனக்கு அவ்வளவு கொழுப்பு ஏறி போச்சா? உன் முகரைக்கு நானே அதிகம்… உனக்கு இன்னொன்னு கேக்குதா?”
“டேய் சகி… இந்த லூசு ஏதாவது சிண்டு முடிஞ்சு விட்டுட்டான்னு நீயும் இப்படி சண்டை போடுற? இங்க அந்த எருமை ஜாலியா உக்கார்ந்துட்டு இருக்கா… ஏய் பிசாசு… எப்போ போன் பண்ணி தொலைச்ச?” அவளிடம் கெஞ்சி கொண்டே திவியை பார்த்து கடித்தான்!
“ஏன் அவளை திட்ற? நீ பண்ற லொள்ளுதனத்துக்கு அவ பாவம் என்ன பண்ணுவா?” தனது தோழியை விட்டு கொடுக்காமல் அதற்கும் சண்டை போட…
“என்னது இந்த எருமை பாவமா? சகி… வேணாம்… உனக்கு நேரம் சரி இல்லை… இது தான் என்னை இங்க இழுத்துட்டு வந்து இப்போ உன் கிட்டயும் மாட்டி விட்டுட்டு அப்பாவி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டுட்டு இருக்காடா… நாம நேர்ல பேசிக்கலாம் சகி…”
“நேர்ல என்ன பேச போற? என்னமோ பிரெஞ்சு பீச் போக போறேன்னு சொன்னியாம்ல… அங்கேயே போய் இருந்துக்கோ… சென்னை பக்கம் அதுவும் நிலா டிவி பக்கம் வந்துடாத…”
“ஐயோ… இந்த கொள்ளிவாய் பிசாசு இப்படி எல்லாம் வேற போட்டு குடுத்து இருக்காளா? சகி… என்னை பத்தி உனக்கு தெரியாதா? நீ இருந்தா உலக அழகி பக்கத்துல இருந்தா கூட நான் திரும்பவே மாட்டேன்…”
“நான் இல்லாததுனாலதான் அங்க கண்டபடி சைட் அடிச்சுட்டு இருக்கியா?”
“ஐயோ… நானா சைட்டா… சைட் அடிக்க இங்க யாருடா இருக்கா?”
“டேய் என்னை கடுப்பேத்தாத… வளைச்சு வளைச்சு திவிய சைட் அடிச்சியாம்ல… அதையும் பண்ணிட்டு இப்படி வேற பேசறியா?”
“யார? போயும் போயும் இந்த பிசாசையா? சகி… சொல்றதே சொல்ற ஒரு பொண்ணா பார்த்து சொல்ல கூடாதா?” என்று அவளிடம் நொந்து போய் கூறவும் அது வரை சிரித்து கொண்டே அவனது கெஞ்சல்களை பார்த்து கொண்டிருந்த திவி…
“ஏன்டா கோட்டான்… என்னை பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலியா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?” அவனது தலை முடியை பற்றி மாவாட்டியவள் முடியை பிடித்து இழுத்து கொண்டே கேட்க…
“ஐயோ… என்னை காப்பாத்த யாருமே இல்லையா? தனியா இருக்கற ஒரு கன்னி பையன இப்படி ரெண்டு மோகினி பிசாசுங்க கொடுமை பண்ணறாலுங்களே…”
அதை கேட்டு சிரித்த திவி கொஞ்சம் சத்தமாக…
“சகி… போதும்… இன்னிக்கு கோட்டா ஓவர்… பாவம் பையன் அழுகிறான்… நாளைக்கு மிச்சத்த வெச்சுக்கலாம்…” என்று கூறவும் அந்த பக்கம் சாஹித்யா சிரிப்பதை கேட்டு…
“அடப்பாவிகளா! ரெண்டு பேரும் சேர்ந்து கலாய்ச்சுட்டு இருக்கீங்களா? ச்சே ச்சே பசங்கள ரேக் பண்ற பொண்ணுங்கள எங்க போய் கம்ப்ளைன்ட் பண்றது? ஆண்களுக்கு கண்டிப்பா ஒரு சங்கம் வைக்கணும்…”
“ஓகே நல்லா வை… ஒன்னே ஒன்னு சகின்னு பக்கத்துல வந்துர மாட்டில்ல… அப்போ பார்த்துக்கறேன்…” சாஹித்யா அவனது வீக் பாயிண்ட்டை தொட…
“ஹய்யோ… செல்லம்… பட்டு… குட்டி… நான் எப்படா குட்டி அப்படி சொன்னேன்… சும்மா லுளுளாய்கி…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே…
“டேய் நல்லவனே… உன்னோட மிட்நைட் மசாலாவ ஸ்டாப் பண்ணு… இங்க ஒரு பச்ச புள்ள இருக்கறத மறந்துருவீங்களே ரெண்டு பேரும்…” என்று கூறவும் சிரித்து கொண்டே செல்பேசியை வைத்தான் ஸ்ரீராம்!
இவர்கள் மூவரும் இப்படித்தான்! தன்னுடனே வளர்ந்த காரணத்தால் அவளை தனது அத்தை மகள் என்பதை தான்டி மிக நெருங்கிய சிநேகிதியாகத்தான் பார்த்தான் ஸ்ரீராம்! அதைவிட அவளை பெண்ணாக பார்த்ததே இல்லை என்று தான் கூற வேண்டும்! ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் யோசிக்க கூட மாட்டார்கள்… எங்கே போனாலும் இருவரும் சேர்ந்தே தான் போவார்கள்! ஒருவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இன்னொருவர் விட்டு தரவே மாட்டார்கள்! அவளது தோழி ஸ்ரீராமை காதலிப்பதை அறிந்து அவனிடம் முதலில் கூறியவளும் திவ்யாதான்! திவ்யாவின் எண்ணங்களும் ஸ்ரீராமின் எண்ணங்களும் மிக சரியாக ஒரே கோட்டில் தான் இருக்கும். அவள் நிலா டிவியில் சேர்ந்த போது அவளுக்கு பாதுகாப்புக்கு மட்டுமில்லாமல் அவனுக்கும் மிகவும் பிடித்தே இந்த துறைக்கு வந்தான்! இவர்கள் இருவரின் இப்போதைய குறிக்கோள் அவர்களது நிகழ்ச்சியை முதலிடத்தில் தக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் வருங்காலத்தில் ஒரு செய்தி நிறுவனம் ஆரம்பிப்பது தான். இவர்களின் தோழமையை உயிருக்கு உயிரான சிநேகிதத்தை முழுமையாக புரிந்து அங்கீகரித்து அதனாலேயே ஸ்ரீராம் மேல் உயிரானவள் சாஹித்யா! திவ்யாவின் இன்னொரு உயிர் தோழி!
யோசனையாக இருந்த திவ்யாவை பார்த்து ஸ்ரீராம்…
“என்னடா… என்ன யோசனை?”
“இல்ல ஸ்ரீ… ஒரு ஐடியா…” தயங்கினாள்!
“ம்ம்ம்… சொல்லுடா…”
“நாம கார்த்திகேயன நேர்ல பார்த்தா என்ன?”
“வாட்…” அவனது குரலில் இருந்த அதிர்ச்சி அவன் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை தெரிவித்தது!
“ஆமா ஸ்ரீ… அவன் அப்படி அவன் இப்படின்னு மற்றவங்க சொல்றத நாம ப்ரோக்ராம்ல சொல்றதுக்கு பதிலா அவனை நேர்லயே பார்த்தா என்ன ஸ்ரீ?”
“சொல்றது கரெக்ட் தான்டா… ஆனா அவன் ரொம்ப டேஞ்சர்ப்பா… கிட்டத்தட்ட இங்க தாதா மாதிரியாம் திவி… நம்ம நோக்கம் தெரிஞ்சா நாம அவ்வளவுதான்… அதை புரிஞ்சுக்கோ…”
“புரியுது ஸ்ரீ… ஆனா நம்ம வைஷ்ணவி அண்ணி இருக்காங்களே… அவங்களை பார்க்க போற மாதிரி போலாம்… போனதுக்கப்புறம் ஏதாவது ஸ்கூப் கிடைக்குதான்னு பார்க்கலாம் ஸ்ரீ… எப்படி இது ஓகே வா?”
“வாவ்… ஆமாம்ல… வைஷுக்கா அண்ணன் தானே கார்த்திகேயன்… ச்சே அதை நான் மறந்துட்டேன்…”
“இதுக்கு தான் ஸ்ரீ கிட்னி இங்க இருக்கணும்… ’ என்று தலையை காட்டவும்…
“ஹஹா… நிஜமாவே உனக்கு அங்க கிட்னி தான் இருக்கு… பிரைன் கிடையவே கிடையாது…” என்று தலையில் தட்டி விட்டு சிரித்தான்!
“ஆமா நீ என் கூட இருக்கும் போது எனக்கு எப்படிடா இருக்கும்…”
“ஆமாம்டி… அதான் உனக்கும் சேர்த்து ஆண்டவன் எனக்கு அதிகமா பிரைன வச்சு படைச்சுட்டானே…”
“டேய் ஓவரா ஆடாத… அடங்கிடுவ…
-The Argument continuesssssss…

அணு உலைகள் பத்தின விளக்கம் அருமை