அத்தியாயம் 5
பிள்ளைகள் இருவரும் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க வைஷு அவர்களுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தாள்! என்றுமே மங்கைக்கு குழந்தைகளை வேலை செய்பவர்களின் பொறுப்பில் விடுவது பிடிக்காத ஒன்று! அவர்களுக்கான எந்த வேலையாக இருந்தாலும் ஒன்று மங்கையோ அல்லது வைஷ்ணவியோ தான் செய்து பழக்கம்! வெட்டியாக அழகு நிலையத்துக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் குழந்தைகளை வேலைகாரர்களின் பொறுப்பில் விடும் பெண்களை கண்டாலே வெறுப்பவர் மங்கை! அதே பழக்கம் தான் அவரது பிள்ளைகளுக்கும்… வைஷ்ணவியின் செல்பேசி இனிமையாக கூவியது!
“ஹாய் அண்ணி… எப்படி இருக்கீங்க?”
“ஹே வாலு… என்ன அதிசயம்? இந்நேரத்துக்கு அதுவும் சண்டே… படுக்கை அவ்வளவு சீக்கிரமா விட்டுடுச்சா உனக்கு?”
“ஹலோ… என்ன… நீங்க தான் சீக்கிரம் எழுந்துப்பீங்களா? நாங்க என்ன அவ்வளவு சோம்பேறியா?”
“சரி சரி… காலைலேயே உன் கிட்ட வம்பு வேணாம்… சொல்லுடா… என்ன விஷயம்?” தானாக சரண்டர் ஆனாள் வைஷ்ணவி… தன்னை விட வயதில் சிறு பிள்ளையிடம் எதற்கு வாக்குவாதம் என்று!
“உங்க ஊர்ல மணக்குள விநாயகர் கோயிலுக்கு எப்படி போறது? நாங்க இப்போ இந்திரா காந்தி சிலை கிட்ட இருக்கோம்… ரூட் தெரியல அண்ணி…” இப்படி கேட்கவும், அடப்பாவி என்பதை போல் பார்த்தான் ஸ்ரீராம்! இப்படி ஒரு ரூட் இருக்கா அவங்க வாயாலேயே வீட்டுக்கு கூப்பிட வைக்க என்று ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க…
“அட திவி… பாண்டிலையா இருக்க? நானும் இங்க தாண்டா இருக்கேன்…” சந்தோஷமாக அப்பாவியாக வைஷ்ணவி கூற…
“அதுதான் எனக்கு தெரியுமே…” என்று மனதில் நினைத்தவாறு…
“ஹை அண்ணி… நீங்களும் இங்க தான் இருக்கீங்களா? அண்ணன் அழைச்சுட்டு வந்தாங்களா?” ஒன்றுமே தெரியாதவள் போல விசாரிக்க…
“அடங்கொக்கா மக்கா… இது உலக மகா நடிப்புடா சாமீ…” என்று ஸ்ரீராம் நக்கலாக சிரித்து கொண்டே வாயசைத்து திவியை பார்த்து கண்ணடிக்க அவளும் ஒன்றுமே தெரியாதவள் போல ஒரு லுக் விட்டு விட்டு வைஷ்ணவியிடம் பேச்சை தொடர்ந்தாள்!
“இல்லடா இங்க ஒரு விசேஷம்… அண்ணனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு… அதுக்கு சேலை எடுக்கற பங்க்ஷனுக்கு வந்தேன்… நீ அங்கேயே வெயிட் பண்ணு… டிரைவர அனுப்பறேன் திவி…” அவளுக்கு சந்தோஷத்தில் குதிக்க தோன்றியது! ஆஹா பழம் நழுவி பால்ல விழுதுடா… என்று நினைத்தவாறே…
“ஹய்யோ அண்ணி… வீட்டுக்கு இன்னொரு நாள் வரேன் அண்ணி… இப்போ நானும் ஸ்ரீயும் வேலை விஷயமா வந்து இருக்கோம்…”
“மூச்… ஒன்னும் சொல்லாத… ஒழுங்கா வீட்டுக்கு வந்துட்டு நீ எந்த வேலையா இருந்தாலும் பார்க்க போகலாம்… மீறி பேசுன அத்தைக்கு தான் போன் பண்ண போறேன்…”
“ஹய்யோ வேணாம் வேணாம்… சரி அண்ணி நாங்க வரோம்… ஆனா டிரைவர் எல்லாம் வேணாம்… வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க… நாங்களே வந்துக்கறோம்…” என்று கூறி முகவரியை வாங்கி கொண்டு செல்பேசியை வைத்தாள்!
“உப்ப்ப்ப்…” இல்லாத காலரை தூக்கி விட்டு திவி சிரிக்க…
“மகராசி… உனக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்… என்ன நடிப்பு என்ன நடிப்பு… கமல் தோத்துடுவார் போல இருக்கே…” ஸ்ரீ நக்கலடிக்க…
“எப்பூடி…” என்று சிரித்தாள் திவி!
***
“யார் கண்ணா போன்ல?” மங்கை கேட்க…
“திவிதாம்மா… பாண்டி வந்திருக்காளாம்… மணக்குள விநாயகர் கோயில் போகணுமாம்… வழி கேட்டா… நான் தான் வீட்டுக்கு வான்னு சொன்னேன் மா…” அப்பாவியாக சொன்ன வைஷுவை பார்த்து கார்த்திகேயன்…
“சென்னைல இருந்து பாண்டி வர தெரியுது… மணக்குள விநாயகர் கோயிலுக்கு வழி தெரியலையாமா?” என்று நக்கலாக கேட்ட அண்ணனை பார்த்து முறைத்து…
“அண்ணா ப்ளீஸ்… மாமாக்கு குளோஸ் ரிலேடிவ்ஸ் அண்ணா… அதோட அந்த அங்கிள் மாமாவோட க்ளோஸ் பிரெண்டும் கூட… தயவு செஞ்சு எக்குதப்பா எதுவும் பேசி வச்சுடாத… ப்ளீஸ்”
“ஹேய் வைஷு… நான் எதுக்கு எக்குதப்பா பேச போறேன்? இந்த மாதிரி ஆளுங்களோட சகவாசமே எனக்கு வேண்டாம்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… ரூமுக்கு போறேன்… நீ சீக்கிரம் கிளம்பு, பசங்களையும் கிளப்பு…”
“எங்கண்ணா போறோம்?” ஆர்வமாக கேட்டாள் வைஷ்ணவி!
“நேத்தே பசங்க கிட்ட சொல்லி இருந்தேன்ல… இன்னைக்கு சண்டே மார்க்கெட் அழைச்சுட்டு போறேன்னு… அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்டா… ஓகே வா…”
“அண்ணா… ப்ளீஸ்… அப்படீன்னா ஒரு ரெக்வெஸ்ட்…” வைஷு தயங்கவும்…
“ம்ம்ம்… சொல்லுடா…” புன்னகைத்து கொண்டே…
“ஷாலினியை கூப்பிடலாமா? நல்லா பழகிட்டா நமக்கு நல்லதுதானேண்ணா…” கண்களில் ஆசையோடு கூறவும்…
“ம்ம்ம்… ஓகே டா… நீ பேசி வர சொல்லு…” என்று அனுமதி அளித்து விட்டு அவனது அறைக்கு சென்றான்!
விதி என்பது தனியாக வருவதல்ல! நம்மிடையே உலவி கொண்டிருப்பதுதான்! அது தான் நமது வார்த்தைகள்! நம்முடைய எண்ணங்களே வார்த்தைகளாகின்றன! வார்த்தைகளே செயல்களாகின்றன! செயல்களே ஒருவனை நல்லவன் என்று கெட்டவன் என்று நிர்ணயிக்க உதவுகின்றன! அத்தகைய எண்ணங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… இல்லையென்றால் விதி நமது வார்த்தைகளில் விளையாடி விடும்…
திவ்யா வருவது நிச்சயமாக கார்த்திகேயனின் விதியை நிர்ணயிக்க தான் என்பது அவனது தங்கைக்கு தெரியுமா? தெரிந்தால் தான் விட்டு விடுவாளா? அது தான் இயற்கையின் சூத்திரம்! ஒவ்வொருவருக்கும் நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரம் கொடுத்து விட்டு நாடகத்தின் இயக்குனரான இயற்கை எவரும் அறியாத இடத்தில் மறைந்து கொள்கிறான்! திவ்யா, ஷாலினி, கார்த்திகேயனின் வாழ்க்கை இனி அந்த இயற்கையாகிய விதியின் கைகளில்… என்ன நடக்கிறது என்று தான் பார்ப்போமே!
***
“ஹய்ய்ய்ய்யி… திவிக்காஆஆஆ…” கனிஷும் மனிஷும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர்!
பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு வியந்து கொண்டே சென்றனர்! இருக்காதா பின்னே! வீடா அது? மினி சொர்கமல்லவா! புதுவையின் ஒரு சில பகுதிகள் கட்டட கலைக்கு பெயர் பெற்றவை! அதில் ஒயிட் டவுனும் ஒன்று! அழகுணர்ச்சி மிகுந்த பிரெஞ்சு கட்டட கலை கொஞ்சும் இடம்! கடலை பார்த்தவாறு அமைந்திருந்தது அந்த பிரெஞ்சு மாடல் பிரம்மாண்ட பங்களா! மிக அழகான தோட்டமும் சில்லென்று வீசும் கடற்கரை காற்றும் இருவரையும் மயக்கியது! காற்றிலே மிதந்து வந்த சுகந்தமான வாசம் அதோடு சேர்ந்த சில்லென்ற காற்று… இருவரையும் வேறு உலகத்திற்கு கொண்டு சென்றது!
“ஸ்ரீ… செம லொகேஷன் இல்ல…”
“ம்ம்ம் ஆமா திவி… விட்டா இங்கேயே படுத்து தூங்கிடுவேன்… இந்த காத்துக்கே கண்ணு சொக்குதுடா…”
“உஷ்… நீ தூங்கறதுலேயே இரு… வந்த வேலைய முதல்ல பாரு… அப்புறமா தூங்கலாம்…” என்று அவனிடம் ரகசியம் பேசியவளை பார்த்துதான் அந்த வரவேற்பு! அந்த குழந்தைகளை பார்த்த திவி அடுத்த நிமிடம் குழந்தையாகி போனாள்!
“ஹேய்ய்ய்யி செல்லம்ஸ்…” பெரியதாக புன்னகைத்து கொண்டே கையை நீட்ட கனிஷ்கர் ஓடி வந்து கட்டி கொண்டான்! மனிஷா, பின் பக்கத்தை அணைத்து கொள்ள மாடியிலிருந்து எதேச்சையாக கவனித்த கார்த்திகேயனின் புருவங்கள் உயர்ந்தன! தொலைகாட்சியில் பார்ப்பதை விட நேரில் பார்க்க மெழுகு பொம்மையாக இருந்தாலும் அழுக்கு ஜீன்ஸ் அணிந்து தூக்கம் தொலைந்த கண்களோடு அலைந்து திரிந்த அசதியோடு இருந்தாள்! தனது நீண்ட முடியை சுருட்டி தலையில் ஒரு க்ளிப்பில் அடக்கி… பார்க்க இருவருமே மிகுந்த சோர்வாக நலுங்கிய நிலையில் இருந்தனர்!
“என் கிட்ட சொல்லாம இங்க வந்துட்டீங்க இல்ல… ரெண்டு பேர் கூடவும் கா…” என்று சிரித்து கொண்டே சொல்லவும்…
“அக்கா… அப்போ நீ இல்ல… ஷூட்டிங் போயிட்டான்னு பாட்டி சொன்னாங்களே…” கனிஷ்கர் பொறுப்பாக பதில் கூறி கொண்டே வர உள்ளே சென்றனர்!
“ஆமா திவி… இல்லைன்னா உன் கிட்ட சொல்லாம வருவமா?” இந்த நல்லவள் மனிஷா தான்!
“அச்சோ செல்ல குட்டீஸ்… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா…” என்று இருவரையும் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் திவி!
“என்ன கொஞ்சல்ஸ் ஆப் இந்தியா எல்லாம் முடிஞ்சுதா… இல்ல ஏதாவது பாக்கி இருக்கா?” வைஷ்ணவி கேலியாக கேட்டு கொண்டு வர…
“ஏன் நாங்க கொஞ்சிகிட்டா உங்களுக்கு என்ன வலிக்குது?” அவளை குறும்பாக பார்த்து கொண்டே திவி கேட்க…
“அக்கா… வந்ததுல இருந்து அந்த லூசத்தான் கவனிக்கிறீங்க… என்னை கண்டுக்கவே இல்ல…” ஸ்ரீராம் குற்றபத்திரிக்கை படித்தான்!
“எப்படி ஸ்ரீ கண்டுக்கறது உன்னை?” என்று கூறி விட்டு தள்ளி நின்று அவனை மேலிருந்து கீழ் வரை பார்க்க…
“ஆஹா வைஷு… கொஞ்சம் அக்கான்னு மரியாதையா கூப்பிட்டா என்னையவே கலாய்க்கிறீங்களே… திஸ் இஸ் டூ மச்…” சிரித்து கொண்டே ஸ்ரீராம்!
“ஓகே ஓகே… ரெண்டு பேரும்ஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க… டிபன் சாப்பிடலாம்…” சொல்லி முடிப்பதற்குள் திவி…
“வைஷ் வேர் இஸ் தி ரெஸ்ட் ரூம்…” பறந்தாள்! அவ்வளவு பசி! அப்போதுதான் தெரிந்தது!
“திவி… ரெஸ்ட்ரூம் போயா சாப்பிட போற?” கண்சிமிட்டி கொண்டே ஸ்ரீராம் கேட்க, வைஷ்ணவி அதை கேட்டு சிரித்தாள்!
“டேய் எருமைமாடு… அது எல்லாம் நீ தான் செய்வ… உனக்கு தான் பல்லு விளக்கறதுனாலே என்னன்னு தெரியாது… நானும் அப்படியா?”
“ஏன்டி பசுமாடு… ஆடு மாடு கோழி எல்லாம் பல்லு விளக்கிட்டா சாப்பிடுது… நான் இயற்கையா இருக்கேன்… அது ஏன் உனக்கு பொறுக்கல?”
“உவ்வே கருமம்… பசங்களா இவனுக்கு ஷேம் ஷேம் சொல்லுங்கடா…” என்று சொல்லவும் மனிஷாவும் கனிஷும்…
“ஸ்ரீராம் ஷேம் ஷேம்… ஸ்ரீராம் ஷேம் ஷேம்…” என்று குதிக்க வைஷ்ணவி வந்து…
“பசங்களா ஓடி போய்டுங்க… அப்புறம் சென்னை போனா மாமா உங்களை கிரிக்கெட்ல சேர்த்துக்க மாட்டாங்க…” என்று பயம் காட்டவும் இரண்டும் பதுங்கின!
“ஹப்பா இப்போ தான் முதல் முறையா வைஷ் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க போல…” ஸ்ரீராம் சிரிக்க…
“அது நீ அவங்க அம்மா வீட்ல இருக்கறதுனால ஸ்ரீ… ரொம்ப சந்தோஷ படாதே…” என்று கூறி விட்டு வைஷ்ணவியை பார்த்து, “வைஷ் ரெஸ்ட்ரூம்…”
“ஏய் பறக்காதடி… கண்டிப்பா உனக்கு புவா உண்டு…”
“போடா இவனே… நைட் எல்லாம் கண் முழுச்சு இப்போ எனக்கு இருக்கற அகோர பசிக்கு விட்டா கல்யாண சமையல் சாதம் பாடிடுவேன்… என்னை டிஸ்டர்ப் பண்ணாத…”
“ஹஹா… என்னமோ புதுசா அந்த பாட்ட பாட போற மாதிரி இல்ல பீலா விடறா பாருங்க வைஷு… அங்க தினமும் இந்த கச்சேரி தான…” சந்தடி சாக்கில் பிட்டு போட்ட ஸ்ரீராமை முறைத்து விட்டு முகம் கழுவி மற்ற வேலைகளை முடித்து விட்டு ஓரளவு தெளிவான முகத்தோடு டைனிங் டேபிள் டேபிள் வரும்போதே கார்த்திகேயன் வருவதற்கும் சரியாக இருந்தது! வேலையாட்கள் இருந்தாலும் மங்கையே உணவு பரிமாறும் வேலையை செய்து கொண்டிருந்தார்!
“வாடாம்மா… இந்த பக்கம் வந்து உட்க்காருடா” வைஷ்ணவி சாப்பிட அமர்ந்து இருந்த நாற்காலிக்கு பக்கத்தில் உட்கார சொன்னார்! கார்த்திகேயன் வந்தவன் ஸ்ரீராமை பார்த்து வீட்டு தலைவனாக…
“வாங்க வாங்க…” என்று கூறி புன்னகையோடு அமர்ந்தான்! மாநிறத்திற்க்கு சற்று மேலே… ஆறடியில் கட்டுகோப்பாக இருக்கும் கம்பீரமான இந்த உருவத்திற்கும் போதை மருந்து கடத்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? ஆனால் இந்த கண்களில் கண்டிப்பு தெரிகிறதே தவிர கள்ளம் தெரியவில்லையே! வந்து உட்கார்ந்தவனையே வைத்த கண் வாங்காமல் ஆராய்ந்து கொண்டிருந்தாள் திவ்யா!
“திவி… ஏய் திவி…” வைஷ்ணவி உலுக்கவுமே இவ்வுலகத்திற்கு வந்தாள்!
“என்னண்ணி…?” ஒன்றும் புரியாமல் கேட்டவளை பார்த்து சிரித்த வைஷ்ணவி…
“இல்ல உக்கார்ந்துகிட்டே தூங்கறியான்னு பார்த்தேன்… அம்மா ராட்டு தொக்கு வைக்கட்டான்னு கேக்கறாங்க… நீ பாட்டுக்கு கண்ண திறந்து வைச்சுகிட்டே தூங்கற? இல்ல எப்பவும் போல சைவம் தானா?” என்று கேட்கவும் அவளை நினைத்தே அவளுக்கு வெட்கமாக போனது! என்னதான் ஆராய்வது என்றாலும் இப்படியா, உலகத்தை மறந்து ஒரு ஆடவனை உற்று பார்ப்பது? தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது!
“வைஷு… உலகமே அழிந்தாலும் அது அசைவம் சாப்பிடாதுப்பா… கழனி தண்ணிய ஊத்துங்க… அதுக்கு அது போதும்…” சொன்ன ஸ்ரீராமை பார்க்கும் போதே பற்றி கொண்டு வந்தது! கடுப்பாக அவனை பார்த்து விட்டு…
“டேய் பிசாசு… அது நீ குடிக்கறது! நீயே குடிச்சிக்க… ஆன்ட்டி… எனக்கு இட்லி சட்னி போதும்…” என்று மங்கையை பார்த்து…
“சார் முன்னாடி என் மானத்த வாங்காதடி…” கொஞ்சம் கீழிறங்கிய குரலில் கெஞ்சினான்!
“அப்படீன்னா… எனக்கு நீ கழனி தண்ணி குடுக்க சொன்னப்போவே யோசிச்சிச்சு இருக்கனும்டா மடையா…”
“ஓகே ஓகே… டீல் பேசிக்கலாம்…” சமாதான கொடி தூக்கினான் ஸ்ரீராம்!
“என்ன டீலா நோ டீலா வா?” சிரித்து கொண்டே ஸ்ரீராமை பார்த்து கார்த்திகேயன் கேட்க…
“ஹிஹி… இல்ல சார்…” ஸ்ரீராம் மழுப்பினான்!
“அதென்ன ஸ்ரீராம்? வைஷு மட்டும் அக்கா… நான் சாரா?” மிகவும் சாதாரணமாக உரையாடியவனை பார்த்து ஸ்ரீராம் மலைத்து போனான்! இவனா கடத்தல்காரன்? இவனா புதுவையின் நிழல் அரசாங்கம்? இவனை கண்டா அத்தனை பேரும் நடுங்குகிறார்கள்? உலகம் முழுக்க பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி இவனா?
“ஹஹா… நீங்க எனக்கு அண்ணன்… ஓகே வா?” ஸ்ரீராம் சிரிக்க…
“ஓகே… சரி என்ன செய்றீங்க ஸ்ரீராம்?” என்று ஆரம்பித்தவன் சுவாரசியமாக அவனிடம் பலபல விஷயங்களை பேசி கொண்டே சாப்பிட அவ்வப்போது அவர்களின் பேச்சில் வைஷ்ணவியும் மங்கையும் ஆர்வமாக கலந்து கொண்டனர்! மறந்தும் திவி பக்கம் ஒரு நொடியும் திரும்பினான் இல்லை! திவியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை… சாப்பிட்டு முடிந்த பின் குழந்தைகளோடு திவ்யா அவ்வப்போது செல்பேசியில் உரையாடி கொண்டே விளையாடி கொண்டிருக்க அப்போது மட்டும் ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஹாலில் ஸ்ரீராமோடு அமர்ந்து மறுபடி உரையாடி கொண்டிருந்தான்! ஷாலினி வந்தாள்!
“வாம்மா… எப்படி இருக்கடா?” இளம்புன்னகையோடு வந்தவள் மங்கைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு நேராக கார்த்திகேயனின் அருகில் போய் உட்கார்ந்தாள்!
“நான் நல்லா இருக்கேன் அத்தை… ஆனா கார்த்திக் அத்தான் பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல…” முகத்தில் ஆற்றாமை! அதற்கும் கார்த்திகேயன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க…
ஏன்டா… என்ன ஆச்சு? புதுசா என்ன பிரச்சனை பண்ணி வெச்ச கார்த்தி?” மங்கையின் குரலில் நிஜமான பயம் கலந்த தவிப்பு!
“ஏன்… என்கிட்டே ஒரு வார்த்தை பேசினா என்ன? தேங்காதிட்டு போலாம்ன்னு இவரா கூப்பிட கூடாதா அத்தை?”
“இல்லம்மா… அவனுக்கு கொஞ்சம் வேலை இருந்தது! வைஷு உன் கிட்ட பேச போறதா சொன்னா… அதனாலத்தான் அவளையே சொல்ல சொன்னாப்ல… கார்த்தியே தானம்மா உன்னை கூப்பிட சொன்னாப்ல…” என்று அவர் உண்மை பாதி பொய் பாதி என வருங்கால மருமகளிடம் சமாளிக்க அவனே தான் அழைக்க சொன்னான் என்ற அவரது பொய் நன்றாக வேலை செய்தது! சிரித்து கொண்டே…
“தேங்க்ஸ் அத்தான்!” என்று புன்னகைத்து கொஞ்சம் நெருங்கி உட்கார்ந்தாள்! பதிலுக்கு சிறிய புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது! கொஞ்சம் சிரிச்சு பேசிட்டா என்னவாம் என்று ஷாலினியால் எண்ணாமல் இருக்க முடியவில்லை! அவள் நெருங்கி உட்காரவும் மற்றவர்கள் கவனிக்கும் முன்னர் சோபாவில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தான்! உள்ளே கடுகடுத்தது ஷாலினிக்கு! அவனாகவும் நெருங்குவதில்லை, அதை மீறி நாமாக நெருங்கினாலும் இப்படி… ச்சே! என்றாகிவிட்டது அவளுக்கு! ஆனால் அவளால் அப்படியே விட்டுவிடவும் முடியாதே! விஷயம் நடக்க வேண்டுமே!
“அத்தான்…” மறுபடி நெருங்கி வந்தாள். கார்த்திகேயனோ சங்கடத்தில் நெளிந்தான்! ச்சே! என்ன பெண் இவள்? எல்லோர் முன்னரே இப்படி பக்கத்தில் வந்து உட்கார்ந்து குழைகிறாளே! என்னதான் செய்வது என்று தெரியாமல்…
“சொல்லும்மா!” வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்து பொறுமையை இழுத்து பிடித்து கேட்டான்!
“என் பிரெண்ட்ஸ் எல்லாம் பார்ட்டி கேக்கறாங்க அத்தான்… ரெண்டு பேரும் ஹோஸ்ட் பண்ணி… ப்ளீஸ் அத்தான் அரேஞ்ச் பண்ணுங்களேன்…” எந்த அளவு குழைய முடியுமோ அந்த அளவு குழைந்து கேட்க அதை எல்லாவற்றையும் ஓரக்கண்ணில் பார்த்து சிரித்தபடியே குழந்தைகளிடம் விடையாடி கொண்டிருந்தாள் திவி! சட்டென்று எழுந்து நின்ற கார்த்திகேயன்…
“இல்லம்மா… எனக்கு இதெல்லாம் பிடிக்காது… இந்த விஷயத்துக்கு எல்லாம் என்னை கேட்க்காதம்மா…” நறுக்கு தெறித்தார் போல அவன் சொல்லவும் அவளது முகம் சுண்டி போனது!
“ஏன் அத்தான்? இதுல என்ன தப்பு? கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பார்ட்டி கேக்கறாங்க… அதை நீங்களும் சேர்ந்து ஹோஸ்ட் பண்ணனும்ன்னு… இதுல என்ன குற்றம் இருக்குன்னு எனக்கு தெரியலியே…” ஆற்றாமையோடு அவள் கேட்க…
“சாரிம்மா… எனக்கு இதில விருப்பம் இல்ல… கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் இல்ல… கல்யாணத்துக்கு அப்புறமும் தான்… இது மாதிரி பார்ட்டி அது இது எல்லாம்… கண்டிப்பா நோ தான்…” அதோடு முடிக்க எண்ணி மிக கண்டிப்பாக வந்து விழுந்தன வார்த்தைகள்! ஷாலினிக்கு கண்களில் குளம் தேங்கின!
“நீங்க பார்ட்டி போறதே இல்லையா… இல்ல ஹோஸ்ட் பண்றது இல்லையா? ஏன் அத்தான் இப்படி சொல்றீங்க…” இப்போவோ அப்போவோ என கண்ணீர் எட்டி பார்க்க தனது மருமகளின் நிலை புரிந்த மங்கை…
“ஏன் கண்ணா… ஷாலினி ஆசைப்படறா இல்லையா… உன்னோட பிடிவாதத்த விட்டுட்டு அவளுக்காக…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட கார்த்திகேயன்…
“அம்மா அவ சொல்ற பார்ட்டி எல்லாம் பிசினெஸ் பார்ட்டிஸ்… அது இருந்து கிட்டே தான் இருக்கும்… ஆனா வீட்டு பொண்ணுங்க இந்த மாதிரி எல்லாம்… ச்சே ச்சே… எனக்கு சுத்தமா பிடிக்கல… இதுல அந்த பொண்ணுக்கு நீங்க சப்போர்ட் பண்றதுன்னா பண்ணிக்கங்க… ஆனா என்னோட கொள்கைய விட்டு தர முடியாது…” சொல்லி கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைப்பு வர யார் என்ன நினைத்தால் என்னவென்று செல்பேச தனியாக சென்று விட்டான்! மங்கைதான் தவித்து வருங்கால மருமகளை சமாதானப்படுத்த முயற்சித்தார்! ஒரு வழியாக ஷாலினி சமாதானமாகி அமர்ந்து இருந்த ஸ்ரீராமை அப்போதுதான் கவனித்தாள்! திவியையும்! மங்கை கைவேலையாக சமையலறைக்கு விரைய, குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தார்கள்!
“ஹாய்… நீங்க திவ்யா தானே… டிவி ஹோஸ்ட் தானே” அந்த புன்னகையை பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது திவ்யாவுக்கு… அவ்வளவு அழகு!
“ஆமாம் ஷாலினி… அறிமுகப்படுத்தவே மறந்துட்டேன்… இது திவ்யா தான்… இது ஸ்ரீராம்…” வைஷ்ணவி அறிமுகப்படுத்தினாள்!
இருவரையும் பார்த்து கை குவித்த ஷாலினி…
“உங்களுக்கு பழக்கமா அண்ணி? நேர்ல பார்க்க இன்னும் ரொம்ப அழகு அண்ணி இவங்க!” வெளிப்படையாக சொன்னவளை உடனே பிடித்து விட்டது திவ்யாவுக்கு! அவளுக்கு உறவுமுறையை கூறி புரியவைத்தாள் வைஷ்ணவி!
“நீங்களும் ரொம்ப அழகு தான் ஷாலினி… பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு…” மனதார கூறினாள் திவ்யா!
“ஆஹா என்னென்னமோ நடக்குதே… பொண்ணுங்க ரெண்டு பேரும் பாராட்டிக்கறாங்களே! பாண்டில சுனாமி தான் வரப்போகுது…”
“அந்த சுனாமிய உன் வாய்க்கு திருப்பி விட்றலாம் ஸ்ரீ… டோன்ட் ஒர்ரி!” என்று சிரித்தவளை பார்த்து ஷாலினியை காட்டி…
“ஏன் திவி… இவங்கள பாரு… எப்படி அத்தான்னு அழகா கூப்பிடறாங்க… நீயும்தான் இருக்கியே தத்தி… என்னைக்காவது அப்படி கூப்ட்டு இருக்கியா?” சிரித்து கொண்டே கூற…
“நான் யாரடா கூப்பிடறது லூசு…” புரியாமல் கேட்டவளை பார்த்து…
“ஏய் பிசாசு… என்னை பார்த்தா அத்தான் மாதிரி தெரியலியா?”
“உன்னை பார்த்தா… அடப்பாவி… இரு இரு…” என்று சொல்லிவிட்டு செல்பேசியை எடுக்க…
“இரு ஆத்தா… யாருக்கு பண்ற?”
“சகிக்கு தான்… உன்னோட லீலைய சொல்லத்தான்…”
“அடிப்பாவிகளா… இப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து என்னை பேயோட்டறீங்களா?” நொந்து போய் கேட்டவனை பார்த்து வாய் விட்டு சிரித்த திவியை இடையிட்டாள் வைஷ்ணவி!
“ஸ்டாப் ஸ்டாப்… ஏய் இது என்ன புது கதாபாத்திர என்ட்ரி? சகி?” புரியாமல் கேட்டவளிடம் சிறிது தயக்கத்தோடு ஸ்ரீராம்…
“அது நான் லவ் பண்ற பொண்ணு வைஷு… வீட்ல யார்கிட்டயும் இப்போ சொல்லிடாதீங்க…” நேரடியாகவே சொல்லி முடித்தான்! கார்த்திகேயன் செல்பேசியை வைத்து விட்டு வந்து அமர்ந்தான்!
“ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இல்ல வீட்ல…” வைஷ்ணவி தயங்க…
“ஹய்யோ… இவள போயா… இது வரைக்கும் அப்படி ஒரு நினைப்பு கூட எனக்கு வந்தது இல்ல… இவளுக்கும் தான் வைஷு… அதோட…” தயங்கி…
“பொண்ணா இது? பேய்… பிசாசு… ஆம்பிளையா பிறக்க வேண்டிய ஐட்டம்… தப்பி தவறி பொண்ணா பிறந்துட்டு என்னை கொடுமை படுத்திட்டு இருக்கா… இந்த எருமைய ப்ரீயா குடுத்தா கூட எனக்கு வேணாம்…” அனைவரும் வாய் விட்டு சிரிக்க, திவி கையில் கிடைத்த சோபா குஷனை எடுத்து அவனை அடித்தாள்!
“எருமை மாடு… காட்டேரி… உனக்கு எவ்வளவு லொள்ளு இருக்கும்… ப்ரீயா குடுத்தா கூட வேணாமா? கொழுப்புடா உனக்கு… இரு மவனே உனக்கு இருக்கு…”
“கார்த்தி அண்ணா… என்னை இப்போவே பார்த்துகோங்க… ரெண்டு குட்டி சாத்தான்களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண போதுங்க…” அவனது தலை முடியை பற்றி எப்போதும் போல மாவாட்ட…
“ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க ஸ்ரீராம்?” சிரிக்காமல் வாழை பழத்தை கேட்டது போல கேட்ட கார்த்தியை பார்த்து…
“ஆஹா அண்ணா… அந்த இன்னொன்னும் இதுதான்…” என்று சொல்ல…
“இல்ல ஸ்ரீராம்… ஒன்னு இங்க இருக்கு… அந்த இன்னொன்னு எங்க இருக்கு?” புன்னகையோடு கேட்ட கார்த்திகேயனை பார்த்து ஸ்ரீராம் வாய் திறக்க முயல அவனது வாயை கை வைத்து மூடிய திவி…
“அந்த இன்னொன்னு சென்னைல நிலா டிவில வேலை செய்யுதுங்க… பேர் சாஹித்யா… ரெண்டும் ஒரு வருஷமா லவ் பண்றேன்னு என்னை தான் கொடுமை பண்ணுதுங்க…” என்று சொல்லவும் மற்ற அனைவரும் சிரித்தார்கள்!
“ஏன்டி… நாங்க என்ன உன்னை கொடுமை பண்ணினோம்?” வீறு கொண்டு எழுந்தான் ஸ்ரீராம்! திவ்யா அவனை பார்த்து சிரித்துவிட்டு வைஷ்ணவியிடம் சொல்வது போல…
“வைஷு அண்ணி… யார்க்கு நடுவுல வேணும்னாலும் போய்டலாம் ஆனா லவ் பண்ற ரெண்டு பேர் நடுவுல போய்ட்டா அவ்வளவுதான்… ரெண்டும் மாத்தி மாத்தி அதுங்க லவ் ஸ்டோரிய சொல்லி சொல்லி நம்ம காத தீய்ச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க… சோ பிவேர் ஆப் லவர்ஸ் அண்ணி…” என்று…
“ஏன்மா லவ் பண்றவங்களுக்கு நடுவில நீங்க எதுக்கு போறீங்க… தேவை இல்லாம?” சட்டென்று கார்த்திகேயன் கேட்க ஒரு நிமிடம் அனைவரின் முகமும் விழுந்து எழுந்தது! ஆனால் திவியோ…
“அது எப்படிங்க அய்யா… நம்மால முடிஞ்ச வரைக்கும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணனுமே அய்யா… இல்லைன்னா அய்யா நமக்கு தூக்கம் வராதுங்களே அய்யா…” வார்த்தைக்கு வார்த்தை அய்யா போட்டு பேசி அவனுக்கும் தக்க பதிலாக குடுக்க…
“என்ன அய்யாவா?” அதை கேட்டு சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்றே புரியவில்லை அவனுக்கு!
“ஆமாங்க அய்யா…” அவள் சொன்ன தோரணையை பார்த்து வைஷ்ணவிக்கும் ஸ்ரீராமுக்கும் புரிந்தது… அவளது கிண்டல்!
“சரி சரி… நான் அம்மான்னு சொன்னதுக்காக நீங்க அய்யான்னு சொல்றீங்க…” என்று சொல்லி சிரித்தவனை பார்த்து…
“அட ஆமாங்க அய்யா… நீங்க ரொம்பஆஆஆஆஆ புத்த்த்தத்தத்திசாலி…” என்று நீட்டி முழக்கியவளை பார்த்து மனம் விட்டு சிரித்தான்! எல்லோரும் தான்!
“உன்னை பத்தி வைஷு சொன்னப்போ பெருசா எடுத்துக்கல… ஆனா இப்போ பார்க்கும் போதுதான் எனக்கே புரியுது…” ஒருமையில் தாவி பேசியவனிடம்…
“ஆஹா… யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேவா… என்னை பத்தி ரொம்ப பெருமையா சொல்லி இருப்பாங்களே அண்ணி…” தனது சட்டையில் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்! ஆஹா இத்தனை நாளாக நம்மால் முடியாத ஒன்றை திவ்யா நிமிடங்களில் சாதித்து விட்டாளே என்றே எண்ணத்தொன்றியது ஷாலினிக்கு! அநியாயத்திற்கு நிச்சயமான பெண்ணை அம்மா என்று அழைப்பவன் இவன் ஒருவனாகத்தான் இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள்!
“ம்ம்ம் சொன்னா! கொஞ்சம் கிராக்… கொஞ்சம் மெண்டல்… கொஞ்சம் லூசுன்னு…” சிரிக்காமல் அவளை வாரினான் கார்த்திகேயன்! வைஷ்ணவியை கடுப்பாக பார்த்து கொண்டே…
“அண்ணியீஈஈ…”
“ஐயோ இல்ல திவி… அண்ணா சும்மா சொல்றாங்க…” சொல்லி கொண்டிருக்கும் போதே திவியின் செல்பேசி அழைக்க…
“ஹலோ திவ்யா ஹியர்… நீங்க யார் பேசுறது?”
“…”
“தேங்க்ஸ் சார்… ரொம்ப சந்தோஷம்…”
“…”
“தேங்க்ஸ் பார் யுவர் காப்ளிமென்ட்ஸ் சார்…”
“…”
“ம்ம்ம்… கண்டிப்பா… வரேன்… ஓகே சார் தேங்க்ஸ்…”
“…”
“ஓகே… நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்…”
“…”
“ஓகே ஓகே” என்று ஒரு வழியாக செல்பேசியை வைத்து பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு விட்டு ஸ்ரீராமை பார்த்து காலரை ஏற்றி விடுவது போல செய்து…
“நம்ம அருமை பெருமை எல்லாம் மத்தவங்களுக்கு தெரியுது… உனக்கு எங்க ஸ்ரீ தெரியுது?” என்று நக்கலாக ஸ்ரீராமை பார்த்து கேட்க…
“நம்ம அருமை பெருமையா? இங்க நீ மட்டும் தானே இருக்க?” கார்த்திகேயன் கேட்க…
“சார்… நமக்கு நாமே மரியாதை குடுக்கலைன்னா எப்படி… எப்போவும் நம்மள நாங்க நாங்கன்னு தான் கூப்டுக்கறது… இதுக்கு பேர் தான் சார் நமக்கு நாமே திட்டம்…” என்று கிண்டலாகவே கூற…
“அட கடவுளே… ஸ்ரீராம்… நீ சொன்னது நூறு சதவித உண்மை… கஷ்டம்…” என்று கார்த்தி பெருமூச்சு விட…
“என்னங்க… எது கஷ்டம்” கேட்ட திவ்யாவை பார்த்து…
“இல்ல ப்ரீயா குடுத்தா கூட வேண்டாம்ன்னு ஸ்ரீராம் சொன்னாப்லையே… அது தான் உண்மைன்னு சொன்னேன்… பாவம் அந்த ஜீவன்…”
“எந்த ஜீவன் அண்ணா…” ஸ்ரீராம் கேட்டு சிரிக்க…
“இந்த லூச கட்டிக்க போற பாவப்பட்ட ஜீவன் தான் ஸ்ரீராம்… ப்ச் ரொம்ப பாவம்…” இப்போது ஸ்ரீராமின் செல்பேசி அழைக்க சகி என்று திவ்யாவிடம் உதட்டை குவித்து சொல்லி காட்டி விட்டு வெளியே சென்றான்! எப்படி இருந்தாலும் கெஞ்சலும் மிஞ்சலும் இருக்குமல்லவா! ஆனால் இங்கே ஒரு புயல் உருவாக போவதை அவன் அறியவில்லை!
“நாங்க ஷாலினிய பார்த்து பாவபடற மாதிரிங்களா சார்?” கிண்டலாகவே கேட்டாள் திவி!
ஷாலினியின் முகத்தில் பயம் படர்ந்தது! ஏதாவது சொல்லி கார்த்திக்கை கோபப்படுத்தி விட போகிறாளோ என்று உள்ளுக்குள் ஏதோ நெருடியது!
“கரெக்டா சொல்ற திவி… சூப்பர்…” வேறு யார் வைஷ்ணவி தான், திவ்யாவுக்கு ஆதரவாக ஷாலினிக்காக களம் இறங்கினாள்!
“ஆஹா மகளிர் அணி கூட்டணியா? சரி சரி…” கார்த்திகேயன் சிரிக்க…
“சார் சிரிச்சு மழுப்பாதீங்க… நீங்க ஒரு மேல் ஷாவனிஸ்ட்ன்னு நான் சொல்றேன்…” அதிரடியாக அவன் மேல் அவள் குற்றம் சுமத்த…
“மேல் ஷவனிஸ்ட்டோ கீழ் ஷாவனிஸ்ட்டோ… என்னோட கொள்கை எனக்கு பெருசு தான்… அதுல மற்றவங்க தலையிட முடியாதில்ல… உனக்கு கூட தான் இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் என்னன்னே தெரியமாட்டேங்குது… அதை பற்றி நான் ஏதாவது சொன்னேனா?” விடுவேனா என்று விவாதத்தில் இறங்கினான்!
“சார் முதல்ல அச்சம் மடம் நாணம் பருப்பு… ச்சே பயிர்ப்பு இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லுங்க…”
“ஏன் நீயே தான் ரொம்ப புத்திசாலி ஆச்சே… நீ சொல்லு…”
“அச்சம்னா தயக்கம் பயப்படறது, மடம் அப்படீன்னா ஒரு விஷயத்தையும் தெரிஞ்சுக்காம மடத்தனமா இருக்கறது, நாணம் அப்படீன்னா ஜென்ஸ் பார்த்தா அப்படியே உருகி போய் கன்னங்கள் சிவந்தாள் ரேஞ்சுக்கு வெட்கபடறது… இன்னும் ஒன்னு இருக்கே பயிர்ப்புன்னு ஒன்னு அது இன்னும் மோசம்… ஆண்கள் தொட்டா அப்படியே புல்லரிச்சு போறது… இதையெல்லாம் எதுக்கு பெண்கள் கிட்ட எதிர்பார்க்கறீங்க? மிரண்ட ஒன்னும் தெரியாத பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும்… அதனால ஏற்படுத்தப்பட்ட, பெண்கள் மேல திணிக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பெண்களுக்கான இந்த குணங்கள்…”
“திவ்யா… ஆத்மார்த்தமா குடும்பம் நடத்தறவங்களுக்கு அவங்க மேல இதெல்லாம் திணிக்கபடறதா உணர்வு வர சான்சே இல்ல… இயற்கையா இருக்கற உணர்வுகள் தான்… நீ சொல்றது எல்லாம் வேலை இல்லாம பொழுது போகாம கிளப் மண்ணாங்கட்டின்னு அலையற பெண்கள் சொல்ற தத்துவ முத்துக்கள்… ஏன் நீங்க குடும்ப பெண்களா இருங்கன்னு சொல்றது தப்பா? இல்ல அடக்கமா இருங்கன்னு சொல்றது தான் தப்பா? அடங்காமை ஆரிருள் உயித்து விடும் அப்படிங்கறது தெரியாதா?” கார்த்திகேயனுக்கு கோபம் வர பார்த்தது! ஆனால் திவ்யாதான் விட்டு விடுவாளா? விட்டு விட கூடிய ஆளா?
“ஏன் இதுல நாங்க என்ன குடும்ப பெண்களா இல்லாதத கண்டுட்டுட்டீங்க? அந்த காலத்துல பெண்கள் வெறுமனே பிள்ளை பெத்து தர்ற மெஷினாவும் ஆண்களுக்கு சுகம் தர்ற மெஷினாவும் தான் நடத்தபட்டாங்க… ஒண்ணுமே தெரியாம இருக்கறதுதான் அழகுன்னும் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிஞ்சிக்க வேண்டியது ஒரு பரத்தை தான்னும்… அதனால வீட்டு பெண்கள் படிக்க கூட கூடாதுன்னும் சொன்னாங்க…”
“அட கன்றாவியே… இப்படி கூடவா சொல்லி இருக்காங்க திவி?” வைஷ்ணவிக்கு எரிச்சலாக இருந்தது! அவளது உணர்வை வெளிப்படுத்தினாள்!
“ஆமா அண்ணி… அதுவும் இல்லாம இந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை பெண்கள் மேலாடை அணியவே அனுமதி இல்லாமதான் இருந்தது… அது தெரியுமா? அரச குடும்பம் ப்ரோகித குடும்பம் தவிர மற்ற பெண்கள் மேலாடை அணிய முடியாது வைஷு அண்ணி… கோயிலுக்கு போய் கவனிச்சு பாருங்க… சிலைகளுக்கு மேல மாராப்பு இருக்காது… நம்ம பாட்டிங்களும் மேலே மாராப்பு போட மாட்டாங்க… அதை கவனிச்சு இருப்பீங்களே…”
“ஆமாம் கவனிச்சு இருக்கேன் திவி… ஆனா இதெல்லாம் நிஜமா?” ஆச்சரியபட்டாள் வைஷ்ணவி! மங்கை சமையலறையில் இருக்க ஸ்ரீராம் சகியிடம் கெஞ்சி கொஞ்சி கொண்டிருக்க வைஷ்ணவி, ஷாலினி மட்டும் இருவரின் இந்த சொற்போரை பார்த்து கொண்டிருந்தனர்!
“ஆமா… இந்த நூற்றாண்டுல தான் பெண்கள் கொஞ்சம் சுதந்திரமா இருக்க முடியுது… சொத்துரிமை இருக்கு… ஆனா இதெல்லாம் சுலபமா வந்துடல… பாருங்க உங்க அண்ணன் மாதிரி இன்னமும் ஷாவனிசம் பேசற ஆளுங்க இருக்கத்தான் செய்றாங்க…” அது வரை பொறுமையாக கேட்டு கொண்டிருந்த கார்த்திகேயன்…
“அப்படீன்னா சுதந்திரம் அப்படீங்கற பேர்ல நீங்க செய்ய விரும்பறது என்ன? குடிச்சிட்டு கூத்தடிக்கறதா இல்ல நினைச்சவன் கூட எல்லாம் போறதா? நீ இந்த அளவு விவாதம் பண்றதால கேக்கறேன்… இப்போ பப்ல ஹோட்டல்ல பாரு… ஆண்களை விடவும் பெண்கள் கூட்டம் தான் அதிகம்… கண்றாவியா அப்படி அலையறதுக்கு பேர் தான் பெண் சுதந்திரமா?”
“காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாத்தான் தெரியும் கார்த்திகேயன் சார்… சாதிக்கற எத்தனையோ பெண்கள் இருக்க உங்களுக்கு ஏன் ஒரு சிறு வட்டம் மட்டும் தெரியுது? அப்படீன்னா உங்க கண்ணுல தானே கோளாறு? என்னையே எடுத்துகோங்க… நானும் இந்த துறைல ஏதாவது சாதிக்கனும்ன்னு நினைக்கிறேன்… இன்னைக்கு காலைல ஒரு பேட்டி ஒளிபரப்பாகி இருக்குமே… அதுக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைச்சு இருக்கு தெரியுமா? ஆனா உங்க மாதிரி ஆளுங்க தான் ஸ்பீட் பிரேக்கரே…” இப்படி அவனை நேரடியாக தாக்கவும் அவனது ஈகோ விழித்து கொண்டது!
“எது? கேனத்தனமா அணு மின்சாரம் வேண்டாம்னு ஒரு பேட்டி எடுத்தியே அதுவா?”
“அண்ணா… என்னன்னா சீரியஸா பேசாத… அவ சின்ன பொண்ணு…” வைஷ்ணவி பயந்து அவனது கோபத்திற்கு அணை போட நினைக்க…
“விவாதம்ன்னு வந்துட்டதுக்கப்புறம் சின்ன பொண்ணு என்ன பெரிய பொண்ணு என்ன வைஷு?” அவனால் பின்வாங்க முடியாது என்பதை அறிவித்தான்!
“அண்ணி… கொஞ்ச நேரம் இருங்க… தப்பு இல்ல… கருத்து ஒத்து போகலைன்னா இந்த மாதிரி விவாதம் வர்றது இயற்கைதானே…” என்று வைஷ்ணவியிடம் கூறி விட்டு கார்த்திகேயனிடம் திரும்பி, “எதை கேனத்தனம்ன்னு சொல்றீங்க?” என்று தானும் விவாதத்திற்கு தயார் என்பதை அறிவிக்க…
“நீ எடுத்த பேட்டிய தான்…” திவியின் முகத்தில் கோபம் கனன்றது!
“எப்பிடி நீங்க அப்படி சொல்றீங்க? ஒரே ஒரு கேள்வி… உங்களால அணு கழிவுக்கு ஒரு விடை சொல்ல முடியுமா?”
“ஏம்மா… நீயே இந்த அளவு யோசிக்கும் போது விஞ்ஞானிகள் எல்லாம் யோசிக்க மாட்டாங்களா? Nuclear Criticality Safety, Radiation Safety, Thermal Hydraulic safety, Structural integrity Safety ன்னு எவ்வளவோ இருக்கு… அதுவும் இல்லாம நியூகிளியர் வேஸ்ட் மேனேஜ்மென்ட் தனியா இருக்கு… நீங்க இப்படி பண்றது எல்லாம் நாடு உருப்படாம போறதுக்கு துணை போறதுதான்! இவ்வளவு சொல்றியே பிளாஸ்டிக்க டிஸ்போஸ் பண்ண உருப்படியா ஏதாவது வழி இருக்கா? நீ சொல்ற அணு உலைய விட ஆபத்தானது இந்த பிளாஸ்டிக்… அதை யூஸ் பண்ணாம இருக்காங்களா? இல்ல அதை எரிக்காம தான் இருக்காங்களா? ஒன்னு தெரியுமா… பிளாஸ்டிக்க எரிக்கும் போது வெளிப்படர டைஆக்சேன் ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் டிராவல் பண்ணும்… அதாவது கன்னியாகுமரில எரிச்சா சென்னைல இருக்கவங்களுக்கு புற்றுநோய் வரலாம்… அது தெரியுமா? ஒரு விஷயம், அந்த அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கறவங்க பேனர் கட்டறாங்களா இல்லையா?”
“ம்ம்ம் ஆமா கட்டுவாங்க…” முறைத்து கொண்டே கூற…
“அந்த பேனர்ல தாலியம்ன்னு ஒரு கெமிக்கல் கலந்து இருக்கு தெரியுமா? அதை சுவாசிச்சுகிட்டே இருக்கவங்க சீக்கிரம் பரலோகம் போக வேண்டியது தான்… ஸ்லோ பாய்சன்… ஓர் ஊர்ன்னு எடுத்துகிட்டா கல்யாணத்துக்கு பேனர் கருமாதிக்கும் பேனர்… எம்எல்ஏ தும்மின்னா கூட பேனர் கட்டுறாங்க… இதுல எல்லாம் சீர்கேடாத சுற்றுபுறம் தான் அணு உலைனால சீர்கெடுதா?”
“இதெல்லாம் வெற்று விவாதம்… தலைமுறை எல்லாத்தையும் பாதிக்கற விஷயம் அணு உலை… அந்த ரேடியேஷன் புற்றுநோயை உண்டாக்க கூடியது கார்த்திகேயன் சார்… அவன் கொஞ்சம் ஊர கெடுத்தான் நான் என் பங்குக்கு நாசம் செய்ய வேண்டாமான்னு சொல்ல வரீங்க… அதுதானே?”
“இது தான் கேனதனம்ன்னு சொன்னேன்… ஒரு சின்ன எக்சாம்பில் சொல்றேன்… நாலாயிரம் எக்ஸ்ரே மெஷின், முன்னூறு செல்போன் டவர் சேர்ந்தா ஒரு சின்ன அணு உலைக்கு சமம் அது தெரியுமா உனக்கு? உன்னால முதல்ல செல்போன் யூஸ் பண்ணாம இருக்க முடியுமா? ரேடியேஷன் பத்தி நீ பேசறியா? அணு உலை, அணு குண்டு ரெண்டையும் குழப்பிக்கறவங்க தான் இந்த வேலைய பண்ணிட்டு இருக்காங்க… அணு உலைக்கு யுரேனியம் 2-3 % செறிவு இருந்தா போதும்… ஆனா அணு குண்டு செய்ய தொண்ணூறு சதவித செறிவு வேணும் திவ்யா… இப்போ இருக்கற நிலக்கரி, டீசல் எல்லாம் இன்னும் அறுபது வருஷத்துக்கு தான் வரும்… அதுக்கப்புறம் கரண்ட்க்கு என்ன பண்ண போறோம்? அதுவும் இல்லாம அணு உலைங்கறது செயின் ரியாக்ஷன்… ஆரம்பிச்சாச்சு… அதை நிறுத்த முடியாது… அதுனால நமக்கு நன்மைதான்… எந்த இடத்தில தான் ரிஸ்க் இல்ல… அது மாதிரியான ரிஸ்க் தான் இங்கயும் இருக்கறது!”
“சார்… அடக்குமுறை சக்திகள் மக்கள் வாயை மூடுவது என்பது ஒன்றும் புதிது இல்லை… இன்னொருத்தனுக்குப் புற்று நோய் வந்தாலும் பரவாயில்லை நான் ஏசி காற்றில் குளிர்கிறேன் என்பது ஈனத்தனம்… இப்படி சொல்றவங்கள கொண்டு போய் கூடன்குளத்துல உக்கார வைக்கணும்… அப்போ எப்பிடி இப்படி சொல்வீங்கன்னு பார்க்கலாம்!” கடுப்பாகி கூறினாள் திவி!
“ஏன் திவ்யா… கல்பாக்கம் என்ன ஆயிரம் மைல் தள்ளியா இருக்கு? பக்கத்துல தானே… எங்களை விட சென்னை மக்கள் இன்னும் பக்கத்துல இருக்காங்க… இத்தன வருஷமா கல்பாக்கத்துக்கு பக்கத்துல நாங்க குப்பை கொட்டலியா… சுனாமி வந்தப்போ கூட ஒரு சின்ன டேமேஜ் கூட ஏற்படல அது தெரியுமா உனக்கு?”
“சரி இப்போ என்ன சொல்ல வரீங்க கார்த்திகேயன் சார்?” கோபம் அதிகமாகி ஒரு புள்ளிக்கு வந்து சேர்ந்தாள் திவி! வைஷ்ணவி தடுத்து கொண்டே இருக்க ஷாலினியோ இவர்கள் இருவரும் என்ன பேசி கொண்டு இருக்கிறார்கள் என்பது கூட புரியாமல் இருந்தாள்… அவளை சொல்லியும் தவறில்லை… அவளுக்கு தெரிந்தது எல்லாம் எப்படி அழகான பணக்கார பெண்ணாக இருப்பது எப்படி என்பது மட்டும் தான்! அவளுக்கு போதிக்கப்பட்டதும் அவைதான்!
“மீடியால பேமஸ் ஆகணும்னா இப்படி எல்லாம் பேசனும்ன்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு… உன்னை மாதிரி உப்புக்கு ஆகாத பெமினிசம் பேசணும், இந்த மாதிரி விஷயங்களை ஊதி பெருசாக்கி நாட்டோட முன்னேற்றத்த தடுக்கணும்… சுதந்திரம்ன்னு சொல்லிக்கிட்டு குடிச்சிட்டு ஊர் சுத்தணும்! இதுதானே நீங்க எல்லாரும் பண்றது?”
“ஏன்? நான் குடிச்சத நீங்க பார்த்தீங்களா?” சூடாக வந்து விழுந்தது நறுக்கென்ற கேள்வி! அப்போதுதான் உள்ளே நுழைந்தான் ஸ்ரீராம்!
“உன்னைன்னு சொல்லல… பொதுவா சொல்றேன்…” அலட்சியமாக கார்த்திகேயன் கூற…
“அண்ணா… நீ இப்போ என்ன பேசிட்டு இருக்க? வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட என்ன அண்ணா இப்படி பேசற? நீ பேசறது சரி கிடையாதுண்ணா…” அவளது வயிற்றில் பூச்சி பறந்தது! திவியோ பிடிவாதக்காரி! இது எதில் போய் முடியுமோ என்று இருந்தது! திவ்யா அவளை கையமர்த்தி விட்டு…
“பொதுவா சொல்றத பொது மேடைல போய் சொல்லுங்க… என்னை பத்தி என்ன தெரியும்ன்னு நீங்க இப்படி சொல்லலாம்?” சூடாகவே கேட்டாள்!
“ஹே திவி… என்னடா நடக்குது இங்க?” அவனுக்கு இருவரும் செய்த விவாதம் பற்றி தெரியாததால் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தான்! ஆனால் அதை பற்றி கவலை படாமல் கார்த்திகேயன்…
“சரி சொல்லு… நான் தெரிஞ்சுக்கறேன்… உன்னை பத்தி…” நக்கலாகவே கூற…
“கண்டவங்க கிட்ட எல்லாம் நான் என்னை பத்தி சொல்லிக்கனும்ன்னு அவசியம் இல்ல…” கொதித்தது அவளது வார்த்தைகள்!
“திவி… என்ன பேசற நீ…” அதிர்ச்சியாக ஸ்ரீராம் அவளை அடக்க பார்க்க…
“ஸ்ரீ… நீ பேசாத… பொதுவா பேசறேன்னு கண்டபடி பேசறவங்க கண்டவங்க இல்லாம வேற யாராம்?” கோபத்தில் வெடித்தாள்! ஸ்ரீராம் இருதலை கொள்ளி எறும்பாக…
“அண்ணா என்ன அண்ணா? நான் ஒரு போன் பேசிட்டு வர்றதுக்குள்ள என்ன ஆச்சு? திவி இப்படி பேசறவ கிடையாதே… இவ ஒன்னு பேசினா கண்டிப்பா அதுல நியாயம் இருக்கும்… அதே மாதிரி அவளோட முடிவு என்னைக்குமே தப்பா போனதே கிடையாது அண்ணா… ஆனா ஏன் இப்படி இப்போ…” தோழியின் கோபம் புரியாமல் கோபத்துக்கு காரணமானவனிடமே முறையிட்டான்! அந்த நேரத்திலும், இப்படி விட்டு தராத சிநேகமா? என்று கார்த்திகேயனால் வியக்கத்தான் முடிந்தது!
“ஒரு சாதாரணமான பேச்ச இந்த அளவு சீரியஸா எடுத்துகிட்டு வெடிக்கறது அவங்க தான் ஸ்ரீராம்… அதுக்கு நான் பண்றது?” திவ்யாவிடம் காட்டிய அலட்சியத்தை இவனிடம் காட்ட முடியவில்லை கார்த்திகேயனால்!
“நானும் வேணாம் வேணாம்ன்னு சொல்லிகிட்டே தான் இருக்கேன் ஸ்ரீ… ரெண்டு பேரும் கேக்கவே மாட்டேங்கறாங்க… நீயாவது சொல்லு ஸ்ரீ…” இருவராலும் கைவிடப்பட்ட நிலையில் ஸ்ரீயிடம் உதவி கேட்டாள் வைஷ்ணவி!
“வந்த இடத்துல என்னடா குட்டி இது… காம் டௌன்டா… தங்கம்ல…” திவ்யாவை சமாதானபடுத்த ஸ்ரீராம் முயல… மறுபடி கார்த்திகேயனுக்கு செல்பேசி அழைப்பு வர அதை எடுத்து அவன் பேசிக்கொண்டு ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தான்!
எங்கோ பார்த்தவள்… கார்த்திகேயனை திரும்பியும் பார்க்காமல்…
“கிளம்பலாம் ஸ்ரீ…”
“ஹேய் கண்ணா… என்னடா இது… சண்டை போட்டுக்கிட்டு என்னப்பா சின்ன பிள்ளையா நீ?” ஸ்ரீராம் சமாதானப்படுத்த முடியாமல் கார்த்திகேயனை உள்ளுக்குள் கோபத்துடன் பார்த்தவாறு திவ்யாவிடம் கெஞ்சி கொண்டிருந்தான்! வைஷ்ணவியும் உள்ளே இருந்து பரபரத்து வந்த மங்கையும் நொந்து போய் அவனை முறைத்தவாறே திவியை எப்படியாவது தடுத்து நிறுத்த முயல அனைத்தையும் தவிர்த்து விட்டு சென்றாள்!
கடைசியாக ஒரு முறை திவ்யா திரும்பி கார்த்திகேயனை பார்க்க அதே நேரம் அவனும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்! அப்போது அவன் அவள் கண்களில் பார்த்தது என்ன? வஞ்சமா? கோபமா? ஆற்றாமையா? வலியா? எதுவென்று பகுத்தறிய முடியாத ஒன்று அவனை தாக்கியது! உயிர் வரை ஊடுருவிய அந்த பார்வை கார்த்திகேயனுக்கு எதையோ உணர்த்தியது!
விதியின் வசப்பட்ட வழி… திரும்ப இயலாத ஒரு வழி பாதை…
அத்தியாயம் ஆறு
“அம்மா… நான் ஒத்துக்க மாட்டேன்… நான் இந்த பீல்ட்ல ஏதாவது சாதிக்கனும்மா… அம்மா ப்ளீஸ்… அப்பா கிட்ட சொல்லுங்க…” குணவதியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள் திவ்யா!
“எப்படியா இருந்தாலும் கல்யாணம்ன்னு ஒன்னு நீ பண்ணி தான் ஆகணும் திவி… இப்போவே உனக்கு இருபத்து மூணு வயசு… உன் வயசுல எனக்கு கல்யாணமாகி விகாஷும் நீயும் பிறந்துட்டீங்க… சொன்னா புரிஞ்சுக்கோ கண்ணா…” குணவதியும் அவளை சம்மதிக்க வைக்க வழி தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள்!
“அம்மா அதெல்லாம் அந்த காலம்! இப்போ பொண்ணுங்க எல்லாம் இருபத்து எட்டு ஒன்பதுல தான் கல்யாணத்த பத்தி நினைக்கறாங்க… என்னோட இப்போதைய குறிக்கோள் எல்லாம் நியூஸ் ஏஜென்சி ஒன்னு தொடங்கனும்… இந்த நேரத்துல டைவர்ட் பண்ணாதீங்க… ப்ளீஸ்…” வீட்டில் அனைவரும் அமர்ந்து எப்படியாவது இந்த கல்லை கரைத்து திருமணத்திற்கு ஒப்ப வைக்க முடியுமா என்று தலையை பியைத்து கொண்டிருந்தனர்!
“சரி நீ வெளிய போனா டைவர்ட் ஆகும்ன்னு நினைச்சா ஸ்ரீராம் இருக்கவே இருக்கான்… அவனையே கல்யாணம் பண்ணிக்கோ… உன்னை நல்லா புரிஞ்சவன் தங்கம்… கண்டிப்பா உனக்கு அவன் ஹெல்ப்பா தான் இருப்பான்! ஆனா நீ தான் இல்லாத செண்டிமெண்ட் எல்லாம் பேசற!” குணவதி இப்படி கூறவும்… ங்கே என்று விழித்தான் ஸ்ரீராம்!
“மா… அவனை நான் என்னைக்குமே அப்படி நினைச்சதே இல்லை… ஏம்மா பிரெண்ட்ஷிப்ப அசிங்கபடுத்தற?” திவ்யாவின் குரலில் டன் கணக்கில் எரிச்சல் இருந்தது!
“அத்தை… ப்ளீஸ்… உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா அவ எனக்கு தங்கை மாதிரி! அவளை பார்க்க வர்றதா சொன்ன வரனையே வர சொல்லுங்க… இவளை நான் பேசி கரெக்ட் பண்றேன்…” அவளிடம் மற்றவர்கள் அறியாதவாறு கண்ணை சிமிட்டி விட்டு அவனது அத்தையிடம் கூறினான்! அதுவரை மெளனமாக கேட்டு கொண்டிருந்த ராமகிருஷ்ணன், திவ்யாவின் தந்தை…
“எது எப்படியோ ஸ்ரீராம்… வர்ற மாப்பிள்ளை ஓகே ஆகிட்டதுன்னா உடனே கல்யாணம்தான்… இதுல எந்த விதமான மாற்று கருத்துக்கும் இடமில்ல…” வேறு பேச்சுவார்த்தைக்கு தான் தயார் இல்லை என்பதை முடிவாக அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்க சென்றுவிட்டார்! ராமகிருஷ்ணன் பேசுவது குறைவு தான் என்றாலும் முடிவுகள் தீர்க்கமானதாகவே இருக்கும்… வீட்டில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து பேசுவதோ அநாவசியமாக குழைவதோ அவருக்கு சரி வராது! கருத்துக்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்… கண்டிப்பும் சேர்ந்து கொண்டதால் விகாஷும், திவ்யாவும் அவர்களது தந்தையிடம் பேசவே அஞ்சுவார்கள்! ஸ்ரீராம் கொஞ்சம் செல்லம்… பெற்றோர் அதாவது ராமகிருஷ்ணனின் தங்கையும் தங்கை கணவரும் இறந்து குழந்தையிலேயே மாமனின் மார்பை தஞ்சமடைந்த காரணமும் கூட! அப்போதிலிருந்து திவ்யாவின் உடன்பிறவாத சகோதரனாகிவிட்டான்! தோழமையும் சேர இணை பிரியாத பிணைப்பு அவர்களிடம்!
“மாமா சொல்லிட்டாங்க ஸ்ரீ… இவளை சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான் கண்ணா… ப்ளீஸ் மா…” குணவதி அவரது பங்குக்கு கெஞ்சிவிட்டு போனார்! ஒப்புக்கு சப்பாணியாக இருந்த ரக்ஷிதா திவ்யாவை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவாறே அவளது அறைக்கு சென்றாள்… விகாஷை சீக்கிரம் அறைக்கு வரும்படி பார்வையால் உத்தரவிட்டு விட்டு!
அவளும் போன பின்னரே விகாஷ் அவனது திருவாய் மலர்ந்து அருளினான்! அவனுக்கு அவனது மனைவி ரக்ஷிதாவிடம் கொஞ்சம்… இல்லை இல்லை அதிகமாகவே பயம்! ரக்ஷிதா, அவனது பெற்றோர் இருக்கும் போதோ திவ்யா இருக்கும் போதோ எதுவும் பேசவே மாட்டாள் ஆனால் அவர்கள் இல்லாத நேரமாக பார்த்து கணவனை உண்டு இல்லையென்று செய்து விடுவாள்! அதனால் அவன் எப்போதும் அவள் இருக்கிறாளா என்பதை பார்த்து விட்டே பேசுவது! அவளும் என்றைக்கும் புகுந்த வீட்டு சொந்தங்களோடு கலந்து போனதுமில்லை பேசியதுமில்லை! அவளுக்கு அவள் உலகம்… தனி உலகம்… அவளது தோழிகள், அவளது பெற்றோர், கடைசியாக விகாஷ்!
திருமணமாகி நான்கு ஆண்டுகள் முடிந்து இருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமலே இருந்து வருபவள்! ஆனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் நெருங்கிய நண்பரான ராஜகோபாலின் மருமகள் வைஷ்ணவி, ரக்ஷிதாவுக்கு நேர் எதிர்! சொந்தங்களை அரவணைத்து போவதிலும் யாருக்கும் விரோதமில்லாமல் உறவு முறைகளை நிர்வகித்து செல்வதிலும் அவளுக்கு நிகர் அவள் தான் என்று அவ்வப்போது குணவதி மனமுவந்து பாராட்டுவார்! அப்போதெல்லாம் தன் மகனிடம் அவர் சொல்வதும் ஒன்று தான்! ‘குழந்தை பிறந்து ஐந்து வருடமாகி விட்டால் பாசம் தானாக வந்து விடும் விகாஷ்… கவலைபடாதே’ என்பது தான் அது! ஆனாலும் வைஷ்ணவியை திருமணம் செய்து கொடுத்த நாளில் இருந்தே அவளை அறிந்து இருப்பவரால் எப்படி இந்த பெண் இப்படி அருமையாக இருக்கிறாள் என்று வியக்காமல் இருந்தது இல்லை! திவ்யாவிடம் கூறுவதும் வைஷ்ணவியை ஒப்புமை படுத்திதான்! அதனாலேயே ரக்ஷிதாவை விடவும் வைஷ்ணவியிடம் ஒட்டுதல் அதிகம் திவ்யாவுக்கு!
“ஏன்டா குட்டி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற? யாரையாச்சும் மனசுல நினைச்சுட்டு இருக்கியா? என் கிட்ட சொல்லு குட்டி… நான் பார்த்துக்கறேன்… பயப்படாதே…” ஆதூரமாக விகாஷ் சொல்ல…
“இல்லண்ணா… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… வேணும்னா இவனை கேட்டு பார்த்துகோங்க…” என்று ஸ்ரீராமை கை காட்டி விட்டாள் திவ்யா!
“ஏன்டா உன்னை பத்தி தெரிஞ்சுக்க இந்த மடையன் கிட்ட தான் கேக்கணுமா? நீ என் தங்கை இல்லையா?”
“அப்படியா… ஆஹா ஸ்ரீ… விக்கிக்கு புதுசா நினைப்பு வந்துடுச்சு… அண்ணன்னு… எப்படி விக்கிண்ணா இந்த நினைப்பு வந்துச்சு… இதுக்கு உங்க அருமை மனைவியார் மேதகு ரக்ஷிதா அம்மையார் கிட்ட அனுமதி வாங்கீட்டீங்களா?” நக்கலாக திவ்யா கேட்கவும் அவனுக்கும் மனது உறுத்தவே செய்தது!
ஏனென்றால் அவள் கல்லூரி செல்லும் போது ஒரு நாள் ஸ்ரீராம் உடல்நிலை சரி இல்லாததால் விடுப்பு எடுத்துக்கொள்ள அவளை கல்லூரிக்கு அழைத்து சென்ற ஒரே காரணத்தால் ‘நீ என்ன டிரைவரா’ என்று கூறி வீட்டில் பெரிய சண்டைக்கு வித்திட்டவள் ரக்ஷிதா! அவளை பொறுத்தவரை அவளது கணவன் அவளுக்கு மட்டுமே உரியவன்! அவளது சிறுபிள்ளைத்தனமான வாதங்களுக்கு குணவதி செவி சாய்க்க மாட்டாள் ஆனால் திவ்யாவுக்கும் ரக்ஷிதாவுக்கும் எப்போதும் முட்டி கொள்ளும்! தவறுகளை தட்டி கேட்கும் திவ்யாவின் குணமும் திவ்யாவின் அழகை, திறமையை, புகழை பார்த்து பொறாமை கொள்ளும் அண்ணியின் குணமும் ஒத்து போகாதல்லவா!
“குட்டி ப்ளீஸ்… என்னோட நிலைமை உனக்கு புரியறது இல்லடா… கொஞ்சம் புரிஞ்சுக்கோடா…”
“என்னண்ணா எனக்கு புரியறது இல்ல… உன் மனைவியா இருந்தாலும் அவங்க தப்பு பண்ணினா கண்டிக்கனும்… அதை விட்டுட்டு செல்லம் கொஞ்சிகிட்டு அவங்க முந்தானை பின்னால மறைஞ்சுகிட்டு… ச்சே… அம்மா பாவம்ணா…”
“என்னை என்னடா குட்டி பண்ண சொல்ற? ஏதாவது சொன்னா பெரிய சண்டைதான் வரும்… அப்புறம் கோபிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவா… அம்மா சும்மா இருப்பாங்களா? போய் கூட்டிகிட்டு வான்னு என்னை உயிரை வாங்கிடுவாங்க… அவ பாதி உயிரை வாங்குறா நீங்க பாதி உயிரை வாங்குறீங்க… நானும் என்னதான் பண்றது?” நொந்து போய் கூறியவனை பார்த்து அவளால் இன்னமும் கோபப்பட முடியவில்லை! ஸ்ரீராம் இடையிட்டு…
“திவிக்குட்டி… மேரேஜ்னா அப்படித்தான்டா… கொஞ்ச நாளைக்கு யாராச்சும் ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிதான் போயாகணும்… இங்க விக்கி அட்ஜஸ்ட் பண்றான்… இதுல என்ன இருக்கு… கொஞ்ச நாள் போனா சரியா போய்டும்… அப்புறம் பாரு ரக்ஷிதா உன் மேல காட்டுற பாசத்த உன்னாலேயே தாங்க முடியாது… போதும் போதும்னு சொல்ல போற…” என்று கூறி சிரிக்கவும்…
“போடா… உனக்கு எப்பவும் ஜோக் தான்…” என்று அவனை தலையணையால் அடித்தாள் திவ்யா!
“சரி மச்சான்… அந்த பாவப்பட்ட பிறவி யாரு? என்ன? ஒண்ணுமே சொல்லல…” ஸ்ரீ இப்போதாவது உனக்கு கேட்க தோன்றியதே!
“சுஷ்ருதா பார்மா…” என்று விகாஷ் ஆரம்பித்தபோதே இருவருக்கும் தூக்கி வாரி போட்டது! அவர்கள் பாண்டி போய் விட்டு வந்து பத்து நாட்கள் முடிந்து இருந்தது! கார்த்திகேயனை பற்றி… சுஷ்ருதா பற்றி இருவரும் சேகரித்த தகவல்கள் ஆதாரங்கள்… இருவரையும் பெரும் பீதியில் ஆழ்த்தி இருந்தது! வெளியிடலாமா வேண்டாமா என்று தவித்து கொண்டிருந்தனர்! சுஷ்ருதா என்ற பெயரே இருவருக்கும் அலர்ஜியாக இருந்தது!
“என்னது!” இருவரும் ஒரே குரலில் கத்த…
“ஹே… என்னப்பா… ரெண்டு பேரும் ஒரே மாதிரி எக்ஸ்ப்ரஷன் குடுக்கறீங்க? சுஷ்ருதா பார்ட்னர் மாசிலாமணியோட சன் அரவிந்தன் தான் பையன்…” என்று கூறவும் அந்த அதிர்ச்சி குறைந்தபாடில்லை!
“விக்கி… முதல்லயே சொல்லி இருக்கலாம்ல…”
“இதுல என்னடா சொல்றதுக்கு இருக்கு? ஒரு வாரமா ப்ரோசெஸ் போயிட்டு இருந்துச்சு… ஜாதகம் எல்லாம் பார்த்து பொருந்தி வந்தாதானே சொல்ல முடியும்! அரவிந்தன் ஜாதகம் தான் பக்கா மேட்சிங்கா இருக்குதாம் ஸ்ரீ…” என்று சொல்லவும் திவ்யாவுக்கு ஏனோ அந்த பேச்சே பிடிக்கவில்லை! கார்த்திகேயனை பார்க்க வேண்டி இருக்குமோ என்ற கோபமாக இருக்கும் என்று அவளே நினைத்து கொண்டாள்!
“பொண்ணு பார்க்க வீட்டுக்கு எப்போ வர்றாங்க விக்கி?” ஸ்ரீராம் வினவினான்!
“வீட்டுக்கு வரல ஸ்ரீ… ராஜகோபால் மாமாவுக்கு இன்னைக்கு தான் சஷ்டியப்த பூர்த்தி… தெரியும்ல…”
“ஆமாம்… வைஷு அத்தனை தடவை வந்து திவிய கொஞ்சிட்டு சொல்லிட்டு போனாங்களே…” அவளை ஓரக்கண்ணில் பார்த்து கொண்டே குறும்பாக அவன் கூற திவ்யாவின் முகமோ கடுத்தது!
“அந்த பங்க்ஷனுக்கு அவங்க வர்றாங்க… அப்படியே அங்க வச்சு பார்த்துக்கலாம்ன்னு வைஷு தான் ஐடியா குடுத்தாப்ல…” இது வைஷு அண்ணியின் வேலைதானா என்று மனம் குமுறினாள் திவ்யா!
“ரொம்ப முக்கியம்…” என்று கடுத்து விட்டு, “அண்ணா எனக்கு மாப்பிள்ளைய பிடிக்கலைன்னா கல்யாணத்துக்கு ஒப்புக்க மாட்டேன்…” என்று அறிவிக்க…
“பிடிக்கலைன்னாவா… சான்சே இல்ல… அரவிந்தன் எனக்கு நல்லா தெரிந்தவர்… கார்த்திக் அளவுக்கு பிரெண்ட் இல்லைன்னாலும் அரவிந்தன் கிட்ட நல்ல அறிமுகம் இருக்கு திவிக்குட்டி… வெரி ஹேன்சம்… எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? சுஷ்ருதால பார்ட்னர்னா சும்மாவா? கல்யாணத்த பத்தி நினைச்சு கூட பார்க்கலைன்னு சொல்லிட்டு இருந்தாப்ல… பொண்ணு நீ தான்னு சொன்னவுடனே ஓகே சொல்லிட்டாப்ல திவிக்குட்டி… யு ஆர் வெரி லக்கி யு நோ…” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு போக முயல…
“அண்ணா… எனக்கு பிடிக்கலைன்னா நோ தான்…” கொஞ்சம் குரலை அதிகப்படுத்தி கத்த அவளது வாயை அடைத்தான் ஸ்ரீ!
“இதையெல்லாம் சொல்லிட்டு இருக்காத எருமை… பிடிக்கலைன்னா அப்புறம் இதை பேசிக்கலாம்… எப்படியா இருந்தாலும் நான் இருக்கேன்… பார்த்துக்கலாம்… ஓகே வா”
“எப்போ பார்ப்ப ஸ்ரீ… அந்த அரவிந்தன் மடையன் என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா?” அவனது தலையில் குஷனை போட்டுவிட்டு சலித்து கொண்டாள்!
“டோன்ட் ஒர்ரி… அப்படீன்னா ஒரு ஐடியா…” ஸ்ரீயின் தலையில் பல்பு எரிந்தது!
“என்ன சொல்லு என்ன சொல்லு…” அவசரமாக திவ்யா கேட்க…
“நீ என்னையே கல்யாணம் பண்ணிக்கோ…” என்று குறும்பாக கண்ணை சிமிட்டி கூறி விட்டு சிரிக்க…
“சனியனே… உனக்கு இப்படி வேற நினைப்பு இருக்கா? இரு மவனே இரு… சாஹித்யாக்கு போன் பண்றேன்…” என்று செல்பேசியை எடுக்க முயல…
“ஆத்தாஆஆஆஆ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்…” என்று கூறி விட்டு தப்பித்து ஓடினான்! திவ்யாவின் முகத்தில் மென்புன்னகை…

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!