அத்தியாயம் 1
புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை.
நகரின் பரபரப்பிலிருந்து சுமார் பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில், காலத்தின் கறை படிந்தவொரு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டு இருந்தது, பொற்பனைக்கோட்டை!
சுமார் 1.6 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அந்த வட்ட வடிவக் கோட்டை, இன்று மண்ணுக்குள் புதைந்து பிரம்மாண்டமான மணல் மேடாகக் காட்சியளித்தது. அதன் சிதைந்த செங்கல் சுவர்களும், தூர்ந்துபோன அகழியும் ஒரு காலத்தில் அங்கே ஒரு பேரரசு வாழ்ந்ததற்கான அடையாளமாக நிற்கிறது.
உள்ளூர் மக்களுக்கு அது முனி நடமாடும் கோட்டை, மன்னர் வாழ்ந்த மாளிகை மேடு.
அந்த நிசப்தமான சூழலில், பறவைகளின் சப்தங்கள் மட்டுமே கீச் கீச் என்று கேட்டுக் கொண்டிருந்தது!
ஆங்காங்கே சிதைந்த நிலையில் வெளித்தெரியும் இடிபாடுகளும், பாசி படிந்த செங்கல் சுவர்களும், நாங்கள் வாழ்ந்தோம் என்று காலம் சொல்லும் மௌன சாட்சிகள்.
மண்டையை பிளக்கும் மதிய வெயில். நாற்பது டிகிரி செல்சியஸைத் தொட்டிருந்தது. நிலம் தகித்துக் கொண்டிருந்தது. காற்றில் ஈரப்பதமே இல்லை. மூச்சை உள்ளிழுத்தால் வெறும் புழுதியின் வாசமும், காய்ந்த மண்ணின் வெப்பமுமே நுரையீரலை நிரப்பியது.
ஆனால், அந்த நான்கு மீட்டர் ஆழமுள்ள அகழ்வாராய்ச்சிக் குழிக்குள் (Trench) நின்றிருந்த ஆதிராவுக்கு, அந்த வெப்பம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவளது தோழிகள் பலரும் சென்னையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து மென்பொருள் கோடுகளைச் சரிசெய்து கொண்டிருக்க, ஆதிரா இங்கே முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்வின் தடயங்களைக் கவனமாகத் தேடிக்கொண்டிருந்தாள்.
ஆதிரா, இருபத்தியெட்டு வயது. உதவித் தொல்பொருள் ஆய்வாளர். இப்போது அவர்களது ஆய்வு பொற்பனைகோட்டையில்! கூடவே பிஎச்டி செய்து கொண்டிருக்கிறாள். அவளது தீசிஸ்ஸும் இங்கு தான்!
“மேடம், பன்னிரெண்டாவது கிரிட்ல லேயர்ல மண்ணோட டெக்ஸ்சர் (Texture) மாறுது. கொஞ்சம் களிமண் கலந்த செம்மண்ணா தெரியுது…” என்றான் கதிர்.
கதிர் உடன் வேலை பார்ப்பவன். ஜியோ-இன்பர்மேட்டிக்ஸில் இளநிலை பொறியியல் முடித்த டிஜிட்டல் சர்வேயர். கையில் இருந்த டோட்டல் ஸ்டேஷன் கருவியை ட்ரைபாடில் பொருத்தி, ஒவ்வொரு அங்குலத்தையும் டிஜிட்டல் வரைபடமாக மாற்றிக் கொண்டிருந்தான். டோட்டல் ஸ்டேஷன் என்பது டிஜிட்டல் சர்வே மெஷின். நீள அகலத்தை துல்லியமாக அளந்து விடும்.
ஆதிரா நிமிர்ந்தாள். அவளது முகத்தில் வழிந்த வியர்வை, மண்ணோடு கலந்து அவளது கன்னங்களில் கரிய கோடுகளாக மாறியிருந்தது.
“கதிர், களிமண் அடுக்கு வந்தா அங்கே நீர்நிலை இருந்திருக்கலாம், இல்லன்னா யாரோ அந்த இடத்தைத் தோண்டி மூடியிருக்கலாம். மண்ணோட நிறம் மாறும்போது நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். டிராவல் (Trowel) வேணாம், டென்டல் பிக் (Dental pick) எடுப்போம்…” என்றாள் ஆதிரா.
பெரிய கருவிகள் கொண்டு சுத்தம் செய்தால் பழங்காலப் பொருட்கள் சேதமடையலாம். ஆனால் டென்டல் பிக் என்பது பல் மருத்துவர்கள் பயன்படுத்துவதைப் போன்ற மிக நுணுக்கமான கருவி. அதைக் கொண்டு மிக மென்மையாக மண்ணைச் செதுக்கி, பொருட்களைச் சிதையாமல் வெளியே கொண்டு வரலாம். அதனால் கொஞ்சம் சென்சிடிவான பொருட்களுக்கு டென்டல் பிக் உபயோகப்படுத்துவது தொல்பொருள் ஆய்வாளர்களின் வழக்கம்.
குழிக்கு வெளியே அமர்ந்து, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகளை வகைப்படுத்திக் கொண்டிருந்தாள் மதி. மதி திறமையான எபிகிராபிஸ்ட். தமிழில் எம்பில், கல்வெட்டியல் பட்டயப் படிப்பும் முடித்தவள். கல்வெட்டுகள் மற்றும் மட்பாண்டங்களில் இருக்கும் பிராமி, தமிழி போன்ற பழங்கால எழுத்துக்களைப் வாசிப்பதில் வல்லவள்.
“ஆதிரா, இங்க பாரு! இந்த ரெட் ஸ்லிப்டு வேர் (Red Slipped Ware) துண்டுகள்ல ஏதோ கீறல்கள் இருக்கு. ஆனா இது தமிழி எழுத்தா இல்ல வெறும் குறியீடான்னு (Graffiti marks) தெரியல. கார்ன் பிளார் பவுடர் போட்டு தேய்ச்சுப் பார்த்தா தான் தெளிவா தெரியும்…” என்றாள் மதி.
“நேரம் எடுக்கும் மதி. ஆனா ஒவ்வொரு குறியீடும் முக்கியம். அவசரப்படாதே…” என்று ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளது அலைபேசி அருகிலிருந்த கல்மேட்டில் அதிர்ந்தது.
திரையில் அம்மா என்று வந்ததும் ஆதிரா பெருமூச்சு விட்டாள்.
“மதி, கொஞ்சம் இதைப் பிடி…” என்று தன் கையில் இருந்த பிரஷ்ஷைக் கொடுத்துவிட்டு, மேலே ஏறி வந்தாள்.
போனை ஆன் செய்தவள், “சொல்லுங்கம்மா…” என்றாள்.
“என்ன சொல்லணும் ஆதி? இருபத்தெட்டு வயசு முடியப்போகுது. இன்னும் எத்தனை நாள் அந்தப் மண்ணைத் தோண்டிகிட்டே கிடப்ப? உன்னைப் பெத்த பாவத்துக்கு நாங்க நிம்மதியா தூங்கி எத்தனை நாளாச்சு தெரியுமா?” மகாலட்சுமி பொரிந்தார். ஆதிராவின் அன்னை!
“ஏன் மா எடுத்தவுடனே இப்படி புலம்பற?” சலித்துக் கொண்டாள் ஆதிரா. இது அவளது தாயின் வழக்கம் தானே என்றாலும் வேலையின் அழுத்தமும், உடல் சோர்வும் அவளை சலித்துக் கொள்ள வைத்தன.
“சரி டா. நான் புலம்பல. அந்த அருப்புக்கோட்டை மாப்பிள்ளை ஜாதகம் நல்லா பொருந்தி வருதாம். பையன் ஆஸ்திரேலியாவுல பெரிய எம்.என்.சி கம்பெனியில இருக்கான். நீ மட்டும் சரின்னு சொல்லு, உங்க அப்பா இன்னைக்கே பேசி முடிச்சிடுவாரு…” கொஞ்சம் இறங்கி வந்தார் மகாலட்சுமி.
ஆதிரா நெற்றியை தடவிக்கொண்டாள். இவர்களை என்ன செய்வது? தனது வேலை இங்கிருக்கும் போது எங்கனம் ஆஸ்திரேலியா போக?
“அம்மா, நான் அங்கே போயிட்டு என்ன பண்றது? கங்காருவோட எலும்பைத் தோண்டி எடுக்கவா?” லேசாக சிரிப்பு வந்தது அவளுக்கு!
“உனக்கு சிரிப்பா இருக்கா?”
“பின்ன என்னம்மா? எனக்குத் தேவையானது இங்க தான் இருக்கு. அதை விட்டுட்டு ஆஸ்திரேலியா போக சொன்னா எப்படி? எனக்குத் தொல்லியல் துறைதான் உயிர்.”
பிடிவாதமாக கூறினாள். மகாலட்சுமி அந்த பக்கத்தில் தலைலடித்துக் கொண்டார்.
“மண்ணைத் தோண்டறது உனக்கு அவ்வளவு பெருமையான விஷயமா? உன் கலரெல்லாம் போறதுதான் மிச்சம். டெஸ்க் ஜாப் மாதிரி பாருடின்னா அதையே புடிச்சுகிட்டு தொங்கற!” எரிச்சலாக அவர் கூற,
“ஆபீஸ்ல ஏசி ரூம்ல உட்கார்ந்து ஃபைலை நகர்த்துறது எல்லாம் ஒரு வேலையா? நூற்றுக்கணக்கான வருஷ வரலாற்றைத் தோண்டி எடுக்குறது எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான வேலை தெரியுமா? நீங்க என்னடான்னா வெறும் மண்ணைத் தோண்டிகிட்டே இருக்கேன்னு சொல்றீங்க.”
“யார் வாழ்ந்தா உனக்கு என்ன ஆதி? செத்தவன் எல்லாம் செத்துப் போயிட்டான். நீ உயிரோட இருக்கிறவங்க வாழ்க்கையைப் பாரு. உங்க அப்பா நேத்து கூட ஜோசியர் கிட்ட போயிட்டு வந்தாரு. உனக்கு ராகு திசை நடக்குது, கொஞ்சம் பிரச்சனையான காலம்ன்னு சொன்னாரு. கல்யாணத்தைப் பண்ணிக்கம்மா… போற இடத்துல உனக்கு இதே வேலையை அந்தப் பையன் பார்த்துத் தருவானாம்.”
“அம்மா! ஆர்க்கியாலஜிங்கிறது ஒரு தவம். எத்தனையோ ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தன் இதே இடத்துல இதே மண்ணை மிதிச்சிருப்பான். அவன் சாப்பிட்ட பானை, அவன் வேட்டையாடுன ஆயுதம்னு அவனோட எச்சங்களை ஆராயறதுங்கறது எவ்வளவு சந்தோசம் தெரியுமா? இதெல்லாம் அந்தப் பையனுக்கு இது புரியுமா? அதுவுமில்லாம இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னோட பிஎச்டி முடியட்டும். பார்க்கலாம்…” என்று ஆதிரா வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறினாள்.
“சரி, உன் இஷ்டம். அப்புறம் உங்க அப்பா பிபி ஏறி ஆஸ்பத்திரியில படுத்தாக் கூட எங்களைக் பார்க்க வராத…” என்று கோபமாக போனை அணைத்தார் அம்மா.
ஆதிரா கண்களை மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றாள். அவளது பெற்றோருக்குத் தன் மகள் ஒரு பெரிய அரசு அதிகாரியாக இருப்பது பெருமைதான், ஆனால் அவளது லட்சியம் அவர்களுக்கு சுமையாகத் தெரிந்தது. முதுநிலை வரலாற்றில் தங்கப்பதக்கம் வென்று, டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கியாலாஜி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்தவள் அவள். இன்று உதவித் தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறாள். இதெல்லாம் அவர்களுக்கு வெறும் எண்களாகவும், காகிதங்களாகவும் மட்டுமே தெரிந்தன.
மீண்டும் குழிக்குள் இறங்கினாள் ஆதிரா.
“என்ன மேடம், மறுபடியும் கல்யாணப் பேச்சா?” என்றான் கதிர் மெல்லிய சிரிப்புடன்.
“உனக்குச் சிரிப்பா இருக்கா கதிர்?”
“அவாய்ட் பண்ண முடியாதுக்கா. முடிஞ்சா ஓகே சொல்லிருங்க. நிம்மதியா வேலை செய்யலாம்…” என்று ஐடியா கொடுத்தான்.
“எதுக்கு என் நிம்மதி போறதுக்கா? நல்லா ஐடியா சொன்ன போ…” என்று சலித்துக்கொண்டாள்.
“ஏன்க்கா? இந்த ப்ரோபெஷன்ல இருக்கவங்க மேரேஜ் பண்ணிக்கறதே இல்லையா? நீங்க பண்றது கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.” அவன் கூறுவதும் உண்மைதானே! இந்த வேலையில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதே இல்லையா?
ஆதிரா அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “கதிர், எனக்கு இந்த வேலைல இருக்க இண்டரஸ்ட் கல்யாணத்துல சுத்தமா இல்ல. அது சுமையா தெரியுது. அந்த சுமைய சுமக்க என்னால முடியாதுன்னு தோணுது. அதுவுமில்லாம அது ரொம்ப பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பை எடுத்துக்க நாம தயாரா இருக்கமான்னு நம்மளை நாமளே கேட்டுக்கணும். அதுக்கு நான் தயாரா இல்லை…” என்றாள்.
அவள் கூறுவதை பார்த்துக் கொண்டிருந்த மதி சிரித்தாள். அவள் அறிந்தது தானே! கதிருக்குத்தான் அவளது எண்ணவோட்டம் விசித்திரமாக இருந்தது. ஆஹா இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் இப்படித்தானா? அப்ப நமக்கு பொண்ணு கிடைக்குமா? என்று யோசித்தவன் முகத்தில் கலவர ரேகை படர்ந்தது.
“ஆதி, பையன் மூஞ்சில கலவரம் தெரியுது. என்ன கதிர்?” என்று சிரித்தபடி மதி கேட்க,
“பின்ன, பொண்ணுங்க எல்லாம் இப்படி யோசிக்க ஆரம்பிச்சுட்டா எங்களை மாதிரி பசங்க என்ன பண்ணுவோம்?” என்றவனின் குரலில் உண்மையாகவே பயம் இருந்தது.
“அது உன்னோட தலையெழுத்துடா தம்பி…” என்று மதி கூற, ஆதிரா சிரித்தாள்.
“எல்லாம் நேரம் தான்…” சலித்துக் கொண்ட கதிர், அவனது வேலையை தொடர, ஆதிரா மீண்டும் தன் பணியைத் தொடங்கினாள்.
மண்ணின் ஈரப்பதத்தை அளவிடும் கருவியைக் கொண்டு சோதித்தாள். திடீரென அவளது டிராவல் ஏதோவொரு கடினமான பொருளில் தட்டியது. கல் இல்லை, அது மட்பாண்டத்தின் சத்தம். மிக மென்மையாக மண்ணை அப்புறப்படுத்தினாள்.
அங்கே ஒரு விசித்திரமான பொருள் தென்பட்டது. இரண்டு கைகள் கொள்ளத்தக்க அளவு. ஆனால் அது ஒரு சாதாரண பானை ஓடு அல்ல. மிக மெல்லிய, கருப்பு நிறத்தில் கண்ணாடி போல மெருகூட்டப்பட்ட மட்பாண்டத் துண்டு. அதன் மேல்பரப்பில் ஒரு குறுவாளின் உருவம் நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
“மதி! இங்க வந்து பாரு!” ஆதிராவின் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.
மதி ஓடி வந்தாள்.
“என்ன இது?” என்றவள், அந்த பொருளை கொஞ்சம் ஆழமாக பார்த்து, “ஹேய்… இது பிளாக் பாலிஷ்டு வேர் (Black Polished Ware).” என்று சந்தோசத்தில் கத்தினாள். ஆனால் அடுத்த நொடியே, “ஆனா ஆதிரா, இது இப்ப நாம வேலை பார்க்கிற பதினெட்டாவது நூற்றாண்டு லேயர்ல கிடைக்க வாய்ப்பே இல்லையே? இதோட மெட்டீரியல் குவாலிட்டி பார்த்தா இது இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முந்தின NBPW (Northern Black Polished Ware) மாதிரி இருக்கு.”
“அதான் எனக்கும் புரியல மதி. இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துப் பொருள், முன்னூறு வருஷத்து மண்ணுக்குள்ள எப்படி வரும்? யாராவது அதைப் புதையலாப் பாதுகாத்தாங்களா? இல்லன்னா நாம பார்க்கிற ஸ்ட்ரேடிகிராபி (Stratigraphy) தப்பா?”
ஸ்ட்ரேடிகிராபி என்பது மண்ணின் வெவ்வேறு அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளின் கால வரிசையைத் தீர்மானிப்பது. முதலில் மேலடுக்கு விதி. இதுதான் ஸ்ட்ரேடிகிராபியின் அடிப்படை விதி. ஒரு நிலப்பரப்பில் இயற்கை மாற்றங்களால் மண் படியும்போது, அடியில் இருக்கும் அடுக்கு பழமையானதாகவும், மேலே இருக்கும் அடுக்கு புதியதாகவும் இருக்கும். உதாரணமாக, ஒரு வாளியில் முதலில் மணல், பிறகு சரளைக்கல், பிறகு களிமண் போட்டால், அடியில் இருக்கும் மணல் தான் முதலில் வந்தது என்று நமக்குப் தெரியும். இதே விதியைத் தான் தொல்பொருள் ஆய்வாளர்கள் மண்ணைத் தோண்டும்போது பயன்படுத்துகிறார்கள்.
இரண்டாவது காலவரிசை. ஒவ்வொரு மண்ணடுக்கிலும் கிடைக்கும் மட்பாண்டங்கள், நாணயங்கள் அல்லது கரிமப் பொருட்களை வைத்து அந்த அடுக்கின் காலத்தைக் கணிப்பார்கள். ஒரு அடுக்கில் பதினெட்டாம் நூற்றாண்டு நாணயம் கிடைத்தால், அந்த அடுக்கு உருவான காலம் கி.பி. ஆயிரத்து ஏழுநூறுக்கு பிறகுதான் என்பதை உறுதி செய்யலாம்.
மூன்றாவது கலாச்சார மாற்றங்கள். மண்ணின் நிறம், அடர்த்தி மற்றும் அதில் கலந்துள்ள தாதுக்களை வைத்து அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டறியலாம். சாம்பல் கலந்த அடுக்கு இருந்தால் அந்த இடத்தில் ஒரு பெரிய தீ விபத்தோ அல்லது சமையல் கூடமோ இருந்திருக்கலாம். களிமண் அடுக்கு கிடைத்தால் அந்த இடத்தில் நீர்நிலை இருந்திருக்கலாம்.
சொகுசு மட்பாண்டம், அதாவது அரச குடும்பம் மற்றும் எலைட் மக்கள் மட்டுமே பயன்படுத்திய இரண்டாயிரத்து முன்னூறு வருட, கங்கை சமவெளிப் பகுதியை சேர்ந்த பிளாக் பாலிஷ்டு வேர் கண்டதும் ஆதிராவுக்கு முதலில் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. தான் ஆராய்ந்து கொண்டிருக்கும் மண்ணடுக்குக்கு வயது முன்னூறு தான். ஆனால் அந்த மட்பாண்டத்துக்கு வயதோ இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கக் கூடும் என்று அவளது தொல்பொருள் அறிவு சொன்னது. ஆனால் தெர்மோலுமினென்சென்ஸ் டேட்டிங் முறையில் அதை உறுதி செய்யாமல் முடிவும் எடுக்க முடியாது என்பதும் உண்மை.
ஆதிரா அந்தப் பொருளைத் தொட்டபோது, அவளது விரல் நுனியில் லேசான மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. ஒரு நொடி அவளது காதுகளில் ஒரு போர்க்களத்தின் பேரிரைச்சலும், ஒரு யானையின் பிளிறலும் கேட்டு மறைந்தது. ஏதோ ஒரு ஆளுமைமிக்க குரல் “தேவீ…” என்று அழைப்பது போலத் தோன்றியது. காற்றில் சட்டென ஒரு சந்தன வாசனை படர்ந்து வந்து மறைந்தது.
அவள் சுதாரித்துக் கொண்டாள். “கதிர், இதோட கான்டெக்ஸ்ட் (Context) நோட் பண்ணு. லெவல் 1.75 மீட்டர். இதோட போட்டோவை உடனே ஹெட் ஆபீஸ்க்கு மெயில் பண்ணு…” என்றாள் ஆதிரா.
அவளது அறிவு அவளுக்குச் சொன்னது இது ஒரு வரலாற்று முரண் என்று. ஆனால் அவளது ஆன்மா சொன்னது, இது அவளுக்காகவே புதைந்து கிடந்த ஒரு ரகசியம் என்று!
அதே சமயம், மதுரையில் உள்ள தொல்லியல் துறை மண்டல அலுவலகத்தில், மற்றுமொரு புயல் கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த புயல் விக்ரம்!


அழகு
நன்றி ம்மா
Interesting start
நன்றிம்மா
தங்களது புது கதைக்கு எனது வரவேற்பு சஷி மா. அடுத்த பதிவை நோக்கி ஆவலாக
நன்றிம்மா
Nice intresting start sis ❤️
நன்றிம்மா
Very nice shashi ma.
நன்றிம்மா
❤️
நன்றிம்மா
சூப்பர்
நன்றி க்கா
Super
நன்றி ம்மா
😍அருமை👏🍬🌹
நன்றி
Wow, super story.
நன்றி டா
Hai தல
என்ற பையன் எனக்குனு குடுக்குற கொஞ்ச டைம்ல படிக்குறேன் அதனால் ஏமாற்றாமல் regular ud தரவும்
மண்டைக்கு நிறைய தீனி குடுக்குது இந்த கதை பொறுத்திருந்து படிப்போம்
மேடம் கதைய முடிச்சிட்டேன் மேடம் :P
ஆத்தர் ஜி வாழ்த்துக்கள்❤️
நமக்கு இந்த கதை புரியுமா தெரியலையே ..?