அத்தியாயம் 2
மதுரை மண்டலத் தொல்லியல் அலுவலகம்.
அதுவொரு பழைய காலத்து பிரிட்டிஷ் கட்டிடம். அதன் உயரமான கூரைகளும், தேக்கு மர ஜன்னல்களும் கம்பீரத்தைத் தந்து கொண்டிருந்தன. அங்கே நிலவிய நிசப்தத்தை ஒரு புல்லட்டின் உறுமல் கலைத்தது.
விக்ரம், வயது முப்பத்தி ஒன்று. வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி அதன் கைப்பிடியில் மாட்டினான். அவனது தோற்றத்திலேயே மிடுக்கும் கம்பீரமும், கூடவே புன்னகையோடு வழியும் குறும்புத்தனமும் எப்போதும் கைகோர்த்திருக்கும்.
உள்ளே நுழைந்தவன், “மணி சார்! என்ன இன்னைக்கு உங்க முகத்துல ஏதோ ரோமன் ஆம்போரா கிடைச்ச சந்தோசம் தெரியுது? ஜாக்பாட் ஏதும் அடிச்சதா?” என்று சிரித்தபடி கேட்டான்.
ரோமன் ஆம்போரா என்பது இரட்டை கைப்பிடி வைத்த ரோமானிய மதுக்குடுவை.
மணி பதறிப்போய் எழுந்து நின்றார். “இல்லை சார்… அது வந்து…”
“சரி விடுங்க மணி சார். அந்த பொற்பனைக்கோட்டை சைட்டோட ரிப்போர்ட்டை என் டேபிளுக்கு அனுப்பிடுங்க. அப்புறம் அந்த டிஏ பில்லுல நீங்க குடுத்திருக்க அந்த எக்ஸ்ட்ரா கிலோமீட்டர் கணக்கு… அடுத்த முறை ஜீரோவைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்க…” என்று கண்ணடித்தபடி தனது அறைக்குள் நுழைந்தான்.
மணிக்கு வியர்த்துக் கொட்டியது. விக்ரமிடம் இருக்கும் அந்த விசித்திரமான குணம் இதுதான். சிரித்துக் கொண்டே ஆளைக் கவிழ்த்துவிடுவான். வேலையில் அவனை யாரும் ஏமாற்ற முடியாது.
ஐஐடி கான்பூரில் சிவில் இன்ஜினியரிங், பின் ஜே.என்.யுவில் தொல்லியலில் முனைவர் பட்டம் என அவனது தகுதிப் பட்டியல் நீளமானது. பெரும் சம்பளத்தில் வெளிநாட்டில் கிடைத்த வேலைகளை எல்லாம் மறுத்து விட்டு தமிழ்நாட்டில் தொல்லியல் துறையில் இருக்கிறான். ஆனால், அதற்கான அதிகாரத் தோரணையோ வறட்டு ஜம்பமோ அவனிடம் இருக்காது. சீரியஸ்னஸ் என்றால் என்னவென்று கேட்கும் ஆள். விளையாட்டு வாக்கிலேயே வேலைகளை முடித்துவிடுவதில் விற்பன்னன்.
தந்தை மேஜர் ஜெனரலாக இருந்தவர். விக்ரமிடம் தந்தையின் ராணுவக் கட்டுப்பாடும், எதையும் நுணுக்கமாக ஆராயும் தொழில்நுட்ப பார்வையும் அபரிமிதமாக இருந்தது.
அவன் தனது நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பைத் திறந்தான். ஆதிராவிடமிருந்து வந்திருந்த அந்த ஃபீல்ட் ரிப்போர்ட் அவனது கவனத்தை ஈர்த்தது.
“ஆதிரா…” அந்தப் பெயரை உச்சரிக்கும்போது அவனது உதடுகளில் ஒரு மர்மமான புன்னகை தோன்றியது.
ஆதிராவை அவனுக்கு ஏற்கனவே நன்றாகவே தெரியும். பணியில் அவனது ஜூனியர். சீரியஸ் சிங்காரி, ஸ்ட்ரிக்ட் ஆபீசர். என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் தான் செய்வாள். அனாவசியமாக ஒரு பார்வை, ஒரு வார்த்தை கூட இருக்காது. அத்தனையும் அளந்து தான் இருக்கும். எப்போதும் சீரியஸ் மோட். அதனாலேயே அவளுக்கு அவன் வைத்துள்ள பெயர் சீரியஸ் சிங்காரி.
தனக்குத் தானே ஒரு லட்சிய வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள் யாரையும் அனுமதிக்காத ஒரு வேலை வித்தகி.
அந்த சீரியஸ் சிங்காரியை அவனுக்கு மிகவும் பிடிக்கும் கூட!
ஆதிரா அனுப்பியிருந்த அந்த மட்பாண்டத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் விக்ரமின் புருவங்கள் சுருங்கின.
“வாட் எ மெஸ்!” என்று முணுமுணுத்தான்.
அவன் உடனே மணியை அழைத்தான். “மணி, இந்த போட்டோவைப் பாருங்க. நார்தர்ன் பிளாக் பாலிஷ்டு வேர். இதோட பீரியட் என்ன?”
“சார், அது கி.மு. அஞ்சுல இருந்து மூன்றாம் நூற்றாண்டா இருக்கலாம் சார். ஆனா கன்பர்ம் பண்ண தெர்மோலுமினெசன்ஸ் டேட்டிங் பண்ணனும்…” என்றார் மணி.
(பொதுவாக களிமண்ணில் உள்ள படிகங்கள் நிலத்தடியில் இருக்கும்போது கதிரியக்க ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. மண்பாண்டத்தைச் சூளையில் இட்டுச் சுடும்போது, அந்தப் படிகங்களில் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த ஆற்றல் அனைத்தும் வெளியேறி ‘பூஜ்ஜியம்’ நிலையை அடைகிறது. அதன்பின் மண்பாண்டம் செய்யப்பட்ட அந்த நொடியிலிருந்து மீண்டும் ஆற்றல் சேமிக்கப்படத் தொடங்கும். ஆய்வகத்தில் அந்த மண்பாண்டத் துண்டை மீண்டும் வெப்பப்படுத்தும்போது, அது ஒளியை உமிழும். அந்த ஒளியின் அளவைக் கொண்டு, அது கடைசியாக எப்போது சுடப்பட்டது (அதாவது அதன் வயது) என்பதைக் கணக்கிடலாம். கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் மண்பாண்டங்களின் வயதை அறிய இந்த முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.)
“ஆனா, இந்த ரிப்போர்ட்ல ஆதிரா மேடம், இது கிடைச்ச லேயர் பதினெட்டாம் நூற்றாண்டுன்னு போட்டிருக்காங்க. என்ன தூக்கத்துல லேயரை மாத்தி மார்க் பண்ணிட்டாங்களா? இல்லைன்னா லாஜிக் தப்பா? இரண்டாயிரம் வருஷத்துப் பொருள், முன்னூறு வருஷத்து மண்ணுக்குள்ள எப்படி வரும்?”
“சார், ஆதிரா மேடம் தப்பு பண்ண வாய்ப்பு கம்மி…” என்றார் மணி, தயங்கியபடி!
விக்ரம் நிமிர்ந்து பார்த்தான்.
“மணி, ஆர்க்கியாலஜிங்கிறது எமோஷன் இல்லை, அது ப்யூர் சயின்ஸ்…” என்றவனை இடைமறித்தது விக்ரமின் அலைபேசி.
அவனது அக்கா கவிதா. எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“விக்ரம், அந்த டாக்டர் பொண்ணு போட்டோ அனுப்பிச்சிருக்கேன் பாரு. ரொம்ப அழகா இருக்கா. உனக்கு ஏத்த மாதிரி ரொம்ப அமைதியான பொண்ணு…” என்றாள் கவிதா.
விக்ரம் கேலியாக சிரித்தபடி, “அக்கா, அமைதியான பொண்ணுன்னா எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா? எனக்கே அமைதி பிடிக்காது. வாழ்க்கைங்கிறது ஒரு எக்ஸ்கவேஷன் மாதிரி இருக்கணும். ஒவ்வொரு நாளும் ஒரு புது சுவாரசியம் கிடைக்கணும். இந்த டாக்டர் பொண்ணு கிட்ட என்ன சுவாரசியம் இருக்கப் போகுது?”
“விளையாடாதே விக்ரம். உனக்கு முப்பத்தி ரெண்டு வயசாகப் போகுது. அப்பா வேற ரிட்டையராகி வீட்ல சும்மா இருக்காரு. அவருக்கும் உன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசை இருக்காதா?”
“அவரு சும்மா இருக்கறாருங்கறதுக்காக நான் கிணத்துல குதிக்க முடியுமா சொல்லு?”
“அடப்பாவி… கல்யாணம் பண்ணறதும், கிணத்துல குதிக்கறதும் ஒண்ணாடா?”
“ஆப்வியஸ்லி… அப்பாகிட்ட சொல்லுக்கா, இங்க ஒரு பனிப்பாறை இருக்கு. அதை எப்படி உருக வைக்கிறதுன்னு நான் பார்க்கணும். அது உருகினா கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கறேன்…”
“எதை?”
“அந்த பனிப்பாறையை…” என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.
அவன் குறிப்பிட்டது ஆதிராவைத்தான். அவனது பார்வையில் ஆதிரா மிகச்சிறந்த அறிவாளி. ஆனால் அவளது அந்த தீவிரமான மனப்போக்கும், கடுமையான அணுகுமுறையும் அவனுக்கு எப்போதும் சவால் தான்!
அவளது அந்த இறுக்கமான முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தால் இன்னும் அழகாக இருப்பாள் அவன் பலமுறை நினைத்ததுண்டு. முயற்சி செய்ததுமுண்டு. ஆனால் அவனால் வெற்றி பெற முடிந்ததில்லை. சுற்றியுள்ள அனைவரையும் நண்பர்களாக்கி கொண்டாலும், இவள் மட்டும் ஒட்டவே மாட்டேன் என்கிறாளே என்ற கடுப்பும் கூட உண்டு.
விக்ரம் தனது டேபிளில் இருந்த அந்தப் புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தான். அந்த மட்பாண்டத்தில் இருந்த குறுவாள் சின்னம்… அது அவனுக்குள் சுவாரசியத்தை விதைத்தது.
“கணேஷ்! கிளம்பலாமா?” அவனது உதவியாளரை பார்த்து கேட்டான்.
“எங்க சர்?” கணேஷ் வினவினான்.
“பொற்பனைகோட்டைக்கு. அங்கே போய் ஆதிரா மேடத்தோட ரிசர்ச் வேலைய கொஞ்சம் ஆடிட் பண்ணிட்டு வரலாம்…” என்றான் விக்ரம்.
விக்ரமின் முகத்தில் குறும்பு மின்னியது.
சிக்குவாளா அந்த சிரியஸ் சிங்காரி?!


வித்தகி,சிங்காரி,பனிப்பாறை இன்னும் எத்தனை பேர் வைக்கப்போறீங்க விக்ரம்..... பகலவன் பட்டொளி பட்டால் பனகப்பாறை உருகிடும் .... நீங்க பகலவனா மாறும்போது பாறையும் உருகிடும்... அதுக்கான காலம் வரும்வரை காத்திருங்க... நாங்களும் அடுத்த பதிவுக்கு ஆவளோட காத்திருக்கோம்...🤩🤩🤩🤩🤩
வித்தகி,சிங்காரி,பனிப்பாறை இன்னும் எத்தனை பேர் வைக்கப்போறீங்க விக்ரம்..... பகலவன் பட்டொளி பட்டால் பனிப்பாறை உருகிடும் .... நீங்க பகலவனா மாறும்போது பாறையும் உருகிடும்... அதுக்கான காலம் வரும்வரை காத்திருங்க... நாங்களும் அடுத்த பதிவுக்கு ஆவளோட காத்திருக்கோம்...🤩🤩🤩🤩🤩
பனிபாறை உருகினா வெள்ளம் வரும் தம்பி உன்னைய அடிச்சுட்டு போயிரும் பாத்து பத்திரமா இருந்துக்க... மூவாயிரம் வருசத்து காதல் என்ன பண்ணிவச்சிருகான்னு பொறுத்திருந்து பாப்போம்
Super
அழகு
Nice ud
இவ்ளோ செல்லப்பெயர்களா வைப்பாய் ஆதிராவுக்கு ,
ஆமாம் விக்ரம் இது ஆதிராக்கு தெரியுமா..?