அத்தியாயம் 28
வெள்ளாற்றின் சலசலப்பு அடங்கிய அந்த நள்ளிரவில், பொற்பனையின் எல்லைக் காடு நிசப்தமான தியானத்தில் ஆழ்ந்திருந்தது. அது சாதாரணமான வனம் அல்ல; அது கொற்றவையின் கானகம். வீரமும் மரணமும் ஓரிடத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் அந்தப் புனிதம் நிறைந்த வனம், காலத்தின் ரகசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருந்தது. பெருஞ்சேரலின் குதிரை, காய்ந்த சருகுகளின் மேல் மெல்லக் காலடி எடுத்து வைத்தபோது எழும் அந்த மடமட என்ற ஓசை, அந்தக் கானகத்தின் மௌனத்தை இன்னும் ஆழமாக்கிக் காட்டியது. காற்றில் வேப்பம்பூக்களின் கசப்பும், ஏதோவொரு பழைய வேள்வியின் நெய் நெடியும், உலர்ந்த குருதியின் மிச்சமும் கலந்திருந்தது.
பேய் முதிர் காடு என்றும், கொற்றவை நிலம் என்ற இந்த காட்டில் உறையும் மரங்கள் சாதாரணமானவை அல்ல; அவை சாட்சிகள்.
முறுக்கேறிய விழுதுகளைக் கொண்ட ஆலமரங்களும், சடைமுடியைத் தொங்கவிட்டிருக்கும் கல்லால மரங்களும் இருளில் பேய்களின் கரங்களைப் போல நீண்டிருந்தன. கருவேல மரங்களின் கூர்மையான முட்கள், எவரோ தடுத்த நிறுத்த முயல்வது போலச் சேரலனின் ஆடையைப் பற்றின. முதிர்ந்த மருத மரங்களின் தடித்த பட்டைகள், போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களின் தழும்புகளைப் போலக் கரடுமுரடாக இருந்தன.
அந்தக் கானகம் பெரும் இருட்போர்வையால் மூடப்பட்டிருந்தது. வானத்திலிருந்த நிலவின் ஒளி, அடர்ந்த இலைகளின் இடுக்கில் நுழைய முடியாமல் தவித்தது. ஆங்காங்கே ஆந்தைகளின் அலறலும், நிழல்களில் பதுங்கிச் செல்லும் காட்டெருமைகளின் மூச்சுச் சத்தமும் அமானுஷ்யமான சூழலை உருவாக்கின. அங்கே நள்ளிரவில் கூளிகளும், பேய்மகளிரும் கொற்றவையைத் தொழுது ஆடுவதாக கூட மரபு உண்டு என்று கேள்வியுற்றிருக்கிறான். அந்த நிழல் ஆட்டங்களுக்கு இடையேதான் சேரலன் முன்னேறிக்கொண்டிருந்தான்.
கானகத்தின் இருளைக் கிழித்துக்கொண்டு அந்தச் சிலை அவனுக்கு முன்னே ஒரு பேருருவாய் நின்றது. அவளது தலைமுடி பவளம் போன்ற சிவந்த சடைகளாக விரிந்திருந்தது. நெற்றியில் நெற்றிக்கண் சுடர்விட, பிறை நிலவு அவளது சடையில் சூடப்பட்டிருந்தது. அவளது கழுத்தில் நாகம் மாலையாகக் கிடக்க, இடையில் புலித்தோல் ஆடையாகத் தழுவியிருந்தது. இடது கையில் வில்லையும், வலது கையில் வெற்றி வாளையும் ஏந்தி, ஒரு காலால் எருமைத் தலையின் (மகிடன்) மீது நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் கலைமானும், சிங்கமும் அவளது வாகனங்களாகக் காவல் காக்க, அந்த அடர்ந்த காட்டிற்கே அவள் ஒரு பயங்கரமான பேரழகைத் தந்து கொண்டிருந்தாள்.
பன்னெடுங்காலமாக மறவர்கள் பலியிட்ட குருதியால் அந்தச் சிலை செந்நிறம் படிந்து காணப்பட்டது.
அவளது விழிகள் அகன்றிருந்தன; அது எல்லாவற்றையும் பார்க்கும் பிரபஞ்சத்தின் கண். அந்தச் சிலையின் முன்னே காய்ந்த மாலைகளும், ஏதோவொரு வேட்டுவக் குலத்தின் சடங்குப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.
அவளது பாதங்களில் தன் கைகளை வைத்தான் பெருஞ்சேரல். கற்சிலையாக இருந்தாலும், அந்தச் சில்லிப்பு அவனது உள்ளத்தின் வெப்பத்தைத் தணிப்பது போல இருந்தது.
“தாயே…” என்று அவன் முணுமுணுத்தபோது, அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. இதே சிலைக்கு முன்னால்தான் அன்று ஆதிரை நின்றிருந்தாள்.
அவன் அவளை முதன்முதலில் சந்தித்தபோது, இதே கொற்றவைக்கு அவள் ஒரு மாலை சூட்டிக் கொண்டிருந்தாள். அந்தச் சிவந்த சடைகளுக்கு நடுவே ஆதிரை வைத்த அந்த வெள்ளைப் பூ, இன்று வரை பெருஞ்சேரலின் நினைவுகளில் வாடாமல் இருக்கிறது.
அன்று அவள் இந்த அமானுஷ்யமான வனத்தில் ஒரு தேவலோகத்து மலரைப் போலத் தெரிந்தாள். தன் கையில் காட்டு மல்லிகைப் பூவை ஏந்திச் சிலையின் முன்னே நின்றிருந்தாள். கானகத்தின் கடுமைக்கும், அவளது மென்மைக்கும் இருந்த அந்த முரண்பாடுதான் சேரலனை அவளிடம் கட்டிப்போட்டது. அங்கேதான் அவன் தன் வீரத்தை மறந்து காதலனாக உருமாறினான்.
அன்று தொடங்கிய அந்தப் பயணம், இன்று அவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “உன்னை ஏனடி சந்தித்தேன்? இப்படி பித்தனாக திரியவா?” அவனது உள்மனம் அவளை கொன்று தின்றுக் கொண்டிருந்தது.
உன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அமைதியாக இருந்திருப்பேன். ஆனால் உன்னைச் சந்தித்ததால்தான் நான் இப்படி மாறியிருக்கிறேன். எனது செயல்களின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறாய் நீ! இன்று நான் அனுபவிக்கும் இந்தத் துயரம் கூட, நீ எனக்குத் தந்த பரிசா? என்று அவன் நினைக்கும்போது, அவனது இதயம் ஒருமுறை விம்மித் தணிந்தது.
கானகத்தின் கொடூரமான அமைதிக்கும், அவனது மனதின் கொந்தளிப்பிற்கும் இடையே ஒரு விசித்திரமான ஒற்றுமை இருந்தது.
அப்போது ஒரு மெல்லிய காற்று வீசியது. அந்தக் காற்று வெள்ளாற்றின் ஈரத்தைச் சுமந்து வந்து, அவனது மேனியெங்கும் ஒரு சில்லிப்பை உண்டாக்கியது. அந்தச் சில்லிப்பு அவனது நரம்புகளைத் துளைத்தது. அது வெறும் தட்பவெப்பநிலை மாற்றமல்ல; அவனது காதலின் நிலை.
அவள் இப்போது அவனிடமிருந்து தள்ளி வெகுதொலைவுக்கு போய்விட்டது போலிருந்தது. காதல் தீயில் ஒரு கணம் எரிந்து, இப்போது அந்த காதலாலே எரிந்து கொண்டிருக்கின்ற நிலை, அவனுக்கு வலித்தது. அவளது அருகாமை இல்லாத அவனது வாழ்வு, இந்தப் பாழ்நிலத்தின் குளிரைப் போலத்தான் இருக்கிறது. அந்தக் குளிர் அவனை முடக்கிப் போடவில்லை, மாறாக ஒரு விதமான மரத்துப் போன நிலைக்குக் கொண்டு சென்றது.
அவன் அணிந்திருந்த பட்டுத் துகில் அந்தக் குளிரைத் தடுக்கவில்லை. அவனது கவசமும் அவனது இதயத்தின் வலியைப் போக்கவில்லை. கொற்றவையின் அந்தப் புனிதம் நிறைந்த வனம், அவனுக்கு ஒரு உண்மையை உணர்த்தியது: வீரன் என்பவன் போர்க்களத்தில் மட்டும் வெல்பவன் அல்ல; தனக்குள்ளிருக்கும் காதலையும் துயரத்தையும் தாங்குபவனும் கூடத்தான் போல!
அவன் மெல்ல அந்தப் பலிபீடத்தை நெருங்கினான். கொற்றவையின் பாதத்தில் தன் வாளை வைக்கவில்லை, தன் ஆணவத்தையும் கவலைகளையும் வைத்தான்.
அவனது இதயம் ஒரு கூண்டுக்குள் அடைபட்ட பறவையைப் போலத் தவித்துக் கொண்டிருந்தது. அதிகாரம், அரசியல், வணிகம், வஞ்சகம் ஆகிய உலகியல் அலைகளிலிருந்து தப்பித்து, ஒரு பெரும் சூனியத்தைத் தேடியே அவன் இங்கு வந்தான்.
அவன் தேடிய அந்தச் சூனியம், கொற்றவைக்கு அருகிலிருந்த சிதிலமடைந்த ஈசன் கோட்டத்தின் கருவறை வாசலில், சுடர் விட்டு எரியும் ஒரு சிறு விளக்கின் ஒளியில் அமர்ந்திருந்தது.
அங்கே அமர்ந்திருந்த அந்த அறிவர் (சித்தர்), சேரலனின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தைச் சலனமேதுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அறிவரின் கண்கள், இந்தக் கானகத்தின் இருளை விடவும் ஆழமானவை.
பல பிறவிகளைக் கடந்து வந்த ஒரு வழிப்போக்கனைப் போல அவர் அமர்ந்திருந்தார். அவரது மௌனம் ஆயிரம் கதைகளைச் சொல்லியது.
இந்தக் கானகம் ஒரு சாட்சி. இங்கே ஒரு அரசன் தன் அதிகாரத்தைத் துறந்து, ஒரு ஆன்மாவாக நிற்கிறான். தன் தாயாகிய கொற்றவையின் மடியில் ஒரு குழந்தையைப் போலத் தன் துயரங்களை ஒப்படைக்க வந்திருக்கிறான்
பெருஞ்சேரல் கொற்றவைக்கு அருகில் சென்று மண்டியிட்டான். அவன் வாய் திறக்கவில்லை, ஆனால் அவனது ஆன்மா அழுது கொண்டிருந்தது.
அறிவர் மெல்லக் கண்களைத் திறந்தார். அந்தக் கண்கள் சேரலனின் உடலைத் தாண்டி, அவனது பல பிறவிகளின் தொடர்ச்சியைப் பார்ப்பது போலத் தீர்க்கமாக இருந்தன.
“பெருஞ்சேரலே…”
அந்தக் கானகத்தின் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு காலந்தேரடிகளின் குரல் எதிரொலித்தது. பெருஞ்சேரல் திடுக்கிட்டு நிமிர்ந்தான். நிலவொளி நுழைய அஞ்சும் அந்த அடர்ந்த இருளிலும், சிதிலமடைந்த ஈசன் கோட்டத்தின் முன்னே அமர்ந்திருந்த அந்த உருவத்தை அவனறிவான்.
“அடிகளே…” என்று தழுதழுத்த குரலில் முணுமுணுத்தவன், மண்டியிட்ட நிலையிலேயே சிரம் தாழ்த்தி வணங்கினான்.
காலந்தேரடிகள், மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். எந்தவொரு சித்தாந்தத்திற்குள்ளும், சமயப் பிரிவுக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாத ஒரு மகா ஞானி. ஓரிடத்தில் தங்கி அவர் வாழ்ந்ததில்லை; பல தேசங்களுக்கும், கண்டங்களுக்கும் காற்றைப் போலப் பயணம் போகும் ஒரு தேசாந்திரி. பெருஞ்சேரல் தன் சிறு வயது முதலே இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதோ ஒரு பூடகமான கருத்தைச் சொல்லிவிட்டுச் செல்வார். அதைப் புரிந்து கொள்வதும், கொள்ளாததும் பெருஞ்சேரலின் பக்குவத்தைப் பொறுத்தது என்பது போல ஒரு அலட்சியம் அவரிடம் எப்போதும் இருக்கும்.
“நீ அழுவது இந்த ஒரு பிறவிக்காகவா? அல்லது இதுவரை நீ கடந்து வந்த ஓராயிரம் பிறவிகளின் சுமையால் உந்தப்பட்டா?” என்று அடிகள் வினவினார். அவரது குரல் கானகத்தின் மரங்களிடையே ஒரு தெய்வீக இசையைப் போலப் பரவி, பெருஞ்சேரலின் இதயத் துடிப்பைச் சீராக்கியது.
சேரலன் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். “எனக்குப் புரியவில்லை அடிகளே! இந்தப் பிறவியின் வலியே என்னைத் தாங்க முடியாமல் இருக்கையில், முந்தைய பிறவிகளைப் பற்றி யான் எங்ஙனம் அறிவேன்?” என்றான் ஏமாற்றமும் வேதனையும் கலந்த குரலில்.
அடிகள் மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கினார். அந்தப் புன்னகையில் காலத்தையே கடந்து வந்த ஒருவனின் அமைதி இருந்தது. “உடல் என்பது ஒரு சட்டை, சேரலா! ஒரு பருவம் முடிந்ததும் பாம்பு தன் சட்டையைச் சுலபமாகக் கழற்றுவதைப் போல, ஆன்மா தன் பயணத்தின் முடிவில் உடலைக் கழற்றுகிறது. ஆனால், அந்த ஆன்மாவின் ஆசைகளும், தீராத ஏக்கங்களும் அதனுடன் அடுத்தடுத்த பிறவிகளுக்கும் நிழலைப் போலப் பயணம் செய்கின்றன. நீ இப்போதனுபவிக்கும் இந்தத் தவிப்பு, இன்று நேற்று உருவானதல்ல; அது பல காலங்களாக உன் உயிர் தேடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட தேடலின் தொடர்ச்சி.”
“அப்படியென்றால், ஆதிரையின் மீதான எம் காதல்? அவளது பிரிவால் எம்முயிர் துண்டு துண்டாகச் சிதறுவதைப் போல உணர்கிறேனே?” என்று சேரலன் ஏக்கத்துடன் கேட்டான்.
அறிவர் அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தார். “அதே தான். நீ உணர்வது உயிர்ச் சிதறல். ஆதிரை என்பது அவளது இந்தப் பிறவியின் பெயர் மட்டுமே. ஆனால் அவளுக்கும் உனக்குமான பிணைப்பு என்பது பல பிறவிகளுக்கு முன்பே எழுதப்பட்ட ஒரு உயிர் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை. நீ அவளைப் பிரிவதாகத் துடிக்கிறாய், ஆனால் உண்மையில் உனதுயிர் அவளது உயிரோடு மீண்டும் இணைவதற்காக ஒரு நீண்ட காத்திருப்பை இப்போதே தொடங்கிவிட்டது.”
“காத்திருப்பதா? இன்னும் எத்தனை காலங்கள் நான் அவளுக்காகக் காத்திருக்க வேண்டும் அடிகளே?” பெருஞ்சேரலின் குரலில் அத்தனை ஏக்கமும் வலியும் இழையோடின.
அடிகள் மர்மமாகப் புன்னகைத்தார். “சேரலா… ஒரு சில உண்மைகளை இப்போது பேசினால் தகும் என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“சொல்லுங்கள் அடிகளே… யான் கேட்கக் காத்திருக்கிறேன்.”
“காலம் என்பது ஒரு சிறந்த ஆசான். நாம் எவரை நம் உயிரென நினைக்கிறோமோ, அவர்களைக் கொண்டுதான் நமக்கான கசப்பான பாடங்களை நம் உயிருக்குச் சொல்லித் தரும்.”
“புரியவில்லை அடிகளே…”
“இப்போது நீ இங்கிருக்கிறாய். இதற்கு முன் எங்கு இருந்தாய்?”
“அங்காடித் தெருவில்…” என்றான் சேரலன் குழப்பத்துடன். அடிகள் மெல்ல நகைத்தார்.
“அதற்கு முன்?”
“அரண்மனையில்…”
“அதற்கும் முன்?”
“பயிற்சி களத்தில்…”
“நான் சொல்வது, நீ பிறப்பதற்கு முன்! உன் தாயின் கருப்பைக்குள் நீ ஒரு கருவாக உருவாவதற்கு முன் எங்கு இருந்தாய்?” என்று அவர் கேட்க, பெருஞ்சேரல் ஒரு கணம் திகைத்துப் போனான். அந்த வினா அவனது சிந்தனைச் சங்கிலியை அறுத்தது.
“தெரியவில்லை அடிகளே…”
“இந்தக் கேள்வி எப்போதாவது உனக்குள் எழுந்திருக்கிறதா?”
“அவ்வப்போது தோன்றும் அடிகளே. மக்களின் நன்மைக்காகத்தானே போராடுகிறேன், அறத்தையல்லவா நிலைநாட்டத் துடிக்கிறேன்… பின் ஏன் நான் இத்தனை இடர்களைச் சந்திக்க வேண்டும்? என்று பலமுறை தோன்றும்.”
“இடர்கள் என்பவை தண்டனைகள் அல்ல சேரலா. இடர்கள் நமக்கு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் உன் உயிரை மேலும் மேலும் மேம்படுத்துகின்றன.”
“ஏன் உயிரை மேம்படுத்த வேண்டும் அடிகளே?”
“நீ ஒரு சாதாரணக் குடியினனாக இருந்தால் பாண்டியனைப் போரில் வெற்றிக் கொள்ள முடியுமா?” அவர் புன்னகையோடு கேட்டார்.
“நிச்சயமாக இல்லை…”
“சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத பெரும் செயல்களைச் செய்வதற்கு, நமதுயிர் பல பிறவிகளில் செதுக்கப்பட்டு மேம்பட வேண்டியது அவசியம் சேரலா. அதுதான் விதியின் கணக்கு.”
“உயிர் என்று கூறுகிறீர்களே… அது எப்படி இருக்கும்? அது எங்கு உறையும்?”
“உன்னுடைய உயிர் இப்போது தற்காலிகமாக உன்னுடைய உடலிலிருக்கிறது. இந்த உடலை அடைவதற்கு முன் அது விண் புலத்திலிருந்தது.”
“விண்புலம் (ஆன்ம உலகம்) என்றால் என்ன அடிகளே?”
“அதை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது சேரலா. அது ஒரு நிலப்பரப்பு இல்லை, அது ஒரு உயர்ந்த இருப்புநிலை! அங்கே வடிவங்கள் இல்லை, எல்லைகள் இல்லை, பேதங்கள் இல்லை. அங்கு நேரமும் இல்லை, பயமும் இல்லை… மரணத்திற்குப் பின் நமக்குக் காத்திருக்கும் அறத் தீர்ப்புகள் அங்கே இல்லை! அங்கே வலியோ, தனிமையோ கிடையாது. விண் புலம் (ஆன்ம உலகம்) என்பது பிறப்புக்களுக்கிடையில் நாம் இளைப்பாறும் வீடு; அதுவே நமக்குச் சொந்தமான உண்மையான வீடு!”
“அப்படியென்றால் இந்த மண் உலகம்?”
“இது ஒரு பாடசாலை. வந்தவரெல்லாம் இதுவே நிரந்தரம் என்று தங்கிவிட்டால், இந்த உலகம் அந்தச் சுமையைத் தாங்குமா?”
“ஆனால் எனக்கு இந்த உலகம் வெறுக்கிறது அடிகளே!” சொல்லும் போதே அவனது குரல் உடைந்து போனது. “ஆதிரையுடன் வாழ முடியாத வாழ்வை நான் ஏன் வாழ வேண்டும் என்ற சலிப்பு எனக்குள் மேலோங்குகிறது.”
“அவளைத் தவிர உனக்கு வேறு கடமைகள் இல்லையா?”
“இருக்கிறது. ஆனால் எனது உடல் பலமில்லாதது போலத் தோன்றுகிறது. என்னுடைய சக்தி அவள். அவள் என்னோடு சேர்ந்தால் மட்டுமே எம் சிதைந்த உயிர் துளிர்க்கும் என்று நினைக்கிறேன்…” என்று அவன் தன் உள்ளத்தின் ஆழத்தைச் சொன்னான். அடிகள் அதை ஆமோதித்தார்.
“உண்மை தான் சேரலா. அவள் தான் உனது சக்தி மையம். ஆனால் இந்தத் துயரத்தையும், இந்தப் பிரிவையும் தேர்ந்தெடுத்தது வேறு யாருமல்ல… நீ தான்!”
“என்ன சொல்கிறீர்கள்? நான் ஏன் இத்தனை வேதனைகளை விரும்பித் தேர்ந்தெடுக்க வேண்டும்?”
அடிகள் தன் கைகளை மெல்ல உயர்த்தி, காற்றில் ஒரு சூட்சுமமான வட்டத்தை வரைவது போலச் சைகை செய்தார். “ஆம். உண்மை… நீ காண்பது வெறும் உடல், ஆனால் இயங்குவது ஒரு நீண்ட பயணத்தின் தொடர்ச்சி. ஒவ்வொரு உயிரும், தான் யாருக்குப் பிறக்க வேண்டும் என்பதையும், எந்தப் பெற்றோரிடத்தில் பிறக்க வேண்டும், எந்த உடலை ஏற்க வேண்டும், எந்த உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்ல… தான் சுமக்க வேண்டிய வேதனைகளையும், தான் கடக்க வேண்டிய முட்பாதைகளையும், தான் அவதரிக்க வேண்டிய காலத்தையும் கூட அந்த உயிரே பிறப்பதற்கு முன்னரே தீர்மானிக்கிறது. இவை யாவும் விதியன்று; இது அந்த உயிரின் சுய விருப்பத் தீர்மானம்.”
பெருஞ்சேரல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். இத்தனை காலமும் தான் விதியின் கையில் சிக்கிய ஒரு பொம்மை என்று கருதிக்கொண்டிருந்தவனுக்கு, இந்த உண்மை ஒரு பேரிடியாகத் தைத்தது.
அடிகள் தொடர்ந்தார்,
“ஏனெனில், எளிய வாழ்க்கை உயிருக்கு வளர்ச்சியைக் கொடுக்காது. துன்பமே ஆழ்ந்த கல்வியை கற்றுத் தரும். வஞ்சகம், நோய், பிரிவு, பலி இவை விபத்துகள் அல்ல. அவை நம்முயிர் எழுதிய கற்றல் உடன்படிக்கைகள்.” என்றவர், அவனை ஆழ்ந்து பார்த்தபடி,
“அதுபோலவே, தன்னுடைய முடிவு எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அந்த உயிரே தீர்மானிக்கின்றது. அனைத்தும் தீர்மானிக்கப்பட்டவையே… அதுவும் உன்னாலேயே! அதனால், இறைவன் ஏன் நமக்கு இந்தச் சோதனைகளைக் கொடுக்கிறான்? என்று எக்காலத்திலும் கேட்காதே. ஏனென்றால், உனக்கு அந்த இறைவன் நீதான்…”
அந்தக் கடைசி வாக்கியம் பெருஞ்சேரலின் மண்டைக்குள் ஓராயிரம் இடி முழக்கங்களை உண்டாக்கியது. தான் ஒரு அரசனாக ஆணையிடுவதும், ஒரு காதலனாக அழுவதும், ஒரு வீரனாகப் போரிடுவதும் அனைத்தும் தன் உயிர் விரும்பி ஏற்றுக்கொண்ட விளையாட்டா?
“நீங்க என்னுடைய அறிவிற்கு எட்டாத பேருண்மைகளைக் கூறுகிறீர்கள் என்று புரிகிறது ஆசானே. ஆனால், அதைப் புரிந்து கொள்ள எனக்கும் சில காலங்கள் எடுக்கலாம்…” என்றான் பெருஞ்சேரல். அவனது குரலில் இப்போது ஒருவிதமான சரணாகதி இருந்தது.
“பார் சேரலா, உன்னையுமறியாமல் உன் உயிர் என்னை இனம் கண்டுகொண்டது…” என்று அவர் கூற, அவன் வியந்து விழித்தான்.
“என்ன சொல்கிறீர்கள் ஆசானே…”
“அடியான் எப்போது ஆசானானான்?” என்று அடிகள் புன்னகைக்க, “ஆசானே…” என்றான் பெருஞ்சேரல் ஆச்சரியமாக.
அடிகளின் சொற்கள் காற்றில் மிதந்து வந்து பெருஞ்சேரலின் செவிகளில் விழுந்தன. அந்தப் புன்னைப் பொழிலின் இருளும், சுடர்விட்டு எரிந்த அந்தச் சிறு விளக்கின் ஒளியும் ஒரு விசித்திரமான மாய உலகைத் தோற்றுவித்திருந்தன.
“ஆம் சேரலா… நான் உன்னுயிர் தேர்ந்தெடுத்த உனது வழிகாட்டி…” என்று கனிவுடன் புன்னகைத்தார் காலந்தேரடிகள். அவரது கண்கள் இப்போது அவனைத் துளைக்காமல், ஒரு தாயைப் போல அரவணைத்தன.
“ஒவ்வொரு உயிரும் இந்த நிலவுலகில் பிறப்பதற்கு முன், தங்களின் பயணத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவு உயிர் சக்தியை (Soul Energy) மட்டுமே சுமந்து வரத் தீர்மானிக்கின்றன. ஒரு கடலைத் தாண்டத் தேவையான காற்றைத் தன் பாய்மரத்தில் ஏந்திக் கொள்ளும் கப்பலைப் போல, ஒவ்வொரு உயிரும் தான் சந்திக்கப் போகும் சவால்களுக்கு ஏற்ப அந்தச் சக்தியைத் தீர்மானிக்கிறது. பல நேரங்களில் அந்தச் சக்தி போதுமானதாக இருக்கும். ஆனால், சில தருணங்களில் அந்த உயிர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை மிகக் கடுமையானதாக, முட்கள் நிறைந்ததாக மாறிவிடும் பட்சத்தில், அது எடுத்து வந்த உயிர் சக்தியால் அந்தத் துயரங்களைக் கடக்க முடியாமல் போய்விடும். இதையே மக்கள் உயிர் பலம் குன்றிவிட்டது என்கிறார்கள். ஒரு கனத்த சுமையைத் தூக்கத் தகுதியற்ற மெல்லிய கயிறு அறுந்து போவதைப் போல, அவர்களின் மன உறுதி சிதைகிறது.”
பெருஞ்சேரல் அந்த விளக்கின் சுடரையே வெறித்துப் பார்த்தான். அவனது நிலையை அடிகள் அத்தனைத் துல்லியமாக விளக்கியது அவனைத் திகைக்க வைத்தது. “என்ன சொல்கிறீர்கள் ஆசானே? எம் உயிர் பலம் குறைந்துவிட்டதா?”
“அப்படியல்ல சேரலா. நீ உன்னுடைய முழு உயிர் பலத்தையும் இந்த உடலுக்குள் எடுத்து வரவில்லை. உன்னுடைய ஒரு பெரும் பகுதி, உன் உயிரின் மீதிப் பாதி இன்னும் அந்த எல்லையற்ற விண்புலத்லேயே தங்கிவிட்டது. அதனால்தான் இங்கிருக்கும் சிறு சிறு வேதனைகளை உன்னால் தாள முடியாமல், உன்னுயிர் திக்கற்றுத் திண்டாடுகிறது. இப்போது நீ முழுமையானவனாக இல்லை; உனதுயிர் சிதறுண்டிருக்கிறது. ஒரு துண்டு இங்கேயும், ஒரு துண்டு அங்கேயும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சிதறல்கள் மீண்டும் ஒரு மையப் புள்ளியில் இணைய வேண்டும். உன்னை நீயே நிலைநிறுத்திக் கொள்ள ஒரு களம் தேவை…” என்றார் அடிகள்.
பெருஞ்சேரல் ஒரு நிமிடம் தன் வலக்கையால் நெஞ்சை தடவிப் பார்த்துக் கொண்டான். தான் ஒரு பெரும் அரசனாக இருந்தாலும், தனக்குள் ஏதோ ஒன்று வெற்றிடமாக இருப்பதை அவனால் உணர முடிந்தது. “யான் என்ன செய்ய வேண்டும் ஆசானே? சிதறிய எம் உயிரை நிலைநிறுத்த வழி என்ன?”
அடிகள் மெல்ல எழுந்து, அங்கிருந்த சிதிலமடைந்த ஈசன் கோட்டத்தின் இடிந்த சுவர்களைத் தடவினார். “இதோ இந்தச் சிதிலமடைந்த கோட்டத்தைப் பார். இது மண்ணால் ஆனது, எனவே காலத்தின் ஓட்டத்தில் கரைந்து சிதைந்துவிட்டது. அழிந்து போகும் பொருட்களால் உனது ஆன்மாவை உன்னால் கட்டிப்போட முடியாது. நீ கல்லால் ஆன ஒரு நிலைத்தக் கட்டுமானத்தை எழுப்பு. அது வெறும் வழிபாட்டிற்காகவோ அல்லது உனது பக்தி வெளிப்பாடாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.”
“மண்ணாலானதே சிதையும் போது, கல்லால் எழுப்பினால் மட்டும் அது அழியாமல் இருக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்டான் பெருஞ்சேரல்.
அவன் பேசி முடித்த அந்த விநாடியில், அருகிலிருந்த புன்னை மரத்தின் அடர்ந்த கிளையிலிருந்து ஒரு கூகை (ஆந்தை) அலறியது. அதன் கூர்மையானச் சத்தம் அந்த நிசப்தத்தை அறுத்தெறிய, அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் சுடர் காற்றில் அகூரமாக ஆடி, ஒரு கணம் அணைந்து பின் மீண்டும் நிமிர்ந்தது. ஒரு கணம் அந்தப் பொழிலில் சூழ்ந்திருந்த இருள் அமானுஷ்யமான மௌனத்தைப் போர்த்திக் கொண்டது. அந்தச் சிறு விளக்கின் ஒளியில் அடிகளின் நிழல் சுவரில் ஒரு பூதத்தைப் போலப் பெரிதாகத் தெரிந்தது.
காலந்தேரடிகள் அந்தச் சுடர் மீண்டும் நிலைகொள்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின் மெல்லத் திரும்பி, “கல்லால் எழுப்பினால் மட்டும் போதாது சேரலா… அது என்ன கல்லால், எப்படிப்பட்ட அமைப்பில் எழுப்பப்படுகிறது என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது…” என்றார்.
“விளக்கிக் கூறுங்கள் ஆசானே…”
“கல் என்பது காலத்தின் நாக்கு, சேரலா…” என்று தீர்க்கமாகச் சொன்னார் அடிகள். “காலம் கடந்து போனாலும் கற்கள் பேசும். நீ எங்ஙனம் உன் ஊனும் குருதியுமான இந்த உடலில் உயிரைச் சுமக்கிறாயோ, அங்ஙனமே நீ எழுப்பும் இந்தக் கோயில் உனது உயிரை தன்னுள் சுமக்க வேண்டும். உனது உடலின் ஒவ்வொரு அங்கமும் எங்ஙனம் ஒரு தத்துவமோ, அங்ஙனமே இக்கோயிலின் ஒவ்வொரு அடுக்கையும் உருவாக்கு. இதன் அடித்தளம் எனப்படும் கற்படை முதல் தூபி வரை ஒவ்வொன்றும் உனது உடலின் சூட்சுமத்தைப் பிரதிபலிக்கட்டும். அது ஒரு கல்லால் ஆன கட்டிடம் அல்ல; அது உனது உயிரின் மறு உருவம்.”
பெருஞ்சேரல் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான். அடிகள் சொல்வது ஒரு பெரும் ரகசியம் என்பது அவனுக்குப் புரிந்தது. “இதன் உள்ளே எதை நிறுவுவது?”
அடிகள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். “நீ அந்தரங்கமாக பூசிக்கும் அந்தப் பச்சை நிற மரகதக் குறியை (மரகத லிங்கம்) இங்கே கொண்டு வந்து நிலைநிறுத்து. மரகதம் என்பது வெறும் விலைமதிப்பற்ற கல்லல்ல; அது பிரபஞ்சத்தின் அதிர்வுகளை உள்வாங்கி, உனது ஆன்மாவின் சக்தியைத் தன்னுள் ஈர்த்துச் சேமித்துக் கொள்ளும் ஒரு அசாத்தியக் கருவி. உன் ஆன்மாவை ஈர்த்து தனக்குள் பதுக்கி வைத்துக் கொள்ளும் அபூர்வ கருவி அது. அந்த மரகதக்குறித்தால் மட்டுமே, சிதறிய உன் ஆன்மா சேரும்.”
பெருஞ்சேரல் அந்தப் பச்சை நிற மரகதத்தின் ஒளியை மனக்கண்ணில் கண்டான். அது ஒரு வெறும் கல்லாகத் தெரியவில்லை; அது அவனது காதலின் சாட்சியாக, காலத்தைக் கடந்து நிற்கப் போகும் ஒரு துருவ நட்சத்திரமாக அவனுக்குத் தெரிந்தது.
“நிச்சயமாக. இந்தக் கருவறைக்குக் கீழே ஒரு ரகசிய நிலவறையை அமை. அதில் உன் அருநிதியையும் மரகத குறியையும் நிறுவு. மேலே கற்குறி இருக்கட்டும். உன் ஆன்மாவின் சிதறல்கள் மீண்டும் இங்கே வந்து சேரும்போது, அவை தங்களை அடையாளம் கண்டுகொள்ளும்.”
சேரலன் அறிவரின் கால்களைத் தொட்டு வணங்கினான். “ஆசானே… வஞ்சகம் எம்மை சூழ்ந்திருக்கும் வேளை இது… நீவிர் துணையாய் இருப்பீர் என்ற நம்பிக்கையில் கோட்டத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறேன்…”
அறிவர் அவன் தலையில் கை வைத்தார். “சேரலா… உன்னைப் பெற்றெடுத்த தாய் கொற்றவை. அவள் உன்னைக் கைவிடமாட்டாள். அவள் வீரத்தின் வடிவம். அவள் உன்னை என்றென்றும் காப்பாள்.”
“யான் எப்போது முழுமையடைவேன்?”
“காலம் ஒரு வட்டம். எங்கே நீ தொடங்கினாயோ, அங்கே மீண்டும் வந்து சேருவாய். உனது இந்தத் தேடல் இங்கேயே முழுமை பெறும். அதுவரை இந்தக் கோயிலும், இதன் நிலவறையும் உன் ரகசியத்தைச் சுமக்கட்டும்.”
“ஆசானே… ஆதிரை? அவளை மீண்டும் காண்பேனா?”
“ஆன்மாக்களுக்கு அழிவில்லை சேரலா. ஒரு முகத்திரையை நீக்கிவிட்டுப் பார்த்தால், அவள் எப்போதும் உன்னுடன்தான் இருப்பாள். அவள் உன்னுடையவள். இப்போது புறப்படு! உனக்கான காலக் கணக்குத் தொடங்கிவிட்டது. கோட்ட வேலைகளை துவக்கு. வேலை முடியுமட்டும் நான் உன்னுடனே இங்கேயே இருப்பேன். எதற்கும் கலங்காதே சேரலா! “
அறிவர் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டார். அந்தச் சிறு விளக்கின் ஒளி ஒரு கணம் பிரகாசமாக எரிந்து பின் தணிந்தது. கானகத்தின் இருள் இப்போது சேரலனுக்கு ஒரு பாதுகாப்பான போர்வையாகத் தெரிந்தது. கொற்றவையின் அருளும், அறிவரின் போதனையும் அவனது இதயத்தின் பாரத்தைக் குறைத்திருந்தன.
அன்று இரவு, வெள்ளாற்றின் கரையில் பெருஞ்சேரல் ஒரு புதிய வைராக்கியத்துடன் தன் அரண்மனை திரும்பினான். அவன் கட்டப்போகும் கோட்டம், வெறும் கல்லும் மண்ணுமல்ல…
அது காலத்தைக் கடந்து செல்லும் ஒரு ஆன்மாவின் தூது.


அழகு
Interesting ud
இந்த பதிவு படிக்கும் போது புல்லரிச்சுப்போச்சு,
செம ஆத்தர் ஜி❤️
Wow epi sis ❤️
Excellent
அடுத்த அத்தியாயம் எப்ப வரும்
ஆத்தர் ஜி ,என்னாச்சு...? கதையை எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.
I always enjoy Sashi Murali’s novels, so I honestly didn’t expect this plot from this author—such a pleasant surprise! I’m quite choosy when it comes to historical novels and their writers, but this attempt feels really mature and well handled. A completely different genre from the author, and so far, **really, really good!** ❤️
Konjam eti parunga madam..nalu epi pota nala irukum la 🙄